
புயல் 20
“நீ டார்லிங்ன்னு சேவ் பண்ணி வச்சுருக்கது அவனோட நம்பர்தான் இல்லையா?” உமா தீர்க்கமாக கேட்க “ஆமாடி. எப்படிக் கண்டுபிடிச்ச” என்றான்.
“விஷம்.. விஷம்.. விஷம். பார்க்குற அம்புட்டு வேலையும் விஷம். உன்னையெல்லாம்” தலையிலேயே குட்டினாள்.
“அடியே நீ அடிக்குறத என் பட்டு லட்டு பார்த்துட்டுத்தான் இருக்காங்க. இதையெல்லாம் கணக்கு வச்சு வெளிய வந்ததும் உன்னை வச்சு செய்யப் போகுதுங்க டி”
“உன் புள்ளைங்கதானே உன்னை மாதிரி தானே இருக்கும்”
“இதை கேட்குறப்போ அப்படியே கர்வமா இருக்குத் தெரியுமா?” பெருமையில் மின்னியது அவன் கண்கள்.
“சொல்லுறப்போ எனக்கும்” அவள் பேசிக் கொண்டிருந்த பிரச்சனையை மறந்து அவனோடு ஐக்கியமாகிவிட அந்த தருணத்தினை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் ருத்ரன்.
“தங்கம்” மையல் அதிகமாய் வழிந்தது அவனது அழைப்பில்..
அவளிடம் இருந்து பதிலுக்கு சின்னதாய் சிணுங்கல். அதில் அவன் மையல் இன்னும் அதிகரித்துத்தான் போனது.
அவளைக் கொஞ்சினான். வயிற்றில் வந்து சேர்ந்திருந்த சிசுக்களையும் உதட்டின் வழியே உணர நினைத்து விட்டான் போல. அவன் உதடுகள் அவ்விடத்தினை விட்டு வெளியே வர மாட்டேன் என அழிச்சாட்டியம் செய்துக் கொண்டிருந்தது.
“அம்மா வீட்டுக்குப் போயிட்டு வந்ததுல இருந்து நீ கொஞ்சுன கொஞ்சலுக்குத்தான் பட்டு லட்டுவே வந்துட்டாங்க.. அந்தளவுக்கு விடாமல் என்னையே சுத்தி சுத்தி வந்தேல்ல..”
“உன்னை ரொம்பச் சந்தோஷமா வச்சுக்கணும்னு தோணுச்சுடி. சரவணன் கிட்ட பேசுனேன். அப்போத்தான் அவன் சொன்னான். உனக்கு வைத்தியம் பார்க்குறதுல இருக்குற சிக்கல் எல்லாம். இதுல நான் வேற தேவையில்லாமல் பேசி.. ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்ல. மன்னிச்சுக்கோடி. இதுக்கு மன்னிப்பில்லைன்னு தெரியும். இருந்தாலும் கேட்குறேன்..” அதன்பின்னரே பேசிக் கொண்டிருந்த விஷயம் ஞாபகம் வந்தது.
இளகியிருந்தவளுக்கு இன்று பேச வேண்டிய விஷயம் இருந்ததால்
“சோ, இரண்டு பேரும் சேர்ந்து என்கிட்ட விளையாடியிருக்கீங்க. எப்படி எப்படி என்னை கூட்டிட்டுப் போற மாதிரி அவனும்.. விடவே மாட்டேங்கிற மாதிரி நீயும் விளையாடுவீங்களா?” என்றாள்.
“அது அது.. குழந்தை உண்டானது தெரிஞ்சதும் அவனையும் மீறி நான் உன்னைப் பார்க்க வந்தேன். அதுல அவனுக்கு பயங்கர கோபம்.. என்னை மீறி எப்படி நீங்க பார்க்க வரலாம்னு சொன்னான். நீ என் என்னை பொறுக்கி ரேஞ்சுக்குப் பேசுன.. இதுக்கு மேலயும் உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாதுன்னு தான் ஜூஸ் வாங்கப் போன கேப்ல அவன்கிட்ட பேசுனேன் டி. அவனுக்கு மனசே இல்லை. இந்த தடவை என்னை நம்புடா. இந்த முறை உன்னோட நம்பிக்கையை உடைக்க மாட்டேன்னு சொன்னேன். அதன்பிறகுதான் சரின்னு சொன்னான். உன்னைக் கூட்டிட்டு வீட்டுக்கு வந்தேன். அப்பவும் உனக்காக மறுபடியும் வீட்டுக்கே வந்தான். இரண்டு பேரும் நடிச்சோம்தான். ஆனால் குழந்தையை கலை… ப்ச் அதைச் சொன்னதுமே கோபம் வந்துடுச்சு. கன்ட்ரோல் மிஸ்ஸாகி அவனை அடிச்சுட்டேன். அதுல அவன் காண்டாகி தான் நைட் எனக்கு கூப்பிட்டு அடிச்சுட்டேல்லன்னு சொல்லி பயங்கர அக்கப்போர் பண்ணிட்டான்டி.. இந்த டிராமாவுக்காக அவனுக்கு நான் பண்ணின செலவு இருக்கே. காதலிச்ச காலத்துல உனக்குக் கூட நான் அம்புட்டு பண்ணதில்லைடி. எல்லாத்தையும் உன் ஜாடையில இருக்கான்ங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் சகிச்சுக்கிறேன்”
“சகிச்சுக்கிற மூஞ்சியைப் பாரு..”
“இந்த மூஞ்சிக்கு என்ன குறை”
“முகத்தை விடு. அடுத்து என்ன பண்ணப் போற? அதைச் சொல்லு”
“நடக்குறப்போ நீயே பார்த்துக்கோ தங்கம்”
“பார்க்கத்தானோ போறோம்”
“சரி எப்படிடி கண்டுபிடிச்ச?”
“ம்ம் கார்ல போன் வந்ததே அப்போவே தெரியும் அப்போக் கூட அடி வாங்குனயே”
“தெரிஞ்சும் எதுக்குடி அடிச்ச?” எகிறிப் பேசினான் அவன்.
“கொல்லாமல் உயிரோட விட்டுருக்கேன்ல அதுக்கு சந்தோஷப்படுங்க ருத்ர தாண்டவன்” பேசும் போதே அவள் முகத்தில் தூக்கக் கலக்கம் இருந்தது.
“தூக்கத்தைக் கட்டுப்படுத்திட்டு உக்காந்திருக்கயா.? ப்ச். நீ படுத்துக்கோ..” என அவளை படுக்க வைத்தான்.
“எதைப் பத்தியும் யோசிக்காத. இதுவரைக்கும் பார்த்த ருத்ரன் இல்லை இவன். இவன் கொஞ்சம் வேற மாதிரி மாறிட்டான். எல்லாத்துக்கும் தகுந்த நியாயம் கிடைக்குற மாதிரி பண்ணுவேன்டி. என்னை நம்பு. இந்த முறை உன்னோட நம்பிக்கை உடையவே உடையாது”
“சப்போஸ் உடைஞ்சால் உன் மண்டை உடையும்.. நீயும் படு” என அவள் சொல்ல இருவரும் தங்களுக்குள் பேசித் தீர்த்ததில் அந்த இதத்தோடே உறங்கிப் போனார்கள்.
ஒரு சின்ன இறுமாப்பு… அதில் தான் இழந்து நிற்கிறான் அவன் மொத்த மரியாதையையும். தம்பியின் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்று எடுத்த முயற்சி அவன் வாழ்வை குப்புற வீழ்த்திவிட்டது. அதில் அவனுக்கு அத்துனை கோபம். அதற்குள் அவன் ஊர்சுற்ற கிளம்பிவிட அதுவரைக்கும் சமாளிக்க வேண்டும் என்று நினைத்துத் தன்னையே அடக்கிக் கொண்டிருந்தவனுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தர வந்ததுதான் சரவணனிடம் இருந்து வந்த செய்தி.
அதுவும் ஸ்கேனில் பார்த்தபோது பட்டு லட்டு என்று அவனால் மனதுக்குள்ளயே அழத்தான் முடிந்தது. அவளை அழவைத்ததால் தான் அழகிய தருணமொன்றின் ரகசிய சந்தோஷங்கள் அவனுக்குக் கிட்டாமலேயே போய்விட்டது.
மறுநாள் காலை..
இரவு தாமதமாக உறங்கியதால் இருவருமே நன்றாக உறங்கியிருந்தார்கள்.
முதலில் கண்விழித்தது ருத்ரன் தான். தன் வயிற்றில் கைவைத்தபடி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தவளை இரசித்துப் பார்த்தவன் மெல்ல எழுந்தான்.
கடைக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் குளிக்க கிளம்பினான்.
“குளிச்சியா?” கேள்வியோடு கதவு திறந்ததும் உமா எதிர்கொண்டாள்.
“ம்ம் கடைக்குப் போகணும்ல”
“நீ போக வேண்டாம். உனக்குக் கையில அடிபட்டுருக்குல”
“இதெல்லாம் ஒரு பிரச்சனையில்லை தங்கம். நான் போயிட்டு வந்துடுவேன்”
“நீ வீட்டுல இரு. அப்படியே போய் ஆகணும்னா நான் போயிக்கிறேன். பழனி அண்ணே இருப்பாங்கள்ல. டவுட் ஏதாச்சும்ன்னா அவங்ககிட்டயே கேட்டுக்கிறேன்”
“அடியே வேண்டாம்டி.. இந்த இரண்டு நாள்ல ஏகப்பட்ட அலைச்சல் உனக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் பார்த்துக்கிறேன்..”
“நீ இங்க இருன்னு சொன்னேன். பிறகு உன் இஷ்டம் “
“சரி அப்போ நீயும் போக வேண்டாம். நான் அண்ணன் கிட்ட பேசிடுறேன். அவர் பார்த்துக்குவார்” அவனும் விபரம் சொல்லிவிட்டு அவளோடு அமர்ந்தான்.
“ருத்ரா!”
“சொல்லு!”
“எனக்கு ஒரு ஆசை. நாம படம் பார்க்க போகலாமா? ரொம்ப நாளாவே உன்கூட தனியா போகணும்னு நினைச்சுட்டே இருப்பேன். நீதான் விடிஞ்சும் விடியுறதுக்குள்ளயே கிளம்பிப் போயிடுவயே. அப்பறம் எங்கிருந்து உன்னை பிடிக்குறது”
“பட்டு லட்டுவை சுமந்துட்டு இருக்கும் போது வாய்விட்டு உன் ஆசையை கேட்டுட்ட. போகலாம்.. நீ குளிச்சு ரெடியாகிட்டு வா.. சாப்பிட்டு கிளம்பலாம் சரியா?”
சரி என்பதற்கு அடையாளமாக அவனது கன்னத்தில் அவளது இதழ்கள் வந்து பதிந்தது.
தங்கம் என அவன் அவள் கன்னத்தினைப் பற்ற வருவதற்குள் அவள் “குளிச்சுட்டு வர்றேன் மாமா” என்று சென்றிருந்தாள்.
சாப்பிட இறங்கி வந்திருக்க சமையல் எதுவும் நடந்ததற்கான அறிகுறியே அங்கு இல்லை.
கவிதா டிவியின் முன்னே அமர்ந்திருக்க அம்மாவோ கவிதாவோடு பேசிக் கொண்டிருந்தார்.
“ருத்ரா! இன்னும் கடைக்குக் கிளம்பலையாப்பா?” மணியம்மாள் பாசமாய் கேட்க, அந்த பாசம் எதற்கென்று புரிந்ததால் அமைதியாய் அவன் இருந்தான்.
“அத்தை! எனக்குப் பசிக்குது. உங்க மகனோட பேசுறதுக்கு எல்லாம் உங்களுக்கு நேரம் இல்லை. நீங்க உடனே சமையல் வேலையை ஆரம்பிச்சுடுங்க”
“அண்ணா என்ன அண்ணா இது. உன் முன்னாடியே இப்படிப் பேசுறாங்க”
“என்ன கவிதா.. எப்படிப் பேசுறாங்க”
“நான் உங்ககிட்ட பேசலை என் அண்ணா கிட்ட பேசுறேன். அதுக்கு அண்ணன் பதில் சொல்லுவான்”
“பேசுறது உன் அண்ணன்கிட்டதான்மா.. ஆனால் பேசுறதை என்னைப் பத்தித்தானே.. அப்போ நான்தானே பேசியாகணும். எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசு. அண்ட் உனக்கொரு கதை சொல்லணும்னு நான் ஆசைப்படுறேன்.. ஒருத்தவங்க கட்டுன புருஷன்..”
“உமாம்மா.. நீ இப்படி உக்காரு. புள்ளைத்தாச்சிப் பொண்ணு நீ. ரொம்ப நேரமா நின்னுட்டே இருக்கக் கூடாது. நான் அரைமணி நேரத்துல உனக்கு சமைச்சுத் தர்றேன் சரியாம்மா..” உள்ளே சென்றுவிட, இங்க என்னடா நடக்குது என்பது போல் பார்த்திருந்தாள் கவிதா.
“போ கவிதா அம்மா பாவம். அவங்களுக்கு உதவி பண்ணு”
“உன் பொண்டாட்டியைப் போகச் சொல்லு”
“இப்போ போகலைன்னா அடுத்து எப்பவும் நீ இந்த வீட்டு வாசற்படியில காலை வைக்க முடியாது” அண்ணனின் மிரட்டலில் அவள் சமையல் கட்டிற்குள் சென்றாள்.
அரைமணி நேரத்தில் மடமடவென சமையல் தயாரானது.
உமாவிற்குச் சுடச்சுட உணவினை பரிமாறியபடி ருத்ரனுக்கும் பரிமாறினார் மணியம்மாள்.
“உங்களுக்கு ஞாபக மறதி அதிகம் இல்லையா அத்தை”
“ஆங்.. என்ன உமாம்மா..”
“நேத்தே என்ன சொன்னேன் உங்ககிட்ட”
“என்ன சொன்ன?” சத்தியமாக மறந்து போயிருந்தது .
“அவருக்குக் கையில அடிபட்டிருக்குன்னு சொன்னேன்ல. அதைப் பத்தி விசாரிக்கணும்னு கூடவா தோணாது. பெரிய பேண்டேஜ் தானே போட்டு சரவணன் அண்ணா அனுப்பி விட்டுருக்காரு. அதுமா கண்ணுல படாது. சிலருக்கு நான்வெஜ் தவிர வேறொன்னும் கண்ணுல படவே படாது போல”
“ஏய் என்ன வாய் ஓவரா போகுது?”
“கவிதா அவ உன் அண்ணி. ஒழுங்கா பேசு. இல்லைன்னா வீட்டை விட்டுக் கிளம்பு”
“அப்போ நான் சோத்துக்குத்தான் இங்க வந்தேன்னு அவளை மாதிரியே நீயும் சொல்லுறயா”
“நான் எங்கே சோத்துக்கு வந்தேன்னு சொன்னேன். நான்வெஜ்க்கு வந்தேன்னு தான் சொன்னேன்” வம்பிழுத்தாள் உமா. ஏனோ உமாவுக்கு இதையெல்லாம் பண்ணும் போது உற்சாகம் கூடியிருந்தது.
“கவிதா! அண்ணி ஏதோ கிண்டல் பண்ணிட்டு இருக்கா. அதைப் போய் இவ்வளவு தூரம் கொண்டு வர்ற.. விடும்மா.. அதுவும் இல்லாமல் அண்ணி மாசமா இருக்காங்க. புரிஞ்சு நடந்துக்கோ..” அதைச் சொன்னதும் உமாவிற்கே ஆச்சர்யமாக இருந்தது.
ரொம்ப ஈசியா ஹேண்டில் பண்ண வேண்டியதை நாமதான் இவ்வளவு தூரம் கொண்டு வந்து நிறுத்தியிருக்கோம் போலயே.. என நினைத்தவள் சாப்பிட ஆரம்பித்தாள்.
“ருத்ரா எப்படிப்பா காயம் ஆச்சு. கவனமா இருக்கணும். சரி சாப்பிட்டேன்னா கடைக்குக் கிளம்புப்பா.. “
“கடைக்கா.. அங்க பார்த்துக்க ஆள் இருக்காங்க. நான் பழனி அண்ணே கிட்ட பேசிட்டேன். இப்போ நானும் ருத்ரனும் சேர்ந்து வெளிய போறோம்.. வா ருத்ரா” என அவள் இழுத்துக் கொண்டு செல்ல அவனும் அவள் பின்னாலேயே சென்றான்.
“அம்மா! நீ என்ன அங்கேயே பார்த்துட்டு இருக்க உன் மவனும் மருமகளும் போயாச்சு.. ச்சே வீட்டுக்கே வந்துருக்க கூடாது. அவளை வீட்டை விட்டுத் துரத்திவிடலாம்னு நினைச்சு வந்ததால் நாம தான் வீட்டை விட்டைப் போகணும்ங்கிற மாதிரி பேசுறா. எப்போ இருந்து இப்படியெல்லாம் பேச ஆரம்பிச்சா உன் மருமகள். அதுசரி அவளுக்கு நீ ஏன் பயப்படுற? அப்படி என்னதான் உங்களுக்குள்ள ஓடுது”
“பேசாமல் இருடி.. நீ வேற”
“என்னமோ பண்ணுங்க. நான் கிளம்புறேன் “
அவள் சென்றுவிட்டாள். மணியம்மாள் உடனே வீராவுக்கு இந்த விஷயத்தினை சொல்லினார். அவனுக்கு மறுபடியும் மாட்டிக் கொள்ளப் போறோமோ என்ற எண்ணம் வந்ததும் பயம் வந்துவிட்டது. இது மட்டும் லட்சணாவுக்கு தெரிந்தால், அவள் வீட்டுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான்.. நம்மளை காலி பண்ணிடுவாங்க.. இப்போ என்ன பண்ணுறது என்று பயந்துக் கொண்டே இருக்க ருத்ரன் அதீத சந்தோசத்துடன் தியேட்டருக்குள் நுழைந்தான் உமாவுடன்.
புயல் தாக்கும்
