Loading

 

காரை ஓட்டிக் கொண்டிருந்த வீரா, ஜாக்ஷியின் முகத்தை பார்த்து புன்னகைத்தான்.

“இன்னும் சூடு குறையலயோ?”

“நல்லா பேசிருப்பேன். இழுத்துட்டு வந்துட்ட”

“பேசுனா மட்டும் என்னாகிடும்?”

“என்ன ஆகுமா?”

“ஆமா.. நீ பதிலுக்கு பேசுனா சண்டை தான் மிஞ்சும். வேற எதுவும் நடக்காது”

“இனிமே காதம்பரி உன்னை பத்தி பேச விடாம தடுத்துருப்பேன்”

“அவங்க பேசுனாலும் திட்டுனாலும், அது என்னை பாதிக்காது ஜானு. நான் வேலைக்காரனா? ஆமா நான் உழைச்சு சம்பாதிக்கிறேன். இதுல என்ன தப்பிருக்கு? எதுவுமே செய்யாம அடுத்தவங்க பணத்துல சாப்பிடலயே?”

“பட்..”

“ஃப்ரியா விடு ஜக்கம்மா.. இதெல்லாம் தலையில ஏத்திக்காத. வா ஐஸ்கிரீம் சாப்பிடலாம். நானும் உன் கிட்ட பேசனும்னு நினைச்சேன்”

“என்ன பேசனும்?”

“சாப்பிட்டுட்டே பேசலாம்”

இரண்டு ஐஸ்கிரீமை வாங்கி காரில் அமர்ந்தபடி, சாப்பிட ஆரம்பித்தனர்.

“சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது” என்று ரசித்து சாப்பிட்டாள் ஜாக்ஷி.

“நானும் தான்”

“சரி ஐஸ்ஸ கொடுத்து கூல் பண்ணிட்ட.. இப்ப சொல்லு. என்ன விசயம்?”

“உனக்கு ஏன் உன் அம்மா மேல இவ்வளவு கோபம்?”

“உனக்கு உன் அம்மா மேல கோபம் இல்லையா?”

“இருக்கு தான்”

“அதே கோபம் தான் எனக்கும்”

“புரியுது தான்.. ஆனா.. நாம ரெண்டு பேருமே வேண்டாத சுமை அவங்களுக்கு. புரிஞ்சுட்டா ஒதுங்கிடுறது பெட்டர் இல்லையா?”

“அவங்க ஒதுங்கனுமே? தேவையில்லனா தூக்கி எறிவாங்க. தேவை பட்டா வந்து கொஞ்சுவாங்க. ரெண்டையும் நாம ஏத்துக்கனுமா? முடியாது. வேணாம்னு உதறுனதோட அவங்க உறவு முடிஞ்சு போச்சு. திரும்ப வந்து பெத்த பிள்ளை மேல அக்கறை இருக்குனு நடிச்சா, பார்த்துட்டு சும்மாலாம் இருக்க முடியாது”

வீராவுக்கு திடீரென சிரிப்பு வந்தது.

“என்ன?”

“உன் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒரே மாதிரி போகுது. உன் அம்மா எப்படி உன்னை கை விட்டாங்களோ, அதே போல தான் என் அம்மாவும். நீயும் நானும் பாட்டி கிட்ட வளர்ந்தோம். இன்னைக்கு உன் அம்மா கல்யாண விசயத்துல அக்கறை இருக்க மாதிரி பேசுறாங்க. என் அம்மா எனக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்காங்களாம்”

“காமெடியாவும் இருக்கு. அதிசயமாவும் இருக்குல?”

“எப்படி? வேற வேற பிரச்சனை.. வேற வேற குடும்பம். வேற வேற வாழ்க்கை. ஆனா யோசிச்சா எல்லாம் ஒரே மாதிரி பொருந்துதுல?”

“இதுக்கு பேரு தான் மேன் ஜாடிக்கு ஏத்த மூடி” என்று ஜாக்ஷி சிரிக்க, வீராவும் தலையாட்டினான்.

“நாம வளர்ந்தது, வாழுற வாழ்க்கை, நம்ம ஊர் எல்லாமே வேற. ஆனா என்னை தவிர உன்னோட மனச வேற யாராலயும் சரியா புரிஞ்சுக்க முடியாது. நான் சொல்ல வர்ரதும் உன்னை தவிர யாருக்கும் புரியாது.”

“மத்தவங்க எல்லாருக்கும், என்னமோ நாம பெத்தவங்கள ஒதுக்கி வச்சுட்டு கஷ்டப்படுற மாதிரி நினைப்பு. அவங்க நமக்கு செஞ்சத ஈசியா மறந்துடுறாங்க”

“எக்ஸாட்லி! ரெண்டாவதா ஒரு வாழ்க்கைய தேடுறதுல எந்த தப்பும் இல்ல. ஆனா நாம? சிற்றம்பலம் செஞ்சது சீட்டிங். பிடிக்கலனா அப்பவே பிரிஞ்சுட்டு, அப்புறமா ஒரு வாழ்க்கைய தேடிருக்கனும். காதம்பரிக்கு என்னை எப்பவுமே பிடிக்காது. ஆனா நான் மட்டும் வளர்ந்தப்புறம் அம்மா அப்பானு போய் நிக்கனும்னு நினைக்கிறாங்க. முடிஞ்சா அவங்க கால்ல விழுந்தாச்சும் பாசத்த வாங்கனுமாம். எதுக்குங்குறேன்? கஸ்டடி வேணாம்னு என்னை தூக்கி போட்டது அவங்க. நான் ஏன்டா கால்ல விழனும்?”

“உன் அம்மா உன்னை வேணாம்னு சொல்லிட்டாங்க. ஆனா என் அம்மா..” என்று பெருமூச்சு விட்டான்.

“என்ன பண்ணாங்க?”

“அந்த வீட்டுக்கு போற வரை, அப்பா இல்லையேங்குற கவலை மட்டும் தான் இருந்துச்சு. அங்க போனப்புறம், அம்மாவும் இல்லனு புரிஞ்சுடுச்சு. பசுபதி.. அதான் அவரு பேரு. அவர அப்பானு கூப்பிடுனு சொல்ல.. நானும் தெரியாம கூப்பிட்டதுக்கு, முதுகுல குச்சில அடி வாங்குனேன். யாருக்கு யாரு அப்பா? வேணும்னா பெரியப்பானு கூப்பிடுனு அந்த வீட்டு கிழவி அடிச்சுடுச்சு. இதுல ஊர்ல இருக்கவங்க உபதேசம் வேற.. உன் அம்மா இந்த வீட்டோட நல்லா வாழனும். அதுனால அம்மா அம்மானு அவ பின்னாடியே சுத்தாத. உன்னை நீயே பார்த்துக்கனு.. இது ஒரு மாசம் இல்ல.. ஒரு வருசமா நடந்துச்சு. அந்த கிழவி, நான் என்ன செஞ்சாலும் கையில இருக்க குச்சில அடிச்சுடும். வலிக்குதுனு போய் நின்னா, என்னை பெத்தவங்க ஏன்னு கேட்குறதுக்கு முன்னாடி, மத்தவங்க என்னை பிடிச்சு இழுத்துட்டு போயிடுவாங்க”

“சரியான காட்டுமிராண்டி குடும்பமா இருக்கே?”

“அது கூட பரவாயில்ல. ஒரு நாள் அடிக்கிறாங்க வலிக்குதுனு சொல்ல தான் செஞ்சேன். ஆனா இதுவும் நம்ம அப்பத்தா போல தான். அடிச்சா இனிமே எந்த தப்பும் செய்யாதனு சொல்லிட்டாங்க. என் அப்பத்தா என்னை கை நீட்டி அடிச்சது கிடையாது. என்னை திட்ட வேணா செய்வாங்க.”

“அதான் உன்னை கூட்டிட்டு போயிட்டாங்களா?”

“ஆமா.. அப்பத்தா வர்ர நேரம், தண்ணி குடைத்த தள்ளி விட்டு விழுந்துட்டேன். இப்படியாடா தண்ணிய தட்டி விடுவனு கிழவி குச்சிய வச்சு அடிக்குது.‌ என் அம்மா குடத்தையும் தண்ணியையும் பார்த்துட்டு இருக்கு. அத பார்த்துட்டு, அப்பத்தா சண்டை போட்டுச்சு. என்னையும் அப்பத்தாவையும் சேர்த்து துரத்தி விட்டாங்க.”

“உங்கம்மா?”

“சும்மா தான் கண்ணீர் விட்டுட்டு நின்னாங்க. ஆனா எனக்கு அந்த ஒரு வருசத்துலயே அம்மா பாசமெல்லாம் காணாம போயிடுச்சு. அவங்க வாழ்க்கை நிலைக்கனும்னு என்னை பலி கொடுத்துட்டாங்க”

“ஆனா இத வெளிய சொன்னா, ஒருத்தன் நம்ப மாட்டான். அம்மானாலே பாசக்காரினு பொய் சொல்லி வச்சுருக்காங்களே”

“ஒரு வேளை அவங்களுக்கு, காதம்பரி தாமரை மாதிரி அம்மா இல்லாம நல்ல அம்மா கிடைச்சுருக்கும்”

“இருக்கும் இருக்கும்” என்றவள், அவனது ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட்டாள்.

“இது நல்லா இருக்கே..”

“வச்சுக்க.. அத கொடு” என்று வாங்கிக் கொண்டான்.

ஜாக்ஷி சிரித்தாள்.

“இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நான் யாரு கூடவும் சேர் பண்ணி சாப்பிட்டது இல்ல”

“உனக்கு ஃப்ரண்ட்ஸ் இல்லையா?”

“இருந்தாங்க. ஆனா நான் யாரு கூடவும் க்ளோஸ் ஆனது இல்ல”

“பசங்களுக்குள்ள சேரிங் சாதாரணம். பட் பொண்ணுனா நீ தான் பண்ணிருக்க”

“க்ரஸ் இருந்துச்சுனு சொன்ன?” என்று பொறாமை குரலில் கேட்க, “அதுக்காக அவங்க கூட வழிஞ்சுட்டா இருக்க முடியும்? பிடிச்சுருந்தது அவ்வளவு தான்” என்றான்.

“உனக்கு எந்த மாதிரி பொண்ணுங்கள பிடிக்கும்?”

வீரா இதைக்கேட்டு அவளை கிண்டலாக பார்க்க, “தெரிஞ்சுக்க தான் கேட்டேன். நான் மாற போறது இல்ல” என்று கூறி வைத்தாள்.

“அப்புறம் எதுக்கு கேட்குற?”

“எல்லாத்தையும் கேட்டுட்டு கடைசியா ஒரு ஊத்தாப்பம்னு சொல்ல தான்”

“ஆணிய புடுங்க வேணாம்”

“பரவாயில்ல சொல்லு..”

“எனக்கு தைரியமான பொண்ணுங்கள பிடிக்கும். என் பாட்டி ரொம்ப போல்ட். அழகான பொண்ணுங்கள பிடிக்கும். என் கண்ணுக்கு அழகா இருந்தா போதும். ரசிப்பேன். அவ்வளவு தான்”

“அவ்வளவு தானா? சமைக்கிறது.. வேலைக்கு போறது.. குடும்பத்த பார்த்துக்கிறது.. இதெல்லாம் லிஸ்ட்ல வரல?”

“நீ பிடிச்சத தான கேட்ட.. கல்யாணம் பண்ணிக்க போறவனா கேட்ட?”

“ரெண்டும் ஒன்னு தான?”

“பிடிச்ச எல்லாரையும் கட்டிக்க முடியுமா?”

“ஓஓ.. நீ அந்த லாஜிக்ல வர்ரியா? சரி சொல்லு.. கட்டிக்க போற பொண்ணுனு கனவு கண்டத சொல்லு கேட்போம்”

“நான் கல்யாணத்த பத்தி பெருசா ஆசைப்பட்டது இல்ல. ஆனா.. நான் பாட்டி அவனு ஒரு வாழ்க்கை. அமைதியா போனா போதும். அவ வேலைக்கு போனாலும் சரி. போகலனாலும் சரி. அது அவ சாய்ஸ். என்னையும் பாட்டியும் ஒரு குடும்பமா ஏத்துக்கிட்டா போதும். இந்த சமைக்கிறது தான் இடிக்குது. எனக்கு தெரியாது. அவளுக்கும் தெரியாதுனா, பாட்டி தான் செய்யனும். பாட்டி ஊர்ல இருந்தா, வெளிய வாங்கி சாப்பிட வேண்டியது தான்”

“எனக்கு சமைக்க தெரியாதே”

“நீ என்னை கல்யாணம் பண்ணிக்க போறியா?” என்று வீரா சரியான இடத்தை பிடிக்க, பதில் சொல்லாமல் ஐஸ்கிரீமை அள்ளி வாயில் போட்டுக் கொண்டாள்.

அவளது திணறலில் சிரித்தவன், “சரி உன் ஆசைய சொல்லு” என்று கேட்டான்.

“நான் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாலயே இல்லையே” என்று தோளை குலுக்கினாள்.

“ஒரு வேளை நடந்துட்டானு யோசிச்சுருப்பியே..?”

“அப்படி பார்த்தா… முதல்ல நான் என் வேலைய விட மாட்டேன். அடுத்து என் பாட்டியையும் விட மாட்டேன். என் சொத்துக்கள சீரா கொடுக்க மாட்டேன். அவனுக்கு பொண்டாட்டியா, நல்ல மருமகளா இருக்கலாம். வீட்டுல வேலைக்காரியா இருக்க முடியாது. என்னை பெத்தவங்கள என் கல்யாணத்துக்கு வர விட மாட்டேன். அத கேள்வி கேட்க கூடாது. மொத்தத்துல என்னை நானாவே ஏத்துக்கனும். முடியாதுனா நடையைக்கட்டு. அவ்வளவு தான் “

“ஒரு வேளை நீ என்னைய கல்யாணம் பண்ணுற நிலைமை வந்ததுனு வையேன்.. நல்ல பொருத்தமா இருப்போம்”

“அப்படியா?” என்று ஜாக்ஷி சந்தோசத்தை மறைத்துக் கொண்டு கேட்க, “ஆமா. எனக்கும் உனக்கும் இருக்க ஆசைய பாரு. ஒன்னுமே இல்ல. நம்ம பாட்டிங்க தான். அவங்க நம்மல விட க்ளோஸ். அதுனால எந்த பிரச்சனையும் இருக்காது” என்றான்.

“அப்போ உன்னை கல்யாணம் பண்ணிக்கிறது பெஸ்ட் ஆப்ஷன்னு சொல்லுற?”

“ஆமானு சொன்னா கல்யாணம் பண்ணிப்பியா என்ன?”

“கமான் மேன்.. இதையே கேட்காத. எனக்கு உன்னை பத்தி தெரிஞ்சுக்கனும்னு ஆசை. நீயும் என்னை பத்தி நல்லா தெரிஞ்சுக்கோ. அதுக்கப்புறம் நீ இல்லாம நானில்லனு லவ் வந்துட்டா, கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுறேன்”

“அப்படி ஒரு லவ் நமக்குள்ள வரும்ங்குற?”

“ஏன்? உனக்கு நம்பிக்கை இல்லையா?”

“இதுவே நாம டீன் ஏஜா இருந்தா, பார்த்ததும் பத்திக்கிச்சுனு காதல் வந்துருக்கும். உலகத்த நல்லா தெரிஞ்சு வச்சுருக்க நமக்கு, காதல் வந்து அன்பே அமுதேனு வசனமெல்லாம் பேச வராது”

“லவ்னா வசனம் மட்டும் தானா என்ன?”

“அதையும் தாண்டி இருக்கு தான்.. சரி பார்ப்போம். நம்ம எதிர்காலம் எப்படி அமையுதுனு”

ஜாக்ஷி தலையாட்ட, “சுபத்ராவுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிட்டு போய் கொடுக்கலாம். அவ குழம்பு அவ்வளவு நல்லா இருந்துச்சு. அதுக்கு பாராட்டவே இல்ல” என்றவன் சுபத்ராவுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு திரும்ப, பாதையை மறைத்து நின்றாள் கவிதா.

“அண்ணா!”

“நீ இங்க என்ன செய்யுற?”

“வீரா” என்று குரல் கேட்க, சட்டென திரும்பிப் பார்த்தான். தாமரையும் அருளும் வந்து சேர்ந்தனர்.

ஜாக்ஷி காரில் இருந்தபடி கவிதாவை பார்த்து விட்டாள்.

“இது அந்த பொண்ணுல? மறுபடியும் அவன் எதாவது செஞ்சானானு கேட்போம்” என்றவள் கீழே இறங்கி காரை பூட்டி விட்டு அருகே வர, தாமரை மகனிடம் வந்து விட்டார்.

“வீரா.. எப்படிடா இருக்க?” என்று கண்கலங்க விசாரிக்க, அவன் கவிதாவை பார்த்தான்.

“பார்க்க வந்தாங்கண்ணா.. வெளிய சாப்பிட்டு ஐஸ்க்ரீம் வாங்க வந்தோம்” என்று அவள் விளக்கினாள்.

“அப்ப சீக்கிரம் கிளம்பு. ஹாஸ்டல் இந்த டைம்ல பூட்டிருவாங்களே”

“ஆமாணா போகனும்” என்றவள் தாமரையை தயக்கமாக பார்த்தாள்.

தாமரைக்கு மகனிடம் பேச வேண்டும். காலையில் வந்ததிலிருந்தே, வீராவிடம் பேச வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். வீராவின் மனதை அறிந்து, கவிதா தான் தடுத்துக் கொண்டிருந்தாள். இப்போது நேரிலேயே பார்த்து விட்டனர்.

“வீரா என் கிட்ட பேச மாட்டியா?” என்று கேட்க, அவரை நேராக பார்த்தான்.

“என்ன பேசனும்?”

“என் மேல என்னடா கோபம்? பெத்த அம்மாவ யாரோ மாதிரி ஒதுக்கி வைக்கிற”

“நீங்க நல்ல அம்மாவா இருந்தா, அவன் ஏன் ஒதுக்கி வைக்கிறான்?” என்று ஜாக்ஷி கேட்க, வீரா திடுக்கிட்டு அவளை திரும்பிப் பார்த்தான். ஜாக்ஷி முறைத்துக் கொண்டு நின்றாள்.

“நீங்க தான் நல்ல அம்மா இல்லையே”

“ஸ்ஸ்.. வேணாம் போகலாம் வா” என்று வீரா அவள் கையைப்பிடிக்க, “நில்லு மேன். அப்படியே போக முடியாது. என்னமோ பாசம் பொங்குற அம்மா மாதிரி கண்ணீர் விடுறாங்க. இவங்க தான உனக்கு கேன்சர் வரும்னு சொன்னவங்க? அப்படி சொல்லும் போது இந்த பாசம் எங்க ஆணி புடுங்க போச்சாம்?” என்று கோபமாக கேட்டு விட்டாள்.

“ஜாக்ஷி” என்று வீரா அதட்ட, “அப்படி தான் பேசுவேன். நீ கோபப்பட்டாலும் சரி.. ஏன்மா.. உங்க பேரு கூட எனக்கு தெரியல.. எதுவோ ஒன்னு இருக்கட்டும். என்னமோ இவன கல்யாணம் பண்ணுனா, பொண்ணு விதவை ஆகிடுவானு ரொம்ப வருத்தப்பட்டீங்களாமே? உங்க தாய் பாசத்த கண்டு எனக்கு மெய் சிலிர்த்து போச்சு. நல்லா கேளுங்க. இவன் நூறு வயசு வாழுவானானு எனக்கு தெரியாது. ஆனா இவன இப்படி சபிக்கிற யாரும் நல்லா இருக்க மாட்டீங்க. தெரிஞ்சுக்கோங்க” என்றாள்.

“போதுங்குறேன்ல? கவிதா சீக்கிரம் ஹாஸ்டலுக்கு போ. நேரமாகுது.” என்றவன் ஜாக்ஷியை இழுத்துக் கொண்டு நடந்தான்.

“கவிதா.. உன் அம்மாவ இனிமே இவன் பக்கம் வர வேணாம்னு சொல்லி வை. இல்லனா நான் இதுக்கு மேலயும் பேசுவேன்” என்று போகும் போதும் எச்சரித்து விட்டு வீராவோடு சென்று விட்டாள்.

மூவருமே ஜாக்ஷி பேசியதற்கு அதிர்ச்சியில் நிற்க, அவர்கள் காரில் ஏறி கிளம்பி விட்டனர்.

“ம்மா.. போகலாம் வா.. இவளுக்கு நேரமாகுது” என்று அருள் தான் முதலில் தெளிந்து, இருவரையும் அழைத்துக் கொண்டு இடத்தைக் காலி செய்தான்.

காரில், வீரா ஜாக்ஷியை முறைத்தபடி காரை ஓட்ட, ஜாக்ஷி புதிதாய் வாங்கிய ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

“என்ன முறைக்கிற? அதெல்லாம் சுபத்ராக்கு வச்சுருக்கேனே” என்றவளை, என்ன செய்வது என்று பார்த்து வைத்தான்.

“அவங்க கிட்ட இப்படி பேசியே ஆகனுமா?”

“ஆமா. என் அம்மாவும் சரி உன் அம்மாவும் சரி, தப்ப தப்புனே உணராத மனுசங்க. நாம தான் நல்லா புரியுற மாதிரி சொல்லனும். காதம்பரி தப்பிச்சு உன் அம்மா மாட்டிக்கிச்சு..”

“இருந்தாலும் உனக்கு மூக்கு மேல கோபம் வருது ஜக்கம்மா”

“அதான் கூலாக ஐஸ் சாப்பிடுறனே.. நீயும் சாப்பிடு சரியாகிடுவ” என்று அவனுக்கு ஊட்டி விட்டு, அலட்டிக் கொள்ளாமல் பயணித்தாள்.

தொடரும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
23
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. ரெண்டு பேருமே ஜாடிக்கேத்த மூடி, மூடிக்கேத்த ஜோடி, ஜோடிக்கேத்த ஜாடி தான் போங்க.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

    2. ஜாக்ஷி செம தாமரை இனிமேல் அவனிடம் வைச்சுக்காதா. வீரா ஜாக்ஷி பாவம் இனிமேல் நல்ல இருக்கனும்