Loading

 

வெள்ளை நிற போர்வை முகம் வரை மூடியிருக்க, அந்த போர்வைக்குள் சுகமாய் உறங்கிக் கொண்டிருந்தாள் ஜாக்ஷி எனும் ஜகதீஸ்வரி.

பாட்டியின் பெயரை பேத்திக்கு வைக்க, அதை சுருக்கிக் கொண்டாள்.

சுகமாய் உறங்கியவளின் உறக்கத்தை கலைக்க வேண்டி அவளது கைபேசி அலறியது.

எடுக்காமல் புரண்டு படுத்துத் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

ஆனால், கைபேசி மீண்டும் அலறி அவளை எரிச்சல் படுத்த, போர்வையிலிருந்து கையை மட்டும் வெளியே விட்டு எடுத்துப் பார்த்தாள்.

அவளுக்குப் பிடிக்காத எண்ணிடமிருந்து அழைப்பு. கந்தசாமி என்ற பெயர். பார்த்ததும் தூக்கி எறிய நினைக்க, அழைப்பு நின்று மீண்டும் அடித்தது.

முகத்தை மறைத்திருந்த கூந்தலை ஒரு கையால் ஒதுக்கி விட்டு, எடுத்துக் காதில் வைத்தாள்.

“வாட்?” என்று எடுத்த எடுப்பில் கேட்க, “உங்க அப்பாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு மேடம்” என்றான் கந்தசாமி.

“சோ?”

“ரொம்ப கிரிட்டிக்கல் ஸ்டேஜ் மேடம்”

“இத ஏன் மேன் என் கிட்ட சொல்லுற?”

“டாக்டர்ஸ் ஆப்ரேஷன்க்கு சைன் கேட்குறாங்க.”

“ப்ச்ச்” என்றவள், தலையை தேய்த்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

“மேடம்?”

“வர்ரேன்” என்றவள், பட்டென துண்டித்து போட்டு விட்டாள்.

கலைந்து போன கூந்தல் கூட அவளது முகத்துக்கு அழகு சேர்த்தது. அத்தனை பேரழகி. சாதாரண டீ சர்ட் தான் அணிந்திருந்தாள். மெத்தையிலிருந்து உருண்டு கீழே இறங்கியவளுக்கு, தூக்கம் முழுதாய் கலைந்திருந்தது.

முடியை அள்ளி கொண்டையாக கட்டிக் கொண்டவள், உடையை எடுத்து குளிக்கச் சென்றாள்.

குளித்து முடித்து, பச்சை நிறத்தில் லாங் ஸ்கர்ட்டும் வெள்ளை நிறத்தில் அழகிய சட்டையும் அணிந்து, தலை முடியை ஒரு பேன்டில் அடக்கி விட்டாள்.

“இன்னைக்கு தான் வேலை இல்ல. தூங்கலாம்னு நினைச்சேன்” என்று சலிப்பாக புலம்பிக் கொண்டு, கைபேசியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

குட்டி மாளிகை போன்ற அந்த வீட்டை, இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் வாங்கி குடி வந்தாள். தனியாக தான் இருந்தாள். ஒரே ஒரு வேலைக்கார பெண். சுபத்ரா. அவளும் வாய் பேச முடியாதவள்.

வீட்டில் வேலை செய்வதை தவிர, வேறு எதுவும் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லி வைத்திருந்தாள்.

சுபத்ரா ஓடி வந்து முன்னால் நிற்க, “வெளிய போறேன். வர லேட் ஆகும்” என்று விட்டு நிற்காமல் நடந்தாள்.

காரை எடுத்துக் கிளம்பியவளுக்கு, உள்ளே யோசனை ஓடியது.

‘ஆக்ஸிடண்ட்டா? என்னவா இருக்கும்?’ என்று யோசித்தவள், உடனே தன் பிஏவை அழைத்தாள்.

“ஹலோ மேடம்”

“நேரா நம்ம ஹாஸ்பிடல்க்கு வந்துடு”

“என்னாச்சு மேடம்?”

“மிஸ்டர் சிற்றம்பலம் ஆக்ஸிடென்ட் ஆகி அங்க இருக்காராம்.”

சொந்த தந்தையை யாரோ போல் சொல்லி வைத்தாள்.

“ஓஓ.. உடனே வர்ரேன் ” என்றவள் அப்போதே கிளம்பியிருந்தாள்.

ஜகதீஷ்வரி மருத்துவமனைக்குள் நுழைந்தாள் ஜாக்ஷி. காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றவளை பார்த்து, வாசலில் நின்று இருந்த கந்தசாமி வந்தான்.

“மேடம்.. கொஞ்சம் சீக்கிரம் வாங்க” என்று அவசரப்படுத்தி அழைத்துச் சென்றான்.

“பாட்டி எங்க?”

“வந்துட்டு இருக்காங்க”

வேறு எதுவும் பேசாமல் உள்ளே செல்ல, மருத்துவர் பார்த்தார்.

“மேடம் உங்க அப்பா..”

“எதுக்கு சைன்?”

“தலையில ஆப்ரேஷன் பண்ணனும். சான்ஸ் கம்மியா இருந்தாலும்..”

“பேப்பர்ஸ்..?”

அந்த மருத்துவர் பேச்சை பாதியில் வெட்டி கேட்க, பெருமூச்சு விட்டபடி எடுத்துக் கொடுத்தார்.

மேலோட்டமாய் அவள் படிக்க, கந்தசாமி பேனாவை நீட்டினான்.

வாங்கி கையெழுத்திட்டவள், “கோ அகெட்” என்று கொடுத்து விட்டாள்.

‘என்ன பொண்ணுடா இவ?’ என்று தான் அவர்களுக்கு தோன்றியது.

ஆனாலும் தாமதிக்காமல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

சிகிச்சைக்கு தயாராகும் போது, ஜாக்ஷி வெளியே அமர்ந்திருந்தாள். கண்ணை மூடி புருவம் சுருங்க கையை கட்டிக் கொண்டு, எதோ யோசனையில் இருந்தாள்.

இரண்டு மணி நேரம் கடந்து விட்டது.

அவளிடம் வந்து நின்றாள் அவளது பி.ஏ.

“மேடம்?”

“பாட்டி வந்தாச்சா?”

“கேட்டேன். வந்துட்டு இருக்காங்களாம்”

“உள்ள இருக்கவரோட பொண்டாட்டி?”

“இன்ஃபார்ம் பண்ணிருக்காங்க”

“இன்னொருத்தர்?”

“அவங்களுக்கும் தான்”

அதோடு பேச்சு முடிந்தது என்று அமர்ந்து விட்டாள்.

அவர்கள் தூரமாக இருப்பதால் தான், அருகே இருக்கும் இவளை அழைத்திருந்தான் கந்தசாமி.

நேரம் நள்ளிரவு ஒரு மணியை தொட்டுக் கொண்டிருந்தது. அவசர அவசரமாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

ஆனால் பிபி குறைந்து இதயம் தன் துடிப்பையும் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தது.

என்னொன்னவோ செய்து அவர்கள் போராடிக் கொண்டிருக்க, ஜாக்ஷி அசையாமல் அமர்ந்திருந்தாள்.

இவ்வளவு பெரிய விபத்து தந்தைக்கு நடந்ததை கேட்டு, நியாயமாக அவள் துடித்திருக்க வேண்டும். ஆனால் கல்லைப்போல அமர்ந்திருந்தாள்.

“மேடம்..” என்று பிஏ பத்து நிமிடத்தில் வந்து நிற்க, கண்ணை திறந்தவள் கேள்வியாக பார்த்தாள்.

“டாக்டர் கூப்பிடுறாரு” என்றதோடு அவள் ஒதுங்கி நிற்க, பெரு மூச்சோடு எழுந்து நடந்தாள்.

கதவை தள்ளி உள்ளே நுழைய, அங்கிருந்த நர்ஸ் அவளை மற்ற பகுதிக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு நின்றிருந்த மருத்துவர், “எதுவும் செய்ய முடியாது மேடம்” என்று விட்டு நகர்ந்தனர்.

“முடியாதுனா?”

கேள்வியாக புருவம் உயர்த்த, “பல்ஸ் குறைஞ்சுட்டே போகுது மேடம். ப்ளட் காளாட் இனி ரிமூவ் பண்ணியும் நோ யூஸ்” என்று விட்டு சிற்றம்பலத்தை காட்டினார்.

அவரது உயிரைக் காப்பாற்ற, பல கட்டுக்களும் பல வித உபகரணங்களும் போராடிக் கொண்டிருந்தது.

சிற்றம்பலம் மங்கிய கண்களோடு மகளை பார்த்தார்.

உடலெங்கும் காயம். சுற்றியும் பல உபகரணங்கள். ஏகப்பட்ட மருத்துவ கருவிகள். சாதாரண பெண்ணாய் இருந்தால், இந்த நிலையில் ஒருவரை பார்த்ததும் பயந்து துடித்திருப்பாள். ஜாக்ஷி மட்டும் அவரை உணர்வில்லாமல் பார்த்து விட்டு அருகே சென்றாள்.

“இவரோட ஃபேமிலி இனிமே தான் வருவாங்க. அது வரைக்கும் தாக்கு பிடிக்குமா?”

மருத்துவர் மறுப்பாய் தலையசைக்க, ஜாக்ஷி திரும்பிப் பார்த்தாள்.

சிற்றம்பலம் எதோ சொல்ல வர, கந்தசாமி அருகே ஓடினான்.

ஆனால் சிற்றம்பலம் மகளிடம் தான் பேச நினைத்தார்.

“ஜா..க்ஷி..” என்று அவர் இழுக்க, அவள் அசரவில்லை.

“மேடம் உங்கள தான் கூப்பிடுறாரு” என்றான் கந்தசாமி.

அப்போதும் அவள் அசராமல் நிற்க, “அப்பாவ… மன்னிச்சுடுமா” என்றார்.

ஜாக்ஷியின் உதட்டில் ஒரு ஏளன புன்னகை வந்தது.

“தப்பு பண்ணிட்டேன்” என்றவருக்கு கண்ணீர் கண்ணோரம் வழிந்து ஓடியது.

“மன்னிச்சுட்டா? செத்ததும் நேரா சொர்கத்துக்கு போயிடலாம்னு நினைப்பா? அந்த கடவுளே மன்னிச்சுட்டாலும் நான் மன்னிக்க மாட்டேன். மறந்துடாத” என்றவளின் குரலில் இருந்த ஆவேசம், மற்றவர்களை பதற தான் வைத்தது.

“சீக்கிரமா செத்துப்போ மேன். அப்பானு நீ இந்த உலகத்துல இருக்கதே எனக்கு எவ்வளவு வலி தெரியுமா?” என்று கேட்டவளின் குரல் உணர்ச்சிவசப்பட்டது.

அடக்கிக் கொண்டவள், “டாக்டர்.. இவரோட மத்த பிள்ளைங்க வருவாங்க. பார்த்து பண்ணி விடுங்க” என்றவள் விருட்டென வெளியேறினாள்.

போகும் மகளின் முதுகை பார்த்தபடி, உயிரை விட்டார் சிற்றம்பலம்.

*.*.*.*.*.*.*.*.*.*.

“வீரா இங்க வாபா” என்று குரல் கேட்க, உடனே உள்ளே சென்றான் வீரபத்திரன்.

“என்ன அப்பத்தா?”

“இந்த போனு வேலை செய்யல. என்னனு பாரு” என்று நீட்டினார்.

வீரா வாங்கி பார்த்து விட்டு, “ரீசார்ஜ் பண்ணனும். நான் அப்புறமா பண்ணி விடுறேன்” என்றான்.

“அப்படினா உன் போனுல ஈஸ்வரிக்கு ஒரு போனு போடேன். நேத்து அவசரமா கிளம்புனவ.. தகவல் சொல்லவே இல்ல”

உடனே தன் கைபேசியை எடுத்த வீரா, ஜகதீஸ்வரியை அழைத்தான்.

“ரிங் போகுது. எடுக்கல”

“என்னனு தெரியல.. அவ மருமவனுக்கு ஆக்ஸிடென்ட்னு சொல்லிட்டுப் போனா. என்ன ஆச்சோ?”

“அவங்க ஆஸ்பத்திரிக்கு போன் பண்ணி கேட்டு பார்ப்போம். இருங்க”

உடனே ஜகதீஸ்வரி மருத்துவமனை எண்ணைத் தேடி எடுத்து அழைத்தான்.

“சிற்றம்பலம் சார் இப்ப எப்படி இருக்காரு?”

“நீங்க?”

“நான் வீரபத்திரன். ஜகதீஸ்வரி பாட்டிக்கு சொந்தம். இப்ப நல்லா இருக்காரா?”

“இல்லங்க.. நேத்தே இறந்து போயிட்டாரு”

ஒரு நொடி அதிர்ந்தவன், “ஓஓ.. சரிங்க” என்று விட்டு வைத்தான்.

“என்னாச்சு?”

“தவறிட்டாராம்”

லட்சுமி அம்மாள் நெஞ்சில் கைவைத்து விட்டார்.

“அய்யோ…!”

“நாம போய் பார்க்கலாமா?”

“ஆமா.. உடனே கிளம்புவோம்” என்ற லட்சுமி தயாராக, வீராவும் கிளம்பினான்.

*.*.*.*.*.*.*.*.

சிற்றம்பலத்தின் உடல் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்க, வந்தவர்கள் மாலை போட்டு விட்டுச் சென்றனர்.

ஜகதீஸ்வரி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஜாக்ஷி சற்று தள்ளி நின்றிருந்தாள்.

இறுதி சடங்கு சத்தமில்லாமல் நடந்து முடிய, வீட்டைக் கழுவி விட்டு எல்லோரும் ஒன்று கூடினர்.

காதம்பரி ஜாக்ஷியின் அன்னை ஜகதீஸ்வரியிடம் வந்தார்.

“அதான் அந்தாளு போயாச்சுல.. இனிமேலாச்சும் சொத்த என் பேருக்கு மாத்துங்க. ஆஃபிஸ என் கிட்ட கொடுங்க” என்று கேட்டுக் கொண்டு நின்றார்.

“ஆமா அதான் சரி. அம்மாவுக்கு தான் நியாயமா இந்த சொத்தெல்லாம் வரனும்”

காதம்பரியின் மகன் விரைப்பாய் பேச, ஜகதீஸ்வரி ஜாக்ஷியை ஒரு பார்வையை பார்த்தார்.

அவள் இறுகிப்போன முகத்துடன் நின்றிருந்தாள்.

தாயின் பார்வையை உணர்ந்ததும், “ஜாக்ஷிய நாங்க எங்க கூட கூட்டிட்டுப் போயிடுறோம்மா. அவள பத்தி கவலை படாதீங்க. அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது எங்க பொறுப்பு” என்று பெரிதாய் தியாகம் செய்ய முன் வந்தார் காதம்பரி.

ஜாக்ஷி பல்லைக்கடித்தபடி அவரை முறைக்க, உடனே பார்வையை திருப்பிக் கொண்டார்.

“அவள ஏன் கூப்பிடுற?” என்று காதம்பரியின் காதில் கிசுகிசுத்தார் அவரின் இன்னாள் கணவன். பெயர் அசோக்.

“பாட்டி..” என்று அழைத்தபடி உள்ளே வந்தான் வீரா.

ஜகதீஸ்வரி திரும்பிப் பார்க்க, “வாசல்ல உங்கள பார்க்கனும்னு சொல்லி நிக்கிறாங்க” என்றான்.

அவன் யாரென்று யாருக்கும் தெரியவில்லை. ஜகதீஸ்வரியை தவிர.

“உள்ள வரச்சொல்லு வீரா. நான் தான் இருக்க சொன்னேன்.”

உடனே அழைத்து வந்தான்.

வந்தவர்களை பார்த்ததும், காதம்பரி விருட்டென எழுந்து முகத்தைத் திருப்பி நிற்க, வந்தவர்களும் அவரைப் பார்த்து திரும்பிக் கொண்டனர்.

கொள்ளி வைத்து, கடைசி காரியத்தை எல்லாம் முடித்தவர்கள் அவர்கள் தான்.

“உட்காருங்க”

“இவங்க ஏன் இங்க வந்தாங்க?” என்று காதம்பரியின் மகன் வினய் எகிற, “ஓய்.. என்ன?” என்று அதட்டினாள் ஜாக்ஷி.

அடுத்த நொடி வாயை மூடிக் கொண்டு, பெற்றவளை பார்த்தான் அவன்.

காதம்பரி அவன் கையைப் பிடித்துக் கொண்டார்.

“அவன ஏன் அதட்டுற? இவங்க எதுக்கு வந்தாங்க? ம்மா.. இதெல்லாம் என்ன கூத்து?”

ஜகதீஸ்வரியிடம் பாய்ந்தார்.

ஜகதீஸ்வரி ஒரு பெருமூச்சு விட்டார்.

“இத தள்ளி போட முடியாது. இப்பவே பேசி முடிச்சுடலாம்” என்றவர் ஜாக்ஷியை பார்த்தார்.

அவளிடம் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தார். அதனால் அவளே முன்னால் வந்து நின்றாள்.

“மிஸஸ் காதம்பரி.. முதல்ல நான் பேசுறத, நீங்களும் உங்க கூட இருக்கவங்களும் நல்லா கேட்டுக்கோங்க. பாட்டியோட எல்லா சொத்தும், அவங்க தாய் வீட்டு சீதனம். அத யாருக்குக் கொடுக்கனும்? யாருக்குக் கொடுக்க கூடாதுனு அவங்க தான் முடிவு பண்ணுவாங்க. அதுல உங்களுக்கு எதாவது வேணும்னா, கெஞ்சி கேட்டு வாங்குங்க. இந்த உரிமை கொண்டாடுற வேலை எல்லாம் வேணாம்”

குரலை உயர்த்தி அதட்டியவள், மற்றவர்கள் பக்கம் திரும்பினாள்.

சிற்றம்பலத்தின் மனைவி மேனகா. அவருடைய மகள் ஜானகி. மகன் ஜெகன்.

“மிஸஸ் மேனகா. உங்களுக்கும் இந்த சொத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உங்க ஹஸ்பண்ட் எங்க கம்பெனில ஜஸ்ட் ஒரு எம்ப்ளாயி அவ்வளவு தான். அவரா எதுவும் சொத்து வாங்கியிருந்தா, அத பத்தி பேச நாளைக்கு உங்கள தேடி வக்கீல் வருவாரு. அவர் கிட்ட பேசிக்கோங்க.”

“இது அநியாயம்.. எங்கம்மா சொத்து எனக்கு தான் வரனும்” என்று காதம்பரி வேகமாக முன்னால் வர, “நில்லுங்க..” என்று அதட்டிய ஜாக்ஷி பாட்டியின் முன்னால் சென்று நின்றாள்.

“நான் இன்னும் பேசி முடிக்கவே இல்ல. அதுக்குள்ள என்ன அவசரம்? போய் உட்காருங்க”

“நீ என்னடி என்னை அதட்டுறது? நான் எங்கம்மா கிட்ட பேசுறேன்”

“இப்ப நீங்க போகலனா நான் என்ன செய்வேன்னு தெரியாது”

“அப்படி என்னடி பண்ணிடுவ?”

“கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுவேன்”

“எங்க தள்ளு பார்க்கலாம்” என்று முந்திக் கொண்டு வினய் வர, அதை தடுக்க ஜாக்ஷி நினைக்கும் முன், வீரா அவன் கையை பிடித்து பின்னால் முறுக்கி இருந்தான்.

“ஆஆஆ… டேய் யாருடா நீ?”

“பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது, பொடியப்பய உனக்கென்னடா பேச்சு?” என்று கேட்டு வீரா அவன் தலையில் ஒன்று போட, ஜாக்ஷி அப்போது தான் அவனை நன்றாக பார்த்தாள்.

வீராவும் அவளை நிமிர்ந்து பார்க்க, இருவரின் கண்களும் கலந்து நின்றது.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
32
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. யாரு பொண்டாட்டி யாரு ?
      இதெல்லாம் கொஞ்சம் குழப்பமா இருக்கே..
      தெளிவுப்படுத்திட்டா நல்லது.
      😀😀😀
      CRVS (or) CRVS 2797