
புயல் 1
நிசப்தமாய் இருந்த அந்த அறையில் இடையினை மூடியிருந்த ஆடையினை நெகிழ்த்தியபடி படுத்திருந்தாள் உமா மகேஸ்வரி.
சில்லென்ற ஏதோவொன்று அவள் வயிற்றின் மீது பட அதன் தழுவலிலும் தொடுகையிலும் அவளது கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்த்தது.
அவளையேப் பார்த்த வண்ணம் இருந்தவனோ
“ரிலாக்ஸ்.. குழந்தைங்களோட ஹார்ட் பீட் கேக்குதா?” எனக் கேட்டான்.
“கேட்குது டாக்டர்.. பட் குழந்தைங்களா?” என நிறுத்த .. “எஸ், டுவின்ஸ்” என்றதும் அவளோ சிலிர்த்துப் போய் ஸ்க்ரீனைப் பார்த்தாள்.
அவளது உணர்வினைப் பார்த்தவன் பக்கத்தில் திரும்பி “சிஸ்டர்! இவங்க ஹஸ்பெண்ட் இருப்பாங்க. வரச் சொல்லுங்க’ என்றிட, அதுவரை குழந்தைகள் தெரிந்த அந்த ஸ்கீரினிலேயே பார்வையைப் பதித்திருந்தவள் ஹஸ்பெண்ட்டை கூப்பிடச் சொல்லுறாங்க என்பதில் பதறி எழப் போக..
“மிஸஸ் ருத்ர தாண்டவன். ப்ளீஸ் இன்னும் செக்கப் முடியல. படுத்துக்கோங்க” என்றிட,
“என்னோட ஹஸ்பெண்ட் வ..” என்றபோதே உள்ளே நுழைந்திருந்தான் ருத்ர தாண்டவன்.
அவனது பார்வை அந்த அரை இருளிலும் அவளை மூச்சுத் திணற வைத்தது.
“வாடா ருத்ரா!” எனச் சொல்லவுமே உமாவிற்கு புரிந்துப் போனது. அவனை யார் வரச் சொல்லியிருப்பார்கள் என்று. முகத்தினை கடுகடுவென வைத்தபடி டாக்டரைப் பார்த்தாள். அவன் இவள் புறம் திரும்பினால் தானே.
“வாழ்த்துகள் டா.. டுவின்ஸ் வேற” என்றான் நண்பனிடம்.
“நிஜமாவா சரவணா.. இரட்டப் புள்ளைங்களாடா”
“ஆமாடா இதோ கேளு. உன் புள்ளைங்களோயோட இருதய துடிப்பை.. உனக்குக் கேட்குதா?” ருத்ரா டாக்டரின் குரலில் அவளை முறைத்துப் பார்த்த பார்வையை மாற்றி மெல்லியதாய் அந்த அறைக்குள் கேட்டுக் கொண்டிருந்த அந்த சத்தத்திற்குக் காதினைக் கொடுத்தான் நாயகன் ருத்ர தாண்டவன்.
அவனது கண்களில் அவ்வளவு நேரம் இருந்த கோப அக்னி எல்லாம் அணைந்து போய் அதெல்லாம் சுடுநீராய் கண்களில் இருந்து வெளியேறியிருந்தது.
“என்னடா!”
“கேக்குதுடா சரவணா”
“ரொம்ப எமோஷனல் ஆகாத. இங்க பாரு இதுதான் உன் புள்ளைங்க” என ஸ்கீரினை இழுத்து அவனுக்கு வாகாய் காட்ட அவனது வெண்மையில் வந்துதித்தவர்களையே இமைசிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
உமாவிற்கு நடப்பது எல்லாமே எரிச்சலாக இருந்தது.
அதைப் பற்றிக் கவலையே கொள்ளாமல் குழந்தையைப் பற்றி ருத்ரன் சரவணனிடம் விசாரித்துவிட்டு வெளியேறியிருக்க
“உங்ககிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கலை டாக்டர்” என்றாள் காட்டமாக.
“என்னம்மா” என அவன் பாவமாய் பார்க்க “அவருக்கு ஏன் சொன்னீங்க?” என்றாள்.
“நீங்க சொல்லாமல் மறைக்குறது சரியா? மேடம்” என்றான் பதிலுக்கு.
“உங்களுக்கு நடந்த பிரச்சனையைப் பத்தித் தெரியும் தானே”
“அந்த பிரச்சனையில பாதிக்கப்படுறது குழந்தைங்களா இருக்கக் கூடாது உமா.. அதான் அவனுக்குச் சொன்னேன். அது மட்டும் இல்லாமல் எனக்கு ருத்ராவைப் பத்தி நல்லாத் தெரியும். அவன் அப்படி…”
அவள் கை நீட்டி தடுத்துவிட்டு “நண்பனுக்குப் பலமான சப்போர்ட்டா.. இருந்துட்டுப் போகட்டும். அதை என் காதுக்குக் கொண்டு வராதீங்க அண்ணா ப்ளீஸ். நான் உங்க மேல நிறைய மரியாதை வச்சுருக்கேன். நீங்க டாக்டரா மட்டும் நடந்துக்குவீங்கன்னு நினைச்சுத்தான் வேற கிளினிக் கூட போகாமல் இங்கே வந்தேன். பட் நீங்க அவரோட ப்ரண்ட் தான் நான்னு அழுத்தமா புரிய வச்சுட்டீங்க. இனி இங்க செக்கப் வரமாட்டேன். தாங்க்ஸ் வர்றேன்” என்றவளைத் தடுத்தவன்
“கோபத்துல நீ பல விஷயங்களை யோசிக்க மறந்துடுற உமா” என்றதும் அவளோ “என் இடத்துல நீங்க இருந்திருந்தால் இப்படியேதான் யோசிச்சுட்டு இருப்பீங்களா.. மாட்டீங்க அண்ணா..” கோபத்துடன் சொல்லிவிட்டு அங்கிருந்த தடுப்புக்குள் சென்றாள்.
வயிற்றில் தடவி இருந்த ஜெல்லை டிஷ்யூவால் துடைத்துவிட்டு வெளியே வர அங்கேதான் அவளது கணவனும் அமர்ந்திருந்தான். அவனது பார்வை மொபைலில் இருந்தது.
அவனைக் கண்டதும் அவள் வேறொரு இடத்தில் சென்று அமர, கொழுப்பு திமிரு என்று முணங்கியபடியே அவள் அருகே சென்று அமர்ந்தவன் அவளது தோளினைச் சுற்றிக் கைப்போட்டு அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
“கையை எடுங்க”
“முடியாது”
“எடுக்குறீங்களா இல்லையா?” குரல் உயர்ந்தது.
“முடியாதுன்னு சொல்லிட்டேன்ல”
“எவ எவளையோ தொட்ட கையால என்னைத் தொடுறதுக்கு உனக்கு வேணும்னா வெட்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அருவருப்பா இருக்கு” அந்த அருவருப்பை முகத்தில் கொண்டு வந்து முகம் சுழித்து அவள் சொல்ல அவனோ இன்னும் இருக்கினான்.
“அருவருப்பா இருந்தாலும் பரவாயில்லை. நீ பழகிக்கோ” என்றான் சாதாரணமாக.
“ச்சீ.. உன்னோட உறவே வேண்டாம்னுதானே விலகி வந்தேன். இப்படி மறுபடியும் முன்னாடி வந்து தொல்லை பண்ணால் என்ன அர்த்தம்”
“என் உறவே வேண்டாம்னு வந்தவ என்னோட உறவால வந்ததை மட்டும் வயித்துக்குள்ள ஒளிச்சு வச்சுட்டு ஏன் போன?”
“அது என் குழந்தைங்க.. நீ ஒன்னும் அதுக்கு உரிமை கொண்டாடி வரத் தேவையில்லை. கிளம்பு. இல்லைன்னா நான் என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாதுடா பொம்பளை பொறுக்கி” முணுமுணுத்தாள் பெண்ணவள்.
அதில் கோபம் வந்தாலும் அடக்கியவன் சிவந்த விழிகளை அவள் மேல் படர விட்டபடி
“என்ன செய்வ?” என்றான் அதிகாரமாக.
“இந்த உறவே வேண்டாம்னு என்னால அழிச்சுட முடியும்” என்றதும் தோளைச் சுற்றிப் படர்ந்திருந்த அவன் கரம் அவளது கழுத்தினை இறுக்கியது.
“என்ன சொன்ன? அழிப்பயா? என் இரத்தத்தை அழிச்சுடுவயா.. அங்கே ஒன்னு இல்லைடி இரண்டு உசுரு இருக்கு. அதை அழிச்சுடுவேன்னு பேச்சுக்குக் கூட சொன்ன அப்பறம் நானே உன்னைக் கொன்னுடுவேன்” அவனது கோபத்தில் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. பேருக்கு ஏற்றார்போல அவனிருக்க,
“உமா மகேஸ்வரி” என்று ரிசப்ஷனில் இருந்து அழைப்பு வரவும் அவளின் கழுத்தில் இருந்து கையை எடுத்துவிட்டு எழுந்து சென்றான்.
ரிப்போர்ட் வாங்கியவன் அவளது கையைப் பிடித்து வெளியே செல்ல “ரிப்போர்ட் குடுங்க” என்றாள் அவள்.
“என்கிட்டயே இருக்கட்டும்”
“படிக்கத் தெரியுமா என்ன? எரிச்சலைக் கிளப்பாமல் என்கிட்ட கொடுங்க” நக்கலாக அவள் சொல்லவும்
“படிச்சுப் பார்க்கவா வாங்குனேன். படம் பார்க்க வாங்கினேன். என் புள்ளைங்களோட படம் அதுலதானே இருக்கு. இதுல என்னத்தை படிச்சுப் பார்த்து நான் புரிஞ்சுக்கணும். சரவணன் சொன்னதுதானே அதுல இருக்கும். இது நான் என் புள்ளைங்கள பார்க்கத் தோணும் போதெல்லாம் பார்க்குறதுக்காகவே என்கிட்ட இருக்கட்டும். நீ கார்ல ஏறு..” என்று சொல்ல அவளோ “முடியாது. நான் வீட்டுக்குப் போகப் போறேன்” என்றாள்.
“உமா ஒரு தடவை சொன்னா அதை அப்படியே கேட்டுப் பழகு. மரியாதையாய் வண்டியில ஏறிடு. இல்லைன்னா தூக்கிட்டுப் போவேன்”
“எதுவுமே வேண்டாம்னு வந்தபிறகு எதுக்கு இப்படி தேடி வந்து தொல்லைப் பண்ணுறீங்க. எனக்கு உங்களைப் பிடிக்கல” அவனுடனான வாக்குவாதம் அவளைச் சோர்ந்துப் போகச் செய்ய மசக்கையின் களைப்பின் காரணமும் சேர்ந்துக் கொள்ள அப்படியே தலை சுழன்றது. தலையில் கைவைத்தவளை அவன் தாங்கிப் பிடித்துக் கொண்டு கதவினைத் திறந்து உள்ளே அமர வைத்தான்.
“இந்த நிலைமையிலும் திமிரைப் பாரு.. வீட்டுக்கு வாடி உன்னை வச்சு செய்யுறேன். என்னைப் பத்தி உனக்குத் தெரியல. இந்த இரண்டு வருஷமா பார்த்தவன் இல்லை நான். இப்போ இருக்குறவன் ரொம்பவே மாறிப் போயியிருக்கான். ரொம்பவே சோதிச்சுட்டீங்கடி எல்லாரும் சேர்ந்து. இதுக்கெல்லாம் அனுபவிக்க வேண்டாமா?” அவளையே குறுகுறுவெனப் பார்த்தவனின் பார்வையே வயிற்றை நோக்கி வந்ததும் முகம் கனிந்துப் போனது.
“பட்டு, லட்டு.. என் செல்லக் குட்டிங்களா அப்பாவுக்கு நீங்க வந்ததுல எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? ஆனால் நான் சந்தோஷப்பட்டுடுவேன்னு உன் அம்மா நீங்க இருக்குறதை சொல்லாமலேயே விட்டுட்டா. அவ கூட நீங்க இரண்டு பேரும் பேசாதீங்க” என்றவன் சட்டென “வேண்டாம் வேண்டாம் என் உமா பாவம். அவகூட நீங்களும் பேசுங்க” என அவன் குரல் மெல்ல வெளிவந்ததது..
அவனது கிசுகிசுப்பான குரல் காதில் விழ “மாமா” என அவளும் மயக்கத்திலேயே கிசுகிசுத்தாள்.
அவ்வழைப்பு அவனுக்கான ப்ரத்யேக அழைப்பு.. அடிக்கடி எல்லாம் அவள் வாயிலிருந்து அந்த அழைப்பு வந்துவிடாது. அவள் கனிந்து குழைந்து உருகிப் போயிருக்கும் சமயங்களில் மட்டுமே அவனை அப்படி அழைப்பாள். மற்ற நேரங்களில் அவன் ருத்ரா தான்.
வெகு நாட்கள் ஆகியிருக்க இன்று குழந்தைகளின் வரவோடு இந்த அழைப்பும் அவனை திக்குமுக்காடச் செய்திருந்தது.
“மவனே! அவ இப்போ மயக்கத்துல இருக்கா. அதனால இப்படிக் கூப்பிடுறா. இல்லைன்னு வை உன்னை என்னென்னு சொல்லுவா தெரியுமா?” மனசாட்சி அவனது சந்தோசத்தைப் பொறுக்க மாட்டாமல் சொல்ல
‘ப்ச் தெரியும். அதான் கொஞ்ச நேரம் முன்னாடிகூட கூப்பிட்டாளே” அவன் முகம் கருத்துப் போனது.
கதவை மெதுவாக சாத்திவிட்டு கேண்டீன் பக்கத்தில் இருந்த ஜூஸ் கடைக்குச் சென்றான்.
வாங்கிக் கொண்டு காருக்கு வரும் போது அவள் கார் கதவை திறக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.
“லாக் பண்ணியிருக்கேன் உமா” அவன் திறந்துவிட்டு அவளுக்கு ஜூஸைக் கொடுக்க அவள் அதைத் தள்ளி விட்டாள். அவன் அணிந்திருந்த வெள்ளை நிற வேட்டி சட்டை வாங்கி வந்திருந்த மாதுளம் பழ ஜூஸ் பட்டு கறையாகியது.
அதைப் பார்த்ததும் அவன் உஷ்ணத்தோடு அவளை ஏறிட்டான்.
“என்ன பார்வை? உன் மேலேயே கறை படிஞ்சுதானே இருக்கு. அதுக்கே நீ ஒன்னும் ஃபீல் பண்ணின மாதிரி தெரியல. இந்த வெள்ளை வேட்டியில பட்டதுக்கு என்னமோ ரொம்ப முறைக்குற. இது துவைச்சால் போயிடும். ஆனால் நீ பண்ணின காரியம் அப்படியா?” கேட்டபடியே எழப் போனவளை ஒருகையால் அழுத்திப் பிடித்தவன் “வேட்டியில கறை பட்டத்துக்கு நான் கவலைப் படலையே தங்கம். இந்த ஜூஸ் உள்ளே வயித்துல இருக்காங்களே என் பட்டு, லட்டு அவங்களுக்காக வாங்கிட்டு வந்தது. எவ்வளவு தைரியம் இருந்தால் அதை நீ தள்ளிவிடுவ. அதுதான் எனக்குக் கோபம். மொதல்ல ஜூஸைக் குடி. அப்பறம் என்னோட வீர பிரதாபங்களைப் பத்தி மைக் போட்டே பேசலாம். நானே ஏற்பாடு பண்ணுறேன்டி” அவளுக்கு முன் கிளாஸை நீட்டியபடி அவன் சொல்ல அவள் வாங்காமல் பார்வையைத் திருப்பினாள்.
“வாங்குடி” அழுத்தமாய் வந்தது.
“வேண்டாம்”
“அறிவில்லை உனக்கு. மயங்கி இப்போத்தானே விழுந்த. ஒழுங்கு மரியாதையாய் இதைக் குடி. என் புள்ளைங்களுக்குப் பசிக்கும்” இப்போது கிளாஸின் விளிம்பு அவளது உதடுகளைப் பிளந்து நாவினைத் தொட்டிருந்தது.
இனிப்பான சாறு நாவின் மீது பட அவளது சுவை நரம்புகள் தங்களது வேலையை உடனே ஆரம்பித்தது. மடக்மடக்கென்று அதைக் குடித்து அவள் காலி ஆக்கியதிலேயே தெரிந்தது மேடம் காலையில் இருந்து பட்டினி என்று.
உள்ளே சுர்ரென்று ஏறியது ருத்ராவுக்கு. தாண்டவம் ஆடத் துடித்தக் கால்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவள் பக்கத்துக் கதவினை மெல்லச் சாத்திவிட்டு வந்து காரினை எடுத்தான். முகத்தில் என்ன முயன்றும் கோபத்தினை மறைக்க அவனால் முடியவில்லை. வண்டியை அவன் ஸ்டார்ட் செய்ய அவளோ “ஒரு நிமிஷம்” என்றாள்.
கோபத்தோடே திரும்ப அவனது ஸ்பெக்ஸை எடுத்து நீட்டினாள்.
“வண்டி ஓட்டுறீங்க. ஸ்பெக்ஸ் போட்டுக்கணும்னு தெரியாதா? நீங்க பாட்டுக்கு போய் வண்டியை எது மேலயாவது விட்டால் என்னா பண்ணுறது?”
“அப்படி மோதுனாலும் உங்களுக்கு எந்த ஆபத்தும் நான் வரவிட மாட்டேன். நீ கொஞ்சம் வாயை மூடிட்டு வந்தால் நல்லா இருக்கும்” என அவளிடம் இருந்து வெடுக்கென்று வாங்கி கண்ணாடியினை அணிந்துக் கொண்டான்.
அவள் சொல்வதும் உண்மைதான். அவனுக்கு கிட்டப்பார்வை குறைபாடு உண்டு. நெருக்கமாய் இருப்பது தெளிவாகத் தெரிந்தாலும் தொலைதூரத்தில் இருப்பது ப்ளராகத்தான் தெரியும்.
வேண்டா வெறுப்பாக போட்டுக் கொள்வதைப் போல் முகத்தினை வைத்தவன் இப்போது வண்டியை எடுத்தான்.
அவனது வண்டியின் வேகம் அவளை புருவமுயற வைத்தது.
“எதுக்கு இந்த நடிப்பாம்?” என உள்ளுக்குள்ளேயே முணங்கிக் கொண்டவள் வண்டியின் தாலாட்டில் கண்ணயர்ந்துவிட்டாள்.
விழித்துப் பார்த்த போது அந்த அறையே வித்தியாசமாக இருந்தது. பட்டென்று அவள் எழப் போக
“கர்ப்பமா இருக்கும் போது இப்படி பட்டு பட்டுன்னு எந்திரிக்கக் கூடாதுடி தங்கம்.. அது உள்ள இருக்க நம்ம பட்டு லட்டுக்கு நல்லது இல்லை” அவனின் குரல் மட்டும் அந்த அறைக்குள் எதிரொலித்து அவளை நிலைகுலையச் செய்தது.
புயல் தாக்கும்…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

Arambathule ippadi adichikurangale appadi enna pirachanaiya irukum? Super start writer ji🥺
நன்றி ❤️❤️❤️❤️
Super start writer ji
ரெண்டு பேரும் என்ன டைப்னே புரிஞ்சுக்க முடியலையே!!… இன்ட்ரஸ்டிங்😍😍
நன்றி ❤️
ருத்ரா உமா செம