Loading

 

சுபத்ராவின் சிகிச்சை நன்றாக நடக்க, ஊரிலிருந்து இரண்டு பாட்டிகளும் வந்து சேர்ந்து விட்டனர். முதல் வேளையாக சுபத்ராவை சென்று பார்த்து நலம் விசாரித்து முடித்தனர்.

அவளது முகத்தில் இருந்த அப்பாவித்தனம் குறைந்து, சற்று தைரியமாக இருந்தாள்.

“இப்ப தான் கொஞ்சம் தெளிவா இருக்கா” என்று லட்சுமி பாராட்டி வைத்தார்.

அவளோடு பேசி விட்டு, வீடு திரும்பினர்.

“இங்க தான் இருப்பியா? இல்ல ஜாக்ஷி வீட்டுக்கு போறியா?” என்று ஜகதீஸ்வரி கேட்க, “இங்கயே இருக்கேன். நடுவுல நான் ஏன் இருக்க? கூட நான் இருந்தாலும் இல்லனாலும் ஒன்னு தான்னு ஆகிடுச்சு” என்று விட்டார்.

வீரா கேட்க, “கொஞ்ச நாள் இங்க இருக்கேன். சுபத்ரா வந்தா வர்ரேன்” என்று விட்டார்.

ஜாக்ஷியும் வற்புறுத்தவில்லை. அவரை அழைத்ததே வீரா ஊருக்கு செல்ல தயங்குகிறான் என்று தானே? அருகே இருந்தால் அவனும் நிம்மதியாக இருப்பான்.

*.*.*.*.

நாளை நீதிமன்றம் செல்ல வேண்டும். சொத்துக்காக போட்ட வழக்கு நாளை தான் விசாரனைக்கு வருகிறது.

காதம்பரியால் அதை பற்றி யோசிக்க கூட முடியவில்லை. ஒவ்வொரு நாளும் விடியும் போது புது பிரச்சனை காத்திருந்தது. அதை தீர்ப்பதற்குள் அடுத்த ஒன்று வந்து நின்றது.

வீட்டிற்குள் நிம்மதியாக வாழவே முடியவில்லை. அவ்வளவு பிரச்சனை தலையை சுற்றியது.

வினய் தப்பித்து ஹாஸ்டல் சென்று விட்டான். அதனால் அவனை பற்றிய கவலை இல்லை.

“அந்த மனுசன் என்ன தான் சொல்லுறான்? சரிங்குறானா? இல்லையா?” என்று அசோக்கிடம் தான் கத்தினார்.

“எதையாவது ஒன்ன சொல்ல மாட்டேங்குறானே. எப்ப பார்த்தாலும் பிரச்சனை தான் பண்ணுறான். ச்சை”

“இன்னைக்கு அவன நேர்ல பார்த்து பேசுங்க. இதுக்கு மேல பதில் வரலனா, உன் வேலையே வேணாம் போயானு சொல்லிடுங்க”

“பார்க்குறேன்”

“நாளைக்கு கோர்ட்க்கு வேற போகனும்”

“எதுக்கு?”

“அதான் கேஸ் போட்டுருந்தேனே”

“இருக்க செலவுல வக்கீல் செலவு வேற பண்ணனுமா?”

“அந்த சொத்து வந்துட்டா சரியா போய்டும்”

“வந்துடுமா? உன் அம்மா பேர்ல இருந்தா கூட பரவாயில்ல. எல்லாமே ஜாக்ஷி பேர்ல இருக்கே?”

“யார் பேர்ல இருந்தாலும் எனக்கு வந்து தான் ஆகனும். நீங்க உங்க வேலைய பாருங்க. நான் இத பார்த்துக்கிறேன்”

சொன்னால் கேட்க மாட்டார் என்று விட்டு விட்டார் அசோக். இருக்கும் ஆயிரம் பிரச்சனையே அவருக்கு தலை வலி தான்.

அடுத்த நாள் காலையில் ஜாக்ஷி  தூங்கி எழ, வீரா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான்.

“பத்ரா.. எந்திரி”

“ம்ம்?”

“இன்னைக்கு நான் கோர்ட்க்கு போகனும்”

சட்டென ஞாபகம் வர, எழுந்து அமர்ந்தான்.

“பாட்டி வரலனா உங்கம்மா விடுவாங்களா?”

“பாட்டிய கோர்ட்க்கு நான் வர விட மாட்டேன். நானே போறேன். கேஸ் எவ்வளவு தூரம் இழுக்கனும்னு தெரியும். இழுத்தடிச்சு காதம்பரிய ஓட விடுறேன்”

“நீ பேசாம, சொத்து என் பேர்ல இருக்கு. எழுதி தர முடியாதுனு சொல்லிடலாம்ல?”

“சொல்லிட்டா? காதம்பரி உரிமை இருக்குனு சண்டை போடத்தான் செய்யும்.”

“அது உங்கம்மாவ மதிச்சு, அவங்க கட்டி வச்சவனோட வாழ்ந்திருந்தா தான் உரிமை. நீ தான் வேற யாரையோ கல்யாணம் பண்ணி வீட்ட விட்டு போயிட்டியே. சொத்த பேத்திக்கு எழுதி வச்சாச்சு. திருப்பி தர முடியாதுனு சொல்லிடுங்க”

“இத இப்பவே சொல்ல கூடாது. முடிஞ்ச வரை காதம்பரிக்கு செலவு வச்சுட்டு சொல்லனும். உனக்கு வேலை இருக்கா?”

“காலையில எதுவும் இல்ல”

“அப்ப நீ லேட்டா கிளம்பு.‌ நான் போய் குளிக்கிறேன்”

“நான் வேணா ஹெல்ப் பண்ணவா?”

“எதுக்கு?”

“குளிக்கிறதுக்கு. அவசரமா கிளம்புறியே..”

“நீ ஹெல்ப் தான் பண்ணுவியா?”

“ஆமா.. பின்ன?”

“போடா” என்று விட்டு எழுந்து கொண்டாள்.

“சத்தியமா ஹெல்ப் தான் ஜக்கம்மா.. உதவி பண்ணுறவன தடுக்குறது தப்பு தெரியுமா?”

“ஹெல்ப் தான? எதாவது சமைச்சு வை. பசிக்குது”

“குளிக்க ஹெல்ப் பண்ணிட்டு சமைக்க கூடாதா?”

“தேவையில்ல கட்டபொம்மன். உங்க சேவை இங்க தேவை இல்ல” என்று விட்டு சென்று விட்டாள்.

அவள் வரும் முன்பே, வீரா குளித்து சமைக்க ஆரம்பித்து இருந்தான். இருவரும் சாப்பிட்டு விட்டு ஒன்றாக தான் கிளம்பினர்.

“நீ கோர்ட்க்கு போ. நான் ஆஃபிஸ் போறேன்”

“எப்ப கார் வாங்குறதா இருக்க?”

“நாளைக்கு போகலாமா? உனக்கு நேரமிருக்குமா?”

“இருக்கும். ஈவ்னிங் போகலாம்”

அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், “ரொம்ப கோபப்பட்டு பிபி ஏத்திக்காம நிதானமா இருக்கனும். ஓகே?” என்று கேட்டான்.

“என்னைய கோபப்படுத்தாதனு காதம்பரி கிட்ட தான் சொல்லனும்”

“அது கஷ்டம். அதான் உன் கிட்ட சொல்லுறேன். ரிலாக்ஸா எதிர்ல இருக்கவன் திணறுறத ரசிக்க கத்துக்க ஜக்கம்மா சுவாரஸ்யமா இருக்கும்” என்று கண் சிமிட்டியவன், விடை பெற்று சென்றான்.

‘அதெப்புடி ரசிக்கிறது? கடுப்பேத்துனா கடுப்பாக தான செய்வாங்க?’ என்று புரியாமலே கிளம்பினாள்.

நீதிமன்றத்தில் காதம்பரி மட்டும் தனியாக வந்திருக்க, ஜாக்ஷியும் தனியாக சென்று நின்றாள்.

அவளோடு ஜகதீஸ்வரி வராததை பார்த்து, காதம்பரிக்கு கோபம் வந்தது.

“எங்கடி எங்கம்மா?”

“பார்ரா..! கோர்ட்ல கேஸ் போட்டுட்டு எங்கம்மாவாம்ல?”

“ஓவரா பேசாதடி. எங்க அவங்க? அவங்க வராம நீ ஏன் வந்து நிக்கிற?”

“என்னை பார்த்தா பயமா காதம்பரி?”

“உன்னை பார்த்து? அடியே உன்னை பெத்தவடி நான்”

“அந்த ஒரு காரணத்துக்காக தான் நீ இன்னும் உயிரோட இருக்க. பெத்த தாய கொன்ன பாவம் வேணாம்னு விட்டு வச்சுருக்கேன்”

“என்ன மிரட்டலா? எங்க செஞ்சு பாரேன்”

காதம்பரி கோபமாக பேச, ஜாக்ஷியின் காதில் வீராவின் வார்த்தைகள் தான் ஒலித்தது.

“செய்யனும்னு இருந்தா உன் கிட்ட சொல்லிட்டுலாம் இருக்க மாட்டேன். ஆனா உன்னை கொல்லுறத விட, இப்படி உன்னை அலைய விட்டு வேடிக்கை பார்க்க நல்லா இருக்கு.”

“திமிரு.. உடம்பெல்லாம் திமிருடி. உன் அப்பன போல திமிரு. அத்தனையும் இறக்கி காட்டுறேன்”

“ஐம் வெயிட்டிங் மிஸஸ் காதம்பரி. உன்னால முடிஞ்சத பார்த்துக்க. ஆமா.. கேள்வி பட்டேன். உன் புருஷனோட தொழில்ல நிறைய பிரச்சனையாமே? நீ கூட இருந்தா எவனுமே நல்லா இருக்க மாட்டான் போல?”

“ஏய்..”

“உஸ்ஸ்… என்ன அடிக்கனுமா? அதுவும் கோர்ட்ல வச்சு? கைய நீட்டு… தூக்கி உள்ள வைக்க சொல்லுறேன்”

“இருடி.. இதுக்கெல்லாம் சேர்ந்து அனுபவிப்ப” என்று விட்டு விருட்டென சென்று விட்டார்.

‘பரவாயில்ல கூலாவே பேசுறது கூட நல்லா தான் இருக்கு. காதம்பரி மூஞ்சி தான் சிவந்து போச்சு.’ என்று நினைத்து சிரித்தபடி உள்ளே சென்றாள்.

விசாரணைக்கு வழக்கு வந்தது. சொத்து வேண்டும் என்பதை அந்த வக்கீல் பல வார்த்தைகளால் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘ச்சே இதுங்களால கோர்ட் டைம் தான் வேஸ்ட்.’ என்று தான் ஜாக்ஷிக்கு தோன்றியது.

பேச்சு விவாதம் முடிந்து, அடுத்த மாதம் ஜகதீஸ்வரி நீதிமன்றம் வர வேண்டும் என்பதை சொல்லி விட்டு கிளம்ப சொன்னார் நீதிபதி.

“அடுத்த ஹியரிங்க்கு உங்க பாட்டி வரனும் மேடம்” என்று வக்கீல் சொல்ல, “அவங்கள்ளாம் வரலாம் மாட்டாங்க. நீங்க சும்மா ஜாலியா விடுங்க. காதம்பரியே அடுத்த ஹியரிங்க்கு வர முடியாம செய்யுறேன்” என்று விட்டு கிளம்பி விட்டாள்.

அலுவலகம் சென்றதும், ஜகதீஸ்வரியிடமிருந்து அழைப்பு வந்தது.

“இப்ப தான் வக்கீல் போன் பண்ணாரு ஜாக்ஷி.”

“பார்த்துக்கலாம் பாட்டி.. காதம்பரிக்கு நான் கொடுக்குற டார்ச்சர்ல அடுத்த ஹியரிங்க்கு வர நேரம் இருக்காது. விடுங்க”

“சரிமா.. நீ வேலைய பாரு” என்று வைத்து விட்டார்.

*.*.*.*.*.*.*.

அடுத்த ஒரு வாரம் கடந்தது…

சுபத்ராவிற்கு பேசப்பழகிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவளும் மெல்ல பேச ஆரம்பித்தாள்.

மீண்டும் பேசுகிறோம் என்பதே, அவளுக்கு அவ்வளவு சந்தோசமாக இருந்தது. ஆனால் அதிகமாக பேச முடியாது. சிகிச்சை நேரம் மட்டும் பேசி விட்டு மற்ற நேரம் அமைதியாய் தான் இருக்க வேண்டும். ஜாக்ஷியிடமும் வீராவிடமும் பேசிக் காட்டி விட்டு, மற்ற நேரம் அமைதியாய் இருந்தாள்.

அறையில் இருந்த நேரம் போக, மருத்துவமனையில் உலாவிக் கொண்டே நேரத்தை போக்கினாள். யாரிடமும் பேசுவதில்லை. இன்னும் பயம் தீரவில்லை. எல்லோரிடமும் ஒதுங்கி தான் இருந்தாள்.

நடந்து கொண்டே கேன்டீன் பக்கம் வந்திருக்க, ஒருவன் ஒரு சிறுவனை சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

“அழுகாதடா.. என்னால முடியல” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.

விட்டால் அவனோடு சேர்ந்து அழுதுவிடுவான் போல் இருந்தது.

“எனக்கு பாப்பாவ பார்க்கனும். கூட்டிட்டு போ” என்று சிறுவன் கத்த, “பாப்பாவ நாளைக்கு தான்டா பார்க்க முடியும். இங்க வா ஐஸ்கிரீம் வாங்கி தர்ரேன்” என்று திசை திருப்ப பார்த்தான்.

“எனக்கு பாப்பா தான் வேணும்” என்று கதறியவனை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான். சுற்றியிருந்தவர்கள் வேறு, அவன் அழுவதை திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சுபத்ரா அவர்கள் அருகே சென்று அமர்ந்து, இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

அவள் கவனிப்பதை பார்த்து விட்டு, “சாரிங்க” என்றான் பெரியவன்.

“ஏன் அழுறான்?” என்று சைகையில் கேட்க, அவன் புரியாமல் விழிக்க, அழுது கொண்டிருந்தவன் அவளை சுவாரஸ்யமாக பார்க்க ஆரம்பித்து விட்டான்.

“என்ன கேட்குறீங்கனு புரியல?”

கைபேசியை எடுத்து எழுதிக் காட்டினாள்.

“அதுவா.. இவனுக்கு தங்கச்சி பாப்பா பொறந்துருக்கு. இப்போ இன்குபேட்டர்ல இருக்கு. அவள காட்ட சொல்லி அழுறான். நான் என்னனு காட்டுறது?”

“வெளிய இருந்து பார்க்கலாம்ல?”

“அப்படி காட்டுனா அடுத்து தூக்கனும் பக்கத்துல கூட்டிட்டு போனு அழுவான். சரியான பிடிவாதக்காரன்” என்று முறைத்தான் பெரியவன் சிறியவனை.

“எனக்கு பாப்பா வேணும்” என்று சிறியவன் மீண்டும் அழத்தாயாராக, சுபத்ரா அவனை தலைசாய்த்து பார்த்தாள்.

பிறகு ஒரு சிரிப்போடு, “நீ அழுதா நல்லாவே இல்ல” என்று எழுதிக் காட்டி விட்டு சிரித்தாள்.

அதை அவன் படிக்க முடியாமல் திணற, பெரியவன் படித்துச் சொன்னான்.

“நீ அழுதா நல்லா இல்லையாம்டா” என்று பெரியவன் சிரிக்க, “சித்தப்பா..” என்று சினுங்கினான்.

“பாரு மறுபடியும் அழுற.. ரொம்ப கேவலமா இருக்க போ”

“இல்ல.. நான் நல்லா தான் இருக்கேன்”

“அழாம இருந்தா தான் குட் பாய்.” என்று சுபத்ரா சொல்ல, அதை பெரியவன் மொழி பெயர்க்க, சிறியவன் கோபமாக திரும்பிக் கொண்டான்.

“அப்பாடா.. இப்ப தான் என் காதுக்கு விடுதலை கிடைச்சுருக்கு”

“எனக்கு ஐஸ்கிரீம் வேணும்” என்று கேட்டவனுக்கு, உடனே வாங்கிக் கொடுத்தான்.

“தாங்க்ஸ்ங்க. ரொம்ப நேரமா இவன சமாளிக்க முடியாம திணறிட்டு இருந்தேன்”

சுபத்ரா தலையாட்டி வைத்தாள்.

“என் பேரு முருகன். உங்க பேரு?”

“சுபத்ரா”

“இங்க பேஷண்டா? கழுத்துல காயமோ?”

தலையை ஆட்டி வைத்தாள்.

“உங்க கூட யாரும் இல்லையா?”

“இருக்காங்க. பட் இப்ப இங்க இல்ல.”

“இவனோட அப்பா என் அண்ணன். வெளியூர்ல மாட்டிக்கிட்டாரு. என் மொத்த குடும்பமும் அண்ணிய பார்த்துட்டு இருக்காங்க. குறை பிரசவம். இவன நான் இங்க சமாளிக்க வேண்டியிருக்கு. பாருங்க.. இவ்வளவு அழுதுட்டு ஐஸ்கிரீம் சாப்பிடுறத.. எனக்கு கொஞ்சம் கொடுடா” என்று சிறியவனிடம் கேட்க, அவன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

“அடேய்.. நான் வாங்கி தந்துருக்கேன். எனக்கு தர மாட்டியா?” என்று அவன் சண்டை போட, சுபத்ரா புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
29
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. இந்த முருகன் யாரு..? சுபத்ராவோட ஜோடியோ…?

      😀😀😀
      CRVS (or) CRVS 2797