501 views

** 13 **

கோயிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் பரமேஸ்வரி, “உங்க தங்கச்சி வீட்டிற்கு யாரை மாமா அனுப்பலாம் இருக்கீங்க?” என ஆவலாகக் கேட்டார். 

அதற்கு ஆடலரசன், “டக்குனு யாரும் நியாபகத்திற்கு வரமாட்டிக்கிறாங்க கண்ணு… யோசித்து நல்ல ஆளா அனுப்பணும் இல்லைனா அதுவே அடுத்த பிரச்சனைக்கு வழிவகுத்திடும்” என்றார்.

கணவனின் பதிலில் உண்மை உணர்ந்த பரமேஸ்வரி, “எனக்கு ஒரு யோசனை மாமா, ஏன் அவங்களையும் இவங்களையும் தேடுவானே? பேசாமல் நம்ம வேணி அப்பாக்கிட்ட சொல்லி பார்க்கலாமே” என கேட்கவும்.

“இது நல்ல ஐடியா கண்ணு… யசோகனிடம் சொன்னா கச்சிதமா பேசுவான்… நேக்கு போக்கு தெரிந்து பிரச்சனையை வளரவிடாமல் மடை மாத்திடுவான்” என சிரிப்புடன் கூறியவர்,

“இந்த வேலைக்கு இவனைவிட வேற யாரும் சரிப்பட்டு வரமாட்டாங்க… நான் இப்பவே அவனிடம் பேசறேன்” என்றவர் அடங்காத ஆர்வத்துடன் போனை எடுக்கவும். 

பரமேஸ்வரி, “மாமா… மாமா கொஞ்ச பொறுங்க” எனக்கூறி கணவனை தடுத்தவர்,

“நாம அவரிடம் உதவி கேட்கிறோம், அதை போனில் பேசினால் நல்லா இருக்காது. வீட்டுக்குப் போய் பேசிட்டு வந்திடலாம்… அதுதான் மரியாதையும் கூட” என்று கூற.

ஆடலரசன், “தீபாவளி அதுவுமா எப்படி கண்ணு? யசோகனுடைய பெரிய பொண்ணும் மாப்பிள்ளையும் வந்திருப்பாங்க. இப்ப நாம போனா சரியா வருமா?” என தயக்கமாகக் கேட்டார்.

“இவ்வளவு தானா ஐயா? இருங்க வரேன்” என்று உள்ளே சென்ற வடிவம்மை சிறிது நேரத்தில் பெரிய பையோடு வந்தார்.

அதைப் பார்த்து ஆடலரசன், “என்ன வடிவு இது? எதுக்கு இவ்வளவு பெரிய பை?” என கேட்க.

வடிவம்மை, “சும்மா போறது தான உங்களுக்கு சங்கடமா இருக்குது ஐயா? இதில் பலகாரம் இருக்கு பிள்ளைங்களுக்கு கொடுத்துடுங்க” என்று கூற.

பரமேஸ்வரி, “வெறும் கையோடு போய் பேசுவதற்கு, இதை சாக்கா வச்சுக்கிட்டு போயிட்டு வந்திடலாம் மாமா” என்றவர்,

“ஆனால் வேணி குடும்பத்தார் கோயிலில் இருந்து வந்துட்டாங்களானு தெரியலையே” என்று கூற.

கஸ்தூரி, “அதற்கு ஏன் டென்ஷனாகறிங்க ம்மா?” என கேட்டவள்,

“இருங்க ரெண்டே நிமிஷத்தில் நான் கேட்டு சொல்றேன்” என்றவள் வேணிக்கு மெசேஜ் பண்ணினாள்.

கஸ்தூரி அனுப்பிய  மெசேஜ்க்கு உடனே பதில் வரவும், “ஐயார் அங்க எல்லாரும் வீட்டில் தான் இருக்காங்களாம்” என்க.

ஆடலரசன், “சரி நாங்க போய் பேசிட்டு வரோம் நீங்கள் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க” என்றவர்,

கஸ்தூரியிடம், “நீயும் வாடா” என அழைக்க.

“எனக்கு ஓகே ஐயார்… நான் வெட்டியாத் தான் இருக்கேன்” என்று கஸ்தூரி சொல்ல.

பரமேஸ்வரி, “அதனால் ஒன்னும் ஆகிடாது வா” எனக்கூறி மகளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார்.

திடீரென ஆடலரசனும் பரமேஸ்வரியும் கஸ்தூரியுடன் வருவதைக் கண்டு யசோகனும் அவரின் மனைவியும் வாடா புன்னகையுடன் இவர்களை வரவேற்றனர். 

பரமேஸ்வரி தாங்கள் கொண்டுவந்த பலகாரத்தை வேணியின் அன்னையிடம் கொடுத்து, “பெரியவளும் மாப்பிள்ளையும் எங்க? இந்தா பசங்களுக்கு கொடுமா” என்க.

அவரோ, “அவங்க ரெண்டு பேரும் வெளியே போறேன்னு போயிட்டாங்க க்கா” என்றவர் பலகாரத்தை வாங்கிக்கொண்டு அனைவருக்கும் குடிக்க நீர் கொடுத்தார்.

இந்த கேப்பில் திரிவேணியும் கஸ்தூரியும் மாடிக்கு ஓடிவிட்டனர். 

யசோகன், “வாமா பரமு…  வாடா பங்காளி” என ஆர்பாட்டமாக அழைத்தவர், 

“என்னடா காத்து இந்த பக்கம் அடிக்குது? ஏதாவது விசேஷமா?” என சிரிப்புடன் கேட்டார்.

அதற்கு ஆடலரசன், “விசேஷம் வைக்கலாம்னு தான்டா ஆசை… அதை நிறைவேற்றத் தான் உன்னை பார்க்க வந்தேன்” என சிரிப்புடன் கூறினார்.

“கொண்டுவரியா? அனுப்புறியா?” என யசோகன் கேட்க.

“கொண்டு வரத்தான் பார்க்கிறேன்… அதுவும் விட்டுப்போன உறவை” என்றவர், 

“கோயிலில் வைத்து இளவரசியை பார்த்தேன்டா” என்க, அங்கே பெருத்த அமைதி நிலவியது. 

யசோகன், “இளவரசி ஏதாவது சொன்னாளா? இல்லை அவன் ஏதாவது வம்பு பேசினானா?” என ஆராய்ச்சியுடன் கேட்டார்.

அதைக் கேட்டதும் மலர்ந்த முகத்துடன் ஆடலரசன், “அப்படியெல்லாம் எதுவும் இல்லை யசோகா” என்றவர்,

“எனக்கும் ஆதிரனுக்கு இளவரசியுடைய பொண்ணை கேட்கலாம்னு தோணுதுடா…  பரமுக்கும் இதில் சம்மதம்” என்க.

யசோகன், “இதை நீயா சொல்றியா இல்லை யாராவது சொல்ல வச்சாங்களாடா?” என யோசனையாகக் கேட்டவர், 

“இதை நீயா முடிவு செய்திருந்தாலும் சரியா வரும்னு நினைக்கிறியா? எதுக்கும் நல்லா யோசிடா” என்று கூற.

பரமேஸ்வரி, “செஞ்ச தப்பை நினைத்து கவலைப் படறவங்களை இன்னும் எத்தனை நாளைக்கு ண்ணா தண்டிப்பது? ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே” என்றவர், 

“அதோடு சொந்தத்தில் பொண்ணை வச்சுக்கிட்டு நாம ஏன் அசலில் தேடணும்?” எனக் கேட்க.

யசோகன், “எல்லாம் சரி பரமு… துளசின்னு  நினைத்து, நீ வீட்டில் வைக்க நினைக்கிற செடி, முள்ளா மாறி நம்மையே காயப்படுத்திடக்கூடாது” என தம்பதிகளை எச்சரிக்கை செய்தார். 

அதற்கு பரமேஸ்வரி, “ஶ்ரீயை ஏன் ஜவஹர் பொண்ணா மட்டும் பார்க்கறிங்க? இளவரசி பொண்ணாவும் பாருங்க… அவள் அம்மாவுடைய குணம் கொஞ்சமாச்சும் இருக்கலாமில்லை?” என்க.

யசோகன், “இருந்தா நல்லது பரமு… இல்லைன்னால் தான் சிரமம்” என்றவர்,

“சரி சொல்லுங்க நான் என்ன செய்யணும்? “ எனக் கேட்க.

ஆடலரசன், “ஶ்ரீ ஜாதகத்தை வாங்கணும்டா… நீ விவரத்தை சொல்லி ஜவஹரிடம் பேசு” என்க.

“அதெல்லாம் பிரச்சனை இல்லை நான் பேசிடறேன்… எல்லாம் ஒத்துவந்தா அந்த பொண்ணு குணத்தைப் பற்றி விசாரித்து தெரிஞ்சுக்கலாம்” என யசோகன் கூற.

பரமேஸ்வரி, “இதுவும் நல்ல யோசிங்க… நாம பேசிக் குழப்பிப்பதைவிட விசாரித்து தெரிஞ்சுப்பது தான் நல்லது” என தன் சம்மதத்தைக் கூறினார்.

அதற்கு ஆடலரசன், “நீங்க சொன்ன மாதிரி பண்ணிடலாம்” என்றவர், 

“அவனிடம் கொஞ்சம் பார்த்து பேசுடா” என்றார்.

“சரிடா, நான் பார்த்துக்கிறேன்” என்ற யசோகன்,

“நீ முதலில் ஆதிரனிடம் தெளிவா பேசிக்கோ, அப்புறம் இவன் குறுக்க கட்டையைப் போட்டுட்டான். யாராலும் ஜவஹரை சமாளிக்க முடியாது” என எச்சரிப்பது போல் கூறினார்.

“நீ ஜாதகத்தையும் போட்டோவையும் வாங்கிட்டு வாடா நான் கேட்கிறேன்… ஜாதகம் ஒத்துவந்தா அவனிடம் கேட்டுக்கலாம்” என்ற ஆடலரசன்,

“அவசரப்பட்டு முன்பே பேசி வீணா பசங்க மனதில் சலனத்தை ஏற்படுத்த வேண்டாம்னு நினைக்கிறேன்… கொஞ்சம் நிதானமாவே வேலை பார்க்கலாம் அவசரமே வேண்டாம்” என்று அழுத்தமாகக் கூறினார். 

திரிவேணி தன் தோழியிடம், “கோயிலுக்கு வந்தவ ஏன் வெயிட் பண்ணாமல் வந்த? நீ இருந்திருந்தா கொஞ்சம் நேரம் சுத்திப்பார்த்துட்டு வந்திருக்கலாம்… வீட்டுக்குள்ளயே இருக்க கஷ்டமா இருக்குடி” என கூற. 

கஸ்தூரி, “நான் என்ன பண்ண? இளவரசி அத்தை வந்ததும் அவங்களுடன் பேசவே எல்லாருக்கும் நேரம் சரியா இருந்தது, அப்படி இருக்க நான் மட்டும் எப்படி ஒதுங்கி வர முடியும்?” எனக் கேட்டவள்,

“ஒரு குட் நியூஸ் வேணி, கூடிய சீக்கிரம் பெரிய வீட்டில் கல்யாணம் நடக்கப் போகுது, அதற்காக வேலை இன்றே ஆரம்பிக்கிறாங்க” என மகிழ்ச்சியுடன் கூறினாள். 

“கல்யாணமா? யாருக்குடி?  உனக்கா இல்லெ ஆதிரன் அண்ணாவுக்கா?” என திரிவேணி உற்சாகத்துடன் கேட்டவள்,

“ஆமாம் யார் இந்த இளவரசி?” எனக் கேட்க.

“எனக்கா? இப்போதைக்கு கல்யாணங்கிற பேச்சுகே இடமில்லை வேணி… ஆதி அண்ணாவுக்கு தான் பக்கி கல்யாணம்” என்ற கஸ்தூரி,

“ஐயாருடைய தங்கச்சி வேணி” என்க. 

திரிவேணி, “என்னது தங்கச்சியா!” என அதிர்ச்சியாக கேட்டாள்.

அவளின் அதிர்ச்சியைத் தூசி போல் தட்டிய கஸ்தூரி, “ஆமாம்டி… தங்கச்சி தான்” என்றாள். 

“ஐயாவுக்கு தங்கச்சி இருப்பதே நீ சொல்லித் தான் கஸ்தூரி எனக்குத் தெரியும்… சத்தியமா என்னால் என் காதையே நம்ப முடியலை” என விலகாத அதிர்ச்சியில் சொல்ல.

பெருமூச்சு ஒன்றை விட்ட கஸ்தூரி, “ஐயாருக்கு தங்கச்சி இருக்காங்கனு எனக்கு முன்பே தெரியும் வேணி, ஆனால் பார்த்ததில்லை… முதல் முறையா இன்னிக்குத் தான் அவங்களை நேரில் பார்த்தேன், அவங்களை பார்த்ததும் அம்மா முகத்திலும் ஐயார் முகத்திலும் அப்படி ஒரு சந்தோஷம் தெரியுமா? கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியாது அவ்வளவு நிறைவா இருந்தது” என்று  கோயிலில் நடந்ததை அப்படியே விவரித்தாள். 

“இத்தனை நாளா… இல்லை இல்லை இத்தனை வருஷமா ரெண்டு குடும்பமும் பேசாமல் இருக்கும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்?” என தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினாள். 

அதற்கு கஸ்தூரி, “இளவரசி அத்தையை பார்த்த பிறகு எனக்கு என்ன தோணுதுனா…” என எதையோ கூற வர.

திரிவேணி, “நம்ம ஐயார் எதாவது தவறா தப்பு செய்திருக்கார்னு சொல்ல வரியா?” என முந்திக்கொண்டு கேட்கவும். 

கஸ்தூரி, “நான் ஐயாரை தப்பா சொல்ல மாட்டேன் வேணி… அவ்வளவு ஏன் அந்த மாதிரி நினைப்பு கூட எனக்கு இல்லை… இதில் வேற ஏதோ இருக்கு” என திட்டவட்டமாகக் கூறியவள்,

“எனக்கென்னவோ இளவரசி அத்தையோட கணவர் மேல் தான் தவறு இருக்கும்னு படுது… எப்படி சொல்றேன்னா? மனைவிய மட்டும் அண்ணனிடம் பேச அனுப்பிட்டு இவர் தனியா கண்களில் படாத தூரத்தில் இருந்த போதே லேசா சந்தேகம் வந்தது” என்க.

அதற்கு திரிவேணி, “அப்படி என்ன செய்திருப்பார்? அதுவும் ஐயார் கோபப்படும் அளவுக்கு?” என யோசனையாக கேட்க. 

“ஒரு ஐடியாவும் இல்லை வேணி… லேசா அம்மாகிட்ட நூல் விட்டு பார்க்கிறேன்” என்ற கஸ்தூரி,

“நீயும் உன்னுடைய அப்பாவிடம் கேட்டுப்பார்டி” என்றாள். 

“சிறப்பா செஞ்சுடறேன்” என்றவள்,

“இதெல்லாம் இருக்கட்டும்… வேலை பற்றி ஐயாரிடம் பேசினியா?” என கேட்க.

“காலையில் தான் தெளிவா பேசினேன்” என கஸ்தூரி கூற. 

“என்னனு கேட்ட? அதற்கு ஐயார் என்ன சொன்னார்? ” என திரிவேணி கேட்க.

“வயல் குத்தகைக்கு வேணும்னு கேட்டேன்” என கஸ்தூரி சொன்னதும். 

அதிர்ந்து போன திரிவேணி, “என்னது குத்தகைக்கா?” கேட்க.

“ஆமாம்டி…  அதுதான் சரியா வரும்னு தோணுது… நான் எடுத்து வேலை பார்ப்பதால் பின்னாடி தேவையில்லாத பிரச்சனை வந்திடக்கூடாதுனு தான் குத்தகைக்குக் கேட்டேன்” என அழுத்தமாகக் கூறினாள். 

அதற்கு திரிவேணி, “நீ கேட்டது இருக்கட்டும், ஐயார் என்ன சொன்னார் அதை முதலில் சொல்லுடி” என்று விலகாத அதிர்ச்சியுடன் கேட்டாள். 

“காரணம் கேட்டார் நான் சொன்னேன்… அவருக்கும் அதுதான் சரியாப்பட்டது. ஒத்துக்கிட்டார்… இனி பரமு அம்மாவை தான் சமாளிக்கணும் வேணி” என சாதாரணமாக கஸ்தூரி கூற.

திரிவேணி, “இருப்பதிலே இதுதான் பெரிய டாஸ்க் வேணி… அடுத்தது உன்னை பெத்த ஆத்தாவை வழிக்குக் கொண்டு வரணும் மறந்திடாதே” என்க.

“அதெல்லாம் ஐயார் பார்த்துப்பார்… அடுத்த வாரம் பேங்க்கு போய் லோனுக்கு அப்ளை செய்யணும்” என்ற கஸ்தூரி,

“நீ என்ன பண்ணப்போற வேணி?“ என தோழியிடம் கேட்க.

திரிவேணி, “நான் என்ன புதுசா செய்ய? வழக்கம் போல் கஸ்தூரி எவ்வழியிலோ, இந்த வேணி அவ்வழியே” என வசனம் பேசினாள். 

“வீட்டில் பேசிக்கிட்டு சொல்லு, நான் ஒரு ஐடியா வைத்திருக்கேன்… ஆதிரன் அண்ணா கல்யாணத்திற்குப் பிறகு அதற்கான வேலையை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்… நீ என்னன்னு சொல்லிட்டனா நான் அதற்கு தகுந்த மாதிரி பிளான் பண்ணுவேன்” என்று திடமாக கூற.

திரிவேணி, “அக்காவும் மாமாவும் ஊருக்கு கிளம்பினதும் நான் அப்பாவிடம் பேசிட்டு சொல்றேன் கஸ்தூரி” என்க.

“அதுவும் சரிதான்… அவங்க போன பிறகே பேசு… வீணா வீட்டு மாப்பிள்ளை முன்பு ரசபாசம் வேணாம்” என நிலையை புரிந்து கொண்டு கூறினாள்.

அதில் தோழியை நினைத்து நெகிழ்ந்த திரிவேணி இறுக்கமாக கஸ்தூரியின் கையை பற்றிக் கொண்டாள்.

சிரிப்புடன் கஸ்தூரி, “போதும் பேசினது. வா கீழே போகலாம்” எனக்கூறி தோழியுடன் சென்றாள்.

பெண்கள் இருவரும் வந்ததை கண்டு ஆடலரசன், “கிளம்பலாமா கஸ்தூரி?” எனக் கேட்க.

யசோகன், “இருடா சாப்பிட்டுப் போகலாம்” என்க. 

கஸ்தூரி, “வாய்ப்பே இல்லை வேணி ப்பா… இன்னைக்கு அம்மா விதவிதமா சமைத்து வைத்திருக்காங்க வீட்டுக்குப் போனதும் ஒரு பிடிபிடிக்கணும்” என கண்கள் மூடி ரசித்துக் கூறியவள்,

“நான் இங்க வந்ததே வேணியையும் கூட்டிக்கிட்டுப் போகத்தான்” என்று கூற.

யசோகன், “வேணிக்கு மட்டும் தானா? எனக்கில்லையா கஸ்தூரி?” என விளையாட்டாகக் கேட்க.

கஸ்தூரி, “உங்களுக்கு இருக்கு… ஆனால் நீங்க இப்ப வந்துட்டா வேணி ம்மா சமைத்ததை யார் சாப்பிடுவாங்க?” என்று குறும்பாக கேட்க.

யசோகன், “இன்னைக்கு ஒரு நாள் நல்ல சாப்பாடு சாப்பிடலாம்னு நினைத்தேன் விடமாட்டியே ம்மா” பாவம் போல் கூற.

வேணியின் அன்னை பானு, “எது நல்ல சாப்படாடா? அப்ப நான் சமைப்பது நல்லா இல்லையா? அப்படி ஒன்னும் நீங்க கஷ்டப்பட்டு நான் சமைத்ததை சாப்பிட வேண்டாம்” என்று கணவரிடம் கூறியவர் பரமேஸ்வரியிடம் கொண்டு வந்த பையை கொடுத்தார்.

அதற்கு வேணி, “இதுக்கு தான் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்கணும்னு சொல்றது… வீணா வாயைக் கொடுத்து சோத்துக்கு ஆப்பு வச்சுக்கிட்டிங்களே ப்பா” என்றவள்,

தாயிடம், “ம்மா… நீங்க அப்பாவை கவனிங்க நான் கஸ்தூரி கூட போயிட்டு வந்திடறேன்” என்றவள் தந்தையை கோர்த்துவிட்டுவிட்டுத் தோழியுடன் சிட்டாக பறந்துவிட்டாள்.

இவர்கள் முன்னே சென்றதும் ஆடலரசனும் பரமேஸ்வரியும் விடைபெற்று கிளம்பினார்கள். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *

    2 Comments