“சோ.. என்ன சொல்லுறீங்க?”
“ஓகே ட்ரை பண்ணலாம்”
“உங்களுக்கு தைரியம் அதிகம் தெரியுமா?” என்று சிரிப்போடு சொன்னாள் ஜாக்ஷி.
“தெரியுமே..”
“எதுனாலும் ரிஸ்க் எடுக்க ரெடியா இருக்கீங்க. ஐம் இம்ப்ரெஸ்ட்”
புன்னகைத்து வைத்தான்.
“எப்ப ஜாயின் பண்ணுறீங்க?”
“நீங்களே டேட் சொல்லுங்க”
“உங்க ஃபேமிலி இஸ்யூ?”
“அத பத்தி இனி நான் கவலைப்படப்போறது இல்ல. ஆப்ரேஷன் முடிஞ்சது”
“அப்போ நாளைக்கு மார்னிங் நீங்க ஜாயின் பண்ணிக்கலாம்”
“இப்போதைக்கு உங்க பாட்டி வீட்டுல தான் இருக்கேன். அதுல எதுவும் பிரச்சனை இல்லையே?”
“நோ ப்ராப்ளம். பட் ஆஃபிஸ்ல சொல்லிக்க வேணாம். நான் உங்களுக்கு கொடுத்த வொர்க்குக்கு அது சரி வராது”
புரிதலுடன் தலையாட்டினான். காபி கோப்பை காலியானது.
வீரா எழ, ஜாக்ஷியும் எழுந்து கை நீட்டினாள்.
“வெல்கம் டூ அவர் கம்பெனி”
“தாங்க்யூ”
“உங்க டீடைல்ஸ் என் பிஏ கிட்ட கொடுத்துட்டு போங்க. மெயில் வரும்”
“ஓகே..” என்றவன் விடை பெற்றுச் சென்றான்.
உடனே பிஏவை அழைத்தவள், வேலையை செய்ய சொல்லி அனுப்பி வைத்தாள்.
*.*.*.*.*.*.
தாமரை நொடிக்கொரு முறை வாசலை பார்த்துக் கொண்டிருந்தார். கோபமாக சென்ற மகன் வருவானா? என்று.
கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவன் எங்கு தங்கியிருக்கிறான் என்ற விவரம் கூட தெரியாது. அவனை தொடர்பு கொள்ள முடியாமல் போனது தாமரையை மிகவும் பாதித்தது.
“பாட்டிக்கு போன் போட்டு கேட்கலாமா?” என்று அருள் கேட்க, தாமரை உடனே தலையாட்டினார்.
உடனே லட்சுமியை அழைத்து விசாரித்தனர்.
“எதாவது வேலையில இருப்பான். நீ உன் புருஷன பாரு. அவன விடு.” என்று விட்டார் லட்சுமி.
இரவு தூக்கம் தொலைந்து மகனுக்காக கண்ணீர் விட்ட தாயைப்பார்த்து, இரண்டு மகன்களுக்குமே வருத்தமாக தான் இருந்தது.
*.*.*.*.*.
ஜகதீஸ்வரியோடு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான் வீரா.
“வேற என்ன சொன்னா?”
“இவ்வளவு தான். அதோட கிளம்பிட்டேன்”
“நான் உன்னை ஒரு பாதுகாப்புக்கு அனுப்புனா, அவ ஸ்பையா மாத்திட்டாளா? இருக்கட்டும்.”
“இதுவும் நல்லது தான் பாட்டி. நிறைய பேரோட உண்மையான முகத்த தெரிஞ்சுக்கலாம். அது தான் உண்மையான பாதுகாப்பும் கூட”
“நீ எதுலயும் மாட்டிக்காம இருந்தா சரி” என்று கூற, புன்னகைத்து வைத்தான்.
“உன் அம்மா கிட்ட பேசலயா?”
“பிடிக்கல பாட்டி”
“ஏன்டா? அவளே ஹாஸ்பிடல்ல கஷ்டப்பட்டுட்டு இருக்கா..”
“தனியா ஒன்னும் இல்லையே. ரெண்டு பசங்க கூட தான இருக்காங்க?”
“உனக்கு ஏன் திடீர்னு இவ்வளவு கோபம் வருது? என்ன நடந்துச்சு?”
“சாப்பிட்டு அப்புறம் சொல்லுறேன்” என்றான்.
உணவு முடிந்ததும், இருவரும் இளைப்பாறுதலுக்காக அமர்ந்திருந்தனர்.
“சாப்பாடு பிடிச்சுருந்துச்சா? எனக்கு மாதிரி சமைக்காம, உனக்கு தனியா செய்ய சொன்னேன்” என்று கேட்க, “நல்லா இருந்துச்சு பாட்டி. சீக்கிரமா ஒரு வீடு தேடனும்.” என்றான்.
“இங்கயே தங்குனு கேட்பேன். ஆனா அது சரி வராது. நல்ல இடமா கிடைக்கிற வரை இங்க இரு”
தலையை ஆட்டியவன், சில நொடிகள் அமைதியாக இருந்து விட்டு, “அவங்களுக்கு நான் இருக்கது உறுத்தலா இருக்கு பாட்டி” என்றான்.
யாரிடமும் குடும்ப விசயத்தை பகிராதவன், ஜகதீஸ்வரியிடம் மட்டும் கொட்டினான். ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை.
“அப்படினு சொன்னாங்களா?”
“ம்ம்.. நேத்து காலையில.. நான் வெளிய இருக்கது தெரியாம பேசிட்டு இருந்தாங்க”
“என்ன சொன்னாங்க?”
“நான் வேலைய விட்டுட்டு வேற வேலை தேடிட்டு இருக்கேன்னு சொன்னேன். அவரு.. அதான் அருளோட அப்பா.. அவரு சொல்லுறாரு.. எனக்கு பொறுப்பே இல்லையாம். என்னைய பாட்டி பொறுப்பா வளர்க்கலையாம்”
“இங்க வேலைக்கு சேர போறத சொல்லலயா?”
“சொல்லல. சொல்லவும் இஷ்டமில்லை.”
“உன் அம்மா ஒன்னும் சொல்லலயா?”
“சொன்னாங்க.. ஆமா அவனுக்கு பொறுப்பில்லனு” என்றவன் விரக்தியாக சிரித்து வைத்தான்.
“பொறுப்ப சொல்லிக் கொடுத்தவ இல்லையா? பேசத்தான் செய்வா” என்று பாட்டி நொடித்துக் கொள்ள, வீராவின் மனதுக்கு இதமாக இருந்தது.
அவனை பற்றித் தெரிந்த சொந்தங்கள் எல்லோருமே, அவனை தான் குறை கூறினர். தாயை ஒதுக்குவது தவறு என்றனர். காரணம் எல்லோரிடமும் தாமரை அழுது புலம்பி விடுவார் மகனைப் பற்றி. அப்படி அழுபவர், அவன் மீது பாசத்தை காட்டவே இல்லை என்பது அவனைத் தவிர யாருக்குமே புரியாது. முதல் முறையாக அவனுக்கு ஆறுதலாக பேசுகிறார் ஜகதீஸ்வரி.
“ஆமா கைக்குள்ள வச்சு, நாலையும் சொல்லிக் கொடுத்து வளர்த்து விட்டது அவங்க ரெண்டு பேரும் தான? அதான் எனக்கு பொறுப்பில்லனு ரொம்ப கவலைப்படுறாங்க”
சிரித்துக் கொண்டே சொல்ல, “விடுபா.. எல்லாருக்கும் எதாவது காரணம் வேணும். தன்னை நல்லவங்களா காட்டிக்க. உனக்கு பொறுப்பில்லனு சொல்லிட்டா, அவ வளர்க்காம போனதால தான் இப்படி. நான் நல்லா வளர்த்துருந்தா இப்படி இருக்க மாட்டான்னு நடக்காத ஒன்ன சொல்லி மனச தேத்துறது தான்.” என்றார்.
“அத கூட விட்டுருப்பேன். இன்னொன்னு சொன்னாங்க”
“என்ன?”
“எனக்கு கல்யாண வயசே வந்துடுச்சு.. இன்னும் பொறுப்பில்லாம இருக்கேன்னு சொல்லுறாங்க என்னை பெத்த அம்மா.. அதுக்கு அவரு.. கல்யாணமெல்லாம் அவனுக்கு பார்த்து தான் பண்ணி வைக்கனும். இல்லனா, என் அப்பா மாதிரி எனக்கும் கேன்சர் வந்து செத்துட்டா, கட்டுற பொண்ணு பாவம்னு சொல்லுறாரு”
“அடப்பாவி! இதை கேட்டு உங்கம்மா சும்மாவா இருந்தா?”
“அங்க தான் ஹைலைட்டே.. அப்படியும் வருமாங்க? எதுக்கும் அவன டாக்டர் கிட்ட காட்டி செக் பண்ணலாமானு கேட்டாங்க”
ஜகதீஸ்வரிக்கு ஒரு நொடி பேச்சு வரவில்லை.
“இப்படியுமா ஒருத்தி இருப்பா? நான் பெத்தது தான் மோசம்னா… உன்னை பெத்தது அத விட இருக்கே”
“மனசே உடைஞ்சுருச்சு” என்றவன், சோபாவில் சாய்ந்து விட்டத்தை பார்த்தான்.
ஜகதீஸ்வரிக்கும் மனம் வலித்தது. இப்படித்தான் ஜாக்ஷியும், தாய் தந்தை விவாகரத்து முடிந்த அன்று எதுவும் பேசாமல் விட்டத்தை பார்த்துக் கொண்டு படுத்து இருந்தாள்.
அப்போது அவள் பத்து வயது கூட நிரம்பாத சிறுமி. இப்போது முன்னால் இருப்பவன் முழு ஆண் மகன். ஆனால் அதே போல் மனம் உடைந்து கிடக்கிறான்.
“உன் மேல இருக்க அக்கறையில ஒன்னு சொல்லுறேன். அவங்கள மொத்தமா உதறி விட்டுரு வீரா. விசத்த தொண்டையிலயே வச்சுட்டு வாழுறத விட, துப்பிட்டு போறது நல்லது”
“இதே முடிவு தான் நானும் எடுத்தேன். இப்ப அப்பத்தா கிட்ட சொன்னா, நேரா போய் சண்டை போடுவாங்கனு தான் எதுவும் சொல்லாம சமாளிச்சுட்டேன். ஆனா…”
“என்னபா?”
“ஒரு வேளை அவங்க சொன்னது நிஜம்மா இருந்தா?”
“டேய்.. என்னடா நீ?” என்று பாட்டி பதறினார்.
“பிராக்டிக்கலா யோசிச்சா அதுவும் சரினு தான தோனுது பாட்டி? நான் ஆன்லைன்ல படிச்சேன். இதுக்கு எதோ டெஸ்ட் இருக்காம். அது எங்க எப்படி பண்ணுவாங்கனு தெரிஞ்சு பண்ணி பார்க்க போறேன்”
“என்னபா நீ? அதுங்க தான் எதோ உளறுச்சுங்கனா?”
“இருந்தாலும் நானும் தெரிஞ்சுக்குறது நல்லது இல்லயா?”
“இப்ப டெஸ்ட் பண்ண போறியா?”
“முதல்ல என்னனு தெரிஞ்சுக்கிறேன். தெரிஞ்சுட்டு டெஸ்ட் பண்ணுறேன். அதுக்கு முன்னாடி, உங்க ஹாஸ்பிடல்ல தான் டாக்டர பார்க்கனும்”
ஜகதீஷ்வரி பெருமூச்சு விட்டார்.
“பண்ணனும்னு நினைச்சுட்ட.. பண்ணு. ஆனா முடிவு நல்லதா வரும்னு நம்பு”
தலையாட்டியவன், “உங்க ஃப்ரண்டு கிட்ட சொல்லாதீங்க. கேட்டா செய்ய விட மாட்டாங்க” என்றான்.
“சரி தான். சொல்லல”
வேலைக்கார பெண் மாத்திரை கொண்டு வர, வாங்கி போட்டுக் கொண்டார்.
“நாளைக்கு ஜாயின் பண்ணனும் இல்ல? போய் தூங்கு. வேற எதையும் யோசிக்காத” என்றதும் தலையாட்டி விட்டு எழுந்தான்.
அவரவர் அறைக்குள் சென்று அடைந்து விட்டனர்.
வேலைக்கான மின்னஞ்சல் எப்போதோ வந்திருந்தது. படித்து பார்த்து விட்டு படுத்தான்.
“நாளை புதிய தொடக்கம்” என்றது மனம்.
அதே நினைவோடு கண்ணை மூடி உறங்க ஆரம்பித்தான்.
*.*.*.*.
ஜாக்ஷி வேலையை முடித்து விட்டு, மெத்தையில் விழுந்தாள்.
தூக்கம் வருவதற்கு பதில், நினைவில் வீரபத்திரன் வந்தான். அவனை பற்றி நன்றாகவே விசாரித்து விட்டாள். இது வரை யாரையுமே இப்படி அலசி ஆராய்ந்தது இல்லை.
எல்லாம் பாதுகாப்புக்கு என்று சொல்லிக் கொண்டாலும், உள்ளே ஒரு பொறாமையும் இருந்தது.
“பாட்டியே இவன தேடிப்போய் வேலையில சேர கேட்குற அளவு, அப்படி என்ன பெரிய ஆள் இவன்?” என்று தான் தேடினாள்.
அவளது பாட்டியிடம் பாராட்டு வாங்குவது சுலபமல்லவே?
வீரா இதற்கு முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில், நல்ல பதவியில் தான் இருந்தான். ஆனால் நிறைய குடைச்சல்களையும் அனுபவித்திருக்கிறான்.
அதை ஒப்பிடும் போது, ஜகதீஷ்வரி நிறுவனம் சிறந்ததே. வேலையை உடனே விட்டதும் அங்கிருப்பவர்கள், அவனை தக்க வைக்க போராடி இருக்கின்றனர். அதுவே அவனது திறமையை சொன்னது.
எல்லாம் அறிந்த பிறகு தான், அவனை நம்பலாம் என்ற முடிவுக்கு வந்தாள். வேலையும் கொடுத்து விட்டாள். இனி இந்த வேலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அவனுடைய பொறுப்பு.
“ஸ்மார்ட்டா இருந்தா பொழைச்சுப்பான்” என்றதோடு தூங்க ஆரம்பித்தாள்.
*.*.*.*.
மறுநாள் விடிந்தது.
வீரா எழுந்து குளித்து வேலைக்கு கிளம்பி விட்டான். முதல் நாள் சற்று சீக்கிரமே செல்ல வேண்டும் என்று முடிவு செய்தவன், டாக்ஸி புக் செய்து விட்டு சாப்பிட அமர்ந்தான்.
பாட்டி அப்போது தான் சாப்பிட்டு முடித்திருந்தார்.
“கிளம்பிட்டியா? மதியத்துக்கு என்ன செய்வ?”
“அங்க இருக்க கேன்டின்ல பார்த்துக்கிறேன் பாட்டி”
“நாளைக்கு செய்ய சொல்லுறேன் எடுத்துட்டுப் போ”
“வேணாம் பாட்டி. உங்க பேத்தி கொடுத்த வேலைக்கு, நடிப்பு சரியா இருக்கனும். இப்போதைக்கு வீடு தேடுற… கேன்டின்ல சாப்பிடுற.. சாதாரண பேச்சலர் பையன் தான் இந்த வீரா.”
“அதானடா உண்மை?”
“அது தான் இல்ல.. என் கிட்ட பணமும் இல்ல.. பெரிய பதவில இருக்க யாரையும் எனக்கு தெரியாது. அப்படி சொல்ல வர்ரேன்”
“ஓஹோ! புரிஞ்சுடுச்சுபா.. வீரபத்திரன் சார் நினைச்சா, இந்த நிமிஷம் ஒரு வீடு வாங்கி குடி வரலாம். அவருக்கு கம்பெனி சேர்மன் ஜாக்ஷி பர்ஸனலா அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்பிருக்கா. அவளோட பாட்டி வீட்டுல தான் மார்னிங் டிஃபன் முடிச்சன்னு சொல்ல கூடாது.. அதான?”
பாட்டி இழுத்த இழுவையில், வீரா சிரித்து விட்டான்.
“அதே தான். நான் போடுற நடிப்புக்கு ஏத்த காஸ்டியூம் சூஸ் பண்ணிருக்கேன் பாருங்க.”
அவனை மேலும் கீழும் பார்த்தார். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவனை போன்ற ஒரு உடையை அணிந்திருந்தான். லட்சுமிக்கு இருக்கும் சொத்துக்களை பற்றி அறிந்தவர் அவர். அவருடைய பேரன் வீரா என்பதால், ஊருக்குள் பெருமையாக தான் தெரியும். அவனுமே தன்னை குறைத்து காட்டியது இல்லை.
இன்று தான் போடுகிற கூத்துக்கான வேசமாக, இதை அணிந்திருக்கிறான்.
“வேசம் நல்லா தான் இருக்கு”
“சீக்கிரமே குறைச்சுடலாம்.. வ்வௌ வ்வௌ” என்று குறைத்துக் காட்ட, பாட்டி வாய் விட்டு சிரித்தார்.
அதே சந்தோசத்தோடு கிளம்பி சென்றான் வீரா.
அலுவலகத்தில் முதல் நாள் வேலையை தொடங்க, அவனை வரவேற்றார் ஜெனரல் மேனேஜர்.
அவன் வழிநடத்த வேண்டிய குழுவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அன்று முழுவதும் அவர்களோடு பழகுவதிலேயே செலவழித்தான் வீரா. நாள் நல்லபடியாக முடிந்து வெளியே வர, ஜகதீஸ்வரியிடமிருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்க பாட்டி”
“வேலை முடிஞ்சதா?”
“முடிஞ்சது. இப்ப தான் வர்ரேன். பஸ் ஸ்டாப் போகனும்.”
“கொஞ்ச நேரம் அங்கயே இரு. ஜாக்ஷி வருவா”
“ஓ.. சரி”
“உன் அம்மா நீ போன எடுக்கலனு லட்சுமி கிட்ட அழுது புலம்பி இருக்காளாம்”
“சோ? உங்கள கேள்வி கேட்டாங்களா?”
“ஆமா என்ன பிரச்சனைனு கேட்குறா? நான் என்னனு சொல்ல? வேலைய சொல்லி சமாளிச்சேன்”
“சரி நான் பேசிக்கிறேன்” என்று விட்டு அழைப்பை துண்டித்தான்.
அவனருகே இருந்தவர்கள் அவனை அழைக்க, “நீங்க போங்க. நான் ஒரு ஃப்ரண்ட பார்க்கனும்.” என்று விட்டான்.
எல்லோரும் சென்றதும், கேன்டினுக்கு சென்று காபி குடித்தான். அங்கே அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் மட்டும் தான் இருந்தனர். அவர்கள் யாருக்கும் அவனை தெரியாது.
மிகப்பெரிய அந்த அலுவலகத்தில் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க, ஜாக்ஷியிடமிருந்து செய்தி வந்தது.
பார்த்ததும் கிளம்பி வெளியே வந்தான். சற்று தூரம் நடந்து செல்ல, அவளின் கார் நின்றிருந்தது. அருகே அவளும்.
“ஹாய்”
“கெட் இன்”
“வாவ்! ஃபர்ஸ்ட் டே சேர்மேன் என்னை டிராப் பண்ண போறாங்க”
“ஆமா பெருமை இல்லையா?”
“கண்டிப்பா”
சிரித்துக் கொண்டே காரில் ஏறி விட்டான்.
உள்ளே அமர்ந்ததும், கத்தை ஃபைலை அவன் கையில் கொடுத்தாள்.
“பிரிச்சு பாருங்க. வீட்டுக்கு தான போறீங்க?”
“ஆமா”
காரை எடுத்து விட்டாள். வீராவும் எதுவும் பேசாமல் அந்த கோப்புகளை பிரித்துப் படித்தான். பெரிய பதவி, முக்கியமான பதவியில் இருக்கும் பலரின் விவரங்கள் இருந்தது.
பாட்டி ஏற்கனவே சொன்னது தான். இவள் இன்னும் கொஞ்சம் விவரமாக கொடுத்திருக்கிறாள்.
“இந்த டீடைல எத நம்பி என் கிட்ட கொடுக்குறீங்க?”
“பாட்டி மேல இருக்க நம்பிக்கை தான். அவங்க ஒரு தப்பான ஆள திறமையானவன்னு கை காட்ட மாட்டாங்க”
“பாராட்டுக்கு நன்றி. இப்ப இது எதுக்கு?”
“இவங்கள தான் நீங்க நிறைய ஃபோகஸ் பண்ணனும். எனக்கு சிலர் மேல சந்தேகம் இருக்கு. அவங்க எல்லாம் உங்க கண்ணுல மாட்டுறாங்களானு பார்க்கலாம்”
“நான் எதாவது கண்டு பிடிச்சு, இதுல சக்ஸஸ் ஆகிட்டா என்ன தருவீங்க?”
“என்ன வேணும்?”
“கேட்டத கொடுப்பீங்களா?”
அவனை திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்.
“கொடுக்கக் கூடியதா இருந்தா தருவேன். முதல்ல என்னனு கேளுங்க”
“ஜஸ்ட் நவ் எதுவும் தோணல. ஆனா முடிக்கும் போது கண்டிப்பா கேட்குறேன்”
தலையாட்டி வைத்தாள்.
வீடு வந்து சேர, இருவருமே காரை விட்டு இறங்கினர்.
“இவரும் லிஸ்ட்ல இருக்காரு? இன்னும் ரெண்டு வருசத்துல ரிடையர்மண்ட் இல்லையா?”
“ஆமா.. பட் லிஸ்ட்ல சேர்க்கனும்னு தோணுச்சு” என்று பேசிக் கொண்டே இருவரும் உள்ளே வர, பாட்டி அவர்களை நன்றாக பார்த்தார்.
திடீரென அவருக்கு இருவரும் ஜோடியாக வருவது போல் தோன்றியது.
‘நல்லா தான் இருக்கும்’ என்று அவர் மனம் சொல்ல, “இந்தாங்க பாட்டி” என்று அவரிடம் ஒரு பையை ஜாக்ஷி நீட்டினாள்.
“அவங்க கொடுத்த நகைங்க. மத்த ரிஜிஸ்ட்ரேஷன் நாளைக்கு தானாம். லாயர் கொடுத்துட்டுப் போனார்”
“எல்லாம் சரியா இருக்கானு பார்த்தியா?”
“அத தான் லாயரும் கேட்டாரு. நான் பாட்டி கிட்ட கேட்டுக்கோங்கனு சொல்லிட்டு வாங்கிட்டு வந்துட்டேன். சரியா இருந்தா, நாளைக்கு பேப்பர் அனுப்புறாராம்.. சைன் பண்ணி கொடுத்துடுங்க. அப்புறம் அந்த ஃபேக்டரி வேணாம்னு சொல்லிட்டாங்க. அவங்க பொண்ணு எதோ ஜாப் ட்ரை பண்ணுறதா லாயர் சொன்னார். அது அவங்க இஷ்டம். இவ்வளவு தான்”
“நான் பெத்தது என்ன செய்யுது?”
“மும்முரமா லாயர் தேடிட்டு இருக்கு. கேஸ் போட்டு சொத்த வாங்கனுமாம்”
“போடட்டும். அப்படி போட்டா, அவள எப்படி மடக்கனும்னு எனக்குத் தெரியும்.”
ஜாக்ஷி தோளை குலுக்கி வைத்தாள்.
வீரா அங்கு தான் அமர்ந்திருந்தான். ஜாக்ஷி கொடுத்த விவரங்களை படித்துக் கொண்டு. அவனுக்கு இவர்களது குடும்ப விவகாரம் முதல் நாளே நன்றாக தெரிந்து விட்டதால், பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
மூவரும் காபியை வரவைத்து குடித்துக் கொண்டே, அலுவலக விசயங்களை பேசினர்.
சில மணி நேரங்களில் ஜாக்ஷி கிளம்பினாள்.
“நீங்க வீடு பார்க்குறதா பாட்டி சொன்னாங்க”
“ஆமா. இங்க இருந்தே போக முடியாதுல?”
“ஒரு ஃப்ளாட் இருக்கு. ஆனா அத விக்கிறதா இருக்காங்க”
“எங்க?”
இடத்தை சொன்னாள்.
“ஆஃபிஸ்க்கு பக்கம். விக்க போறது என் ஃப்ரண்ட் ஃபேமிலி.”
“பார்த்துட்டு பிடிச்சுருந்தா வாங்கிக்கலாம்”
“ஓகே. அட்ரஸ் அனுப்புறேன்.” என்று விட்டு கிளம்பி விட்டாள்.
தொடரும்.