திருமணம் முடிந்து அனைவரும் சென்னை நோக்கி பயணித்தனர். ஒரே வேன் பிடித்து சென்றதால், அந்த வேன் நேராக வில்லாவிற்கே சென்றது.
இரவு பத்து மணியும் தாண்டி விட, அனைவரும் உறக்கக் கலக்கத்தில் இருந்தனர். மகிழினியும் பிரஷாந்தின் மடியில் சாய்ந்து உறங்கி இருக்க, மைதிலி காதில் ஹெட் ஃபோனை மாட்டிக்கொண்டு தலையை பின்னால் சாய்த்து கண்ணை மூடிக்கொண்டவள் தான், இடையில் தேநீர் அருந்த அழைத்தும் கூட அவள் நிலையை மாற்றவில்லை.
உறங்கவும் இல்லையென்று அவளது கருமணிகளின் அசைவை வைத்தே கண்டறிந்தாலும் பிரஷாந்த் அவளை வற்புறுத்தவில்லை. மகிழினிக்கும் அவனே உணவு கொடுத்து உறங்கவும் வைத்திருந்தான். வில்லாவிற்கு சென்றதும் தான் கண்ணை விழித்த மைதிலி, திரும்பி பிரஷாந்தை காட்டத்துடன் பார்த்தாள்.
‘ஐயோ இப்ப எதுக்கு முறைக்கிறான்னு தெரியலையே’ என்று புலம்பினாலும், “தவம் கலைஞ்சுடுச்சா மைலி. நான் கூட நீ கண்ணை மூடி போன ஜென்மத்துக்கு போய்ட்டனு நினைச்சேன்” என்று கிண்டலடிக்க, அவளது பார்வையின் அனல் கூடியது.
“நான் இங்க வரல. என் வீட்டுக்குப் போறேன்…” வேனை விட்டு இறங்காமல் அவள் கடிய,
“இந்த நேரத்துக்கு மேல வேணாம் மைதிலி. நாளைக்கு காலைல என் திங்க்ஸ்ஸயும் எடுத்துட்டு எல்லார்கிட்டயும் சொல்லிட்டுக் கிளம்பலாம். உன் வீட்ல இருக்கறதுனாலும் ஓகே. இல்லனா வேற வீடு கூட பாக்குறேன். இப்போ இறங்கு” என்றவனை அழுத்தமாய் ஏறிட்டவள், அவன் பேச்சைக் கண்டுகொள்ளாமல், கேப் புக் செய்து கொண்டிருந்தாள்.
அலைபேசியை வெடுக்கெனப் பிடுங்கியவன், “உங்கிட்ட தான சொல்லிட்டு இருக்கேன். இந்த நேரத்துல இங்க இருந்து போகணும்னா இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் மைதிலி. மகி பேபி நல்ல தூக்கத்துல அண்ட் ஆல்மோஸ்ட் செம்ம டயர்ட்ல இருக்கா. ஆர் யூ அவுட் ஆஃப் யுவர் மைண்ட்!” லேசாய் ஏழுந்த கோபத்தில் கடிந்தான்.
“ஆமா ஐ ஆம் அவுட் ஆஃப் மை மைண்ட். நீங்க தான் ரொம்ப தெளிவு ஆச்சே. என்னால இங்க இருக்க முடியாதுன்னு நான் ஏற்கனவே சொன்னது தான. திடீர்னு கல்யாணம் பிளான் பண்ணப்பவே, ஒன்னு வேற வீடு பார்த்து இருக்கணும், இல்லன்னா ஊர்ல இருந்து கிளம்பும்போதே என் வீட்டுக்குப் போறதை சொல்லி இருக்கணும் எல்லார்கிட்டயும். தட்ஸ் யுவர் மிஸ்டேக்…” என்று சீறினாள்.
“ஊஃப்… ஓகே என் மிஸ்டேக் தான். நானும் அங்கேயே கல்யாணம் நடக்கும்னு எதிர்பார்க்கல மைதிலி…”
“அச்சுப் பிசகாம பிளான் போட்டுக் கொடுக்குறது தான உங்க வேலையே. என்கிட்டயே நடிக்காதீங்க!”
“மைதிலி!” பிரஷாந்தின் முகம் கடுமையுடன் மாற,
“நான் செஞ்சா செஞ்சேன்னு சொல்லிடுவேன். உங்கிட்ட நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. இப்ப என்ன நீ உன் வீட்டுக்குப் போகணும் அவ்ளோ தான…” என்று படபடவெனப் பொரிந்தான்.
அனைவரும் இறங்கியும் இவர்கள் இருவரும் இறங்காதது கண்டு அமர் தான், “நீங்க ரெண்டு பேரும் இறங்கலையா?” எனக் கேட்க,
மகிழினியைத் தோளில் போட்டபடி இறங்கிய பிரஷாந்த், “உன் கார் கீ குடு. அவள் வீட்டுக்குப் போகணுமாம்…” என்றான்.
“இப்பவா?” அமருக்கு அருகில் நின்ற தேவஸ்மிதா புரியாமல் கேட்டுவிட்டு மைதிலியைப் பார்க்க அவள் கடுகடுவென இருந்தாள்.
“சரி காஃபியாவது குடிச்சுட்டுப் போங்க. மறுபடியும் அவளோ தூரம் போகணும்ல…” என்றிட, “எனக்கு வேணாம்” என்றாள் மைதிலி.
“அப்போ நீ இங்கயே நில்லு. டேய் அனகோண்டா… உன் பொண்டாட்டி வீட்டுக்கு போட்ட பேண்ட் சட்டையோட போனா வரலாறு உன்னைக் காறித் துப்பும். நாலு ட்ரெஸாவது எடுத்துட்டுப் போ!” எனக் கிண்டல் போல கூற, விஷயம் கேள்விப்பட்டு அனைவருக்கும் உறக்கம் கலைந்தது தான் மிச்சம்.
மகேஷ், “என்ன மைதிலி இப்படி பண்ற?” என ஆதங்கத்துடன் கேட்க, அவள் பதில் கூறாமல் நின்றாள்.
பின், பிரஷாந்த் அப்போதைக்கு தேவையான பொருட்களை டிராவல் பேகில் எடுத்துக்கொண்டு வந்தவன், வீட்டு சாவியை தயாவிடம் கொடுத்து வைத்தான்.
“ஆளை வச்சு அப்போ அப்போ க்ளீன் பண்ண சொல்லுடா வீட்டை. நான் கால் பண்றேன்” என்று விட்டு, மற்றவர்கள் பேசும் முன், காரில் மனையாளையும் மகளையும் ஏற்றிக்கொண்டு கிளம்பி விட்டான்.
மிருணாளினிக்கு பெருமூச்சு தான் எழுந்தது.
“ஏன் மைதிலி இவ்ளோ அடமென்ட்டா இருக்கா. கல்யாண விஷயத்துல அவங்களை ரொம்ப கார்னர் பண்ணாம இருந்துருக்கலாம் அண்ணா. அதான் அவள் அப்படி நடந்துக்குறாளோ என்னவோ…” என்று அமரிடம் வருந்தியதில்,
“கார்னர் பண்ணலைன்னா, ஜென்மத்துக்கும் அவள் இதுக்கு சம்மதிக்க மாட்டா மிரு. சரி ஆகிடும்னு நம்பலாம். பிரஷாந்த் இருக்கான்ல…” என்று தோழன் மீது முழு நம்பிக்கையும் வைத்திருந்த கணவனை கண்ணில் நிரப்பிக்கொண்டாள் தேவஸ்மிதா.
மைதிலியின் வீடு மாங்காட்டில் இருந்தது. தனி வீடு தான். சிறு பூச்செடிகள் கொண்ட தோட்டமும், இரு படுக்கையறை கொண்ட வீடும் அழகாக அளவாக இருந்தது. எப்போதும் மல்லிகா வீட்டையும் தோட்டத்தையும் பராமரித்துக் கொள்வார்.
அவர் சென்றதில் இருந்து இரண்டுமே அலங்கோலமாகத் தான் இருந்தது.
கீழே இருந்த துவாலையைக் கூட மைதிலி எடுத்திருக்கவில்லை. இப்போதும் அதைத் தாண்டி அறைக்குச் சென்றவள் மகிழினியை மெத்தையில் படுக்க வைத்து விட்டு, கதவை அடைத்து தாழ் போட்டுக்கொண்டாள்.
தன்னுடன் ஒருவன் வந்தான் என்ற அக்கறையே அவளுக்கு சிறிதும் இல்லை.
மறுநாள் எப்போதும் போல எழுந்தவள், மகிழினியையும் எழுப்பி விட்டபடி அறையை விட்டு வெளியில் வர, ஹால் சோபாவில் உடலைக் குறுக்கி உறங்கிக் கொண்டிருந்தான் பிரஷாந்த்.
அவனது பையும் சோபாவிற்கு அருகிலேயே இருந்தது. ஒரு நொடி புருவம் சுருக்கி விட்டு, பக்கத்து அறையைப் பார்த்தவளுக்கு அது இன்னும் மூடியே இருந்ததில் தான் உறைத்தது, அந்த அறையை பூட்டி விட்டு சாவியை தான் வைத்திருப்பது.
“ப்ச்!” என்று தன்னை தானே கண்டித்துக் கொண்டாலும், ‘கல்யாணம் பண்ணுனான்ல அனுபவிக்கட்டும்’ என்று அதனை அலட்சியம் செய்தபடி அடுக்களைக்குச் சென்றாள்.
அவளது அரவம் கேட்டதுமே உறக்கம் கலைந்த பிரஷாந்த் புன்சிரிப்புடன் “குட்மார்னிங் மைலி” என்று எழுந்து அமர, அடுக்களையில் இருந்து திரும்பிப் பார்த்தால் அவன் அமர்ந்திருப்பது தெரியும் என்றதால், அவள் திரும்பவே இல்லை. பதிலும் கூறவில்லை.
காலை உணவும் மதிய உணவும் சமைக்கத் தொடங்கி விட்டவள், ஒரு அடுப்பில் பாலையும் காய்ச்சிட, அறையில் இருந்து ஓடி வந்த மகிழினி, “அங்கிள் இனிமே நம்ம சேர்ந்து தூங்குவோம்னு தான சொன்னீங்க. காலைல எந்திரிச்சுப் பார்த்தா நீங்க என்கூட இல்லை” என்று குறையாய் முகத்தைச் சுருக்கினாள்.
நறுக்கிக் கொண்டிருந்த வெங்காயத்தை அப்படியே நிறுத்திய மைதிலிக்கு சுருக்கென இருந்தது.
ஒரு வித ஏமாற்றம் மகிழினியின் முகத்தில் பிரதிபலிக்க,
பிரஷாந்தும் தொண்டையை செருமிக் கொண்டு, “நான் உன்கூட தான் தூங்குனேன் பேபி. மார்னிங் சீக்கிரம் எந்திரிச்சுட்டேனா அதான் இங்க வந்துட்டேன்…” என்று பொய் கூறிட, அவள் விழி விரித்தாள்.
“ஹை நிஜமாவா? எனக்குத் தெரியவே இல்லை அங்கிள். நான் ஸ்கூலுக்குக் கிளம்புறேன். என்னை டிராப் பண்ண நீங்களும் வருவீங்க தான?” என்று தலையாட்டிக் கேட்டதும், “இனி தினமும் உன்கூட நான் வருவேன் பேபி… இப்ப நம்ம ஸ்கூலுக்கு கிளம்பலாமா. வா வா” என்று அவளைக் குளிக்க வைத்தான்.
“மைதிலி பேபியோட யூனிஃபார்ம் எங்க இருக்கு?” அறைக்குள் இருந்தபடி பிரஷாந்த் சத்தம் கொடுக்க, சலனமற்று உள்ளே வந்தவள் வார்டரோபில் இருந்த யூனிஃபார்மை மெத்தையில் வைத்து விட்டு மீண்டும் அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள்.
அவளை கவனித்தபடியே மகளைத் தயார் செய்தவன் தானும் குளித்துக் கிளம்பி வந்தாள்.
அதற்குள் காலை உணவு தயாராக இருக்க, அதனை டைனிங் டேபிளில் வைத்தவள், ஒரு தட்டில் உப்புமாவைக் கொட்டி மகிழினிக்குக் கொடுத்தாள். “சீக்கிரம் சாப்பிடு மகி. நான் லன்ச் பேக் பண்றேன்…” என்றிட, பிரஷாந்தும் அங்கு வந்து விட்டான்.
ஒரு தட்டில் அவனும் உப்புமாவை வைத்து விட்டு நேராக சமையலறைக்குச் சென்றவன், “நீ சாப்பிடல” எனக் கேட்டபடி அடுப்பு திண்டில் ஏறி அமர்ந்து கொள்ள, அவனை எதிர்பாராமல் விழித்தவள் பின் கோபமாக “டைனிங்க்கு போங்க” என்றாள்.
“எனக்கு இங்க சாப்பிட தான் பிடிக்கும்… நீயும் சாப்பிட்டுட்டு வேலையைப் பார்க்கலாம்ல” என்றவன் ஒரு வாயை எடுத்து அவளுக்கு ஊட்டி விட வர, அதனை வெடுக்கென தள்ளி விட்டதில், கையில் இருந்த உப்புமா தரையில் சிதறியது.
“ஸ்டே இன் யுவர் லிமிட் பிரஷாந்த்…” என்று தீப்பார்வை வீச, அவனோ அதனை சட்டை செய்யாமல் இன்னொரு விள்ளலை எடுத்து அவள் முன் நீட்டினான்.
“நான் என்ன என் வாயில இருக்குற உப்புமாவையா உனக்கு குடுத்து லிமிட் க்ராஸ் பண்ணேன். தட்டுல இருக்கறதை தான எடுத்துத் தரேன்…” என்று சாவகாசமாகக் கேட்க, மைதிலி பேந்தப் பேந்த விழித்தாள்.
“நான் லிமிட் க்ராஸ் பண்ணனுமா வேணாமான்னு நீ தான் முடிவு பண்ணனும்!” ஒற்றைப் புருவம் உயர்த்தி தோளைக் குலுக்கியவனைக் கண்டு ஆத்திரம் பல மடங்கு பெருகியது.
“ம்ம் சாட்டுக்கிட்டே வேலை பாரு மைலி. வாங்கிக்கோ” என்று வம்படியாக அவள் வாயில் உப்புமாவைத் திணித்தவன் தானும் ஒரு வாய் எடுத்துக்கொள்ள, பற்களை கடித்து கோபத்தை அடக்கினாள்.
மகளுக்கும் தனக்கும் உணவைக் கட்டிக்கொண்டவள், மகிழினியிடம் “நீ உன் அங்கிளோடவே ஸ்கூலுக்குப் போய்டு” என்று விட, குழந்தையின் முகமே தொங்கி விட்டது.
“ஏன்மா நீங்க வரலயா?” என சிறுகுரலில் கேட்டதில்,
“உனக்கு உன் அங்கிள் கூட போகணும்னு தான ஆசை. தென் கோ வித் ஹிம்…” என்று சிறுமியிடம் கோபத்தைக் காட்டி விட்டு, வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியே விட்டாள்.
“அம்மா என்மேல கோபமா இருக்காங்களா அங்கிள்” கண்ணில் நீர் வைத்து விட்டாள் மகிழினி.
பிரஷாந்திற்கு மைதிலி மீது கோபம் கண்ணாபின்னாவென எகிறினாலும், “ஹே அதெல்லாம் இல்லை பேபி. நீ தான என்கூட போகணும்னு சொன்ன, அதான் உன் அம்மா உன்னை என்னை நம்பி விட்டுட்டு ஆபிஸ் போயிருக்காங்க. நிறைய வேலை இருக்காம். இந்த பேபி மேல யாராவது கோபப்படுவாங்களா?” என்று அவளை சமாதானம் செய்ததில் அவளும் அதனை நம்பி சமாதானம் ஆனாள்.
அமரின் காரிலேயே மகளை பள்ளியில் இறக்கி விட்டவன், முதல் வேலையாக கார் ஷோ ரூமிற்குச் சென்று, கார் ஒன்றை புக் செய்து விட்டான். அது அவன் கைக்கு கிடைக்க இரு நாட்கள் ஆகும் என்று விட்டனர்.
அமரும் புது கார் வரும் வரையிலும் அவனது காரை அவனையே வைத்திருக்கக் கூறினான்.
அடுத்து அவன் சென்றது மைதிலியின் அலுவலகத்திற்குத் தான். அங்கு ஒரு வேலையிலும் கவனத்தைச் செலுத்த இயலாமல் எங்கோ வெறித்திருந்தாள் மைதிலி. அடுத்த ஒரு மணி நேரத்தில் ஹியரிங் உள்ளது. ஆனால், எந்த குறிப்பும் எடுக்கவில்லை. ஹியரிங்கில் ஆஜராகக் கூட மனதில்லை.
அவள் முன் நிழலாட நிமிர்ந்து பாராமலேயே அது பிரஷாந்த் எனப் புரிந்தது.
மனையாளை சூடாக முறைத்தவன், “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா மைதிலி. என்மேல கோபம்னா அதை என்மேல காட்டு. ஏன் சின்னப் பொண்ணு மேல காட்டுற.
ஏன் உனக்கு ஆசை இருந்தது இல்லையா உன் அப்பாவைப் பார்க்கணும், உன் அம்மா கூட இருக்கணும், எல்லார் கூடவும் சேர்ந்து இருக்கணும்னு. அதே மாதிரி தான அவளுக்கும் இருக்கும். அவளுக்கு ஒரு ஃபேமிலி என்விரான்மெண்ட்டைத் தரேன்னு சொல்லிட்டு, இப்ப நீயே அதை உடைச்சுட்டு இருக்க. உனக்குப் பிடிக்குதோ இல்லையோ இந்த சூழ்நிலையை நீ ஏத்துக்கத்தான் செய்யணும் மைதிலி. மகி பேபியை ஹர்ட் பண்ற மாதிரி இன்னொரு தடவை நடந்துக்காத” என்று எச்சரித்தான்.
அவனை விழி நிமிர்த்திப் பார்த்தவளின் கருவிழிகளுக்குள் என்ன விதமான உணர்வு அடங்கி இருக்கிறதென்று அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை.
“மகி என் பொண்ணு பிரஷாந்த். அவளை எப்படி பார்த்துக்கணும்னு நீங்க எனக்கு சொல்லித் தர தேவை இல்ல. அண்ட் மோர் ஓவர், எனக்குப் பிடிக்குதோ இல்லையோ என் லைஃப்ல நடக்குற எல்லா விதமான பிடிக்காத சூழ்நிலையையும் இப்ப வரை அக்செப்ட் பண்ணிக்கத் தான் செய்றேன். அவளுக்கும் உங்களுக்குமான ஸ்பேஸை நான் கெடுக்க விரும்பல. நான் வந்தா தேவை இல்லாம கோபத்தை தான் காட்டுவேன். அது யாருக்கும் பிடிக்கிறது இல்லை. அதான் உங்களை டிராப் பண்ண சொன்னேன். அவ்ளோ தான். அதுக்கு நீங்க கிளம்பி வந்து குத்திக் காட்டணும்னு அவசியம் இல்ல” என்று நிறுத்தி நிதானமாக பேசி முடித்தாள்.
“உன்னைக் குத்திக் காட்டிப் பேசணும்னு நான் வரல மைதிலி. உன் கோபத்தை காட்டு. யார் வேணாம்னு சொன்னா? அதைக் கூட இருந்து காட்டு. ஸ்கூலுக்கு அப்பா, அம்மா ரெண்டு பேரும் வந்து டிராப் பண்ணணும்ன்றது அவளோட பல நாள் ஆசையா இருக்கலாம். மத்த பசங்களை பார்த்து தோணி இருக்கலாம்.
அதை ஒரு நாள் செஞ்சுட்டுப் போகலாமே. அவளுக்கு ஒன்னும் என்கூட தனியா டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசை இல்லை மைதிலி அதை முதல்ல உன் மண்டைக்குள்ள நல்லா ஏத்திக்க. அவளுக்கு நம்ம கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தான் ஆசை. ரெண்டுத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.
இவ்ளோ வளர்ந்து இருக்கோம்… நம்மளாலேயே ஒரு ஏமாற்றத்தை தாங்க முடியல. அவள் சின்னப் பொண்ணு, அதுவும் சிங்கிள் சைல்டா ஒரு சிங்கிள் மதரோட கேரிங்ல வளர்ந்த பொண்ணு. அவளுக்கு இருக்குற சின்ன சின்ன ஆசை எல்லாம் ரொம்ப விலைமதிக்க முடியாத ஆசைகள் மைதிலி. அதைக் குடுக்க வாய்ப்பு இருக்கும் போது தட்டிப் பறிக்கிறது… இட்ஸ் நாட் ஃபேர்…” என்று மூச்சிரைத்து அவளுக்குப் புரிய வைக்க முயன்றான்.
மைதிலி சட்டென அமைதியாகி விட்டாள். மகளிடம் பேசி விட்டு வந்த முறையில் ஏற்கனவே உள்ளுக்குள் வெந்து கொண்டிருந்தவளுக்கு பிரஷாந்தின் பேச்சில் குற்ற உணர்வு அதிகரித்தது.
“ஈவினிங் அவளை பிக் – அப் பண்ண போலாம்…” உள்ளே சென்ற குரலில் கூறியவள், “எனக்கு ஹியரிங் இருக்கு” என்று வாசலை நோக்கி கை காட்டினாள்.
அவள் புரிந்து கொண்டதில் மென்னகை புரிந்தவன், “அப்போ அப்டியே பேபியை கூட்டிட்டு பீச்க்கு போயிட்டு வரலாமா மைலி?” எனக் கேட்டான் ஆர்வமாக.
மைதிலி முறைத்ததில், “மகி பேபிக்காக தான் மைதிலி. வைஃப் ப்ராமிஸ்” என்று அவன் தலையில் கை வைத்து சத்தியம் செய்தவன், “நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுட்டு குட்டித் தூக்கம் போட்டுட்டு வரேன். நம்ம ஈவ்னிங் ஃபன் பண்ணலாம்… டீல்” என அவனாக பேசி கட்டை விரலைத் தூக்கி காண்பித்து விட்டு அவள் பதில் சொல்லும் முன்னே, காற்றிலேயே முத்தத்தை பறக்கவிட்டபடி துள்ளலுடன் வெளியில் சென்றான்.
“இவனை…” எனப் பல்லைக்கடித்தவளுக்கு தெரியவில்லை, இதெல்லாம் வெறும் ஆரம்பம் தானென்று!
உயிர் வளரும்
மேகா