Loading

 

ஜானகி வேலையில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிறது. வேலைக்கு செல்வதே கடுப்பாக இருந்தது அவளுக்கு.

தினமும் அரக்கபரக்க கிளம்பி, வேலைக்கு வந்து இங்கும் பல பிரச்சனைகளை சந்தித்து, மீண்டும் வீடு திரும்பும் முன்பு உயிர் போய் வந்தது.

மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்து அமர, “சம்பளம் போட்டாங்களா?” என்று கேட்டுக் கொண்டு வந்தார் மேனகா.

“ம்ம்”

“அப்ப லிஸ்ட் கொடுக்குறேன். வாங்கிட்டு வந்துடு.”

“ம்மா.. அவன போக சொல்ல வேண்டியது தான? நானே போகனுமா?”

“அவன் படிச்சுட்டு இருக்கான்டி”

“அப்ப நீங்க போங்க. என்னால அலைய முடியாது”

“ஏய்.. வேலை பார்த்து சம்பாதிக்குறனா? எனக்கு வேலை சொல்லுவியா நீ? உன் அப்பா இருந்த வரை, என்னை ஒரு வேலை பார்க்க விட்டது இல்ல. நீங்க ரெண்டு பேரும் என்னை வேலைக்காரி ஆக்க பார்க்குறீங்களா?” என்று மேனகா திடீரென கண்ணை கசக்க, ஜானகி பெருமூச்சு விட்டாள்.

“அப்பா இருக்கும் போது நானும் தான்மா எந்த வேலையும் பார்க்கல” என்றாள் மெதுவாக.

ஜெகன் வந்து நின்றான்.

“க்கா.. கொடு நான் போய் வாங்கிட்டு வர்ரேன். நீ அலையாத”

“படிப்ப விட்டுட்டு..” என்று மேனகா ஆரம்பிக்க, “இந்த ஒரு மணி நேரத்துல ஒன்னும் ஆகிடாது. நான் போறேன்” என்றான்.

பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு, ஓய்ந்து போய் அமர்ந்திருந்தாள்.

“உங்கப்பா இருந்தப்போ எல்லாம் தன்னால நடந்துச்சு. இப்ப பாரு.. எல்லாம் நாசமா போகுது. இதுக்கு தான் சொத்துல பங்கு வாங்கனும்னு நினைச்சேன். ரெண்டு பேரும் எங்க என் பேச்ச கேட்டீங்க?”

“அது அவங்க சொத்து. நம்மலோடது இல்ல”

“என்ன அவங்க சொத்து? எல்லாம் உங்கப்பா உழைச்சது. அந்த நகைய வேற தூக்கி கொடுக்க வச்சுட்டாங்க. இதுக்கு தான், முதல்ல உயில எங்களுக்கு படிச்சு காட்டுங்கனு கேட்டேன். முடியவே முடியாது எல்லாரு முன்னாடியும் தான் படிப்பேன்னு படிச்சு இப்படி ஆக்கிட்டான் அந்த வக்கீல்”

“அந்த நகை அந்த பாட்டியோடதுமா. அத நாம வச்சுக்க கூடாதுனு அப்பாவே சொல்லிட்டாரே”

“அத பத்தி உனக்கென்னடி தெரியும்? அந்த நகை யெல்லாம், உங்கப்பா ஆசையா என் கழுத்துல போட்டு அழகு பார்த்தாரு. அதுல எத்தனை நகை வைரம் தெரியுமா? எல்லாமே போச்சு.”

ஜானகி எதுவும் பேசவில்லை. அவளுக்கு அந்த ஜாக்ஷியின் முன்னால் கையேந்தாமல் இருப்பதே போதுமானதாக இருந்தது.

“அந்த ஜாக்ஷி ஃபேக்டரிய தர்ரேன்னு சொன்னா. அதையும் வாங்கவே கூடாதுனு ரெண்டு பேரும் சொல்லி, கடைசில நானே வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டேன். இப்ப பாரு.. செலவுக்கு காசில்லாம, கார வித்தாச்சு. இனி எதெல்லாம் விக்கனுமோ தெரியல”

மேனகா புலம்பிக் கொண்டே சென்று விட, ஜானகி புகைப்படமாக மாறி இருந்த சிற்றம்பலத்தை பார்த்தாள்.

“மிஸ் யூ பா” என்றவளுக்கு அழுகை வரும் போல் இருந்தது.

தந்தையின் செல்ல மகள் அவள். கல்லூரி முடித்தும், வெளிநாட்டுக்கு அனுப்பி மேல் படிப்பு படிக்க வைப்பதாக வாக்கு கொடுத்திருந்தார் தந்தை.

எல்லாம் கனவாக மாறி விட, “உழைச்சு வாழுங்க” என்று ஜாக்ஷி சொன்னதற்காகவே வேலை தேடிக் கொண்டாள்.

அதற்குள்ளேயே இருந்த பணம் கரைந்து, செலவு அதிகமானது. அவளால் உழைக்க முடியும். வாழ முடியும். அந்த ஜாக்ஷியின் பணம் மட்டும் அவளுக்கு வேண்டாம். மனம் வைரக்கியமாக நினைத்துக் கொள்ள எழுந்து வேறு வேலையைப்பார்த்தாள்.

*.*.*.*.*.*.

“சார்.. எப்ப தான் கேஸ் போடுவீங்க? எப்ப கேட்டாலும் எதாவது ஒரு சாக்கு சொல்லுறீங்க. கோர்ட்டுக்கு கேஸ் வருமா வராதா?”

காதம்பரி வக்கீலிடம் கத்திக் கொண்டிருந்தார். அவரும் வழக்கு தொடுத்து, ஜாக்ஷி சொத்துக்களை அனுபவிக்க விடாமல் தடுக்கத்தான் பார்க்கிறார். ஆனால் முடியவில்லை.

“மேடம் இந்த கேஸ் ரொம்ப நாள் கோர்ட்ல நிக்காது மேடம். சொத்து ஏற்கனவே கை மாறிடுச்சு. நாம கேஸ் போட்டாலும் ஒரே நாள்ல ஊத்தி மூடி விட்டுருவாரு அந்த லாயர். கண்டிப்பா தோத்துடும்”

“கேஸ்ல ஜெயிக்கிறனோ இல்லையோ.. எந்த சொத்தையும் அவ யூஸ் பண்ண விடாம ஸ்டே ஆர்டர் மட்டும் வாங்குனா போதும். அதுக்கு எதாவது வழி இருக்கானு சொல்லுங்க”

“கஷ்டம் தான். ஆனா நான் பார்த்து சொல்லுறேன்” என்று விட்டு வைத்து விட்டார்.

“அந்த லாயர் என்னடானா, கோர்ட் வரை வரவே கூடாதுனு மிரட்டுறாரு. இந்தம்மா ஸ்டே ஆர்டர் வாங்குவேன்னு நிக்குது. எனக்குனு வந்து சேருதுங்க” என்று தலையில் அடித்துக் கொண்டு வேலையை பார்த்தார்.

காதம்பரி கோபத்தோடு இருக்க, வேலைக்கார பெண் வந்து நின்றாள்.

“ம்மா.. வினய் தம்பி இன்னும் வீட்டுக்கு வரல”

தலையை சொறிந்தபடி அவள் கூற, “எங்கயாச்சும் போயிருப்பான். அதுக்கென்ன?” என்று எரிந்து விழுந்தார்.

“இல்லமா இந்த நேரத்துல வந்துடுவேன் சாப்பாடு செஞ்சு வைனு கேட்டுச்சு.. ஆனா வரல.”

“ப்ச்ச்” என்று சலித்துக் கொண்டே கைபேசியை எடுக்க, அசோக்கிடமிருந்து அழைப்பு வந்தது.

“கிளம்பி போலீஸ் ஸ்டேஷன் வா.”

“போலீஸ் ஸ்டேஷனா? எதுக்குங்க?”

“வினய் அங்க தான் இருக்கானாம். ஃபோன் வந்துச்சு”

“அய்யய்யோ!” என்று பதறி அடித்து எழுந்தவர், உடனே கிளம்பி விட்டார்.

அரக்க பரக்க அங்கு சென்று நிற்க, பெண் காவலதிகாரி எழிலரசி இருவரையும் மேலும் கீழும் பார்த்தார்.

“நீங்க யாரு?”

“வினய்யோட பேரன்ட்ஸ்”

“ஓ நீங்க தானா?”

“என் புள்ள எங்க? என்ன பண்ணான் அவன்?”

“அந்தா இருக்கான் போய் பாரு” என்று விட்டு தன் வேலையை பார்த்தார்.

காதம்பரியும் அசோக்கும் வினய்யிடம் சென்றனர்.

“என்னடா பண்ணி வச்ச?”

“நான் ஒன்னும் பண்ணலமா”

“ஒன்னுமே பண்ணாம உன்னை கூட்டிட்டு வர்ரதுக்கு அவங்களுக்கு வேற வேலை இல்லனு நினைச்சியா?” என்று அசோக் முறைப்புடன் கேட்க, வினய் தலை குனிந்தான்.

“என்னடா பண்ணித்தொலைஞ்ச?”

“கார ஓட்டி.. இடிச்சுட்டேன்”

“அடப்பாவி! எங்கடா இடிச்ச?”

“ஒரு ஆள் மேல.. நான் நல்லா தான்மா ஓட்டுனேன். அந்தாளு தான் குறுக்க வந்துட்டான்”

காதம்பரி அடிக்க போக, அசோக் தடுத்து விட்டார்.

“போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு எதுவும் பண்ணாத‌. வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்”

“வீட்டுக்கு வா உனக்கு இருக்கு”

அசோக் காவலதிகாரியிடம் பேசிக் கொண்டிருக்க, வினய்யின் நண்பர்களின் பெற்றோர்களும் வந்து விட்டனர்.

பிரச்சனையும் பேச்சு வார்த்தையும் நீடித்தது.

“பணம் இருக்க திமிர்ல கார கொடுத்துருவீங்களா? எல்லாம் மைனரு. கேஸ் போட்டேன்னா என்ன ஆகும் தெரியுமா?”

எழிலரசி மிரட்ட, எல்லோருக்கும் வயிறு கலங்கியது.

வழக்கு போடாமல் தடுக்கவே போராடினர். வினய் மற்றும் அவனது இரண்டு நண்பர்களுக்கு நான்கு அடியும் விழுந்தது பெற்றோர்களிடமிருந்தது.

கடைசியாக காருக்கு சொந்தக் காரன், அதை ஓட்டியவன், இருவரும் ஆளுக்கு இரண்டு லட்சம் அடி பட்டவனுக்கு கொடுத்தால், வழக்கு போட மாட்டேன் என்று வழிக்கு வந்தார் எழிலரசி.

எல்லோரும் இதற்கு ஒப்புக் கொண்டனர்.

“பணத்த எடுத்துட்டு என் கூட ஹாஸ்பிடல் வாங்க. அங்க வச்சு கொடுத்துட்டு மன்னிப்பு கேட்டுட்டு போங்க. கிளம்புங்க”

காதம்பரிக்கு இரண்டு லட்சம் ரூபாய் தண்டமாக அழுவதை நினைத்து வயிறு எரிந்தது. ஆனால் வினய்யையும் காப்பாற்ற வேண்டுமே.

பணத்தை கொண்டு சென்று, அடிபட்டவன் குடும்பத்திடம் கொடுத்து விட்டு, மன்னிப்பு கேட்டதும் தான் எழிலரசி எல்லோரையும் போகவிட்டார்.

போகும் வழி எல்லாம் காதம்பரி மகனை கரித்துக் கொட்டிக் கொண்டே சென்றார்.

எழிலரசி ஜாக்ஷியை அழைத்தார்.

“என்ன மேடம் கேஸ் முடிஞ்சதா?”

“முடிஞ்சது மேடம். பணத்த கொடுத்துட்டு கிளம்பிட்டாங்க”

“ஓகே மேடம். தாங்க்ஸ்” என்று வைத்து விட்டாள்.

வினய்யை முதலில் பார்த்ததுமே, எழிலரசிக்கு அடையாளம் தெரிந்து விட்டது.

அதனால் முதலில் ஜாக்ஷிக்கு தான் விசயத்தை சொன்னார். அவள் கேட்டு முடித்து விட்டு, “மைனர் பசங்க மேடம். கேஸ் போட்டா வாழ்க்கை போயிடுமே” என்றாள்.

“ஆனா அடி பட்டவன் ஹாஸ்பிடல்ல இருக்கான் மேடம். அவன் கேஸ் கொடுத்தா ஃபைல் பண்ணித்தான் ஆகனும்”

“அதுங்க எல்லாம் பணக்கார திமிர்ல செய்யுறது மேடம். ஆனா அவனுங்களும் சின்ன பசங்க. நான் வேற ஐடியா சொல்லவா?”

“சொல்லுங்க மேடம்”

“அடிபட்டவரோட குடும்பம் எப்படினு பாருங்க. கஷ்டப்படுற குடும்பமா இருந்தா, இவங்க கிட்ட நஷ்ட ஈடா பணத்த வாங்கி கொடுத்துடுங்க. பணத்தோட பாசை தான் அதுங்களுக்கு புரியும்.”

“இதுவும் சரி தான். நான் பார்க்குறேன்” என்றவர், இப்போது பணத்தை வாங்கிக் கொடுத்து விட்டார்.

அடிபட்டவன் குடும்பம் அந்த பணத்தை வாங்க தயங்கியது. எழிலரசி சொன்னதற்காகவே வாங்கிக் கொண்டனர்.

“அவங்க கிட்ட வெட்டியா கிடக்குற பணம் தான் இதெல்லாம் செய்ய வைக்குது. உங்களுக்கு பணக்கஷ்டம் இருக்கு தான? இன்னைக்கு உங்களுக்கு வச்ச சோதனைக்கு, இந்த பணத்த கடவுளே கொடுத்ததா நினைச்சுட்டு வச்சுக்கோங்க.” என்று கூறி விட்டு கிளம்பி விட்டார்.

*.*.*.*.*.*.

லட்சுமியை தேடி தாமரை வந்தார். வீட்டு வேலைகள் முடிந்து லட்சுமி அமர்ந்திருக்க, தாமரை கையில் ஜாதகத்தோடு வந்து சேர்ந்தார்.

பொதுவான நல விசாரிப்பு முடிய, “ஒரு நல்ல வரன் வந்துருக்கு அத்த. வீராவுக்கு பார்க்கலாம்னு இருக்கேன். ஜாதகத்த கூட வாங்கிட்டு தான் வந்தேன்” என்றார் சந்தோசமாக.

லட்சுமி இதை எதிர்பார்க்காததால், சற்று யோசித்து விட்டு பதில் சொன்னார்.

“வீரா வேணானு சொல்லுவான். நீ வேணா சேகருக்கு பாரேன்”

“என்ன இருந்தாலும் வீரா தான் மூத்தவன் அத்த. அவன விட்டுட்டு எப்படி சேகருக்கு பார்க்க முடியும்?”

“அப்படியா சொல்லுற?”

“ஆமா அத்த. வீரா ஜாதகம் உங்க கிட்ட தான இருக்கு? கொடுங்க நான் பொருத்தமிருக்கானு பார்க்குறேன்”

“அவசர படாத தாமரை.. முதல்ல அவன் கிட்ட கேட்போம். அப்புறமா யோசிப்போம்”

“இப்ப என்ன பொண்ணேவா பார்க்க போறோம்? ஜாதகம் தான?”

“அதையும் தான் அவன் கிட்ட பேசிட்டு செய்வோம். ஏன் வீணா ஆசைய வளர்த்துக்கிட்டு?”

“ஓஹோ.. சரி கேளுங்க. நாளைக்கு பேசுவீங்களா?”

“அவனுக்கு வேலை இல்லனா பேசுவான். அப்ப கேட்டு சொல்லுறேன்”

“அப்புறம் சேகர் அன்னைக்கு ஒன்னு சொன்னான். வீரா எதோ பொண்ணு கூட பேசிட்டு இருந்தத பார்த்தானாம். அப்படி எதாச்சும் பொண்ணு மேல ஆசைப்பட்டா கூட கேளுங்க. நல்ல பொண்ணுனா கட்டி வச்சுடலாம்.”

“அப்படி எதுவும் இருக்காது. இருந்தா சொல்லிருப்பானே.. எதாச்சும் தெரிஞ்ச பொண்ணா இருக்க போகுது”

“அதான் நானும் நினைச்சேன். ஆனா இருக்க வேலைய விட்டுட்டு, சென்னைக்கு வேலை தேடி போயிருக்கான். அங்க ஒரு பொண்ணு கூட பேசிட்டு இருக்கான். ஒரு வேளை அந்த பொண்ணுக்காக தான் அங்க போனானோனு சேகரு தான் கேட்டான்.”

“உன்னை திருத்தவே முடியாது தாமரை. உன் புருஷன், வீராவும் என் புள்ளை மாதிரி ஆகிடுவான்னு சொன்னா, அதையும் நம்புற. இப்ப சேகரு வீரா எதோ ஒரு பொண்ணு பின்னாடி போறான்னு சொன்னா, அதையும் நம்புற. உனக்கு மூளையே வேலை செய்யாதா?”

“என்ன அத்த இப்படி சொல்லுறீங்க?”

“நீ யாரு சொன்னாலும் நம்பிட்டு வீராவ பத்தி பேசிட்டு இருக்காத தாமரை. நீ உன் வேலைய பாரு. வீராவுக்கு பொண்ணு பார்க்குற வேலைய என் கிட்ட விட்டுரு. நல்ல பொண்ணுனா சேகருக்கு பாரு. போதும்”

“வீரா என் புள்ளை இல்லையா?” என்று தாமரை அழ ஆரம்பிக்க, “அவன் உன் புள்ளை இல்லனு நான் சொன்னனா?” என்று கேட்டார் லட்சுமி.

“அவனுக்கு நான் பார்க்க கூடாதா?”

“அவனுக்கு பிடிக்காதுனு சொல்லுறேன். அவனுக்கு எது சரி எது தப்புனு தெரியும். கல்யாண விசயத்தையும் அவன் கிட்டயே விட்டுரு. நீ கவலைபடாம இரு. அவ்வளவு தான்”

அப்போதும், தாமரை விடாமல் பேசி புலம்பி விட்டுத் தான் சென்றார்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
23
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. இந்த தாமரை திருந்தவே திருந்தாதோ..?

      😀😀😀
      CRVS (or) CRVS 2797