Loading

 

ஜானகி அடுத்த நாள் அலுவலகம் செல்ல, அங்கு வாசலில் பைக்கை நிறுத்திய நிர்மலன், “ஹாய்” என்றான் சிரிப்போடு.

இரவு சரியாக தெரியாத முகம் இப்போது தெரிந்தது.

“இப்ப ஓகேவா? பெரிய அடி இல்லையே?” என்று கேட்க, தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

“நீங்க இந்த நேரம் தான் வேலைக்கு வருவீங்களா? நானும் இந்த நேரம் தான் வருவேன். இதுக்கு முன்னாடி உங்கள நான் கவனிச்சதே இல்ல” என்று பேசிக் கொண்டே உடன் வந்தான்.

இன்று சற்று சீக்கிரமே தான் வந்திருந்தாள். காலையில் சாப்பிடவில்லை. ஏசியை விற்பதற்காக பார்க்க, மேனகா சண்டை போட்டிருந்தார். அந்த கோபத்தில் அப்படியே கிளம்பி வந்து விட்டாள். அவனிடம் பெரிதாய் பேசப்பிடிக்கவில்லை. அதனால் அமைதியாகவே சென்று லிஃப்டில் நுழைந்தாள்.

“எப்ப ஜாயின் பண்ணீங்க?” என்று அவன் அடுத்த பேச்சுக்கு தாவினான்.

அவள் பதில் சொல்லாததை கண்டுகொள்ளவே இல்லை அவன். பேச வேண்டும் என்று பேசிக் கொண்டே இருந்தான்.

“ரெண்டு மாசம் தான் ஆகுது”

“ஓஹோ.. நான் இங்க மூணு வருசமா வேலை பார்க்குறேன். வேற வேலை கிடைச்சா போகலாம்னு பார்க்கிறேன். ஆனா முடியல. நீங்க என்னவா வேலை பார்க்குறீங்க?”

“அக்கௌன்ட்”

“நான் கோடிங்”

லிஃப்ட் நின்று விட, உடனே வெளியேறி சென்று விட்டாள்.

“அப்புறமா பார்க்கலாம்” என்ற நிர்மலனுக்கு, தலையசைப்பு மட்டும் தான் பதிலாக கிடைத்தது.

வேலையை பார்க்க ஆரம்பித்ததும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வர, மற்ற எல்லாம் மறந்தே போனது அவளுக்கு.

*.*.*.*.*.*.*.*.

ஜாக்ஷி சுபத்ரா இருவரும் ஹாலில் அமர்ந்து இருந்தனர். தொலைகாட்சியினை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள் சுபத்ரா. ஜாக்ஷி தனது மடிக்கணினியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏன் இப்படி சீரியலா பார்த்துட்டு இருக்க? வேற எதுவும் பார்க்க கிடைக்கலயா உனக்கு?” என்று ஜாக்ஷி கேட்க, “இது நல்லா இருக்கு. எனக்கு பொழுது போகும்” என்றாள் சுபத்ரா.

“பொழுது போக இதான் கிடைச்சதா? நானும் அப்போல இருந்து பார்க்குறேன்.. எல்லா சீரியல்லயும் ஒரு பொண்ணு இருக்கா. அந்த பொண்ணு அடுத்தவ வாழ்க்கைய கெடுக்க பார்க்குற. என்ன கண்ட்ராவி கான்சப்ட் இது? உலகத்துல பொண்ணுங்களுக்கு வேற வேலையே இல்லையா? லூசுத்தனமா இருக்கு. நீயும் அதையே பார்க்குற”

“அது வில்லி”

“வில்லி? இதுங்களா? உண்மையான வில்லனுங்களுக்கு வந்த சோதனை. ஒழுங்கு மரியாதையா வேற பாரு. இல்ல டிவி கனெக்ஷன கட் பண்ணி விட்டுருவேன்”

“எனக்கு போரடிக்கும்” என்று சுபத்ரா பாவமாக சொல்ல, “அப்ப டிவிய ஆஃப் பண்ணு. எதாவது புக் எடுத்து படி. போரடிக்காது” என்றாள்.

சுபத்ரா முகத்தை தொங்க போட்டுக் கொண்டாள்.

“உன் அண்ணன் வீரா வருவான். அவனுக்கு எதாவது செய்யுறியா?” என்று கேட்டதும், முகம் மலர தலையாட்டியவள் உடனே எழுந்து ஓடினாள்.

ஜாக்ஷி தொலைகாட்சியை பார்த்தாள். அதில் ஒருத்தி அவளுக்கு பிடிக்காத ஒருத்திக்கு காரணமே இல்லாமல் விசம் வைத்துக் கொண்டிருந்தாள்.

“கொடுமையா இருக்கே ச்சை” என்றவள், உடனே தொலைகாட்சியை அணைத்து போட்டு விட்டு வேலையை தொடர்ந்தாள்.

பத்தி நிமிடங்கள் கழித்து, வீரா வந்து சேர்ந்தான்.

ஜாக்ஷியிடம் கொடுக்க வேண்டிய சில ஆதாரங்கள், அவனிடம் மிச்சம் இருந்தது.

“நம்ம லாயர் கிட்ட இதெல்லாம் கொடுக்கனும் பத்ரா. நாளைக்கு அவர வர சொல்லி இருக்கேன். நீயும் வர்ரியா?”

“எப்போ?”

“காலையில”

“ஓகே பார்க்குறேன். அன்னைக்கு வந்தப்போ போலீஸ் வந்தாங்க. இப்போ வக்கீலா?”

“போலீஸா? எப்போ?”

“அன்னைக்கு.. மார்னிங் வந்தனே.. மீட்டிங் வச்சப்போ?”

“ஓஓ அதுவா.. ஆமா கான்ஸ்டபிள் . ஒரு டிடைல் கொடுக்க எழிலரசி மேடம் அனுப்பி இருந்தாங்க”

“அவங்க உனக்கு அவ்வளவு க்ளோஸா?”

“ரொம்ப நாள் எல்லாம் தெரியாது. ரீசண்ட்டா சிற்றம்பலம் ஆக்ஸிடென்ட் கேஸ்ல தான தெரிஞ்சது”

“அப்படியா?”

“ம்ம்.. அந்த கேஸ எழிலரசி மேடம் தான் பார்த்தாங்க. அந்த மேனகா குடும்பம் அந்தாளு செத்தப்போ, அழுதுட்டு இருந்தாங்க. அதான் என் கிட்ட பேசுங்க மேடம்னு நானே பேசுனேன்.”

“அது ஆக்ஸிடென்ட் தான?”

“ஆமா. நல்லா விசாரிச்சுட்டு கேஸ க்ளோஸ் பண்ண சொல்லிட்டேன். ஆனா அந்த சிற்றம்பலம் கார் வேற ஒரு கார் மேல மோதிருக்கு”

“அச்சோ! அதுல வந்தவங்க என்ன ஆனாங்க?”

“அவங்க ஒரு நார்மல் ஃபேமிலி. கார ஓட்டினவரு அவரு வொய்ஃப் அவங்க ரெண்டு பசங்க. கார ஓட்டுனவரோட கால் ரெண்டும் போச்சு. பிள்ளைங்கள அவங்கம்மா காப்பாத்திட்டாங்க. அவங்களுக்கும் கையில அடி”

“அப்புறம்?”

“கேட்டதும் கஷ்டமா போச்சு. எழிலரசி மேடம் கிட்டயே, அவங்கள நம்ம ஹாஸ்பிடலுக்கு மாத்த சொல்லிட்டேன். சாகப்போற அந்தாளே ஏசி ரூம்ல செத்தான். அவங்க பாவம் நினைவே இல்லாம சாதாரண ஹாஸ்பிடல்ல இருந்துருக்காங்க. நம்ம ஹாஸ்பிடலுக்கு மாத்தி ட்ரீட்மெண்ட் செலவ ஹாஸ்பிடல் பார்த்துக்கும்னு சொல்லிட்டேன்.

மூணு நாளாச்சு அவர் முழிக்க. அவங்க முழுச்சதும் ஹாஸ்பிடல் வந்தேன். அப்ப தான் உன்னை பார்த்தேன். நீ அந்த கிட்னி விசயத்த பத்தி அப்ப தான் சொன்ன”

“ஓஹோ”

“இப்ப அவங்க சரியாகிட்டாங்க. பட் கால் போனதால வேலை போச்சு. பணத்துக்கு கஷ்டப்படுறாங்கனு எழிலரசி சொன்னாங்க. அதான் அவங்க டீடைல் கொடுங்க. எதாவது வேலை இருக்குமானு பார்க்குறேன்னு கேட்டேன். அந்த டீடைல தான் அன்னைக்கு கொடுத்து விட்டுருந்தாங்க”

“வேலை கொடுத்துட்டியா?”

“ம்ம். அவங்க ஹஸ்பண்ட் வொயிஃப் ரெண்டு பேருமே இப்ப வேலை செய்யுறாங்க. பசங்க ஸ்கூல் படிக்கிறவங்க.”

“அதான் உன் மேல அந்த போலீஸ் மேடம்க்கு அவ்வளவு மரியாதையா?”

“இருக்கலாம். எல்லா தப்புயும் பண்ண இந்தாளு பாவத்துக்கு, பாவம் அந்த குடும்பம் ஏன் கஷ்டப்படனும்? பட் எழிலரசி மொத்த குடும்பத்தையும் பார்த்துருக்காங்க. நீயும் அன்னைக்கு இருந்தல? அதனால உன்னையும் அவங்களுக்கு தெரியும். ஜஸ்ட் காட்டிக்கல அவ்வளவு தான். எல்லாரையும் பார்த்ததால தான் வினய் பிரச்சனை அப்போ முதல்ல என்னை கூப்பிட்டு சொன்னது”

“வினய் பத்தி கவிதா கிட்ட திரும்ப கேட்கனும்னு நினைச்சேன். ஆனா கேட்டு ரொம்ப ஒட்டவும் தோணல”

“அதெல்லாம் எதுவும் பண்ண மாட்டான். பண்ணா தூக்கி போட்டு மிதிக்க சொல்லிட்டேன். அவங்க காலேஜ்ல எனக்கு தெரிஞ்ச ஒரு பிரஃபஷர் இருக்காங்க. அவங்களுக்கு கால் பண்ணி, கவிதா டீடைல் கொடுத்தேன். அவங்க பார்த்துப்பாங்க. கவலை படாத”

வீரா அவளை இமை சிமிட்டாமல் பார்த்தான்.

“என்ன?”

“இல்ல.. உனக்கு தெரிஞ்ச ஆளுங்க இன்னும் எங்கலாம் இருக்காங்கனு யோசிக்கிறேன்”

ஜாக்ஷி சிரித்து விட்டு, “அவங்க எங்கயோ இருக்கட்டும். இப்ப உனக்காக உன் தங்கச்சி கிச்சன்ல எதோ செய்ய போனா. எதாவது இருந்தா வாங்கிட்டு வா. பசிக்குது” என்றாள்.

வீரா சுப்தராவை தேடிச் சென்றான்.

அவள் அவசரமாக கேசரி கிண்டிக் கொண்டிருந்தாள்.

“வந்துட்டீங்களா? உங்களுக்கு தான் செய்யுறேன். வெயிட் பண்ணுங்க” என்றவள் வேலையை தொடர, “பொறுமையா பண்ணு. ஜக்கம்மா தான் பசிக்குதுனு சொன்னா” என்றான்.

“அஞ்சே நிமிஷம்” என்றவள் அவசரமாக வேலையை பார்த்தாள்.

“என்ன பண்ணுறா?” – ஜாக்ஷி

“கேசரி”

“போரடிக்குதுனு சீரியல் பார்த்துட்டு இருந்தா. எதாவது செய்னு துரத்தி விட்டேன். இவள வச்சு என்ன செய்யுறதுனே தெரியல. படிக்கவும் மாட்டேங்குறா. வெளியவும் போக மாட்டேங்குறா”

“வெளிய போறது இல்லையா?”

“ம்கூம். எல்லாமே வாட்ச்மேன் கிட்ட சொல்லி வாங்கிப்பா. ஆன்லைன்ல ஆர்டர் போட சொல்லிக் கொடுத்தாலும், பழக மாட்டேங்குறா. இப்படியே இருந்து என்ன செய்ய போறானு தெரியல”

“சுபத்ரா எப்படி இங்க?”

“ஒரு இடத்துல பார்த்தேன். இந்த வீடு வாங்கி ரெண்டு மாசம் இருக்கும். ஒரு ஆர்கனைசேஷனுக்கு டொனேஷன்க்காக கூப்பிட்டுருந்தாங்க. அங்க தான் பார்த்தேன்.”

“ஓஹோ”

“அவ கதை கொடூரம். வெளிய இருக்கும் போது சொல்லுறேன்”

வீரா புரிந்து கொண்டு அமைதியாக, சுபத்ரா கேசரியோடு வந்து விட்டாள்.

சாப்பிட்டு பாராட்டி முடித்தபின், “உனக்கு ரொம்ப போரடிக்குதாமே” என்று கேட்டான் வீரா.

“ஆமா.. இவங்க டிவி பார்க்க விடல” என்று குறை சொல்ல, “அடிங்க.. அந்த கண்ட்ராவி சீரியல பார்க்குறதுக்கு கின்சன்ல எதையாவது செஞ்சு சாப்பிட்டு உடம்ப தேத்து சொல்லிட்டேன்” என்று ஜாக்ஷி முறைத்தாள்.

“கோபத்த குறை ஜக்கம்மா.. சுபத்ரா.. வேற என்ன உனக்கு பிடிக்கும்? சமைக்க பிடிக்கும். வேற?” என்று விசாரித்தான்.

தலையை தட்டி யோசித்தவள், சில நிமிடங்கள் முகம் சுருங்கி விட்டு, பிறகு எதோ சொன்னாள்.

“எழுதுறதா?” என்று வீரா கேட்க, ஜாக்ஷி அவளை பார்த்தாள்.

“எழுதுறது இல்ல. வரையுறத சொல்லுறா”

“அப்போ நல்லா வரைவியா?”

சுபத்ரா பலமாக தலையாட்ட, “செய்ய வேண்டியது தான?” என்று கேட்டான்.

“வரைய எதுவும் இல்லையே”

“வாங்கிட்டு வரலாம் வா”

உடனே பயந்த முகத்தோடு சுபத்ரா மறுப்பாக தலையசைக்க, ஜாக்ஷி சலிப்பாக வீராவை பார்த்தாள்.

“ஏன்? வரைய வேணாமா?”

“வேணும்”

“அப்புறம் என்ன? கிளம்பு வாங்கலாம்”

ஜாக்ஷி சுபத்ராவை ஆர்வமாக பார்க்க, சுபத்ரா அவளை பாவமாக பார்த்தாள்.

“என்ன அங்க லுக்கு? ஜக்கம்மாவையும் சேர்த்து தான் கூட்டிட்டு தான் போறோம். போய் கிளம்பு”

சுபத்ரா எதோ சொல்ல, “அவ வரலயாம். நாம மட்டும் போய் வாங்கிட்டு வரனுமாம்” என்றாள் ஜாக்ஷி கடுப்பாக.

“உனக்கு வரைய தெரியுமா ஜக்கம்மா?”

“தெரியுமே.. அந்த கிராஃப் சார்ட்ல கோடு போகுமே.. மேல கீழனு பிபிடில.. அந்த கோடு நல்லா வரைவேன்” என்று ஜாக்ஷி கிண்டலாக சொல்ல, வீரா சிரித்தான்.

“எனக்கும் தெரியாது. வரையுற டிப்பார்ட்மெண்ட்ல அ னா ஆவன்னா கூட தெரியாது. நாம ரெண்டு பேரும் போய் கடைய லூசு மாதிரி பார்த்துட்டு நிக்கனுமா? ஏம்மா சுபத்ரா.. இது உனக்கு அநியாயமா இல்ல?”

சுபத்ரா உதட்டை கடித்து இருவரையும் பாவமாக பார்க்க, “இங்க பாரு நீ வந்தா வரையுற பிரஸ் கிடைக்கும். நாங்க போனா வீட்டுக்கு அடிக்கிற பெயிண்ட் பிரஸ் தான் கிடைக்கும். அதை வச்சு தான் நீ வரையனும் பரவாயில்லயா?” என்று கேட்டு வைத்தான்.

“அப்ப ரெண்டும் ஒன்னில்லயா?” என்று ஜாக்ஷி கேட்க, “இல்லையாம்.. வேற வேறயாம்” என்றான்.

“ரெண்டு பேரும் பிரஸ் தான? எத வச்சு வரைஞ்சா என்ன?”

“இத தான் நானும் கேட்க நினைச்சேன். உனக்கு எப்படி ஓகேவா?”

இருவரின் சம்பாஷனையில் புன்னகை வர, “நான் வர்ரேன்” என்று விட்டாள்.

“இது சரி. ஓடி போய் கிளம்பு. அஞ்சு நிமிஷம் தான். இந்த கேசரி காலியாகும் போது நீ வந்துருக்கனும்” என்றவன், அவளை அனுப்பி விட்டு ஜாக்ஷியை பார்த்தான்.

“பேசி கரைச்சுட்ட அவள” என்று ஜாக்ஷி சந்தோசமாக சொல்ல, “எல்லா நேரமும் கோபப்பட கூடாது. சில நேரம் சிரிப்பு காட்டி காரியத்த சாதிக்கனும் ஜக்கம்மா. தெரிஞ்சுக்க” என்றவன், கேசரியை அள்ளி அவளுக்கு ஊட்டி விட்டு தானும் உண்டான்.

மூவரும் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் காரில் ஏறி இருந்தனர்.

சுபத்ரா சன்னலருகே அமராமல், நடு பகுதியில் அமர்ந்து கொண்டாள். ஒரு பயத்தோடு அவள் கண்ணாடி பக்கம் பார்க்க பயந்து கொண்டிருக்க, “இந்த கார்ல வெளியில இருந்து உள்ள பார்க்க முடியாதுல ஜக்கம்மா? அதான் உன்னோட கார் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு” என்றான் வீரா.

இதைக்கேட்டதும் சுபத்ராவின் உடல் தளர்ந்தது.

“போகலாமா?” என்று கேட்டவன் காரை எடுக்க, சுபத்ரா ஆர்வமாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

*.*.*.*.*.*.

மேனகா மகளை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். ஏசியை கழட்டி ஆன்லைனில் விற்று விட்டாள் ஜானகி. சற்று முன்பு தான் ஆட்கள் வந்து தூக்கிக் கொண்டு சென்றனர்.

‘காரும் போச்சு. ஏசியும் போச்சு.’ என்று பொறுமிக் கொண்டிருக்க, ஜானகி பணத்தை வாங்கி எண்ணி பார்த்து விட்டு, “ஜெகன்” என்று அழைத்து அவன் கையில் பணத்தை கொடுத்தாள்.

“மிச்சம் இருந்த பீஸ இதுல கட்டிரு”

“அம்மா கோபமா இருக்காங்ககா”

“அத பத்தி நீ ஏன் கவலைப்படுற? உனக்கு காலேஜ் படிக்கனுமா? வேணாமா?” என்று கேட்க, ஜெகனால் எதுவும் சொல்ல முடியவில்லை.

“படிக்கிற வேலைய மட்டும் பாருடா. படிச்சு முடிச்சு நீ வேலைக்கு போனா தான், செலவு பண்ண ஈசியா இருக்கும். இப்பவே இருக்க எல்லாம் காலி. இனியும் பழைய மாதிரியே இருக்கனும்னு நினைச்சா முடியாது. போய் உன் வேலைய பாரு” என்று அனுப்பி வைத்தாள்.

மேனகாவின் கோபத்தை பற்றி அவள் அக்கறை படவில்லை. சமைத்து சாப்பிட்டு விட்டு படுத்தவள், உடனே தூங்கியும் விட்டாள். மேனகா தான் கோபத்தோடு உறங்காமல் இருந்தார்.

பேச்சுக்கு சொல்கிறாள் என்று நினைத்தால், உண்மையிலேயே ஏசியை விற்று விட்டாளே என்று கோபமாக வந்தது.

இனியும் தாமதிப்பதற்கு இல்லை. எப்படியாவது ஜாக்ஷியை சந்தித்து, அந்த ஃபேக்டரியை வாங்கி விட வேண்டும்.  இல்லையென்றால், ஜானகி அவரை நடுரோட்டுக்கு இழுத்து வந்து விடுவாள்.

சிற்றம்பலத்தின் கைபேசியை எடுத்து, ஜாக்ஷியின் எண்ணை எடுத்துக் கொண்டார். காலையில் ஜானகி வேலைக்கு சென்ற பிறகு பேச முடிவு செய்தார்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
19
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. இந்த வீரா ஜாசஷியை மட்டுமில்லை, மத்தவங்களையும் பேசி, பேசியே கரைச்சிடறான்.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

    2. ஜாக்ஷி வீரா பந்தம் அழகு. ஜானகி சூப்பர்