922 views

ள்ளே அறையில் அமர்ந்தவாறே இந்திரா சற்று கண்ணயர, மலரோ கண்ணை மூட முயற்சித்தும் உறக்கம் வராமல் குழந்தையின் முகமே மனதில் ஓட, அறையை விட்டு வெளியே வந்தாள்.

பாரி எங்கோ வெறித்துக் கொண்டிருக்க, அவனின் பதிலுக்காக ஹரிஹரன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

கரிச்சட்டி அங்க என்னடா பண்றீங்க? வாங்க, வந்து கொஞ்சம் நேரம் தூங்குங்கஎன்க, அவளின் அழைப்பில் இருவரும் திரும்பினர்.

நீ கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு ஃபிளவர், எங்களுக்குத் தூக்கம் வரல. அதான் கொஞ்சம் காத்தாட இங்க நின்னுட்டு இருக்கோம்என்றான் ஹரிஹரன்.

அவள் அவனை முறைக்க, “இதோ வரேன் மாஎன்றவாறே பாரியிடம், “பிரதர், இன்னும் கொஞ்சம் நேரம் இங்க நின்னோம் உங்க புள்ள கண்ணாலயே எரிச்சுருவா. அப்புறம் நடக்கிற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லஎன்றவன், ‘உங்க புள்ளஎன்ற வார்த்தையை அழுத்தமாக உரைத்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான்.

தன்னை வேண்டுமென்றே அவன் வம்பிழுப்பது பாரிவேந்தனுக்கு புரிய, அமைதியாக அதே இடத்தில் நின்றிருந்தான். ஹரிஹரன் வராண்டாவில் இருந்த நாற்காலியில் அமர, மலரோ பாரிவேந்தனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளாகக் கூப்பிடுவான் என்று அவனும், அவனாக திரும்பிப் பார்ப்பான் என்று அவளும் காத்திருக்க, “அடப் போங்கடா, நீங்களும் உங்க காதலும்என முணுமுணுத்தவாறே கைக்குட்டையை முகத்தில் மூடியவாறே இருக்கையின் பின்னே சாய்ந்து உறங்க ஆரம்பித்தான் ஹரிஹரன்.

நிமிடங்கள் நொடிகளாய் கடக்க, இருவருமே அதே நிலையில் நின்றிருந்தனர். ‘அழுத்தக்காரி, மாமுனு ஒரு வார்த்தை கூப்ட்டா கொறைஞ்சா போய்ருவா!’ என அவனும்,

ஏன் நான் கூப்ட்டா தான் துரை திரும்புவாரோ! ஆமா, நம்ம கூப்டலனாலும் ஏன் திரும்பப் போறாரு. இதே அவங்க யாழுவா இருந்தா ஓடோடி வந்துருப்பாக!’ என நினைத்தவளின் மனம் சற்று பொறாமைப்பட்டது.

அதேநேரம் மனம் வாடவும் செய்தது. இன்னும் சில தினங்களில், யாழினிக்கு முழு உரிமையுள்ளவன் ஆகப் போகின்றவன். இந்நிலையில் தான், அவனை உருகி உருகி அழைத்திடவா முடியும்!

ஏன், நீ உருகலயா, கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி?’ என மனம் எழுப்பிய கேள்விக்கு, பதிலளிக்க முடியாமல் திணறினாள். இத்தனை நாள் கழித்து, தன்னவனின் அணைப்பு தந்த சுகம் இன்னும் அவள் தேகத்தில் வெம்மையாய் படர்ந்தது.

ஹரிஹரன் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பக்கத்திலே அவளும் அமர, அவள் என்னதான் செய்கின்றாளென திரும்பிப் பார்த்தான் பாரிவேந்தன்.

அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் அருகில் வந்தவன் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து, “கொஞ்சம் கண்ணயரு புள்ள. காலைல எதுவா இருந்தாலும் யோசிச்சுக்கலாம்என்றவன், தனது கரங்களைப் பின்னால் முட்டு வைத்து அதில் சாய்ந்தான்.

சிறிது நேரத்தில், அவள் கண்ணயர, உறங்கும் அவளையே பார்த்துக் கொண்டே இரவைக் கழித்தான் பாரிவேந்தன்.

அதிகாலை நேரத்திலேயே, மருத்துவமனை முன் கர்ப்பிணி பெண்ணின் மாமியாரும் கணவனும் ஆட்டோவில் வந்திறங்க, அப்பொழுது தான் அவர்களும் விழித்திருந்தனர்.

கண்களைக் கசக்கியவாறே இந்திரா அறையிலிருந்து வெளியே வர, பாரிவேந்தன் அங்கு இருப்பதைக் கண்ட அந்தப் பெண்ணின் கணவன், “அண்ணா எங்கள மன்னிச்சுருங்க ண்ணாஅம்மா ஏதோ குழந்தை இறந்தத கேட்டோனே கோபத்துல அப்படி பேசிட்டாங்கஎன மன்னிப்பு வேண்ட,

மலருக்கோ அங்கு நடப்பவை அனைத்தும் கனவாகத் தோன்றியது. அவள் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்க, அவள் அருகில் வந்த அந்தப் பெண்மணி, “என்னை மன்னிச்சுரு மாநைட்டு என் பேரப்புள்ள பொறந்தோனே போய் சேர்ந்துட்டானேனு என்ன பேசறோம்னு தெரியாம பேசிப்புட்டேன். என்னை மன்னிச்சுரு தாயிஎனக் கையெடுத்துக் கும்பிட,

அதில் பதறியவள், அவர் கைகளை விலக்கிவிட்டு, “பரவால்ல மாஅந்த இடத்துல நானாவே இருந்தாலும் அப்படி தான் நடந்துருப்பேன். இப்போ உங்க மருமக எப்படி இருக்காங்க மா?” எனக் கனிவாக அவள் விசாரிக்க,

இப்படி தங்கமான மனசுக்காரிக்கா நான் சாபம் கொடுத்தேன்என் வாயிலிருந்து அப்படியொரு வார்த்தை வந்துருச்சேஎனத் தன்னையே அவர் அடித்துக் கொள்ள முற்பட, அதனைத் தடுத்தாள் மலர்விழி.

போனது போகட்டும் மா. இனியாவது உங்க மருமகள பத்திரமா பாத்துக்கோங்கஎன்றாள் மலர்விழி. இருவரும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து செல்ல, ஹரிஹரனோ, “என்னடா நடக்குது இங்க? வந்தாங்க, மன்னிப்பு கேட்டு அழுதாங்க. போறாங்க, இரண்டு மணி நேரம் தூங்குன கேப்ல அப்படி என்ன மெடிக்கல் மிராக்கல் நடந்துச்சு?” என வாய்விட்டுப் புலம்பியவன்,

பாரி பிரதர் இதெல்லாம் உங்க வேலையா?” என்றான். சிறு புன்னகை ஒன்றை சிந்தியவன், “நான் எதுவும் பண்ணல தம்பி. அங்க நடந்த சில விசயங்கள் அவங்க தப்ப உணர வச்சுருக்குஎன்றான் பாரி.

அப்படியென்ன நடந்துச்சு ண்ணா? நானே காலைல பெரிய கலவரமே நடக்குமேனு பயத்துல ஒரு சொட்டு தூக்கம் இல்லாம பயத்துல கெடந்தேன்என்க, ‘யாரு நீ?’ என்ற கேள்வியுடன் மலர்விழியும் ஹரிஹரனும் பார்க்க,

அவமான பார்வையை துடைத்து விட்டவள், “உண்மைய சொன்னா இங்க யாரும் நம்ப மாட்டாங்கஎன முணுமுணுத்தாள். “ரீலு விடறதுக்கும் ஒரு அளவு இருக்கு இந்து மா. இனி ஏதாவது பேசுன பேசறதுக்கு அந்த வாய் இருக்காதுஎனப் புன்னகையுடனே வார்த்தைகளில் அழுத்தத்தைக் கூட்டினான் ஹரிஹரன்.

ஹி…” என இளித்து வைத்தவள் பாரியை பார்க்க, நண்பர்களின் சம்பாஷணைகளைக் கண்டு புன்னகை உறைய நின்றிருந்தவன், அங்கு மருத்துவமனையில் நடந்ததை விவரித்தான்.

இங்கிருந்து அருகில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல, அந்தப் பெண்ணின் வயதைக் காரணம் காட்டி அங்கு உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.

அந்த மருத்துவரின் காலில் விழுந்த அந்தப் பெண்ணின் கணவன், “டாக்டர் ப்ளீஸ் டாக்டர், என் பொண்டாட்டிய எப்படியாவது காப்பாத்திக் கொடுங்க டாக்டர்எனக் கெஞ்ச,

எந்தக் காலத்துலயா இருக்கீங்க நீங்க எல்லாம்? பதினாறு வயசு புள்ளைய கட்டி அதுக்கு குழந்தைய கொடுத்துட்டு கடைசி நேரத்துல எங்ககிட்ட தூக்கிட்டு வருவீங்க. அப்புறம் ஏதாவது அசம்பாவிதம் நடந்தா மொத்த பழியவும் எங்கமேல போடுவீங்க. மொதல்ல உங்கள தான் போலிஸ்ல சொல்லி உள்ள தள்ளி முட்டிக்கு முட்டித் தட்டணும்என்றார் அவர்.

ஏற்கெனவே மலர்விழி கொடுத்த சிகிச்சை பற்றியும் அந்தப் பெண்ணின் மாமியாரின் பேச்சுக்களும் முன்னரே அவரின் காதிற்கு வந்தடைந்திருந்ததால் அந்த கோபத்தின் வெளிப்பாடு தான் இப்படி பேசினார் அந்த மருத்துவர்.

டாக்டர், டாக்டர்ப்ளீஸ் டாக்டர், என் பொண்டாட்டிய எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர். எங்க புள்ள தான் எங்கள விட்டுப் போய்ட்டான், என் பொண்டாட்டிய எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்என அவன் கெஞ்ச, அதில் சற்று இரக்கப்பட்டவர், “சிஸ்டர், அந்தப் பொண்ண உள்ள கொண்டு போங்க. அப்படியே இவங்ககிட்ட அவங்க மனைவி ஒருவேள இறந்துட்டா அதுக்கு ஹாஸ்பிட்டல் பொறுப்பில்லனு எழுதியும் வாங்கிருங்கஎன்றவாறே மேற்படி சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

ஒவ்வொரு நொடியும் வெளியே நின்றிருந்த இருவருக்கும் போராட்ட களமாய் இருந்தது. அரைமணி நேரத்தில் சிகிச்சை அறையிலிருந்து மருத்துவர் வெளியே வர, அவரைக் கண்டதும் இருவரும் அவர் அருகே ஓடினர்.

என் மருமவ எப்படி இருக்கிறா டாக்டர்?” எனப் பரிதவிப்புடன் அந்தப் பெண்மணி வினவ, “அவங்க இப்போ நல்லா இருக்காங்கஎன்ற வார்த்தையை அவர் முடிப்பதற்குள்,

ரொம்ப நன்றிங்க டாக்டர்என்றார் உணர்ச்சிவசப்பட்டு. “இந்த நன்றிய கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி உங்க மருமகளுக்கு பிரசவம் பார்த்த டாக்டருக்குச் சொல்லுங்க மாஏன்னா உங்க மருமகள காப்பாத்துனது நாங்க இல்ல, அவங்க தான். அவங்க மட்டும் உங்க மருமகளுக்கு ட்ரீட்மென்ட் பண்ண முடியாதுனு சொல்லி வெளிய அனுப்பி இருந்தா இந்நேரம் உங்க மருமகள உயிரோட பாத்திருக்க முடியாது.

ரொம்ப கிரிட்டிக்கலான ஸ்டேஜ்ல இருந்து தைரியமா அத கேன்டில் பண்ணி உங்க மருமகள காப்பாத்துனது அவங்க தான்என்றவர், அந்தப் பெண்ணின் கணவரிடம்,

மைனர் பொண்ண கல்யாணம் பண்ணதே தப்பு, இதுல அதுக்கு ஒரு குழந்தை வேற. இனியாவது கொஞ்சம் சூதானமா இருந்துக்க பாருங்க. போங்க போய் உங்க மனைவிய பாருங்கஎன்றவர் அங்கிருந்து கிளம்பினார்.

சில அடிகள் எடுத்து வைத்தவர், பின் அவர்கள் புறம் திரும்பி, “முடிஞ்சா அந்த டாக்டருக்கு நன்றி சொல்லிருங்கஎன்றவர், தன் அறைக்குச் சென்றார்.

அவரின் வார்த்தைகளில் இருந்த உண்மையை உணர்ந்தவர்கள் அவசரத்தில் விட்ட வார்த்தைகளை நினைத்து மனம் வருந்த, அதனால் தான் விடிந்தவுடனே மலர்விழியை பார்த்து மன்னிப்பு கேட்க வந்திருந்தனர்.

இதனை பாரி கூறி முடிக்க, “எங்க கூடத் தான் பிரதர் நைட்டு இருந்தீங்க? உங்களுக்கு எப்படி இது…?” என முடிக்காமல் ஹரிஹரன் கேள்வியாய் பாரிவேந்தனை பார்க்க,

அந்தப் பொண்ணு எப்படி இருக்கிறாங்கனு கேட்கிறதுக்காக நான்தான் அந்த டாக்டருக்கு ஃபோன் பண்ணேன். அப்போதான் அங்க நடந்தத அவரு சொன்னாரு தம்பிஎன்றவன்,

சரி, நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க. டியூட்டி முடிஞ்சுது தான, போய் கொஞ்சம் நேரம் ஓய்வெடுங்க. நைட் முழுக்க சேர்லயே உக்காந்து தூங்குனது உடம்பு வலிக்கும்என்றான் பாரிவேந்தன்.

பின் மூவரும் அங்கிருந்து கிளம்ப, தனது வண்டியில் பாரிவேந்தனும் புறப்பட்டான். புறப்படும் சமயத்தில் அவனிடம், “நீங்க வீட்டுக்குப் போகலயா பிரதர்?” என்றான் ஹரிஹரன்.

நம்ம தோட்டத்துல சின்ன வேலை இருக்கு தம்பி, அத முடிச்சுட்டு தான் வீட்டுக்குப் போகணும்என்க, அவனோ, “கல்யாண மாப்பிள்ளை ரெஸ்ட் எடுக்காம தோட்டத்துல என்ன வேலை பிரதர்?” என்றான்.

அவனின் பார்வை ஒருசில நொடிகள் மலர்விழியை தீண்டிச் சென்றன. பதிலளிக்காமல் அவன் அமைதி காக்க, “கரிச்சட்டி வண்டிய எடுக்கப் போறியா இல்லயா?” என்றாள் மலர்விழி சற்று கடுப்பாக.

ஒரு கேள்வி கேட்டது குத்தமா?” என்றவனின் இதழ்கள் மர்ம புன்னகையை உதிர்த்தது. பின் அவர்கள் கிளம்ப, தோட்டத்திற்கு சென்றவன் அங்கு வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்ப, மொத்த குடும்பமும் வாசலில் அவனுக்காகக் காத்திருந்தனர்.

வண்டியை நிறுத்திவிட்டு சாவியை விரல்களில் சுழலவிட்ட வண்ணம் வந்தவன், அனைவரும் யாரோ ஒருவருக்காகக் காத்திருப்பதுபோல் வாசலில் நிற்பதைக் கண்டு, “என்ன ம்மா? ஏன் எல்லாரும் காலைலயே வாசல்ல நின்னுட்டு இருக்கீங்க, யாராவது வர்றாங்களா?” என்றான் பாரிவேந்தன்.

கோபமாய் பார்த்த பழனியப்பன், “எங்க பாரி போய்ருந்த? அர்த்த ராத்திரில சொல்லாம கொள்ளாம போற அளவுக்கு அப்படி என்ன சோலி வேண்டிக் கெடக்கு? விடிஞ்சா நாளன்னிக்கு கண்ணாலத்த வச்சுட்டு இப்படி சாமத்துல சொல்லாம போறதா?” என்றார்.

அப்போ நமக்காகத் தான் ஒட்டுமொத்த குடும்பமும் காத்திருக்கா!’ என நினைத்தவன், “அது வந்துப்பாகொஞ்சம் அவசர வேலை, ஒரு ஃபோன் வரவும் அந்த அவசரத்துல சொல்லாம கிளம்பிட்டேன்என்றான் குரலைத் தாழ்த்தி.

என்ன அவசரம்னாலும் சொல்லிட்டு போய் இருந்தா நாங்க கொஞ்சம் நிம்மதியா இருந்திருப்போம்ல ராசா, உன்னைக் காணோம்னு யாழு வேற கண்ணைக் கசக்க ஆரம்பிச்சுட்டாபோ, போய் அவள சமாதானப்படுத்துஎன்றார் ரேவதி.

ம்மா, இதுக்கு எதுக்கு அவ அழணும்?” என நொந்தவாறே வீட்டினுள் செல்ல, அங்கு பாரிஜாதத்திடம் வழக்காடிக்கொண்டிருந்தாள் யாழினி.

இல்ல அண்ணி, மாமா நான் எத சொன்னாலும் அதக் கேட்கவே மாட்டேங்கிறாரு, என்னைவிட அந்த மலரு தான் அவருக்கு உசத்தி. இப்பக் கூடப் பாருங்க, அவளுக்காகத் தான் இப்படி அர்த்த ராத்திரில சொல்லாம கொள்ளாம போய்ருப்பாருஎன அவனைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாள்.

பாரிவேந்தனுக்கோ எதிலாவது முட்டிக் கொண்டால் தேவலாம் என்றிருந்தது. அவன் உள்ளே வந்ததைக் கண்ட பாரிஜாதம், “அண்ணாஎன்றவாறே எழ,

நீ கொஞ்சம் வெளிய இரு மாஎன்றான். பாரிஜாதம் இருவரையும் ஒருமுறை திரும்பிப் பார்த்தவள், எதுவும் பேசாமல் வெளியேற கதவைச் சாற்றினான்.

யாழினியோ கண்களில் வழிந்த கண்ணீரோடு அமர்ந்திருக்க, அவள் அருகில் சென்றவன், “இப்போ உனக்கு என்ன தான் பிரச்சனை யாழு? ஏன் என்னை உசுரோட வதைச்சுக்கிட்டு இருக்க?” என்றான் பொறுமையாய்.

உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தாலும், அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டே அவன் பொறுமை காக்க, அவளோ அந்தப் பொறுமையை சீண்டிப் பார்த்தாள்.

உங்க ஆசை காதலிய பாக்க தான் ஓடோடி போனீங்களோ?” என்க, பெருமூச்சு விட்டவன், “இப்போ உனக்கு என்ன தெரியணும், நான் நைட் எங்க போனன்னு தெரியணும். அவ்ளோ தான, ஆமா நான் மலர பாக்க தான் போய்ருந்தேன். இப்போ அதுக்கு என்ன?” என்றான்.

அதான் ஊருக்கே நல்லா தெரியுமே, அவ அம்மா என் அம்மா வாழ்க்கைய பறிச்சா. இப்போ உங்கள வளைச்சுப் போட்டு என் வாழ்க்கைய பறிக்க வந்துட்டா…” என அவள் கூறி முடிப்பதற்குள் அவள் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது பாரிவேந்தனின் கரங்கள்.

எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு யாழு. இவ்ளோ நாள் நீ ஆட்ற ஆட்டுக்குத் தலையாட்டிட்டு இருக்கிறதால என்ன வேணும்னாலும் பேசலாம்னு பேசுன பேசற நாக்க இழுத்து வச்சு அறுத்துருவேன் ஜாக்கிரதை. என் மலர பத்தி உனக்கு என்ன டி தெரியும்? இல்ல உனக்கு என்ன தெரியுங்கிறேன்என அவன் கோபத்துடன் அவள் அருகே செல்ல, அவளோ அவனின் கோபக் கனலைக் கண்டு சற்று பின்வாங்கினாள்.

ஏன் இந்தக் கண்ணாலத்துக்கு ஒத்துக்கிட்டேன்னு உனக்கே நல்லா தெரியும். என் மனசுல மலரு இருக்கிறத தெரிஞ்சு தான டி கட்டுனா என்னைத் தான் கட்டுவேன்னு மாமா கிட்ட ஒப்பாரி வச்ச. இப்போ என்னமோ இஷ்டத்துக்கு பேசிக்கிட்டு இருக்க? ஒன்ன மட்டும் ஞாபகத்துல வச்சுக்கோ. என் மனசுல இருந்து மலர தூக்கி எறியணும்னு நீ நினைச்சா அது எந்த ஜென்மத்துலயும் நடக்காது. உனக்குத் தேவை என் மனசு இல்லயே, அப்படி நீ நினைச்சு இருந்தா இப்படி பேச மாட்ட.

இந்த உடம்பு மட்டும் வேணும்னா உனக்குச் சொந்தமாகலாம், என் மனசு எப்பவும் என் மலருக்கு தான். இஷ்டம்னா இரு, கஷ்டம்னா கண்ணாலத்த நிறுத்திரு. நானாவது நிம்மதியா இருப்பேன்என்றவன் கதவருகே செல்ல,

என்னத்த காட்டி மயக்குனா மாமா அவ? அவக்கிட்ட என்னத்தை கண்டீங்க, இல்ல என்கிட்ட இல்லாதது அவக்கிட்ட என்ன இருக்குனு இப்படி பேசுறீங்க?” என அவள் கோபத்தில் வார்த்தைகளைவிட,

அவள் கழுத்தை நெரிக்கச் சென்றவன், “ச்சேஅவ உடம்புல ஓடுற ரத்தம் தான டி உன் உடம்புலயும் ஓடுது. எப்படி உன்னால மட்டும் வாய் கூசாம இப்படி பேச முடியுது? ஏற்கெனவே இதே வார்த்தைய நீ சொன்னப்பவே உன்னை அறைஞ்சிருந்தா இன்னிக்கு நீயும் இப்படி பேசி இருக்க மாட்ட, அவளும் என்னை உனக்கு விட்டுக்கொடுத்து இருக்க மாட்டா. ஏதாவது பண்ணிறப் போறேன், தயவுசெஞ்சு என் கண்ணு முன்னாடி வந்தறாதஎனக் கைகளை இறுகப் பற்றியவன், கோபத்தை அடக்க முற்பட்டான்.

அவளோ, கண்களில் கண்ணீர் தளும்ப நின்றிருக்க, கதவை படாரெனத் திறந்தவன், வெளியே செல்ல ஏதோ உள்ளே தகராறு ஏற்பட்டிருப்பதை பெரியவர்கள் உணர்ந்தாலும் அதனை வெளியே வாய்விட்டு இருவரிடத்திலும் கேட்க முடியவில்லை.

அனைத்தையும் ராமாயி பாட்டி அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். நெருங்கிய உறவுகள் வரத் தொடங்கி இருக்க, திருமண ஏற்பாடுகளில் இதனைச் சற்று மறந்திருந்தனர் எனலாம்.

அன்றையபொழுது முழுக்கவும் பாரி வீட்டிற்கு வராமல் இருக்க, வந்த உறவினர்களிடத்தில் வேலையைக் காரணம் காட்டி சமாளித்தனர்.

இரவு வீட்டிற்கு வந்தவனை பிடித்துக் கொண்ட ரேவதி, “ஏன் பா, உனக்கும் யாழுவுக்கும் ஏதாவது சண்டையா கண்ணா. நாளைக்கு நலுங்கு வேற இருக்கு, சொந்தக்காரங்க எல்லாம் வரத் தொடங்கிட்டாங்க. நீ இப்படி வீட்டுப் பக்கமே வராம இருக்கிறது நல்லா இருக்குமா கண்ணா?” என்றார் கவலையுடன்.

தன் தாயின் சோகம் அவனைப் போலி புன்னகையை சுமக்க வைத்தது. “அதெல்லாம் ஒன்னுமில்ல ம்மா. கொஞ்சம் வெளிய வேலை இருந்துச்சு, அதான். நீ போய் வேலைய பாரு மா, எங்கயும் போகல. இங்க தான் இருக்கேன் சரியா!” என்றான்.

அவர் மனம் இன்னும் சமாதானமடையாமல் இருக்க, “ம்மா, ஒன்னுமில்ல. போ, நம்ம யாழு தான. அவக்கிட்ட எனக்கென்ன கோபம், பாரிஜாதம், அம்மாவ உள்ள கூட்டிட்டு போ மாஎன்றவன், வந்திருந்த உறவுக்காரர்களை நலம் விசாரித்தான்.

டேய் பேராண்டி, நம்ம கோவில்வரைக்கும் போய்ட்டு வருவோம். வாஎன ராமாயி பாட்டி அழைக்க, ‘அப்பாயி எதுக்கு இப்போ நம்மள கூப்டுதுஎன யோசித்தவன்,

ஏப்பாயி இந்நேரத்துல எதுக்கு கோவிலுக்கு? காலைல கூட்டிட்டுப் போறனேஎன அவன் சமாளிக்க, “அட வா டாஉன்னை என்னவோ கடத்திட்டுப் போற கணக்கால்ல வெசனப்படற!” என அவனை வலுக்கட்டாயமாகக் கோவிலுக்கு அழைத்துச் சென்றார் ராமாயி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *