Loading

பட்டு வேஷ்டி சட்டையில் பிரஷாந்த் மணமகனுக்கே உரித்தான ஆளுமையில் மிளிர, மகிழினி பாவாடை சட்டையும் இரட்டைக் குடுமியுமாக பிரஷாந்தின் நிழலாக அவன் கூடவே இருந்தாள்.

“அங்கிள் உங்களுக்கு இந்த ட்ரெஸ் சூப்பரா இருக்கு…” மணமகன் அறையில் நாற்காலியில் அமர்ந்து காலை ஆட்டியபடி அவள் கூற, கண்ணாடியில் மீசையை சரி செய்து கொண்டிருந்தவன், “ரியலி. உன் அம்மாவுக்கு என்னை இப்படி பார்த்தா பிடிக்குமா பேபி?” எனக் கேட்டான் ஆர்வத்துடன்.

“உங்களைப் பிடிக்கலைன்னு சொல்லுவாங்களா. நீங்க ரொம்ப ஸ்வீட்ல அங்கிள்” என்று விரலைக் குவித்துக் கொஞ்சியவள், “அங்கிள், இனிமே நீங்க எங்க கூட தான இருப்பீங்க…” என்ற சிறுமியின் குரலில் கலவரம் தெரிந்ததோ என்னவோ,

“ஆமா பேபி… இனிமே உன் கூட தான் தூங்குவேன், உன் கூட தான் சாப்பிடுவேன், உன்னை ஸ்கூல்ல டிராப் பண்ணுவேன், லன்ச் டிபன் கூட செஞ்சுத் தருவேன் மகி பேபி…” என்றவன் அவள் முன் தரையில் முட்டி இட்டு அமர்ந்தான்.

“ஹை… அப்போ ஸ்கூல் விட்டு வந்ததும், என்கூட விளையாடுவீங்களா?” அச்சிறு இதயத்தினுள் அத்தனை ஆசைகள்.

அவள் கன்னத்தைக் கிள்ளிய பிரஷாந்த், “உன் கூட நிழலாவே இருப்பேன் பேபி. உன் அம்மா மாதிரி உன் கூடவே இருப்பேன். ஓகே வா?” என்று புன்னகைத்தவனிடம்,

“என் அம்மா மாதிரி இருங்க. ஆனா அவங்கள மாதிரியே நீங்களும் இருக்க வேணாம் அங்கிள்” என்றவளின் கூற்றில் பிரஷாந்த் புருவம் சுருக்கினான்.

“அம்மா எப்ப பார்த்தாலும் உர்ருன்னே இருப்பாங்க. என்கிட்ட மட்டும் தான் லைட்டா சிரிப்பாங்க. என்னை வெளில கூட்டிட்டுப் போனாலும், என்னை விளையாட விட்டுட்டு தனியா இருப்பாங்க. மல்லி பாட்டி தான் என்கூட விளையாடுவாங்க.” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே, தேவஸ்மிதா உள்ளே நுழைந்தாள்.

“டேய் அங்க அய்யர் மந்திரத்தை மறக்குறதுக்குள்ள மணமேடைக்கு வருவன்னு பார்த்தா இப்போ என்னடா சாவகாசமா பேசிட்டு இருக்க…”

“மகிக்குட்டி நம்ம வெளில போகலாம் வாங்க” என அவளைத் தூக்கியவள், “உன் ஆளு மனசு மாறுறதுக்குள்ள வந்து சேருடா” என்று கிசுகிசுப்புடன் மிரட்டி விட்டு சென்றாள்.

பிரஷாந்திற்கு தேவா பேசியது எதுவும் கருத்தில் பதியவில்லை. மகிழினியின் வார்த்தைகள் மட்டுமே தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

அவனும் மைதிலியைக் கவனித்து இருக்கிறான். மகிழினியின் மீது உயிராக இருப்பாள் தான் அதை மறுப்பதற்கு இல்லை. ஆனாலும், அவளிடம் கூட விறைப்பாகவே இருப்பாள். அவளிடம் நெகிழ்ந்து அவன் பார்த்ததில்லை. இப்போதும் சிறு குழந்தை பேசுவதை பெரியதாக எடுத்துக் கொள்வது மடத்தனம் எனப் புரிய, அதனை ஒதுக்கி விட்டு மணமேடை வந்து சேர்ந்தான்.

மகிழினியைத் தூக்கி வந்த தேவஸ்மிதாவை சைட் அடிப்பது ஒன்றே தனது தலையாய வேலையாக பார்த்துக் கொண்டிருந்தான் அமர மகரந்தன்.

“ஹெலோ மிஸ்டர் அமர காவியம், உங்க சைட்டிங்கை ஸ்டாப் பண்ணிட்டு இவளைப் பிடிங்க. நான் மைதிலி ரெடியான்னு பார்த்துட்டு வரேன்” என்று மகிழினியைக் கொடுக்க, அவள் கையைப் பிடித்தவன், “நீ தான் கல்யாண பொண்ணு மாதிரி ரெடியாகி இருக்க. நம்ம வேணும்னா ஒன்ஸ்மோர் கல்யாணம் பண்ணிக்கலாமா?” எனக் கண் சிமிட்டிக் கேட்டான்.

“ஒரு தடவை கல்யாணம் பண்றதுக்குள்ளயே பெரும் பாடு. இதுல இன்னொரு தடவை வேற…” என்று அவன் கன்னத்தில் குத்தி விட்டு சென்றாள். ஆனால் இதழ்கள் மலர்ந்தபடியே இருந்தது.

தரமங்கலத்தில், அவர்களின் குலதெய்வக் கோவிலில் தான் பிரஷாந்த் மைதிலி திருமணம் ஏற்பாடாகி இருந்தது. குடும்பத்தினர் அனைவர்க்கும் அத்தனை மகிழ்ச்சி. மகேஷிற்கு மீண்டும் தங்கைக்கு மண வாழ்வு அமைவதில் மனதுக்கு நிறைவாக இருந்தது.

மைதிலியிடம் அவளது முதல் மண வாழ்வைப் பற்றி வாய்விட்டே கேட்டு விட்டான்.

“ஆர்மி ஆபிசர் சாராயம் குடிச்சா செத்துருப்பாரு. ஒரு டெரரிஸ்ட் அட்டாக்ல இறந்துட்டாரு.” என்றதோடு அவள் முடித்துக் கொள்ள, அவனும் அதன்பிறகு துருவவில்லை. இப்போதும் அவளுக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம் கிடையாது என்பது தெரியும் தான். ஆனாலும் பிரஷாந்த் அவளை மாற்றி விடுவானென ஆணித்தரமாக நம்பினான்.

தீக்ஷா அழுது கொண்டே இருந்ததில், தயாவும் மிருணாளினியும் கோவில் வாசலில் வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தனர்.

“தயா நீ போய் அண்ணாவை ரெடி பண்ணு. நான் பாப்பாவை வச்சுருக்கேன். இன்னைக்குன்னு ரொம்ப படுத்துறா” என்றவளின் நெற்றியில் அரும்பாக வியர்வைத் துளிகள் உதயமாகி இருக்க, கர்சீப் கொண்டு அதனைத் துடைத்து விட்டவன், “பாவம் திடீர்னு இடம் மாறுனது பாப்பாவுக்கு செட் ஆகலை போல. கல்யாணம் முடியவும் கிளம்பிடலாம் மிரு. அழுது அழுது சோர்ந்து போய்ட்டா” என்று மகளை எண்ணி வருத்தப்பட்டான்.

அவர்களிடம் வந்த சிந்தியா, “குழந்தைங்கன்னா அப்படி தான் மாப்பிள்ளை. நீங்க ரெண்டு பேரும் உள்ள இருங்க. நான் வச்சுருக்கேன். இப்ப தான் அழுகையை கொஞ்சம் நிறுத்திட்டாள்ல…” என்றதும், அவரிடம் குழந்தையை கொடுத்து விட்டு இருவரும் உள்ளே வர, அப்போது தான் பிரஷாந்த் யோசனையுடன் மணவறையில் வந்தமர்ந்தான்.

மகிழினி அவனைக் கண்டதும் அமரிடம், “மாமா நானும் பிரஷாந்த் அங்கிள் கூட உட்காரவா?” என கேட்க, “ஓகேடா” என்று இறக்கி விட்டதும், அமரின் தந்தை நெறிவாணன் “இன்னும் என்னம்மா அங்கிள்னு கூப்புடுற. அப்பான்னு கூப்டு” என்றார்.

அதற்கு மகிழினி திருதிருவென விழித்து நிற்க, அமர் தான் “விடுங்கப்பா உடனே எல்லாம் மாறாதுல” என்றதும், மகிழினியே “நான் அங்கிளை அப்பான்னு கூப்பிடவான்னு அம்மாகிட்ட கேட்டேனா, அம்மா நோ சொல்லிட்டாங்க மாமா…” என மழலைக் கொஞ்ச சோகத்துடன் கூறியதில் அங்கு அய்யரின் மந்திர சத்தத்தைத் தவிர மற்றவர்கள் கடும் மௌனத்தினுள் புகுந்தனர்.

பிரஷாந்த் இதனை எதிர்பார்த்தான். “மகி பேபி இங்க வந்து உட்காந்துக்கோங்க. அப்போ தான் ரெண்டு பேரும் நிறைய போட்டோ எடுக்க முடியும்” என்று அழைத்து அருகில் வைத்துக் கொள்ள, அவனையே பரிதாபத்துடன் பார்த்த தயாவைக் கண்டு, “போட்டோகிராஃபர்ஸ் எங்கடா? இன்னுமா கோவிலச் சுத்தி போட்டோ எடுத்துட்டு இருக்காங்க. சீக்கிரம் வரச் சொல்லு” என்றான் இயல்பாக.

அமர் அவனை ஆழ்ந்து பார்த்து விட்டு, “மாலை பூச்செண்டுலாம் எங்கடா?” எனக் கேட்க, அதன் பிறகே அதையெல்லாம் போட்டுக்கொள்ளாமல் வந்ததையே உணர்ந்தான்.

“மறந்துட்டேன்…” அசடு வழிந்து கூறியவன் விழிகளை வேறு புறம் திருப்பிக்கொண்டான்.

அவனது வலி புரிந்தது. ஆனால், இது அவனாக ஏற்றுக்கொண்ட வாழ்வு. அதன் மூலம் வரும் வலிகளையும் அவன் கடந்தே ஆக வேண்டும்.

அமர் தயாவிற்கு கண்ணைக் காட்ட, ‘மாலை கூட போட்டுக்காம வந்துட்டான் கல்யாணம் பண்ண…’ என முணுமுணுத்தபடி மாலையையும் அவனே அணிந்து விட்டு, பூச்செண்டைக் கையில் கொடுத்தான்.

“என்ன அங்கிள் இது?” என்று மகிழினி கேட்டதில்,

“இதுவா… உங்க அம்மா கோபமா அடிக்க வரும் போது இதை வச்சு தான் தடுக்கப் போறேன்” என்று போர் வீரன் போல பாவனை செய்ய, குலுங்கி சிரித்த மகிழினி, “அச்சோ அம்மா அடிக்கலாம் மாட்டாங்க அங்கிள். அப்படி அடிக்க வந்தா நான் காப்பாத்துறேன்” என்று ஆர்ம்ஸை தூக்கிக் காட்டியதில் இப்போது பிரஷாந்த் வாய் விட்டு சிரித்தான்.

இவர்களின் சிரிப்பிற்கு காரணமான மைதிலியோ மணமகள் அறையில் இறுகிய தேகத்துடன் அமர்ந்திருந்தாள்.

“மைதிலி… கொஞ்சம் சிரியேன்” திவ்யஸ்ரீ அலங்காரம் செய்து முடித்து விட்டு கேட்க,

பார்வையைத் திருப்பி விழிகளில் நெருப்பைக் கக்கினாள் மைதிலி.

அதில் எச்சிலை விழுங்கியவள், “சரி சரி சிரிக்காத லிப்ஸ்டிக் அழிஞ்சுடும்.”

‘அவ்வ் ஒரு சொர்ணாக்கா நாத்தனார்க்கிட்ட என்னை மாட்டி விட்டுட்டானுங்களே…’ என்று உதட்டைப் பிதுக்கியபடி வெளியில் செல்ல எத்தனிக்கும் போது தேவஸ்மிதா வந்து விட்டாள்.

“தெய்வ தங்கையே… நீ இவளுக்கு ஃபைனல் டச் குடுத்து கூட்டிட்டு வா. நான் போய் என் மகனைப் பார்க்குறேன்” என்று ஓடிவிட, அவளைக் குழப்பத்துடன் பார்த்த தேவஸ்மிதா, “அத்தை மகள் ரத்தினமே… கொஞ்சம் முகத்தை நார்மலாவாவது வைங்களேன். வெளியாளுங்க பார்த்தா என்னமோ உன்னைக் கடத்தி கல்யாணம் பண்றதா நினைச்சுப்பாங்க” என்று கிண்டல் செய்திட, மைதிலியின் விழிகளில் இருந்த நெருப்பு அடங்கவே இல்லை.

“கல்யாணத்துக்கு அன்னைக்கு கண்ணுல வில்அம்பு விடுவன்னு பார்த்தா நீ என்னடி தீக்கங்கு விட்டுட்டு இருக்க…” என்றவளை “வெளில போறியா. போய் உன் புருஷன் அடுத்து எனக்கு ஆப்பு வைக்க எதுவும் யோசிக்காம ஸ்டாப் பண்ணு” என்று எரிந்து விழுக,

“ரொம்பத்தான்…” என சிலுப்பி விட்டு சென்றாள் தேவஸ்மிதா.

கண்ணாடியில் வெகு நேரமாக தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். மைதீட்டிய விழிகளில் நீர் நிறைந்து நின்றது. இதழ்களில் வெற்று முறுவல்.

தரமங்கலத்திற்கு வரும் வரை கூட அவளுக்கு இந்த கல்யாண ஏற்பாடு பற்றி தெரியாது. ஒரு நாளில் கிளம்புவதாக இருந்தவர்கள், மேலும் இரு நாட்கள் அங்கேயே இருந்து அவளையும் இருக்க வைத்து விட்டனர். “வந்தது வந்துட்டோம் குல தெய்வம் கோவில்லயே உன் கல்யாணத்தை வச்சுக்கலாமே” என்று மகேஷ் ஆசையாகக் கேட்டதில், மெல்ல அதிர்ந்தாள்.

“என்னவோ இங்க நம்ம அம்மாவோட ஆன்மா நம்மளை சுத்தி வர்ற மாதிரியே ஒரு பீல் மைதிலி. இங்கயே உனக்கு ஒரு நல்ல காரியத்தை செய்யணும்னு தோணுது. ஓகே வா?” எனக் கேட்ட தமையனிடம் மறுக்கவில்லை. மறுத்தும் பிரயோஜனமில்லையே.

மகேஷின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த தேவஸ்மிதா தான், “மகரா… இவன் என்ன ஆன்மா ஆவின்னு பேசிட்டு இருக்கான். இவன் பேச்சைக் கேட்டு பகைல செத்துப்போன எல்லாரும் திரும்ப வந்துடப் போறாங்க. யோவ் மாம்ஸ்… உன் சென்டிமென்ட் அளவை கொஞ்சம் கம்மி பண்ணுயா” என நெஞ்சைப் பிடிக்க, அமர் வாயைப் பொத்தி சிரித்தான்.

தரமங்கலத்தில் இருக்கும் அன்பரசு தாத்தாவின் வீட்டில் தான் அனைவருமே தங்கி இருந்தனர். அன்பரசுவிற்கும் உறவினர்களுடன் இருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

உடனடியாக இருவருக்கும் திருமண ஏற்பாடு நடைபெற, முந்தைய நாள் மீண்டும் பிரஷாந்தை சந்தித்துப் பேசினாள் மைதிலி.

அவள் முகமே உணர்வற்று இருக்க, மொட்டைமாடி சுவற்றைப் பற்றி நின்றிருந்தவள், கலைந்து போன மேகக்கூட்டத்தைப் பார்த்தபடி, “இங்க பாருங்க பிரஷாந்த், மறுபடியும் சொல்றேன்… நமக்குள்ள எந்த பாண்டும் இருக்கக் கூடாது. எந்த ரிலேஷன்ஷிப் சென்டிமென்ட்டும் இருக்கக் கூடாது. கடைசி வரைக்கும்!” என்றாள் திட்டவட்டமாக.

பிரஷாந்த் அழுத்த நடையுடன் அவள் அருகில் வந்து, “லுக் மைதிலி. உன்னை எந்த விதத்திலும் நான் தொந்தரவு பண்ண மாட்டேன். என்னைக் காதலிக்கனும், என் காதலை ஏத்துக்கணும்னு நான் எப்பவும் எதிர்பார்க்க மாட்டேன். உன்மேல உரிமை எடுத்துக்க கூடாதுன்னு சொல்ல உனக்கு உரிமை இருக்கு. ஆனா” என்று நிறுத்த, சுருங்கிய புருவத்துடன் மேகத்தை விடுத்து அவனைப் பார்த்தாள்.

அவன் கண்களில் நிறைந்து நின்றது நேசம். “இது என்னோட காதல் மைதிலி. இதை நான் எக்ஸ்போஸ் பண்றதுக்கோ, என்னைக் காதலிக்கக் கூடாதுன்னு தடை போடுறதுக்கோ உனக்கு எந்த உரிமையும் இல்லை. என் காதலை நீ தடுக்கக் கூடாது…” என்று தீர்மானத்துடன் கூறியதில் அவள் குழம்பினாள்.

“என்னை டிஸ்டர்ப் பண்ணாதவரை… ஐ டோன்ட் கேர்” என்று தோளைக் குலுக்கிக் கொண்டாலும் எதுவோ உறுத்தியது.

திருமணத்தைப் பற்றி பேசும் போதெல்லாம் அவன் பெரியதாக அவளை ஒப்புக்கொள்ள வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அமரை வைத்தே காய் நகர்த்தினான். இப்போதும் ஒரு வித அமைதி அவனுள் குடி கொண்டிருக்க, நேரம் வருவதற்காக காத்திருப்பது போன்றே இருக்கிறது அவனது செயல்பாடுகள் அனைத்தும்.

அவனை அவள் ஆராய்ச்சியாய் ஆராய, அவனோ அங்குல அங்குலமாய் ரசித்தான்.

“உன்னை பிசிக்கலி எந்த விதத்திலும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்…” இப்போதும் அவனது திண்ணமான பேச்சு உறுத்தவே செய்தது.

“மைதிலி… அய்யர் கூப்புடுறாரு வாம்மா” துர்கா மைதிலியை அழைக்க, நினைவு கலைந்து இயந்திரத்தன்மையுடன் மணவறைக்குச் சென்றாள்.

தாயைக் கண்டதும், மகிழினி வேகமாக அவளருகில் சென்று, “ம்மா சேரி கலர் உங்களுக்கு சூப்பரா இருக்கு…” என்று அவள் மேனியுடன் இழைந்து தகதகத்த கோல்டன் நிற பட்டுப்புடவையை பாராட்ட,

மகளுக்காக வலிய வரவழைத்த புன்னகையுடன் பிரஷாந்தின் அருகில் அமர்ந்தாள்.

அமரும் போதும் அவனை காட்டத்துடன் பார்ப்பதை தவிர்க்கவில்லை.

அதனை ரசனைப் பார்வையில் ஓரங்கட்டிய பிரஷாந்த், “லுக்கிங் குட்!” என்றான் உதட்டுக்குள் புன்னகைத்தபடி.

“நான் கேட்டேனா?” அடிக்குரலில் அவள் பல்லைக் கடிக்க, “சொல்றது என் கடமை மைலி…” எனக் குறும்பு நகை புரிந்தவனை முறைத்தாள்.

மகிழினி மீண்டும் இருவருக்கும் நடுவில் வந்து நின்றதும், முகத்தை மாற்றிக் கொண்டவள், மகளை தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.

பிரஷாந்த் அவள் மீதிருந்த பார்வையை திருப்பாமலேயே மாங்கல்யத்தை அணிவிக்க, மகிழினியை இறுக்கிப் பிடித்தாள். கத்தி அழத் தோன்றியது. ஆனால், கண்ணீர் சிந்தப் பிரியமில்லை.

மானசீகமாக கடவுளிடம் மன்றாடினாள். “நான் எனக்குத் துணையைக் கேட்கும் போது தனிமையைக் கொடுத்த, இப்போ வாழ்நாள் முழுக்க தனிமையைக் கேட்குறேன். இப்போ துணையா ஒரு கூட்டத்தையே குடுத்ததோட இல்லாம, கூடவே ஒரு தார்னி டெவிலையும் (thorny devil) குடுத்து இருக்கியே. இது நியாயமா?”

கடமைக்கென சம்பிரதாயங்களை முடித்தவளிடம், “போட்டோ எடுத்துப்போமா” எனப் பிரஷாந்த் கேட்டான்.

மைதிலி அதற்கு பதில் கூறாமல், திவ்யஸ்ரீயிடம் மகிழினிக்கு உணவு கொடுக்க சொல்லிட, அவளுக்கும் பசித்ததில் திவ்யஸ்ரீயுடன் வெளியில் சென்றாள்.

“ரைட்டு…” எனப் பிரஷாந்த் அலெர்ட் ஆகும் போதே, “பார்மாலிட்டீஸ் முடிஞ்சுதுல…” என்று உறுமியவள் மாலையைக் கழற்றி தூக்கி வீசினாள்.

திரும்பி அமரை தீப்பார்வை வீசியவள், “இப்ப நிம்மதியா உனக்கு?” என்று சீறிட, “வெகு நிம்மதி” என்றான் கண்ணை மூடி.

தயாவும் தேவாவும் கேலியாய் சிரித்ததில் அவர்களையும் முறைத்து வைத்தவள், மீண்டும் பிரஷாந்தைக் கடுமையுடன் பார்க்க, அவனோ கையைக் கட்டிக்கொண்டு சாவகாசமாக ‘அடுத்து என்ன செய்யப் போற?’ என்ற ரீதியில் நக்கல் நகை புரிந்தான்.

அது அவளை அதிகம் கோபப்படுத்தினாலும் ஒன்றும் செய்ய இயலா நிலை. தலையில் சூடி இருந்த மல்லிகைப் பூவை பிய்த்து நெருப்பில் கிடாசி விட்டு விறுவிறுவென அறை நோக்கி நடந்தவள், போகும் போதே வளையல்களையும் ஆத்திரத்துடன் கழற்றி வீசி எறிந்தாள்.

அவளது நடவடிக்கையில் குடும்பத்தார் அதிர்ச்சியடைய, பிரஷாந்த் இதழ்களுக்குள் மலர்ந்த புன்னகையுடன், “ஃபைனலி கோபத்தை கண் பார்வைல அடக்காம வெளிக்காட்டிட மைலி. இதே மாதிரி எல்லா உணர்வையும் என்கிட்ட காட்டுவ. காட்ட வைப்பேன்…” என்று சபதமெடுத்துக் கொண்டான்.

உயிர் வளரும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
83
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்