மழையின் வேகம், அப்பொழுது தான் கொஞ்சம் மனம் இரங்க துவங்கி, வெயிலும் தலைக்காட்ட துவங்கியது.. வெகு அவசரமாக, சுமதி சேகரித்து வந்த ஈரமான விறகு குச்சிகளை வெயிலில் காய வைத்தாள். அடுத்த வேளை பானையில் சோறு பொங்க அந்த குச்சுகள் அன்றைய அவசர தேவையாக இருந்தது.
“சுமதி ஈரமா இருக்க பாரு, உடைய மாத்தி, கூந்தலை உலரப் போடு, இல்லனா காய்ச்சல் வந்து தவிக்கப் போற” என்றாள் சுமதியின் அம்மா சிவகாமி.
சுமதியும் தன் உடையை மாற்றிக் கொண்டு, அடர்ந்த நீளமான கூந்தலை பிரித்து காய வைத்துக் கொண்டே, அருகிலிருந்த மருதாணி செடியில் இலைகளை பறித்துக் கொண்டிருந்தாள்.
“இந்த மழையிலும், உனக்கு மருதாணி தேவையா?, கல்யாணம் பன்னி உன்னை ஒருத்தங்கிட்ட ஒப்படைக்கறதுக்குள்ள, என்ன பாடு படப் போறனோ?, இந்த மனுசன், வீட்டல சோறுபொங்கினா சாப்பிடறதும், தூங்கறதும், ஊர் சுத்தறதும்மா இருக்கான். உனக்கு அப்பனா என்னத்த செஞ்சிட்டான்?. உழைக்கறதெல்லாம் நான், உங்க அப்பன ஒரு வார்த்தை சொல்லிட்டா பொங்கி பொங்கி என்னை ஒரு வழி பன்னிடறவ?, அந்த ஆள எங்கேயாவது பொழப்புக்கு கிளம்பச் சொல்லு” என்று வீட்டில் வெட்டியாக படுத்து கிடந்த சுந்தரத்தை பார்த்து திட்டாமல் திட்டிக் கொண்டிருந்தாள் சிவகாமி.
சுமதி, எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல், மருதாணி இலைகளை பறித்து கொண்டு வந்து, அம்மியில் வைத்து அரைத்து எடுத்து ஒவ்வொரு விரல்களிலும், அளவு கூடாமலும், குறையாமலும், சமன் செய்துக் கொண்டிருந்தாள். சிவகாமி கோபத்தின் உச்சத்தில் இருந்தாலும், பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து கல்லூரியில் தேர்ச்சி பெற்றவள், மேற் கொண்டு படிப்பினை தொடர, தேவையான பணத்தை சம்பாதிக்க தானே வேலைக்கு சென்று உழைப்பதை எண்ணியும், அம்மாவுக்கு துணையாக வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்வதை நினைத்து அமைதியானாள். அதற்குள் யாரோ அழைக்கும் குரல் கேட்டு திரும்பியவள். சிவகாமியோடு படித்த தோழி அம்பிகா, இரண்டாவது முறையாக, சுமதிக்கான சில புத்தகங்களை வாங்கி கொண்டு வந்திருந்தார்.
“வா, அம்பிகா, என்ன இந்த பக்கம்”, என்றவளின் மனதினுள் ஈரமான விறகுகள் உலர்ந்ததன் பின் தான் தேனீர் கூடப் போட முடியும், என்னத்த செய்றது எல்லாம் என் தலையெழுத்து என்று மனதில் நினைத்துக் கொண்டே, அங்கிருந்த கயிற்று கட்டிலில் அமர செய்து, தண்ணீர் கொடுத்தாள். அதற்குள் சுமதி கைகள் முழுவதும் மருதாணி பூசி முடித்திருந்தாள். அம்பிகாவை பார்த்த படி தோட்டத்திலிருந்து வேகமாக ஓடி வந்தவள், தன் கைகளில் உள்ள மருதாணி உதிராத படி கவனமாக வந்தாள்.
“வாங்க ஆன்ட்டி, நல்லா இருக்கீங்களா, வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?, எனக்கு இன்னைக்கு என்ன புத்தகம் வாங்கி கொண்டு வந்தீங்க?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே, அம்மாவிடம் காலியாக கிடந்த காகித அட்டை பெட்டியை கிழித்து தரும் படிக் கேட்டுக் கொண்டே, மருதாணி இடாமலே, அரைத்ததில் சிவந்த தனது வலது கையை மட்டும் பயன்படுத்தி, காலையில் வாங்கிய மீதப் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து காகித அட்டையை அம்மாவின் துணையுடன் பற்ற வைத்து தேனீர் போட்டே முடித்தாள். அம்பிகாவின் விழிகள் கொஞ்சமும் விலகாமல் சுமதியின் செய்கையை மட்டும் ரசித்துக் கொண்டிருந்தது.
“எனக்கு மட்டும் பையன் பொறந்திருந்தா, சுமதியை என் வீட்டு மருமகளா கூட்டிட்டு போயிடுவேன் சிவகாமி. நீ தான் உன்னோட வாழ்க்கைய…” என்றவள், அறையினுள் உறங்கும் சுந்தரத்தை கவனித்ததும் அமைதியானாள் அம்பிகா.
தேனீர் கோப்பையுடன், அம்பிகாவின் அருகில் வந்த சுமதி, தன் கைகளை நீட்டி நல்லா இருக்குங்களா அத்த, என்றபடி, தனக்காக வாங்கி வந்த புத்தகத்தை உரிமையோடு பிடுங்கி வாசிப்புக்குள் மூழ்கிப் போனாள்.
“இது தான் சுமதி, சரி, இந்த மருதாணி ஆசை, இவளை எப்படி பிடிச்சது சிவகாமி” என்றாள் அம்பிகா.
“சுமதியோட ஐந்து வயசு வரைக்கும் அவங்க அப்பத்தா தான் கையில வைச்சு பார்த்துக்கிட்டாங்க. நான் தான் வேலைய கட்டிட்டு அழுதேனே, அப்போ தான், அவளோட அப்பத்தா, நினைச்ச நேரத்துக்கு மருதாணி அரைச்சு அவளோட பிஞ்சு விரல்கள் சிவக்க போட்டு அழகு பார்த்தாங்க. அப்படியே காலம் ஓடி, அவ விடுதி தங்கி படித்தாலும் விடுமுறைக்கு அவங்க அப்பத்தா கையாள மருதாணி வைக்காம ஊருக்கு கிளம்ப மாட்டா?, இப்போ அவ அப்பத்தா இல்லன்னு தெரிஞ்சும், அவங்க நினைப்பு வரும் போதெல்லாம், அவளோட அப்பத்தா நட்டு வைச்ச, மருதாணி செடியோடு பேசிக்கிட்டே, மருதாணி பறிச்சு போட்டுப்பா, சுமதிக்கு அவங்கன்னா, ரொம்ப பிரியம். அத்தைக்கும் சுமதின்னா கொள்ளை பிரியம். எப்படியோ காலம் ஓடுது. என்னோட வாழ்க்கை கடிகாரத்துல இருக்கிற நிமிட முள் மட்டும் ரொம்பவே பொறுமையா நகருது.” என்று புலம்பினாள் சிவகாமி. அம்பிகாவும் தனது பங்கிற்கு ஆறுதல் கூறிவிட்டு, சுமதியிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள். அன்றைய நாள் எப்படியோ, மழையின் தாக்கம் தொடராமல் இயல்பாக கடந்தது.
அடுத்த நாள் விடிந்ததும், 4.00 மணிக்கு எழுந்த சுமதி, வீட்டின் வாசலை கூட்டி, சாணம் தெளித்து, அரிசிமா கோலமிட்டு தன்னுடைய கோலத்தின் கோடுகளின் வளைவுகள் சமமாக உள்ளதா என ரசித்தபடி நின்றிருந்தாள். அதற்குள் அம்மா சிவகாமியின் குரல் கேட்டு ஓடி வந்தவள், குளித்து முடித்து, தன்னை தயார் படுத்திக் கொண்டவள். நீளமான தன் கூந்தலை மூன்று கால்களிட்டு, ஒற்றை ஜடையாக முடிந்தாள். பின்னர் தோட்டத்திற்கு ஓடியவள் பாரிஜாதப் பூ ஒன்றை கொய்து தன் தலையில் சூடிக் கொண்டாள். நெற்றியில் சிறியதாக ஒரு வட்ட பொட்டினை இட்டுக் கொண்டு, அவளது பாட்டியின் புகைப்படத்தை வணங்கி விட்டு, வெளியே வந்து சூரியனை பார்த்த படி நின்றுக் கொண்டு கண்களை மூடி, அவளது உதடுகள் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தது. மீண்டும் அவளின் அன்னை சிவகாமி குரல் கொடுக்க, விரைவாக வீட்டிற்க்குள் வந்தவள் காலை உணவாக நீராகாரம் அருந்தி விட்டு,தயிர் சாதம் கிளறி எடுத்துக் கொண்டு, சிவகாமியுடன் கிளம்பினாள்., பேருந்து நிறுத்தத்தில் அம்மாவிற்கு கையசைத்து விட்டு, தனக்கான பேருந்தில் ஏற துவங்கினாள். சிவகாமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தாள்.
பேருந்தினுள், “ஹலோ மருதாணி, உங்கள தான், கொஞ்சம் நகர்ந்து உள்ளே போங்க”, என்றபடி அவளை இடிக்க வருவது போல வந்து இடிக்காமல் நகர்ந்து நின்றான் கவின். அவனை எங்கோ பார்த்த நினைவோடு, எதுவும் எதிர்த்து பேசாமல், நகர்ந்து நின்றவள், தனது அலுவலகத்தை நெருங்கியதும் இறங்கி நடந்தாள். அவளை யாரோ பின் தொடர்வதை அறிந்தவள், மீண்டும் “ஹலோ மருதாணி கொஞ்சம் நில்லுங்க, அப்பாடி எனக்கே மூச்சு வாங்குது, ஏன் இந்த வேகம்?… நீங்க பயாப்படற அளவுக்கு நான் என்ன அவ்வளவு பயங்கரமாகவா இருக்கிறேன்” என்று சொன்னதன் பின்னர் தான் அவனது முகத்தை உற்று கவனித்தாள். “உண்மையில் நல்ல நிறம், அழகு தான்” என்ற படி மனதிற்குள் சொல்லிக் கொண்டே, நிற்காமல் நடக்க தொடங்கினாள். சில நிமிடங்கள் அவளுக்குள் பயம் தொற்றிக் கொண்டாலும், வெளியில் காட்டிக் கொள்ளாமல், “இவன் நம்ப ஆபிஸ்ல வேலை செய்ற கவின் ஆச்சே, இங்க என்ன வேலை அவனுக்கு” என்று யோசித்த படியே நடந்தவளிடம், ஏதாவது கேள்வி எழும்பும் என காத்திருந்தான். அமைதி மட்டுமே அவ்விடம் முழுவதும் வியாபித்து இருந்தது. சில நிமிடங்கள் கடந்ததும்.
“ஹலோ மருதாணி, ஒரு நிமிசம் நான் சொல்றத காதுல வாங்கிகிட்டே நடங்க” என்றவனிடம்,
“என் பெயர் சுமதின்னு உங்களுக்கு தெரியாதா?… என்று நறுக்கென்று விழிகளால் கோபத்தை கொட்டினாள்.
அலுவலகம் நெருங்கும் சமயத்தில் மீண்டும் தனது பேச்சை துவங்கினான். நான் உங்கள பல முறை பார்த்திருக்கேன். நீங்க மாடிக்கு வந்து வேலை சம்பந்தமா கீர்த்திக்கிட்ட பேசும் பொழுதெல்லாம், ஒரு நாளும் வெளுக்காத உங்களுடைய சிவந்த மருதாணி விரல்கள் தான் எங்க கண்ணுக்குள் விழும். கீர்த்தியும் நானும் உங்கள பற்றி தான் அதிகம் பேசுவோம்.” என்றவனை ஒருவாறு பார்த்தபடி
“கீர்த்தி, உங்களுக்கு தோழியா?” என்றவளின் முகத்தில் ஏதோ கலவரம் தொற்றிக் கொண்டிருந்தது.
“இல்ல இல்ல, நாங்க இரண்டு பேரும் ஒரே கேபின்ல பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து வேலை செய்றோம். அவ்வளவு தான்” என்ற கவினுக்கு உள்ளுக்குள், சுமதியின் அந்த கேள்விக்குள் பதுங்கிக் கொண்டிருந்த தன் மீதான தனியிடம் அவனுக்கு புலப்படதுவங்கியது. அலுவலகம் நெருங்கியதும், மற்ற நண்பர்களுடன் பேசிய படியே உள்ளே நகர்ந்தவனாக நடந்துக் கொண்டே, சுமதியின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க தவறவில்லை. சுமதியும் எதுவும் அறியாதவள் போல் தனக்கும், கவினுக்கும் இடையே நடந்த உரையாடலை நினைத்தபடியே அவளது இருக்கைக்கு சென்று அமர்கிறாள்.
மதிய உணவு வேளை வந்ததும், எப்படியாவது சுமதியை பார்த்து, அவளின் மனதில் தனக்குள்ள இடத்தை உறுதிப் படுத்திக் கொள்ள விரும்பினான் கவின். அவனது செயல்களில் ஏற்பட்ட தடுமாற்றத்தை உணர்ந்த கீர்த்தி, தனது அருகில் அமர்ந்திருந்த கதிரை அழைத்து, கண்களால் சைகை காட்டினாள். இன்றைய பொழுதுக்கு கவின் நல்லா மாட்டிக்கிட்டான் என்று இருவரும் மனதினுள் சிரித்துக் கொண்டனர்.
“என்னாச்சு, மச்சி, காலைல இருந்தே ஒரு மார்கமா இருக்கிறபோல, அப்பப்போ, முதல் தளத்தில இருக்கிற டிப்பார்ட்மென்ட்டுக்கு போய்ட்டு வரீங்க போல, எதாவது சிக்கிக்கிச்சா, ஷர்மியோட அழகுல சிக்கிக் கிட்டியா என்ன?…”என்றான் கதிர்.
“அடப்பாவி, என்னை ஏன் டா பாழும் கிணத்துல தள்ள பார்க்கிறா?, உனக்கு மனசாட்சியே இல்லையா?, ஷர்மிய பார்த்து ரசிக்கலாம், நம்பள மாதிரி ஆயிரம் பேருக்கு பிடிக்கும், ஆனால் வாழ்க்கையில ஒருத்தவங்களோட மனசுவிட்டு பேசனும், அவங்களோட இறுதி மூச்சு இருக்கற வரைக்கும் வாழனும்ன்னு ஆசை வரும், அது தான் டா, ஆத்மார்த்தமான காதல்.” என்றான் கவின்.
“ஓ… அப்படியா, இது எனக்கு தெரியாது போனதே, இவ்வளவு தெளிவா சொல்லறவன், கண்டிப்பா சுமதி என்கிற பேரையும் சேர்த்து சொல்லியிருக்கலாமே” என்றவன் தனக்கு முன் முந்தி கொண்டானே என்று மனதிற்க்குள் புகைந்தான் கதிர். இருப்பினும் நண்பனுக்கு உதவ முன் வந்தான்.
“சரி மச்சி, சுமதி தானான்னு உறுதியா சொல்லிட்டு போ, நானும் கீர்த்தியும் உனக்கு உதவறோம்”, என்றவனை பார்த்து கீர்த்தி நாக்கை கடித்த படி என்னையும் என் கோர்த்து விடுகிறாய் என்ற கேள்வியை கதிரை பார்த்து வீசினாள். இருப்பினும் உதவுவதற்கு முன் வந்தாள். கதிரின் கேள்வி வேறு கோணத்தில் திரும்புவதற்க்குள்
“ஆமான்டா, சுமதி தான், அவளை தான் கல்யாணம் பன்னி, அவளோட வாழனும்னு ஆசைப்படறேன். அப்புறமா காதலிச்சுக்கறேன்.” என்ற கவினைப் பார்த்து
“ஏன்டா, இவ்வளவு அவசரம், சுமதியை யாராவது கொத்திக்கிட்டு போய்டுவாங்கன்னு பயமா?” என்றான் கதிர்.
“இல்லடா, நான் யார்கிட்டேயும் இன்னமும் சொல்லல,” என்றவன் தன்னை சுற்றி யார் யார் இருக்கிறார் என்பதை உறுதி செய்துக் கொண்டு, சுமதிக்கு இராணுவத் துறை சார்ந்த படங்கள்னா ரொம்ப பிடிக்கும்ன்னு கேள்விப் பட்டிருந்தவன். அதன் பிறகு, இராணுவத்தில் சேரும் பணியில் தேர்வு எழுதி வெற்றி பெற்று விட்டதாகவும். இன்னும் ஓரிரு மாதங்களில் சென்று விடுவதாகவும் கூறி முடித்தான். அதற்குள்ளாக கீர்த்தியை பார்க்க வந்த சுமதி, அவளை தனியாக வரும் படி அழைத்தாள். கீர்த்தியும் சுமதியோடு சென்று என்னவென்று வினவிய பொழுது,
“இன்னைக்கு சாயங்காலம் என்ன பொண்ணு கேட்டு வராங்க, வேலை எல்லாம் முடிச்சுட்டேன், அம்மா வேளையோட வந்திட சொன்னாங்க. கீர்த்தி , நான் கிளம்பறேன்” என்றவளிடம்
“உனக்கு மாப்பிள்ளைய பிடிச்சிடுச்சா?” என்றாள் கீர்த்தி
“இல்ல கீர்த்தி, அவங்க சொந்தமில்லையாம், நேற்று எங்க ஆன்டிஅம்பிகா மூலமா பேசியிருக்காங்க, முகத்தையே இன்னைக்கு தான் பார்க்கனும், இன்றைக்கு காலைல கிளம்பும் போது தான் அம்மா சொன்னாங்க, சரி நேரம் ஆகுது நான் கிளம்பறேன், மீதிய நாளைக்கு பேசிக்கலாம்” என்று சொல்லி விட்டு கிளம்புகிறாள். அடுத்த நிமிடமே தன் பைக்கை எடுத்துக் கொண்டு, கவினும் புறப்படுகிறான். என்ன நடக்கிறது என்றே புரியாமல் கதிரும் கீர்த்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
வீட்டின் வாசலில் உள்ள காலணிகளை கொண்டே, அனைவரும் வந்து விட்டனர். தான் தான் தாமதம் என்று எண்ணிய படியே, தோட்டத்திற்கு சென்று, முகம் கை, கால்களை கழுவிக் கொண்டு, தனது அறைக்குள் சென்று, அம்மா அவளிடம் கொடுத்த நீள வண்ண பட்டு சேலையை உடுத்திக் கொண்டு தலையில் மல்லிகை சூடி, மகாலட்சுமி போல வெளியே வந்தாள். அனைவரின் கண்ணும் மேக்கப் இல்லாமல் இயல்பாக இருக்கும் சுமதியின் முகத்தில் எத்துனை பிரகாசம் என்று வியந்தே நின்றது. அதுவரை வந்தவர்கள் ஒருவரின் முகத்தையும் கவனிக்காதவள், “மாப்பிள்ளை இவர் தான் பார்த்துக்கோ” என்ற அப்பாவின் குரல் கேட்டு அவர் கை நீட்டிய பக்கத்தில் நிமிர்ந்தவள் அதிர்ந்து போனாள். அங்கே அமர்ந்திருந்தது கவின் தான். ஒரு பக்கம் அலுவாலகம் முழுவதும், காவினும் தானும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என்ற வதந்தியால் அல்லோலப் படுவோம் என்ற பயம் இருந்தாலும், மற்றொரு பக்கம் பொறுப்பில்லாத அப்பாவால் அம்மா படும் வேதனை தான் கண் முன் தோன்றியது.
“உங்க எல்லாருக்கும் பிடித்திருந்தா, எனக்கும் சம்மதம்” என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டாள்.
அனைவரும் அங்கேயே, கை தாம்பூலம் மாற்றி கொண்டு நிச்சய தேதியும், கல்யாண தேதியும் குறித்து விட்டு இரவு 8.00 மணி போல கிளம்பினார்கள். அது வரையிலும் வெளியே வராமல் அறைக்குள்ளே புகுந்து கிடந்தாள்.
அடுத்த நாள் அலுவலகம் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள். அவளின் அம்மா சிவகாமியிடம் கவின் தன்னை பற்றி முழுவதுமாக சொல்லியிருந்ததால், சுமதியின் மனநிலையை உணர்ந்து, அவளை எதுவும் கேட்காமல் அமைதியானாள்.
விரைவில் இருவரின் திருமணமும், கவினின் முழு பொறுப்பில் நடைபெற்றது, வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று முன்னதாகவே சொன்னதால், எளிய முறையினில், நடத்திட விரும்பினார்கள். பெரிய அளவு பாரத்தை சுமக்காமல் சிவகாமி ஓரளவு நிம்மதியானாள். கவினின் அம்மா மற்றும் அப்பா கவின் ஒரே செல்ல பிள்ளை என்பதால், அவனுக்கு எது பிடிக்குமோ அதையே ஏற்றுக் தங்களின் மகிழ்ச்சியாக கொள்வார்கள். அப்படியாக சுமதி மற்றும் கவினின் கல்யாண வைபவம், அலுவலக நண்பர்களின் கிண்டலுக்கும் இடையே இனிதே நிறைவடைந்தது.
நான்கு மாதங்கள் நகர்ந்தது, இராணுவத்தில் வேலை கிடைத்ததும், கவினும் புறப்பட தயாரானான், ஒரே பிள்ளை என்றாலும் அவனை கம்பீரமாக வளர்த்திருந்தார் கவினின் அப்பா திவாகர். கவினின் அம்மா நித்தியா மட்டும் அழுது புலம்பினாள். இருப்பினும் நாட்டிற்காக தன் மகன் பயணிப்பதை கண்டு மனதில் பெருமிதம் கொண்டார். சுமதியின் மனம் மட்டும் இளகவே இல்லை. தான் கருவுற்றிருக்கும் விசயத்தை அப்பொழுது தான் அவன் காதில் மெதுவாக சொன்னாள். கவினின் கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்கியது, அப்படியே அவளை தூக்கி சுற்ற விரும்பியவன். தான் தற்பொழுது ஏற்போட்டில் நிற்பதை நினைவு கூர்ந்து கண்களால் அன்பை பொழிந்தான். தன் அம்மா மற்றும் அப்பாவிடம் விபரத்தை கூறி, சுமதியை பார்த்துக் கொள்ளூம் படி கூறி விட்டு கிளாம்பினான். பேர பிள்ளை வரப் போகும் மகிழ்ச்சியில், கவினை மகிழ்வுடன் வழியனுப்பி வைக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு பேசினாலும், கவினின் அருகாமை வேண்டி தவித்தாள். சுமதியோடு நிச்சயம் முடிந்த கையோடு அவனது வீட்டில் மருதாணி செடி ஒன்றை வாங்கி நட்டு வைத்திருந்தான். திருமணம் ஆன மருநாளே, சுமதியை அழைத்து சென்று தோட்டத்தில் உள்ள மருதாணி செடிக்கு அருகில் அமர்ந்த படி, தனது நாட்குறிப்பேடு ஒன்றை எடுத்து, அதில் கவினோடு எற்ப்பட்ட சந்திப்பிலிருந்து அனைத்தையும் எழுதி வைத்து, அதனை ரசித்துக் கொள்வதும், கண்ணாடி முன் நின்றுக் கொண்டு, வயிற்றில் உள்ள குழந்தையை தடவிக் கொடுத்து, கவினை நன்கு அறிமுகப் படுத்தி வைத்திருந்தாள். கவினின் வீட்டாரின் அன்பின் அரவணைப்பில் எந்த குறையும் இல்லாததால், அம்மாவை அதிகம் தொல்லை கொடுக்காமல் இருந்தாள். தற்பொழுது
ஒன்பதாவது மாதம் சீமந்தம் வைக்க ஏற்பாடு நடந்துக் கொண்டிருந்தது. அம்மாவின் கையணைப்பில் இருந்தாலும், கவினின் நினைவு மிகவும் அவளுக்கு வேதனை கூட்டுகிறது. அன்றைய நாள் கவினுடன்பேச கூட முடியாமல் போனது, அலைபேசி தொடர்பு நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் மட்டும் வந்திருந்தது. வீட்டின் முற்றத்தில் விழாக் கோலம் வண்ண மயமாக இருந்தது. சுமதியை உறவினர்கள், அறையில் அலங்கிரம் செய்து விட்டு வெளியே வந்தனர். சுமதி கண்ணாடி முன் நின்றுக் கொண்டு, தன் கைகளில் உள்ள மருதாணியை ரசித்துக் கொண்டே, தன் கைகளில் குழந்தையை ஏந்தியபடி, கவினின் அருகில் நிற்பதாக தன்னுள் கனவு கண்டு கொண்டிருந்தாள். சிறிது வினாடிகளில் கண்களை விழித்துபார்த்தவள் அருகில் கவின் தன் இராணுவ உடையுடன் நிற்பதை போன்ற பிரம்மை தோன்றியது. உண்மையில் அது பிரம்மை அல்ல, உண்மை தான் என்று, கவின் சுமதியின் கைகளில் உள்ள மருதாணியை ரசித்தபடி, மருதாணி என்று சுமதியை அழைத்த அந்த குரலில் தான் உணர்ந்தாள்.
ஒரு வார்த்தை கூட பேசாமல் கவினின் தோளில் சாய்ந்து அழத் தொடங்கினாள். உறவினர்கள் அனைவரும் உள்ளே வந்து “ இந்த சர்ப்ரைஸ் கிப்ட்” எப்படி இருக்கு என்றதும். சுமதிக்கு அப்பொழுது தான் புரிந்தது. அனைவரும் சேர்ந்தே செய்த வேலை என்பது. பின்னர் சீமந்தம் முடிந்து சிவகாமி வீட்டிற்கு அழைத்து செல்ல கிளம்பும் தருணத்தில், கவினின் அம்மா நித்தியா, எதையோ சொல்ல முன் வந்தார்.
“சுமதி அம்மா, கவின் இப்போ தான் ஊருக்கு வந்திருக்கான். சுமதிக்கு எந்த குறையும் இல்லாம நாங்களே வைச்சு பார்த்துக்கறோம். நீங்க தப்பா நினைக்கலைன்னா, நீங்க சொல்லும் பொழுதெல்லாம் சுமதியை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடறோம்” என்றவரிடம் மறு வார்த்தை பேச முடியாமல். எப்போ மருமகள் இடத்தை காலி பன்னுவான்னு நினைக்கிற உலகத்துல இப்படிப் பட்ட மாமீயார் கிடைச்சதுக்கே கொடுத்து வைத்திருக்கனும் சுமதி, எல்லாத்துக்கும் அவளோட பொறுமை தான் காரணம் என்று மனதிற்க்குள் நினைத்து மகிழ்ந்தாலும்,
“ஒரு இரண்டு நாளைக்கு சுமதி வீட்டிற்கு வந்து தங்கிட்டு போகட்டும். அப்புறம் உங்க விருப்பப்படி நடக்கட்டும் கவின் அம்மா” என்றார். கவினும் அவர்களோடு புறப்பட்டான். இரண்டு நாட்கள் கடந்ததும், மீண்டும் கவினின் வீட்டிற்கு வந்தார்கள்.
சில நாட்களில், சுமதி பிரசவ வலியில் துடிப்பதை கண்டு, அவளின் அருகிலேயே பிரசவம் முடியும் வரை நின்ற அந்த மாவீரன், ஒரு குழந்தையாக கண்களங்கி நின்றான். பிரசவம் முடிந்த அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுக்கிறாள். சுமதியின் முகத்தை அப்படியே உரித்து வைத்திருந்தாள். அந்த குழந்தைக்கு துளசி என்னும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். ஆண்டுகள் கடந்தது. கவினும் இராணுவத்திற்கு செல்வதும், விடுமுறையில் சந்திப்பதுமாக வாழ்க்கை மகிழ்வாய் சென்றாலும். பிரிவின் வேதனையில் அவர்களுக்குள்ளான காதல் கூடியே இருந்தது.
மூன்று வருடங்கள் கடந்ததே தெரியாமல், துளசியும் வளர்ந்து விட்டாள். தனது தோட்டத்திற்கு சென்று, மருதாணி இலைகளை தமது பிஞ்சு கைகளால் கொய்து, அவளின் பாட்டி, நித்தியாவிடம் கொடுத்து, தனது கைகளில் அரைத்து போட்டு விடும் படி கேட்டுக் கொண்டிருந்தாள். அதனை கேட்டு புன்னகைத்தவாறே, அங்கு வந்த சுமதி, துளசியை தூக்கி அணைத்து முத்தமிட்டு, இந்த மருதாணி இலை இருக்கே, எங்க அப்பத்தா கிட்டயிருந்து உங்க அப்பத்தா வரைக்கும் எதையோ சொல்லிக்கிட்டே இருக்கு” என்றவள். தனது கணவன் கவினின் நினைவு வரும் பொழுதெல்லாம் அவளின் பாட்டியையும் நினைத்துக் கொண்டு மருதாணி இட்டுக் கொண்ட நாட்களை நினைத்து மனதினுள் பூரித்துப் போனாள்.
ஆண்டுகள் பல கடந்தாலும், சுமதி தன்னை “மருதாணி” என்று செல்லமாக அழைக்கும் கவினின் குரலுக்கு அடிமையாகி தான் போனாள். கவினுக்கும் சுமதிக்குமான அன்பு மருதாணியின் சிவப்பை போல செழிப்பாக இருந்தது. வாழ்க்கையை எப்படி வாழ்ந்தாலும், அதிலுள்ள அன்பின் ஆழ்நிலை என்பது, பொருளோ, பணமோ நிர்ணயிப்பதில்லை. அவரவர் குணத்தை கொண்டே மேலோங்கி வளர்கிறது என்பதை கவின்மற்றும் சுமதியின் வாழ்க்கை அழகான காதலை உணர்ந்து வாழ்ந்தது. துளசி பல சமயங்களில் அவளின் அப்பாவை போல சுமதியை பார்த்து, “ஏய் மருதாணி, நீ கோபப்பட்டா ரொம்ப சிவந்திடுவ, அப்புறம் உன்னோடவிரலில் இருக்கிற மருதாணி கோபித்துக்க போகுது”, என்று விளையாட்டாக பேசுவாள். கவின் மட்டும் தன் வாழ்வில் வரவில்லை என்றால், தன் வாழ்க்கை எப்படி இருந்திருக்குமோ” என்று யோசித்தவள். தான் வாழ்ந்த வீட்டிற்கு எப்பொழுது சென்றாலும், சிறு பிள்ளையில் தான் வாழ்ந்த குணத்தை மாற்றிக் கொள்ளாமல், என்றுமே அம்மாவின் செல்லம் மட்டுமன்றி வார்த்தைகளுக்கும் மரியாதை கொடுத்து நடந்துக் கொண்டாள். வாயாடி துளசி மட்டும் அவளது அம்மம்மா சிவகாமியிடம் வாதிடுவதும், விளையாடுவதுமாக இருந்தாள். கால போக்கில் சுமதியின் அப்பா சுந்தரமும் காலமாகி விடுகிறார். தனிமையில் தவிக்கும் சிவகாமியை தினமும் சென்று சந்தித்து வந்தாள் சுமதி. தன்னால் முடிந்த உதவிகளை செய்து அம்மாவிற்கு ஒரு அம்மாவாக மாறிப் போனாள்.
முற்றும்…
சுமதி பொறுப்புடன் நடந்து கொண்டது,அம்மாவை பார்த்துக்கொண்டது,அம்பிகா சுமதியிடம் காட்டிய அன்பு இவையெல்லாம் தாண்டி எனக்கு கவினின் மருதாணி மீதான காதலும்,ராணுவம் சென்றதும் தான் என்னை மிகவும் கவர்ந்தது..துளசி குட்டியும் க்யூட்..அழகான படைப்பு.. வாழ்த்துக்கள் 💐💐💐