Loading

முன்பு நடந்தவைகள்…

ஹரிஹரன் வருணிகாவிற்கு திருமணம் முடிந்து, ஹரிஹரன் திருச்சி சென்று இருந்தான். முதல் இரண்டு நாட்கள், வேலையைப் பார்த்துக் கொண்டும், வீட்டுக்கு வந்தால் மனைவியோடு பேசுவதுமாக, பொழுது ஓடியது.

அவன் தங்கி இருக்கும் வீட்டில், அவனோடு வேறு ஒருவனும் தங்கி இருந்தான். அதனால் தான், உடனே வருணிகாவை இங்கு அழைத்து வரமுடியவில்லை

மூன்றாம் நாள் மதிய உணவு நேரம்..

வருணிகாவின் குறுஞ்செய்திக்கு பதில் அளித்து விட்டு, சந்தோசமாக கேண்டீன் உணவை வாங்கிக் கொண்டு அமர்ந்தான்.

“புது மாப்பிள்ளை கேன்டீன் சாப்பாடு சாப்புடுறியே? உன் வொய்ஃப் இங்க இல்லையா?” என்று கேட்டபடி அவன் நண்பன் வந்தான்.

“இல்லடா. சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கலாம்னு இருக்கேன்ல. நேரா சென்னை போயிடலாம்னு இருக்கேன்”

“ஓகே. ஓகே”

“கேண்டீன் ரொம்ப கூட்டமா இருக்குல?”

“ஆமா. இன்டர்வியூ நடக்குதுல. அதுக்கு தான்”

“ஓஓ.. இன்னைக்குத்தானா?”

பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்க, “ஹரி உன்னை ஒரு பொண்ணு பார்த்துட்டே இருக்காடா” என்றான்.

“யாரு?”

“அங்க காபி கவுண்டர் பக்கத்துல நிக்கிறா பாரு”

திரும்பிப் பார்த்தான். ஒரு பெண் நின்று இருந்தாள். அவனைப் பார்த்தவள், பேசுவதா? வேண்டாமா? என்று தயங்கி நிற்பது போல் தெரிந்தது.

“தெரிஞ்ச பொண்ணா?”

“தெரியலயே. ஒரு வேளை சொந்தமா இருக்கும். பேசுனா பார்ப்பேன். எனக்கு முகம் நினைவுல இல்ல” என்றதோடு ஹரிஹரன் திரும்பிக் கொண்டான்.

சாப்பாடு முடிந்ததும், தேனீர் குடிக்க மிகவும் பிடிக்கும் ஹரிஹரனுக்கு. அதனால் தேனீர் வாங்க நிற்க, “ஒரு நிமிஷம்” என்று குரல் கேட்டது.

ஹரிஹரன் திரும்பாமல் நின்றான்.

“உங்களத்தான்.. ஹரிஹரன்” என்று மெல்லிய குரல் கேட்க, திரும்பிப் பார்த்தான்.

அந்தப்பெண் தான்.

“எஸ்?”

“நீங்க.. வருணிகா..”

“எஸ் வருணிகா என் வொய்ஃப் தான். நீங்க?”

“நான் வருணிகா ஃப்ரண்ட் சந்திரா”

“ஓஓ..”

அவனுக்கு அவளைத் தெரியவில்லை. மறந்து போயிருந்தான். திருமண நாளில் எத்தனையோ புது சொந்தங்களை, மனிதர்களை பார்த்திருந்தான். எல்லோரின் முகமும் நினைவில் இருந்துவிடுமா‌ என்ன?

“மேரேஜ்ல கூட என்னைப் பார்த்தீங்களே?”

“ஓ.. சாரிங்க. சரியா ஞாபகம் இல்ல”

அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தேனீர் கொடுக்கப்பட, மற்றவர்களுக்கு இடைஞ்சல் தராமல் நகர்ந்து கொண்டான். சந்திராவும் அவன் பின்னால் வந்து விட்டாள். சற்று தள்ளி நின்று கொண்டனர்.

“வருணிகா நல்லா இருக்காளா?”

“ஓஓ.. நல்லா இருக்காளே” என்று முகம் மலரக்கூறினான்.

திருமணமாகி சில வருடங்களுக்கு பிறகு, எதாவது ஒரு பெண், தன் மனைவியை நினைவு படுத்தினால் தான் கோபம் வரும். திருமணமான புதிதில் மனைவியைப் பற்றி பேசினால், முகம் மலரத்தான் செய்யும். அவனது முகமலர்ச்சியை, சந்திரா புரியாத பார்வையில் உள்வாங்கிக் கொண்டாள்.

“அது வந்து.. உங்களுக்கு என்னை ஞாபகம் இல்லையா? நான் கல்யாணத்தப்போ.. அழுதுட்டு.. ரூம்ல” என்று விட்டு விட்டுப் பேச, அவனுக்கு சட்டென நினைவு வந்துவிட்டது.

“எஸ் எஸ். அன்னைக்கு எதோ பிரச்சனையில இருந்தீங்க. இப்போ சரியாகிச்சா?” என்று வினவினான்.

மீண்டும் ஒரு மாதிரி பார்த்து விட்டு, தலையாட்டினாள். அவள் எதோ சொல்ல வருவதும், பிறகு தயங்குவதும், அவனுக்கு புரிந்தது. ஆனால், அதைக் கேட்கத் தோன்றவில்லை.

“இங்க இன்டர்வியூக்கு வந்தீங்களா?”

“ஆமா.”

“நல்லா பண்ணிருக்கீங்களா?”

“தெரியலயே”

“ஓகே. ஹோப் விடாதீங்க. பெஸ்ட் ஆஃப் லக்”

அவள் சந்தோசமாக தலையாட்ட, தேனீரை குடித்து முடித்து விட்டு, “நான் கிளம்புறேன்” என்றவன் நடக்க ஆரம்பித்து விட்டான்.

சந்திராவிடம் அதற்கு மேல் பேச எதுவும் இருப்பது போல், அவனுக்குத் தோன்றவில்லை. மனைவியின் தோழி அவ்வளவே.

அன்று வேலையை முடித்து வீட்டிற்கு வந்தவனுக்கு, இன்னும் நிறைய வேலைகள் பாக்கி இருக்க, வருணிகாவிடம் கூட அறைகுறையாக பேசி விட்டு, வேலையை பார்க்க அமர்ந்து விட்டான்.

அடுத்த நாள், மீண்டும் உணவு வேலையில் சந்திராவை சந்தித்தான். இப்போது, தைரியமாக அவன் முன்னால் வந்து அமர்ந்து விட்டாள்.

“இன்னைக்கு எப்படிப்போச்சு? குரூப் டிஸ்கஸன்?”

“சூப்பரா போச்சு. வேலை கிடைக்கும்னு நம்பிக்கை வந்துடுச்சு”

“ஓ.. குட்”

“அது..”

“என்ன சொல்லுங்க”

“சாரி.. அன்னைக்கு என் அத்த கோபப்பட்டு எதெதோ பேசிட்டாங்க”

“என்னைக்கு?” என்று புரியாமல் யோசித்தான்.

அவள் தயக்கத்தோடு பார்க்க, மீண்டும் அவனுக்கு நினைவு வந்து விட்டது. அன்று கைபேசியில் பேசியது.

“நீங்களா அது..? மறந்துட்டேன்”

இதைக்கேட்டதும் அவள் முகம் சுருங்கி விட்டது. உடனே சமாளித்து புன்னகைத்தாள்.

“அத்த கொஞ்சம் டென்சன் ஆகி பேசிட்டாங்க. அதான்.. சாரி”

“பரவாயில்ல‌.” என்றவன் வேறு எதுவும் பேசாமல் கிளம்பி விட்டான்.

ஆனால் அவள் விடவில்லை. அடுத்த நாளும் அவன் முன்னால் வந்து நின்றாள்.

அந்த நிறுவனத்தில் மூன்று நாட்களாக நேர்முகத்தேர்வு நடந்தது. நூறுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் எல்லோரையும் ஒரே நாளில் கணித்து, தேர்வு செய்ய முடியாது. இதில் பெரிய மனிதர்களின் பரிந்துரையோடு வந்தவர்கள் வேறு. தகுதியானவர்களையும் கண்டு பிடிக்க வேண்டும். அதனால் மூன்று நாட்களாக பிரித்து இருந்தனர்.

சந்திரா இரண்டு தேர்விலும் வெற்றி பெற்றதால், மூன்றாம் நாளும் வந்து இருந்தாள். இப்போது, அவள் மேல், ஹரிஹரனுக்கு நேற்று இருந்த வருத்தம் இல்லை. எதோ தெரிந்தவன் நான் என்பதால், தேடி வந்து பேசுகிறாள் என்று நினைத்துக் கொண்டான்.

அன்று அவள் அவனிடம் இந்த அலுவலகத்தை பற்றி விசாரிக்க, அவனும் பொதுவாக சொல்லிக் கொண்டிருந்தான். சில நிமிடங்களில் அவன் அமைதியாக சாப்பிட, அவள் கைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நான் டீ வாங்கிட்டு வர்ரேன்.” என்றவள், கைபேசியை அப்படியே வைத்து விட்டு எழுந்து சென்று விட்டாள்.

அதில் அடுத்தடுத்து செய்திகள் வந்து விழ, ஹரிஹரனின் கண்கள் தானாக அந்த கைபேசியில் விழுந்தது. அதில் பெயரைப் பார்த்து புருவம் சுருக்கினான்.

வருணிகாவின் பெயர். அவள் தான் எதோ செய்தி அனுப்பி இருந்தாள்.

“அவருக்கு லட்டு பிடிக்கும்” என்று சந்திரா அனுப்பி இருக்க, “இன்னும் மறக்கலையா நீ? எல்லாத்தையும் ஞாபகம் வச்சுட்டு சுத்தாத. உன் மனசுல அவர் இருக்கது எனக்குப் பிடிக்கல.” என்று சில கோப இமோஜிகளோடு அனுப்பி இருந்தாள்.

அதற்கு மேல் இருக்கும் செய்திகளை பார்ப்பதற்கு முன், சந்திரா வந்து கைபேசியை எடுத்துக் கொண்டாள்.

“மறந்து வச்சுட்டேன்” என்று கூறி விட்டு நடந்தாள்.

அவன் வருணிகாவின் வார்த்தைகளை யோசித்துக் கொண்டிருந்தான்.

சாப்பிட்டு விட்டு வேலையை கவனிக்கச் சென்று விட்டான்.

அதன் பின், திருச்சியில் வீட்டுக்கு வரும் போது, ஹரிஹரனுக்காக லட்டு காத்திருந்தது. அவனுக்குத்தான் அது பிடிக்கும்.

‘இதைப்பற்றித்தான் சந்திராவிடம் பேசினாளா? ஏன்?’ முதலில் எதுவும் தெளிவாகப் புரியவில்லை.

‘தனக்குப்பிடித்ததை சந்திரா எப்படிச் சொல்ல முடியும்? அதை பற்றி கேட்டு வருணிகா ஏன் கோபிக்கிறாள்?’

புரியாமல் விழித்தான்.

‘அவளிடம் கேட்டுத்தான் வருணிகா லட்டு செய்தாளா?’

அதை உறுதிபடுத்திக் கொள்ள கேட்க, வருணிகாவோ கடையில் வாங்கி இருந்ததாக சொல்லி விட்டாள்.

ஒன்றும் சரியாக விளங்காமல், மனைவியிடம் எதையும் கேட்கவும் தோன்றவில்லை. பிரிவு வேறு மற்றவர்களை பற்றி பேசவும் விடவில்லை. அவர்களுக்கான தனிமையை கொண்டாடினர்.

அவர்கள் சென்னை வரும் வரை, மீண்டும் சந்திராவின் நினைப்பு அவனுக்கு வரவேயில்லை. சென்னை அலுவலகத்தில் மீண்டும் சந்திரா வந்து சேர்ந்தாள்.

அவனது நிறுவனத்தில் வேலை கிடைத்து இருந்தது. அதுவும் சென்னை கிளையில் அவனிருக்கும் பகுதியில் தான் கிடைத்தது.

அவளாகவே அவனைத்தேடி வந்து விசயத்தைச் சொல்லி, வாழ்த்தும் பெற்றுக் கொண்டு சென்றாள்.

அதன் பின்பு, தொட்டதெற்கெல்லாம் அவன் முன்னால் வந்து நிற்க ஆரம்பித்தாள். அவனோடு அதிக நேரம் செலவழித்தாள். முதலில் அவளை நிறையவே தவிர்த்தான். ஆனால் அவள் விடவில்லை.

“எனக்கு இங்க யாருமே இல்ல. தனியா தங்கி இருக்கேன். யாரை பார்த்தாலும் நம்பி பழகவும் தோணல” என்று பயந்து போய் கூறவும், பாவமாகத்தான் இருந்தது.

ஒரு வாரம் கடந்து இருந்த நிலையில், அவள் அவனிடம் ஒரு கோரிக்கை வைத்தாள்.

“நான் இங்க வேலைபார்க்குறத வருணிகா கிட்ட சொல்லாதீங்க ப்ளீஸ்”

“ஏன்?” என்று யோசனையாக கேட்டான்.

இது வரை அவன் சொல்லவில்லை தான். அவனுக்கு சொல்லத்தோன்றவும் இல்லை. வீட்டுக்குச் சென்றால், யாருமில்லாமல் மனைவியுடன் கிடைத்திருக்கும் தனிமையை கொண்டாடவே, அவனுக்கு சரியாக இருந்தது. சந்திரா அவனுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. அதனால், அவளை பற்றிய எண்ணங்களை மறந்து தான் போய் விடுவான்.

“அது.. வருணிகா வருத்தப்படுவா ப்ளீஸ்”

“அவ எதுக்கு வருத்தப்படனும்?”

“நான் படிச்சுட்டு வேலை பார்க்குறேன். அவ பார்க்கலலைல.. அதான்” என்று கூறியதை, அவன் நம்பத்தயாராக இல்லை.

“அவ அப்படி எல்லாம் நினைக்கிற ஆளு இல்ல. வேலைக்குப்போகனும்னு நினைச்சுருந்தா, கண்டிப்பா நான் அவள அனுப்புவேன். நீங்க சொல்லுற மாதிரி இல்ல”

சந்திரா தலை குனிந்து கொண்டாள்.

“என்ன ரீசன்னு நீங்களா சொன்னா சரி. இல்லனா.. இட்ஸ் ஓகே. நீங்க கேட்கலனாலும் அவ கிட்ட சொல்ல மாட்டேன். ஏன்னா.. வீட்டுக்குப்போனதும் உங்கள மட்டும் இல்ல.. எல்லாத்தையும் மறந்துடுவேன்.‌ வருணி மட்டும் தான் என்‌ நினைப்புல இருப்பா”

வேண்டுமென்றே சொல்லி விட்டுச் சென்றான். சந்திரா வருணிகாவை பொறாமை பிடித்தவள் என்பது போல் சொன்னதை, அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இப்படி வெளிப்படையாக அவளிடம் சொல்லி, தூண்டி விட்டதை அறியாமல் அவன் சென்று விட, அடுத்த இரண்டு நாட்கள் சந்திரா அவனிடம் பேசவில்லை. அவனும் அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஆனால் அது இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை. மூன்றாம் நாள் அவளே தேடி வந்து, விசயத்தைச் சொல்லி விட்டாள்.

“நீங்க வருணி கிட்ட சொல்லல தான?”

“அது எதுக்கு உங்களுக்கு?”

“ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. வருணி இதை கேட்டா சும்மா இருக்க மாட்டா”

“என்னங்க உங்க பிரச்சனை?”

“அவ இன்செக்யூர்டா ஃபீல் பண்ணுவா. வேணாம்”

“வாட்?”

“அது.. அது..”

“அவ ஏன் அப்படி ஃபீல் பண்ணனும்? புரியல. தெளிவா பேசுறீங்களா?”

“இல்ல ஏதோ உளறிட்டேன். விடுங்க”

“ஓகே. இப்பவே வருணிக்கு கால் பண்ணி சொல்லிடுறேன்” என்று வேகமாக கைபேசியை எடுக்க, அவன் கையைப்பிடித்துக் கொண்டாள்.

“ப்ளீஸ் ப்ளீஸ் வேணாம்”

“கைய எடுங்க”

“கால் பண்ணாதீங்க கரன்.. வேணாம். நான் சொல்லிடுறேன். “

“ஓகே.. கைய விடுங்க”

கையை விட்டதும், அவன் கைபேசியை வைத்து விட்டான். இரண்டு நொடி தரையைப் பார்த்தவள், “உங்கள எனக்கு காலேஜ்ல இருந்தே தெரியும். நான்.. உங்கள.. அது.. நான்…” என்று தடுமாறினாள்.

“சொல்லுங்க”

“நான் உங்கள லவ் பண்ணுறேன். அது வருணிக்கு தெரியும். இப்போ இதை அவ கேட்டா, இன்செக்யூர்ட்டா ஃபீல் பண்ணுவா”

“என்ன சொல்லுறீங்க நீங்க?”

“என்னை நம்புங்க. நான் வருணி நல்லா இருக்கனும்னு தான், எல்லாத்தையும் தியாகம் பண்ணேன். திரும்ப, அவ கோபத்த என்னால தாங்க முடியாது” எனும் போதே சந்திராவிற்கு கண்ணீர் வந்து விட்டது.

“ஓகே அழாதீங்க. இதைப்பத்தி இன்னொரு நாள் பேசலாம்.‌ ப்ரேக் டைம் முடிஞ்சுடுச்சு”

அவள் கண்ணைத்துடைத்துக் கொள்ள, அவன் எழுந்து சென்று விட்டான். அடுத்த நாள் வந்து மன்னிப்புக் கேட்டாள். அவன் விசயத்தைக் கேட்டான். முதலில் தயங்கியவள், பிறகு மளமளவென ஒப்பித்தாள்.

சந்திரா ஹரிஹரனை கல்லூரியில் படிக்கும் போதிலிருந்து காதலித்து இருக்கிறாள். படிப்பு முடிந்து, ஒரு வேலையில் சேர்ந்த பின்பு தான், அவனிடம் தன் காதலைச் சொல்ல வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தாள். ஆனால், அதற்குள் அவனுக்கும் வருணிகாவுக்கும் திருமணம் நிச்சயமானது.

இதைக்கேட்டு சந்திரா பதறி விட, வருணிகா சந்திராவை மிரட்டினாள். ஹரிஹரனை வருணிகாவிற்கு பிடித்து விட்டது. அதே போல், ஹரிஹரனுக்கும் வருணிகாவைப் பிடித்து விட்டது.

‘உன் ஒருதலைக்காதலை மறந்து விட்டு, வேறு வேலையைப்பார். நான் ஹரிஹரனை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். என் வாழ்வில் குறுக்கே வராதே’ என்று வருணிகா கூறி விட்டாள். அதனால் சந்திரா மனமுடைந்து போனாள்.

வருணிகாவிற்காக, சந்திரா தன் காதலை மறைத்து விட்டாள். இருவருக்கும் திருமணம் நடந்ததும், தனியாக அழுது கொண்டிருந்தாள். அவளது காதல் விவகாரம், அவளுடைய அத்தை லேகாவிற்கு மட்டுமே தெரியும்.

திருமணத்தன்று தன் அத்தையிடம் தான் பேசி அழுது கொண்டிருந்தாள். அடுத்த நாள் கூட, அவளுடைய அத்தை அதனால் தான் அப்படிப்பேசியது.

காதலித்ததற்கு ஆதாரமாக, ஹரிஹரனின் கல்லூரி கால புகைப்படங்கள், சந்திராவின் கைபேசியில் இருந்தது. அதோடு, வருணிகாவிடம் ஒரு முறை சண்டை போட்ட குறுஞ்செய்திகளை காட்டினாள்.

“நான் உங்கள விட்டுக் கொடுத்துட்டேன். திரும்ப இங்க ஒன்னா ஒரே ஆபிஸ்ல வொர்க். இது எதிர் பார்க்காம கிடைச்சது. எனக்கு வேலையை விட முடியாது. இந்த வேலை தான் எனக்கு எல்லாம். வருணிகா இதை விடச் சொன்னா, விட்டுட்டுப் போகனும். ப்ளீஸ் அப்படி ஒரு நிலைமைக்கு என்னை தள்ளிடாதீங்க”

சந்திரா கண்ணீரோடு கை கூப்ப, ஹரிஹரன் அதிர்ச்சியில் இருந்தான். வருணிகாவின் இன்னொரு முகம் அவனை அதிர வைத்தது.

‘இப்படி ஒருத்தியிடம் நடந்து கொள்பவளா தன் மனைவி?’

சந்திராவிடம், சொல்ல மாட்டேன் என்று வாக்குக் கொடுத்து விட்டான். ஆனால், அவன் மனதில் மனைவியின் மீது இருந்த காதல் எல்லாம், காணாமல் போக ஆரம்பித்தது. அது காதல் தானா? அவனுக்கே பதில் தெரியாது என்று நினைக்கிறேன்.

வருணிகாவிடமிருந்து அவன் விலக விலக, அந்த விலகளை எல்லாம் சந்திரா நிரப்பினாள். அவளது குடும்பத்தைப் பற்றிக் கூறினாள்.

கால் சரியில்லாத அத்தை. அத்தையைப் பிடிக்காமல், பெற்ற மகளையும் தூக்கி போட்டு விட்டு, தந்தையை பிரிந்து சென்ற அன்னை. மனைவி சென்ற பின்பு, மகளை மறந்து விட்டு, வேறு குடும்பத்தை தனியாக அமைத்துக் கொண்ட தந்தை. அவளை போற்றிப் பாதுக்காத்தது என்னவோ, அவளது அத்தையும், வேலைக்கார பருவதமும் தான்.

இப்போது, தந்தையில் சில சொற்பான சொத்துக்கள் கூட, தந்தை அவருடைய இன்னொரு குடும்பத்துக்கு எழுதி வைத்து விட்டார். சந்திரா சம்பாதித்து தான் வாழ வேண்டும். லேகாவையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

லேகா தேனியில் அண்ணன் வீட்டில் இருந்தாலும், சம்பளமில்லாத வேலையாள் போலவே இருக்கிறார். அவருடைய திருமணம் வாழ்வை பற்றிக்கூட, சந்திராவின் தந்தைக்கு கவலை இல்லை.

இப்படி ஒரு கதையை, அவள் நா தழுதழுக்க கூறி வைக்க, ஹரிஹரன் மனம் இளகி உருகி விட்டது.

இப்படி பல வகையில் துன்பங்கள் அனுபவித்தவள் தான், ஹரிஹரனை காதலிக்கிறாள். அவளது காதலை தான், தோழி என்ற பெயரில் வருணிகா பறித்து விட்டாள். சந்திராவிடம் இருந்த ஒரே சந்தோசத்தைக் கூட, வருணிகாவின் ஆசைக்காக விட்டுக் கொடுத்து விட்டாள் அவள்.

இந்த செய்திகள் எல்லாம், ஹரிஹரனுக்கு மனைவியின் மீது கோபத்தையும், சந்திராவின் மீது புது பாசத்தையும் உருவாக்கியது. சந்திரா வேறு, வேலையை நன்றாக செய்வதும், நல்ல பெயர் எடுப்பதும், எல்லோரிடமும் கலகலப்பாக பழகுவதும் என்று நாளுக்கு நாள் ஹரிஹரன் கண்ணை நிறைத்தாள்.

ஒரு நாள் திடீரென, “வாழ்த்துக்கள் கரன்” என்று கூறினாள்.

“எதுக்கு?” என்று கேட்க, அவள் ஒன்றுமே சொல்லவில்லை. கண்ணீரோடு பளபளத்த கண்ணை வேறு பக்கம் திருப்பிக் கொண்டவள், “சும்மா” என்று விட்டுச் சென்று விட்டாள்.

ஆனால் அடுத்த நாள் காலை, வருணிகா குழந்தை உருவாகி இருப்பதை சொன்னதும், விசயம் புரிந்து போனது. சந்திராவின் கண்ணீருக்கான அர்த்தமும் விளங்கியது.

அவள் வாழ வேண்டிய வாழ்வை, தோழி வாழ்கிறாள் என்ற அழுகை அது. அவளுக்கு முதலில் விசயத்தை சொல்லி விட்டு, மறுநாள் கணவனான தன்னிடம் சொல்ல வேண்டும் என்றால், வருணிகா எவ்வளவு கொடுமைக்காரியாக இருக்க வேண்டும்?

தான் தந்தையான சந்தோசம் கூட, அவனுக்கு இல்லாமல் போனது. அலுவலகம் சென்று சந்திராவிடம் பேச வேண்டும் கிளம்பினான்.

ஆனால், சந்திரா வரவில்லை. கைபேசியில் அழைக்க எடுக்கவில்லை. மதியம் மீண்டும் அழைக்க, எடுத்தாள். காய்ச்சல் என்று கூறி வைத்து விட்டாள்.

அவள் தங்கி இருக்கும் வீட்டின் முகவரியைக் கேட்டு, அங்கு சென்று விட்டான். சந்திரா தனியாக இருந்தாள். காய்ச்சலில், நிற்கவும் முடியாத நிலையில் இருந்தாள்.

“என் கூட இருக்க பொண்ணு நேத்து தான் ஊருக்குப்போனா.” என்று சந்திரா கூறினாள்.

உடனே அவளை அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு வந்தான். அவளை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சோதித்தனர்.

வருணிகாவை செக் அப் அழைத்து செல்ல வேண்டும் என்பதை மறந்து, சந்திராவுக்கு காவலாக மருத்துவமனையிலேயே இருந்து விட்டான். இரவெல்லாம் போராடிய பிறகு, காய்ச்சல் குறைந்து இருந்தது. அதிகாலை தான் வீட்டுக்கு வந்தான்.

அவனது குடும்பம் வந்து விட, அவர்கள் வருணிகாவை நன்றாகவே பார்த்துக் கொள்வார்கள். சந்திரா தான் தனியாக இருக்கிறாள் என்று, அவளைத்தேடி ஓடி விட்டான்.

அவளது காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. அவனை பார்ப்பதும், முகத்தை திருப்பி கண்ணீர் வடிப்பதுமாக சந்திரா இருக்க, அவள் கையைப்பிடித்துக் கொண்டான்.

“எதையும் நினைக்காத. ஃபீவர் குறையட்டும் பேசிக்கலாம்” என்று கூறி விட்டான்.

அன்று இரவு வெகுநேரம் இருந்து விட்டு தான் கிளம்பினான். மறுநாள் வருணிகாவை அழைத்துச் செல்வதாக தெய்வா கேட்க, அவன் மறுக்கவில்லை. சந்திரா இருக்கும் நிலையைப்பார்த்து, வருணிகாவின் மேல் தான் அவனுக்குக் கோபம் வந்தது. அவள் கண் முன்னால் இருந்தாலும், குழந்தையோடு இருப்பவளிடம் சண்டை போட்டு வைப்போம் என்று நினைத்தான்.

அதனாலே அவளை அனுப்ப சம்மதித்தான். அவளும் கிளம்பிச் சென்று விட்டாள்.

சந்திராவின் காய்ச்சல், வருவதும் போவதுமாக இருக்க, மருத்துவரை சந்தித்தான்.

“அவங்க மனசுல ஏதோ இருக்கு. அதை நினைச்சு வருத்தப்படுறாங்க. அதை போக்கப்பாருங்க”

“டாக்டர்.. அது கொஞ்சம் காம்ப்ளீகேட் ஆன விசயம்”

“அப்போ அவங்கள அதை மறக்க வைங்க. சந்தோசமா வேற எதையாவது நினைக்க வைங்க.‌ சரியாகிடுவாங்க”

மருத்துவர் கூறியதை கேட்டவன், சந்திராவை பெங்களூர் அழைத்தான். வேலையை பார்த்தது போல் ஆகும். கூடவே இடம் மாற்றத்தால், அவளது மனமும் மாறும்.

சந்திரா முதலில் யோசித்து விட்டு, “வேலைய கத்துக்கனும்ங்குறதுக்காக மட்டும் வர்ரேன்” என்று கூறி விட்டாள்.

இருவரும் பெங்களூர் சென்றனர். வேலை நேரம் போக, அவளை வெளியே அழைத்துக் கொண்டு சுற்றினான். அந்தத் தனிமையில், மனைவின் மீது இருந்த கோபமெல்லாம், சந்திராவின் பக்கம் அவன் மனதை சாய வைத்து விட்டது. யாருமில்லாமல் எப்போதும் சோகமாக இருக்கும் சந்திரா, அந்த நாட்களில் நன்றாக சிரித்தாள். அவனோடு ஒட்டிக் கொண்டே அலைந்தாள்.

இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கி இருந்தாலும், வெவ்வேறு அறையில் இருந்தனர். சந்திரா தன் காதலை காட்டினாளே தவிர, அவனிடம் தவறான எண்ணத்தோடு பழகவில்லை என்பதில், தெளிவாக இருந்தாள். அது தான், ஹரிஹரனை மொத்தமாக சாய்த்து விட்டது.

தனக்கு திருமணமாகி விட்டது. குழந்தை வேறு வரப்போகிறது என்ற அத்தனை விசயங்களையும், ஹரிஹரன் மறந்து விட்டான். மறக்க வைத்தாள் சந்திரா. அவளைப்போன்ற வாழ்க்கைத்துணை கிடைப்பதற்கு, கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற அளவில், ஹரிஹரனின் எண்ணங்களை மாற்றி வைத்தாள். தனக்கு அவள் மனைவியாக கிடைக்கவில்லையே என்று, அவன் ஏங்கும் நிலைக்குத் தள்ளி விட்டாள்.

அதன் விளைவு… சாரதாவின் வளைகாப்பு முடிந்து வீட்டுக்கு வந்த மனைவியை, அவனுக்குப் பிடிக்காமல் போனது. பேசும் போது எரிந்து விழுந்தான். வெறுப்பைக் காட்டினான். அவள் பேசாமல் இருந்தாலும், கண்டு கொள்ளாமல் ஒதுங்கினான்.

அலுவலகத்தில், சந்திரா கண்ணியமாக தள்ளி நிற்பாள். அந்த குணத்தில் கூட, அவன் தலைகுப்புற விழத்தான் செய்தான். அவன் மனம் சந்திராவை சுற்றிக் கொண்டே இருக்க, வருணிகாவின் மாற்றங்கள் எதுவும் கண்ணில் படவில்லை.

காலை சாப்பாடு, சந்திரா அதிகம் சாப்பிட மாட்டாள் என்று, பெங்களூரில் சுற்றும் போது தெரிந்தது. அதனால், தினமும் அவளை சாப்பிட வைக்கவென்று, ஹரிஹரன் அவளோடு தான் காலை உணவை உண்டான்.

மாலை உடனே வீட்டுக்குப்போகாமல், சந்திரா வெளியே செல்ல, அவளோடு அவனும் அலைந்தான். காதல் என்று உருகி வழியாமல், பேச்சாலும் செயலாலும் காட்டும் சந்திராவின் காதல், அவனை உருக வைத்தது. அந்த காதலை மனைவியிடம் தேடாமல், மற்றப்பெண்ணிடம் தேடுவது தவறு என்று, அவனுக்குச் சொல்ல யாருமில்லாமல் போனார்கள்.

நாட்கள் இப்படியே கடந்து விடும் என்று நினைக்கும் போதே, வருணிகா விசயத்தை நேரடியாக பேச ஆரம்பித்து விட்டாள். அவள் பேசியதும், அவளுக்குத் தெரிந்து விட்டதை கேட்டு குற்ற உணர்வு இல்லாமல் இல்லை. ஆனால், திமிரும் வீம்பும் அவனது தவறை உணரவிடாமல் மறைத்தது.

வருணிகா மருத்துவமனையில் இருப்பதை கேட்டதும், சந்திரா பதறிவிட்டாள்.

“இதுக்குத்தான் சொல்லாதீங்கனு சொன்னேன். அய்யோ குழந்தையோட இருக்காளே. நான் கிளம்பி வரவா?”

“வேணாம். வீட்டுக்கு வந்ததும்‌ சொல்லுறேன். அப்புறம் பார்க்கவா” என்று கூறி விட்டான்.

இதைக்கேட்டு வருணிகா சீறி விட்டாள். அதோடு அவனது காதலையும் கண்டு கொண்டாள். இதற்கு வருணிகா கோபப்படுவாள். சண்டை போடுவாள் என்று எதிர் பார்த்து, வழக்கம் போல் ஏமாந்தான். அவள் சிரித்து வைத்து விட்டாள் அல்லவா.

அடுத்ததாக, அவனது குடும்பத்தை அழைத்து, பஞ்சாயத்து வைத்து விட்டாள். அவர்களும் அவள் பக்கம் இருந்த தவறை விட்டு விட்டு, அவனைத்தான் குறை சொன்னார்கள்.

அதுவும், வருணிகா விவாகரத்து கேட்டதையும், அடித்ததையும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவன் இறுகிப்போய் நிற்க, யாருமே அவனைக் கண்டு கொள்ளவில்லை எல்லோரும் வருணிகாவை பார்க்க, விருட்டென கிளம்பி வெளியே சென்று விட்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்