Loading

 

அடுத்த நாள் ஜாக்ஷி எப்போதும் போல் இருக்க, லட்சுமி யோசனையுடனே இருந்தார்.

“பொங்கலுக்கு வாங்க வேண்டிய லிஸ்ட் கொடுங்க. வாங்கிட்டு வந்துடுறேன்” என்று வீரா சொல்ல, “நானும் வர்ரேன்” என்றாள் ஜாக்ஷி.

“சரி கிளம்பு நான் லிஸ்ட் எழுதுறேன்” என்று அமர்ந்து விட்டான்.

லட்சுமி பேரனை பார்த்தார்.

“சொல்லுங்க”

“ஜாக்ஷி சொன்னதுக்கு நீ என்ன வீரா சொன்னா?”

ஒரு நொடி பார்த்து விட்டு, “ஓகேனு சொன்னேன்” என்றான்.

லட்சுமியின் முகம் அதிருப்தியை காட்ட, “காரணம் என்னனா? என்னை ஒரு வேளை அவளுக்கு பிடிக்கலனு வைங்க.. பிரிஞ்சு போக ஈசியா இருக்கும். அதுக்கு தான்” என்றான்.

“ஏன்டா வாழுறதுக்கு முன்னாடியே பிரிஞ்சு போறத பத்தியே பேசுறீங்க?”

“அதையும் யோசிக்கனும் தான? அத விட்டுட்டு, கடைசி வரை கண்ணே மணியே நாங்க வாழப்போறோம்னு நினைச்சா தான் தப்பு. ரியாலிட்டி இதான அப்பத்தா?”

“எல்லாருமா சேர்ந்து என்னை ஒத்துக்க வைக்க பார்க்குறீங்க இல்ல?”

“நாங்க எல்லாரும் எங்களுக்கு தோணுறத சொல்லுறோம். முடிவ நீங்களே எடுங்க. இப்ப பொங்கல் லிஸ்ட் சொல்லுங்க. நாளைக்கு திருவிழா ஆரம்பிச்சுடும். முதல் நாளே வச்சுட்டு கிளம்பனும்னு தான் வந்தோம்” என்றவன் தேவையான பொருட்களை எழுதிக் கொண்டு, ஜாக்ஷியோடு காரில் கிளம்பிச் சென்றான்.

ஜகதீஸ்வரி லட்சுமி இருவரும் அமர்ந்து இருக்க, சுபத்ரா தானே எல்லோருக்கும் சமைக்க போவதாக சொல்லி சமையலறைக்குள் உருட்டிக் கொண்டிருந்தாள்.

“இன்னும் ஏன் இப்படி இருக்க? ஒரு முடிவுக்கு வரலயா?”

“என்ன சொல்லுறதுனே தெரியல. ஒரு மனசு சரினு சொன்னா ஒரு மனசு தப்புனு சொல்லுது”

“ரெண்டுல ஒன்ன யோசி.”

“நாம வாழ்ந்த காலத்துல, பையனும் பொண்ணும் கல்யாணத்துக்கு முன்னாடி பார்த்துக்குறதே பெரிய விசயம். இப்ப இருக்க காலத்துக்கு வர முடியல”

“அதுவும் சரி தான். ஆனா பாரு ரெண்டு பேரும் தனி வீட்டுல இருக்காங்க. தனித்தனியா சம்பாதிக்கிறாங்க. அவங்க நினைச்சா, நம்ம கிட்ட சொல்லாமலே ஒன்னா இருந்துட முடியும். நாம போய் பார்த்துட்டேவா இருக்க போறோம்? ஆனா நம்ம முடிவ கேட்டு நிக்கிறாங்க. நாமலும் நம்ம மரியாதைய காப்பாத்திக்கனும்”

“என்னமோ சொல்லுற. நான் ஜாக்ஷி கிட்டயே பேசிக்கிறேன்” என்றார்.

சுபத்ரா சமையலை முடித்து விட்டு ஓடி வந்தாள்.

அவள் எதோ கேட்க, இருவருக்கும் சரியாக புரியவில்லை. கைபேசியை எடுத்து எழுதிக் காட்டினாள்.

“முடிவு பண்ணிட்டீங்களா?”

“அதுவா? இல்லமா. அக்கா பாவம் குழம்பிப்போய் இருக்கு”

“அவங்க ஒன்னா சந்தோசமா இருப்பாங்க நம்புங்க”

“அத தான் நானும் சொல்லுறேன்”

“வீரா அண்ணன் வந்தப்புறம் தான், ஜாக்ஷி ரொம்ப இயல்பா இருக்காங்க. நிறைய பேசுறாங்க. இல்லனா எல்லா நேரமும் வேலை தான் பார்ப்பாங்க. ஜாக்ஷிக்கு வீராவ ரொம்ப பிடிச்சுருக்கு. வீட்டுல முதல்ல சாப்பிட்ட ஆம்பிளை, வீரா அண்ணன் தான்” என்று சுபத்ரா காட்டியதும், லட்சுமியும் ஜாக்ஷியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“வீரா வந்து சாப்பிட்டானா? எப்போ?”

“நிறைய தடவ. எப்பவாது காலையில வருவாங்க. இல்லனா சாயந்தரமா வருவாங்க. சாப்பிட்டு, ரொம்ப நேரம் ஹால்ல உட்கார்ந்து வேலை பார்ப்பாங்க. அப்புறம் வீரா அண்ணன் கிளம்பி வீட்டுக்கு போயிடுவாங்க. ஜாக்ஷி யாரையும் சாப்பிடச் சொல்லி நான் பார்த்தே இல்ல”

“ஓஹோ.. அப்ப ரெண்டு பேருமே நல்ல பழக்கமா?”

“ஆமா. வீரா அண்ணன் ஜாக்ஷிய சிரிக்க வச்சுட்டே இருப்பாரு. எப்பவாது சண்டை கூட போட்டுப்பாங்க. அவங்க சேர்ந்து இருந்தா நல்லா இருக்கும்” என்று சுபத்ரா தன் ஆசையை சொல்ல, ஜகதீஸ்வரி லட்சுமியை தான் பார்த்தார்.

“சரி நீ போய் உன் வேலைய பாரு. என் அக்கா ஒரு முடிவுக்கு வரட்டும். நான் போய் கொஞ்சம் படுக்குறேன்” என்று ஜகதீஸ்வரி எழுந்து சென்று விட்டார்.

சுபத்ராவும், “நான் சமைச்சுட்டேன். அவங்க வந்ததும் சாப்பிடலாம்” என்று விட்டு சென்றாள்.

*.*.*.*.*.*.

காதம்பரியின் முகத்தில் நூறு வாட்ஸ் பல்ப் எரிந்தது. நினைத்ததை நடத்தி விட்டார். அத்தனை திருப்தி அவருக்கு.

“நாளைக்கு கோர்ட் மூலமா அவங்களுக்கு சம்மன் போயிடும். அவங்க ஆஜராகும் போது நாம பார்த்துக்கலாம்” என்று வக்கீல் சொன்னதை நினைத்து, புல்லாங்கீதம் அடைந்தார்.

“கேஸ யாரு மேல போட்டுருக்க?” என்று அசோக் கேட்க, “என் அம்மா மேல” என்றார்.

“அவங்க மேலயா?”

“ஆமா. அவங்க சொத்து எனக்கு வேணும்னு கேட்டு போட்டுருக்கேன். எனக்கு தெரியாம ஜாக்ஷிக்கு எழுதி வச்சா? சும்மா விட்டுருவனா? முதல்ல அந்த துரோகி சிற்றம்பலம் கிட்ட பவர் இருந்துச்சு. இப்ப அவன் பெத்த பிசாசு கிட்ட போயிடுச்சு. நடுவுல நான் என்ன இழிச்சவாச்சியா? எல்லாரையும் ஒரு வழி பண்ணுறேன்”

“ஜாக்ஷி விடுவானு நினைக்கிற?”

“அவ என்ன விடுறது? இது என் உரிமை. வாழ்க்கையில நான் பண்ண பெரிய தப்பே, அவள பெத்து போட்டது தான். அன்னைக்கே அவள அழிச்சு விட்டுருக்கனும். என் அப்பா வாரிசு வந்துடுச்சுனு அவ்வளவு தூரம் என்னை தாங்குனாருனு, இந்த பிசாச சும்மா விட்டேன். இப்ப விசச் செடியா வந்து முளைச்சுருக்கா”

“அவள திட்டலனா உனக்கு பொழுதே போகாதே. சரி கேஸ்க்கு பணத்த தண்டமா அழாம, ஜெயிக்க பாரு. எதாவது ஹெல்ப் வேணும்னா கேளு”

“நானே பார்த்துக்கிறேன்” என்று விட்டார்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான் வினய்.

தந்தை தனியாக இருக்கும் நேரத்தில், வினய் அவரிடம் வந்தான்.

“என்னடா?”

“ப்பா.. அம்மாவுக்கு அந்த ஜாக்ஷிய சுத்தமா பிடிக்காதாபா?”

“பிடிக்காது. உண்மைய சொல்லனும்னா, அவளுக்கு புள்ளைங்கனாலே புடிக்காது. உன்னையவே நான் கெஞ்சி கேட்டதால தான் பெத்தா”

“ஏன்பா?”

“அது அப்படித்தான். ஜாக்ஷி இவ வழிக்கு வரவே மாட்டா. ஆனா எப்படி கரிச்சு கொட்டுவானு நீயே பார்த்துருக்கல? நீ எல்லாம் ஒழுங்கா இருக்க பழகு. இல்லனா என்னைக்காச்சும் சோத்துல விசம் வச்சு கொன்னுடுவா”

“ப்பா!”

“உண்மைய தான்டா சொல்லுறேன். உங்கம்மா எனக்கே விசம் வச்சவ தான்”

அதிர்ந்து போனான்.

“பதினெட்டு வயசாகிடுச்சுல? காலேஜ் போறல.. இப்ப சொன்னா நீயும் தெரிஞ்சுப்ப. உனக்கு ரெண்டு வயசு பிறந்த நாள் கொண்டாடினோம். உன் அக்கா.. அதான் என் முதல் மனைவி பொண்ணு, ரெண்டு வயசுல இருந்தப்போ தான் ரெண்டு பேரும் ஆக்ஸிடென்ட்ல இறந்து போனாங்க.

உனக்கு பிறந்த நாள் கொண்டாடுன அன்னைக்கு, எனக்கு மனசு கேட்கல. இந்த மாதிரி இருக்கப்ப தான ரெண்டு பேரையும் பறி கொடுத்தேன்னு துக்கம். அத உங்கம்மா கிட்ட சொலல்லி தொலைச்சுட்டேன். அடுத்த நாள், சோத்துல பூச்சி மருந்த வாங்கி கலந்து கொடுத்துட்டா.

நாலு வாய் சாப்பிட விட்டுட்டு, அப்புறமா தட்டை தூக்கி எறிஞ்சா.. ஏன்டா நான் இருக்கும் போது இன்னொருத்தியும் அவ பெத்த பிள்ளையையும் பத்தி நினைப்பியா? னு கேட்டு கத்துனா. நானும் சாதாரண சண்டை மாதிரி பதிலுக்கு பேசிட்டு இருக்கும் போது தான் சொன்னா.. சோத்துல கலந்த விசயத்த. ஒரு நிமிஷம் உயிர் போயிடுச்சு.

அப்பவே செத்துருக்க வேண்டியவன். ஆனா இனி யார பத்தியும் நினைக்க மாட்டேன்னு உன் மேல சத்தியம் பண்ண சொன்னா. பண்ணேன். அப்புறம் அவளே என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் விட்டா”

“நிஜம்மாவே விசம் தானாபா?”

“இன்னும் ரெண்டு வாய் சேர்த்து சாப்பிட்டுருந்தா, நுரை தள்ளிருக்கும்னு அங்க இருந்த நர்ஸ் சொல்லுச்சு.”

வினய்க்கு திக்கென்றது.

“அந்த ஜாக்ஷியோட அப்பா சிற்றம்பலம் இருந்தானே.. அந்தாளு இவ கூட இருந்துட்டே, அந்த மேனகா கூடவும் வாழ்ந்தது இவளுக்கு பிடிக்கல. அதுல பாதிக்க பட்டது தான், நான் என் முதல் பொண்டாட்டிய நினைச்சதுக்கு விசம் வச்சுட்டா”

வினய்யின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

“ஆனா ஒரு தடவ கேட்டுட்டேன். எப்படி எனக்கு விசம் வச்ச மாதிரி சிற்றம்பலத்துக்கு வைக்காம விட்டனு.. அந்தாளு விசயம் தெரிஞ்ச அடுத்த செகண்ட்ல இருந்து, வீட்டுக்கே வரலயாம். வந்தாலும் சண்டை மட்டும் தான் நடக்குமாம். சாப்பிடலயாம். அப்பவே விசம் வைக்க தான் நினைச்சுருக்கா. ஆனா அந்தாளு உசாரா தப்பிச்சுட்டான். அந்தாளுக்கும் ஜாக்ஷிக்கும் சேர்த்து வச்சு கொல்லனும்னு வெயிட் பண்ணாளாம். அந்தாளும் தப்பிச்சு.. ஜாக்ஷியையும், அவ பாட்டி அவசரமா ஹாஸ்டல்ல தள்ளி விட்டாங்க. அதுனால தான் தப்பிச்சுருக்காங்க”

“ப்பா!”

“என்ன பயமா இருக்கா? உங்கம்மா எவ்வளவு பெரிய ராட்சசிங்குற உண்மை எனக்கு மட்டும் தான் தெரியும். ஒரு வேளை செத்தவனுக்கும் தெரிஞ்சுருக்குமோ என்னமோ.. அவ நல்லா இருக்க வரை தான், நாமலும் நல்லா இருப்போம். இல்லனா நம்மல அழிச்சு விட்டுருவா. ஜாக்ஷி முன்னாடி நீ அவள அசிங்க படுத்துனதுக்கு, உன்னை அவ உயிரோட விட்டதே பெருசு. திரும்ப அந்த பொண்ணு கிட்ட எதாச்சும் பிரச்சனை பண்ணி, ஜாக்ஷிக்கு விசயம் போச்சுனு வை.. உனக்கும் சோத்துல விசம் தான். புரிஞ்சுக்க பொழைச்சுக்க”

வினய்க்கு வியர்த்து விட்டது.

“இவ்வளவு பண்ணியும் நீங்க ஏன்பா அவங்கள விட்டு விலகல?”

“ஆசை பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவளுக்கு பிடிக்காதத செய்யாம விட்டா, அவ நல்லா தான் இருப்பா. அதுனால விட்டேன். நீயும் விட்டுரு. அது தான் உனக்கு நல்லது. இல்லனா பெத்த மகன்னு எல்லாம் பார்க்க மாட்டா”

அதோடு அசோக் தன் வேலையை பார்க்க, வினய் அறைக்கு திரும்பினான்.

இதயம் தாறுமாறாக துடித்தது. தாயின் மீது இருந்த பாசமெல்லாம் காணாமல் போய், பயம் வந்தது.

‘இப்படி பண்ணுறாங்க.. நாம அந்த ஃபோட்டோவ வேற அழிக்கனும்னு பார்த்துட்டு இருக்கோம். எதாவது பண்ணி கவிதா கம்ப்ளைண்ட் பண்ணா, நமக்கும் விசம் தானா? பேசாம விட்டுருவோமா? வேணும்னா அவ கிட்ட கெஞ்சி அத அழிக்க சொல்லுவோம். என்னால சாகவெல்லாய் முடியாது சாமி’ என்று நினைத்துக் கொண்டு வியர்வையை துடைத்தான்.

*.*.*.*.

ஜானகி வேலை செய்து கொண்டிருக்க, அவளிடம் வந்து நின்றான் வழிசல். பெயர் விஷால். வழிசல் விஷால் என்று அவனுக்கு பொருத்தமாய் பட்டப்பெயர் வைக்கும் அளவு வழிந்து கொட்டுவான்.

அவனை பார்த்ததும் எரிச்சல் வந்தாலும், “சொல்லுங்க சார்” என்றாள்.

“இந்த சுடிதார் நல்லா இருக்கு ஜானகி. இதுக்கு முன்னாடி இத நான் பார்க்கவே இல்லையே.. புதுசா?”

“அப்படிலாம் இல்ல சார் பழைசு தான். நீங்க எதுக்கு வந்தீங்க?”

“இல்லையே நான் பார்த்தது இல்லையே. எங்க வாங்குனது?”

“இந்த ஃபைல நான் செக் பண்ணனுமா? கொடுங்க.”

“அட வேலை இருக்கட்டும் ஜானகி. எங்க வாங்குனீங்க?”

“கடையில தான் சார்” என்று சலித்துக் கொண்டாள்.

“உங்க செலக்ஷன் நல்லா இருக்கு ஜானகி. ஒரு நாள் நாம சாப்பிங் போகலாம்”

“இது என் பாட்டி வாங்குனது. அவங்கள வேணா கூட்டிட்டு போங்க. இப்ப அந்த ஃபைல கொடுங்க. வேலைய லேட்டா முடிச்சா எனக்கு தான் திட்டு விழும்” என்று பறித்து வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

விஷால் கடுப்பாக சென்று விட, பக்கத்தில் இருந்த பெண் சிரித்து விட்டாள்.

“பாட்டினு சொன்னதும் அந்தாளு மூஞ்சிய பார்க்கனுமே. ஆனா பாட்டி கூடயும் சாப்பிங் போனாலும் போவான். சரியான வழிசல் கேஸ்”

“போகட்டும். என் ரெண்டு பாட்டிங்களும் சொர்க்கத்துல இருக்காங்க. இவனுக்கு ஒரு டிக்கெட்ட போட்டு அனுப்புவோம். ஜோடியா கைய பிடிச்சு போயிட்டு வரட்டும்” என்று ஜானகி சொல்ல, மற்றவள் நன்றாக சிரித்தாள்.

வேலை முடிந்து வெளியே வர நிர்மலன், “ஹாய் ஜானகி” என்று வந்து விட்டான்.

‘இந்த லூசு வேற’ என்று சலித்துக் கொண்டாள்.

“ஒரு வாரமா ஊர்ல இல்ல. எப்படி இருக்கீங்க?”

“நல்லா தான் இருக்கேன்” என்றவள் வேகமாக நடந்தாள்.

அவனும் அவளோடு பைக்கை உருட்டிக் கொண்டு வர, ‘ஒரு வாரம் நிம்மதியா இருந்தேன்’ என்று சலித்துக் கொண்டாள்.

நிர்மலன் வளவளவென பேச, ஜானகிக்கு கடுப்பாக இருந்தது. முடிந்தவரை பொறுத்தவள், எரிச்சலடைந்து திரும்பினாள்.

“என்ன சார் உங்க பிரச்சனை? எதுக்கு இப்படி சும்மா கூட வந்து பேசி தொல்லை பண்ணுறீங்க?”

“தொல்லையா? நான் உங்க கூட ஃப்ரண்ட்டா…”

“எனக்கு எந்த ஃப்ரண்ட்டும் வேணாம். தயவு செஞ்சு இனிமே என் கிட்ட வந்து பேசாதீங்க”

“ஜானகி”

“முதல்ல என் பேர சொல்லாதீங்க. உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? பேர் சொல்லிட்டே இருக்கீங்க. இனிமே என் பக்கம் வராதீங்க. அவ்வளவு தான்” என்றவள், விறுவிறுவென சென்று, பேருந்தில் ஏறிக் கொண்டாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. அடேயப்பா..! காதம்பரி முழுசா சந்திரமுகியா மாறிட்டு வராளோ…?

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

    2. காதம்பரி ராட்சசி