ஜாக்ஷிக்கும் லட்சுமி பாட்டிக்கும் விவாதம் நீண்டு கொண்டே போக, வீரா பாட்டியின் முகத்தை பார்த்தான். மிகவும் சுருங்கி இருந்தது.
இந்த பேச்சு அவருக்கு பிடிக்கவில்லை என்று புரிந்தது.
“ஓகே ஓகே.. அமைதி.. இப்ப என்ன? இப்பவே பேசி முடிவு பண்ணனுமா? கொஞ்சம் ஆற போடுவோம். சுபத்ரா ஊர சுத்தி பார்க்கனும்னு கேட்டா. நாங்க போய்ட்டு வர்ரோம்” என்று எழுந்து விட்டான்.
சுபத்ரா, அது வரை அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஜாக்ஷி சொல்வதும் சரியாக இருந்தது. லட்சுமி சொல்வதும் சரியாகத்தான் இருந்தது. அதனால் அமைதியாகவே கவனித்துக் கொண்டிருக்க, வீரா பேசியதை கேட்டு ஒரு நொடி விழித்தாள். பிறகு சட்டென எழுந்து நின்று, பலமாக தலையாட்டினாள்.
“வா.. நாம மூணு பேரும் ஒன்னா போயிட்டு வரலாம்” என்று ஜாக்ஷியையும் இழுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
‘நீங்க அவங்கள சமாளிங்க’ என்று ஜகதீஸ்வரிக்கு போகும் போது சைகை காட்டவும் மறக்கவில்லை.
“பேசிட்டு இருக்கும் போது ஏன்டா?” என்று ஜாக்ஷி அதிருப்தியாக பார்க்க, “இப்பவே பேசி முடிக்கனுமா? ரெண்டு நாள் இங்க தான இருப்போம்? கொஞ்சம் யோசிக்க டைம் கொடு” என்றான்.
சுபத்ராவும் தலையாட்ட, “நீ என்ன உங்கண்ணனுக்கு ஜால்ராவா?” என்று கேட்டு முறைத்தாள்.
சுபத்ரா “ஈஈ” என பல்லைக்காட்டி வைக்க, ஜாக்ஷியின் கோபம் பறந்து விட்டது.
“சரி வா. ஊர சுத்தி பார்ப்போம். ஆக்சுவலி இத ஒரு கிராமம்னு நினைச்சேன். ரொம்ப மார்டனா இருக்கு” என்றவள் அவர்களோடு நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டில் ஜகதீஸ்வரி லட்சுமியை நன்றாக பார்த்தார். பிறகு பெருமூச்சு விட்டு விட்டு, “என்ன முகமே வாடி போச்சு?” என்றார்.
“இத எதிர் பார்க்கவே இல்ல. ஒன்னு கல்யாணம். இல்லனா இல்ல.. ஆனா இப்படி பழகி பார்க்குறது.. கல்யாணத்துக்கு முன்னாடி ஒரே வீட்டுல இருக்கதுலாம் நல்லாவா இருக்கு?”
“இது தான் இப்ப இருக்க புள்ளைங்க யோசிக்கிறாங்க”
“இது எந்த வகையில சரினு நீயே சொல்லேன்”
“சரி தப்புனு சொல்லுறத விட, அவங்க வாழுற வாழ்க்கைய தான நாம பார்க்கனும்?”
“இப்படி கல்யாணத்துக்கு முன்னாடி வாழுறதா?”
“உனக்கு அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி பழகுனா, தாலியே கட்டாம பிள்ளைய பெத்துடுவாங்களோனு பயம். அதான?”
“ஏய்.. ச்சீ.. எதெல்லாம் பேசுற?”
“அத நினைச்சு தான பயப்படுற?”
“அதுவும் தான். ஆனா ஊர் உலகம் என்ன பேசும்?”
“நீ எப்ப இருந்து ஊர பத்தி கவலைப்பட ஆரம்பிச்ச? ஊர பத்தி நினைச்சு தான், சுருளிய தத்தெடுத்தியா? ஊர பத்தி நினைச்சு தான், உன் மருமகளுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சியா?”
“ஆனா அதுனால தாமரை வாழ்க்கை நல்லா இருக்கும். இது அப்படி இல்ல”
“அப்படி இல்லனு நீ ஏன் நினைக்கிற?”
“வேற எப்படி நினைக்கிறது? எனக்கு பிடிக்கல. எவனோ ஒருத்தன் வெளிநாட்டு காரன் செஞ்சா? நாமலும் செய்யனுமா? சுத்தமா பிடிக்கல. இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்”
“எவனோ ஒருத்தன் இல்ல. வெளிநாட்டுல இது தான் வாழ்க்கை முறையே”
“கருமம்”
“நீ புரியாம பேசிட்டு இருக்க”
“நீ ஏன் இதுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணுற?”
“நான் சப்போர்ட் பண்ணலமா.. ஜஸ்ட் எனக்கு விசயம் தெரிஞ்சதனால சொல்லுறேன்”
“என்ன தெரியும் சொல்லேன்”
“வெளிநாட்டுல.. பதினெட்டு வயசு வந்துட்டா, உன் வாழ்க்கைய நீயே முடிவு பண்ணிக்கனு விட்டுருவாங்க. நீயே சம்பாதிக்கனும். நீயே தான் வாழ்ந்துக்கனும். அம்மா அப்பா கூட இருந்தாலும் இல்லாட்டியும், நீயே உன் வாழ்க்கைய அமைச்சுக்கனும். பொண்ணு பார்த்து கட்டி வைக்கிறதெல்லாம் அங்க செட் ஆகாது.
முதல்ல ஒருத்தர ஒருத்தர் பார்ப்பாங்க. பழகுவாங்க. எல்லைய கூட மீறுவாங்க. முகத்த சுழிக்காத. அதுவும் தான் வாழ்க்கை. அவங்க பழக்கத்துல ஒருத்தர ஒருத்தர் ரொம்ப பிடிச்சு போச்சு.. லவ் பண்ணுறோம்னு முடிவு பண்ணிட்டா அடுத்ததா ஒரே வீட்டுல வாழ ஆசைப்படுவாங்க.
அத வந்து பெத்தவங்க கிட்ட சொல்லிட்டே செய்வாங்க. பெத்தவங்களும் உனக்கு பிடிச்சுருக்கா? ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கீங்களானு பார்த்துட்டு, சந்தோசமா ஏத்துப்பாங்க
அவங்க இருக்க வீட்டுல பெத்தவங்களோ மத்தவங்களோ இருக்க மாட்டாங்க. தனியா ஒரு வீடு பார்ப்பாங்க. அந்த வீட்டு வாடகை, சாப்பாடு செலவு, எல்லாமே ரெண்டு பேரும் தான் பகிர்ந்துக்கனும்.
கூடவே வாழனும். தூரமா இருக்கப்போ அழகா இருக்க ஒரு பூ, பக்கத்துல வந்ததும் நாத்தம் அடிக்குதுனு தூக்கி போடுவோமே.. அது நடக்காம, பக்கத்துல இருந்தும், சண்டை வந்தும், பிரச்சனை வந்தும், பிரியாமலே வாழுவாங்க. அவங்க நினைச்சா சரி தான் போடி போடானு விட்டுட்டு போயிடலாம்.
ஆனா போக மாட்டாங்க. ஏன்னா அவங்க மனசால இணைஞ்சுருப்பாங்க. எத்தனை பிரச்சனை வந்தாலும், தூக்கி எறிய வாய்ப்பு இருந்தும், அவங்க மனசால இணைஞ்சு போயிருக்கதால கூடவே இருப்பாங்க. அதுக்கு மேல உன்னை நான் பிரியவே மாட்டேன்னு எப்ப நினைக்கிறாங்களோ, அப்ப கல்யாணம் பண்ணிக்குவாங்க.”
“கல்யாணம் பண்ணிட்டே இத செய்ய வேண்டியது தான?”
“அப்ப பிரிஞ்சு போக வாய்ப்பு கிடைக்காதே.. அதுக்குள்ள ஒரு புள்ளை வந்துடும். என் பிள்ளைக்காக உன்னை சகிச்சுட்டு வாழுறேன்னு வாழனும்ல? அந்த வாழ்க்கைய விட இது நல்லதுல?”
“அப்ப இப்படி கல்யாணம் பண்ணா டைவர்ஸ் வாங்க மாட்டாங்களா?” என்று லட்சுமி நக்கலாக கேட்க, “வாங்குவாங்க. ஏன் வாங்க மாட்டாங்க? வாழ்க்கையில அன்பு தான் இருக்கனும். சகிச்சுட்டு போகக்கூடாது. பாசம் தான் இருக்கனும். துரோகம் இருக்க கூடாது. இப்ப நம்ம ஊர்ல எடுத்துக்க.. எத்தனை ஆம்பளைங்க ரெண்டாவதா ஒருத்திய வச்சுட்டு சுத்துரானுங்க. முதல் பொண்டாட்டி அத பொறுத்துக்கனும். ஏன்னா கல்யாணம் ஆகிடுச்சு. புள்ளைங்க இருக்கு. நீ பிரிஞ்சு போயிட்டா, புள்ளைங்கள யாரு பார்ப்பா? அப்படி இப்படினு பேசி, கடைசி வரை அவள வாழவிடாம சாகடிச்சுடுவாங்க. அது போலலாம் வெளிநாட்டுல முடியாது.” என்றார்.
“ஏமாத்துறவன் கல்யாணம் பண்ணாலும் ஏமாத்துவான். கல்யாணம் பண்ணலனாலும் ஏமாத்துவான் ஜகதீஸ்வரி”
“உண்மை தான். ஆனா யாருனே தெரியாத ஒருத்தன நம்பி வாழ்க்கைய கொடுத்துட்டு, அவன மட்டுமே உலகமா நினைச்சுட்டு வாழ, இப்ப இருக்க பொண்ணுங்களுக்கு பிடிக்கல அக்கா. நீ நான் வாழ்ந்தது வேற. நம்மல பெத்தவங்க வாழ்ந்தது வேற. நாம பெத்த புள்ளைங்க வாழ்ந்ததும் வேற. பேரன் பேத்தி அதையும் தாண்டி வேற உலகத்துல வாழுறாங்க. நாம தான் புரிஞ்சுக்கனும். இனி உன் முடிவு தான்”
ஜகதீஸ்வரி சொல்லி முடித்து விட்டு அமைதியாகி விட, லட்சுமியும் அமைதியானார்.
ஊருக்குள் இருக்கும் கடை வீதிகளை சுற்றிப் பார்த்து விட்டு, அங்காங்கே இருக்கும் கடைகளில் பிடித்ததை வாங்கி சாப்பிட்டு விட்டு, சந்தோசமாக உலா வந்தனர் மூவரும்.
சுபத்ரா இந்த ஊரில் பயப்படாமல் இருந்தாள். அவளுக்கு தெரிந்த யாரும் இங்கு வரப்போவது இல்லை. அந்த தைரியம் எல்லாவற்றையும் ரசிக்க வைத்தது.
சிறு குழந்தையாக அவள் கேட்ட பொம்மைகளை கூட வாங்கிக் கொடுத்து, வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
இரவு வேறு எதை பற்றியும் பேசாமல், பொங்கல் விசயத்தையும் திருவிழாவை பற்றியும் தான் பேசினர். சுபத்ரா தான் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
வீரா தன் கைபேசியை யோசனையாக பார்த்தபடி நிற்க, ஜாக்ஷி வந்து சேர்ந்தாள்.
“என்ன?”
“இத பாரு”
கவிதா அனுப்பிய செய்தியை படித்து முடித்தாள்.
“இவன் திருந்த மாட்டான் போலயே?”
“இப்ப என்ன செய்யுறதுனு யோசிக்கனும்”
“கவிதா மெஸேஜ் பண்ணலல? அப்புறம் என்ன ஃப்ரியா விடச்சொல்லு.”
“இப்போதைக்கு ஓகே. ஆனா அவன் எதுக்கு எதோ ஒரு நம்பர கொடுக்கனும்?”
“இவ அந்த நம்பர காண்டாக்ட் பண்ணலனா திரும்ப வருவான். திரும்ப நம்பர் கொடுப்பான். அப்ப அவன பிடிக்கலாம்”
“அப்படிங்குற?”
“வேற எதுவும் இப்ப பண்ண முடியாது”
“சரி சொல்லுறேன்” என்றவன் அப்போதே கவிதாவை அழைத்தான்.
தூங்காமல் இருந்தவள், உடனே எடுத்தாள்.
“சொல்லுங்கண்ணா”
“மெஸேஜ் பார்த்தேன். அந்த நம்பர நீ காண்டாக்ட் பண்ணலல?”
“இல்லனா.. அவன் இவ்வளவு நல்லவன் கிடையாதுனு டவுட் வந்துச்சு”
“இனியும் பண்ணாத. அவனா நேரடியா வந்து நம்பர் கொடுத்து பேசலாம்னு சொன்னாலும், பேசாத. ரிஜக்ட் பண்ணிட்டு வேற வேலைய பாரு. படிச்சு முடியுற வரை அவன கிட்ட இருக்க சந்தேகத்த தாண்டி பழக வேணாம்”
“சரிணா. அந்த நம்பர் யாரோடதுனு கண்டு பிடிக்க முடியாதா?”
“இப்போதைக்கு முடியாது. அங்க வந்துட்டு ட்ரை பண்ணுறேன். இப்ப ஊர்ல இருக்கேன்”
“ஊர்லயா? திருவிழாவுக்கு போயிருக்கீங்களா?”
“ஆமா.”
“எனக்கு தான் லீவ் எடுக்க முடியாது. சேகர் அண்ணன் நிச்சயத்துக்கு கூட போகல. உங்களுக்கு தெரியுமா? சேகர் அண்ணனுக்கு நிச்சயமாகிடுச்சு”
“தெரியும்”
“ம்ம்.. சரி நான் வச்சுடுறேன்” என்றவள் வைத்து விட்டாள்.
“ஏன் இப்படி சொன்ன?”
“அந்த வினய்ய எனக்கு என்னவோ பிடிக்கல. நல்லவனா வளரல. அவன் திருந்துனாலும் மாறினாலும் சரி தான். ஆனா அவன் கவிதாவுக்கு ஃப்ரண்டா கூட இருக்க வேணாம். அது நல்லது இல்லனு தோனுது”
“என்னவோ” என்று தோளை குலுக்கிக் கொண்டாள் ஜாக்ஷி.
*.*.*.*.*.*.
அடுத்த நாள், வினய் நேரடியாக கவிதாவிடம் வந்தான்.
“என்ன?”
“உன் கிட்ட சாரி கேட்கனும்”
“எதுக்கு?”
“உன் புக்க கிழிச்சுட்டேன். அப்புறம்…”
“அத நான் தான் திருப்பி வாங்கிட்டேனே.”
“இல்ல கவிதா.. ஐம் சாரி” என்று கூறி அப்பாவியாக பார்த்தான்.
‘நடிப்ப பாரேன்’ என்று நக்கலாக நினைத்தவள், “சரி மன்னிச்சுட்டேன்.” என்று விட்டாள்.
“உண்மையாவா சொல்லுற? என் மேல உனக்கு கோபமில்லையா?”
“அதெல்லாம் ஏன் கேட்குற? சாரி சொல்லிட்ட. நானும் மன்னிச்சுட்டேன். அதோட முடிஞ்சது தான?”
“அப்படி இல்ல.. இன்னும் நாம நாலு வருசம் ஒன்னா படிக்கனும். ஒரே க்ளாஸ் வேற. இப்பவே சமாதானமா போயிடலாமே?”
“இப்ப என்ன சொல்ல வர்ர?”
“நாம நல்ல ஃப்ரண்ட்ஸா இருக்கலாமே”
‘ஓஹோ.. அப்படி வர்ரியா?’ என்று நினைத்தவள், “அதுக்கு வாய்ப்பில்ல” என்றாள் பட்டென.
வினய் அவளை கேள்வியாக பார்க்க, “எனக்கு ஃப்ரண்டா இருக்கவங்கள எனக்கு பிடிக்கனும். உன்னை எனக்கு பிடிக்கும்னு நான் சொன்னா, நீயே நம்ப மாட்ட. இனி சண்டை வேணாம்னு சொன்னனா.. உன் வழிய நீ பாரு. என் வழிய நான் பார்க்குறேன். அவ்வளவு தான்.” என்றாள்.
‘மசிய மாட்டேங்குறாளே’ என்று அவனால் பல்லை தான் கடிக்க முடிந்தது.
“அவ்வளவு தான? பை” என்றவள், எழுந்து சென்று விட்டாள்.
வினய்யின் நண்பன் தான் வந்து விசாரித்தான்.
“நீ ஏன்டா அவ பின்னாடி சுத்திட்டு இருக்க? உனக்கென்ன லூசா?”
“ப்ச்ச்.. நான் ஒன்னும் அவ பின்னாடி சுத்தல. எனக்கு அவ நம்பர் வேணும்”
“அது ரிஜிஸ்டர்ல இருக்குமே”
“இல்ல. அவ அம்மா அப்பா நம்பர் தான் இருக்கு. க்ளாஸ்லயும் யாரு கிட்டயும் அவ நம்பர் கொடுக்கல”
“அப்படியா?”
“ஆமா.. யார கேட்டாலும் இல்லங்குறாங்க”
“அந்த நம்பர வச்சு நீ என்ன செய்ய போற?”
“அவ மொபைல ஹேக் பண்ணனும்”
“அடேய்!” என்று அதிர்ந்தான்.
“கத்தாதடா.. ஹேக் பண்ணி அந்த ஃபோட்டோவ அழிக்கனும். அத அழிச்சா தான் நான் நிம்மதியா இருக்க முடியும்”
“உனக்கு ஹேக்கிங் தெரியுமா?”
“எனக்கு தெரியாது. தெரிஞ்ச ஒருத்தன பார்த்தேன். அவன் நம்பருக்கு அவ மெஸேஜ் பண்ணா போதும். லின்க் அனுப்பி தூக்கிடலாம்னு சொல்லுறான். இவ மாட்ட மாட்டேங்குறா”
“பேசாம அவ கிட்ட நீ நேராவே அந்த ஃபோட்டோவ டெலிட் பண்ண சொல்லி கேட்கலாம்”
“கேட்டு கெஞ்சனுமா? கெஞ்சுனாலும் அவ செய்ய மாட்டா. அந்த ஃபோட்டோவ அழிச்சுட்டு, இவளுக்கு பெருசா ஆப்பு வைக்கனும். அது வரை அவ முன்னாடி நல்லவனா தான் இருக்கனும்” என்று எரிச்சலாக சொல்லிக் கொண்டான்.
தொடரும்.
வினய் இன்னும் அடி வாங்காமல் போக மாட்டான். ஜகதீஸ்வரி பாட்டி செம.
இந்த வீணாப்போன வினயை பேசாம போட்டுத் தள்ளிடுங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797