நெடுஞ்சாலை கானமே – டீஸர்
முன்கோபத்தில் காதல் நெஞ்சை மூடாதே முத்துக் கண்ணே !
ஆப்பிள் என்று தொட்டுப் பார்த்தால் பைனாப்பில் ஆனாய்ப் பெண்ணே !
உண்டுன்னா உண்டுன்னு ஒத்தச் சொல்லு சொல்லுங்க
இல்லன்னா இல்லன்னு ரெண்டில் ஒண்ணு சொல்லுங்க
என் காதல் கதவை தட்டும் தடுக்காதே
பின்னாளில் கண்ணீர் ஊற்றித் தவிக்காதே
நெஞ்சோடு ஒரு காதல் வைத்துக் கண்ணோடு சிறு கோபம் என்ன
ஆண் இதயத்தின் கறி தேடி அலைகின்ற பெண்ணுக்கு ஈ.பீ.கோ செக்ஷன் என்ன
****
பச்சை நிற மினிப் பேருந்தில் சத்தமாக
கசிந்து கொண்டிருந்தது இந்தப் பாடல்..
பாடலின் வரிகளை உள்வாங்கிய படி, தோழியின் அருகே அமர்ந்திருந்த அவளுக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு பக்கவாட்டிலிருந்த இரண்டு சீட்டுகளில் முதல் இடத்தில் அவளை பார்த்த படி அமர்ந்திருந்த அந்தக் காக்கிச் சட்டைக்காரனை கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
இருவரது முட்டியும் உரச அமர்ந்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் முழுப் பார்வை பார்த்து கொள்ளாமல் கீழ் கண்ணிலும் கடைக்கண்ணிலும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ஆண் இதயத்தின் கறி தேடி அலைகின்ற பெண்ணுக்கு ஈ.பீ.கோ செக்ஷன் என்ன”
எனக் கடைசி வரி வரவும் சட்டென பேருந்து நிக்கவும் சரியாக இருந்தது.
பிடிப்பிற்காக அருகே இருந்த கம்பியை அவள் பற்றிக் கொள்ள, அதே நேரம் கம்பியை பிடிக்க வந்த அவனது கரம் அவளது கரத்தை பற்றிக் கொண்டது.
அவன் கரம் தொட்டதும் திரும்பி அவன் முகம் பார்த்தாள். இரவரது கையும் பார்வையும் ஒன்றோடு ஒன்று பற்றிக் கொண்டன.
“யோவ் ட்ரைவரு ! சொல்லிட்டு பிரேக் போட மாட்டியா நீ? கிழடு கெட்டைலாம் இருக்கு பார்த்துயா !” எனக் குரல் வந்ததும் , இருவரும் நிகழ்விற்கு வந்திருந்தனர்
பற்றியிருந்த தன் கரத்தை வேகமாக உருவிக் கொண்டாள் அவள். அவனும் அவள் கையை பிடித்த அதிர்ச்சியில் அவ்விடம் விட்டு எழுந்து பின்னே சென்று விட்டான்.
ஜன்னலோரமாக அமர்ந்திருந்த தன் தோழி இந்தக் காட்சியை பார்த்து விட்டாளா? என்று பக்கவாட்டில் அமர்ந்திருந்தவளை பதற்றத்துடன் திரும்பி பார்க்க, அவளோ ஓட்டுநர் இருக்கையில் இருந்தவனை தீயாக முறைத்துக் கொண்டிருந்தாள்.
சாலையில் குறுக்கே வந்த நாயைக் கண்டதும், சட்டென பிரேக்கை அழுத்தி நிறுத்தி விட்டு நாயை காப்பித்தியவன்,
அது ஓடிச் சென்றதும் தான் தன்னை நம்பி பேருந்தில் ஏறிய பயனாளிகளின் எண்ணம் கருத்தில் வர, சட்டென பின்னால் திரும்பிப் பார்த்தான்.
யாருக்கும் எதுவும் நேராமல் போகவும் தான் நெஞ்சில் கை வைத்து ஆசுவாசப் படுத்துக் கொண்டான்.
“என்னாச்சி பேராண்டி?”அவன் முகம் பார்த்து கேட்ட கிழவியிடம்
“நாயி ! கிழவி”என்று இளித்து விட்டு திரும்ப, முகம் முழுக்க இரண்டு கண்கள் இருபது போலவே பெரிதாக விரித்து தன்னை முறைப்பவளை கண்டதும் அசடு வழிய சிரித்து விட்டு வண்டியை உயிர்பித்தான்.
காதலியின் கரம் பிடித்த கையை ரசனையுடன் பார்த்து படி வந்தவனின் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான் அவனுயர நின்ற பள்ளிச் சிறுவன் ஒருவன்.
“பச் என்னடா?” சலிப்பாக கேட்டவனை முறைத்த படி
“ஆமா இவரு பெரிய கத்தி விஜய்னு நெனப்பு ! அண்ணே ! முடியல உன்னால ! நான் வயித்துல இருந்த போது இந்த வண்டியில தான் பிரசவம் பார்க்க ஆஸ்பத்திரிக்கு போனேன் எங்க அம்மா சொல்லுச்சு. இப்போ நான் காலேஜுக்கே போகப் போறேன், இன்னும் நீ இந்த டீச்சர் கிட்ட லவ் சொல்ற, இந்நேரம் நானா இருந்தா கல்யாணம் கட்டி பத்துப் புள்ள பெத்து, இதே வண்டியில ஸ்கூலுக்கு அனுப்பிருப்பேன். நீயும் தான் இருக்கீயே ! ‘நைட்டிஸ் கிட்டுனு இப்படி தான்னுட்டு…’
சும்மா அதே சொல்லி சிலம்பிட்டு இருக்காம போய் உன் லவ்வ சொல்லுண்ணே ! இல்ல மிஸ்ஸு மிஸ்ஸாகிட போது !”என வயது மீறி பேசிக் கொண்டிருந்த சிறுவனை ‘ ஆ ‘ வென வாயில் ஈ செல்லும் வரை பார்த்து நின்றவன் தலையை உலுக்கி விட்டு சிறுவனின் பிடரியில் தட்டி
“வயசுக்கு தக்கன பேச்ச பேசுடா என் சீவலு ! ஸ்கூலுக்கு போற நீ எனக்கு அட்வைஸ் பண்றீயா?! எனக்கு எப்ப காதல சொல்லணும் தெரியும் நீ கண்டதையும் பேசிட்டு திரியாம படிச்சி பாஸ் பண்ற வழிய பாருடா !”என்று அவனை விட்டு நகர,
“சின்னப் பையனா இருந்தாலும் சரியா தானே டா சொல்றான். நீயும் தான் வித விதமா பாட்டு போட்டு அந்தப் புள்ளைக்கு சிக்னல் கொடுக்கற. அந்தப் புள்ள உன்னை கண்டுக்காம கிடக்கே டா ! இப்படியே போச்சின்னு வையி, அந்த புள்ள அது கல்யாணத்துல ரேடியோ செட் வச்சி எனக்கு கல்யாணம் சொல்லி பாட்டு போட்டு உன்னை போல சொல்லாம சொல்லிப்புடும் பார்த்துக்க!” என எண்பதுகளில் இருந்த ஒருவர் அவனை கேலி செய்ய,
“ஏன்ணே நீயுமா? வாய கழுவுண்ணே !”என்றான்.
“நான் கட்டையில போறதுக்குள்ள, உன் கல்யாணத்தை பார்த்திடுவேனா பேராண்டி”என்று பல்லெல்லாம் விழுந்த கிழம் ஒன்று அவன் கைப் பிடித்து கேட்டு விட, பெருமூச்சை விட்டபடி முன்னே அமர்ந்திருந்தவளின் முதுகை வெறித்தான் அவன்.
பேருந்தில் பயணிக்கும் பயனாளிகள் அனைவருக்கும்
டிக்கெட் கிழித்து கொடுக்கும் அவனுக்கு அவளுடன் காதலில் பயணிக்க காதல் டிக்கெட் கிடைக்குமா?