Loading

இங்க பாருங்க உங்களுக்காகத்தான் இந்த நேரத்துல இங்கன வந்திருக்கேன் . வீட்டுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் . இந்த ஊருல ராத்திரி நேரத்துல பொண்ணுங்க, குழந்தைங்கன்னு யாரும் வெளிய வர கூடாதுன்னு சொல்லுவாங்க . நிறைய கதைலாம் சொல்லி நானே கேட்டுருக்கேங்க . அதெல்லாம் நினைச்சாலே உடம்பு நடுங்கும். இப்ப எதுக்கு வந்தீங்க???. சீக்கிரமா சொல்லிட்டு கிளம்புங்க…. நான் வீட்டுக்கு போகணும்.

“அட கொஞ்சம் நேரம் இருடி உனக்காக இந்த ராத்திரி நேரத்துல யாருக்கும் தெரியாம வந்தா…. இவ என்னமோ கதை சொல்றா. உன்ன நெனச்சி இங்க ஒருத்தன் சாகுறேன்னு  ஞாபகம் இருக்கா டி உனக்கு . வந்ததுல இருந்து என்னமோ பாட்டு படிச்சிட்டு இருக்க”    என்ற நேரம் ஏதோ ஒரு சத்தம் கேட்க இருவரும் திடுக்கிட்டு போயினர்.

பின் அந்த சத்தம் தங்கள் அருகில் கேட்க … கூடவே எதோ வாசனையும் சேர்ந்து கொள்ள பயத்தில் ஒருவரை ஒருவர் பிடித்து கொண்டே பின்னால் நடந்தனர். நடக்க நடக்க தங்களை நோக்கி வேகமாக எதுவோ ஒன்று வருவது புரிந்தது இருவருக்கும். இருவரும் பயத்திலேயே இருக்க, பகலில் பதுமையாக தெரியும் பனைமரமும் இப்போது அகோரமாக காட்சி அளித்தது. தூரத்தில் நாய் குறைக்கிறதோ இல்லை குறைப்பது போல பிரம்மையோ ,எதுவோ ஒன்று இப்போது புதிதாக தோன்றியது இருவருக்கும் சற்று நேரத்தில் அந்த சத்தம்  கொஞ்சம் கொஞ்சமாக  நின்று போக அப்போது தான் இருவர் மனதிலும் கொஞ்சம் நிம்மதி பிறந்தது.

நான் சொன்னேன் தானங்க … இப்ப பாருங்க எப்படி நடக்குதுன்னு. இந்த ஊருல நெறைய சாவு விழுங்க. அதுவும் சின்ன பசங்களும் , பொண்ணுங்களும் தான் அதிகமா  செத்து இருக்காங்களாம். இந்த மாதிரி நேரத்துல நான் இங்க வந்திருக்கவே கூடாதுங்க. நீங்க போங்க எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்.

சரி சரி வா…. நான் உன்ன வீட்டில விட்டுட்டு போறேன். நீ சொல்றத பார்த்தா எனக்கே கொஞ்சம் பயமாத் தான் இருக்கு டி.”

இல்லைங்க இல்லைங்க நீங்க முதல்ல போங்க…  யாரவது பார்த்துட்டா தப்பாகிடும். நான் பாத்து போய்கிறேன்.

என்னமோ சொல்லுற டி. உன்ன பார்க்க வந்ததுக்கு நான் வீட்டிலையே இருந்திருப்பேன். நாளைக்காவது தோப்புக்கு வா….நான் உனக்காக காத்துட்டு இருக்கேன்….. இன்னைக்கு வந்தும் பேச முடியாததை அங்க வந்து பேசுற….. என்றபடி தன் ஊர் இருக்கும் திசை நோக்கி நடக்கலானான் அவன்.  அவன் செல்வதை பார்த்தவள் தானும் தன் வீடு நோக்கி நடந்தாள் .

சிறிது தூரம் சென்றதும் முதலில் வந்த வாசனையே வர, பயத்தில் ஊர் தெய்வத்தை மனதில் நினைத்தபடி நடந்தவளுக்கு மிக அருகில் எதோ ஒன்று  தரையில் இருக்கும் காய்ந்த இலைகளை உரசி கொண்டு நடப்பது போல சத்தம் வர நடையில் வேகத்தை கூட்டினாள். இப்போது அந்த சத்தம் அவளுக்கு பின்னல் பலமாக கேட்க திரும்பிய அடுத்த நொடி  ஒரு உருவம் வந்து செல்ல ………………

ஆஹ்ஹ் ……………………………………………………………………….. ஆ ஆ ஆ ஆ என  அலறிய வேகத்தில் பேச்சற்று நின்றாள் .

இதயம் தன் செயல்பாட்டை அதிகப்படுத்தி வேக வேக துடிப்புகளை வெளியேற்ற, வார்த்தையும்  தந்தியடிக்க… தன் எதிரில் நின்றது உண்மையா? என்ன அது?  இப்போது இல்லையே? என சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தாள். எதுவும் கண்ணுக்கு தென்படாமல் போக பெருமூச்சை  வெளியேற்றி  தைரியப்படுத்திக் கொண்டு  வீட்டிற்கு செல்ல மெல்ல மெல்ல நடந்தாள் அவள்.

அந்த கரும் இருட்டில்   சங்கீத சத்தமான  அவள் கொலுசொலி ஒரு வித பயத்தை பிரதிபலிக்க… எச்சிலில் தொண்டையை நனைத்து… திரும்பி திரும்பி பார்த்து கொண்டே நடந்தவளை சட்டென ஒரு கயிறு சுற்றிக் கொண்டது. நொடியில் நடந்த நிகழ்வில் பயம் உருவாகி கத்த நினைத்த பொழுது மேலும் ஒரு கயிறு அவள் தொண்டையை இறுக்க மூச்சி விட முடியாமல் அப்படியே மயங்கி சரிந்தாள் அப்பெண் .

சிறிது நேரத்தில் மேலே எதுவோ ஒன்று அவள் முகத்தில் நீர் போல்  சொட்ட சொட்ட மயக்கம் தெளிந்தவளோ எதுவும் புரியாமல் இருக்க….

பயத்தில் ஒட்டிக்கொண்ட நாக்கை பிரித்து பேச நினைக்க  இன்னமும் அந்த கயிறு அவள் தொண்டையில்  இறுக்கி இருந்தது. பேச முடியாது என்பதை உணர்ந்து …. சுற்றும் முற்றும் பார்த்தவளின்  பார்வை மேலே செல்ல…

மேலே பார்த்த அவளின் விழிகள் அதிர்ச்சியில் அசையாமல் நின்றது.

அங்கே தான் கட்டப்பட்டிருக்கும் மரத்துக்கு மேல் ஒரு பெண் சடலம் இருக்க அப்பிண உடலின் ரத்தமே அவள் மேல் விழுந்தது. இரத்த துளியில் தன் முகம் நனைவதை சகித்துக்கொள்ள முடியாமல் அப்பெண் தடுமாறி தத்தளித்த நேரம்   முன்பு  வந்ததை போல் திரும்பவும்  அதே போன்று வாசனை வர மரணபயத்தில் … நடுங்கிக்கொண்டே வாசனை வரும் வழியை பார்த்தாள்.

அவள் எதிரில் ஒரு உருவம்.

அதிர்ச்சியில் உறைந்தவள், வேர்வையில் குளித்து…. வெளிவராத சத்தத்தில்  ஏதோ சொல்ல…

அதற்கு அந்த உருவமோ அப்படியே அவள் வார்த்தையை கேட்டு சிரித்தது.

நீ…………………..நீ ……………………….. அந்த……… அந்த……… அ… ந்….

என்ற வாக்கியம் முடிவு பெற விடாமலே அந்த பெண்ணை ஒரே  சுழற்றில் தூக்கி வீசியது உயிர் குடிக்கும்  மர்ம கிணற்றில்….

மர்மம் தொடரும்…..

அம்மு இளையாள்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்