மாலையாகி இருந்தது. சுபத்ரா அறையை விட்டு வெளியே வரவில்லை.
‘இவ இன்னும் தெளியல போல. வெளிய ஆர்டர் போட்டுரலாம்’ என்று ஜாக்ஷி உணவை ஆர்டர் போட்டு விட்டு அமர்ந்திருக்க, வக்கீலிடமிருந்து அழைப்பு வந்தது.
“ஹலோ சார்”
“மேடம்.. ஊர்ல இருந்து வந்தாச்சா?”
“நான் மட்டும் தான் வந்துருக்கேன். பாட்டி வரல.”
“எப்ப வருவாங்க?”
“ஒரு வாரம் ஆகும். ஏன்? எதாவது பிரச்சனையா?”
“காதம்பரி மேடம் கேஸ் போட்டுருக்காங்க. சொத்து கேட்டு”
“எப்போ?”
“சம்மன் வீட்டுக்கு வந்துருக்கு. வாட்ச்மேன் தான் கொண்டு வந்து என் கிட்ட கொடுத்தாரு. நீங்களே ஊர்ல விசேசத்துக்கு போயிருக்கீங்க. வரவும் பேசலாம்னு வெயிட் பண்ணேன்”
“ஓஹோ.. கேஸ் போட விடாம பார்த்துக்கலாம்னு பாட்டி சொன்னாங்களே?”
“இது பழைய ஆள் இல்ல. வெளி மாநில ஆள் ஒருத்தர வச்சு போட்டுருக்காங்க. அதான் விசயம் நமக்கு வரல”
“ஓஹோ.. நாளைக்கு நேர்ல மீட் பண்ணலாம். மேல என்ன செய்யுறதுனு பேசலாம்”
“ஓகே ஆஃபிஸ்க்கு வந்துடுங்க” என்று விட்டு வைத்து விட்டார்.
‘காதம்பரிக்கு திமிர் கூடிருச்சு போலயே.. உன்னை சும்மா விட்டா ஆடுறல? இரு சலங்கை ஒன்ன கட்டி விடுறேன்’ என்று நினைத்தவள், என்ன செய்வது என்று அப்போதே முடிவு செய்து கொண்டாள்.
அதே யோசனையில் அமர்ந்திருக்க, சுபத்ரா அறையை விட்டு வெளியே வந்தாள்.
ஜாக்ஷி நிமிர்ந்து பார்த்தாள். நிறைய அழுததில் முகம் சிவந்து இருந்தது. வீங்கியும் இருந்தது. அதைக்கேட்டு மேலும் அழ வைக்காமல், அருகே அழைத்தாள்.
“இங்க வா.. இப்ப ஓகேவா?”
சுபத்ரா தலையாட்டி வைக்க, “சாப்பாடு வெளிய ஆர்டர் போட்டேன். நீ எதுவும் செய்ய வேணாம். உட்காரு.. எதாவது படம் பார்க்கலாம்” என்றாள்.
சுபத்ரா அவளை இமைக்காமல் பார்க்க, “என்ன?” என்றாள்.
“ரொம்ப தாங்க்ஸ்”
“எதுக்கு?”
“இப்ப மனசு கொஞ்சம் ஆறுதலா இருக்கு”
“நீ பேசுனதெல்லாம் ஒரு பேச்சுனு உனக்கு ஆறுதல் வருதா? நாலு கேள்வி.. அதுவும் கோபமா கூட கேட்காம அழுதுட்டே கேட்டுட்டு சரியாகிட்ட. இன்னும் நீ வளரனும் பாப்பா”
“ஆனா அத தவிர எதுவும் எனக்கு கேட்க தோணல”
“அது சரி.. எப்படியோ இப்ப நல்லா இருக்குல? இனி பயப்படாம இருப்பல?”
“ஆமா.. கம்பிக்கு பின்னாடி பார்த்தப்புறம் தான் மனசு நிம்மதியா இருக்கு”
“அதுங்க ஜெயிலுக்கு போகும் போது நீ மைனர்.. முக்கியமா உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல்ல இருந்தனு கோர்ட்க்கு கூட்டிட்டு போகாம விட்டோம். இப்ப ஐடியா கொடுத்தது பத்ரா தான். ஒரு தடவ பார்த்து பேசிட்டா சரியாகிடுவனு சொன்னான்”
“அப்ப அண்ணனுக்கும் தாங்க்ஸ் சொல்லனும்”
“அவன் வரும் போது சொல்லு. இப்ப போரடிக்குது. டிவிய போடு. நாளைக்கு தான் ஆஃபிஸ் போகனும்”
சுபத்ரா சந்தோசமாக அவளோடு அமர்ந்து கொண்டாள்.
அடுத்த நாள் வக்கீல் முன்னால் இருந்தாள் ஜாக்ஷி. சம்மனை படித்து முடித்த பின், அவளது முகத்தில் யோசனை ஓடியது.
“பாட்டிய கோர்ட்க்கு வர சொல்லி இருக்காங்க”
“ஆமா மேடம். இந்த கேஸ் ரொம்ப நாள் நிக்காது. தாத்தா சொத்து பேத்திக்குனு உங்களுக்கு தான் வரும். ஆனா அவங்க மகனு பாதி கேட்க வாய்ப்பிருக்கு”
“கொடுத்துட்டு தான் மறு வேலை”
“இப்ப என்ன செய்யலாம்னு இருக்கீங்க?”
“ஒரு.. ஒரு மாசத்துக்கு காதம்பரியால இத பத்தி நினைக்கவே முடியாத அளவுக்கு வேலை வைக்கிறேன். அப்புறம் கோர்ட்ல என்ன பண்ணலாம்னு பாட்டி வந்ததும் பேசலாம்.”
“ஓகே மேடம்”
“மத்த கேஸ் என்னாச்சு? அத பத்தி சொல்லுங்க” என்று கேட்டு பேசி முடித்து கிளம்பினாள்.
அன்று மாலை வீரா ஜாக்ஷியை அழைத்தான்.
“என்ன பத்ரா?”
“என்ன செய்யுற?”
“வேலை பார்த்துட்டு இருக்கேன். ஏன்?”
“சும்மா கேட்டேன்மா”
“நீ எங்க இருக்க?”
“வீட்டுக்கு வந்துட்டேன். சுபத்ரா எப்படி இருக்கா?”
“இப்ப கொஞ்சம் நல்லா இருக்கா. உனக்கு தாங்க்ஸ் சொல்லனும்னு சொன்னா”
“ஓஹோ.. சரியாகிட்டாளே.. அது போதும்”
“நான் உன் வீட்டுக்கு வரவா?”
“ஏன்?”
“மூணு நாளா எல்லா நேரமும் கூடவே இருந்துட்டு, திடீர்னு நீ இல்லாம ஒரு மாதிரியா இருக்கு”
“ஒரு மாதிரினா?” என்று சிரிப்போடு கேட்டான்.
“என்னனு தெரியலயே”
“இதுக்கு பேரு மிஸ் பண்ணுறது ஜக்கம்மா”
“இதானா அது? இப்ப தான் தெரியுது”
“ஆமா.. நான் கூட உன்னை மிஸ் பண்ணேன்னு தான் கால் பண்ணேன்.”
“ஆஹான்”
“வீட்டுக்கு வா. சாப்பிட்டு பேசிட்டு போகலாம்”
“எனக்கும் இந்த கேஸ்ல ஹெல்ப் வேணும். பத்து நிமிஷத்துல கிளம்பி வர்ரேன்”
“ஓகே” என்றவன் வைக்காமல் இருக்க, ஜாக்ஷிக்கு சிரிப்பு வந்தது.
“வைடா.. நேர்ல வர்ரேன். பை” என்க, சிரித்துக் கொண்டே துண்டித்தான்.
வேலைகளை அவசரமாக முடித்து விட்டு, உடனே கிளம்பியிருந்தாள்.
பால் காய்ச்சும் போது மட்டும் தான் வந்திருந்தாள். இன்று மீண்டும் வந்து அழைப்பு மணியை அழுத்த, கதவை திறந்தான் வீரா.
“உள்ள வா”
“நீ மட்டும் தனியா தான் இருக்கியா?” என்று உள்ளே வந்ததுமே கேட்க, “இல்ல.. என் கூட ரெண்டு பேய் ஒரு குட்டி சாத்தானும் இருக்கு. பார்க்கனுமா?” என்றான்.
“நக்கலா? தனியா இருந்து இவ்வளவு சுத்தமா வச்சுருக்கியேனு கேட்டேன்”
“எல்லாருமே உன்னை மாதிரி கலைச்சு போட்டு வச்சுருப்பாங்களா? உட்காரு.. தண்ணிய குடி வர்ரேன்” என்று கூறி சமையலறை பக்கம் செல்ல, அவளும் பின்னால் சென்றாள்.
“சமைச்சியா? என்ன செஞ்ச?”
“வெஜ் ரைஸ். இருக்கத வச்சு அதான் பண்ண முடிஞ்சது.”
“உனக்கு சமைக்க தெரியாதுனு சொன்ன?”
“கொஞ்சமா தெரியும் ஜக்கம்மா. உனக்கும் சேர்த்தே செஞ்சேன் சாப்பிட்டு போ”
“ஓகே..”
“கையில என்ன கொண்டு வந்துருக்க?”
“என் லாப்டாப். அப்புறம்.. காதம்பரி சொத்து கேட்டு கோர்ட்ல கேஸ் போட்டுருக்கு. பாட்டிக்கு சம்மன் வந்துருக்கு”
“வாட்? எப்போ?”
“நாம ஊர்ல இருக்கும் போது. காலையில தான் வக்கீல பார்த்து பேசுனேன். காதம்பரிக்கு ஒரு வைத்தியம் பார்த்தா தான் சரி வரும்”
“என்ன செய்ய போற?”
“மிஸ்டர் அசோக் கம்பெனியில ஒரு பெரிய பிரச்சனைய இழுத்து விட்டா, காதம்பரிக்கு இத பத்தி யோசிக்க நேரமிருக்காது. இப்ப கூட அங்க இருந்து கால் வந்தா வேலைய ஆரம்பிச்சுடுவேன்”
“அவங்க கம்பெனிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”
“எந்த சம்பந்தமும் இல்ல. ஆனா அங்க என்னோட ஸ்பை இருக்கான்”
வீரா அதிர்ந்து பார்க்க, “சாக் ஆகாத. நம்ம கம்பெனிலயும் அவங்க ஸ்பை வச்சுருக்காங்க. ஏன் வீட்டுலயே இருக்கு. பாட்டி வீட்டுல ஒரு வேலைக்காரி காதம்பரிக்கு அங்க நடக்குறத எல்லாம் சொல்லுவா. தெரியுமா?” என்று சாதாரணமாக கேட்டாள்.
“என்ன இதெல்லாம்?”
“எனக்கு அந்த ஸ்பைய பிடிக்கல. துரத்துங்கனு பாட்டி கிட்ட சொன்னேன். இவள துரத்துனா, இன்னொருத்தி வருவா. அதுவும் ரிஸ்க் தான். தெரியாத பேய விட, தெரிஞ்ச பிசாசு பெருசு. இவள எங்க வைக்கனுமோ அங்க வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க. நான் தனியா வீடு பார்த்ததுக்கு இதுவும் ஒரு காரணம்”
“அதுக்காக நீ அங்க ஸ்பை வச்சியா?”
“ஆமா.”
“சொந்த கம்பெனில என்னை வச்ச மாதிரி?”
“நீ வேற.. உன்னை நான் காசு கொடுத்து எனக்காக வேலை பாருனு சொல்லல. ஆனா அவங்க என் கிட்ட காசு வாங்கிட்டு வேலை செய்வாங்க”
“இப்ப என்ன செய்ய போற?”
“அவங்க கம்பெனியில பெரிய பிராஜெக்ட் எதுனு கேட்டுருக்கேன். அதுல கை வச்சா சோலி முடிஞ்சது”
“தப்பில்லையா?”
“என் பாட்டிய கோர்ட்டுக்கு இழுத்தது மட்டும் சரியா என்ன?”
“அது தப்பு தான். சரி.. உனக்கு தோனுறத பண்ணு. இப்ப என்ன வேணும்? டீ? நான் காபி குடிக்க மாட்டேன்னு வாங்கி வைக்கல”
“அதையே போடேன். குடிச்சு பார்ப்போம்”
“இப்படி வா” என்றவன் அவளை நடுவே நிற்க, வைத்து அவள் முன்பே எல்லாம் செய்தான். தேநீர் தயாரித்து அவள் குடிக்கும் போது, ஆர்வமாக பார்த்தான்.
“நல்லா இருக்கு பத்ரா.. சுபத்ராவும் இப்படி தான் போடுவா”
“எல்லாம் அண்ணன் தங்கச்சி பாசம்”
“ரொம்ப பேசாத. எடுத்துட்டு வா. வந்த வேலைய பார்க்கலாம்” என்று விட்டு வெளியே சென்றாள்.
வேலையை பற்றி பேசி முடித்து பார்க்கும் போது, நேரம் கடந்திருந்தது.
“சாப்பிடலாமா? டைம் ஆச்சு”
“ஓகே” என்று சந்தோசமாக எழுந்தாள் ஜாக்ஷி. இருவருக்கும் தட்டில் போட்டுக் கொண்டு அமர்ந்தனர்.
ஜாக்ஷி சாப்பிட்டு பாராட்டியதும், வீராவுக்கு சந்தோசம் தாங்கவில்லை.
“அப்பத்தாவுக்கு அப்புறம் நான் சமைச்சு சாப்பிடுற முதல் பொண்ணு நீ”
“இந்த சமையலுக்காகவே உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம் போ” என்று சிரித்தவள், நன்றாக சாப்பிட்டாள்.
சாப்பிட்டு முடித்ததும் கிளம்பினாள்.
“ஓகே டைமாச்சு.. கிளம்புறேன்” என்று திரும்பியவளை, பிடித்து அணைத்துக் கொண்டான்.
“இங்க இருக்கலாமே..” என்று அவன் ரகசியமாக கேட்டது, அவளை கூச வைத்தது.
“இருக்கலாம்.. ஆனா சுபத்ரா நைட் தனியா இருக்க பயப்படுவாளே”
“ஓஹோ” என்றவன் அணைப்பை மேலும் இறுக்கினான்.
“நீ தான் அங்க வரப்போறியே.. ஆமா எப்ப வருவா?”
“நாளைக்கு”
ஜாக்ஷியின் கண்கள் அகலமாக விரிந்தது.
“நாளைக்கா? பாட்டி வர்ர வரை வரமாட்டனு நினைச்சேன். இந்த கன்னி பையனுக்கு பாதுகாப்பு இல்லாம பாட்டி துணையில்லாம.. என் வீட்டுல தங்குற அளவு தைரியம் வந்துடுச்சா?”
அவளை முறைத்தவன், குனிந்து அவளது காதில் அழுந்த முத்தமிட்டான். அதற்கே தாங்க முடியாமல் சிவந்து போனது காதுமடல்கள்.
“எல்லாத்துக்கும் சேர்த்து உன்னை கவனிக்கிறேன் வெயிட் பண்ணுடி ஜக்கம்மா” என்று காதோரம் சொல்லி விட்டு அவளை விட்டு விலக, நிமிர்ந்து பார்க்க முடியாமல் வேறு பக்கம் பார்த்தபடி செருப்பை மாட்டி வெளியேறினாள் அவள்.
அவளோடு கீழே வந்தவன், காரை எடுத்து கிளம்பிய பின்பே மீண்டும் அறைக்கு வந்தான்.
*.*.*.*.*.*.*.*.
ஜானகி வேலையை விட்டு வெளியே வர, நிர்மலன் நின்றிருந்தான்.
இரண்டு நாட்கள் அவன் தொல்லையில்லாமல் நிம்மதியாக இருந்தவள், மீண்டும் பார்த்ததும் கடுப்பாகி விட்டாள்.
“உங்க கிட்ட பேசனும்”
“எனக்கு வேற வேலை இருக்கு..”
“ப்ளீஸ் ஒரு ரெண்டு நிமிஷம்”
கடுப்போடு நின்றாள்.
“நான் சுத்தி வளைக்கல.. எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சுருக்கு. உங்க கிட்ட ஃப்ரண்ட்டா பழகிட்டு, அப்புறமா என் மனசுல இருக்கத சொல்லலாம்னு நினைச்சேன். ஐ லவ் யூங்க..”
“ஸ்டாப்.. நானும் சுத்தி வளைக்கல. உங்கள எனக்கு சுத்தமா பிடிக்கல. முக்கியமா எனக்கு எந்த ஃப்ரண்ட்டும் தேவையில்ல. என் வாழ்க்கையில பல தேவையில்லாத பிரச்சனைகள்ள நீங்க ஒரு ஆள். ப்ளீஸ் போய் வேற வேலை இருந்தா பாருங்க. என்னை இனி தொல்லை பண்ணாதீங்க”
“நான்..”
“ரெண்டு நிமிஷம் முடிஞ்சு போச்சு.” என்றவள், உடனே விலகிச் சென்று பேருந்தில் ஏறிக் கொண்டாள்.
மனம் முழுவதும் கோபமும் எரிச்சலும் தான் இருந்தது. சாதாரணமாக பல பிரச்சனைகளில் உழலும் பெண்கள், இப்படி யாராவது வந்து நான்கு வார்த்தை அன்பாக பேசி விட்டால், அவர்கள் மீது காதலில் விழுந்து விடுவார்கள். ஆனால் ஜானகி அந்த வகை இல்லை.
அவளுக்கு நிம்மதியாக மூச்சு விடத்தான் நேரமிருக்கிறது. ஒருவனை காதலித்து தொலைக்கவெல்லாம் அவளுக்கு நேரமில்லை. முக்கியமாக நிர்மலனை அவளுக்கு பிடிக்கவுமில்லை.
‘எங்க இருந்துடா வர்ரீங்க எனக்குனே?’ என்று சலிப்பாக நினைத்துக் கொண்டு வீட்டை நோக்கி செல்ல, ஜெகன் அவளுக்காக காத்திருந்தான்.
“என்னடா விசயம்?”
“ஒரு நெட்சென்டர்ல பார்ட் டைம் ஜாப் கேட்டுருக்கேன்கா. நாளைக்கு இருந்து சாயந்தரம் வர சொல்லிருக்காங்க”
“என்னடா நிஜம்மாவே வேலைக்கு போறியா?”
“ஆமாகா. காலேஜ் விட்டு நேரா அங்க போயிட்டு, ஒன்பது மணிக்கு தான் வருவேன்”
“சம்பளம்?”
“கம்மி தான். ஆனா என்னோட பஸ் செலவு, சில்லரை செலவுக்கு அது போதும். நீயே எல்லா நேரமும் கொடுக்க வேணாம். சேர்த்து வைக்கலாம்”
ஜானகிக்கு தம்பியை பார்த்து பெருமையாக இருந்தது. ஜெகன் எப்போதும் பொறுப்பானவன் தான். இன்று தம்பி வளர்ந்து விட்டதாக தோன்ற, புன்னகையுடன் அவன் தலையை கலைத்து விட்டாள்.
தொடரும்.
ஜெகன் ஜானகி சூப்பர். வீரா ரொமான்ஸ் கலக்குகிறான்
பேசாம இந்த காதம்பரியை கதம் கதம் பண்ணிடனும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797