Loading

லர்விழி பணிக்குக் கிளம்பியதில் குணவதிக்கு விருப்பம் இல்லையென்றாலும் அதனைத் தடுக்க முடியாததால் பாரிவேந்தனின் வீட்டினர் வரும்போது அவள் இல்லையென எவ்வாறு சொல்வது என்ற குழப்பத்துடனே சமையற்கட்டில் நின்றுக் கொண்டிருக்க, அப்பொழுது தான் வீட்டினுள் வந்த சுந்தரபாண்டியன், “என்ன குணா யோசனை? மலரும் மாப்பிள்ளையும் எங்க மா?” என்றார்.

அவரின் கேள்வியில் தான் நிகழ்காலத்திற்கு வந்தவர், “மலர் ஆஸ்பத்திரி போய்ருக்காங்க. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன், ஆனா அவ கேட்காம கிளம்பிட்டா. மாப்பிள்ளையும் அவள் சொல்றதுக்கெல்லாம் தலையாட்றாரு, இப்போ அண்ணாவும் அண்ணியும் வந்தா நான் என்னங்க பதில் சொல்வேன்எனத் தன் கவலைகளைத் தன் கணவனிடம் கொட்டினார்.

அதனைக் கேட்டுப் புன்னகைத்தவர், “ரேவதியும் மச்சானும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க குணா, சாமி சொன்னதும் சரி தான. மத்த வேலையா இருந்தா கூட அத நாளைக்குப் பண்ணிக்கலாம்னு தள்ளிப் போடலாம், ஆனா டாக்டர் அப்படி இல்லயே குணா. என் மக சொன்னதுல என்ன தப்பு!” என அவரும் தனது மகளுக்கு ஆதரவாகப் பேச,

ஆமா, பொல்லாத மகள கண்டுபுட்டீங்க. நீங்க எல்லாம் கொடுக்கற செல்லம் தான் அவ தலைக்குமேல ஆடறா. இவ்ளோ நாள் பரவால்ல, இப்போ இன்னொரு வீட்டுக்கு மருமகளா போனதுக்கு அப்புறமும் அவ இஷ்டத்துக்கு ஆடுனா என்ன அர்த்தம்?” என அவர் பொருமியபடியே நடுகூடத்திற்கு வர, ரேவதியும் பழனியப்பனும் உள்ளே நுழைந்தனர்.

சுந்தரபாண்டியனை மணந்து இந்த ஊருக்கு வந்து அந்த இல்லத்தில் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு குணவதி வாழ்ந்திருந்தாலும், இன்று தான் ரேவதியும் பழனியப்பனும் அந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கின்றனர்.

வாங்க அண்ணா, வாங்க அண்ணிஎன அவர் வரவேற்க, அப்பொழுது தான் பாரிவேந்தனும் அங்கு வந்திருந்தான். கையில் வைத்திருந்த பூவை தனது மருமகளுக்கு சூட்டிவிட எண்ணி, “எங்க அண்ணி மலரு?” என்றார் ரேவதி.

என்ன பதிலளிப்பது என்று குணவதி சற்றுத் தயங்க, “இப்போ தான் அவள ஆஸ்பத்திரில கொண்டு போய் விட்டுட்டு வந்தேன் ம்மா. ஏதோ அவசர கேஸ்ஸாம், இன்னிக்குனு பார்த்து வேற டாக்டர் யாரும் வராததால மலரே போக வேண்டிய சூழ்நிலை. அதான் கொண்டு போய் விட்டுட்டு வந்தேன் ம்மா. ரெண்டு மணிக்கு வந்துருவா ம்மாஎன முந்திக் கொண்டு பதிலளித்தான் பாரிவேந்தன்.

என்ன நடந்திருக்கும் என்பதை ரேவதியும் யூகித்துக் கொண்டார். தனது மகனின் சமாளிப்பும் அவருக்குப் புரிபட்டாலும், “அதுனால என்ன பா, நல்லது பண்ண நேரங்காலம் பாத்துட்டு இருக்க முடியுமா!” என்றவர், “என்ன அண்ணி அப்படியே நிக்குறீங்க, மொத தடவ வீட்டுக்கு வந்துருக்கோம். உங்க கையால சாப்பாடு போட மாட்டீங்க போலயே!” என அந்த சூழ்நிலையைச் சகஜமாக்க முயன்றார் ரேவதி.

அதன்பின் மாமனும் மச்சானும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ரேவதியும் குணவதியும் சமையற்கட்டில் பேசிக் கொண்டே சமையலில் இறங்கி இருந்தனர்.

பாரிவேந்தனும் தனது தந்தையும் மாமனும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.

காய்கறி நறுக்கிக் கொண்டே, “அண்ணி மலரு சின்னப் புள்ள, ரொம்ப செல்லமா வேற வளந்துட்டா. ஏதாவது தப்பு தண்டா பண்ணா நீங்க தான் கொஞ்சம் பொறுத்துப் போகணும். சட்டுனு ஏதாவது பேசிடுவா, ஆனா மனசுல வஞ்சகம் வச்சுக்க மாட்டாஎனத் தயங்கியவாறே ரேவதியிடம் குணவதி கூற,

மலரு நான் பார்த்து வளர்ந்த பொண்ணு அண்ணி, அவளப் பத்தி நீங்கச் சொல்லித் தான் தெரிஞ்சுக்கணுமா! நீங்கக் கவலப்படாம இருங்க அண்ணி. இனி மலரு எங்க வூட்டுப் பொண்ணுஎன்றாலும் குணவதிக்கு இன்னும் சற்று தயக்கம் இருக்கத் தான் செய்தது.

மதிய உணவு வேளையில் தான் மலர்விழி வீட்டிற்கு வந்தடைந்தாள். ரேவதியையும் பழனியப்பனையும் வரவேற்றவள், தனது அறைக்குச் சென்று உடைமாற்றிக் கொண்டு வந்தாள். அதன்பின் நேரம் யாருக்காகவும் நிற்காமல் மாலையானது.

நான்கிலிருந்து நல்ல நேரம் ஆரம்பிப்பதால் அந்த நேரத்திலேயே பாரிவேந்தனும் மலர்விழியும் தங்களது இல்லம் நோக்கிப் புறப்பட்டனர்.

புகுந்த வீட்டிற்கு கிளம்பிய மகளுக்கு வழக்கம்போல் அறிவுரை வழங்க, “ம்மா, அஞ்சு நிமிஷ நடைல தான் வீடு இருக்கு, என்னமோ வெளிநாடு போற மாதிரி அட்வைஸ் பண்ணாத ம்மா. நீ நேர நேரத்துக்கு சாப்பிடு. நான் கேம்ப்க்கு போறதுக்கு முன்னாடி தினமும் உன்னை வந்து பார்த்துட்டுப் போறேன், சரியாஎன அவர் கன்னம் கிள்ள, “நீ இங்க மாதிரியே அங்கயும் இருக்கக் கூடாது மலரு, பார்த்துச் சூதனமா நடந்துக்கோ. அண்ணி எது சொன்னாலும் சரினு சொல்லிப் பழகு, சரியா!” என்றார் கவலையுடன்.

இப்போ நான் அங்க போகவா வேண்டாமா!” என அவள் சற்று கோபத்துடன் வினவவும் தான் அமைதியானார் குணவதி. அங்கிருந்து கிளம்பும் வரையிலும் சுந்தரபாண்டியனின் பார்வை தனது மகள்மேல் பதிந்திருந்தது. அவரின் பார்வையும் ஏக்கத்தையும் அவளும் உணர்ந்து தான் இருந்தாள். ஆனால், ஏனோ மனம் அவரிடம் பேச சம்மதிக்கவில்லை.

தனது மாமனுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் மௌன யுத்தத்தை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான் பாரிவேந்தன். தனது நிலையே படுமோசமாக இருக்கும்போது தனது மாமனுக்காக மனைவியிடம் பரிந்துப் பேசினால் இருப்பதும் மோசமாகிவிடும் என்பதால் அமைதி காத்தான்.

இங்கு இருக்கும் வரை தனது அன்னைக்காகத் தன்னிடம் கோபத்தைக் காட்டாமல் இருந்தாலும், அங்குச் சென்ற பின் என்னென்ன செய்யக் காத்திருக்கின்றாளோ என்ற பயமும் அவனைப் பிடித்து வைத்திருந்தது.

தனது புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள் யாழினி. நான்கு மணி நேர பயணக்களைப்பு இருந்தாலும், தான் வாழப் போகும் வீட்டைப் பார்க்கும் ஆர்வம் அவள் கண்களில் பிரதிபலிக்க, ஹரிஹரனின் மனம் சற்று நிம்மதியுற்றது.

வீட்டின் பிரமாண்டமே ஹரிஹரனின் பின்புலத்தைக் காட்டியது. இத்தனை பெரிய வீடு, அரசியல் செல்வாக்கு இருப்பினும் தங்களது கிராமத்தில் சாதாரணமாக மலர்விழியின் இல்லத்தில் தங்கியதும், இலவச மருத்துவ முகாமில் அவன் பணியாற்றியதுமே அவனின் நல்ல மனதை பறைசாட்டினாலும் அவன்மேல் இருந்த கோபம் அதனை உணரவிடாமல் தடுத்தது.

பத்மா வேண்டாவெறுப்பாக ஆரத்தி எடுக்க, அவரின் முகமாறுதல்களை வைத்தே தான் இந்த வீட்டிற்கு மருமகளாய் வந்ததில் உடன்பாடு இல்லை என்பதை புரிந்துக் கொண்டாள் யாழினி. கமலமோ வாய் பிளந்து தான் நின்றிருந்தார். தனது மகள் வாக்கப்பட்ட இடத்தின் செல்வ செழிப்பு அவரை வியக்க வைத்திருந்தது. பூஜையறையில் விளக்கேற்றி வைத்து பூஜை முடிந்ததும், கமலமும் உடன் வந்திருந்தவர்களும் உடனே கிளம்ப, அவர்களை அனுப்பிவிட்டு எங்குச் செல்வது எனப் புரியாமல் ஹாலில் இருந்த ஷோஃபாவிலே அமர்ந்தாள் யாழினி.

யாருடனோ பேசிக் கொண்டிருந்த ஹரிஹரன் அப்பொழுது தான் அங்குவர, அவள் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து, “என்ன யாழு இங்க உக்காந்துருக்க, நம்ம ரூம்க்குப் போய்க் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்லஎன்றவன்,

அம்மா எங்க?” என்றவாறே தனது அன்னையை தேடினான். யாழினியின் வீட்டினர் கிளம்பியதுமே பூஜையறைக்கு பக்கத்தில் இருந்த தங்களது அறைக்குள் நுழைந்துக் கொண்டார் பத்மா.

அவர் சென்ற அறையை அவள் கைகாட்ட, “சரி, என்கூட வா. நம்ம ரூம காட்றேன்என அவன் படியேற, அவன் பின்னே சென்றாள் யாழினி.

அங்கு சமையல் செய்யும் கலாவும் அவரது கணவரும் திடுதிப்பென மனைவியுடன் வந்து நிற்கும் தங்களது முதலாளியின் மகனைப் பார்த்து அதிர்ச்சியில் தான் இருந்தனர். பத்மாவை போன்றே மலர்விழி தான் அந்த வீட்டின் மருமகள் என்ற ஆசையில் தான் அவர்களும் இருக்க, இன்று அதனைத் தவிடுபொடியாக்கிவிட்டு வேறொருத்தி வந்து நிற்க மனதில் சோகம் வாட்டினாலும் பத்மாவை போல் அதனை வெளிக்காட்ட முடியாமல் தங்களது வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தனர்.

மாடியில் இருந்த தனது அறைக்குச் சென்றவன், “உன்னோட திங்க்ஸ் எல்லாம் இங்க தான் கொண்டு வந்து குமார் அண்ணாவ வைக்கச் சொன்னேன்என்றவாறே ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ்களைப் பார்த்து, “அங்க இருக்கு, இப்போ நீ ரெபிரஷ் ஆகிக்கோ. நாளைக்கு கூட உன் திங்க்ஸ் எல்லாம் இங்க அடுக்கி வச்சுக்கோஎன்றவன், குளியல் அறையையும் காட்ட, முதன்முறையாகதேங்க்ஸ்என முணுமுணுத்தாள் யாழினி.

உன் தேங்க்ஸ் எல்லாத்தையும் நான் மொத்தமா ஒரு நாள் வசூல் பண்ணிக்கறேன், இப்போ போய் ரெபிரஷ் ஆகுஎன்றவன், தனது உடைகளை எடுத்துக் கொண்டு பக்கத்து அறையில் ரெபிரஷ் ஆனவன், மீண்டும் தங்கள் அறைக்கு வரும்போது இலகுவான புடவைக்கு மாறி இருந்தவள், கண்ணாடியில் தன்னை சரிபார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி.

கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு யாழு, அப்புறமா வீட்ட சுத்திக் காட்றேன். உனக்கு ஏதாவது வேணும்னா கலா அக்காகிட்ட சொன்னா உடனே கொண்டு வந்து கொடுப்பாங்க. எது வேணும்னாலும் தயங்காம கேளுஎன்றவன், கீழே செல்ல, அந்த அறையில் தனித்து விடப்பட்டாள் யாழினி. தானாக ஏற்றுக்கொண்ட வாழ்க்கை தான். ஆனால், ஏனோ சிங்கத்தின் குகையில் தனியாக மாட்டிக் கொண்ட உணர்வு.

பாரிவேந்தனின் மனைவியாக வாழ இருந்தவள் நொடிப் பொழுதில் நிகழ்ந்த மாற்றங்களால் இன்று இதுவரை அவள் பார்த்திராத ஒரு ஊரில் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றியும் ஒன்றும் தெரியாமல் தனித்து நிற்கும் நிலை மனதை வாட்டினாலும் இத்தனைக்கும் காரணமானவள் மேல் கோபம் எழுந்தது.

ஜன்னல் வழியே தெரிந்த வானத்தை வெறித்துக் கொண்டிருந்தவள், கார்டனில் சற்று காலார நடக்கலாம் என்றெண்ணி கீழே இறங்க, பத்மாவின் அறையில் பேச்சு சத்தம் கேட்கவும் படியிலேயே நின்றாள் யாழினி.

அம்மா ப்ளீஸ் ம்மா, என்கிட்ட பேசு ம்மாஎன்ற ஹரிஹரனின் கெஞ்சல் தான் அவள் காதில் விழுந்தது. பத்மாவோ தனது மகனின் கெஞ்சலைப் பொறுப்படுத்தாமல் அமைதியாக அமர்ந்திருக்க, தனது மனைவியில் அருகில் அமர்ந்திருந்த ராஜன், “அவன் தான் இவ்ளோ ஃபீல் பண்றான்ல பத்து, பேசு மாஎனத் தனது மகனுக்காகப் பரிந்துரைத்தார்.

என் கோபம் உங்களுக்கு கூடப் புரியலயாங்க, அவன் பண்ணத எப்படிங்க என்னால ஏத்துக்க முடியும்?” எனத் தன் கணவரிடம் வினவ, “புரியுது பத்து, ஆனா நடந்தத நம்மனால மாத்த முடியாதே. அப்படி இருக்கும்போது நீ இன்னும் சின்னப் புள்ள மாதிரி அடம் பிடிக்கலாமா?” என்றார் ராஜன்.

எப்படிங்க உடனே என்னால ஏத்துக்க முடியும்? மலர் தான் இந்த வீட்டு மருமகளா வரணும்னு நான் ஆசைப்பட்டது தப்பா? இப்போ எவளோ ஒருத்திய கூட்டிட்டு வந்து இவ தான் உங்க மருமகனு சொன்னா எப்படிங்க என்னால முடியும்?” என அவர் கோபத்தை கொட்ட, அதிர்ந்தான் ஹரிஹரன். இந்த வார்த்தைகள் வெளியே நின்றிருந்த யாழினியின் காதிலும் விழ, இங்கும் மலர், மலர், மலர்அந்தப் பெயரே அவளை வெறுப்புக்குள்ளாக்கியது. அதன்பின் அங்கு நிற்கப் பிடிக்காமல் மீண்டும் அறைக்குச் சென்றாள்.

ம்மா…!” என்றவனின் அதிர்வில், “ஆமா டா, உன் அம்மா விருப்பம் அதான். ஆனா, அதுக்குள்ள என்ன என்னமோ நடந்துருச்சுஎன ராஜனும் தனது மனைவியின் விருப்பத்தைத் தனது மகனிடம் உடைத்தார்.

அவனால் அந்த வார்த்தைகளைக் கூட ஜீரணிக்க முடியவில்லை. மலர் தன் மனைவியாக வருவதா! நினைக்கும்போதே எட்டிக்காயாய் கசந்தது.

தனது அன்னையின் மறுஉருவமாகத் தான் மலரை இது நாள்வரைக்கும் அவன் எண்ணி இருக்கின்றான். ஒருநாளும் அவளைக் காதலியாகவோ, மனைவியாகவோ நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஏன் அந்த எண்ணத்தைக் கூட அவன் விரும்பவில்லை.

தனது அன்னையின் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், “எங்களோட நட்ப நீங்க இவ்ளோ தான் புரிஞ்சுக்கிட்டீங்களா ம்மா?” என்றவனின் வார்த்தையில் அவனின் வலியை அவரும் உணர்ந்தார்.

எப்படி ம்மா என்னையும் ஃபிளவரையும் இப்படி யோசிக்க முடிஞ்சுது உங்களால? எனக்கு நீங்க எப்படியோ அப்படி தான் ம்மா ஃபிளவரும். என் அம்மாவா, சகோதரியா, தோழியா என எல்லா விதமான உறவுகளும் கலந்த கலவை அவள். ஆனால், ஒருநாளும் காதலியாகவோ மனைவியாகவோ, அத நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது ம்மா. எங்களோட புனிதமான உறவ இதவிட கொச்சைப்படுத்த முடியாது. உங்களோட ஆசைய கேட்டா என் ஃபிளவர் செத்தே போய்ருவா ம்மாஎன்றவனின் கண்களில் கண்ணீர் வழிந்தோட, அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் பத்மாவை ஈட்டியாய் குத்தியது.

தனது ஆசை தவறா என்ற எண்ணங்களும் தோன்ற ஆரம்பித்தது. அதன்பின் தன் அன்னையிடம் எதுவும் பேசாமல் அமைதியாக அந்த அறையை விட்டு வெளியேறினான்.

நீண்ட நேரம் வெளியே அலைந்தவன், இரவு எட்டு மணிபோல் தான் வீட்டிற்கு வந்தான். அவன் உள்ளே நுழைந்தவுடன் அவன் எதிரே வந்த கலா, “தம்பி யாழினி பொண்ணு இன்னும் ரூம விட்டு கீழ வரவே இல்ல யா. நானும் ரெண்டு தடவை சாப்பிட ஏதாவது வேணும்னானு கேட்க கதவைத் தட்டுனேன். அவங்க திறக்கவே இல்லஎன்க, தனது அன்னையின் பேச்சில் நொந்துப் போயிருந்தவன் யாழினியை மறந்திருந்தான்.

பட்டர்பிளைய எப்படி மறந்தேன்என நெற்றியை தேய்த்து விட்டவன், “நீங்க சாப்பாடு எடுத்து வைங்க க்கா, நான் அவள கூட்டிட்டு வரேன்என்றவன் வேகவேகமாய் இரண்டு இரண்டு படிகளாய் தாவி மேலேறினான்.

கதவைத் தட்ட அதுவோ உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததால், “யாழு, கதவ திற மாஎன்றவாறே கதவைத் தட்டினான். இரண்டு நிமிடங்களுக்குப் பின் கதவு திறக்கப்பட, வேகமாய் உள்ளே நுழைந்தவனின் கண்களில் சோர்ந்துப் போய், கண்கள் எல்லாம் அழுததால் வீங்கிப் போய் நிற்கக் கூடத் தெம்பில்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த யாழினி தான் கண்ணில் பட்டாள்.

பட்டர்பிளை!” என அவன் அவளைப் பிடிப்பதற்குள் கீழ விழச் செல்ல, அவளைத் தாங்கிப் பிடித்தவன் கட்டிலில் அமர வைத்தான். “என்ன மா ஆச்சு, என்ன டா?” என அவள் கன்னத்தைப் பற்றியவாறு கனிவாக வினவ, அவளோ வேகமாக அவனது கைகளைத் தட்டி விட்டாள்.

அவளின் விலகல் அவனுக்கு வலித்தாலும் அதனை மறைத்துக் கொண்டு, “அம்மா, அப்பாவ பிரிஞ்சு இருக்கிறது கஷ்டம் தான் யாழு. வேணும்னா நாம நாளைக்கு ஊருக்குப் போகலாமா?” என அவள் பெற்றோரைப் பிரிந்த ஏக்கத்தில் இருக்கின்றாளென அவன் வினவ, அவளோ நக்கலாய் சிரித்தவள், “ஏன், அப்போ தான் உங்க மலர ச்சீ ச்சீ உங்க ஃபிளவர பாக்க முடியுமா?” என்றாள் யாழினி.

நான் என்ன கேட்கறேன், நீ என்ன பதில் சொல்ற யாழு!” என்றான் ஹரிஹரன். “இல்ல எனக்காக ஊருக்குப் போகலாமானு கேட்ட மாதிரியே இல்லயே. உங்களுக்குத் தான் உங்க அருமை…” எனச் சற்று இடைவெளி விட்டவள், “அருமை தோழியைப் பார்க்காம இருக்க முடியாதுல்ல, அந்த நல்ல எண்ணத்துல தான் கேட்டேன்என்ற அவளின் தொனியிலேயே அவள் தன்னை கோபப்படுத்திப் பார்க்க முயல்கிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டவன்,

ஃபிளவர பார்க்காம இருக்கிறதும் கஷ்டம் தான் யாழு, ஆனா இப்போ தான் என்னைப் பார்த்துக்க என் ஃபிளவரோட தங்கச்சி நீ இருக்கியே. இனி எனக்கென்ன கவலை பட்டர்பிளைஎனக் கண்ணடித்தவாறே கூறியவன், “மாமனுக்கு ரொம்ப பசிக்குது, சாப்பிட்டுட்டே பேசலாமா செல்லம்என்றான் ஹரிஹரன்.

அவன் கோபப்படுவான் என்றெண்ணி இருந்தவளுக்கு அவனின் நக்கலான பேச்சு கோபத்தை கிளறியது. தனக்கு உணவு வேண்டாமென மறுத்தவளை விடாப்பிடியாய் சாப்பிட வைத்தான் ஹரிஹரன்.

பாரிவேந்தனின் இல்லத்தில் தங்களது அறையில் அமர்ந்திருந்தாள் மலர்விழி. அவளுடன் பாரிஜாதத்தின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களை அழைக்க வந்த பாரிஜாதம், “குட்டிங்களா அப்பா வந்திருக்காரு, அவர்கிட்ட போங்க. நான் அத்தைகிட்ட பேசிட்டு வரேன்என அவர்களை அனுப்பி வைத்தவள், மலர்விழியை பார்த்தார்.

இந்தக் கல்யாணத்துல உனக்குச் சம்மதம் தான மலரு?” என அவர் தவிப்புடன் வினவ, அவளோ சிறு புன்னகையுடன்சாமிக்கு நேந்து விட்ட ஆட்டுக்கிட்ட யாரும் அது கழுத்த வெட்டச் சம்மதம் கேட்கிறது இல்லயே அண்ணிஎன்றாள்.

அவளின் பதில் பாரிஜாதத்திற்கு அதிர்ச்சியை கொடுக்க, “என்ன சொல்ற மலரு, உனக்கு அண்ணாவ பிடிக்கும் தான!” என்றார் தவிப்பாய்.

பிடிக்கும் அண்ணி ஒரு காலத்துல…” என அவள் முடித்துவிட, அவளும் தனது அண்ணனைக் காதலிக்கிறாள் என்றெண்ணிக் கொண்டிருந்தவளுக்கு அவளின் பதில் சற்று அதிர்வைக் கொடுத்தது.

மலரு!” என அவர் சற்று தயங்க, “முடிஞ்சுப் போனத பத்தி பேசி எந்தப் பிரயோஜனமும் இல்ல அண்ணி. அண்ணா உங்களுக்காகக் காத்திருப்பாரு, நீங்க கிளம்புங்க. நான் பார்த்துக்கிறேன்என்றாள் மலர்விழி. அதன்பின் அவளிடம் எதுவும் பேச முடியாமல், தனது கணவனுடன் தனது வீட்டிற்கு அரைமனதோடு கிளம்பினாள் பாரிஜாதம்.

இரவு உணவு முடிந்து, அறைவரைக்கும் கொண்டு வந்து விட்ட ரேவதி, “நீயும் பாரியும் எப்பவும் சந்தோசமா இருக்கணும் கண்ணுஎன நெட்டி முறித்தவர் அவளை உள்ளே அனுப்ப, அவளின் இதழ் விரக்தியில் மலர்ந்தது.

உள்ளே வந்தவளைக் கண்டவனின் முகம் சற்று மலர்ந்திருந்தது. அறைக் கதவைச் சாற்றியவள், “விளக்க அணைக்கட்டுமா?” என்ற அவளின் கேள்வியில், “தூக்கம் வருதா புள்ள?” என்றான் பாரிவேந்தன்.

அது எதுக்குங்க உங்களுக்கு? கழுத்துல தாலி கட்டியாச்சு, இப்போ ரூமுக்கும் வந்தாச்சு. அடுத்து இதான!” என அவள் கட்டிலை காட்ட, அவனின் முகம் அதிர்ந்தது. “புள்ள…” என அவன் ஏதோ கூற வர, கைநீட்டி தடுத்தவள், “இவளுக்கு தாலி கட்டுனா ஏன்னு கேட்கக்கூட நாதி இல்லனு தான கட்டுனீங்க. இப்போ தான் இதுக்கு முழு உரிமையும் உங்களுக்கு இருக்கே, இனி நானே கேள்விக் கேட்க முடியாதுல்லஎன்றவளின் குரலில் இருந்த உணர்வு அவனைக் கொல்லாமல் கொன்று புதைத்தது.

ரொம்ப நேரம் பேசி நேரத்த வீணாக்க வேண்டாம், அப்புறம் நீங்க தான் வருத்தப்படுவீங்க. நான் உங்களுக்கு நல்ல மனைவியா இருக்கணும்ல, என் வேலைல இருந்து நான் தவறக் கூடாது பாருங்கஎன்றவாறே அவன் அருகில் அவள் நெருங்கினாள்.

என்னை இவ்ளோ கீழ்தரமானவன்னு நினைச்சுட்டியா புள்ள?” என்றவனின் குரலில் வேதனை படர்ந்திருக்க, “அப்போ என் சம்மதம் இல்லாம தாலி கட்றதுக்கு தாலியோட சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தவ முன்னாடி வந்து நின்னது ரொம்ப உயர்தரமான வேலையாங்க?” என்றாள் படுநக்கலாய்.

நான் பண்ணது தப்பு தான் புள்ள, நீ நாலு அடி கூட அடிச்சுக்கோ, நான் வாங்கிக்கறேன். ஆனா வார்த்தையால மட்டும் என்னைக் கொல்லாத புள்ளஎன்றவனின் குரல் உள்ளிறங்கி இருந்தது.

அவளோ, “இப்போ நான் என் கடமைய செய்யணுமா வேண்டாமா?” என்றாள் ஸ்விட்சை பார்த்தபடி. கடமையாக நிறைவேறக் கூடிய நிகழ்வா அது! காதலித்து, காதலித்தவளையே கரம்பிடித்தும் இன்று கடமையை நிறைவேற்ற ஒரு தூணாய் நிற்கும் தன் மனைவியாய் அவளைப் பார்க்கும்போது அவனால் அந்த இடத்தில் நிற்க முடியாமல், “எனக்குத் தூக்கம் வரல புள்ள, நீ தூங்குஎன அவள் முகம் பாராமல் உரைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினான் பாரிவேந்தன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
6
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்