கானம் – 2
சுடச்சுட தட்டில் அடிக்கி வைத்திருந்த இரண்டு பரோட்டாவை இலையில் பிய்த்து போட்டு அதன் மேல் கின்னத்திலிருந்த சால்னாவை ஊற்றி ஒரு பிரட்டு பிரட்டுக் கொண்டிருந்தாள் மைவிழி.
அவளது கவனம் எல்லாம் பரோட்டாவில் தான் இருந்ததே தவிர, அவள் எதிரே அமர்ந்து அவளை தீயாக முறைத்துக் கொண்டிருந்த இளந்தென்றல் மீது சுத்தமாக இல்லை…
இளந்தென்றல் இலையில் சிக்கன் பிரியாணி ஆவி பறக்க கிடந்தாலும் அதை கவனிக்காது, கண்ணில் ஜொல்லு வடிந்தாலும் ஆச்சரியத்துக்கில்லை என்பது போல ஜொல்லு வடிய பரோட்டாவை ஆசையாகப் பார்த்தபடி அதை பிரட்டிக் கொண்டிருக்கும் மைவிழியை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வாயை ஆ – வென்று திறந்து பரோட்டாவை உள்ளே திணிக்க போகும் முன் எதிரே தன்னை முறைத்துக் கொண்டிருக்கும் இளந்தென்றலை பார்த்ததும் சொத்தென பரோட்டாவை கீழே போட்டாள் மைவிழி.
“மத்தியானம் ஆச்சுடி, இன்னுமா உன் கோபம் போகல?”
“ராத்ரியே ஆனாலும் போகாதுடி!”என்பவளை சலிப்புடன் பார்த்து விட்டு” அட எவடி இவ ! மத்தியானம், ராத்ரினுட்டு என்ன பண்ணிட்டோம்னு இம்புட்டு கோபமா இருக்க நீ ?”
“ஓ… மேடமுக்கு புரோட்டாவ பார்த்ததும் எல்லாம் மறந்து போச்சு அப்படி தான?”
“ஈஈஈ… ஆமாண்டி மறந்துட்டேன். நீயும் அப்படியே மறந்துடு ! சுடச்சுட ஆவிப் பறக்கற பிரியாணிய விட்டு என் ஆவிய வாங்கிட்டு கிடக்கடி நீயி ! பசிக்குதுடி சாப்ட விடேன்…!”சால்னாவுடன் இழைத்த பரோட்டாவை எடுத்து வாயில் வைத்தாள்.
அவளோ இன்னும் கூட அவளை தான் பார்த்திருந்தாள். இவளும் மனம் பொறுக்காமல் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளிடம்,
“அடியே !!! நான் உன் தோழி தானடி ! கொஞ்சம் மன்னிப்பும் கருணையும் சேர்த்து எம் மேல காட்றது. மன்னிப்பு கேட்டும் இப்படி வீம்பு பிடிச்சிட்டு இருந்தா என்னடி அர்த்தம்? பாவம் இல்லையா நானு !
புரோட்டா வாங்கிட்டு சாப்ட விடாம பண்றது எல்லாம் உன் பாவக் கணக்குல வந்துடும் பார்த்துக்க !”
“ஓ… உன்ன சாப்ட விடாம பண்றது பாவக் கணக்குல வரும்னா… நீ பண்ணது எந்தக் கணக்குல வரும்டி? என்ன சொன்ன தோழியா? துரோகி டி நீ !”என்றாள்.
“சரிஇஇஇ…! துரோகியாவே இருந்துட்டு போறேன். நீ இந்த துரோகிய மன்னிச்சிடு !”என்றாள் அசால்டாக,
அவளோ ரகசியம் பேசுவது போல முன்ன வந்தவள், “எதிரிய கூட மன்னிச்சிடலாம். ஆனா துரோகிய மன்னிக்கவே கூடாது !”என மிக சீரியஸாக பேசியவளை கண்ட
மைவிழியோ இருக்கும் இடத்தையும் பொருட்படுத்தாது வாய் விட்டே சிரித்து விட்டாள்.
“நான் சீரியஸா பேசிட்டு இருக்கும் போது எதுக்குடி சிரிச்சிட்டு இருக்க?” என பல்லை கடித்துக் கொண்டு கடுப்புடன் கேட்டாள் இளந்தென்றல்.
“நீ சீரியஸா பேசும் போது எனக்கு சிரிப்பு தாண்டி வருது. நான் என்ன பண்ணட்டும் சொல்லு?!”என அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்லியவளின் மேல் மேலும் கோபம் வர அவளது கையை நறுக்கென கிள்ளி வைத்தாள்.
“ஸ்ஸ்ஸா ஆஆ… வலிக்குது டி எரும !”என்று கையை உதற,
“நல்ல வலிக்கட்டும். எனக்கு நண்பியா இருந்துட்டு எனக்கே நம்பியார் வேலை பார்க்குறலே நீயி ! இந்த வலி உனக்கு உரைக்கும்..”
“இந்த வலி எங்கடி உரைக்குது? இந்த புரோட்டா தான்டி உரைக்குது. ஸ்ஸ் ஆஆ” என நாக்கை தொங்க போட்டு கையால் வீசியவள் அருகே இருந்த நீரை எடுத்து பருக, தென்றலுக்கோ சிரிப்பு வந்துவிட்டது, சிரித்து விட்டாள்.
அவள் சிரிப்பத்தை கண்டதும் குடிப்பத்தை நிறுத்தி விட்டு, டம்ளரை மேசையில் பட்டென வைத்தவள் ” ஏய் நீ சிரிச்சிட்ட ! நீ சிரிச்சிட்ட ! அப்பாடா இனி நிம்மதியா சாப்பிடலாம்”என்றவளை முறைக்க முயன்று தோற்றவள் சிரித்துக் கொண்டே பிரியாணியை சாப்பிட ஆரம்பித்தாள். இருவரும் அதைப் பற்றி பேசாமல் வேறு கதை பேசியபடி தங்கள் உணவை ரசித்து சாப்பிட்டனர்.
பள்ளியில் ஆசிரியர்களை மட்டும் ‘ சுற்றுலா ‘ என்று அவர்களது பள்ளியிலிருந்து குற்றலாத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.
அதிகாலையிலே குற்றாலத்திற்கு வந்து சேர்ந்தவர்கள், ஒவ்வொரு அருவியாக சென்று குளித்து ஆட்டம் போட்டு விட்டு கடைசியாக பழைய குற்றால அருவியில் குளித்து உடை மாற்றி வந்த போது தான் அந்த நிகழ்வு நிகழ்ந்தது.
உடையை மாற்றி முகத்திலிருக்கும் துளிகளை துடைக்காமல் அப்படியே வெளியே வந்தவள் தன் தோழியை தேட, அவளோ கையை காட்டி யாரிடமோ வீடியோ காலில் பேசுவதை கண்டு அவளை நோக்கிச் சென்றாள்.
தன்னை நோக்கி வரும் தோழியை அருகே அழைக்க, அவளும் ஆர்வமாக வந்து திரையை பார்த்ததுமே விதிர் விதிர்த்து போனாள்.
திரையில் சேத்தனை கொஞ்சம் கூட எதிர்பாராதவள், செய்வது அறியாது ஒரு நிமிடம் அப்படியே தன்னை மறைந்து நின்று விட்டாள்.
பின் மூளைக்குள் சட்டென எரிந்த எச்சரிக்கை விளக்கும் அவளை அங்கிருந்து நகரச் சொல்ல திரையை விட்டு நகன்று விட்டாள்.
அவனோ அவளை பார்த்த மயக்கித்தில் பேருந்து மீது சாய்ந்து விட்டான்.
விழியின் புஜத்தை கிள்ள, அவளோ தேய்த்துக் கொண்டே
“என்னடி?”என்றாள்.
“உன்னை கொல்லப் போறேன்டி முதல்ல வீடியோ ஆப் பண்ணு ! “என கோபமாக சைகையில் பேசியவளை கண்டு சிரித்தப்படி “பாய் நெடுவா ! பாய் சேத்தா !”என்று வைத்தவளின் கழுத்தை பாய்ந்து வந்து பிடித்துக் கொண்டவள் ‘ கொலை ! கொலை !’என அலறியதும் அக்கம் பக்கம் பார்த்து விட்டுகோபமாக முன்னே செல்ல, அவளை கெஞ்சிய படியே பின்னே சென்றாள் விழி. மதியம் தான் அந்தப் புயலும் தென்றலாக சமாதானம் அடைந்தது.
****
இருள் மறைத்த இடங்களும் கண்கூசச் செய்யும் பிரகாச விளக்குகள் கொண்ட கடை வீதிகளும் பயணங்களில் மாறி மாறி வந்துப் போக, கானத்துடன் ரசனைக்கு ஏதுவாக இருந்தது அந்த இரவு.
அணைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தேனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகசிறை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
எனப் பேருந்தில் பாடலொலிக்க, கேட்டு ரசித்தப்படி தன்னவனை நினைத்து புன் முறுவலுடன் சாளரம் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டே பயணித்தாள் இளந்தென்றல்.
பேருந்தில் இருளுடன் சேர்ந்த வண்ண விளக்குகள் மத்தியில் அவளது முறுவலை கண்டு கொண்டாள் விழி.
“என்னடி உன் ஆளு நினைப்பா? தனியா சிரிக்கற !”
அருகே இருந்த அவள் புஜத்தை மீண்டும் கிள்ளியவள் “இன்னொருவாட்டி அவன என் ஆளுனு சொன்ன, யான மலையில இருந்து உருட்டி விட்ருவேன்டி உன்னை”
“சரிஇஇ… ஆளுனு சொல்லல, லவ்வர்னு
சொல்லட்டுமா?”அவளிடம் வம்பு வளர்க்க, மீண்டும் கிள்ள வந்தவளின் கையை பிடித்து கொண்டாள்.
“அட யாரிடி இவ ! சும்மா சும்மா கிள்ளி வச்சிட்டு… எங்கடா சதை இருக்கு அதை பிடிங்கிக்கலாம் பார்க்கிறீயா நீயி? எதுவா இருந்தாலும் வாயில பேசுடி ! உம்ம டீச்சர் வேலை எல்லாம் ஸ்கூல்ல வச்சுக்க… “என தேய்த்த படி சொன்னவளை முறைத்தவள்,
“நான் கிள்ள கூடாதுன்னா நீயும் அவன என் ஆளு சொல்ல கூடாது”என்று டீல் பேசினாள்.
“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அவன் உன் ஆளு இல்லன்னு சொல்லிட்டு இருக்க போற ! முத்தின கத்திரிக்கவ முத்தல முத்தல எத்தனை நாளைக்கு சொல்ல போற ! மனசுல அவன் தான் இருக்கான் ஒத்துக்க உனக்கு எதுடி தடுக்குது? அவன் பார்க்கற வேலையா? இல்ல படிப்பு இல்லைன்னா? மேடம் தகுதிய எதிர்பார்க்கரீங்களோ?” என இழுத்தவள் தென்றலின் தீப் பார்வை அவளைச் சுட, தலை குனிந்து கொண்டாள் விழி.
“நீயே என்னை புரிஞ்சுக்கல ! புரிஞ்சுக்காத உன்கிட்ட என்னத்த சொல்லி புரிய வைக்க நானு. நீ என்னை எப்படி நெனைக்கறீயோ அப்படியே இருக்கட்டும் மாத்திக்காத !”
“அது இல்லைடி…! “என்றவள் கை நீட்டி பேசாதே என்று தடுத்து விட்டாள்.
இவளும் கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டவள் தன்னையே கடிந்துக் கொண்டாள்.
இருவருக்கிடையே அமைதி பயணம். தென்றலால் அமைதியாக வர முடிந்தது அவள் தான் அமைதிக்கு பெயர் போனவளாகிற்றே ! ஆனா விழியால் அப்படி இருக்க முடியவில்லை. பேசிக் கொண்டே இருக்கும் வாயை மூடிக்கொண்டு அமர்ந்திருக்க முடியவில்லை.
இப்படி ஏதாவது செய்து அவளிடம் வாங்கி கட்டிக் கொண்டு அவள் பேசாது போவதும், இவள் பின்னே சென்று மன்னிப்பு கேட்பதும் தினமும் நடக்கும் கூத்து.
“இப்போ என்ன வாய் கொஞ்சம் நீண்டிருச்சி! கொஞ்சம் இல்லை அதிகமாவே பேசிட்டேன் தான் அதுக்குனு பேசாம வருவீயா நீ? கோவபடற மாதிரி பேசினா இங்கன நறுக்குன்னு கிள்ளு யார் வேணான்னு சொன்னா ! அத விட்டு அமைதியா வரதெல்லாம் நல்லதுக்கு இல்ல சொல்லிப்புட்டேன் “என்று அவளது கோலி குண்டு விழியை அங்குமிங்கும் உருட்டியபடி சொன்னாள்.
தென்றாலும் கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்திருக்க முடியவில்லை… அவள் மனம் விட்டு பேசும் ஒரே ஜீவன் அவள் தான் என்பதால் வந்த கோபம் கூட சிறிது நேரம் கழித்து அதுவும் காத்தோடு காற்றாகி விடும்… விழியும் உடனே அவளிடம் வெள்ளை கொடி காட்டி விடுவதால் அங்கே கோபம் நிலைத்து நிற்க வாய்ப்பில்லாமல் போய் விடும்…
“அங்க கிள்ளி, உம்ம சதைய எடுக்கறேன் புகாறு கொடுக்கறீயே! எப்படி கிள்ளறதாக்கும்…?”என முறுக்கி கொண்டவளை கண்டு இவளுக்கு சிரிப்பு தான் வந்தது. தென்றலை பற்றி அறியாதவளா இவள்…
“ஆமா ! நான் சொன்னதும் உனக்கு ரோசம் வந்து அங்கன கிள்ள மாட்ட நீ ! போடி இவளே ! குடிகாரனுக்கு குடிக்கலைன்னா கை நடுங்குறது போல… உனக்கு என் கையை கிள்ளலேனா
கை நடுக்கம் வந்திடுமே ! அதுனால நீ கிள்ளு ராசாத்தி நான் பொறுத்துகிடறேன் “என்று அவள் புஜத்தை காட்ட, வேண்டும் என்றே கிள்ளி வைத்தாள்..
அவளும் தேய்த்து கொண்டே ‘ இப்போ சந்தோசமா ?’ என்பது போல பார்க்க, அவளும் சில்லறை சிதறிவிட்டது போல சிரித்தாள்.
அவள் சிரிப்பை பார்த்துக் கொண்டிருந்தவள் விடாது அவளிடம் “சொல்லு யார நினைச்சி சிரிச்சா?”
“ம்ம்… என் அம்மாச்சிய நெனைச்சி சிரிச்சேன் “
“அட என்னடி நீயி ! அம்மாச்சிய நெனைச்சி சிரிக்க வயசா ஒனக்கு ?
“என் அம்மாச்சிய நான் நெனைக்காம நீயா நான் நெனைப்ப ! சோறாக்குச்சோ என்னவோ ! ஒத்தாள இருக்க எதுவும் சமைக்காம தண்ணிய குடிச்சிட்டு படுத்துடும் அதான் என்ன பண்ணுது கவலையா இருக்கு?!”என்று மெய்யாகவே வருந்திச் சொல்ல…
“ஆமா ! இவுக அம்மாச்சிய நெனைச்சி சிரிச்சிட்டே கவலைப் படுவாக !” அவளிடம் அடுத்து பேச திரும்ப இவளோ வேகமாக கண்ணை மூடிப் படுத்துக் கொண்டாள்.
‘ தெளிவு தான் ‘ என்று முனங்கி விட்டு இவளும் படுத்துக் கொண்டாள்.
***
“அப்பாத்தா ! என்ன வச்சிருக்க சாப்ட?” வாசற்படியில் அமர்ந்து கொண்டு எதிரே இருந்த சிறு வீட்டினுள் படுத்திருந்த கிழவியிடம் விசாரித்தான் சேத்தன்.
கிழவும் எழுந்து அவனிடம்”எம் பேத்தி வச்சிட்டு போன கருவாட்டு குழம்பும் கஞ்சியும் கொஞ்சோண்டு இருக்கு எடுத்து வரவா ராசா ?”என பரிவோடு கேட்டது.
“ம்ம்… கொண்டாத்தா ! பசி வயித்த கிள்ளுது “என்று வெறும் தட்டை வைத்துக் கொண்டு வாசலில் வந்து அமர்ந்து விட்டான்.
கிழவியும் எடுத்து வந்து கொடுக்க, கருவாட்டு குழம்பை தொட்டுக் கொண்டு கஞ்சியை உறிஞ்சினான்.
“ஏன்யா உம்ம ஆத்தா ஒனக்கு சோறாக்கலியா? உன்னை இப்படி பட்டினி போட மாட்டாளே அவ ! ஒடம்புக்கு எதுவும் சரியில்லா ம படுத்து கிடக்குறாளா ?”என அக்கறையாக விசாரித்தார்.
“அதுக்கென்ன நல்லா தான் கிடக்கு அப்பத்தா ! சமைச்சு எல்லாம் வச்சிருக்குத்தேன். ஆனா மகன் நல்லா சாப்பிடணும்னு மனசு தான் இல்ல அதுக்கு….” என உள்ளே படுத்திருக்கும் தன் தாய்க்கு உரைக்க, வேண்டுமென்றே குத்திக் காட்டிப் பேசினான் இசைசேத்தன்.
உள்ளே பாய் விரித்து படுத்திருந்தவருக்கு அவன் வார்த்தை உள்ளுக்குள் சுருக்கென்று தைக்க கண்ணீர் முனுக்கென வந்தது.
எழுந்து பதில் தர முடியாமல் தலையணையோடு முகம் புதைத்துக் கண்ணீர் சிந்தினார்.
- Select