Loading

 

வேலைக்காரியை போலீஸ் பிடித்துக் கொண்டு போய் விட, வீட்டில் இருந்த மற்ற வேலைக்காரர்கள் எல்லோரும் திகிலுடன் நின்றிருந்தனர்.

“பாவி.. சோத்துல விசம் வச்சுருக்காளே. இவள்ளாம் நல்லா இருப்பாளா?” என்று ஆளாளுக்கு திட்டிக் கொண்டிருந்தனர்.

ஜாக்ஷியும் வீராவும் வீட்டுக்குள் வர, “ஜாக்ஷி..” என்று மெதுவாக அழைத்தார் ஜகதீஸ்வரி.

அவருக்கு வியர்த்து கொட்டி, மயக்கம் வந்தது. அவரிருந்த நிலைமையை பார்த்து, இருவரும் பதறி விட்டனர்.

“பாட்டி.. என்ன செய்யுது?” என்று அருகே ஓடிவந்து அவரை பார்த்தான் வீரா.

“மயக்கமா இருக்கு” என்றவர், சில நொடிகளில் மயங்கி விட்டார்.

“பாட்டி..” என்று ஜாக்ஷி பதறி விட, “தண்ணிய எடு” என்றான் வீரா.

தண்ணீரை முகத்தில் தெளிக்க, விழித்து விட்டு மீண்டும் கண்ணை மூடிக் கொண்டார்.

“ஹாஸ்பிடல் போயிடலாம்டா” என்று ஜாக்ஷி பதட்டமாக சொல்ல, “போய் கார எடு.. பிரஷ்ஷர் கூடிருச்சுனு நினைக்கிறேன்” என்றவன், அவளை அனுப்பி விட்டு பாட்டியை தூக்கிக் கொண்டான்.

“நாங்க வர்ர வரை அவங்கள தப்பிக்க விட்டுறாதீங்க” என்று வாட்ச்மேனிடம் சொல்லி விட்டு, கிளம்பி விட்டான்.

ஜாக்ஷி காரை வேகமாக ஓட்ட, “பதட்டப்படாத ஜக்கம்மா.. பிரஷ்ஷர் தான் கூடி இருக்கும். அமைதியா போ” என்று அதட்டினான் வீரா.

மருத்துவமனை வந்து, மருத்துவரும் சோதித்து விட்டு அதையே தான் சொன்னார்.

“இப்ப தூங்கனும்னு சொன்னாங்க. அதான் ஊசி போட்டுருக்கேன். கொஞ்சம் தூங்கி எந்திரிச்சா நார்மலாகிடும். அப்புறமா பேசலாம்” என்றதும், வீரா தலையாட்டி வைத்தான்.

மருத்துவர் சென்று விட, ஜாக்ஷி வீராவை அணைத்துக் கொண்டாள்.

“பயந்துட்டேன்” என்றவள், குரல் நடுங்கியது.

“ஒன்னுமில்லனு சொன்னேன்ல.. பயப்படாத” என்று தட்டிக் கொடுத்தான்.

பாட்டி எழ இரண்டு மணி நேரங்கள் ஆகலாம் என்று மருத்துவர் சொல்ல, “அப்ப நீ இங்க இரு. எந்திரிச்சதும் கால் பண்ணு. நான் வீட்டுக்கு போறேன்” என்றாள்.

“அங்க போய் என்ன செய்ய போற?”

“செய்ய வேண்டிய பெரிய வேலை இருக்கு. செஞ்சுட்டு வர்ரேன்”

“பத்திரம்”

தலையாட்டியவள், மீண்டும் ஒருமுறை அவனை நெருக்கமாய் அணைத்துக் கொண்டாள். அவனை அணைத்து நிற்கும் போது தான் பதட்டம் குறைந்தது. வீரா அவளை தட்டிக் கொடுத்தான்.

“ஜக்கம்மா”

“ம்ம்..”

“ஆர் யூ ஓகே?”

“ம்ம்”

அவளது நெற்றியில் முட்டி சிரித்தவன், “தைரியமா இருடி. பயப்படாத” என்றான்.

தலையாட்டி விட்டு கிளம்பி விட்டாள்.

வீட்டுக்கு வர, அங்கு எல்லோரும் ஒரு பயத்துடன் காத்திருந்தனர்.

“மேடம்.. அம்மா..” என்று வேலை செய்பவர்கள் பதறிக் கொண்டு வர, “பிரஷ்ஷர் கூடிருக்கு. இப்ப ரெஸ்ட் எடுக்குறாங்க” என்றாள்.

“நான் கூட எங்க அந்த கருமத்த சாப்பிட்டாங்களோனு பயந்துட்டேன்.. கடவுளே..” என்று  நிம்மதி பெருமூச்சு விட்டு கலைந்தனர்.

ஜாக்ஷி காதம்பரி இருந்த அறையின் சன்னல் பக்கம் வந்தாள்.

காதம்பரி அறைக்குள் அடைந்து கிடந்தாலும், வெளியே பேசுவது கேட்கத்தான் செய்தது. அனைத்தையும் கேட்டபடி தப்பிக்க முடியாமல் அமர்ந்திருந்தார்.

ஜாக்ஷியை பார்த்ததும் கோபமாக எழுந்து வந்து முறைத்தார்.

“கதவ திறடி”

“முடியாது”

“கொழுப்பா? கதவ திறடி”

“உன்னை கூப்பிட முக்கியமான ஆள் வர்ராங்க. அவங்க வந்து திறப்பாங்க”

காதம்பரி அதிர்ந்தார்.

“போலீஸா?” என்று கேட்க, “அவங்களும் வருவாங்க” என்றாள்.

“ஏய்… அதான் வேலைக்காரி மேல கம்ப்ளைண்ட் கொடுத்துட்டியே”

ஜாக்ஷி அவரை மேலும் கீழும் பார்த்து வைத்தாள்.

“வேலைக்காரி மேல கம்ப்ளைண்ட் கொடுத்ததால நீ தப்பிச்சுட்டனு நினைச்சியா? அடப்பைத்தியமே” என்று நக்கலாக சொன்னாள்.

“அப்படினா?”

“அவ மேல கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு, உன்னை சும்மா விட்டுருவேன்னு நினைப்பா? அவள உள்ள தள்ளுனதே கேஸ ஸ்ட்ராங்க் ஆகுறதுக்கு தான்”

காதம்பரிக்கு பதட்டத்தில் ஒன்றுமே விளங்கவில்லை.

“உனக்கு அறிவு கொஞ்சம் கம்மி தான் இல்ல? சரி நானே சொல்லுறேன். இப்ப போலீஸ் வேலைக்காரிய கூட்டிட்டு போயிடுச்சு. கூட்டிட்டு போய் கொஞ்சவா செய்வாங்க? நார உரிக்கிற மாதிரி தோல உரிச்சு தொங்க விடுவாங்க.

அப்ப அவ வாய மூடிட்டு அடி வாங்குவானு நினைக்கிறியா? மாட்டா. உன் பேர சொல்லுவா. உண்மையில விசம் வச்சது நீ. அதுல அவள மாட்டி விட்டது நீனு சொல்லிடுவா.”

காதம்பரிக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை.

“அவ சொன்னதும் போலீஸ் கிளம்பி வந்து உன்னை தூக்கிட்டு போவாங்க. நீ என்ன தான் வேலைக்காரி பொய் சொல்லுறானு அழுது கதறுனாலும், போலீஸ் நம்ப மாட்டாங்க. ஏன்னு சொல்லு பார்ப்போம்?”

காதம்பரிக்கு பேச்சு வரவில்லை. அதனால் அவளை இமைக்காமல் பார்த்தார்.

“அதையும் நான் தான் சொல்லனுமா? அடிக்கிற அடில, அவ நீ தான் விசம் வச்சனு கோர்ட்க்கே வந்து சாட்சி சொல்லுவா. உங்களுக்குள்ள தான் பல நாள் பழக்கம் இருக்கே. உன் போன் கூட இங்க பாரு.. இப்ப என் கிட்ட இருக்கு. வேலைக்காரி ஃபோன் போலீஸ் கிட்ட இருக்கு. எவிடன்ஸ் ஸ்ட்ராங்கா மாறிடுச்சு”

காதம்பரி அவள் கையிலிருந்து பறிக்க வர, ஜாக்ஷி தள்ளி நின்று நக்கலாக பார்த்தாள்.

“ரொம்ப அறிவாளினு நினைப்பு? இப்ப புரியுதா ஏன் நேரா உன் பேர்ல கேஸ் கொடுக்கலனு?”

“ஜாக்ஷி.. ரொம்ப போற.. மரியாதையா ஃபோன கொடுத்துடு”

“உனக்கு மரியாதை ஒன்னு தான் கேடு. இரு.. அடுத்த பிரச்சனையும் வருது. அதையும் மொத்தமா ஊத்தி முடிச்சுட்டு போறேன்” என்று கூறி வைக்க, அசோக்கின் கார் வந்தது.

அசோக்கை பார்த்து காதம்பரி அதிர, “வந்தாச்சு” என்று நக்கலாக சொன்னாள்.

அசோக் அருகே வர, அவரிடம் நடந்ததை சொன்னாள் ஜாக்ஷி.

“உங்க பொண்டாட்டி மேல கேஸ் ஃபைல் ஆகும். நீங்க உடனே ஜாமின்ல எடுக்குறேன்னு போகக்கூடாது” என்று கறாராக சொல்ல, அசோக்கால் அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.

“அது முடியாது”

“முடியனும். காதம்பரி ஒன்னும் பெரிய தியாகி கிடையாது. கொஞ்ச நாள் ஜெயில்ல இருந்தா குறைஞ்சுட மாட்டா”

“பட்..”

“இன்னும் முடிக்கல நான். அவ யாருக்கும் உண்மையா இருந்தது கிடையாது. பெத்த அம்மாவுக்கு விசம் வச்சவ உங்க சோத்துலயும் விசம் வைப்பா.”

அசோக் தான் அதை ஏற்கனவே அனுபவித்திருக்கிறாரே. இதற்கு அவரிடம் பதில் இல்லை.

“அவளுக்கு அவ சுயநலம் தான் முக்கியம். காதலிச்சவன கழட்டி விட்டுட்டு, சிற்றம்லத்த கட்டுனா. அவரு பணக்காரன் இல்லனு இம்சை பண்ணி, கடைசியில டைவர்ஸ் வாங்கியாச்சு. அதுக்கப்புறம் எவனோ ஒருத்தன். அவன் இவள கழட்டி விட்டதும் நீங்க. உங்க மேல எனக்கு கொஞ்சமா மரியாதை இருக்கு. அதுனால தான் கூப்பிட்டு சொல்லுறேன். நீங்க ஜாமின்ல எடுக்க கூடாது. எடுத்தா நான் காதம்பரிய கொன்னுடுவேன். அவ்வளவு தான்.”

போகிற போக்கில் அனைத்தையும் சொல்லி விட்டாள். வேண்டுமென்றே சொல்வது போல் இல்லாமல் சொல்லி வைக்க, அசோக்கிற்கு ஒரு நொடி உலகம் தலைகீழாக சுற்றியது.

காதம்பரி சொன்னதும் ஜாக்ஷி சொன்னதும் மாறி மாறி ஒலிக்க, அவருக்கு வாழ்ந்த வாழ்வு மொத்தமும் பொய்யாக தோன்றியது.

காதம்பரியை பார்த்தார்.

“அவ என்ன சொன்னாலும் நம்பாதீங்க.. ஏய் கதவ திறடி.. நம்பாதீங்க.. அவ பொய் சொல்லுறா. எனக்கு நீங்க மட்டும் தான்” என்று கத்திக் கொண்டிருந்தார்.

அசோக்கிற்கு மனம் உடைந்து போனது. விருட்டென கிளம்பிச் சென்று விட்டார்.

காதம்பரி அதிர்ந்து நிற்க, ஜாக்ஷிக்கு எழிலரசியிடமிருந்து அழைப்பு வந்தது.

“இப்ப தான் வந்து விசாரிச்சேன். அவ காதம்பரிய கை காட்டுறா ஜாக்ஷி” என்றதும் ஜாக்ஷி நடந்ததை சொன்னாள்.

“இப்ப எவிடன்ஸ் ஸ்ட்ராங்கா இருக்கும்ல மேடம்?”

“குட் ஜாப் ஜாக்ஷி. நானே நேரா வர்ரேன். நீங்க கம்ப்ளைண்ட் எழுதி வைங்க” என்றவர், அப்போதே கிளம்பி விட்டார்.

காதம்பரியை கைது செய்யும் போது காதம்பரி வராமல் அடம்பிடிக்க, “நீங்களா வந்தா நல்லது. இல்லனா அடிச்சு இழுத்துட்டு போக வேண்டியதா இருககும்” என்று எழிலரசி மிரட்ட, காதம்பரி ஜாக்ஷியை முறைத்துக் கொண்டே சென்றார்.

காவல் நிலையம் சென்று வழக்கை கொடுத்து விட்டு அமர்ந்தாள்.

“சொத்துக்காக இந்த அளவு போவாங்கனு எதிர்பார்க்கல” என்று எழிலரசி சொல்ல, “இவ இதுக்கு முன்னாடியும் இப்படி பண்ணிருக்கா” என்ற, ஜாக்ஷி வினய் சொன்னதை சொன்னாள்.

“வினய் சொன்னது ஞாபகம் இருந்ததால தான் நாங்களே சுதாரிச்சோம். இல்லனா…”

நினைக்க கூட பயமாக இருந்தது அவளுக்கு.

“ஓகே விடுங்க. நாங்க பார்த்துக்கிறோம். ஆனா இவங்க ஹஸ்பண்ட் பெயில்ல எடுக்க வருவாரா?”

“அதெல்லாம் வர மாட்டாரு. அதுக்கு வேற வைத்தியம் பார்த்துட்டேன். சொத்துக்காக பெத்த தாய கொல்ல பார்த்துருக்கா. கேஸ ஸ்ட்ராங்க்கா போடுங்க மேடம். அந்த வேலைக்காரி தான் தப்பிக்க எங்க வேணா சாட்சி சொல்லுவா. முடிஞ்ச வரை உள்ள தூக்கி வைங்க.”

“பார்த்துக்கலாம் ஜாக்ஷி. நீங்க போய் பாட்டிய கவனிங்க. இவங்கள நாங்க கவனிக்கிறோம்”

“ஓகே மேடம் தாங்க்யூ” என்று பெருமூச்சு விட்டு விட்டு, ஜாக்ஷி மீண்டும் மருத்துவமனை கிளம்பினாள்.

வீரா அங்கு அமர்ந்திருக்க, லட்சுமியிடமிருந்து அழைப்பு வந்தது.

வழக்கு முடிந்த மறுநாள், லட்சுமி ஊரில் வேலை என்று கிளம்ப, சுபத்ராவும் ஊரை பார்க்க விருப்பப்பட்டு உடன் சென்றிருந்தாள். இன்னும் திரும்பவில்லை. இன்று இரவு தான் வருவதாக இருந்தது.

“சொல்லுங்க அப்பத்தா”

“வீரா ஜகதீஸ் எங்க? அவளுக்கு ஃபோன் போட்டா எடுக்க மாட்டேங்குறா” என்க, அவனுக்கு விசயத்தை சொல்ல மனமில்லை.

“பிரஷ்ஷர் கூடிருச்சுனு ஹாஸ்பிடல் வந்துருக்கோம் அப்பத்தா. இப்ப தூங்குறாங்க”

“ஓஓ.. இப்ப எப்படி இருக்கா?” என்று நலம் விசாரித்து விட்டு வைத்தார்.

நேரில் வந்ததும் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.

ஜகதீஸ்வரி எழுந்ததும், ஒரு பிரச்சனையும் இல்லை. உடலை மற்றும் நன்றாக கவனித்துக் கொள்ள சொல்லி விட்டு, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ஜகதீஸ்வரி எதுவும் பேசவில்லை. அவரால் பேசமுடியவில்லை. மனம் நொந்து போயிருந்தது. அமைதியாக சாப்பிட்டு மாத்திரை போட்டு விட்டு படுத்தார்.

“பாட்டி.. ஏன் அமைதியா இருக்கீங்க?” என்று ஜாக்ஷி வருத்தமாக கேட்க, “அவள பெத்த நாள நினைச்சு பார்த்தேன். அன்னைக்கு அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு” என்று வருத்தமாக கூறினார்.

“உங்க தப்பில்ல பாட்டி. எதுவும் யோசிக்காம தூங்குங்க” என்று வீரா சொல்ல, கண்ணை மூடிக் கொண்டார்.

அன்று இருவரும் அங்கேயே தங்கினர்.

ஜாக்ஷியின் அறையில் இருவரும் படுத்திருக்க, ஜாக்ஷி வீராவை இமைக்காமல் பார்த்தாள். அவளது மனம் புரிய வீரா உடனே தன் இதழ்களை அவளுடன் இணைத்துக் கொண்டான்.

ஜாக்ஷிக்கு இன்றைய பதட்டமெல்லாம் மறக்க வேண்டும் போல் இருந்தது. மறக்க வைத்திருந்தான் வீரபத்திரன்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
30
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. ஜாக்ஷி கலக்கிட்டாள்

    2. அப்பாடா…! ஒருவழியா காதம்பரி ஆட்டம் முடிஞ்சது.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797