Loading

சுபத்ராவும் ஜாக்ஷியும் ஆளுக்கொரு பக்கம் நிற்க, ஜகதீஸ்வரி பொங்கலை வைத்து முடித்தார். ஊரில் பலர் வைத்திருக்க, கூட்டம் அலை மோதியது. சாமிக்கு படைத்து கும்பிட்டதும் வீடு திரும்பினர்.

ஆளுக்கொரு தட்டில் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க, தாமரை வந்து விட்டார் அருளோடு.

அவரை பார்த்ததுமே வீரா பதட்டத்துடன் ஜாக்ஷியை பார்த்தான். அவளது பார்வையிலேயே தீ பறந்தது. இன்றும் காலையில், பலர் தாமரையை பற்றித்தான் வீராவிடம் பேசி வைத்திருந்தனர். அதில் வந்த கோபம் தான், இன்னும் முறைத்துக் கொண்டிருந்தாள்.

“வா தாமரை.. உட்காரு” என்று லட்சுமி சாதாரணமாக வரவேற்க, “நல்லாருக்கியாமா?” என்று ஜகதீஸ்வரி நலம் விசாரித்தார்.

சுபத்ரா யாரென தெரியாமல் ஜாக்ஷியை பார்க்க, “உங்கண்ணனோட அம்மா” என்றாள்.

“கூட இருக்கது யாரு?”

“தம்பினு நினைக்கிறேன். இவங்கள கண்டுக்காத. நீ உன் வேலைய பாரு” என்றதும், சுபத்ரா சத்தமில்லாமல் நழுவிக் கொண்டாள்.

ஜாக்ஷி அவர்களை கண்டு கொள்ளாதது போல், பொங்கலை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்.

தட்டில் இருந்த முந்திரி பருப்பை வீராவிடம் போட்டாள்.

“நீ சாப்பிட மாட்டியா?”

“ம்ஹும். நீ சாப்பிடு”

“வேற என்ன சாப்பிடுவ?”

“எனக்கு பாதாம் பிடிக்கும்”

“அதான் பாதாம் கலர்ல இருக்கியா?”

“அடேய்” என்றவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“திடீர்னு ஏன் ஐஸ் வைக்கிற?”

“சும்மா” என்றான் சிரிப்போடு.

இவர்களை பார்த்தாலும், பேச தாமரைக்கு தைரியம் வரவில்லை.

லட்சுமி, இனி ஊரில் வீராவோடு சென்று தங்கப்போவதாக சொல்லிக் கொண்டிருந்தார்.

வீராவும் ஜாக்ஷியும் தங்களது உலகில் இருக்க, வீராவின் கைபேசி இசைத்தது. யாரோ நண்பனிடம் அவன் பேச ஆரம்பிக்க, ஜாக்ஷியை லட்சுமி அழைத்தார்.

“இங்க வாடா. இதான் பேத்தி. வீராவுக்கு பார்த்துருக்க பொண்ணு. இது வீராவோட அம்மா”

“தெரியும் பாட்டி. பார்த்துருக்கேன்.”

“அப்படியா? எங்க?”

“சென்னையில.. இவங்க பொண்ண பார்க்க வந்தப்ப பார்த்தேன். நானும் வீராவும் பார்த்தோம்”

ஜகதீஸ்வரிக்கு எல்லாம் தெரியும். லட்சுமியிடம் தான் சொல்லவில்லை.

“ஓஹோ”

“நான் போய் சேன்ஜ் பண்ணுறேன்” என்று விட்டு அறைக்குச் சென்று விட்டாள்.

சேலையை மாற்றி மீண்டும் சுடிதாருக்கு வந்து விட, சுபத்ரா அவளை மேலும் கீழும் பார்த்தாள்.

“என்ன?”

“எனக்கு அந்த லேடிய படிக்கல”

சுபத்ரா சிரித்து வைத்தாள்.

“என்ன சிரிப்பு?”

எதோ சொல்ல வந்து விட்டு, கைபேசியை எடுத்து எழுதிக் காட்டினாள்.

“இப்பவே மாமியார் மருமக சண்டையா?” என்று கேட்டு வைத்திருக்க, ஜாக்ஷிக்கு சிரிப்பு வந்தது.

“உனக்கு கொழுப்பு கூடிப்போச்சு”

“அண்ணன் ஏன் அவங்க கூட இல்ல? இங்க இருக்காங்க?”

“துரத்தி விட்டுட்டாங்க. உனக்கும் எனக்கும் மட்டும் இல்ல. அவனுக்கும் பெத்தவங்க தான் பிரச்சனை.”

“பாவம் அண்ணன்”

“எனக்கு அந்த லேடிய தான் பிடிக்கல. அட்லீஸ்ட் காதம்பரி பாசம் இருக்க மாதிரி நடிக்காது. இவங்க நடிச்சு ஊர ஏமாத்தி வச்சுருக்காங்க. பார்க்குற எல்லாரும் அவன கேள்வி கேட்குறாங்க”

“கோபப்படாதீங்க அண்ணி. உங்களுக்கு மாமியார் தொல்லை எல்லாம் இருக்காது. இந்த நாத்தனார் தொல்லை மட்டும் தான்”

“அப்படிங்களா? தொல்லை பண்ணி பாரேன்… அப்புறம் தெரியும் நான் யாருனு”

இருவரும் பேசிச் சிரித்துக் கொண்டிருக்க, வீரா வந்தான்.

“நைட் கிளம்பனும்ல? பேக் பண்ணிக்கோங்க. நான் ஃப்ரண்ட்ட பார்க்க போறேன். கொஞ்ச நேரத்துல வர்ரேன்.”

“அவங்கள பார்த்து ஓடுற நீ”

“இருந்தா பாட்டிக்காக பேசனும் ஜக்கம்மா. கிளம்புறேன்”

வீரா விறுவிறுவென கிளம்பிச் சென்று விட்டான்.

“என்ன பார்வை? சாப்பிட்டாச்சுல? பேக் பண்ண ஆரம்பி”

சுபத்ராவும் ஜாக்ஷியும் பேக் செய்து கொண்டிருக்கும் போது, தாமரை வந்து நின்றார்.

சுபத்ரா அவரை பார்த்து விட்டு, ‘பேச கூடாதுனு சொன்னாங்கள்ள? அப்ப ஓடிருவோம்’ என்று நினைத்தவள், “நான் வெளிய இருக்கத எடுத்துட்டு வர்ரேன்” என்று விட்டு ஓடி விட்டாள்.

ஜாக்ஷி தாமரையை பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தாள்.

“நல்லா இருக்கியாமா?”

தலையை ஆட்டி வைத்தாள்.

“நீ வீராவுக்கு பார்த்த பொண்ணுனு அப்ப தெரியல. அதான் அவனுக்காக அவ்வளவு பேசிருக்க”

“எல்லாரும் உங்கள மாதிரியே இருப்பாங்களா? அக்கறை இல்லாம?”

“என் மேல உனக்கு நிறைய கோபமில்ல? என் பக்கமும் தப்பு இருக்கு தான்”

“ஹலோ உங்க மேல மட்டும் தான் தப்பிருக்கு. எப்படிங்க முடியுது? ரெண்டாவது கல்யாணம் பண்ணி வாழுறது உங்க சொந்த விசயம். ஆனா பெத்த பிள்ளைய அடுத்தவங்க அடிக்கும் போது, வேடிக்கை பார்த்துருக்கீங்க. உங்க வாழ்க்கைய காப்பாத்திக்கனும்னா முதல்லயே அவன இங்க விட்டுட்டு போயிருக்கலாமே. அவன அந்த பாடு படுத்தி துரத்தி விடனுமா?”

“அப்ப…”

“எனக்கு உங்க சமாதானம் எல்லாம் வேணாம். இதைக்கேட்டு நான் உங்கள மன்னிச்சு விடனுமா? முதல்ல உங்கள மன்னிக்க நான் யாரு? பெத்த பிள்ளையே உங்கள மன்னிக்க தயாரா இல்ல. நான் என்ன செய்யட்டும்?

ஆனா ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க. உங்க ரெண்டாவது வாழ்க்கைய காப்பாத்தனும்னா, அவன ஏன் கூட கூட்டிட்டு போனீங்க? எனக்கு என் வாழ்க்கை தான் முக்கியம்னு இங்கயே விட்டுருக்க வேண்டியது தான?

அப்பா இல்ல. அம்மா இருந்தும் இல்ல. பாட்டி தான் உலகம்னு வாழ்ந்துட்டு போயிருப்பான். கூட்டிட்டு போய் நோகடிச்சு அனுப்பிருக்கீங்களே. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?”

“ஜாக்ஷி..” என்று ஜகதீஸ்வரி அதட்டினார்.

சுபத்ரா வந்து சொன்னதும், ஜாக்ஷி எதாவது பேசிவிடுவாளோ என்று அவசரமாக வந்திருந்தார். அவர் பயந்தது தான் நடந்தது.

ஜாக்ஷி சட்டென திரும்பிப் பார்த்தாலும், “சும்மா இருங்க பாட்டி. யாராவது ஒருத்தர் அவனோட வலிய இவங்களுக்கு சொல்லி தான ஆகனும்? அவன் சொல்ல மாட்டான். நான் சொல்லுறேன் கேட்கட்டும்” என்றாள் கோபம் குறையாமல்.

“அதுக்கு இப்படி பேசுவியா?”

“வேற எப்படி பேசனும்? அவனோட அம்மானு மரியாதை கொடுக்கனுமா? நானும் அதுக்கு தான் ட்ரை பண்ணேன். ஆனா முடியல.. ஏங்க.. உங்களுக்கு நிஜம்மாவே உங்க புள்ளை மேல அக்கறை இருக்கா? அக்கறை இருந்தா இப்படி செய்வீங்களா?

நாலு சுவத்துக்குள்ள வச்சு உங்கள நான் கேள்வி கேட்குறேன். தாங்க முடியல. ஆனா அவன நடுரோட்டுல வச்சு போற வர்ர அத்தனை பேரும் கேள்வி கேட்குறாங்க. அதுக்கெல்லாம் நீங்க தான் காரணம்”

“என்ன சொல்லுற?”

“ஆமா பாட்டி. பாவம் அவன். இவங்க சொந்தகாரவங்க எல்லாரு கிட்டயும் போய், என் பிள்ளை என்னை ஒதுக்கிட்டான்னு அழுது ஒப்பாரி வச்சுருக்காங்க. இவங்களே அவன வேணாம்னு துரத்தி விட்டது தெரியாம, எல்லாரும் வந்து அவன திட்டுறாங்க.

என்னமோ அவன் தான் இந்த பாசமுள்ள அம்மாவ ஒதுக்கி வச்சு கொடுமை பண்ணுற மாதிரியும்.. அவன் ஒதுக்குனதால, இவங்க சாப்பிடாம பட்டினி கிடக்குற மாதிரியும், நடு ரோட்டுல வச்சு பேசுறாங்க.

நீங்களே சொல்லுங்க.. அவன நடுரோட்டுல நிறுத்தி கேள்வி கேட்க அவங்க யாரு? அவங்கள அப்படி கேள்வி கேட்க வச்சது யாரு? இவங்க தான? இவங்க பாசத்த கொட்ட வேண்டிய இடத்த விட்டுட்டு, எங்கயோ போய் கொட்டுவாங்களாம். பத்ரா அதுக்காக நடு ரோட்டுல அசிங்க பட்டு நிப்பானாம். சொந்தகாரன் ரூபத்துல நாலு பேர் தினமும் அவன எப்படி சாகடிக்கிறாங்கனு தெரியுமா இவங்களுக்கு?”

மனதில் இருந்த அனைத்தையும் கொட்ட, வாசலுக்கு வந்து விட்ட லட்சுமி காதிலும் விழுந்தது. ஆனால் யாருக்கும் அவளது கேள்விக்கு பதில் தெரியவில்லை.

“இந்த ஊரயே அவனுக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? இங்க இருக்கது அவனோட ஒரே பாட்டி. ஒரே உறவு லட்சுமி பாட்டி. அவங்கள இங்க தனியா விட்டுட்டு, அங்க வந்து வேலை பார்க்குறானே.. ஏன் தெரியுமா? இந்த ஊருக்குள்ள அவன யாருமே நிம்மதியா வாழ விடல. திரும்ப திரும்ப தூக்கி எறிஞ்ச அம்மா கால்ல நீ ஏன்டா போய் விழலனு கேட்டு கேட்டு, அவன ஊர விட்டே ஓட வச்சுட்டாங்க.

இங்க இருக்க சொத்த தாண்டி, அவன் ஊர்ல வந்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கனும்னு என்ன விதி வந்துச்சு? எல்லாம் இவங்க பண்ண வேலை. எல்லாருகிட்டயும் அழுது வச்சு, அவன கொடுமை காரனா காட்டி வச்சுருக்காங்க. என் கிட்ட சொன்னான். எனக்கு இந்த ஊர பிடிக்கும். ஆனா என் அப்பத்தா மட்டும் என் கூட வந்துட்டா, இங்க இருக்க யாரு மூஞ்சிலயும் முழிக்காம நிம்மதியா இருப்பேன்னு. அந்த அளவுக்கு அவன போட்டு படுத்திருக்காங்க”

தாமரை தரையை பார்த்தபடி நின்றார். ஜகதீஸ்வரிக்கும் வீரா விட்டத்தை பார்த்துக் கொண்டு நொந்து போய் அமர்ந்திருந்த காட்சி கண்ணை விட்டு மறையவே இல்லை.

“இங்க பாருங்க.. உங்களுக்கு உண்மையாவே அவன் மேல அக்கறை இருந்தா ப்ளீஸ்.. இனிமே யாரும் அவன நடுரோட்டுல நிக்க வச்சு கேள்வி கேட்குற மாதிரி செய்யாதீங்க. அவனோட வாழ்க்கையில நீங்க பறிச்ச நிம்மதிய இனிமேலாச்சும் அனுபவிக்க விடுங்க. ப்ளீஸ்..” என்று அழுத்திக் கேட்க, தாமரை பெருமூச்சு விட்டார்.

நிமிர்ந்து பார்த்தவர், ஜாக்ஷியை பார்த்து புன்னகைத்தார்.

தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து ஒரு பெட்டியை எடுத்தார்.

“இதுல, அத்தை என்னோட ரெண்டாவது கல்யாணத்துக்கு போட்ட நகைங்க இருக்கு. இங்க வீரா இருக்கான்னு கவிதா சொன்னா. இத கொடுத்துட்டு அவன பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். வந்ததுல அவனுக்கு நிச்சயமான பொண்ணையும் பார்த்துட்டேன். இது உனக்கு தான். வச்சுக்கோ. இது வரைக்கும் காய படுத்துனதுக்கு அவன் கிட்ட மன்னிப்பு கேட்ட நினைச்சேன். முடியாது போல. இத கொடுத்துட்டேன். நல்லா இருங்க” என்றவர், அவள் தலையில் ஆசிர்வதுப்பது போல் கை வைத்து விட்டு உடனே கிளம்பி விட்டார்.

லட்சுமியை பார்த்து விட்டு, “கிளம்புறேன் அத்த” என்றதோடு அருளையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

யாரும் அவரை தடுக்கவும் இல்லை. பேசவுமில்லை. சுபத்ரா தான் ஓடி வந்தாள்.

பாத்திரத்தில் லட்சுமி பொங்கலை போட்டு வைத்திருந்தார். அதை கொடுக்க மறந்து அவர் நிற்க, ஓடி வந்து லட்சுமியின் கையில் திணித்தாள்.

“தாமரை..” என்று நிறுத்தியவர், தொண்டையை செருமிக் கொண்டு அருகே சென்றார்.

“இதுல பொங்கல் இருக்கு. சாமி கும்பிட்டது. சாப்பிடுங்க”

“சரிங்க அத்த” என்று புன்னகைத்தவர் வாங்கிக் கொண்டார்.

ஜாக்ஷி அந்த பெட்டியை ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டே நின்றாள்.

“இத ஏன் பாட்டி கொடுத்துட்டு போறாங்க?” என்று ஒரு நிமிடம் கழித்து கேட்டாள்.

“உங்க கல்யாணத்துக்கு கொடுத்துட்டு போறா.”

“இத என்ன பண்ணுறது?”

“நீ தான் யோசிக்கனும்”

“லட்சுமி பாட்டியோடது தான? அவங்க கிட்டயே கொடுத்துடலாம்” என்று அவரிடம் சென்றாள்.

“பாட்டி.. இது அவங்க கொடுத்தாங்க…” என்றவள் லட்சுமியின் கண்ணீரை பார்த்து பதறி, ஜகதீஸ்வரியல பார்த்தாள்.

“எல்லாம் கேட்டியாக்கா?”

“ஆமா.. என் புள்ளை இவ்வளவு அனுபவிச்சுருக்கானே. ஒரு வார்த்தை சொல்லலயே”

“அதுக்காகவா அழுறீங்க? அழாதீங்க. அதான் எங்க கூட வர சம்மதிச்சுட்டீங்களே. இனிமே எல்லாரும் ஒன்னா சந்தோசமா இருக்கலாம்”

“அவன் இந்த ஊருக்கு வர பிடிக்காம என்னை கூப்பிடுறான்னு எனக்கு தெரியாது ஜாக்ஷிமா”

“எனக்கும் தெரியாது. நேத்து சாப்பிங் போயிட்டு பேசிட்டே வந்தப்ப தான் சொன்னான். அதான் உடனே ப்ளேட்ட மாத்தி உங்கள கூப்பிட்டேன்.”

“வர்ரேன்மா. என் புள்ளை நிம்மதியா இல்லாத ஊர்ல எனக்கு என்ன வேலை?”

“அப்ப நான் இங்க இருக்கேன். எல்லாத்தையும் சரி கட்டிட்டு, ஒன்னா கிளம்பி வர்ரோம். நீங்க மூணு பேரு மட்டும் முதல்ல கிளம்புங்க” என்று ஜகதீஸ்வரி சொல்ல, அதுவே முடிவானது.

வீரா வர, யாரும் தாமரையிடம் பேசியதை பற்றி வாயைத்திறக்கவில்லை. சொன்னால் எதற்கு வீண் வேலை? என்பான். அதனால் அதை பற்றி பேசாமல், ஊரை விட்டு கிளம்பும் வேலையை பார்த்தனர்.

மாலை, சுபத்ரா பின்னால் அமர்ந்து கொள்ள, வீரா காரை ஓட்ட, ஜாக்ஷி அருகே அமர்ந்து கொண்டாள்.

“எல்லாம் முடிச்சுட்டு கால் பண்ணுங்க. கார அனுப்பி வைக்கிறோம்” என்று ஜாக்ஷி சொல்ல, “சரிமா..” என்று அனுப்பி வைத்தனர்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
24
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. அப்பாடா…! இனியாவது தாமரைக்கு புரிஞ்சு வீராவை
      தொல்லை பண்ணாம இருந்தா சரி தான்.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

    2. தாமரை👍. லட்சுமி பாட்டி உண்மை தெரிஞ்சது சூப்பர்