குரல் வந்த திசையை நோக்கினான் ஹரிஹரன். அங்கு ஆறடி உயரத்தில், ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் சுந்தரபாண்டியன் வெள்ளை வேஷ்டி, சட்டையில் கழுத்தில் ஒரு துண்டுடன் கம்பீரமாய் நின்றாலும் அவரின் கண்கள் மலர்விழியை ஏக்கத்தோடு தழுவின.
அவரின் குரலைக் கேட்டதில் இருந்தே மலர்விழி கண்களை இறுக மூடினாள். அந்தக் கணப் பொழுதை விரும்பாதது அவள் முகத்தில் ஓடிய ரேகைகளே படம் பிடித்துக் காட்டின.
“வா ஹரி, உனக்கு தோட்டத்தைச் சுத்தி காமிக்கிறேன்” என்றவள், முன்பக்கம் வழியாகச் சென்றால் அவரைக் கடந்து செல்ல வேண்டுமென, அதனைத் தவிர்த்துப் பின்பக்க வாயில் வழியே அவனின் கரம் பிடித்து இழுத்துச் சென்றாள்.
தன் தோழியின் முக மாறுதல்களைக் கவனித்தவன், மறுப்பு தெரிவிக்காமல் அவள் இழுத்த இழுப்பிற்கு ஒத்துழைத்தான் ஹரிஹரன்.
கிட்டத்தட்ட வீட்டிலிருந்து இருபது அடி தூரம் வந்தபின் தான் அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
அவர்கள் நின்ற இடம் மல்லிகைப் பூந்தோட்டம். மல்லிகை தன் மணத்தால் அவர்களின் நாசியை வருட, அதனைக் கண்கள் மூடி அனுபவித்தாள். அவனோ, தன் தோழியின் முக பாவனைகளைப் பார்த்துக் கொண்டே,
“அப்பாவ பார்த்தோனே ஏன் இவ்ளோ ஓட்டம் ஃபிளவர்?” என்றான்.
‘உனக்குத் தெரியாதா?’ என அவளின் விழி வினா எழுப்ப, அதனைப் புரிந்து கொண்டவன் வாய்மொழி பதில் அளித்தான்.
“அவரு எவ்ளோ ஆசையா சாமினு கூப்பிட்டு உன்னைப் பார்த்தாரு. ஆனா, நீ அவர் முகத்தைக் கூடப் பார்க்காம வர்றது நியாயமா ஃப்ளவர்…?” என்றவனின் குரலில் சற்று கோபமும் இருந்தது.
“ப்ச்… நான் கேட்டனா, அவர யாரு வரச் சொன்னது? அவரு என் அம்மாக்கு வேணும்னா புருஷனா இருந்துட்டு போகட்டும். எனக்கு அப்பா இல்ல” என்றவளின் முகம் சோகத்தோடு கோபத்தையும் சேர்த்து அப்பி இருந்தது.
“நீ இல்லனு சொன்னா அவரு உனக்கு அப்பா இல்லாம போய்டுவாரா? இல்ல அத உன்னால மாத்த தான் முடியுமா…?” என்றான் ஹரிஹரன்.
“நான் எங்க டா மாத்த நினைச்சேன்? இப்போ வரை என் அம்மாவோட கற்ப கேள்விக்குறியா தான இந்த ஊர் பார்க்குது, அத மாத்த முடியுமா அவரால…?” எனச் சூடாய் பதில் வந்தது.
“இன்னமும் நீ பழச நினைக்கிறது சரியில்ல ஃப்ளவர், அவரு பண்ணது தப்பா வேணும்னா இருக்கலாம். ஆனா, அந்தத் தப்ப சரி பண்ண தான அவரு உன் அம்மாவ இந்த ஊர் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துனாரு, ஊர்லயே பெரிய மனுஷன் அவரு. ஆனா, மானத்தை பெருசா நினைக்காம உன் அம்மாவ பெருசா நினைச்சதால தான இப்போ உன் அம்மா இங்க கௌரவமா வாழ்ந்துட்டு இருக்காங்க. அப்பவும் ஏன் மா உனக்கு அவரு மேல கோபம்…?” எனத் தன் தோழிக்குப் புரிய வைக்கும் நோக்கத்தோடு அவன் கூற,
“ப்ளீஸ். இதப் பத்தி பேச வேண்டாம் டா” என்றவள், “சரி, வா… உனக்கு தோட்டத்தைச் சுத்தி காட்றேன்” என அவன் கரம் பிடித்து அழைத்துச் சென்றாள்.
அவளைப் பற்றி முழுவதும் அறிந்தவனால் இந்தப் பிடிவாதத்தை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மலர்விழி, அழகில் மட்டுமல்ல குணத்திலும் அவள் சொக்கத் தங்கம் தான். ஆனால் அவளிடம் அவன் குறையாக நினைத்தது இந்தப் பிடிவாதம் மட்டுமே. அதுவும் அவள் அப்பா விசயத்தில் மட்டுமே இந்தப் பிடிவாதம்.
அவளின் பக்கமுள்ள நியாயம் புரிந்தாலும் அதற்காகக் காலம் முழுக்க ஒருவரைத் தண்டிப்பது நியாயமில்லை என்ற நிதர்சன கோட்டில் யோசிப்பவனால் அவளின் பிடிவாதத்தை ஏற்க முடியவில்லை.
கடினப்பட்டு தன் சிந்தனைகளைக் கலைத்தவன், அவளுடன் சேர்ந்து அந்த மலர்வனத்தை ரசிக்கத் தொடங்கி இருந்தான்.
அங்குப் பூ வகைகள் தான் அதிகம் பயிரிடப்பட்டு இருக்க, பல வித பூக்களின் மணம் நாசி கமலத்தை சுண்டி இழுத்தது.
செவ்வந்தி பூக் காட்டில், அந்த மலரோடு கன்னம் வைத்து உரசிக் கொண்டிருந்தாள் மலர்விழி.
பூவிற்கே பொறாமை தூண்டக்கூடிய அந்த இதழ்கள் பூவின் தேனை சுவைத்துக் கொண்டிருக்க, இரு மலர்களும் யார் அழகு எனப் போட்டியிட்டு செவ்வந்தி மலர் தோற்றுக் கொண்டிருந்தன.
மலையன்னை அவளின் தேகத்தை அணைத்திருப்பது போல் அந்த இளம்பச்சை வண்ண சல்வார் அவள் தேகத்தை தழுவியிருக்க,
மேகத்தைப் பிடித்து அதனைக் கடைந்து இரு மருங்கிலும் உலவுமாறு விடப்பட்ட கார்குழல், இளந்தென்றலின் உதவியால் அலைந்தாட,
தாழம் பூவின் நிறம் கொண்ட அவளின் முகம் அந்தப் பூவோடு உரசிக் கொண்டிருந்ததை சற்று தள்ளி நின்று ஒருவன் ரசித்துக்கொண்டிருந்தான்.
“டேய் கரிச்சட்டி!” எனத் தன் நண்பனை விளித்தவள், அவன் முகம் நோக்க அவனோ செவ்வந்தி பூக்களோடு அவளின் பூ முகம் போட்டியிட்டுக் கொண்டிருந்ததை ரசித்துக்கொண்டிருந்தான்.
“டேய்…” என அவன் தலையில் நங்கெனக் கொட்டு வைத்தாள் அந்தப் பைங்கிளி.
அவனோ, கண் அகற்றாமல் அவளைப் பார்க்க, “இவனுக்கு என்னாச்சு?” எனப் புலம்பியவாறே வரப்பு மேட்டில் ஏறி நடந்தவள், சற்று தொலைவில் நின்றிருந்தவனைக் கண்டு நடை தடை போட்டது.
கைலி வேஷ்டியை மடித்து கட்டிய வண்ணம், உள் பனியனுடன் கட்டுமஸ்தான தேகமும் கருப்பும் அல்லாது நிறமும் அல்லாது மாநிறத்தில் நின்றிருந்தவனின் கருவிழிகள் இரண்டும் அவளைத் தான் நோக்கி இருந்தன.
முழுதாக ஐந்து வருடம் கழித்து பார்க்கும் அவனைத் தன் விழிச் சிறைக்குள் நிரப்பிக் கொள்ள முயன்றாள் வஞ்சியவள்.
அவளின் காந்த விழிகளுக்குள் ஊடுருவி, அவளிடம் சிறைப்பட துடித்துக் கொண்டிருந்தது அவனின் விழிகள்.
அவள் பார்வை அவன் முகத்தைத் தாண்டி அவனின் கழுத்துப் பகுதியில் எதையோ தேடி அலைப்புற்று, இறுதியில் அதனைக் கண்டு கொண்டதை வெளிப்படுத்தும் விதமாக அவள் விழிகள் விரிந்தன.
அவனின் கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலி ஒன்று M என்ற டாலருடன் அவனின் நெஞ்சுக் கூட்டோடு ஒட்டிக் கொண்டிருக்க அவளின் பார்வை அங்கு நிலைக்குத்தி நின்றன.
அவள் பின்னால் வந்த ஹரிஹரன், “ஹேய், ஃபிளவர். என்னாச்சு?” என அவளை உலுக்க,
அவனின் உலுக்கலில் தன்னிலை அடைந்தவள் “ஒன்னுமில்ல டா…” என்றவாறே, நடக்கத் துவங்க அவள் பார்வை சென்றிருந்த திக்கை நோக்கினான் ஹரிஹரன்.
அங்கு பாரிவேந்தன் அவர்களைத் தான் பார்த்தவண்ணம் நின்றிருக்க, ஹரிஹரனின் முகத்தில் சிந்தனை ரேகைகள் ஓடின.
அவளின் வரவை அறிந்தவன், தன் மாமனிடம் விஷயத்தைக் கூறிவிட்டு தோட்டத்திற்கு வந்திருந்தான்.
அங்கு மலர்விழியை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் ஓய்வெடுப்பாளென அவன் நினைத்திருக்க, ஆனால் அவளோ தோட்டத்திற்கு வந்திருந்தாள்.
அவளை அந்த மலர்வனத்தில் காண திகட்டவில்லை அவனுக்கு. அவளின் விழியும் அவனைத் தழுவியதை உணர்ந்தவனால் மனம் இறக்கை இல்லாமல் பறக்கத் தொடங்கின.
அவனைக் கடந்து செல்லும்போது அவளின் கால்கள் பின்னிக் கொண்டாலும், தன்னைக் கட்டுப்படுத்தி கொண்டு அவனைக் கடந்தாள்.
ஆனால், அவனைக் கடந்த ஹரிஹரனின் பார்வை தான் அவன்மேல் சந்தேகமாக விழுந்தது.
அவனைக் கடந்து சற்று தூரம் செல்லவும், “இன்னும் எவ்ளோ தூரம் இப்படியே நடக்கிறதா உத்தேசம்?” என வினவினான் ஹரிஹரன்.
அவளோ அவனின் கேள்வியை உணராமல் நடந்து கொண்டிருக்க, அவளின் தோள்பற்றி அவன் நிறுத்தினான்.
“ஆங்…” என அவள் விழிக்க, “கேட்டத கூடக் கவனிக்காம என்ன மேடம் யோசனை?” என்றான் ஹரிஹரன்.
“என்ன கேட்ட டா?” என அவள் திருதிருவென முழிக்க, “அதுசரி… இன்னும் எவ்ளோ தூரம் இப்படியே நடக்கிறதா உத்தேசம்?” என்றான் ஹரிஹரன்.
“அது…” எனத் தயங்கியவள், அப்பொழுது தான் கவனித்தாள் தோட்டத்தின் இறுதி பகுதிக்கு வந்ததை.
தோட்டத்தைச் சுற்றி காண்பிக்கின்றேன் என அழைத்து வந்துவிட்டு அவனால் இவனைக் கவனிக்காமல் விட்டு விட்டோமேயென தன்னை எண்ணி நொந்தவள்,
“சாரி டா கரிச்சட்டி” என முகத்தை அப்பாவிபோல் வைத்துக் கொண்டு மன்னிப்பு வேண்ட,
“யாரு அவரு?” என்றான் ஹரிஹரன். அவன் கேட்ட தோரணையில் சிரித்தவள், “எவரு டா?” என்க,
“நான் யார கேட்கிறேனு தெரியல. அப்படி தான…?” என்றான் கண்கள் சுருங்க.
“இங்க நம்ம மட்டும் தான டா இருக்கோம். வேற யாராவது இருக்காங்களா என்ன…?” என அவள் சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா எனத் தேடுவது போல் நடித்தவள்,
பாரிவேந்தனும் அங்கு இல்லாததால் அவர்கள் இருவரும் மட்டுமே இருக்க, “நம்ம மட்டும் தான இருக்கோம். யாரையும் காணோமே…!” என்றாள் அப்பாவியாய்.
“உலகமகா நடிப்பு டா சாமி” என்றான் ஹரிஹரன்.
“சிரீயஸ்ஸா தான் சொல்றேன் டா. இங்க யாரையும் காணோமே…” என்க, “போதும் தாயே. நான் நம்பிட்டேன்” என அவன் இரு கரங்களையும் மேலெடுத்து கும்பிட்டான்.
அதனைக் கண்டு புன்னகைத்தவள், “உனக்கு ஏதோ பேய், பிசாசு பிடிச்சுருச்சு போல. ராமாயி பாட்டிக்கிட்ட கூட்டிட்டு போய் மந்திரிச்சு விடணும் உனக்கு” என்றவள், அங்கு எதுவும் நடக்காதது போல் அவனுக்கு தோட்டத்தைச் சுற்றிக் காட்ட,
அவனுக்கோ அதில் கவனம் லயிக்காது சிந்தனை ஓட்டத்திலேயே நேரத்தைக் கடத்தினான்.
அவர்களின் பார்வையில் படாமல் சற்று தள்ளி நின்றிருந்தவனால் அவள்மேல் உள்ள பார்வையை விலக்க முடியாமல் திணறினான்.
அவனின் மனம் அவளின் “மாமு” என்ற அழைப்பிற்காகப் பத்து வருடங்கள் தவமிருந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவளோ, தன்னைக் கண்டும் காணாதது போல் கடந்து சென்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனால்.
“எப்ப மலரு என்னை மாமு‘னு கூப்பிடுவ? அந்த நிமிஷத்துக்காகத் தான் நான் இன்னும் வாழ்றேன் மலரு…” எனக் கூறிக் கொண்டவன், அங்கிருந்து நகர்ந்தான்.
தோட்டத்திலேயே ஒரு மணி நேரத்தைக் கடத்தியவள், அதன்பின் ஹரிஹரனுடன் வீட்டிற்கு செல்ல, அவளின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த குணவதி, “உன்னைப் பார்க்க உன் அப்பா வந்து இருந்தாரு மா. அதுக்குள்ள நீ எங்க போய்ட்ட? பாவம், அவரு இன்னவரை உனக்காகக் காத்திருந்து இப்போ தான் கிளம்புனாரு” என்றார்.
“ஓ… என்னைப் பார்க்க நான் யாரையும் காத்திருக்க சொல்லலயே ம்மா. அவரு ஏன் எனக்காகக் காத்திருக்கணும்?” என்க, தன் தோழியை முறைத்தான் ஹரிஹரன்.
“என்ன கேள்வி மலர்? உன் அப்பா டி அவரு. அவரு உனக்காகக் காத்திருக்காருனு சொல்றேன், நீ என்னடான்னா இப்படி பதில் சொல்ற?” என்றார் குணவதி.
“ம்மா. அப்பாவா இருந்தா இந்த வீட்டுலயே தான இருக்கணும், சும்மா கெஸ்ட் ரோல் கொடுக்கறவரை எல்லாம் என்னால அப்பானு சொல்லவும் முடியாது, ஏத்துக்கவும் முடியாது” என்றவள்,
“நீ கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு டா. எனக்கு டயர்டா இருக்கு, கொஞ்சம் நேரம் தூங்கப் போறேன்” என அவள் நகர,
“காஃபி குடிச்சுட்டு போ டி” என குணவதியின் குரல் காற்றில் கரைந்தன. அவர் தயக்கத்தோடு ஹரிஹரனை பார்க்க,
அவனோ, “அவ சீக்கிரம் சரியாகிருவா ஆன்ட்டி, நீங்க கவலப்படாதீங்க” எனத் தைரியம் உரைத்தான்.
அவரின் இதழ்கள் விரக்தியில் விரிந்தன. “அவளோட பதினோரு வயசுல இருந்து நானும் அதுக்காகத் தான் காத்துக்கிட்டு இருக்கேன் தம்பி, ஆனா அவ மாறுற மாதிரி தெரியல” என்றவரின் கண்கள் நீர்த் துளிகளால் நிரம்ப,
“கவலப்படாதீங்க ஆன்ட்டி, அவள அங்கிள் கூடப் பேச வச்சுட்டு தான் நான் ஊருக்குப் போவேன் ஆன்ட்டி. அவள இனி நான் பார்த்துகிறேன்” என்றவன், தன் அறையை நோக்கிச் சென்றான்.
கண்களை முந்தானையால் துடைத்தவாறே குணவதி சமையற்கட்டிற்குள் செல்ல, தன் அறைக்குள் வந்த மலர்விழிக்கு மனம் பாரத்தைக் கூட்டியது.
தன் வாழ்வில் பார்க்கக் கூடாத இரு ஆண்களைப் பார்த்த தன் கண்களுக்குத் தண்டனை அளிக்க முடியாமல் பரிதவித்தாள்.
பாரிவேந்தன், அவனை நினைக்கும் போதே ஒரு பக்கம் சந்தோசக் கீற்று உண்டாலும், யாழினியின் வார்த்தைகள் ஒருபுறம் அவள் காதில் ரிங்காரமிட அடுத்த நொடியே மனம் சோகத்தில் மூழ்கியது.
அப்பொழுது அவளின் அலைப்பேசி ஒலி எழுப்ப, அதனை எடுத்துப் பார்த்தவள் திரையில் மின்னிய “இந்து” என்ற பெயரைக் கண்டு இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது.
அழைப்பை ஏற்று, “சொல்லு இந்து” என்றாள் மலர்விழி.
“ஊருக்குப் போய்ட்டியா டி? அந்த ஹரி பயலும் அங்க வர்றதா சொன்னான், வந்து சேர்ந்துட்டானா?” என்றாள் இந்து என அழைக்கப்பட்ட இந்திராகாந்தி.
“வந்தாச்சு டி. அவன் திடுதிப்புனு என் முன்னாடி வந்து நிக்கவும் ஷாக் ஆகிட்டேன், நீங்களும் அவன் வர்றத பத்தி ஒரு வார்த்தை கூடச் சொல்லலைல…” என வருத்தம் கொள்ள,
“எங்ககிட்டயே லாஸ்ட் மினிட்ல தான் சொன்னான் மலர், அதான் உனக்கும் சர்பிரைஸ்ஸா இருக்கட்டுமேனு சொல்லாம விட்டுட்டோம்” என்றாள் இந்திராகாந்தி.
“சரி, சரி… எங்க அந்த லவ் பேர்ட்ஸ்? இன்னும் ஒட்டிக்கிட்டே தான் சுத்துதுங்களா…?” எனக் கேலி இழையோட தனது நண்பர்களைப் பற்றி வினவினாள்.
“அத, ஏன் டி கேட்கிற. இந்த சிலம்பு என்னைக் காவ காக்க வச்சுட்டு அங்க அவனோட லவ்ஸ் பண்ணிக்கிட்டு சுத்தறா” என இந்திரா சோகமாகக் கூற,
அவளின் பதிலில் கலகலவெனச் சிரித்தாள் மலர்விழி. “இன்னும் உன் வாட்ச்மேன் வேலைய விடலயா? ஐ திங்க், அதுங்க கூட வந்தா யாரு வாட்ச்மேன் வேலை பார்க்கிறதுனு தான் இந்த கரிச்சட்டி பய தப்பிச்சு வந்துட்டான் போல” என்றாள்.
“ஷாப்பிங் போகணும்னு என்னையும் இந்த சிலம்பு இழுத்துட்டு வந்துட்டா டி. வந்தோனே ஒரு பிரியாணி ஆர்டர் பண்ணிட்டு சாப்பிட்டுட்டு இரு, அவன பார்த்துட்டு வந்தறேன்னு போனவ தான். இன்னும் வரல” என்க,
“எத்தனை பிளேட் பிரியாணி உள்ள போச்சு?” என்றாள் மலர்விழி குறும்பாக.
“ஜஸ்ட் ஒரு பக்கெட் பிரியாணி தான் பேபி” என்ற குரலில், படுக்கையில் புரண்டு புரண்டு சிரித்த மலர்விழி, “அவ உனக்குப் பிரியாணி வாங்கி கொடுத்தே ஓட்டாண்டி ஆகப் போறா பாரு” என்றாள்.
“கிண்டல் பண்ணாத டி. நானும் இப்ப வருவா, அப்ப வருவானு பிரியாணி சாப்பிட்டுட்டு இருந்தேன். ஆனா அவ வந்த பாட்ட காணோம்… இங்க இந்தச் சர்வர் வேற என்னை ஒரு மாதிரி பார்க்கிறான் டி” என்க,
“ஆமா… கைல காசு ஏதும் வச்சுருக்கியா?” என்றாள் மலர்விழி.
“இல்லையே…” என இளித்து வைக்க, “அப்போ இன்னிக்கு நீ எச்சில் பிளேட் கழுவுறது உறுதி. ஒரு பக்கெட் பிரியாணி வேற, உன்னை அந்த ஹோட்டல் காரன் சும்மா விடமாட்டான்” எனக் கிண்டலடித்தாள் மலர்விழி.
“நீ வேற பயத்தை கிளப்பாத டி. அய்யோ இவள நம்பி வந்து இப்படி பண்ணிட்டாளே, அடியேய் சிலம்பு, உன்னைச் சிலம்ப கம்பத்தாலே நாலு வெளுக்கணும்” எனத் தன் தோழியை வறுத்தெடுத்துக் கொண்டிருக்க,
சத்தமாகச் சிரித்த மலர்விழி, “சரி டி. நீ அப்படியே அந்த ஹோட்டல கிளீன் பண்ணிட்டு எனக்கு ஃபோன் பண்ணு. நீ நாளைக்கு உயிரோட இருந்தா பேசறேன்” என அழைப்பைத் துண்டிக்கப் போக,
“நீயாவது கூகுள் பே‘ல அமௌண்ட் போட்டு விடு டி. இந்தக் காதல் ஜோடிகள நம்பி என்னால இங்க இனியும் உட்கார்ந்து இருந்தா இந்தச் சர்வரே என்னை ஒரு வழி ஆக்கிருவான் போல. முழியே சரியில்ல, ஒரு மாதிரி பார்க்கிறான்” எனப் புலம்பித் தள்ளினாள் இந்திராகாந்தி.
“நகி பேட்டா…” என்றவள், அலைப்பேசியை துண்டிக்க, அவளோ “மலர், ப்ளீஸ் டி” என்றவள் அழைப்பு துண்டிக்கப்பட்டதை உணர்ந்து,
“அய்யோ, இந்த எழவெடுத்தவன் வேற பில்ல கொண்டுட்டு வர்றானே. இப்போ என்ன பண்றது” எனத் திருதிருவென முழிக்க,
சர்வர் பாய் அவள் அருகில் வந்து “பில்…” என நீட்டினான். அதனைக் கைகள் நடுங்க வாங்கியவள் அதில் குறிப்பிட்டு இருந்த தொகையைப் பார்த்துக் கண்களை விரித்தாள்.
அவள் கைப்பையில் இருப்பதோ நூறு ரூபாய் தாள் ஒன்றும், சிலபல சில்லறை காசுகள் மட்டுமே. ஆனால் பில் தொகை நான்கு இலக்கத்தில் இருக்க, என்ன செய்வது எனப் புரியாமல் விழித்தாள் இந்திராகாந்தி.
சுவாரஸ்யமாக போகுது.மலர் பிடிவாதம்.பாரிவேந்தன் மலர் அப்பா ஏக்கம்.இந்து புலம்பல் .
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
Priyani priyani😜😜😜