Loading

 

சுபத்ரா பாவமாக பார்க்க, “உனக்கு உன் குரல் திருப்பி வேணுமா? வேணாமா?” என்று கேட்டான் வீரா.

மேலும் கீழும் தலையாட்டினாள்.

“அப்ப செக் அப் போகனும்ல?”

“இவளுக்கு ஹாஸ்பிடல பார்த்தாலும் பயம். நம்ம ஹாஸ்பிடல்னு சொல்லுறேன். அப்பவும் மாட்டேன்னு சொல்லுறா” என்று ஜாக்ஷி முறைக்க, “எனக்கென்னமோ இவளுக்கு ஊசிய பார்த்து பயம்னு தோனுது” என்றான் வீரா.

சுபத்ரா திருதிருவென விழிக்க, “ஏய் அப்ப ஊசிய பார்த்து தான் பயமா உனக்கு? அடப்பாவி! இன்னும் நீ வளரவே இல்லையா? உன் வயசென்ன தெரியுமா? இருபது. இன்னும் பதினாற விட்டு வெளியவே வராம இருக்காளே.. கடவுளே” என்று சலித்துக் கொண்டாள் ஜாக்ஷி.

“ஊசிக்கு பெரியவங்க கூட பயப்பட தான் செய்வாங்க. அது தப்பில்ல. ஆனா போனதும் ஊசி போட மாட்டாங்க. செக் அப் தான் பண்ணுவாங்க”

“ஆப்ரேஷன் பண்ணி என் கழுத்த அறுத்தா?” என்று சுபத்ரா கண்ணை விரித்து பயந்தபடி கேட்க, “அறுக்க நீ என்ன ஆடா? கோழியா? லூசு” என்று அவள் தலையில் அடித்தாள் ஜாக்ஷி.

சுபத்ரா தலையை தடவிக் கொண்டு வீராவை பார்க்க, “அப்படி அறுக்கலாம் மாட்டாங்க. முடிஞ்ச வரை ஈசியா பண்ண தான் பார்ப்பாங்க. முதல்ல செக் அப் பண்ணுவோம். அப்புறம் டாக்டர் சொல்லுறத வச்சு, மேல என்ன செய்யலாம்னு யோசிப்போமே?” என்றான் அவன் சமாதானமாக.

சுபத்ரா தீவிரமாக யோசிக்க, அருகே வந்தான்.

“என்ன ட்ரீட்மெண்ட் பார்க்கலாமா?” என்று கேட்டான்.

அவனை அவள் பயத்துடனே பார்க்க, அவள் தலையை பிடித்து மேலும் கீழும் ஆட்டி வைத்தான்.

“அவ்வளவு தான் தலையாட்டிட்டா.. நீ அப்பாயிண்ட்மெண்ட் வாங்கு. நான் கிளம்புறேன் வேலை இருக்கு” என்று வீரா கடகடவென பேசி வைக்க, சுபத்ரா அதிர்ந்து விழித்தாள்.

அவன் கிளம்பிச் சென்ற வேகத்தை பார்த்து, ஜாக்ஷிக்கு சிரிப்பு வந்தது.

“ஒழுங்கா நீயாவே சம்மதிச்சுருக்கலாம். இப்ப பார்த்தியா? அவன் இஷ்டத்துக்கு உன் தலைய ஆட்டி விட்டுட்டு போயிட்டான்” என்று சிரித்தவள், உடனே கைபேசியை எடுத்து மருத்துவமனையில் பேச ஆரம்பித்தாள்.

“நாளைக்கு காலையிலயே அப்பாயிண்ட்மண்ட் வாங்கிருக்கேன். பயப்படாம இரு. நம்ம ஹாஸ்பிடல் தான் பார்த்துக்கலாம் என்ன?” என்று விட்டு ஜாக்ஷியும் கிளம்பிச் சென்று விட்டாள்.

சுபத்ரா கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.

‘ஊசியா? ஆப்ரேஷனா? ரெண்டுமே இல்ல.. காசு.. எவ்வளவு செலவாகும்? இவங்க எனக்காக அவ்வளவு செலவு பண்ணுறத எப்படி ஏத்துக்கிறது? என்னை பெத்தவங்க பணத்துக்காக என்னை விக்க பார்க்குறாங்க. இங்க யாரோ ஒருத்தர், என் மேல உயிர வச்சு, பணத்த செலவு பண்ணி குரல கொண்டு வர பார்க்குறாங்க. என்ன செய்யுறதுனே தெரியல. வீட்டுல தண்டமா இருக்கேன். எனக்கு இவ்வளவு செலவு பண்ணனுமா?’

அவள் மனதில் ஓடியதை சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். ஜாக்ஷிக்கு செலவு வைக்க கூடாது என்பதில், அவள் எப்போதும் தீவிரமாகத்தான் இருப்பாள். அதிகமாக எதையும் கேட்டது இல்லை.

வீட்டில் ஜாக்ஷிக்காக சமைத்து வைப்பதே, அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் இந்த மருத்துவ செலவு? அதை எப்படி ஏற்பது? இதில் படிக்க வேறு வைப்பதாக சொல்கிறாள். அதற்கும் செலவாகுமே?

எல்லாம் யோசித்தபடி அமர்ந்து விட்டாள்.

*.*.*.*.*.*.*.*.

ஜாக்ஷி அலுவலகத்தில் அமர்ந்திருக்க, அவளது பிஏ வந்து நின்றாள்.

“மேடம்..”

“என்ன?”

“வினய் உங்கள பார்க்க வந்துருக்கான்”

“வாட்?”

“கீழ ரிசப்ஷன்ல நிக்கிறான்”

“அவனுக்கு இங்க என்ன வேலை? அவன தனியா கூட்டிட்டுப் போய் என்னனு கேளு. அப்புறமா நான் பேசுறேன்”

அவள் தலையாட்டி விட்டு சென்று விட, “கவிதா பிரச்சனையா? வீரா கிட்ட சொல்லுவோமா?” என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

பிஏ வினய்யை ஒரு அறையில் அமர வைத்து, அவனுக்கு பழச்சாறு வர வைத்தாள்.

“மேடம் முக்கியமான வேலையில இருக்காங்க. அது வரை இங்க உட்காரு”

அவன் அமர்ந்ததும், “இப்படி தீடீர்னு வந்து நிக்கிறியே.. உன் அம்மாவுக்கு இது தெரியுமா?” என்று கேட்டாள்.

“சொல்லல. காலேஜ் விட்டு நேரா இங்க வர்ரேன்”

மணியை திருப்பிப் பார்த்தாள்.

“இது காலேஜ் விடுற நேரமில்லயே?”

“அது எதுக்கு உங்களுக்கு? நான் ஜாக்ஷிய பார்க்கனும். அவங்க கிட்ட பேச ஏற்பாடு பண்ணுங்க போதும்”

“இப்ப எதுக்கு கோபப்படுற? திடீர்னு யாரு வந்து நின்னு மேடம பார்க்கனும்னு சொன்னாலும், உள்ள விட்டுருவோம்னு நினைப்பா?”

“நான் ஒன்னும் யாரோ இல்ல”

“அப்படியா? யார் நீ?”

“நான்… வந்து… நான்..”

“சொல்ல முடியலல? அதுக்கு தான் எதாவதுனா என் கிட்ட சொல்லு. நான் முடிஞ்சா சால்வ் பண்ணுறேன்.”

“அதெல்லாம் உங்களால சால்வ் பண்ண முடியாது. ஜாக்ஷியால தான் முடியும்”

“சரி ஆனா அவங்க உனக்காக உடனே செய்வாங்களா?”

அந்த சந்தேகம் இருக்கத்தான் செய்தது. ஆனால் இதை விட்டால் வேறு வழி இல்லையே.

“அவங்க உன்னை பார்த்ததும் வெளிய துரத்திட்டா என்ன செய்வ?” என்று மிரட்டியவள், “அட்லீஸ்ட் அவங்க கிட்ட ரெகமண்ட் பண்ணவாச்சும் என் ஹெல்ப் வேணாமா உனக்கு?” என்று கேட்டு வைத்தாள்.

அவன் அமைதியாக இருக்க, “எப்படியும் உன்னையோ உன் குடும்பத்தையோ மேடம் மதிக்க போறது இல்ல. நீ சின்ன பையன்னு நான் உட்கார வச்சு பேசுற மாதிரி, அவங்க கிட்ட நீயே எதிர்பார்த்துருக்க மாட்டா. எதுனாலும் சொல்லு. ஒரு வேளை உனக்கு மேடம் ஹெல்ப் பண்ணலனா, நான் பாவம் மேடம். தேடி வந்தவன துரத்தாதீங்கனு நாலு வார்த்தை எடுத்து சொல்லுறேன். இல்ல நீயே பேசிக்குவனா.. இதுக்கு மேல உன் இஷ்டம்” என்று முடித்து விட்டு தோளை குலுக்கினாள்.

‘ஜாக்ஷி கிட்ட கெஞ்சி தான் ஆகனும். ஆனா அம்மாவுக்கு தெரிஞ்சு விசம் வச்சு சாகுறத விட, கெஞ்சியே கேட்கலாம். இவங்களும் சொன்னா நல்லா தான் இருக்கும்’ என்று முடிவுக்கு வந்தவன் சொல்லவும் செய்தான்.

“இது என் காலேஜ் மேட்டர்.. ஒரு பொண்ணு.. கவிதா.. என்னை பத்தி பிரின்சிபல் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுவேன்னு சொல்லுறா. அவ ஜாக்ஷி சொன்னா கேட்பா. அதான் இங்க வந்தேன்”

“யாரு அந்த பொண்ணு? போலீஸ் கேஸாச்சே அந்த பொண்ணா?”

“உங்களுக்கு எப்படி தெரியும்?”

“மேடம் சொன்னாங்க. அந்த பொண்ணு பக்கம் போகாதனு சொன்னாங்களாமே. இப்ப என்ன மறுபடியும் பிரச்சனை?”

“அவ ஃபோன காணோமாம். நான் தான் எடுத்தேன்னு சொல்லுறா. நான் எடுக்கல. ஆனா அது என் பேக்ல இருந்துச்சு”

“நீ எடுக்காம எப்படி உன் பேக்ல வந்துச்சு?”

“சத்தியமா எனக்கு தெரியல. எவனோ எடுத்து போட்டுருக்கான். அவ நான் தான் திருடிட்டேன்னு கம்ப்ளைண்ட் பண்ணுவேன்னு சொல்லுறா. கம்ப்ளைண்ட் பண்ணா எங்கம்மாவுக்கு விசயம் தெரியும். அப்புறம் நான் செத்தேன்.”

“அடுத்தவன் எடுத்து போடுறானா? யாரு போட்டானு தெரியுமா?”

“தெரியாது. ஆனா அவ நம்ப மாட்டேங்குறா. என் மேல இருக்க கோபத்துக்கு, இப்ப பழி வாங்க பார்க்குறா. ஒரு வேளை அவளே கூட போட்டுட்டு, என்னை மாட்டி விட பார்க்குறாளோனு தோணுது. நான் தப்பே பண்ணாம மாட்டிக்கிட்டேன்”

“உண்மையாவே நீ பண்ணலயா?”

“என் அம்மா மேல சத்தியமா நான் எடுக்கவே இல்ல.”

“சரி இத சொன்னா மேடம் ஹெல்ப் பண்ணுவாங்கனு தான் தோணுது. ஜூஸ குடி. அவங்க வேலைய முடிச்சுட்டாங்களானு பார்த்துட்டு வர்ரேன்” என்று எழுந்து சென்றாள்.

விசயத்தை ஜாக்ஷியின் காதில் போட்டாள்.

“பொய் சொல்லலயே?”

“இல்லனு தான் தோணுது மேடம்”

“சரி வெயிட் பண்ணு” என்று அனுப்பி விட்டு, வீராவை அழைத்தாள்.

அவனிடம் விசயத்தை சொல்ல, “கவிதா கிட்ட பேசுறேன்” என்றான்.

“இப்பவே கேளு. நானும் அவன என்னனு கேட்குறேன்” என்று விட்டு வைத்தாள்.

வீரா கவிதாவை அழைத்துக் கேட்டான். அதையே தான் சொன்னாள்.

“காலையில க்ளாஸ்ல வச்சுட்டு லேப்க்கு போயிட்டேன்ணா. வந்து பார்த்தா காணோம். லேப்க்கு லேட்டா வந்தது அவன் தான். எல்லாரும் பேக்லயும் தேடி தான், அவன் பேகையும் பார்த்தேன். அதுல இருந்துச்சு”

“அவன் பேக்ல வேற யாராவது போட்டுருக்கலாம்ல?”

“அப்படி தான் அவன் சொல்லுறான். ஆனா அவனுக்கும் எனக்கும் இருக்க பிரச்சனை, வெளிய யாருக்குமே தெரியாதே. அப்படி பார்த்தா என் ஃப்ரண்ட்ஸ், இல்லனா அவன் ஃப்ரண்ட்ஸ் தான் பண்ணிருக்கனும். அவன் ஃப்ரண்ட் யாரும் இன்னைக்கு காலேஜ்க்கு வரல. என் ஃப்ரண்ட்ஸ் என் கூட தான் இருந்தாங்க”

“அவன் தான் எடுத்தாங்குறதுக்கும் ஆதாரம் இல்ல. அவன் எடுக்கலங்குறதுக்கும் ஆதாரம் இல்ல அப்படித்தான?”

“ஆமாணா”

“காலேஜ் முடிஞ்சு ஹாஸ்டல் போயிட்டியா?”

“இன்னும் இல்ல.”

“அப்ப நான் நேர்ல வர்ரேன். இத இன்னைக்கே பேசிடுவோம்”

அழைப்பை துண்டித்தவன், ஜாக்ஷிக்கு செய்தி அனுப்பி விட்டு கிளம்பி விட்டான்.

ஜாக்ஷியும் அங்கே விசாரித்துக் கொண்டு தான் இருந்தாள்.

“நீ எடுக்கலனா? வேற யாரு எடுத்து போட்டது?”

“அது எனக்கு தெரியல”

“அப்புறம் நீ எடுக்கலனு எப்படி நம்புறது?”

“நான் எடுக்கல.. நான் எடுத்தா அவள மிரட்ட தான் எடுப்பேன். அதையும் அவ கிட்ட சொல்லிட்டே செய்வேன். இது நான் பண்ணல”

“சரி.. நீ பண்ணலல? அப்புறம் ஏன் என் கிட்ட வந்து நிக்கிற? உன் அப்பா கிட்ட சொல்ல வேண்டியது தான?”

“அவ நீங்க சொன்னா தான் கேட்பா. அதான்”

“ஓஹோ.. சரி நானே பேசுறேன். அதுக்கு முன்னாடி உன் பேரன்ட்ஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணுறேன்” என்று கைபேசியை எடுத்தாள்.

“வேணாம் வேணாம்” என்று பதறி விட்டான்.

“ஏன்?”

“அவங்களுக்கு சொல்ல வேணாம். நீங்களே பேசுங்களேன் ப்ளீஸ்”

“உன்னை பெத்தவங்க கிட்ட சொல்லாம எப்படி?”

“வேணாம் ப்ளீஸ்”

“நீ பதறுறத பார்த்தா நீ தான் ஃபோன எடுத்த போல?”

“இல்ல இல்ல.. சத்தியமா நான் எடுக்கல.”

“அப்புறம் ஏன் சொல்ல வேணாங்குற?”

அவன் அமைதியாக இருக்க, “பதில் சொல்ல மாட்டியா?” என்று கேட்டாள்.

“ப்ளீஸ் நீங்களே பேசி அவள கம்ப்ளைண்ட் பண்ண வேணாம்னு சொல்லுங்களேன்.”

“இன்னும் நான் கேட்டதுக்கு பதில் வரலயே?”

தலையை தொங்க போட்டு தரையை பார்த்தவன், “தெரிஞ்சா சோத்துல விசம் வச்சு கொன்னுடுவாங்க” என்றான்.

“அப்படினு மிரட்டுனாங்களா?”

“இல்ல”

“முழுசா சொல்லு வினய். இல்லனா என் ஹெல்ப்ப எதிர்பார்க்காத”

மளமளவென அசோக் சொன்னதை ஒப்பித்து விட்டான்.

“இப்ப விசயம் தெரிஞ்சா, எனக்கும் விசம் வச்சு கொன்னுடுவாங்க.. சொல்லாதீங்க ப்ளீஸ்” என்று கெஞ்சினான்.

‘காதம்பரிக்கு தைரியம் டூ மச்சா இருக்கே. விசம் வைக்கிற அளவு போகுமா?’ என்று நினைத்தவளுக்கு, வினய்யை பார்த்து பாவமாகத்தான் இருந்தது.

சட்டென எதோ தோன்ற, “வீட்டுல சாப்பிட்டு எத்தனை நாளாகுது?” என்று கேட்டாள்.

அதிர்ந்து போய் பார்த்தான்.

“இத கேட்டதுல இருந்து ஒரு வாய் கூட வீட்டுல சாப்பிட்டுருக்க மாட்டியே?” என்று கேட்க, ‘இவளுக்கு எப்படி தெரியும்?’ என்று பதறினான்.

“என்ன பதில் எங்க?”

“ஆமா சாப்பிடுறது இல்ல. கேன்டீன்ல சாப்பிடுறேன்”

“அவ்வளவு உயிர் பயம்?”

“எதாவது கோபம் வந்து பண்ணிட்டா?”

“காதம்பரி செய்ய கூடிய ஆள் தான். இப்ப கிளம்பு. கவிதா கிட்ட நேரடியா பேசலாம்”

உடனே சந்தோசமாக எழுந்தான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
23
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. வினய் பயத்திலே நல்லவன் ஆகிடுவான் போல.

    2. கவிதாவோட செல்போனை யார் எடுத்து வினயோட பேக்ல போட்டது..? புது வில்லனோ ?

      😀😀😀
      CRVS (or) CRVS 2797