Loading

 

“என்ன வேணும் உனக்கு?”

“உன் தோல்வி கதை வேணும். தனியா அழுதுட்டு இருப்பியே.. அதான் கதை கேட்டு ஆறுதல் சொல்லலாம்னு வந்தேன்”

“வருணிகா.. ரொம்ப ஆடாத”

“முதல் முதல்ல தெரிஞ்சு ஜெயிச்சுருக்கேன்டி.. ஆட மாட்டனா?”

“உனக்கு மூளை இல்லையா? உன் புருஷன இப்படியே விட்டுக் கொடுத்துட்டுப்போற?”

“ஆஹான்?”

“என்னடி ஆஹான்? அவன் உன் புருஷன் தான? அவன இப்படி ஆசால்ட்டா தூக்கிப்போடுற? நீயெல்லாம்‌ ரொம்ப நல்லவனு வேற நம்புறாங்க”

“அட கிறுக்கச்சி.. நீ இத தான் எதிர் பார்ப்பனு எனக்குத் தெரியும். ஆனா, அத அப்படியே என்னால செய்ய முடியாது”

சந்திரா அவளை முறைத்துப் பார்க்க, வருணிகா நக்கலாக சிரித்தாள்.

“என்னை என்ன சீரியல் ஹீரோயின்னு நினைச்சியா? கல்லானாலும் கணவன், புல்லானாலும் புண்ணாக்குனு நினைச்சு வாழ? உன் புத்தி என்ன எதிர் பார்த்து இருக்கும்னு நான் சொல்லட்டா?”

“நானே சொல்லுறேன். எனக்கென்ன பயம்? உன் கிட்ட இருந்து உன் புருஷன பிரிக்கனும். அதுவும் உனக்கு புள்ளை பிறந்தப்புறம் தான் உனக்கு தெரிய வரனும். எப்படியும் நான் சொன்னதெல்லாம் பொய்னு நீ அவனுக்கு ப்ரூஃப் பண்ணிடுவ. அவனும் தப்பு பண்ணிட்டேன்னு உன் கிட்ட வருவான். அவன மன்னிக்கிறியோ இல்லையோ, உன் புள்ளைக்காக அவனோட வாழுவ.. ஆனா சாகுற வரை, அவன் மனசுலயும் உன் மனசுலையும் இந்த விசயம் இருக்கும். உங்களால சாகுற வரை நிம்மதியா வாழ முடியாது. அது தான் எனக்கு வேணும்னு நினைச்சேன். ஆனா நீ…”

சந்திரா கோபமாக முடிக்க, வருணிகா சிரித்தாள்.

“நினைச்சேன். காலம் முழுக்க நான் இந்த விசயத்தை மனசுல சுமந்துட்டு.. நான் இருக்கும் போதே, என் புருஷன் வேற ஒரு பொண்ண லவ் பண்ணிட்டான்னு அசிங்க பட்டு வாழனும். நீ சந்தோசமா என் வாழ்க்கைய கெடுத்துட்டு, நிம்மதியா வாழுவியா? நீ நினைச்சது நடக்காது. நடக்கக் கூடாது. அதான் டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணேன்”

“அதான்.. அதுல தான்டி தோத்துட்டேன். டைவர்ஸ் அளவு எல்லாம் நீ யோசிக்க மாட்ட.. ஒரு முட்டாள்னு நினைச்சுட்டேன். எப்படியும் உன் புருஷன் டைவர்ஸ் வாங்க மாட்டான். உன் கிட்ட தான் வந்து நிப்பான்னு நினைச்சேன். என் ப்ளான்ல மண்ணள்ளி போட்டுட்டு, அவனையே மொத்தமா வேணாம்னு சொல்லிட்டல?”

“பின்ன? காலம் முழுக்க இந்த வலியையும் காயத்தையும் சுமந்துக்கிட்டே வாழுவேன்னு நினைச்சியா?”

“வாழனும். அதான் தமிழ் கல்ச்சர்”

“மண்ணாங்கட்டி.. தமிழ்ல பல நல்ல விசயம் இருக்கு. இந்த மாதிரி கேவலத்தை எல்லாம், கல்ச்சர்னு சொல்லி அதை அசிங்க படுத்தாத”

“உன்னை இப்ப கூட என்னால பழி வாங்க முடியும். நீ இன்னொரு கல்யாணம் பண்ணா, ரெண்டாந்தாரமா போவ. அதுவும் எனக்கு லாபம் தான் “

“அடப்பைத்தியமே.. நான் இன்னொரு கல்யாணம் பண்ண மாட்டேன். என் பிள்ளையோட சந்தோசமா, நிம்மதியா, உன் வயிறு எரியுற மாதிரி வாழுவேன். அப்படியே மீறி ரெண்டாவது கல்யாணம் பண்ணாலும், அவங்க கிட்ட உன்னையும் ஹரியையும் காட்டி, இப்படித்தான் என் முதல் கல்யாண வாழ்க்கை நாசமா போச்சு.. இதுக்கும் மேல உங்களுக்கு என் மேல பாசம் இருந்தா, கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்பேன். ரெண்டுல எது நடந்தாலும் நான் ரொம்ப ஹாப்பி”

சந்திராவிற்கு இந்த அவமானம் சுத்தமாக பிடிக்கவில்லை. எங்கு எப்படிப் போனாலும், வருணிகா வெற்றி பெறுவது, அவளை பைத்தியமாக்கி இருந்தது.

“இப்போ எதுக்கு வந்தேன் தெரியுமா? என் கிட்ட நீங்க ஊர் சுத்துன போட்டோ.. வீடியோ எல்லாம் இருக்கு. உனக்கு உன் அப்பா மாப்பிள்ளை பார்ப்பாருல? பார்க்கட்டும். பார்த்து கல்யாணம் நடக்கும் போது, மணமேடையில, உன் புருஷனுக்கு இந்த வீடியோவ போட்டுக்காட்டி.. என் புருஷன் கூட இவ சுத்துறா.. அதை என்னனு கேளுங்கனு பஞ்சாயத்து வைக்கிறேன். அப்புறம் எப்படி நீ நிம்மதியா கல்யாணம் பண்ணிட்டு வாழுறனு பார்க்குறேன்.”

“ஏய்..”

“அடங்குடி.. என் ஃபோன ஹேக் பண்ணுறியா? அந்த போன தூக்கி கடாசிட்டு வேற வாங்கிட்டேன். இப்போ வீடியோ எல்லாம் பத்திரமா இருக்கு. நீ என்ன பண்ணுற.. சட்டு புட்டுனு மாப்பிள்ளைய பார்த்து கல்யாணத்துக்கு ரெடி ஆகுற. அப்ப தான், நான் ரிவென்ஜ் எடுக்க முடியும். உன்னை மாதிரியே, கல்யாணமான மேடையில அழுது டிராமா எல்லாம் பண்ணனும். அப்புறம் உன்னை நல்லா வாழ விடாம பண்ணனும். நிறைய வேலை இருக்குமா.. சீக்கிரம் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணு என்ன? இதச் சொல்ல தான் வந்தேன். வரட்டா?”

வருணிகா சிரித்து விட்டு செல்ல, சந்திரா அதிர்ச்சியின் உட்சத்தில் நின்றாள். வருணிகாவை பழி வாங்க‌ நினைத்து, தன் வாழ்க்கைக்கு குழி பறித்துக் கொண்டது அப்போது தான் புரிந்தது. வருணிகா இது போன்றெல்லாம் நினைப்பவள் அல்ல. இப்போது தன்னைவிட மோசமாக மாறி விட்டாளே…! தன் வாழ்க்கையை அழித்து, காலம் முழுவதும் திருமணம் செய்ய விடாமல் செய்து விடுவாளோ? இல்லை…! அவளுக்கு காலம் முழுவதும் உறுத்தலோடு வாழவேண்டும் என்று தான் கொடுத்த வலியை, தனக்கு திருப்பிக் கொடுக்க முடிவு செய்து விட்டாள்.

முதல் முறையாக, தான் செய்த செயலின் விபரீதம் புரிந்து பயந்து நடுங்கினாள். வியர்வை வழிந்தது. இது மட்டும் அவளது தந்தைக்கு தெரிந்தது என்றால், யோசிக்காமல் அவளை கொன்று விடுவார். அவ்வளவு கோபம் வந்து விடும் ராஜராஜனுக்கு.

முகமெல்லாம் வியர்த்து வடிய, பயத்தில் பாதி மயக்கத்தோடு அமர்ந்து இருந்தாள் சந்திரா. எவ்வளவு மணி நேரம் கடந்ததோ…! லேகா வந்து சேர்ந்தார்.

காலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு உள்ளே நடந்து வந்தவர், சந்திராவை பார்த்தார்.

“அடியே..”

லேகா அலறியதில் தூக்கி வாரிப்போட நிமிர்ந்தாள்.

“என்ன நடு வீட்டுல உட்கார்ந்து கனவு கண்டுட்டு இருக்க?”

“இல்ல அத்த”

“எந்திரி.. போய் தண்ணி கொண்டுவா”

“ம்ம்” என்று எழுந்து சென்று கொண்டு வந்து கொடுத்தாள்.

“அந்த வருணிகா வந்தாளாமே.. என்னவாம்? என் புருஷன விட்டுருனு கெஞ்சிட்டு போனாளா?”

லேகா கேவலமாக ஒரு சிரிப்பை சிரித்துக் கேட்டார். மற்ற எல்லா நேரங்களிலும், அத்தையை ஆராதிக்கவும், அவரது இது போன்ற வில்லத்தனங்களில் உடன் இருக்கவும் செய்த சந்திரா, இன்று அவரை வினோதமாக பார்த்தாள்.

“அவள இன்னும் நல்லா அழ விடு. அதான் அவளுக்கு கிடைக்கிற தண்டனை.. அவ அப்பனுக்கு கிடைக்கிற தண்டனை. என் கால் சரியா இல்லனு, ஊர் முன்னாடி அசிங்கப்படுத்தி, சாகுற அளவு கொண்டு வந்துட்டான். அவனும் அவன் மகளும் நிம்மதியா வாழவே கூடாது”

லேகா எப்போதும் பேசும் பேச்சு தான். இதைக்கேட்டு, சந்திரா லேகாவுக்காக உருகி விடுவாள். இன்று மட்டும் அசையாமல் கல்லைப்போன்று நின்று விட்டாள்.

“என்னடி பார்வை?”

“ஒன்னும் இல்ல அத்த”

வேகமாக திரும்பி அறைக்குள் சென்று விட்டாள். இவ்வளவு நாள் சரியாகத்தெரிந்தது எல்லாம், இன்று தவறாக தெரிந்தது. எவ்வளவு விசயங்களை செய்து இருக்கிறாள்!. அதை எல்லாம் வருணிகா தனக்கு திருப்பிக் கொடுத்தால் தாங்க முடியுமா? நெஞ்சம் நடுங்கியது.

“நோ நோ அப்படி எதுவும் நடக்கக்கூடாது. என்னை யாராவது காப்பாத்துங்க.. கடவுளே.. காப்பாத்து” என்று தன்னை அறியாமல், கடவுளை சரணடைந்தாள்.

____

வருணிகா, சந்திராவுடன் பேசி விட்டு வந்ததை எல்லாம், ஹரிஹரனுக்கு அனுப்பி வைத்தாள். இருவரும் சென்னையை விட்டு வந்ததிலிருந்து இன்று வரை பேசவில்லை. இன்று சந்திராவிடம் பேசியதை பதிவு செய்து இருந்தாள். அதை அவனிடம் அனுப்பி விட்டு, வேறு எதுவும் பேசவில்லை.

வளைகாப்பு நாளும் வந்தது. அவள் அலங்கார பொம்மையாக அமர்ந்து இருக்க, எல்லோரும் சந்தோசமாக வேலைகளை பார்த்தனர். சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் ஹரிஹரனை கேட்க, யாருக்கும் தெளிவான பதிலைச் சொல்லவில்லை.

வளைகாப்பு வருணிகாவின் வீட்டில் நடப்பது ஒரு பக்க பேச்சாக இருக்க, ஹரிஹரன் வராதது இன்னொரு பேச்சாக இருந்தது. குடும்பத்தினர் யாருமே, யார் கேள்விக்கும் பதிலை விளக்காமல், சமாளித்து வைத்தனர்.

நல்ல நேரம் ஆரம்பிக்கும் போது, ஹரிஹரன் வந்து விட்டான். வந்தவனை பெயருக்கு பெரியவர்கள், “வா” என்று அழைத்து வைத்தனர்.

அவனோ அதைக்கூட கவனிக்காமல், மனைவியை பார்த்தான். பட்டுச்சேலையில் தலை நிறைய பூவும், முகம் நிறைய சிரிப்புமாக அமர்ந்து இருந்தாள்‌. அவளது ஒரு கை, தன் பானை வயிற்றை ஆதரவாக பிடித்து இருந்தது. ஏழு மாதக்கருவின் வளர்ச்சியில், அவளை பார்க்கவே அம்சமாக இருந்தது.

அத்தனை அழகையும், அவளது விலைமதிப்பில்லாத அன்பையும், தொலைத்து விட்டு நிற்கும் அவனது துரதிர்ஷ்டத்தை என்ன சொல்வது?

சாரதா வந்து ஹரிஹரனை அழைத்தாள்.

“போய் ட்ரஸ்ஸ மாத்திக்க. வாங்கி வச்சுருக்காங்க” என்று யாரோ போல் பேசினாள்.

அண்ணனின் முகம் பார்க்க பிடிக்காமல் அவள் நின்ற தோரணை, ஹரிஹரனை ஆயிரம் முறை அடித்தது போல் இருந்தது.

வேகமாக சென்று உடை மாற்றிக் கொண்டு வந்தான். எல்லோரும் வளையல் போட்டு விட, அவனையும் போட அழைத்தனர். அவனும் வந்து நின்று வளையல்களை எடுத்தான்.

வருணிகா கையை நீட்டினாள். பொங்கி வந்த வேதனையை விழுங்கிக் கொண்டு, அவள் கையில் வளையலை மாட்டி விட்டான். அவனை மீறி, கண்ணீர் வந்து அவள் கையை நனைத்தது. அதை அவள் கவனித்தாளா என்று கூட தெரியவில்லை. அசையாமல் அமர்ந்து இருந்தாள். அவன் தான் அவசரமாக வளையலை மாட்டி விட்டு, யார் கண்ணிலும் படாமல் தள்ளிச் சென்று விட்டான்.

விழா நல்ல முறையில் முடிந்து, உறவினர்கள் எல்லோரும் கிளம்பி விட, குடும்பத்தினர் மட்டும் அமர்ந்து இருந்தனர். சாரதா, நகுல் அவர்களது குடும்பமும் கிளம்பிவிட, அவர்களை அனுப்பி விட்டு வந்தார் ஏகாம்பரம்.

இப்போது மிஞ்சி இருந்தது, இருவீட்டு பெரியவர்களும், மேனகா பூபதியும் மட்டும் தான்.

வருணிகா அறைக்குள் இருந்தாள். ஹரிஹரன் வீட்டுக்கு வெளியே நின்று இருந்தான்.

“இப்படியே இவங்கள விடுறதா? வருணி வேற டைவர்ஸ் வாங்கியே தீருவேன்னு சொல்லிட்டு இருக்கா” என்று தெய்வா வருத்தமாக கூற, “அவ மேல தப்பு இல்லையே சம்பந்தி.. நான் பெத்து வளர்த்தது சரியில்லாம போச்சே” என்று அனுராதாவும் வருத்தப்பட்டார்.

“சரி தான். அதுக்காக இப்படியே பிரிஞ்சு போங்கனு எப்படி விடுறது? பிள்ளை வேற பிறக்கப்போகுது. பிள்ளைக்காவாது பார்க்க வேணாமா?”

“வேணாம்.” என்று ஹரிஹரன் வந்து நின்றான்.

வந்ததிலிருந்து யாரிடமும் பேசாதவன், இப்போது வாயைத்திறந்தான். அவனது தோற்றம் ரொம்பவுமே மாறி இருந்தது. வருணிகா வந்த பிறகு, தனிமையும் குற்ற உணர்வும் அவனைப்போட்டு படுத்தி எடுத்து இருந்தது. பாதியாகி நின்றவனை பார்த்து பாவமாக இருந்தாலும், அவன் செய்த செயல் யாரையும் எதுவும் பேசவிடவில்லை.

“நான் பண்ணது தப்பு.. வருணிக்கும் உங்களுக்கும் நான் பண்ணது துரோகம். அதுக்கு என்னை மன்னிச்சுடுங்க. திரும்ப வருணி கூட சேர்ந்து வாழ முடியாது. அதை அவளால தாங்க முடியாது. என்னை தினமும் பார்க்குற தண்டனை அவளுக்கு வேணாம். அவள விட்டு பிரியுறது தான் எனக்கு தண்டனை. அவளுக்கும் நல்லது”

மனதை திடப்படுத்திக் கொண்டு அவன் எடுத்த முடிவை கூறி விட, வருணிகா வெளியே வந்தாள். அவன் பேசியதை எல்லாம் கேட்டிருந்தாள். அவள் அனுப்பிய பதிவை கேட்டப்பின்பு, இந்த முடிவுக்குத் தான் வருவான் என்று அவள் எதிர் பார்த்து இருந்தாள்.

பெரியவர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க, “இந்த பேச்ச இதோட விடுங்க ப்ளீஸ். நானே எல்லாத்தையும் பார்த்துக்குறேன். எனக்கு இப்போ இருக்குற ஒரே எண்ணம்.. என் புள்ளைய நல்லபடியா பெத்து எடுக்கனும். மத்தத விடுங்க” என்று கூறி, வருணிகா முடித்து விட்டாள்.

மற்றவர்களும், விசயத்தை ஆறப்போடுவோம் என்று முடிவு செய்தனர்.

ஆனால், வருணிகா ஆறப்போடவில்லை. அன்று இரவு வருணிகாவின் அறைக்குள் ஹரிஹரன் வந்தான். இன்னும் சில நிமிடங்களில், அவன் சென்னை கிளம்பி விடுவான். அதற்கு முன் அவளிடம் பேசி மன்னிப்பு கேட்க வந்தான்.

பேசினான். மன்னிப்பும் கேட்டான். அத்தனையும் பொறுமையாக கேட்டுக் கொண்டவள், தன்னிடமிருந்த விவகரத்து பத்திரத்தை நீட்டினாள். கையெழுத்துக் கேட்டு.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்