Loading

காலை நேர பரபரப்பு அவ்வீட்டின் மூலை முடுக்கெங்கும் காணப்பட்டது.

பல வருடங்கள் கழித்து தனது சொந்த ஊரான தரமங்கலத்திற்கு செல்லப் போவதாலோ என்னவோ துர்காவின் முகத்தில் ஒரு வித பயமும் மகிழ்வும் கலந்தே இருந்தது. பூபாலனுக்கு ஊருக்குச் செல்லப் பிடிக்கவில்லை என்றாலும் மனையாளின் ஆசையை தவிர்க்க இயலவில்லை.

இத்தனை வருட காதல் வாழ்க்கையில் அவர் விரும்பிக் கேட்டது இது ஒன்றைத்தான்.

இப்போது நிறைவேற்றும் சூழ்நிலை இருக்கும் போது அதை மறுப்பது நியாயமாக இராது.

பூபாலனின் எண்ணம் ஒரு வாரத்திற்கு முந்தைய நிகழ்வினை அசைபோட்டது.

சமையலறை வேலையை முடித்து விட்டு இரவு உறங்க அறைக்குச் சென்றவர், பூபாலன் விழித்திருப்பதைக் கண்டு “என்னங்க இன்னும் தூங்கலையா” எனக் கேட்டார் பரிவாக.

“லேட்டா தான சாப்பிட்டேன். தூக்கம் வரல. என்னம்மா ரொம்ப வேலையா இருக்கா. பேசாம வேலைக்கு ஆள் வச்சுக்கலாமே” என்று அவர் தலையை வருடிக் கேட்க,

“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. திவாவும் மிருவும் சொல்ல சொல்ல கேட்காம பகல்லயும் எனக்கு உதவியா தான் இருக்காங்க. மதி தான் அதிக சேட்டை. மகிக்குட்டியும் இப்போ இங்க வந்துடுறா. வீடே எப்பவும் கலகலப்பா இருக்கு. மனசுக்கு நிறைவா இருக்குப்பா” என்று புன்னகைத்தவர், “இப்போதைக்கு வேலைக்கு ஆள் வைக்கிறது கூட நல்லது தான்னு தோணுது. நானும் குழந்தைங்களை பார்த்துக்க திவாவுக்கும் மிருவுக்கும் உதவியா இருக்கலாம்.” என்றதும்,

“சரிம்மா நாளைக்கே வாட்ச்மேன்கிட்ட விசாரிக்கலாம்” என்றவர்கள் இப்போது வில்லாவிற்கே குடிபெயர்ந்து விட்டனர்.

அபார்ட்மெண்ட்டை வாங்கிக்கடனில் தான் வாங்கி இருந்தனர். அதனை மகேஷும் தயானந்தனும் சேர்ந்து கட்டிக்கொண்டிருந்தனர். இப்போது அதனை விற்று விட்டு அதில் வந்த பணத்துடன் வங்கிக்கடனையும் வாங்கி இருவரும் அமருக்கு கொடுத்து விட, அவன் முறைத்தாலும் மறுக்கவில்லை.

பூபாலனுக்கும் அதன் பிறகே சற்று நிம்மதியாக இருந்தது. இந்த வில்லாவும் கூட அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்க, அபார்ட்மென்ட்டை விட சற்று பெரிய வீடு ஆதலால், வீடை பராமரிப்பது தான் கடினமாக இருந்தது.

துர்கா ஏதோ பேச வருவதும் பின் தயங்குவதுமாக இருப்பதைக் கண்டு, “என்ன துர்கா? எதுவும் சொல்லனுமா?” எனக் கேட்டவரிடம்,

“எனக்கு ஒரு ஆசைங்க…” என்று இழுத்தார்.

அவர் புரியாமல் பார்த்ததும், “அது வந்துப்பா… நம்ம பசங்க பிறக்கும் போதே தோணுச்சு… நம்ம குலதெய்வம் கோவில்ல போய் அவங்களுக்கு மொட்டை போட்டு பொங்கல் வச்சு கும்பிட்டுட்டு வரணும்னு. ஆனா அது தான் முடியாம போச்சு. நம்ம பேர பசங்களுக்காவது அதை செய்யணும்னு ஆசையா இருக்குப்பா” என்றதில் அவர் யோசனையில் ஆழ்ந்தார்.

“அங்க போனா, உன் அம்மாவும் அண்ணணும்…” என ஆரம்பிக்க, “அவங்க என்ன வேணாலும் பண்ணிட்டுப் போகட்டும். இப்ப தான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சுருச்சே” என்று கெஞ்சலாகப் பார்க்க அதன் பிறகு தரமங்கலத்திற்குச் செல்லும் பணிகள் வேகமாக நடந்தது.

“மீண்டும் மீண்டுமா?” என்று தேவஸ்மிதா நொந்து போனாள்.

தீவிர சிந்தனையுடன் கட்டிலில் அமர்ந்திருந்தவளை விழிகளால் விழுங்கியபடி அவளை நெருங்கி அமர்ந்த அமர மகரந்தன்.

“என்ன மிதுக்குட்டி காலைலயே எந்த கோட்டையைப் பிடிக்கிறதை பத்தி யோசிச்சுட்டு இருக்க ?” எனக் கிண்டலாகக் கேட்க,

“ம்ம்க்கும்… மறுபடியும் தரமங்கலத்துக்கு தரை டிக்கெட் எடுத்து போயே ஆகணுமா மகரா. எங்க அம்மாவுக்கு ஏன் இப்படி சில்லித்தனமான ஆசை எல்லாம் வருது. சொல்றது தான் சொல்றாங்க… ஒரு ஸ்விஸ் போகணும், மொரிஷியஸ் போகணும்ன்னு ஆசைப்படலாம்ல. நம்மளும் ஹனிமூன் செலெப்ரெட் பண்ணுன மாதிரி ஆகியிருக்கும்” என்று கண் சிமிட்ட,

“அதுக்கென்ன இங்கயே செலெப்ரெட் பண்ணலாமே…” என்றான் புருவம் இடுங்க.

“புரியல…” என அவனது முகம் காட்டிய தீவிரத்தில் விழித்தவளைக் கண்டு குறுநகை புரிந்தவன், ஏசியை 18 இல் வைத்து விட்டு, அவளது இடையைப் பிடித்து இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவனது மடியில் விழுந்தாள்.

ஆள்காட்டி விரலால் அவளது நெற்றி முதல் வருடியவனின் ஸ்பரிசத்தை ஆழ்ந்து அனுபவித்தபடி, “ஆபிஸ்க்கு கிளம்பிட்டேன் மகரா…” என்றிட, அவனது விரல் கழுத்தை நோக்கி பயணித்தது.

“இயர் எண்டு… நான் போகணும்” என்னும் போதே அவன் விரல் சென்ற திசையில் விக்கித்தவள், “மகரா லீவ் போட முடியாது” என்னும் போதே குரல் தேய்ந்தது.

அவளை நோக்கி குனிந்தவன், “ஒரு மணி நேரம் பெர்மிஷன் போட்டுக்கலாம் மிது” என மோகம் வழிய கூற,

அமரின் கையை தட்டி விட்டு அவனை வெட்கத்தில் கட்டிக்கொண்டவள், “ஒரு மணி நேரம் போதுமாக்கும்” என்றாள் நாணப் புன்னகையுடன்.

அமருக்கும் புன்னகை எழ, அவள் இதழ்களில் இதழ் பதித்து விலகியவன், “போதாது தான், ஆனா நீ தான் ஆபிஸ் போகணும்ன்னு அடம்பிடிக்கிறயே” என்றதில், “போகணும் தான். ஆனா என்னைத் தூண்டி விட்டுட்டு பாதில அனுப்புனா நியாயமே இல்ல மகரா” என சிணுங்கினாள்.

அச்சிணுங்களில் மோகம் வலுப்பெற பின் அங்கு சிணுங்கல்கள் மட்டுமே ஆட்சி புரிந்தது.

—-

பெட்டியில் துணிகளை அடுக்கிக்கொண்டிருந்த மிருணாளினியைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டான் தயானந்தன்.

அதில் தானாக அவளது இதழ்களில் புன்னகை ஒட்டிக்கொள்ள, “பேக் பண்ணிட்டு இருக்கேன் தயா. தீக்ஷா தூங்கிட்டு இருக்கா. சத்தம் போட்டுடாத.” என்று ஹஸ்கி குரலில் பேசிட, அது அவனது உணர்வுகளை தூண்டி விட்டது.

“தீக்ஷா பாப்பா தூங்குறது நல்லது தான். நம்ம சத்தம் போடாம கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்” என்று அவனும் அவளது செவி மடல்கள் சிவக்க ஹஸ்கி குரலில் பேச, நாணத்தில் குளித்தவள், “ஐயோ தயா இன்னும் அரை மணி நேரத்துல எந்திரிச்சுடுவா” என்று மிருணாளினி பதறியதில்,
“அது போதுமே எனக்கு” என்றான் சில்மிஷமாக.

“ப்ளீஸ் ப்ளீஸ்” என்று மனையாளைக் கரைய வைத்து அவளை நெருங்க முற்படும் நேரம், திவ்யஸ்ரீயின் புதல்வன் மதியுகனின் அழுகைச் சத்தம் கேட்டு அவர்களது மகள் எழுந்து விட, “அட துரோகி” என்று திவ்யஸ்ரீயை மனதினுள் வறுத்துக் கொண்டான்.

மிருணாளினிக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தாலும் சிரிப்பும் பீறிட்டது.

“நான் தான் சொன்னேன்ல வேணாம்ன்னு…” என்று கடிந்தவள், குழந்தையைத் தூக்கிக்கொண்டு கீழே சென்று மீண்டும் ஐந்து நிமிடத்தில் வந்தாள்.

“பாப்பாவை அத்தை வச்சுருக்காங்க… அரை மணி நேரத்துல வந்துடுறேன்னு சொல்லிருக்கேன்” என்று துப்பட்டாவின் நுனியை திருகியபடி உரைக்க, “கள்ளி” என அவளது கன்னம் கிள்ளியவன் கிடைத்த தனிமையை அவனுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான்.

இரு ஜோடிகளும் இல்லற வாழ்வில் மூழ்கிப் போயிருக்க, தனது அலுவலகத்தில் கேஸ் ஃபைலில் மூழ்கி இருந்த மைதிலிக்கு கவனம் அதில் இல்லை.

அமரின் ரிசப்ஷனின் போது நிகழ்ந்த நிகழ்வே மனதினுள் ஓடிக்கொண்டே இருந்தது. அமர் தேவஸ்மிதா ரிசப்ஷன் முடிந்து இரு வாரங்களும் கடந்து விட்டது. ஆனால் அவளால் தான் எதையும் கடந்து விட இயலவில்லை.

கடக்க இயலா கடந்த காலமும் ஒரு காரணம் தான்!

திருமணத்திற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே அமரும் அவளிடம் பேசுவதாகக் கூறிவிட, தலையைப் பிய்த்துக்கொள்ளத்தான் தோன்றியது.

இவை அனைத்திற்கும் மேல் பிரஷாந்த்! அவனுடனான உரையாடலை எண்ணி இன்னும் குழம்பிப் போனாள்.

ஒரு வாரம் முன்பு, அவளைப் பார்க்க அலுவலகத்திற்கு வந்திருந்தான் பிரஷாந்த்.

அவனைக் கண்டதும் லேசாய் திகைத்தவளுக்கு சற்று சங்கடமாகவும் இருந்தது.

அவனோ இயல்பாக அவளை ஏறிட்டபடி அவளுக்கு எதிரில் அமர, “சொல்லுங்க பிரஷாந்த். என்ன திடீர்னு?” என்ற மைதிலியிடம்,

“நான் துபாய் போறேன் மைதிலி. உங்கிட்ட சொல்லாம போனா நல்லா இருக்காதே. அதான் வந்தேன்” என்றவனின் பார்வையில் தெரிந்த சிறு ரசிப்பு அவளுக்கு ரசிக்கவில்லை.

“ஓ! நல்லது தான் நீங்க திரும்ப பாரீன் போறதும். அப்போ தான் அமர் உளறுறதை நிறுத்துவான்” என்றவள் சற்றே இலகுவாக,

பிரஷாந்தின் இதழ்கள் புன்னகைத்தது.

“நான் சொல்லிட்டுப் போக மட்டும் வரல. உன்னையும் கூட்டிட்டுப் போகவான்னு கேட்க வந்தேன்” என்று பெரும் இடியை இறக்க,

“வாட்?” என அதிர்ந்தாள்.

“எஸ். நீ துபாய் வர்றதுக்கு ஓகேன்னா விசா ரெடி பண்ணிட்டு வரேன். இல்லன்னா, மொத்தமா அங்க வேலையை விட்டுட்டு இங்கயே வந்துடுறேன். மேரேஜ்க்கு அப்பறம் எங்க இருக்கணும்னு நினைக்கிறியோ அங்கேயே இருக்கலாம்” என்று அவன் பேசிக்கொண்டே செல்ல, அவள் விருட்டென எழுந்தாள்.

“நான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னதா எனக்கு ஞாபகம் இல்ல பிரஷாந்த்” மைதிலி கண்டனத்துடன் கூற,

“நீ இன்னும் நோவும் சொல்லல மைதிலி” என்றான் கேலியாக.

“சிட்… உட்கார்ந்து பேசலாம் மைதிலி. சிட்!” இம்முறை அழுத்தமாக வந்த வார்த்தையில் தானாக அமர்ந்து விட்டாள்.

கீழுதட்டைக் கடித்தபடி கழுத்தை தேய்த்துக் கொண்ட பிரஷாந்த், பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு, “நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன் மைதிலி” என்றபோது அவள் தடுத்து விட்டாள்.

“வேணாம் பிரஷாந்த். அமர் தான் ஏதோ உளறுறான்னா நீங்களும் அதுக்கு ஆமா சாமி போடாதீங்க. நான் ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணு. மோர் ஓவர் எனக்கு மறுபடியும் மேரேஜ் பண்ணி, லைஃபை லீட் பண்ணனும்னு ஆசை ஒரு துளி கூட கிடையாது. என்னால மகி சபர் ஆகக் கூடாதுன்னு தான், ஒரு பேமிலி செட் அப் உருவாக்க மேரேஜ் பண்ணனும்னு நினைச்சேன். அதுவும் என் பெண்ணுக்காக மட்டும் தான்.

மத்தவங்க செஞ்ச சதியால, என் வாழ்க்கையில பாதி நாள் எனக்கான குடும்பத்தோட அமைப்பை தொலைச்சுட்டு யார் வீட்லயோ ஒட்டிட்டு தான் இருந்துருக்கேன். என் பொண்ணுக்கு எல்லாரோட அன்பும் வேணும். அந்த ஒரு காரணத்துக்காக மனசை கல்லாக்கிக்கிட்டு தான் அலையன்ஸ் பார்த்தேன். ஆனா இப்போ மகிக்கு அவள் கூட எல்லாரும் இருக்காங்க. சித்தி சித்தப்பா அத்தை மாமா தாத்தா பாட்டினு அவள் ரொம்ப எங்கேஜிங்கா இருக்கா. அதுக்கு அப்பறம் இந்த முடிவை கைவிடலாம்னு கூட யோசிச்சு வச்சுட்டேன் பிரஷாந்த். திரும்பவும் அமர் தான் ஸ்டார்ட் பண்ணி விடுறான்” என்று தலையில் கை வைத்தாள்.

“மகிக்கு எல்லா உறவும் இருக்கு மைதிலி. ஆனா எல்லா உறவை விட அப்பான்ற உறவை யாராலும் நிரப்ப முடியாது. ஆமா அவளுக்கு எல்லாருமே இருக்காங்க. ஒரு கட்டத்துல எல்லாருக்கும் ஒரு குடும்ப அமைப்பு வந்துடும். ஆனா அப்ப மகி எல்லாருக்கும் பொதுவான செல்லப்பொண்ணா இருப்பா. அவளுக்குன்னு ஒரு குடும்பம் அவளுக்குன்னு ஒரு ஸ்பேஸ், அவளுக்குன்னு ஒரு என்விரான்மெண்ட். இதெல்லாம் நீ தருவ. இல்லன்னு சொல்லல. ஆனா மனசு என்னைக்கும் இல்லாத விஷயத்துக்கு தான ஏங்கும். அந்த ஏக்கம் மகிக்கு வரணுமா மைதிலி?” நிதானத்துடன் வினவினான்.

விலுக்கென நிமிர்ந்தவள், “அது வரவேணாம்னு தான் ஆல்ரெடி மேரேஜ் ஆகி கிட் இருக்குற பெர்சனை மேரேஜ் பண்ணிக்க நினைச்சேன். இப்பவும் என் முடிவு அது தான் பிரஷாந்த்” என்றாள் உறுதியாக.

“அதுக்கு என்ன… எனக்கும் ஆல்ரெடி கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கே” என காலரைத் தூக்கி விட்டுக்கொண்டான்.

கண்ணை சுருக்கி முறைத்தவள், “தேவா மாதிரி ரீல் விடுறதை முதல்ல நிறுத்துங்க.” என்றிட,

“ஏன் ஏன் அவள் விட்ட ரீல்னால இப்போ ஒரு லவபிள் லைஃப் தான அமருக்கு கிடைச்சு இருக்கு. காதலுக்காக எத்தனை பொய் வேணாலும் சொல்லலாம் மைதிலி” என அவன் ரசனையுடன் பார்க்க,

மைதிலியின் விழிகள் ஒரு வித வெறுமையை சுமந்திருந்தது.

“அவள் சொன்ன பொய்யால அவங்க லைஃப் கலர்புல்லா மாறிருக்கலாம். ஆனா எல்லா பொய்யும் வாழ்க்கையை நல்லவிதமா மாத்தும்னு கேரண்டி இல்ல பிரஷாந்த். அதுவும் காதலுன்ற பேர்ல சொல்ற பொய்யால மனசு ஒன்னும் குளிரப் போறது இல்ல” சொல்லும் போதே அவள் குரல் உடைந்திருந்தது.

பிரஷாந்த் யோசனையுடன் அவளை பார்த்திட, சடுதியில் தன் கம்பீரத்தை மீட்டுக்கொண்டவள், “நீங்களே அமர்கிட்ட என்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிடுங்க பிரஷாந்த்” என்றாள் தீர்மானமாக.

“அதெப்படி சொல்ல முடியும். அவன்கிட்ட அந்த ஐடியாவைக் கொடுத்ததே நான் தான. நான் விரும்புற பொண்ணை என்னால விட்டுக்கொடுக்க முடியாது சாரி…” என்றவனை விழி அதிரப் பார்த்தாள் மைதிலி.

சற்றே தடுமாறியவள், “விளையாடாதீங்க பிரஷாந்த்” என்று கண்டிக்க,

“இன்னும் நாலு மணி நேரத்துல எனக்கு பிளைட் மைதிலி. இந்த நேரத்தில உன் கூட விளையாடுற அளவு எனக்குப் பொறுமையும் இல்ல நேரமும் இல்ல. எஸ், எனக்கு உன்னைப் பிடிச்சு இருக்கு. ஏன் பிடிச்சு இருக்குன்னு கேட்டு, என்னை வாயடைக்க வைக்காத. எனக்கே அதுக்கு ரீசன் தெரியாது. பிடித்ததுக்கு காரணம் தேவை இல்லை தான?” வசீகரப்புன்னகையுடன் தலை சரித்துக் கேட்டான் பிரஷாந்த்.

அவள் சலனமற்றுப் பார்த்ததில், “உன்னை மட்டும் இல்ல மைதிலி. மகியையும் எனக்கு அவ்ளோ பிடிக்கும். நான் அவளுக்கு அப்பாவா இருக்க ஆசைப்படுறேன். உனக்குப் புருஷனா இருக்கவும் தான்…” எனும்போதே அவள் மறுப்பாகத் தலையசைத்தாள்.

“என் லைஃப்ல ஆல்ரெடி லவ் பார்ட் ஸ்டார்ட் ஆகி முடிஞ்சு போச்சு பிரஷாந்த்…” கடுமையான அக்குரலில் பொதிந்திருந்த வலி அவனுக்குள்ளும் ஊடுருவியது. அவளது கடந்த காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவல் தான். அதற்கு அவள் வாயைத் திறக்க வேண்டுமே.

“எனக்கு தெரியும். உனக்கு மேரேஜ் லைஃப்ல இன்டரஸ்ட் இல்லைன்னு. சோ வாட், நம்ம ப்ரெண்ட்ஸாவே இருக்கலாம் மைதிலி. நீ என்னைக் காதலிக்கனும், என் கூட வாழ்ந்தே ஆகணும்னு உன்னை எப்பவும் போர்ஸ் பண்ண மாட்டேன். ஐ ஜஸ்ட் நீட் யூ அண்ட் மகி இன் மை லைஃப் பாரெவர்.”

“எனஃப் பிரஷாந்த். இதுக்கு மேல இந்த லூஸ் டாக்கை கேட்க எனக்குப் பொறுமை இல்லை. ஜஸ்ட் கெட் அவுட்” என்றவளின் வார்த்தைகளில் அனல் தெறிக்க, அவன் முகம் கன்றியது.

இருக்கையில் இருந்து எழுந்தபடி, “ஓகே பைன். அப்போ அமர்கிட்ட சொல்லி நீயே இந்த கல்யாணத்தை நிறுத்திடு. இன்னும் ஒரு வாரத்துல நான் விசா கேன்சல் பண்ணிட்டு வந்துடுறேன். அதுக்குள்ள இந்தக் கல்யாணப் பேச்சை நிறுத்துறது உன் சாமர்த்தியம். பை மைலி…” என இறுதி வரியில் ரசனைப்புன்னகைப் பூத்து விட்டு அவன் விடைபெற, தொப்பென டேபிளில் தலையை புதைத்துக் கொண்டாள் மைதிலி.

வெறுமை சூழ்ந்த இதயத்தில் இன்ப அலைகள் என்றுமே சுரக்கப்போவதில்லை என்பதை இவனுக்கு எப்படி புரிய வைப்பது?

உயிர் தொடரும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
79
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்