நாட்கள் அழகாய் செல்ல, ஆரம்பித்தது. சுபத்ரா படிப்பை கவனிக்க, இரண்டு பாட்டிகளும் அவளை கவனித்துக் கொண்டனர்.
எப்படி அழைத்தும், சுபத்ரா ஜாக்ஷியின் வீட்டுக்கு செல்ல மறுத்து விட்டாள்.
“நம்ம பிரைவசியில தலையிட வேணாம்னு நினைக்கிறாங்க. அதுவும் சரி தான். அப்ப தான் நாமலும் ஈசியா முட்டிக்க முடியும்” என்று சிரித்து வைத்தான் வீரா.
இவர்களது வாழ்வுக்கு நேர் எதிராக, பாதாளத்தில் சென்று கொண்டிருந்தது அசோக் காதம்பரியின் வாழ்வு. மீள முடியாத அளவு அடித்துக் கொண்டிருந்தாள் ஜாக்ஷி.
முதலில் ஏன் நடக்கிறது? என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தனர். இப்போது ஜாக்ஷி தான் செய்கிறாள் என்ற உண்மை தெரிந்தும், அதை தடுக்க முடியாமல் திண்டாடினர்.
காதம்பரிக்கு கோபமெல்லாம் ஜாக்ஷியின் மீது தான். அவளை எதுவுமே செய்ய முடியவில்லையே. சொத்துக்காக போட்ட வழக்கும் நிலுவையில் இருந்தது. அவளை திட்டி சந்தோசப்படலாம் என்றால், அதற்கும் ஆப்பு வைத்தாள்.
எதையாவது பேசப்போய், அசோக்கிடம் அவள் அனைத்தையும் உளறி விட்டால்? அதற்கு பயந்தே எதையும் பேச முடியாமல் போனது.
நாட்கள் மாதங்களாக, சிற்றம்பலத்தின் நினைவு தினம் வந்து விட்டது. அன்று காலையில், ஜாக்ஷி வீராவை முறைத்துக் கொண்டிருந்தாள்.
நினைவு தினத்திற்கு செய்யும் காரியத்திற்கு, ஜானகி ஜாக்ஷிக்கு அழைப்பு விடுக்க, ஜாக்ஷி போக மறுத்தாள். வீரா போகத்தான் வேண்டும் என்று அடம்பிடித்தான்.
“பிடிக்குதோ பிடிக்கலயோ. ரத்த பந்தம் செய்யனும்னு இருந்தா, செஞ்சு தான் ஆகனும். அதுவும் நீ செய்ய போறது இல்ல. ஜெகன் செய்வான். நீ கூட நிற்க போற. அதுக்கு ஏன் அடம்பிடிக்கிற?”
“எனக்கு அந்தாளயே பிடிக்காது. அந்தாளுக்கு செய்யுறதுக்கு நான் போகலனா தான் இப்ப என்ன?” என்று ஜாக்ஷியும் நின்றாள்.
அவளுக்கு பிடிக்காது என்று தெரியாமல் இல்லை. இறந்து போனவர்களை பற்றி தவறாக கூட பேசக்கூடாது என்று தான் சொல்லி வைத்திருந்தனர் பெரியவர்கள். அப்படி இருக்க அவளும் கலந்து கொள்வது தான் சரி என்று நினைத்தான்.
செய்ய வேண்டிய முறைகளை, கடமை தவறாமல் செய்து விடுவது நல்லது என்பது வீராவின் எண்ணம். சாகும் போதே மன்னிக்காத அவருக்காக, எதையும் செய்யக்கூடாது என்பது ஜாக்ஷியின் எண்ணம்.
இது போல பல முறை இருவரும் பல விசயங்களுக்கு சண்டை போட்டுக் கொண்டு தான் இருந்தனர். அவளுக்கு மேல் அவன் அடம்பிடிக்க ஆரம்பித்திருந்தான்.
ஒவ்வொரு முறையும் யாராவது ஒருவர், விட்டுக்கொடுத்து இறங்கிச் சென்று விடுவார்கள். இந்த முறை வீரா விடாமல் நிற்க, ஜாக்ஷிக்கு கோபம் குறையவில்லை.
கடைசியாக ஜகதீஸ்வரி வந்து, வீரா சொல்வது தான் சரி என்று கூறி ஜாக்ஷியை கையோடு அழைத்துச் சென்றார்.
“வந்து உன்னை வச்சுக்கிறேன்”
“உனக்கில்லாமலா ஜக்கம்மா?” என்று கேட்டு, தலையில் முட்டு வாங்கிக் கொண்டான்.
“அம்மா.. செம்மயா வலிக்குதுடி” என்று தலையை தேய்க்க, முறைத்தபடி கிளம்பி விட்டாள்.
“எங்க இருந்து கண்டு பிடிச்சா இந்த முட்டுறத? கொஞ்ச நாள்ல தலை வீங்கிடும் போல” என்று சிரித்து விட்டு, வேலைய பார்க்கச் சென்று விட்டான்.
ஜாக்ஷி சடங்கில் ஓரமாக அமர்ந்திருந்தாள். எதையும் பார்க்கவோ செய்யவோ பிடிக்கவில்லை. எல்லாம் ஜானகியும் ஜெகனும் தான் செய்தனர்.
சிற்றம்பலத்தின் உறவுகள் சிலர் இருந்தனர். எல்லோரும் கிளம்பும் போது ஜாக்ஷியும் கிளம்பப் பார்க்க, ஜானகி அவள் முன்னால் வந்து நின்றாள்.
“சாப்பிட்டு போகலாமே?”
“நோ தாங்க்ஸ்”
“ஓகே”
“பாட்டி நான் கிளம்புறேன். வேலை இருக்கு” என்றவள், விருட்டென கிளம்பி விட்டாள்.
“க்கா.. நீயா இது?” என்று ஜெகன் ஜானகியை கேட்க, “ஏன்டா சந்தேகமா?” என்று கேட்டாள்.
“இல்ல ஜாக்ஷிய சாப்பிடவெல்லாம் சொல்லுறியே? உனக்கு தான் பிடிக்காதே”
“பிடிக்காது தான். ஆனா வீட்டுக்கு வந்தவங்கள மரியாதையா சாப்பிட சொல்லனும். நம்மல பெத்தவங்களுக்கு தான் அந்த அறிவு இல்ல” என்று கூறி மேனகாவை முறைத்து விட்டுச் சென்றாள்.
ஜகதீஸ்வரி சிற்றம்பலத்தின் படத்தை பார்த்தார். மனதில் வருத்தமாக இருந்தது.
யாரை குறை சொல்ல? எல்லோரின் மீதும் தவறு இருந்தது. காதம்பரியும் தவறு. சிற்றம்பலமும் தவறு. மேனகாவும் தவறு. இவர்களது தவறுக்கான தண்டனையை, மூன்று பிள்ளைகள் தான் அனுபவிக்கின்றனர். அதுவும் ஜாக்ஷியின் வாழ்வு மிக மோசம். வீரா மட்டும் இல்லை என்றால், இவ்வளவு கூட மாறியிருக்க மாட்டாள்.
ஜகதீஸ்வரியிடம் மேனகா வந்தார். பொதுவாய் பேச்சை ஆரம்பிக்க, ஜகதீஸ்வரி பட்டும் படாமல் பதிலளித்தார். பேச்சு ஜானகியின் திருமணத்திற்கு வந்தது.
“இவளுக்கு ஒரு மாப்பிள்ளைய பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுட்டா, என் கடமை முடிஞ்சுடும். ஆனா இப்ப எப்படி பண்ணுறதுனே தெரியல. கல்யாணத்துக்குனு வச்சுருந்த நகையும் போச்சு. பணமும் பெருசா இல்ல. எல்லாம் விதி. அவரோட எல்லாம் போச்சு” என்று கூறி ஜகதீஸ்வரியின் முகத்தை கவனித்தார்.
அதில் எந்த மாற்றமும் இல்லை.
‘ச்சே.. தன் பேத்திக்கு மட்டும் பணக்காரனா சொந்தத்துலயே பார்த்து பேசி வச்சுட்டு, ஜானகிக்கு மட்டும் இப்படி பண்ணுதே. நகையையும் புடுங்கிடுச்சு. சொத்தும் இல்ல. வெறும் ஃபேக்டரிய மட்டும் வச்சு கோட்டையா கட்ட முடியும்?’ என்று பொறுமிக் கொண்டார் மேனகா.
அவருக்கு அந்த ஃபேக்டரி மட்டும் போதவில்லை. இன்னும் வேண்டும் என்றது மனம். மனித மனம் அல்லவா? ஒரு முறை கொடுத்தால், அடுத்தடுத்து கேட்டுக் கொண்டே இருக்கும்.
இப்போது மேனகாவிற்கு ஜாக்ஷியின் மொத்த சொத்துமே கொடுத்தால் கூட போதாது. அப்படி ஒரு பேராசை எழுந்திருந்தது. ஜகதீஸ்வரியின் முகம் மாறாமல் இருக்க, அடுத்து பேசினார்.
“சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்கமா.. ஜானகியும் உங்க பேத்தி தான். அவ கல்யாணம் உங்க பொறுப்புனு அவரே சொல்லிட்டு போயிட்டாரு. எனக்கு தனியா எதுவும் செய்ய தெரியாது. நீங்க தான் அவள பார்த்துக்கனும்” என்று பொறுப்பை தள்ளி விட பார்த்தார்.
‘யாருக்கு யாரு அம்மா?’ என்று நினைத்த ஜகதீஸ்வரிக்கு சிரிப்பு வந்தது.
நல்ல வேளை ஜாக்ஷி அப்போதே கிளம்பி விட்டாள். இதை மட்டும் அவள் கேட்டிருந்தால், கலவரம் தான் நடந்திருக்கும்.
“எல்லாரும் பிள்ளைய தாத்தா பாட்டிய நம்பி பெத்துக்கிறது இல்ல மேனகா. நீயும் ஜானகிய என்னை நம்பி பெக்கல தான? அவளுக்காக பொறந்தவன் வரும் போது தன்னால நடந்துட்டு போகுது. இப்ப நேரமாச்சு நான் கிளம்புறேன்” என்றவர், அப்போதே கிளம்பி விட்டார்.
‘கிழவி அப்படியே நழுவிடுச்சே.. ச்சே.. ஜானகிக்கு அவங்க கல்யாணம் பண்ணி வச்சா, கடைசி வரை இந்த ஃபேக்டரி நம்ம கிட்ட இருக்கும். ஜானகி சீர அவங்களே முடிச்சுடுவாங்கனு பார்த்தா, இப்படி சொதப்புதே.. ஆனா போற நேரத்துல இந்த மனுசன் நல்ல ஐடியா தான் கொடுத்துட்டு போயிருக்காரு. எப்படியாது இவங்க தலையில தான் ஜானகி கல்யாண செலவ கட்டனும். நான் செலவழிச்சு, இருக்க ஃபேக்டரியயையும் தூக்கி கொடுத்துட்டு உட்காரவா?’ என்று மேனகா ஒரு பக்கம் கணக்கு போட ஆரம்பித்தார்.
இவரது கணக்கை அறியாமல், ஜானகி வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
*.*.*.*.*.*.
அன்று மீண்டும் நீதிமன்றம் வந்தனர் ஜாக்ஷியும் வீராவும். அங்கு காதம்பரியும் இருந்தார்.
இன்று இந்த வழக்கை முடித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்தாள் ஜாக்ஷி.
காதம்பரிக்கு பணம் விரையமாகும் கோபம். எப்படியாவது ஜகதீஸ்வரியை இழுத்து, பாதி சொத்தாவது வாங்க வேண்டும் என்று ஆசை.
ஜாக்ஷியும் வீராவும் உள்ளே சென்று அமர, கடைசி நேரத்தில் வந்தார் ஜகதீஸ்வரி.
அவரை பார்த்ததும் காதம்பரியின் கண்கள் மின்னியது. இனி எல்லாம் தனக்கு சாதகமாக முடிந்து விடும் என்று நினைத்தார்.
வழக்கு ஆரம்பித்தது. காதம்பரியின் வக்கீல் ஏகப்பட்ட காரணங்களை அடுக்கி முடித்தார். நீதிபதி ஜகதீஸ்வரியை முன்னால் அழைத்தார்.
“உங்க மகளுக்கு நீங்க சொத்து கொடுக்கலனு கேட்குறாங்க. நீங்க என்ன சொல்லுறீங்க?”
“என் சொத்தெல்லாம் போன வருசமே என் பேத்திக்கு எழுதி வச்சுட்டேன் மேடம்”
“உங்க மகளுக்கு ஏன் தரல?”
“என் மக என் பேச்ச கேட்கல மேடம்”
“புரியல”
“இந்த சொத்து எல்லாம் பூர்வீக சொத்து மேடம். என் அப்பா எனக்கும் என் வீட்டுக்காருக்கும் எழுதிக் கொடுத்தாரு. அப்பவும் சொத்த விக்குற உரிமை, வேற யாருக்கும் கொடுக்குற உரிமை எல்லாம், எனக்கு மட்டும் தான் கொடுத்தாரு. நானும் என் வீட்டுக்காரும் பாடுபட்டு உழைச்சு தான், ஒன்ன பத்தாக்குனோம். அந்த சொத்து கைய விட்டு போயிட வேணாமேனு, ஒரே மகளுக்கு வீட்டோட மருமகன கூட்டிட்டு வந்தாரு அவளோட அப்பா. அதுவும் அவ சம்மதத்தோட. அவளே ஆசைப்பட்டதால தான் நடந்துச்சு.
அவன் கூட இவ நல்லா வாழல. அவன் பக்கமும் பெரிய தப்பிருக்கு. பிரிஞ்சுட்டாங்க. நானும் அதுக்கு எதுவும் சொல்லல. ஆனா பிரிஞ்சப்புறம் அவ என் பேத்திய வேணாம்னு சொல்லிட்டா. பேத்திய வளர்க்கலனா, சொத்து தர மாட்டேன்னு சொன்னேன். உங்க சொத்தும் எனக்கு வேணாம்னு சொல்லிட்டு, வீட்ட விட்டு வெளிய போயிட்டா. அப்புறம் ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க போறேன்னு வந்து சொன்னா.
நீ கல்யாணம் பண்ணிக்கிறது பிரச்சனை இல்ல. ஆனா என் பேத்திய நீ கூட கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணு. அவளுக்கும் அம்மா வேணும்னு கேட்டேன். முடியவே முடியாதுனு சொல்லிட்டா. அப்பவும் சொன்னேன். என் பேத்திய நீ கைவிட்டா, நானும் இனி எனக்கு மக இல்லனு முடிவு பண்ணிடுவேன்னு. பண்ணிக்கோனு சொல்லிட்டு போயிட்டா.
போகட்டும்னு நானே என் பேத்திய வளர்த்து, அவளுக்கு சொத்த எழுதி கொடுத்துட்டேன். என் பேத்தியும் என் மருமகனும், என்னையும் என் வீட்டுக்காரையும் விட அதிகமா உழைச்சு, பெருக்கி வச்சுருக்க சொத்து இது. இதுல அவளுக்கு எதுவுமே கொடுக்க கூடாதுனு முடிவு பண்ணிட்டேன். இதுல தப்பு இருக்கானு தெரியல. ஆனா தாத்தா பாட்டி சொத்துல, பேத்திக்கு உரிமை இருக்குனு சட்டமே சொல்லுது. இதுக்கு மேல நீங்களே சொல்லுங்க மேடம். என்ன செய்யட்டும்?”
ஜகதீஸ்வரி அமைதியாகவே பேசி வைக்க, காதம்பரியை அழைத்து கேட்டார். அவர் இல்லவே இல்லை என்று அடித்து சாதித்தார்.
“அப்படிலாம் நான் சொத்து வேணாம்னு சொல்லவே இல்ல ஜட்ஜ்ம்மா. அவளையும் வேணாம்னு சொல்லவே இல்ல. சிற்றம்பலத்த டிவோர்ஸ் பண்ணா, நான் உன்னை வீட்ட விட்டு துரத்திடுவேன்னு இவங்க தான் மிரட்டுனாங்க. அவன் ஒரு துரோகி. ஆறு வருசமா வ*** வச்சுட்டு சுத்துனவன். உண்மை தெரிஞ்சு தான் டிவோர்ஸ் பண்ணேன். இவங்க பண்ண கூடாதுனு மிரட்டுனாங்க. அதையும் தாண்டி பண்ணதுக்காக, என் மகள என் கிட்ட இருந்து பிரிச்சு, வீட்ட விட்டு துரத்திட்டாங்க மேடம். என் மகளும் உண்மை தெரியாம என்னை வெறுக்குறா மேடம்.”
எங்கிருந்து தான் வந்ததோ, மளமளவென கண்ணீர் கொட்டியது காதம்பரியின் கண்ணில் இருந்து.
“என் மகளும் இல்ல சொத்தும் இல்லனு சொன்னதால, தான் கேஸ் போட்டேன் மேடம். இப்ப நாங்களும் ரொம்ப கஷ்டத்துல இருக்கோம். உதவிக்கு கூட யாருமில்ல” என்று காதம்பரி அழ, ஜாக்ஷிக்கு மட்டுமல்ல வீராவுக்கே கோபம் உட்சத்துக்கு வந்திருந்தது.
“நீங்க ரெண்டு பேர் ரெண்டு கதை சொல்லுறீங்க. இதுல யார் சொல்லுற கதை உண்மை?” என்று இரண்டு வக்கீலிடமும் நீதிபதி கேட்க, காதம்பரியின் வக்கீல் காதம்பரியின் கதை தான் உண்மை என்று பேச ஆரம்பித்து விட்டார்.
“நீங்க என்ன சொல்லுறீங்க?” என்று கேட்க, “யுவர் ஹானர்.. இவங்க சொல்லுறது தான் உண்மைனு நானும் பக்கம் பக்கமா வசனம் பேசலாம். ஆனா அதுக்கு ஆதாரம் இப்ப என் கிட்ட இல்ல. அடுத்த ஹியரிங்ல ஆதாரத்தோட வர்ரோம். அதுக்கு டைம் கொடுங்க” என்று கேட்டார்.
ஜாக்ஷி சட்டென முன்னால் வந்து நின்றாள்.
“யுவர் ஹானர் நான் பேசலாமா?” என்று கேட்க, “நீ யாருமா?” என்று கேட்டார்.
“இவங்க இப்படி குமுறி குமுறி அழுறதுக்கான காரணம் நான் தான். இவங்க மகள். என் பேர் ஜாக்ஷி” என்று அறிமுகம் செய்து கொண்டாள்.
தொடரும்.
காதம்பரி அவளுக்கு ஆப்பு வைச்சுட்டே
என்னாம்மா.. நடிக்கிறா இந்த காதம்பரி… சரொயான ஜகத்ஜால கில்லாடி தான் இவ.
😀😀😀
CRVS (or) CRVS 2797