Loading

பூவிலாங்குடி கிராமத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் மகியும், தூரனும். கயலின் அம்மாவின் அழுகை தான் அந்த மருத்துவமனையையே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஓயாமல் இருந்தது. 
 
தூரனுக்கு தலையில் அடிபட்டு இருக்க.. கால்களிலும் , கைகளிலும் ஆங்காங்கே சிறு சிறு காயங்கள் மட்டுமே. மகிக்கு தான் அதிக அளவு சேதாரங்கள் ஏற்பட்டிருந்தது. மகியின் தலையில் அடிபட்டு இருக்க அதேநேரம் கழுத்தும் அதிக அளவு நெறுக்கப்பட்ருந்தது. இரும்பு பொருளால் வேறு அடிக்கப்பட்டு இருக்க… குறைந்தது 20 நாட்களாவது மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். அதேபோல் தூரனுக்கு அந்த அளவுக்கு பிரச்சனைகள் இல்லாத தால் மூன்று நாட்களில் அழைத்து செல்லலாம் என்றும் கூறியிருந்தனர். 
 
தகவலறிந்து வந்த முத்துவேலிடம் மகியின் தாயோ..”இங்க பாருங்க தம்பி! என் பிள்ளை எப்படி இருக்கான்னு. எதையோ கண்டு பிடிக்கிறன்னு போயி ஒத்த பிள்ளைய தொலைச்சிட்டு நின்னிருப்பேனே நானு. அப்பவே இவன்கிட்ட எவ்வளவோ சொன்னேன் தம்பி. என் பேச்சைக் கேட்காம போயிட்டு இப்படி வந்து படுத்துக் கிடக்கிறான் பாருங்க தம்பி. பார்க்கிற எனக்கு தான் உசுரு உடம்புல நிக்கலை தம்பி. எத்தனை வருஷமா இந்த ஊர்ல நடக்கிறதை பார்த்துட்டு இருக்கோம்,
. நமக்கு தெரியாதா இது காத்து கருப்பு வேலன்னு. பெத்தவ பேச்சை கேட்காம இப்படி போயிட்டு வந்திருக்கானே படுபாவி. ஏதாவது ஆகிருந்தா நான் என்ன தம்பி பண்ணியிருப்பேன். ஏற்கனவே ஆதிய தொலைச்சுட்டு நிக்கிற வலியே இன்னும் போகல. .. அதுக்குள்ள இவனையும் வாரிக் கொடுத்து இருப்பேனே..”   என வருத்தத்தில் அழுகும் தன் அண்ணன் மனைவிக்கு ஆறுதல் கூற முடியாமல் அமைதியாக நின்றிருந்தார் முத்துவேல். 
 
“இந்தாடி இப்ப எதுக்கு ஊரையே ஒன்னுக்கூட்டிட்டு இருக்க… உன்னையும் என்னையும் கண்டுக்காம தானே உன் மகன் போயிட்டு வந்திருக்கான். பெரியவங்க நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு தோனல அவனுக்கு… நீ என்னமோ மகன் மகன்னு  உருகுற. முதல் முதல்ல இதை விசாரிக்க போறேன்னு நின்னப்பவே நான் முடிவா சொல்லிட்டேன் இதுல நீங்க தலையிடக்கூடாதுன்னு. என் பேச்சையும் மீறி எவ்வளவு தைரியம் இருந்தா சாவைத் தேடி போயிருப்பான் உன் மகன். பெத்தவன் சொல்லியும் கேட்காம போனதால தான் இப்போ இப்படி வந்து படுத்திருக்கான். இளம் ரத்தம் இல்லையாடி இப்படித்தான் சூடா ஏதாவது பண்ணும். என்ன மாதிரி ஒரு குடும்பத்தை தாங்கி நின்னு, உசுரா பாத்துக்கிட்டே பையனை இப்படி குற்றுயிரும் குலையுயிருமா  பார்த்தா அப்புறம் தெரியும்… நம்ம தவிப்பு என்னன்னு. இது இவங்க ரெண்டு பேருக்கும் தேவை தான். அங்க போனா செத்துருவோம்ன்னு  தெரிஞ்சே போய் இருக்காங்க பாரு…. இவனுங்க ரெண்டு பேரும் தைரியமான ஆம்பளைங்க தான். ஏதோ நம்ம எந்த கடவுளுக்கு எப்போ செஞ்ச புண்ணியமோ… உசுரோட கண்ணு முன்னாடி நிக்கிறாங்க. அத நினைச்சு சந்தோஷப்படு…. நீ என்ன கத்தி அழுதாலும் இவங்களுக்கு புரியாது. …” என்று கோபத்தில் ஆரம்பித்து வருத்தத்தில் முடித்த  குமரேசனை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் மகி அவரையே பார்த்திருக்க… “அப்பா உங்க பேச்சை மீறி நடக்கணும்னு நாங்க ஒரு நாளும் நினைத்ததில்லை. இந்த ஊர்ல நடக்கிற மர்மத்தை பொய் னு நிரூபிக்க தான் அங்க போனோம். இந்த மாதிரி நடக்கும்னு நாங்க சத்தியமா எதிர்பார்க்கல பா” என தூரன் குமரேசனை சமாதானப் படுத்தும் நோக்கோடு பேச இடை வெட்டிய குமரேசன்  “இங்க பாரு தூரன் நான் என் மகனுக்காக மட்டும் பேசல உனக்காகவும் சேர்த்துதான். எங்கள நம்பி தானே உன்னை பெத்தவங்க இங்கு அனுப்பி வைச்சிருக்காங்க.. அந்த நம்பிக்கையை நாங்க காப்பாற்ற வேண்டாமா?  எங்களுக்காது பரவால்ல உன்னை பெத்தவங்களுக்கு நீ ஒரே ஒரு புள்ள. உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா அவங்க வாழ்க்கை இனிமே எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாரு. பெத்தவங்களுக்கு சந்தோஷமே  பிள்ளைங்க நல்லபடியா வாழுறதை பார்த்துட்டு கண்ணை மூடிறது தான்.  இதோ இங்க நிற்கிறானே என் சித்தப்பா மகன் முத்துவேல் அவனுக்கு அந்த பாக்கியம் கிடைக்கல. எங்களுக்கும் கிடைக்காம பண்ணிடாதீங்கன்னு தான் சொல்லுறேன். உன்னோட அப்பா அம்மாக்கு தகவல் சொல்லிட்டேன். அவங்க வந்துகிட்டே இருக்காங்க. மூணு நாள் இங்க இருந்துட்டு நல்லபடியா அப்பா அம்மா கூட கிளம்பி போ. நீயும் என் மகன்தான் எப்ப வேணா இங்க நீ வரலாம் போகலாம். ஆனால், திரும்பவும் இந்த ஊர்ல நடக்கிற எதைப்பற்றியும் கண்டுபிடிக்கனும்னு  மட்டும் வராதா… ”   என முற்றுப்புள்ளி வைத்து முடித்தார் குமரேசன்.
 
குமரேசனின் ஞாயங்கள் புரிய இருவரும் அமைதியாக அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தனர்.
 
 
“ஹலோ….
அப்பா அம்மா ரெண்டு பேரும் வீட்டுக்கு போயிட்டாங்க. இப்போ தம்பிங்க கூட நான் மட்டும்தான் இருக்கேன். தூரன் அப்பா அம்மா வர இன்னும் நேரம் இருக்கு. நீங்க இப்போ வந்தீங்கன்னா சரியா இருக்கும்.”
 
“சரி நான் ஹாஸ்பிடல் பக்கத்துல வந்துட்டேன். யாரு கண்ணுலயும் படாம வேற வரணும். இத்தனை நாள் ரகசியமா போட்டு வச்ச பிளான் அ இப்படி போட்டு ஓடச்சிட்டானுங்க. இப்ப மட்டும் நான் யாரு கண்லையாது பட்டா…அவ்ளோ தான் ஏன் என்ன எதுக்குன்னு கேள்வி வரும். எல்லாமே சரியா வர நேரத்துல இவனுங்க ரெண்டு பேரும் இப்படி பண்ணுவாங்கன்னு நினைக்கவே இல்ல கயல்… நானே இவங்களை கொன்னு இருக்கணும். …”
 
“எனக்கும் அதே கோபம் தான். ஆனா அவனுங்கள என்னால திட்டவும் முடியல. நல்லது பண்ண தானே போனானுங்க. தன்னோட உயிரையும் மதிக்காம உண்மையை கண்டுபிடிக்க போனதுல எனக்கு பெருமையா தான் இருக்கு… அது மட்டும் இல்ல இவனுங்க ரெண்டு பேர் மூஞ்சியும் சரியே இல்லை. எதையோ கண்டு பிடிச்சிட்டாங்க போல… முகத்துல பயங்கரமான ஒளிவட்டம் தெரியுது. நீங்க சீக்கிரமா வாங்க என்னென்னு கேட்போம்”.
 
“ம்ம்… நான் ஹாஸ்பிடல் உள்ள வந்துட்டேன் நீ போனை வை. நானே வந்து ரெண்டு பேர் கிட்டயும் பேசுறேன்.”
 
****************************
 
பூவிலாங்குடிக்கு வந்ததும் குமரேசனை… ஊர் மக்கள் அனைவரும் பிடித்துக் கொண்டனர். குமரேசன் மீது புகார் கொடுக்கப்பட்டு பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்து தலைவராக பரசுராம் இருக்க… குமரேசன் முத்துவேல் இருவரும் ஊர் முன் நின்றிருந்தனர் . 
 
“இந்த ஊர்ல என்ன நடக்குதுன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். இத்தனை வருஷமா பாத்துக்கிட்டு இருக்கோம். நமக்கு அங்க என்னன்னு போய் பாக்க தெரியாதா? குடும்பம் இருக்குன்னு பயந்துகிட்டு தானே அந்த பக்கமே போகாம இருக்கும். குமரேசன் பையன் பண்றது கொஞ்சம் கூட சரியில்லை. அதுவும் வெளியூர்க்காரன் பையனுக்கு என்ன தெரியும் நம்ம ஊர பத்தி. அந்தப் பையன் கூட கூட்டு சேர்ந்துக்கிட்டு இப்படி ஒரு வேலையைப் பண்ணி இருக்கானே. இதனால நமக்கு ஏதாச்சும் ஆபத்து வந்தா அவங்க ரெண்டுபேருமே பொறுப்பேத்துபாங்களா. ஏற்கனவே இந்த ஊருல சாவுக்கு பஞ்சமில்லை. இவனுங்க ரெண்டு பேரும் தானா சாவ தேடி போயிருக்காங்க. இனிமே என்னென்ன நடக்குமோ தெரியல… இதற்கான தண்டனை கண்டிப்பா குமரேசனுக்கு கொடுத்துதான் ஆகணும். அப்போ தான் இனிமே யாரும் இந்த மாதிரி ஒரு வேலையை செய்ய மாட்டாங்க…”  என பஞ்சாயத்தில் நின்றிருந்த ஒருவர் கூற…. பரசுராமோ குமரேசனை பார்த்து  “நீ என்ன சொல்ற குமரேசா?”
 
“இதுல நான் சொல்ல என்ன இருக்கு. என் மகன் பண்ணது தப்பு. அதுக்கான தண்டனையா என்ன கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன்.”
 
சிறிது நேரம் யோசித்த பரசுராம்… “இங்க பாருங்க குமரேசனை நமக்கு நல்லாவே தெரியும். இவ்ளோ நாளா நம்ம ஊருல நல்ல மதிப்பா வாழ்ந்துட்டு இருக்கார். அவரால நமக்கு எந்த பிரச்சினையும் வந்ததில்லை. இப்போ அவரோட மகன் தெரியாம ஒரு தப்பு பண்ணிட்டான். அதுக்காக குமரேசனை தண்டிக்கிறது எந்த விதத்திலும் நியாயமாகாது. மகேஷ் பண்ண தப்புக்கு இப்ப தண்டனையா ஹாஸ்பிடல்ல இருக்கான். குமரேசன் மட்டும் இனி என் மகன் எந்தவித பிரச்சனையும் பண்ண மாட்டான்னு உறுதியா சொன்னா போதும். அதே மாதிரி கொடுத்த அந்த போலீஸ் கம்ப்ளைன்ட் ஐயும் திரும்ப வாங்கிக்கணும். ஏன்னா.. போலீஸ் அது இதுன்னு போனா திரும்பவும் என்ன ஏதுன்னு நம்மள சாகடிப்பாங்க. முடிஞ்சவரைக்கும் அதை விட்டு ஒதுங்கி இருக்கிறது தான் நமக்கு நல்லது. குமரேசன் வார்த்தை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.   இத மட்டும் குமரேசன் உறுதியா சொன்னா போதும்.”
 
“என் மேல நம்பிக்கை வைத்து இப்படி ஒரு வார்த்தை சொன்னதற்கு நன்றி பரசுராம். என் மகனால இனிமே இந்த ஊருல எந்த பிரச்சினையும் வராது. அப்படியே ஏதாச்சும் வந்தா.. இனிமே இந்த ஊர் பக்கமே நான் வரமாட்டேன். இது என்னோட மகள் கயல்விழி மேல சத்தியம்..” என்று ஊர் பஞ்சாயத்திடம் உறுதியளித்தார் குமரேசன்.
 
“குமரேசனோட பேச்சை மீறி அவருடைய மகன் நடக்க மாட்டான்னு நம்புறேன். அதே மாதிரி இனிமே அந்த இடத்துக்கு யாருமே போக முடியாதபடி… ஏதாச்சும் சாமியாரை கூட்டிட்டு வந்து முறைப்படி என்ன செய்யணுமோ அதை செஞ்சு அந்த இடத்துக்கு வேலி போடலாம். தவறியும் கூட யாரும் அங்க போக முடியாத மாதிரி பண்ணிடலாம்.” பரசுராமன் பேச்சிற்கு தலையசைத்த ஊர் மக்கள் இந்த முடிவை ஏற்றுக் கொண்டு கலைந்து செல்ல, பரசுராம், குமரேசன் இருவரும் சிறு பார்வையை ஒருவர் மீது ஒருவர் செலுத்தி விட்டு அவரவர் வீட்டுக்கு சென்றனர்.
 
 
விஷயத்தைக் கேள்விப்பட்டு அரக்கப்பரக்க ஓடி வந்த கட்டபொம்மனை சோர்ந்து படுத்திருந்த மகியும் அவன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் தூரனமே வரவேற்றனர்… 
 
“தூரன் உங்களுக்கு என்ன ஆச்சு. உங்களை ஏதோ பேய் அடிச்சுட்டதா சொல்றாங்க….” என்ற கட்டபொம்மனின் சத்தத்தில் மகிழும் எழுந்திட
 
தூரன் அப்போதும் கட்டபொம்மனுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. அதில் கடுப்பான கட்டபொம்மன் “உன்கிட்ட தான் கேட்கிற தூரன் என்ன நடந்துச்சு. முதல்ல நீங்க யாரை கேட்டு அங்க போனீங்க. இந்த கேசை பத்தி கண்டுபிடிக்க தான் நான் இருக்கேன். எங்கிட்ட சொல்லாம எங்கேயும் போகாதீங்க , எதுவும் செய்யாதீங்கன்னு .. நான் முன்னாடியே சொல்லி இருந்தேன்ல அதையும் மீறி ரெண்டு பெரும் போயிருக்கீங்க. அப்புறம் எதுக்கு என்கிட்ட வந்தீங்க. நீங்களே எல்லாத்தையும் கண்டுபிடிக்க வேண்டியது தானே. இவ்வளவு கேட்கிறேன் இன்னமும் வாயைத் திறக்காம இருக்கீங்க… எனக்கு இப்போ பதில் வேணும்….” என ஆக்ரோஷமாக பேசும் கட்டபொம்மனுக்கு தலையை கவிழ்ந்தபடி பதில் கூற தொடங்கினான் தூரன், “சார் நாங்க உங்களை மதிக்காம ஒன்னும் அங்க போகல. அங்க ஏதோ சத்தம் கேட்டதா அன்னைக்கு சுகுமாறன் அண்ணா சொன்னாங்க. அதான் அங்க போனா எதாச்சும் தகவல் கிடைக்கும் அதை உங்ககிட்ட தரலாம்னு போனோம். ஆனா நாங்க என்ன நினைத்தோமோ அதுக்கு அப்படியே எதிரா அங்க நடந்துச்சு. நாங்க அந்த கிணத்து கிட்ட போனதும் ஏதோ ஒரு உருவம் என்னையும் இவனையும் அடிக்க ஆரம்பிச்சிருச்சு. கொஞ்ச நேரத்துல என்ன அப்படியே தரத்தரன்னு இழுத்துட்டு போய் கிணத்துல தள்ளி விட்டுருச்சி சார். நல்லவேளையா என்னோட கைகள் கட்டாம இருந்ததால நான் தப்பிச்சி மேலே வந்தேன். அப்ப கூட அந்த உருவம் நடந்துகிட்டு போச்சு சார் எனக்கு வந்த பயத்துல என்ன பண்றதுன்னு தெரியாம அதை அடிச்சுட்டு அப்படியே ஓடி வந்துட்டேன். கொஞ்ச தூரம் வந்து பார்த்தா அதே உருவம்… மகிய கொல்ல பார்த்துட்டு இருந்துச்சு. என்னாலும் ஒன்னும் பண்ண முடியல சார். கைக்குக் கிடைச்சதை எடுத்து அடிச்சிட்டு மகிய கூட்டிட்டு அங்கிருந்து வந்துட்டேன். சத்தியமா இது மனுஷன் பண்ண வாய்ப்பே இல்லை.  ஒரு மனுஷனால ஒரே நேரத்துல ரெண்டு பேரையுமே அடிக்க முடியாதே. இங்கே யார் யாரோ என்னென்னவோ சொன்னாங்க சார் அதெல்லாம் உண்மை இல்லைன்னு நினைச்சேன். கண்ணால பார்த்ததுக்கப்புறம் சத்தியமா சொல்றேன் சார் இனிமேல் இந்த ஊர் பக்கம் வர எனக்கு விருப்பமில்லை.  ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணுறேன்னு சொல்லி இருக்காங்க. நான் அப்படியே என்னோட ஊரைப் பார்த்து போகப்போறேன். இனிமே எதுக்காகவும் இந்த ஊருக்குள்ள நான் வரமாட்டேன். தயவு செஞ்சு நான் கொடுத்த கேசை வாபஸ் வாங்கிக்கிறேன் சார். என்னோட அப்பா அம்மாவும் ரொம்ப வருத்தப்பட்டு பேசினாங்க. அவங்களுக்கு நான் ஒரே பையன் சார் . எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா அவங்க ரொம்ப பாவம் சார். இதோட எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்… எனக்கு எதையும் கண்டுபிடிக்க வேணாம். நான் கொடுத்த கம்ப்ளைன்ட்டை நானே திரும்ப வாங்கிருக்கிறேன் சார் . நீங்க எனக்காக இந்த ஒரு உதவி மட்டும் பண்ணுங்க….”  என கைகளை கூப்பி கேட்கும் தூரனை…. முறைத்தவாறே,
 
“என்ன ரெண்டு பேரும் விளையாடுறீங்களா? நீங்களா வந்து கம்பிளைன்ட் கொடுத்தீங்க.  இப்ப நீங்களே வேணாம்னு சொல்றீங்க. கேட்டா எல்லாரும் சொல்ற அதே பதிலையே நீங்களும் சொல்றீங்க. அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு உண்மையை சொல்லுங்க. உங்களை யாராவது மிரட்டினாங்களா. எதுவா இருந்தாலும் சொல்லுங்க நான் பாத்துக்குறேன். நீங்களே விட்டுட்டு போறேன் சொன்னாலும் நான் இந்த கேச விடமாட்டேன்” என்று அவர்களுக்கு புரிய வைக்கும் நோக்கோடு கட்டபொம்மன் பேச
 
” சார் தூரன் சொல்றது எல்லாமே உண்மை. நானும் முதல்ல நம்பல கண்ணால பார்த்ததுக்கப்புறம் நம்பாம இருக்க முடியல சார். இதெல்லாம் பண்றது மனுசங்க இல்ல. அதை நாங்க நேத்து ராத்திரியே மனப்பூர்வமா உணர்ந்துட்டோம். தயவு செஞ்சு இந்த கேசை வாபஸ் வாங்கிட்டு எங்களை இதுல இருந்து காப்பாற்றி விடுங்க சார்…”  என மகியும் கைகூப்ப…. வேறு வழியின்றி 
 
“என்னமோ ரெண்டு பேரும் பேசி வச்சிக்கிட்டு ஒரே பதில சொல்ற மாதிரி இருக்கு. இந்த அளவுக்கு நீங்க கேட்டுக்கிட்டதால  நானும் இதுக்கு சம்மதிக்கிறேன். ஆனா கண்டிப்பா நான் இந்த கேசை விடமாட்டேன். தனிப்பட்ட முறையில நான் விசாரிச்சிகிறேன். உங்களுக்கும் இந்த கேசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது சம்பந்தமா இனிமே உங்க கிட்ட நான் பேச போறதுமில்ல போதுமா… தூரன் நீ மட்டும் ஸ்டேஷனுக்கு வந்து இதை எழுதிக் கொடுத்துட்டு போ.. ஆனா ஒன்னு இப்பவும் சொல்ற நான் இந்த கேசை விடமாட்டேன். இதுல இருக்க மர்மத்தை கண்டிப்பா கண்டுபிடிப்பேன். இந்த தப்புக்கு நீங்களும் துணை இருக்கறது தெரிஞ்சா இப்போ காப்பாத்துற நானே உங்களை தண்டிக்கவும் முதல் ஆளா வந்து நிப்பேன்…..”  என்றவாறு இருவரையும் முறைத்து விட்டு வேக வேகமாக அங்கிருந்து வெளியேறினான் கட்டபொம்மன். 
 
கட்டபொம்மன் சென்றதுதான் தாமதம் இருவரும்.. அப்ப்பா இவரை நம்ப வைக்க எவ்வளவு பேச வேண்டியதா இருக்கு என்றபடி..ஒருவர் கையை மற்றோருவர் வெற்றி பெற்றதற்கான சான்றாய் அடித்துக்கொண்டு மந்தகாசமாய் சிரித்தனர்.
 
 
மூன்று நாட்களுக்குப் பிறகு தூரன் அவனது சொந்த ஊருக்கே அழைத்து செல்லப்பட்டான். போகும்முன் குமரேசனுடன் காவல் நிலையத்திற்கு சென்று தேவிகா சம்பந்தமாக கொடுத்த கம்ப்ளைன்ட்டை வாபஸ் பெறுவதாக கடிதமும் எழுதிக் கொடுத்துவிட்டான். தூரன் சென்ற அன்றைய நாளே..
ஏதோ ஒரு சாமியாரை வரவழைத்து யாகங்கள், பூஜைகள் நடத்தி பூவிலாங்குடி ஒதுக்குப்புறத்தில் இருக்கும் அந்த கிணற்றுக்கு வேலியும் அமைக்கப்பட்டது. 
 
என்ன அவசரமோ… யார் அவசர படுத்தியதோ… அனைத்தும் வேகவேகமாக நடைபெற்றது. முன்பாவது அடர்ந்த மரங்களும், ஆளில்லாத இடமுமாவது காட்சியளித்தது. ஆனால் இப்பொழுது முழுவதுமாக அந்த இடமே மறைக்கப்பட்டிருந்தது. எந்த மாற்றமும் இல்லாமல் அடுத்தடுத்து இரு வாரங்கள் ஓடியது.
 
**********************************
 
ஹா ஹா ஹா ஹா ஹா…… ஹய்யோ முடியல… ஹா ஹா ஹா ஹி ஹி ஹி……………….
இவனுங்க வந்தது நம்ம இத்தனை நாள் கஸ்டப்பட்டு கட்டிய கோட்டையை கலைக்கன்னு  தப்பா  நெனச்சிட்டேன் டா. ஆனா இப்போ தான் தெரியுது நம்ம கோட்டைக்கு இனி பலத்த பாதுகாப்பு தர தான் இந்த பைத்தியக்காரனுங்க வந்தாங்கன்னு. அது எப்படிடா இவனுங்க இவ்வளவு பயந்தாங்கோலியா இருந்துட்டு உண்மையை கண்டுபிடிக்கிறன்னு தைரியமா பேசினாங்க. ஆனாலும் இவனுங்க சரியான பைத்தியக்காரனுங்க தாண்டா. நம்ம ரெண்டு பேர்  அடிச்சும் அதை கூட புரிஞ்சுக்காம… ஒரு ஆளுன்னு நம்பிக்கிட்டு இருக்கானுங்க. இதுக்கு தான் சின்ன பசங்கள நம்பி களத்துல இறங்க கூடாதுன்னு சொல்றது. இப்ப நினைச்சாலும் ஒரே சிரிப்பா வருது டா எனக்கு. நான் என்னமோ இவனுங்க ரெண்டு பேரையும் தீர்த்துக்கட்ற அளவுக்கு யோசிச்சு வெச்சா.. எனக்கு வேலை வைக்காம இவனுங்களே அலறியடிச்சிட்டு ஓடுறாங்களே. இதுல அந்த கயல்விழி பைத்தியம் வேற… இந்த ரெண்டு பயந்தாங்கோலிய வைச்சிட்டு ஊர் ஊரா விசாரணை பண்ண போறாங்க. ஐய்யோ ஐய்யோ நான் என்னமோ ஏதோன்னு நினைச்சி பல நாள் தூங்காம இருந்துட்டேன். அதுவும் அந்த செந்தூரன் இருக்கானே வந்த வேகத்திலேயே ஊர விட்டு ஓடிட்டான்… ஹா ஹா ஹா…. ஹய்யோ முடியல.
 
“எல்லா சுமூகமாக முடிஞ்சிது. இனிமே ஒருத்தனும் நம்ம வழிக்கு வரமாட்டாங்க. நம்மோட லட்சியத்தை நிறைவேற்ற எந்த தடையும் இருக்காது.  ஆனாலும் நம்ம இன்னும் எதாச்சும் இந்த ஊரே நடுங்குகிற அளவுக்கு பண்ணனும். அப்போதான் இந்த பயம் அப்படியே கடைசி வரைக்கும் இருக்கும். அதுவுமில்லாம அந்த மகேஷ் கயல்விழி ரெண்டு பேரும் இங்கதான் இருக்காங்க. அவங்க திரும்பவும் எதாச்சும் ஆரம்பிக்கிறதுகுள்ள நம்ம மொத்தமா அவங்கள முடிக்கணும். அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்….” என எகத்தாளமாக பேசும் அந்த உருவத்தைப் பார்த்து தானும் அதை தான்  நினைக்கிறேன் என்பதை போல தலையாட்டி சிரித்து விட்டு… “சரி நம்முடைய திட்டத்தை நிறைவேற்ற இன்னும் 6 நாள் இருக்கு. அந்த தேவிகா இறந்து முப்பதாவது நாள் வர போது. அதே நாள்ல இந்த ஊர்ல இன்னொரு சாவ நம்ம நடத்தணும். …” என சொன்ன மற்றொரு உருவத்திற்கு….
 
“ஹா ஹா ஹா அவ்வளவுதானடா …நீ ஆசைப்பட்டுட்டல   அதற்கான ஏற்பாட்டை செஞ்சிடலாம்… விடு. எவளாச்சும் கிடைக்காமலா  போ வா…” 
 
“அதானே என் நண்பன் சுகுமாறன் நடிப்புக்கு முன்னாடி இந்த சினிமா உலகமே ஒன்னுமில்ல. என்னா நடிப்பு என்ன நடிப்பு … …சாமி. எங்கேயோ வெறிச்சிப் பார்க்கிறதும், வாய்க்குள்ளேயே முணுமுணுக்குறதும்… சாயங்காலம் நடக்குறதை விடிஞ்சா மறந்து போறதும்… அடடா! அடடா ! எல்லா  நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டடா…சுகுமாறா…
நீ மட்டும் சினிமால நடிக்க போயிருந்தா ஒருத்தனும் அங்கு இருந்திருக்க மாட்டாங்க.”
 
“ஏண்டா சொல்ல மாட்டே ஒவ்வொரு நாளும் நான் படுற கஷ்டம் எனக்கு தானே தெரியும். இந்த ஊரையும் முக்கியமா அந்த கயல்விழியையும் நம்பவைக்க இத்தனை வருஷமா இந்த நாடகத்தை போட வேண்டியதா போச்சு. ஆதி விஷயத்துல நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் டா. அதனாலதான் இந்த மாதிரி நடிக்க வேண்டியதா போச்சு. முக்கியமா அன்னைக்கு கயல் வருவான்னு நினைக்கவே இல்லை… அவ வந்தது தான் எனக்கு இப்ப வரைக்கும் பெரிய தலைவலி. அதுவுமில்லாமே கடைவீதியில நான் ஆதியை பாக்குறதைதும் பேசுறதையும் சில பேர் பாத்திருக்காங்க.  அதுக்காகவும் கூட இந்த நாடகம். எல்லாத்தையும் இப்ப வரைக்கும் சரியா பண்ணிக்கிட்டு இருக்கேன் . ஆனா இந்த ஆதி விஷயத்தில் மட்டும் பிசிறு தட்டிடுச்சி. என்ன இருந்தாலும் ஆரம்பத்துல நான் உண்மையா காதலிச்ச பொண்ணு இல்லையா.. அதான் என்னையும் மீறி தப்பு பண்ணிட்டேன் போல. நல்லவேளையா இப்போ நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இல்லன்னா நான் இத்தனை வருஷமா போட்ட பைத்தியக்கார நாடகமும் , யாருக்கும் தெரியாம பண்ற எந்த வேலைக்கும் பிரயோஜனம் இல்லாம போயிருக்கும்.”
 
 
 
“விடுடா..நம்ம பண்ற இந்த விஷயம் நல்லபடியா முடிஞ்சிட்டா  போதும் இந்த உலகத்திலேயே நம்ம தான் அதிர்ஷ்டசாலிங்க…. இவ்வளவு கஷ்டமும் அதுக்காகத்தான…” என இருவரும் ஆனந்தமாக பேசிக்கொண்டிருந்தனர் அடுத்த ஆறு நாளில் இவர்கள் ஆட்டம் முடிய போவது தெரியாமல்.
 
மர்மம் தொடரும் ….
 
அம்மு இளையாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்