ஜாக்ஷியின் மீது இருந்த கோபத்திற்கு, வினய் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான். எப்போதும் காதம்பரி அடித்தால், அசோக் தடுத்து விடுவார். இன்று அவருக்குமே ஜாக்ஷியின் முன்னால் அவமானப்பட்டது பிடிக்கவே இல்லை. அதனால் வினய்யை காதம்பரி அடிக்கும் போது, ஒரு வார்த்தை கூட பேசாமல் நின்றிருந்தார்.
“உன்னால அவ முன்னாடி என் மானம் போச்சு.. ஏன்டா? எங்க இருந்துடா கத்துக்கிட்ட இந்த பழக்கத்த? சீக்கிரமா கேன்சர் வந்து சாகனுமா?” என்று அடித்து துவைத்திருந்தார்.
இனி தவறு செய்ய மாட்டேன் என்று கெஞ்சிய பிறகே, மலையிறங்கினார்.
“இது தான் லாஸ்ட். இனி உன் மேல எதாவது கம்ப்ளைன்ட் வந்துச்சு? வீட்ட விட்டு துரத்திடுவேன். ரோட்டுல பிச்சை தான் எடுக்கனும்”
வினய் வலி பொறுக்காமல் அழுது கொண்டிருந்தான்.
“அந்த பொண்ணு பேரென்ன?” என்று அசோக் கேட்க, “கவிதா” என்றான்.
“இனி அவ பக்கம் நீ தலை வச்சு படுக்க கூடாது. மீறி எதாவது நடந்தா, நீ காலேஜ் போனது போதும்னு டீசிய வாங்கிடுவேன். பார்த்துக்க” என்று அசோக்கும் மிரட்டி வைத்தார்.
திட்டி ஓய்ந்து இரவு கடந்து விட, காலையில் மீண்டும் அர்ச்சனை செய்து கல்லூரி அனுப்பி வைத்தனர்.
“இந்த ஜாக்ஷி முன்னாடி மானம் போனத தான் தாங்கவே முடியல. சும்மாவே என்னை பெத்தவனு மதிக்க மாட்டா. நேத்து கொலை பண்ணுவேன்னு மிரட்டுறா. இவன கிரிமினல்ல லிஸ்ட் சேர்க்க சொல்லிடுவேன்னு மிரட்டுறா”
“அந்த போலீஸ் அவளுக்கு தெரிஞ்சவங்களா இருக்கவும், முதல்ல அவள கூப்பிட்டு சொல்லி வச்சுட்டாங்க. இனி இவன் ஒழுங்கா இருந்தா போதும்”
அசோக் அதோடு முடித்துக் கொண்டு வேலையை பார்க்க கிளம்பி விட்டார்.
ஆனால் காதம்பரிக்கு மனம் ஆறவில்லை. ஜாக்ஷியை பதிலுக்கு அவமானபடுத்தினால் தான் மனம் ஆறும் என்று நினைத்திருக்க, அவருக்காகவே வந்தது அழைப்பு.
*.*.*.*.
இரவு வீரா விட்டுச் சென்றதும், கவிதா தாமரையிடம் பேசினாள். வழக்கமாக பேசும் நேரம் என்பதால், தாமரையும் சாதாரணமாக பேசினார். கவிதா முதலில் தயங்கி விட்டு, விசயத்தை சொல்ல ஆரம்பித்தாள்.
“ம்மா.. வீட்டுல எல்லாருமே இருக்காங்களா?”
“ஆமா கவி.. ஏன்?”
“ஸ்பீக்கர்ல போடுங்க. எல்லாரு கிட்டயும் பேசுறேன்” என்று சொல்ல, தாமரையும் செய்தார்.
பயமாக இருந்த போதும், வீரா பேசியதை மனதில் வைத்துக் கொண்டு, நடந்த ஒவ்வொன்றையும் கூறினாள். சேகரும் அருளும் ஒரு பக்கம் கொந்தளிக்க, தாமரை பயந்து விட்டார்.
“அவன் யாருனு சொல்லு. நேர்ல வந்து அவன் கைய உடைக்கிறேன்” என்று கேட்டு சேகர் குதிக்க, “வேணாம்ணா.. இங்க போலீஸே அவன நல்லா அடிச்சுட்டாங்க” என்றாள்.
வீரா வந்தது பற்றி கூற, சேகர் சட்டென அமைதியாகி விட்டான். நடந்ததை எல்லாம் கவிதா சொல்லி முடித்த போது, தாமரை மகளை நினைத்து கண்கலங்கி விட்டார்.
“பேசாம அங்க இருந்து வந்துடு கவி. இங்க இருக்க காலேஜ்ல சேர்ந்துக்க” என்று கூப்பிட, “இல்லமா.. நான் இங்கயே படிக்கிறேன். வீரா அண்ணன் சொன்னாங்க. பிரச்சனை இல்லாத இடம் இந்த உலகத்துலயே இல்ல. சமாளிக்க நாம தான் தைரியமா இருக்கனும்னு. அங்க வந்து படிச்சா மட்டும் எனக்கு பிரச்சனையே வராதா? நானே பார்த்துப்பேன்மா. இல்லனா வீரா அண்ணனுக்கு கூப்பிட்டு சொல்லிருவேன்.” என்று சமாதானம் செய்தாள்.
சில நிமிட பேச்சுக்கு பிறகு, “நாங்க கிளம்பி வர்ரோம் கவி” என்றார் தாமரை.
“அண்ணனும் அதான் சொல்லுச்சு. யாரையாவது வந்து பார்த்துட்டு போகச்செல்லுனு கேட்டுச்சு. உங்களுக்கு வேலை இல்லைனா வாங்க”
“அதெல்லாம் காலேஜ்க்கு லீவ் போட்டுக்கிறேன். நானும் அம்மாவும் வர்ரோம்” என்று அருள் சொல்லி முடித்தான்.
பேசி முடித்து விட்டு படுத்த கவிதாவிற்கு நிம்மதியாக இருந்தது. வீரா சொன்னது போல், தைரியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே தூங்க ஆரம்பித்தாள்.
*.*.*.*.
அடுத்த நாள் காலை..
ஜாக்ஷி வீராவை அழைத்து, “பாட்டிய எப்ப பார்க்கலாம்?” என்று கேட்டாள்.
“நாளைக்கு? இப்ப வேலை இருக்கே”
“ஓகே.. நான் முதல்ல சொல்லிடுறேன். நாளைக்கு நேர்ல போகலாம்” என்று கூறி விட்டு பாட்டியை அழைத்து விசயத்தை மேலோட்டமாக சொன்னாள்.
“நாளைக்கு ஈவ்னிங் வீட்டுக்கு வர்ரோம் பாட்டி”
“சரிமா” என்று விட்டார்.
வீரா சம்மதித்து விட்டான் என்றால், சோதனையின் முடிவு நல்லதாக வந்திருக்க வேண்டும். உடனே கடவுளுக்கு நன்றி சொன்னவர், வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்தார்.
உடனே லட்சுமியை அழைத்தார்.
“ஒரு வேண்டுதல் வச்சுருந்தேன் லட்சுமி.. பொங்கல் வைக்கனும். ஊர் கோவில்ல எப்ப வைக்கிறது?”
“எப்ப வேணா வைக்கலாம். ஆடி பிறக்குதுல? அப்ப வந்து கூட வை”
“சரி சரி. பார்த்துக்கிறேன்”
“என்ன வேண்டுதல்?”
“சும்மா பொதுவா வேண்டுனது தான். வந்து சொல்லுறேன்” என்று சமாளித்து விட்டார்.
அடுத்த நாள் மாலை, ஜாக்ஷி வீராவோடு வந்து நின்றாள்.
“இப்ப சந்தோசமா? உங்க ப்ளான் சக்ஸஸ் ஆகிடுச்சு?”
“பின்ன? வீராவுக்கு உன்னை கட்டி வைக்கனுங்குறது, என்னோட எத்தனை வருச ஆசை?” என்க, மற்ற இருவரும் அதிர்ந்தனர்.
“வருசமா?” என்று வீரா கேட்க, “ஆமாடா.. பல வருச ஆசை. யாருக்குமே சொல்லாம நானும் லட்சுமியும் மனசுலயே வச்சுகிட்டோம்”என்றார்.
“அடப்பாவி! பாட்டி.. எப்ப இருந்து இது?” – ஜாக்ஷி.
“வீரா வேலைக்கு போனதும், லட்சுமி தனியா இருந்த நேரம் அங்க நான் போயிருந்தேன். நீயும் தான் வெளி நாட்டுல இருந்தியே. அப்ப வீரா கல்யாணத்த பத்தி பேச்சு வந்துச்சு. அப்ப இருந்தே இந்த ஆசை தான். இந்த தடவ போனப்போ, வீராவ நம்ம கம்பெனிக்கே கூட்டிட்டு வந்துட்டு அப்புறமா பேசலாம்னு முடிவு பண்ணிருந்தோம். இதுக்குள்ள தான் உன் அப்பா தவறிட்டாரு. இத விட்டா வீராவ கூட்டிட்டு வர முடியாதுனு முடிவு பண்ணி, அப்பவே பேசிட்டேன்”
“எல்லாம் மாஸ்டர் ப்ளான்” என்று ஜாக்ஷி சிரிக்க, வாசலில் கார் வந்து நின்றது.
கதவை திறந்து காதம்பரி வேகமாக உள்ளே வர, “இவ எதுக்கு இந்த நேரத்துல வந்து நிக்கிறா?” என்று ஜகதீஸ்வரி சலித்துக் கொண்டார்.
நேராக வந்த காதம்பரி, மூவரையும் குறுகுறுவென பார்த்து வைத்தார்.
“இந்த வேலைக்காரன் இங்க என்ன செய்யுறான்?” என்று கேட்டு வைக்க, ஜாக்ஷி பட்டென எழுந்தாள்.
“யாரு வேலைக்காரன்? இவன் வீட்டு மாப்பிள்ளை. ஒழுங்கா பேசு” என்று ஜகதீஸ்வரி அதட்ட, “ம்மா.. என்ன காரியம் பண்ணுறீங்க?” என்று காதம்பரி அலறினார்.
“ஒரு வேலைக்காரன கட்டி வச்சு, என் வாழ்க்கைய அழிச்சது போதாதுனு அதையே இவளுக்கும் பண்ணுறீங்களா? நான் பட்டது போதாதா? இவளும் படனுமா? இதான் நீங்க பேத்திய வளர்க்குற லட்சணமா?” என்று குதித்தார்.
ஜாக்ஷி வாயைத்திறக்கும் முன், வீரா அவளது கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டான். அதான்ல தான் காதம்பரி குதிக்கும் போது அவள் ஒன்றுமே பேசிவில்லை.
“ஏய்.. நீயும் என்னடி ஊமை மாதிரி நிக்கிற? ஊருக்கே உபதேசம் பண்ணுற? உன் சொந்த வாழ்க்கைய அழிச்சுட்டு நிக்கிற? ஊருக்குள்ள வேற ஆம்பளைங்களே இல்லையா? பணக்காரனா நல்லவனா பார்த்து கட்டிக்க வேண்டியது தான?”
காதம்பரி கத்திக் கொண்டே இருக்க, ஜாக்ஷி வாயை திறக்கவில்லை.
‘என்ன அமைதியா இருக்கா?’ என்ற குழப்பத்துடன் காதம்பரி ஜாக்ஷியை பார்க்க, அவளது கையை வீரா பிடித்திருப்பது கண்ணில் விழுந்தது.
“ச்சீ.. கைய விடுடா.. வேலைக்கார…”
“ஏய்.. ச்சீ கீ னு சொன்ன பெத்த அம்மானு பார்க்க மாட்டேன்” என்று ஜாக்ஷி வீராவை மீறி எகிற, “ஜானு.. அமைதியா இரு” என்றான்.
“பாட்டி எங்களுக்கு வேலை இருக்கு. கிளம்புறோம்” என்றவன், ஜாக்ஷியை இழுத்துக் கொண்டு நடந்தான்.
“விடு பத்ரா.. என்ன பேச்சு பேசுது பாரு”
“நோ.. நீ வா. நம்மல கேள்வி கேட்குறதுக்கும், நாம பதில் சொல்லுறதுக்கும் ஒரு தகுதி வேணும். அத நாமலே எல்லாருக்கும் கொடுக்க கூடாது ஜானு. போகலாம் வா” என்றவன், இழுத்துக் கொண்டு சென்று காரில் ஏறி விட்டான்.
ஜாக்ஷி தாயை முறைத்தபடி தான் காரில் ஏறி அமர்ந்து கிளம்பினாள். காதம்பரிக்கு வீரா பேசியது அவமானத்தை கொடுக்க, திரும்பி தாயை தான் முறைத்தார்.
“அவன் என்ன பேச்சு பேசுறான் நீங்களும் பார்த்துட்டு இருக்கீங்க?” என்று கத்த, “வந்ததுல இருந்து நீயும் தான் பேசிட்டு இருக்க.” என்றார் ஜகதீஸ்வரி.
“ஒரு வேலைக்காரனுக்கு இவ்வளவு திமிரா? ஊர்ல உங்களுக்கு வேற பையனே கிடைக்கலயா?”
“வீரா வேலைக்காரன் கிடையாது. ஊர்ல அவனுக்குனு சொத்துபத்து எல்லாம் இருக்கு”
“ஆனா அவன் நம்ம ஆஃபிஸ்ல வேலைக்காரன் தான? என் வாழ்க்கை தான் வீணா போச்சு. ஜாக்ஷியையும் ஏன் கெடுக்குறீங்க?”
“உன் வாழ்க்கைய கெடுத்தது நீ.. உன் அப்பா.. உன்னை தலையில தூக்கி வச்சு ஆடுனது அவரு. சிற்றம்பலத்த வீட்டோட மாப்பிள்ளையா கூட்டிட்டு வரும் போது, நீயும் சரினு தான சொன்ன?”
“அவன் நல்லவன்னு நினைச்சு சொன்னேன். அவன் ஒரு துரோகினு எனக்கு தெரியாதே”
“பொய் சொல்லாத காதம்பரி. உனக்கு காலம் முழுக்க அப்பா செல்லமா இதே வீட்டுல இருக்கலாம்னு ஆசை. வீட்டோட மாப்பிள்ளைனு சொன்னதும், உடனே தலையாட்டிட்ட.. ஆனா உன்னால உன் ஸ்டேட்டஸ் பைத்தியத்த விட்டு இறங்கி, சிற்றம்பலத்துக்கு நல்ல பொண்டாட்டியா இருக்க முடியல. உன் ஈகோக்கு கிடைச்ச பதில் தான் உன் வாழ்க்கை”
காதம்பரியால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை. தாயறியா சூலா? அவரது முழுமனதையும் ஜகதீஸ்வரி அறிந்து வைத்திருக்கிறார். ஆனால் அதே போல் ஒரு வேலையை ஜாக்ஷிக்கும் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை.
“சரி.. என் ஈகோனே வச்சுக்கோங்க.. அதுக்காக.. அதே விசயத்த ஜாக்ஷிக்கு பண்ணியே ஆகனுமா? அவளாச்சும் ஒரு பணக்காரனா பார்த்து கல்யாணம் பண்ணிட்டு வாழட்டுமே”
“வீரா பணக்காரன் இல்லனு யார் சொன்னது உனக்கு?”
“அவன் போட்டுருந்த டிரஸ்ஸே சொல்லுச்சே” என்று முகம் சுழித்தார்.
அலுவலகம் சென்று நேராக வந்திருந்தான். அதனால் அவனது தோற்றம் உடை எல்லாம் சாதாரணமாக தான் இருந்தது.
“டிரஸ்ஸ வச்சு எடை போடாத காதம்பரி. வீராவ எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். என் அக்கா பேரன் அவன். அவன விட தங்கமான பையன் ஜாக்ஷிக்கு கிடைக்க மாட்டான். இப்ப கூட பாரு, நீ பேசுன பேச்சுக்கு ஜாக்ஷி சும்மா இருந்தா உன்னை விட்டுருப்பாளா? ஆனா வீரா கூப்பிட்டதும், உன்னை ஒரு வார்த்தை பேசாம அவன் கூட போயிட்டா. அதான் அவங்க. இது தான் ஜாக்ஷியோட வாழ்க்கை. உன் வாழ்க்கையையும் அவ வாழ்க்கையையும் சேர்த்து பார்க்காத. உனக்கு தலையில தூக்கி வச்சு ஆட அப்பா இருந்தாரு. உன்னை கவனிக்க அம்மா இருந்தா. ஆனா ஜாக்ஷிக்கு அப்படி யாருமே இல்ல. தனி மனுசியா வளர்ந்து நிக்கிறா. உன்னை விட, உலகத்தையும் மனுசங்களையும் அவளால சரியா புரிஞ்சுக்க முடியும். ஒரு அம்மாவா உன் மனசு இன்னும் அழுக்கு படாம இருந்தா, அவ நல்லா வாழனும்னு ஆசைப்படு. இப்படி வந்து அபசகுனமா பேசிட்டு இருக்காத. நான் பெத்த பொண்ணுனு நான் தான் உன்னை பொறுத்து போவேன். ஜாக்ஷி பெத்த அம்மானு பார்க்க மாட்டா. இதான் கடைசி வார்னிங்”
பாட்டி பேசி முடித்து விட்டு, இப்போது பதில் சொல் என்பது போல் பார்த்து வைத்தார்.
காதம்பரிக்கு கேட்டது எல்லாம் தலைக்குள் ஓடியது. இவனை சிறுவயதில் இருந்து தெரியுமா? ஜகதீஸ்வரியின் குடும்பத்தில் யாரும் ஏழைகள் கிடையாது. அவருடைய அக்காவின் பேரன் என்றால், நிச்சயமாக அவன் ஏழை கிடையாது. இதுவே அதிர்ச்சி என்றால், ஜாக்ஷி நடந்து கொண்டது மாபெரும் அதிர்ச்சி தான்.
பேசும் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசா விட்டால், அவள் ஜாக்ஷி அல்ல. அப்படிப்பட்டவளை கையோடு அழைத்துக் கொண்டு போகிறான். அவளும் அமைதியாக அவனோடு சென்று விட்டாள்.
‘அவ்வளவு தூரம் போயிடுச்சா? தப்பாச்சே..’ என்று யோசித்தார்.
“என்ன பேச்ச காணோம்?”
“நீங்க என்ன சொன்னாலும் சரி. ஜாக்ஷிக்கு இப்ப வேணா அவன பிடிச்சு இருக்கலாம். ஆனா பின்னாடி என்னை மாதிரி அவனோட வாழ முடியாம ரொம்ப அவஸ்தை தான் படுவா. அப்ப புரியும் நான் ஏன் சொல்லுறேன்னு”
“அதையும் பார்த்துடலாம். உனக்கு பிடிச்ச மாதிரி வாழ உரிமை இருக்கும் போது, அவளுக்கும் உரிமை இருக்கு. இனிமே அவ வாழ்க்கைய அவளே பார்த்துப்பா. இப்படி கேள்வி கேட்டுட்டு வராத. எல்லா நேரமும் ஜாக்ஷி பொறுமையா இருக்க மாட்டா பார்த்துக்கோ”
“அவ என்ன பெரிய பூச்சாண்டியா? நான் பெத்தவ அவ. அவளுக்கு அவ்வளவு இருந்தா, எனக்கு எவ்வளவு இருக்காது?”
“பெத்த மக கிட்ட போட்டிக்கு நிக்கிற? அப்படி நான் உன் கூட போட்டிக்கு நின்னா நீ தாங்குவியா?”
“நான் என்ன அவள மாதிரியா இருக்கேன்?”
“இல்ல தான். அவள விட மோசமா தான் இருக்க. நல்லா கேட்டுக்க காதம்பரி. ஜாக்ஷியோட வாழ்க்கை அவ முடிவு. அதுல தலையிட நினைக்காத. நீ கரடியா கத்துனாலும் அவ உன் பேச்ச கேட்க மாட்டா. அவ வாழ்க்கைய நல்லபடியா அமைச்சுக்க அவளுக்கு தெரியும். நீ உன் வேலைய பாரு. முதல்ல நீ பெத்த ஒருத்தன நல்லா வளர்க்கப்பாரு. எந்த நேரமும் போலீஸ் சாந்தமா ரிலீஸ் பண்ணிட்டே இருக்க மாட்டாங்க”
காதம்பரி பேச்சில்லாமல் வெடுக்கென திரும்பிக் கொள்ள, “பேசி டயர்டா இருப்ப. காபி கொண்டு வருவாங்க குடி” என்றவர் காபியை வரவழைத்தார் மகளுக்கென.
தொடரும்.
அட … வீரா ஒரு வார்த்தை சொன்னவுடனே,பதில் பேசாம
ஜாசஷி கிளம்பி போயிட்டாலே.
அப்படின்னா… அந்தளவுக்கு வீரா அவ மனசுல சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டான்னு தெரியுது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
காதம்பரி பேய் பையனை வளர்க்க துப்பு இல்லை. வீரா ஜாக்ஷி கியூட். பாட்டி இரண்டு பேரும் செம