இன்றோடு பிரஷாந்த் துபாய்க்கு சென்று ஒரு வாரம் ஆகி விட்டது. அடிக்கடி தன்னை தொடர்பு கொண்டு திருமணம் பற்றி பேசுவானோ என எழுந்த ஐயம் அவசியமே இல்லை என்பது போல, அவனிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை.
அது அவளுக்கு ஒரு வித நிம்மதியையும் சேர்த்தே கொடுத்தது. வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்குச் சென்றவளை வாசலிலேயே வரவேற்றார் மல்லிகா. அவளது சித்தி.
“மகி எங்கம்மா?” கேட்டபடி வீட்டினுள் சென்றவளை பின் தொடர்ந்தபடி, “மகேஷ் ஸ்கூல்ல இருந்து அழைச்சுக்குறதா சொன்னான் மைதிலி. இப்போ எல்லாம் அவள் முழுக்க முழுக்க மாமா வீட்ல தான்… நைட்டு அவள் தூங்குனதும் தான் கொண்டு வந்து விடுறான். இதுக்கு நீயும் மகியும் அவங்களோடவே இருக்கலாமே மைதிலி. மகேஷ்க்கு நீ கூட இல்லைன்னு வருத்தமா இருக்கும்ல” என்றார்.
அதற்கு பதில் சொல்லாதவளாக, பேக் செய்யப்பட்ட துணிப்பெட்டிகளைப் பார்த்து, “என்னம்மா இது. தரமங்கலத்துக்கு ஒரு நாள் போறதுக்கா இத்தனை பெட்டியை கட்டி வச்சுருக்கீங்க.” என ஆச்சர்யமாகக் கேட்டாள்.
மல்லிகா புடவை நுனியை திருகியபடி தயக்கத்துடன் அவளைப் பார்த்தார்.
“மைதிலி… நான் தரமங்கலத்துக்கு வரல.” என இழுக்க,
“எனக்கே போறதுல விருப்பம் இல்லம்மா. அத்தை ரொம்ப ஆசைப்பட்டதுனால வரேன்னு ஒத்துக்கிட்டேன். சரி ஊருக்கு வரலைன்னு எதுக்கு எல்லா பெட்டியையும் எடுத்து வெளில வச்சிருக்கீங்க” என்றவளுக்கு இன்னும் புரியவில்லை.
மல்லிகா அவள் கன்னத்தைப் பற்றி, “உங்கிட்ட சொல்லாம முடிவெடுத்தது தப்பு தான் மைதிலி. ஆனாலும், இப்போ உனக்கும் மகிக்கும் உங்களை அக்கறையா பாத்துக்குற குடும்பம் கிடைச்சுடுச்சு. இவ்ளோ வருஷமா உன்கூட இருந்துட்டேன்ல அதான், இப்போ என் பையன் கூட அமெரிக்கால போய் இருக்கலாம்னு தோணுது. அவனும் இங்க நடந்ததை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு, என்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தான். ஒரு மாசத்துக்கு முன்னாடியே விசா டிக்கெட் எல்லாம் ரெடி பண்ணி அனுப்பிட்டான் மைதிலி…” என்றவரை எவ்வித சலனமும் இன்றி பார்த்தாள்.
“எப்போ போகணும்?”
“இன்னைக்கு நைட்டு பிளைட்… உங்கிட்ட எப்படி சொல்லன்னு தெரியாம நாளைத் தள்ளிப் போட்டுக்கிட்டே போய்ட்டேன்.” என்று திணறினார்.
“இதுல என்னமா இருக்கு. இவ்ளோ நாளா எங்களுக்கு ஆறுதலா இருந்ததே பெரிய விஷயம். என்ன இருந்தாலும் அண்ணனுக்கு நீங்க கூட இருக்குற மாதிரி இருக்காதுல. நீங்க போயிட்டு வாங்கமா. எப்போ வருவீங்க?” எனக் கேட்க,
“ரிட்டர்ன் டிக்கெட் எதுவும் போடல மைதிலி…” என்றவரைக் கூர்மையாய் பார்த்தாள்.
“நீ பிரஷாந்த் தம்பியை கல்யாணம் பண்ணிக்கோயேன்” எச்சிலை விழுங்கியபடி மல்லிகா கூற, அவள் இறுகி விட்டாள்.
“நீங்க வர்ற ஐடியால இல்லை போலயே. சரி பரவாயில்லமா. போயிட்டு வாங்க. எனக்கு தனிமை புதுசு இல்லை” என்றதும் கண்ணீர் பொலபொலவென கொட்டியது மல்லிகாவுக்கு.
“கல்யாணம் பண்ணிக்க சொல்ல இவளுக்கு என்ன தகுதி இருக்குன்னு நினைக்கிறியா மைதிலி?” என்றதும் அவள் “ப்ச் ம்மா” என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்.
“நான்… நான்… இதை கேட்க வருஷக்கணக்கா முயற்சி செய்றேன் மைதிலி என்னால முடியல. இப்ப கேட்கவா?” மல்லிகா நீர் தளும்ப கேட்க, அவளிடம் அசைவே இல்லை.
“உன் சித்தப்பாவை மன்னிச்சுட்டியா மைதிலி” என்னும் போதே வெடித்து அழுதார்.
“உலகத்தை விட்டே போனவரு அங்க போயும் தண்டனை அனுபவிப்பாரோன்னு ஒவ்வொரு நாளும் வேதனையா இருக்கு மைதிலி. கூடவே சேர்ந்து நீயும் உன்னை தண்டிச்சுக்கிறியே… இப்போ… இப்போ பிரஷாந்த் தம்பி உன்னை விரும்புதுன்னு தேவா சொன்னா… இந்த வாழ்க்கை உனக்கு நிலைக்கனும் மைதிலி. அப்போ தான் நான் சாகும் போது எனக்கு சாப விமோச்சனம் கிடைக்கும்” என்றவர் கும்பிட்டபடி முகத்தை மறைத்து அழுதார்.
“ஓ! அப்போ என்னை உங்க பொண்ணா நினைச்சு என்கூட நீங்க இருக்கல. பிராய்ச்சித்தம் பண்ண தான் அன்பை காட்டி எல்லாத்தையும் சரி செய்ய என்கூட இருந்தீங்களா… ஏன்மா சாபம் அது இதுன்னு பேசி என்னைக் கஷ்டப்படுத்துறீங்க. எனக்கு சித்தப்பா மேலயும் எந்த கோபமும் இல்ல. ப்ளீஸ் மா. அழாதீங்க” என்றவளை அணைத்துக் கொண்டார் மல்லிகா.
“நீங்க போய் அண்ணா கூட இருங்க. உங்களுக்கும் மனமாற்றமா இருக்கும். எவ்ளோ நாளைக்கு என் முகத்தையே பார்த்துட்டு இருப்பீங்க. பிளைட் எத்தனை மணிக்குமா? நான் குளிச்சுட்டு வந்து உங்களை ட்ராப் பண்றேன். டின்னர் செய்யட்டா. இல்ல போற வழில சாப்ட்டுப்போமா” கண்ணை மீறி வெளிவந்த கண்ணீரை கண்களுக்குள்ளயே பொதித்தபடி இயல்பாக பேச முயன்றாள்.
பின் அவரை விமான நிலையத்தில் இறக்கி விட்டவள், கண்ணீருடன் விடைபெற்றவரை சமன்செய்து உள்ளே அனுப்பி விட்டு, ஆசுவாசத்துடன் வண்டியில் அமர்ந்து ஹேண்ட் பாரில் தலையை சரித்தாள்.
“ஹே தங்கம்ஸ்… மணி பத்தாகுது இன்னும் என்ன தூக்கம்? கெட் அப்! இப்ப நீ எந்திரிக்கலைன்னா, இன்னும் ரெண்டு மணி நேரம் எந்திரிக்கவே முடியாது ஓகே வா…” காதோரம் குறும்பு கொப்பளிக்க உதித்த ஆடவனின் குரலில் வெடுக்கென நிமிர்ந்தாள்.
எப்போதும் போலவே அக்குரல் கடந்து போனவைகளின் அசிரிரீ!
ரகு! ரகுவீர்… காந்தக்குரலுக்கேற்ற ஆணழகன்! அவளுக்கு ஒட்டுமொத்த அன்பையும் காட்டி அவளது அன்பு மொத்தத்தையும் சொந்தமாக்கிக் கொண்டவன்.
“வாட் அ பிளசண்ட் சர்ப்ரைஸ்?” எங்கோ வெறித்துக் கொண்டிருந்த மைதிலி பிரஷாந்தின் குரலில் தான் தன்னிலைக்கு வந்தாள்.
அவனைக் கண்டு திருதிருவென விழிக்க, “என்னை பிக் அப் பண்ண ஏர்போர்ட் வரைக்கும் வந்துருக்குறதை பார்க்கும் போது அப்படியே புல்லரிக்குது மைதிலி. நான் வரேன்னு எப்படி தெரியும் உனக்கு?” என்று உற்சாகக் குரலில் அவன் கேட்டதில்,
“நீங்க வர்றது எனக்கு தெரியாது. அம்மாவை விட வந்தேன்” என்று விவரத்தைக் கூறினாள் வெடுக்கென.
அதில் அவனது முகம் சுருங்காமல் அதே மலர்வுடனே காட்சியளிக்க, “சோ வாட் மைதிலி. வந்தது வந்துட்ட என்னையும் டிராப் பண்ணிடு…” எனக் கண் சிமிட்டியவன் அவனது பெட்டியை ஸ்கூட்டியின் முன்னால் வைத்து விட்டு, பின்னால் அமர்ந்து கொண்டான்.
மைதிலி தான் “நான் வீட்டுக்குப் போறேன் பிரஷாந்த் நீங்க கேப்ல போங்க” என்று பின்னால் திரும்பி முறைக்க,
“நான் மட்டும் என்ன இந்த நேரத்துல காட்டுக்குப் போய் புத்தனாவா ஆகப் போறேன்…” எனக் குறும்புடன் கூற, அவனை வாய்க்குள் திட்டியபடியே வண்டியை கிளப்பினாள்.
“மகி எங்க இருக்கா. மகேஷ் வீட்லயா?” பிரஷாந்த் கேட்க,
“ம்ம்” என்றாள்.
“அப்போ நீயும் அங்கேயே இருக்கலாம்ல. வீட்ல தனியா போய் என்ன பண்ண போற?”
அதற்கு பதில் அளிக்காதவள், “விசா கேன்சல் பண்ணியாச்சா? வேலையை விட்டுட்டா வந்தீங்க? அப்போ பூவாவுக்கு என்ன பண்ணுவீங்க” மைதிலி சற்றே திமிருடன் கேட்டாள்.
“வேலையை விடல மைதிலி. என் ஆபிஸ் இந்தியாலயும் அதுவும் சென்னைல ஒரு பிரான்ச் இருக்கு. அங்க மாத்தி கேட்டு இருக்கேன். இங்கயும் ஒரு இன்டர்வ்யூ அட்டெண்ட பண்ண சொன்னாங்க. ரெண்டு மூணு நாள்ல கன்பார்ம் ஆகிடும். வேலை இல்லாம போனா என்ன, நீ எனக்கு மூணு வேளையும் பூவா போட்டு காப்பாத்த மாட்டியா? வக்கீல் பீஸே எக்கச்சக்கமா வாங்குவீல…” என்றதும், சரட்டென பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள்.
அதில் அவன் பின்னாடி கம்பியைப் பிடித்து நகர, வாய்ப்பு கிடைத்து விட்டதென்று அவனும் அவளை உரசிக்கொண்டெல்லாம் வரவில்லை. அவளுக்கு சங்கடம் நேராமல் தள்ளியே அமர்ந்து கொள்ள, அவனது செய்கையில் அவளும் இயல்பானாள்.
“மல்லிகா அம்மாகிட்ட என்னை பத்தி விசாரிச்சீங்களா?” கோப விழிகளால் பிரஷாந்தை சாட, அவன் புரியாமல் விழித்தான்.
“உன்னைப் பத்தி கேட்க ஆசை தான். ஆனா கேட்கல மைதிலி. பாஸ்ட் இஸ் பாஸ்ட்! இப்போ எனக்கு தெரிஞ்ச நாள்ல இருந்து நான் பாக்குற மகிழினியோட அம்மா மைதிலியை மட்டும் தான் நான் விரும்புறேன்” அவன் திட்டவட்டமாக உரைக்க, அவளிடம் சிறு திகைப்பு. ஓரிரு நிமிடத்தில் தன்னை சமாளித்து மீண்டும் வண்டியை கிளப்பினாள்.
” ஆமா என்ன வேலை பார்க்குறீங்க?” என்றவளின் கேள்வியில், “நான் என்ன வேலை பாக்குறேன்னே உனக்கு தெரியாதா? உன் எக்ஸ் கிளையண்ட் நானு. என்னைப் பத்தி தெரியாம இருக்கியே” என்று கண்ணோரம் சுருங்கப் புன்னகைக்க, கண்ணாடியை சரிபடுத்தி அவனை முறைத்தாள்.
சிரிப்பை அடக்கிக்கொண்டவன், “சொலியூஷன் ஆர்க்கிடெக். துபாய்ல ஒரு டாப் கம்பெனில… என்ன ப்ராப்ளம் இருந்தாலும் ஒரு சொலியூஷன் கண்டிப்பா கண்டுபிடிச்சுடுவேன்…” சொல்லிக்கொண்டே அவளை கண்ணாடி வழியே பார்த்தான்.
வியப்பாக விழி விரித்தவள், “இவ்ளோ நல்ல வேலையை ஏன் விட்டீங்க?” என்று கேட்டு விட,
“உனக்காக தான்” என்றான் சாதாரணமாக.
“எனக்காகவா நான் உங்களை வேலையை விட சொன்னேனா? நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிக்காதீங்க” சிடுசிடுத்தவளிடம்,
“எப்படியும் கல்யாண ஆனா மகியையும் உன்னையும் தனியா கூட்டிட்டுப் போய் அங்க ஒரு வீட்டுக்குள்ள அடைக்க முடியாது. இங்க இருந்தா மகிக்கும் எல்லாரோட பாசமும் கிடைக்கும். அதுக்கு நான் இங்க வந்துட்டா பிரச்சனையே இல்லைல. கேரியரா நீயான்னு யோசிச்சேன். கேரியரை இங்க இருந்து கூட பில்ட் பண்ணலாம். ஆனா நீ? நீ எங்க இருக்கியோ அங்க அடியேன் ஒரு ஓரமா இருந்துட்டு போறேன்” என்று கிண்டலுடன் கூறியதில் மீண்டுமொரு முறை சடன் பிரேக் அடித்தாள்.
வண்டியை ஓட்ட இயலாமல் கையெல்லாம் நடுங்கியது. மீண்டும் பின்னால் சாய்ந்து அவள் மீது இடிக்காமல் இருக்க அரும்பாடுபட்ட பிரஷாந்த், “யம்மா தாயே, பின்னாடி வளைஞ்சு வளைஞ்சு என் பாடி சேதாரம் ஆகிடப் போகுது. எதுக்கு இப்ப இந்த பிரேக்கு” என்றான் புரியாமல்.
“நத்திங். நீங்களே வண்டியை ஓட்டுங்க” என்று அவள் இறங்கி விட்டவளுக்கு நெஞ்சம் படபடப்பது முகத்தில் தெரிந்ததில், “ஆர் யூ ஓகே மைலி?” எனக் கேட்டான் அக்கறையாக.
“தயவு செஞ்சு கொஞ்ச நேரம் பேசாம வண்டியை ஓட்டுறீங்களா…” நிமிர்ந்து சீறியவளை நிதானமாக ஏறிட்டவன் சொன்னது போன்றே வீட்டிற்கு செல்லும் வரை எதுவும் பேசவில்லை.
வில்லா கமியூனிட்டியினுள் நுழையும் போதே முன்னிருந்த சிறு பூங்காவில் மகிழினி விளையாடிக் கொண்டிருந்தாள். அவளுடன் அமரின் தாய் சிந்தியா தீக்ஷாவைக் கையில் வைத்து இருக்க, மைதிலியைக் கண்டதும் மகிழினி ஓடி வந்தாள்.
“ம்மா… எப்பவும் மாமா தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடுவாங்க இன்னைக்கு நீங்க வந்துட்டீங்க…” என்று வியப்பாய் கேட்டவளுக்கு பதில் சொல்லும் முன்னே,
“ஹை பிரஷாந்த் அங்கிள் நீங்களும் வந்துட்டீங்களா” என்று துள்ளி குதித்தாள்.
“எஸ் பேபி நான் வந்துட்டேன். என் மகி பேபியை பார்க்காம இருக்கவே முடியல தெரியுமா?” என்று அவளை தூக்கி கன்னத்தைக் கிள்ள,
“பொய் தான சொல்றீங்க. அப்பறம் ஏன் இவ்ளோ டேஸ் என்னைப் பார்க்க வரல.” என்று உதட்டைக் குவித்து முறுக்கினாள்.
“உனக்காக பாரீன் சாக்லேட் வாங்கலாம்னு பிளைட்ல போயிட்டு வந்தேன் பேபி. இதோ…” என அவளுக்காக பாக்கெட்டிலேயே வைத்திருந்த சாக்லெட்டை எடுத்து நீட்டியதில், விழி விரித்தவள்
“ஸ்கைல ஸ்வைங்குன்னு பறக்குமே அந்த பிளைட்லயா போனீங்க?” என்றாள் வியப்பாக.
அதில் மெல்ல சிரித்தவன் “அதே பிளைட்ல தான் போனேன்…” என்றதும்,
“நீங்க அடுத்த தடவை போகும் போது என்னையும் கூட்டிட்டுப் போங்க அங்கிள். நானும் பறப்பேன்” என ஆவலுடன் கேட்டாள்.
“மகி பேபிக்கு பிளைட்ல போகணும்னு ஆசையா. இதுக்காகவே உன்னைக் கூட்டிட்டுப் போறேன் டீல்” என்று கட்டை விரலைக் காட்ட, “மகி” என்ற மைதிலியின் அதட்டலில் அவள் முகம் சுருங்கிப் போனது.
“கிளம்பலாம் வா. நாளைக்கு ஸ்கூலுக்குப் போகணும்ல” என்று அவளை தூக்கியவள், “உங்க லக்கேஜை எடுத்தீங்கன்னா நான் கிளம்புவேன்” என்றாள் கறாராக.
சிந்தியா இருவரையும் பார்ப்பதைக் கண்டு வலிய முறுவலித்தவள், தீக்ஷாவிடம் கொஞ்சுவது போல அவர் அருகில் சென்று விட, தீக்ஷாவோ பொக்கை வாய் சிரிப்புடன் நேராக பிரஷாந்திடம் தாவினாள்.
“என் பட்டுக்குட்டி சித்தப்பாவை தேடுனீங்களா…?” என அவன் வாங்கிக்கொள்ள, “வாங்க வீட்டுக்குப் போகலாம்” என்று சிந்தியா இருவரையும் அழைத்தார்.
“இல்லம்மா. நான் கிளம்புறேன்.” எனும் போதே,
“ஹே அத்தைப்பொண்ணே என்ன வந்ததும் ஓடுற?” எனக் கேட்டபடி தயானந்தன் அங்கு வந்தான். அவனுடன் அமரும் வர,
“ஆல்ரெடி லேட் ஆச்சு தயா…” என தயக்கத்துடன் கூறினாள்.
“நீ ஊருக்கு வரலையா?” தயா கேட்டதில்,
“இல்ல நாளைக்கு இம்பார்ட்டண்ட் ஹியரிங் இருக்கு. நீங்க போயிட்டு வாங்க. மகியும் ஏற்கனவே நிறைய லீவ் எடுத்துட்டா.” என்றவளுக்கு இப்போது ஊருக்குச் செல்லும் மனநிலை சுத்தமாக இல்லை.
“ப்ச், எல்லாரும் போறது தான பிளான்! அதெல்லாம் தெரியாது நீ மார்னிங் ரெடியா இருக்க. நீயாவது சொல்லு அமர்” என்றான் தயா.
“நான் என்ன சொல்றது? ப்ரெண்ட்ஷிப் வேணாம்னு முடிவு பண்ணுனதுனால தான இன்னும் நான் சொன்னதுக்கு பதில் சொல்லாம இருக்கா. வந்தா வரட்டும் வரலைன்னா போகட்டும்…” எனத் தோளைக் குலுக்கிட, பிரஷாந்த் நடப்பதற்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லை என்ற ரீதியில் தீக்ஷாவிடம் ஏதோ பேசிக் கொஞ்சிக் கொண்டிருக்க, மைதிலி அவனை தான் முறைத்தாள்.
“ப்ரெண்ட்ஷிப் வேணாம்னு நான் முடிவு பண்ணேன்னு எப்போ சொன்னேன்…” மைதிலி அமரிடம் சண்டைக்கு வர,
“நீ என் உறவை மதிச்சு இருந்தா, ரெண்டு வாரம் சைலண்ட் மோட்ல இருந்துருக்க மாட்டல்ல.” என விழி இடுங்க கேட்க, அவளுக்கு ஆயாசமாக இருந்தது.
“எனக்கு மார்னிங் வரை டைம் குடு. யோசிச்சு சொல்றேன்…” என்றதும் தோளைக் குலுக்கிக் கொண்டவன், “மகிக்குட்டி இன்னைக்கு மாமா கூட தூங்குறீங்களா. உங்க அம்மா நல்லா யோசிக்கட்டும்” என்று கிண்டலாய் கேட்டபடி மகிழினியை அவன் வாங்கிக் கொள்ள, மைதிலி விழித்தாள்.
“ஓகே மாமா… அம்மா நல்லா யோசிச்சு சொல்லு. நெக்ஸ்ட் டைம் பேரண்ட்ஸ் மீட்டிங்கு பிரஷாந்த் அங்கிளையும் கூட்டிட்டுப் போகலாம்” என்றதும் அனைவருமே ஒரு நொடி அதிர்ந்து விட்டனர்.
நான்கு வயது குழந்தை வீட்டில் நடப்பதை எல்லாம் கவனித்து தந்தை இடத்தை நிரப்ப விருப்பமாய் இருப்பதில் பிரஷாந்த் இறுகி விட்டான்.
மைதிலிக்கு அதிர்வு தான் என்றாலும், அவள் எப்போதும் கேட்பது தான். “ஸ்கூல்ல அப்பாவை கூட்டிட்டு வர சொல்றாங்கம்மா. நம்ம அப்பாவை கூட்டிட்டுப் போக முடியாதா?” என்று.
முதலில் வலித்தது. பின் மரத்து விட்டது.
அதனால் அவளுக்கு ஒன்றும் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. “அதை அடுத்த மீட்டிங்ல பார்க்கலாம் மகி. அவளைக் குடு அமர். நான் கூட்டிட்டுப் போறேன். அம்மாவும் இங்க இல்ல.” என்றதும்,
“தெரியும்… நீ யோசிச்சுட்டு வா” என்றவன் மகிழினியிடம் பேசியபடி வீட்டிற்கு சென்று விட,
தயாவும் சிந்தியாவும் தீக்ஷாவுடன் நகர்ந்தனர்.
அங்கு மைதிலியும் பிரஷாந்தும் மட்டும் மிஞ்சி இருக்க, அவனைக் கோபப்பார்வை பார்த்தாள்.
“நீங்க தான அமரை ஏத்தி விட்டு, இப்போ மகிக்கும் ஆசை காட்டி விட்டது” என்று சீறிட,
“அமரை ஏத்தி விட்டது உண்மை தான். ஆனா மகி!” பேச இயலாமல் பின்னந்தலையை அழுந்தக்கோதியவன், “மகிக்காகவாவது இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலாம்ல?” என்றான் ஆற்றாமையுடன்.
அவளிடம் வெற்றுப்பார்வை தவிர வேறு பதில் இல்லை.
“உங்களுக்கு சாமியார் வாழ்க்கை தான் வேணுமா என்ன?” நக்கலாக மைதிலி கேட்க,
“எனக்காக நீ யோசிக்க வேணாம்” என அவன் பேசும் முன், “நோ சான்ஸ்! உங்களுக்காக நான் ஏன் யோசிக்கப் போறேன். எனக்காகவே யாரும் யோசிக்காதப்ப மத்தவங்களை பத்தி எனக்கு கவலை இல்லை” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
அவளை ஒரு வித குழப்பத்துடன் பார்த்த பிரஷாந்திடம், “ஆனா கல்யாணம் ஆகிடுச்சு. சோ எப்படியும் இவள் நம்ம வழிக்கு வந்தாகணும்னு கனவு கூட கண்டுறாதீங்க. மகிக்கு அப்பாவா மட்டும் தான் உங்களுக்கு உரிமை இருக்கும். எனக்கு புருஷனா கடுகளவு உரிமை கூட என்னால குடுக்க முடியாது. அதுக்கு அப்பறம் குத்துதே குடையுதேன்னு புலம்ப கூடாது. அப்படி கஷ்டமா இருந்தாலும் தாராளமா நீங்க டைவர்ஸ் பண்ணிக்கோங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல…” என்றதும், அவளை கையைக்கட்டிக் கொண்டு பார்த்தவன்,
“அப்போ கல்யாணத்துக்கு உனக்கு ஓகே வா?” எனக் கேட்டான்.
‘நான் என்ன பேசுறேன் அதுக்கு ரியாக்ட் பண்ணாம இவன் என்ன கேக்குறான்…’ என எரிச்சல் வந்தாலும், “ஓகே இல்லைன்னாலும் என்னை கார்னர் பண்ண தான போறீங்க அமரை வச்சு. இட்ஸ் அ சீப் பிஹேவியர். இது உங்களுக்கு தப்பா தெரியல” என்றாள் கோபமாக.
“தெரியல… சில நல்ல விஷயம் நடக்குறதுக்கு ஒரு சில சீப்பான விஷயம் பண்ணலாம். என் லவ்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்” என்று எளிமையாய் முடித்து விட, அவளுக்கு எங்காவது முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.
நீண்ட மூச்சை எடுத்தவள், “கல்யாணத்துக்கு அப்பறம், இங்க இருக்க வேணாம். தனியா இருக்கலாம். இங்க இருந்தா நான் நடிச்சுக்கிட்டே இருக்கணும். ஒருத்தி 24 மணி நேரமும் எப்படி நடிக்க முடியும்?” என்ற கேள்வி ஆதங்கமாக வெளிவர, அவளைத் தடுத்தவன்,
“கல்யாணத்துக்கு ‘ஓகே வா’ன்னு உன் வாயால சொல்லு. அப்பறம் உள்ளதை எல்லாம் நான் பாத்துக்குறேன்” என்று மீண்டும் அங்கேயே நிற்க, “இவனை …” எனப் பல்லைக்கடித்தவள், “ம்ம்” என்றாள் உஷ்ண மூச்சுடன்.
“யாஹூ !” என இருந்த இடத்திலேயே துள்ளிக் குதித்த பிரஷாந்த், “மச்சிஈஈ… பைனலி நான் கமிட் ஆகிட்டேன்” என்று திடுதிடுவென நண்பர்களை அழைத்தபடி உள்ளே ஓட, மைதிலி பேந்தப் பேந்த விழித்தாள்.
‘என்ன இவன்… நான் இவ்ளோ சீரியஸா பேசுறேன். என்னமோ லவ் சொன்ன மாதிரி போறான்’ என்ற பெரும் குழப்பத்தில் இடுப்பில் கை வைத்து நின்றாள்.
உயிர் வளரும்
மேகா