Loading

ப்ரியம் 2

வேலன் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த பெண்கள் விடுதியில். அக்கணம் தான் வந்து சேர்ந்தவள் பதற்றமாய் காணப்பட்டாள்.

“ஏன்மா இது தான் ஹாஸ்டாலுக்கு வர்ற நேரமா? மணியை பாரு பனிரெண்டாகுது” என சலித்துக் கொண்டார் வார்டன் ஸ்டெல்லா.

“மேடம்!! வீட்டுக்கு போன் பண்ணி வந்து சேர்ந்திட்டேன்னு சொல்லணும் எல்லாரும் பயத்தில் இருப்பாங்க. எனக் கேட்டவளின் விழிகளில் கண்ணீரில் சாயல்.

அந்தக் கண்ணீரை கவனித்த ஸ்டெல்லாவின் முகபாவனையும் மெதுவாக மாறியது. அவரின் முகத்தில் இருந்த கடுமை மெல்ல கரைந்தது.

“சரி. சரி முதலில் உள்ளே போ. ரெஜிஸ்டரில் சைன் பண்ணு. அப்புறம் போன் பண்ணிக்கோ…” என்று அனுமதி வழங்கினார்.

அவள் அவசரமாக கையெழுத்திட்டு, கையில் இருந்த மொபைலை நடுங்கிய விரல்களால் அழுத்தினாள். அவள் தன்னுடைய அலைப்பேசியை தொலைத்துவிட்டு நிர்க்கதியாக நிற்க வேண்டிய நிலை வரும் என அவள் நினைத்துக் கூட பார்த்ததில்லை.

 அதே சமயம் தக்ஷன்யாவின் வீடு வழக்கத்தை விட பரபரப்பாக காணப்பட்டது.

“இந்த இழவுக்கு தான் சொன்னேன் அவளை படிக்க வைக்கதுக்கு வெளியூர். அனுப்ப வேண்டாமுன்னு. ஒருத்தராவது கேட்டியளா? நடு முச்சந்தியில வச்சி சாணியை கரைச்சி ஊத்தின மாதிரி செஞ்சிட்டாளே . அய்யோ! அய்யோ!” மாரில் அடித்துக்கொண்டு அழுதார் தக்ஷனாவின் தாய் கோகிலா.

“ஏய் இந்தாடி கொஞ்சம் அமைதியாக இரு, நீ கத்துறதில ஊருக்கே தெரிஞ்சிரும் போல” என அதட்டலாய் வந்து விழுந்தது சந்திரனின் குரல்.

“ஆமா நான் சொல்லி தான் ஊர் உலகத்துக்கு தெரிய போகுது. கால காலத்தில கல்யாணத்தை பண்ணி வைக்காமல். அந்த சிறுக்கி படிச்சு கிழிச்சிருவான்னு அனுப்புனியளே . உமக்கு இது தேவை தான்” என நக்கலாய் சொல்லி நகர்ந்தவரை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான் மணிகண்டன்.

“என்ன டா மணி! தங்கச்சிகாரியை சொன்னதும் கோவம் பொத்திக்கிட்டு வருதோ? நீ தானே அவளுக்கு அட்மிஷன் போட்டுக் கொடுத்தது பத்தாதுன்னு எலிசபெத் மஹாராணியை ப்ளேன்ல அனுப்பி வச்ச, போய் சேர்ந்த முதல் நாளிலேயே அந்த மஹாராணியம்மா போனை எடுக்கலை. எவன் கூட ஓடிப்போனாளோ” எனப் பேசியவரை,

“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதம்மா. அவளே அங்கே என்ன சிரமத்தில இருக்காளோ? என் தங்கச்சி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. உன் வாய்க்கு வந்ததையெல்லாம் கதையாய் கட்டிக்கிட்டு இருக்காதே” எனப் பேசிக்கொண்டிருந்தவனின் அலைப்பேசி மெல்ல இசைந்தது. நள்ளிரவில் புது எண்ணில் இருந்து அழைப்பு வர,

“யாரு பேசுறது?”

“அண்ணா! தக்ஷா பேசுறேன்” எனச் சொன்னவளின் குரல் அழுகையை தாங்கி நின்றது. அவள் பேசிய ஒற்றை வார்த்தையில் அவள் அழுதுக் கொண்டிருப்பதை கணித்தவன்.

“என்னத்துக்கு இப்போ அழுகிற? ஹாஸ்டலுக்கு போய்ச் சேர்ந்திட்டியா? எங்கே இருக்கே?” என்று அவசரமாகக் கேட்டான் மணி.

அந்தக் கேள்விகளில் அக்கறையும், பதற்றமும் கலந்திருந்தது.

“அண்ணா… நான் ஹாஸ்டலுக்கு வந்துட்டேன் ஆனால்,” என்று சொல்லிக்கொண்டே அவள் அழுகையை அடக்க முயன்றாள்.

“ஆனா என்ன தக்ஷா? சும்மா சொல்லு. யாராவது ஏதாவது சொன்னாங்களா? உனக்கு ஏதாவது பிரச்சனையா?” துரிதமாய் கேட்டவனின் அருகில் வந்து நின்ற கோகிலாவோ அலைப்பேசியை ஸ்பீக்கரில் போட சைகை செய்ய, அவரின் பேச்சை தட்ட முடியாமல் ஸ்பீக்கரை ஆன் செய்தான் மணி.

“அண்ணா மொபைல் போன் காணாமல் போயிட்டு” என அவள் சொல்லிய நொடியில்

“அய்யோ! அய்யோ! போச்சா இருபத்தி அஞ்சாயிரத்துக்கு போனை வாங்கி, எவனுக்கோ சும்மா தூக்கி கொடுத்திருக்காளே, இதெல்லாம் விளங்கியதுக்கா?”என அலறிய கோகிலாவை,

“ஏய் கோகி! புள்ளை நல்ல படியா போய் சேர்ந்துட்டாளே அதுவே போதும். எம்மா தக்ஷா., போன் போனால் போயிட்டு போகுது வேற வாங்கிக்கலாம். நீ சாப்பிட்டியா?” என மனைவியிடம் துவங்கி மகளிடம் முடித்தார் சந்திரன்.

 “அதான் இருபத்தி அஞ்சாயிரத்தை ஓரே முழுங்கா முழுங்கிட்டாளே அவளுக்கு எப்படி பசிக்கும்”என மீண்டும் ஆரம்பித்த கோகிலாவின் வாயை மூட வைக்க முடியாமல் . போனின் ஸ்பீக்கரை ஆஃப் செய்துவிட்டு தங்கையிடம் தனியாக பேசச் சென்றான் மணி. அப்படியிருந்தும் கோகிலாவின் வசவுகள் தக்ஷாவின் செவிகளில் விழுந்துக் கொண்டே தான் இருந்தது.

ஸ்பீக்கரை ஆஃப் செய்தவுடன் மணியின் குரல் மென்மையடைந்தது.

“தக்ஷா… கவலைப்படாதே. போன் போனால் போகட்டும். நீ பாதுகாப்பாக இருக்கிறது தான் எனக்கு முக்கியம். புரியுதா?”

அவள் அங்கிருந்த குரல் கேட்டு மட்டும் அழுகையை அடக்க முயன்றாள்.

“அண்ணா… அம்மா ரொம்ப கோபமா இருப்காங்களா. நான் என்ன அண்ணா தப்பு செஞ்சேன் பொம்பளைபுள்ளையா பொறந்தது என் தப்பா? எப்போ பார்த்தாலும் வேற வீட்டுக்கு போறவன்னு சொல்லிகிட்டே இருக்காங்க. நான் படிக்கணும்னு ஆசைப்பட்டது தப்பா?”

“ இதோ பாரு தக்ஷா அம்மாவை பத்தி என்னை விட உனக்கு தான் நல்லாவே தெரியும்ல. விடு புலம்பிகிட்டே இருக்கட்டும். நாளைக்கி வரைக்கும் போன் கிடைக்குதா பாரு இல்லைனா சிம்மை ப்ளாக் பண்ணிடலாம். புது சிம் வாங்கிக்கலாம். முதல்ல நீ ரெஸ்ட் எடு.” தமையனின் ஆதரவான வார்த்தைகள் அவளை இயல்புக்கு கொண்டு வந்தது.

அலைப்பேசியை வார்டனிடம் கொடுத்துவிட்டு அவளுக்கு ஒதுக்கபட்ட அறையை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள். அறை இருள் சூழ்ந்திருந்தது தட்டு தடுமாறி ஸ்விட்ச்சை சுவற்றில் கை வைத்து தடவி கண்டுபிடித்து அறையின் இருளை போக்கிய நொடியில்,

“ஆ…!” என்ற அலறலுடன் படுக்கையில் எழுந்து அமர்ந்து கண்களை கசக்கியவளின் பெயர் யோகஸ்ரீ.

“ஆத்தி! பேயின்னு பயந்துட்டேன். இப்படி அர்த்த ராத்திரியில யாராவது ஹாஸ்டலுக்கு வருவாங்களா? என்ன மாதிரி குழந்தை பிள்ளையெல்லாம் எப்படி தனியா தூங்கும். கொஞ்சம் வெள்ளைன வெடுக்கின்னு வர்றதில்லை” என அறை உறக்கத்தில் புலம்பியவளை பார்த்து அதிர்ந்து நின்றாள் தக்ஷன்யா.

“சாரி” எனத் தயங்கிய படி சொன்னவளை பார்த்த யோகா.

“மத்ததெல்லாம் காலையில பேசிக்கலாம். அதோ அந்த பேட்ல போய் படுத்துக்கோ. கப்போர்ட் அங்கே இருக்கு திங்க்ஸ் வச்சிகோ. அப்பறம் வொய்ஃபை பாஸ்வேர்ட் அங்கே ஒரு முழத்திற்கு எழுதி போட்டிருக்காங்க பார்த்துக்க, குட் நைட், மார்னிங் பேசலாம். முதலில் லைட்ட ஆஃப் பண்ணு தாயே” பட படவென பேசியவள் போர்வையை தலை வரை இழுத்து போத்திக்கொண்டு உறங்கினாள் யோகா.

விடிந்தால் அவள் முதுகலைப் படிப்பிற்கான முதல் நாள் வகுப்பிற்கு தயாராக வேண்டும். அவளின் கனவு அவள் கண் முன் இருந்தாலும்.அலைப்பேசியை தொலைத்து விட்டோம். தாய் கோகிலாவிற்கு இன்னும் தன் மேல் கோபம் குறையவில்லை என்ற வருத்தம் மேலோங்க. அறையிலிருந்த ஜன்னலோரம் வந்து நின்று வெளியே பார்த்தாள். வேலன் பல்கலைக்கழகம் என்ற பெயர் பலகையில் கடவுள் முருகனின் வேல் பொறிக்கப்பட்டு அழகாய் மிளிர்ந்த நொடியில். அவளின் அலைப்பேசி எங்கு விட்டிருப்போம் என்ற நினைவு வர அவளிதழ்கள் மெல்ல உச்சரித்தது அவன் பெயரை.

“திரு” என்று.

விடிந்தும் விடியாமல் இருந்த காலைப்பொழுதில் குளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டிருந்தாள் தக்ஷ்ன்யா.

“ஹலோ மேடம்!” என்றக் குரல் கேட்டு திரும்பினாள் தக்ஷ்ன்யா.

“எம்மா யாருமா நீ? ஒன்பது மணி காலேஜுக்கு அஞ்சரைக்கெல்லாம் கிளம்பிகிட்டு இருக்க? ராத்திரி பனிரெண்டு மணிக்கி வந்து தூங்க விடாமல் பண்ணின. ஏன்மா இப்படி ஹெவி பெர்ஃபாமென்ஸ் பன்னிகிட்டு இருக்க?”

“என் பேரு தக்ஷன்யா” என அவள் நட்பாய் கரம் நீட்ட.,

“என் தூக்கத்தை கெடுத்து தான் செல்ஃப் இன்ட்ரோ கொடுக்கணுமா? என் பேரு யோகா” என அவள் கரம் பிடித்து எழுந்தமர்ந்தாள் யோகா.

“சரி தக்ஷா எந்த ஊரு நீ?”

“தூத்துக்குடியில ஒரு சின்ன கிராமம். நீங்க?”

“அதென்ன நீங்க வாங்க போங்கனிட்டு, யோகான்னு சொல்லு” எனச் சொன்னவளிடம் சரியென தலையசைத்தாள் தக்ஷா.

“எனக்கு மதுரை பக்கம். மதுரகாரியாக்கும் நானு பார்த்து சூதானமா இருந்துக்க” என எச்சரிக்கை விடுவது போல் அவள் விளையாட்டாக சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

“ஆமா என்ன கோர்ஸ்” யோகா கேட்டாள்.

“எம்ஏ இங்க்லீஷ்” என தக்ஷா சொன்ன நொடியில் குதூகலமானாள் யோகா.

“அப்போ எனக்கு கவலை இல்லை. ப்ராஜெக்ட், அசைன்மென்ட் எல்லாம் நீ தான் ஹெல்ப் பண்ணனும்” எனச் சொன்னபடி குளியலறைகுள் புகுந்துக் கொண்டாள் யோகா.

இருவரும் ஒன்றாய் கிளம்பி மெஸ்ஸில் இருக்கையை பிடித்து தங்களுக்கு பிடித்த உணவை எடுத்து சாப்பிட துவங்கி இருந்தனர்.

நேரம் ஆகிவிட்டதால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை விரைந்து சாப்பிட்டு விட்டு தங்களுடைய வகுப்பை தேடி அலைய ஆரம்பித்தனர்.

“யுனிவர்சிட்டின்னு இங்கே வந்து சேர்ந்தால் நடந்தே வெயிட் குறைஞ்சிருவேன் போலையே, இன்னும் எத்தனை மைல் தூரம் தான்டி தக்ஷா நடக்கிறது” என புலம்பியபடி வந்த யோகாவை பார்த்து சிரித்தாள் தக்ஷா.

“அடியே தக்ஷா சரிக்காதேடி, இந்த இங்கிலீஷ் டிபார்ட்மென்ட்டை கொண்டு போய் கட்ட கடைசியில வச்சிருப்பாய்ங்க போல”

“நீ தான் மதுரகாரியாச்சே, இதெல்லாம் தூசு மாதிரி ஊதி தள்ளிடமாட்ட?” என கிண்டல் செய்த தக்ஷாவை முறைத்தவள்.

“அடியே தூத்துக்குடிகாரி, காலையில வரைக்கும் வாய் பேசத் தெரியதவளாட்டம் இருந்த, இப்போ என்னடனா ஊர் வாய் பேசுற? எல்லாரும் நம்மளை மாதிரி வெள்ளந்திய இருப்பாங்கன்னு நினைச்சது என் தப்பு தான் தாயி”

“நான் பேசமாட்டேன்னு யார் சொன்னது? அதெல்லாம் நல்லாவே பேசுவேன். புது இடம்ல அதான் கொஞ்சம் தயக்கமா இருந்திச்சு” என தக்ஷா சொல்ல,

“சரிதான்” என இருவரும் சேர்ந்து பேசிய படி ஆங்கில துறையை நெருங்கி இருந்தனர்.

அப்போது தக்ஷாவின் பார்வை தன்னை கடந்து முன்னே நடந்து சென்றுக் கொண்டிருந்தவன் மீது  பார்வை பதிந்ததோடு.

“திரு.!” என அவள் இதழ்கள் மெல்ல உச்சரிக்க,

“திருவா? யாருடி அது தெரிஞ்சவங்களா?” என யோகா ஆர்வமானாள்.

“அய்யோ! இல்லை யோகா நேத்து ராத்திரி என்னை ட்ராப் செஞ்ச கேப் டிரைவர் மாதிரி இருந்திச்சு. என்னோட போனை கூட கடைசியில் கேப்ல வச்சி யூஸ் பண்ணிதா நியாபகம். அதுக்கு அப்பறம் என்னோட போனை நான் பார்க்கவே இல்லை” என சோகமாய் சொன்னவளை பார்த்தவள்,

“அப்பறம் எதுக்குடி பயந்திட்டு இருக்க கூப்பிட்டு அவனான்னு பார்த்திடு”

“அய்யோ வேண்டாம் யோகா பயமா இருக்கு” எனப் பதறினாள் தக்ஷா.

“அடியே பைத்தியகாரி.இப்படியே பயந்திட்டு இருந்தால். சென்னையில இந்த இரண்டு வருசத்தை எப்படி தள்ளப் போற. எப்பயும் கவனமா இருக்கணும்டி” என அறிவுறுத்தியவள்.

“என்னப் பேர் சொன்ன?”

“திரு” என்றாள் தக்ஷா

“திரு மிஸ்டர் திரு” என யோகா கத்த அவனோ திரும்பி பார்க்காமல் விரைந்து நடந்து செல்ல.

“அய்யோ யோகா அவரை மாதிரி தெரியுதுன்னு தான் சொன்னேன் அவரான்னு நிச்சயமா தெரியலை” என தடுத்தாள் தக்ஷா.

“யாருடா இவ? இதோ பாரு தாயி இப்போ நம்ம அவனை க்ராஸ் பண்ணி போறோம். அவன் முகரைய ஒழுங்கா பார்த்து அவனான்னு சொல்லு” என யோகா புதிய யோசனையை சொல்ல,

“ஆனால் எப்படி யோகா அவர் தூரமா நடந்து போறாரே”

“கிழிஞ்சுது போ, இதோ இப்படி தான் என தக்ஷாவின் கரம் பிடித்தவள் அவளை தன்னோடு இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தாள் யோகா.

அவனை கடந்து இருவரும் ஓடி வந்து டிபார்ட்மென்ட்டை அடைந்திருக்க,

“என்னடி பார்த்தியா? அவனா?”

“பார்க்க அவரை மாதிரி தான் இருக்கு” யோசனையாய் சொன்னவளை பார்த்து முறைத்தாள் யோகா.

“எம்மாடி பரதேவதை! உன் போனோட விலை என்ன?”

“இருபத்தி அஞ்சாயிரம் மணி அண்ணேன் தான் கஸ்டபட்டு வாங்கி கொடுத்திச்சு”

“இதோ பாரு தக்ஷா. உன் போன் வேணும்னா அவனை பார்த்து சரியா அடையாளம் சொல்லு, இல்லைனா உன் போன் கோவிந்தா கோவிந்தா தான் டி” என யோகா சொன்ன நொடியில் திரும்பி பார்த்தாள்.

அவன் அவளை நெருங்கி வந்துக்கொண்டிருந்தான். நேற்றிரவுக் கண்ட அதே கண்கள். அதே முகம் நெற்றியில் பட்டையில்லை அவன் கழுத்தில் மாலையும் இல்லை மாறாக கல்லூரி பெயர் போட்ட ஐடி கார்ட் தொங்கிக் கொண்டிருந்தது.. வெள்ளை நிற சட்டையும் கருப்பு நிற பேண்டும் அணிந்திருந்தவனின் முகம் சற்று கடுமையை சுமந்திருந்தது.

அவனை நோக்கி மெல்ல நடந்தவள் அவனெதிரே அவன் முகத்தை நேராய் பார்த்து நின்றாள்.

“திரு” என அவனை அழைத்தாள். அவனோ புரியாது விழித்தான்.

“நீங்க கேப் டிரைவர் திரு தானே” நேரடியாய் விசயத்திற்கு வந்தாள் தக்ஷா

“நோ!! வழியை விடுங்க” என அவளை தாண்டி சென்றவனின் குறுக்கே போய் நின்றாள் யோகா.

“எப்பா தம்பி, அவளோட போனை கொடுத்திட்டு போப்பா” என அதிகாரமாய் கேட்ட யோகாவை முறைத்தவன்.

“எந்த டிபார்ட்மென்ட்” என அவன் கேட்ட போது,

“ஏய் யோகா அவர் இல்லை போலடி.” என எனப் பேசிய வந்த தக்ஷாவை தடுத்திருந்தாள் யோகா.

“அவன் பேர் என்ன சொன்ன?”

“திரு!” என்றாள்

“ஐடி கார்டை பார்த்தால் தெரிய போகுது” என அவனின் ஐடி கார்டை உற்று நோக்கியவள் அடுத்த நொடி பயத்தில் நடுங்கினாள் யோகா.

“அய்யோ சார் சாரி சார்” என மன்னிப்பு வேண்டியவளை பார்த்து புரியாது விழித்த தக்ஷாவின் செவிகளில்.

“ப்ரோஃபசர் கிட்ட கோர்த்து விட்டியே பரட்டை” என யோகா சொன்ன நொடியில் அதிர்ந்து நின்றாள் தக்ஷன்யா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
3
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்