Loading

 

கானம் – 1

“காதல் ரோஜாவே எங்கே நீ எங்கேகண்ணீர் வழியுதடி கண்ணே  கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்கண்மூடி பார்த்தாள் நெஞ்சுக்குள் நீ தான்

என்னானதோ எதானாதோ சொல்

காதல் ரோஜாவே

எங்கே நீ எங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே !”

எம். ஜி.ஆர் பேருந்து நிலையத்தின் காலை பரபரப்பிலும் தன் சோகத்தை கக்கிக் கொண்டு நின்றிருந்தது அந்த மினிப் பேருந்து நல்லக்கண்ணு !

 

ஒத்தக்கடை , நரசிங்கம்,  மேலூர்… என நல்லக்கண்ணு, செல்லும் இடங்களின் பெயரை எல்லாம் சாளரக் கண்ணாடியின் மேல் வெள்ளை நிற எழுத்தில் மக்களுக்கு எடுத்துக் காட்டியிருந்தது.

 

சற்று முன் தான் மக்களை அதக்கிக் கொண்டு பயணித்து வந்த நல்லக்கண்ணு அவர்களை பேருந்து நிலையத்தில் உமிழ்ந்து விட்டு காலியாக நின்றுக் கொண்டிருந்தது.

 

அதன் மீது தன் முழு உடலையும் சாய்த்து, உள்ளே கசிந்த எஸ்பிபி’ யின் சோகக் குரல்  வழியாக சோக உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்தான் இசைசேத்தன்.

 

பெயரை போலவே இசைப் பிரியன், இசைப் புயலின் தீவிர விசிறி ! அவன் பயணிக்கும் நல்லக்கண்ணு பேருந்தில் ஒலிக்கும் பாடல்கள் எல்லாம் இசைப்புயல் படைத்த  கானங்களே.

 

காலை வேளையில் அவனுக்கு மட்டுமல்ல வீட்டுச் சுமையை முதுகில் சுமந்து பயணிக்கும் ஒவ்வொரு  பயனாளிகளுக்கும் வாழ்க்கையின் பாரம் குறையுதோ இல்லையோ மனம் பாரம் குறைந்து, அந்நாளை உற்சாகத்துடன் தொடங்க உதவியாக இருக்கும் அந்தக் கானங்கள்.

 

காலையில் உற்சாகம் மூட்டும் உத்வேகப் பாடல்கள். மாலையில்  காதல் தென்றல் வீசும் கானங்கள்… இரவிலும் உறங்க வைக்கும் சுகமான ராகங்கள்  என எஃப் எமிற்கே கடும் போட்டியாகும் அவனது பாடல்களின் பட்டியல்.

 

ஆறு மணிக்கெல்லாம் பேருந்தின் சாவியை வாங்கி, நல்லக்கண்ணுவை இயக்க விரைந்திடுவார்கள் நெடுமாறனும் இசைசேத்தனும்…

 

அவன் ஓட்டுநராக, இவன் நடத்துநராக நல்லக்கண்ணு எனும் மினிப் பேருந்தில் பணி என்னும் பயணம் செய்கிறார்கள்.

 

மதுரையை சேர்ந்த ஒத்துக்கடையிலும் அதன் சுற்றி உள்ள சிற்றூர்களுக்கும் செல்லும் பேருந்து , அவ்வூர்களில் வசிக்கும் மக்களுக்கு பிரதான பேருந்து. விலை மலிவில் போக வேண்டிய இடத்தில் சீக்கிரமாக அழைத்து செல்லும்  மின்னல் விமானம் இந்தக் நல்லக்கண்ணு… அரசு பேருந்தைக் காட்டிலும் இந்தப் பேருந்துக்கு மவுசு அதிகம் தான் அவ்வூர்களில்…

காதல் பட்சிகளின் கூடாகும் நம்ம நல்லக்கண்ணு.

 

உப்பி இருந்த மெதுவடையை சாம்பாரின் தயவால் மேலும் ஊதியிருக்க, மேற்கொண்ட சட்னிகள்  வகைகள்  வேறு அலங்கரித்திருந்தன அவனது இலையை.

 

கையில் ஏந்திய படி  ருசித்துக் கொண்டே சேத்தனின் அருகே வந்து நின்றான் நெடுமாறன். யாருக்கோ வந்த விருந்தாக தன் வேலையில் கண்ணாக இருந்தான்.

 

அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான் சேத்தன்.

 

அவனது சோகக்கதை  முன்பே  அறிந்திருந்ததால் மாறன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

 

ஆனால் நண்பனாக சாப்பிட அழைத்தான். சேத்தன் மறுக்கவும் அவன் மட்டும் சாப்பிட்டு விட்டு கையில் வடையுடன் வந்து  ஆஜாராகி விட்டான்.

 

மாறன் சப்புக் கொட்டி உண்பது இவனுக்கு மேலும் கடுப்பானது. அவன் பார்த்த பார்வையிலே தள்ளிச் சென்று நின்ற மாறன் “நிம்மதியா சாப்ட விட்றானா?” புலம்பிய படி வடையை வேகமாக விழுங்கிக் கொண்டு கைக் கழுவச் சென்றான்.

 

சோகத்தின் ஒரு முகமாக வைத்துக் கொண்டு இருக்கும் சேத்தனின் அருகே வந்து நின்றான் அரசு பேருந்து ஊழியன் ஒருவன்,

 

“என்ன சேத்தா ! காலையிலே மாட்டுத்தாவணியவே விசிலடிச்சு அலப்பறைய கூட்டி ஒரு கலக்கு கலக்குவ ! இன்னைக்கு என்ன டா  அமைதியா நிக்கறே! மதுரையே அதிர பாட்டு போடுவ, இதென்ன நல்லக் கண்ணுவும் உன்னோட சேர்ந்து ஜோக கீதம் வாசிக்குது?” பேருந்தில் ஒரு கையை வைத்து இடையில் ஒரு கையை வைத்து வசதியாக நின்று கொண்டு கேட்டான் அவன்.

 

அவன் நிற்கும் தோரணையும் விசாரிக்கும் விதமும் குரலில் தொனிக்கும் கேலியும் தன்னை கடுப்படிக்க காலையிலே காக்கிச் சட்டையை மாட்டிக் கிட்டு வந்து நிற்கிறான் என்பது தெளிவாக தெரிந்து.

 

அமைதியாக இருந்த அவனது ஓயாத வாயும்  இப்போது தான் அவனிடம் திறந்தது…

“ம்ம்ம்… நல்லக்கண்ணுக்கு லவ் பெயிலியராம் ! அதான் நானும் அது கூட சேர்ந்து ஜோக கீதம் வாசிக்கிறேன்”

 

“லவ் பெயிலியரா? இல்ல லிவர் பெயிலியரா?” எனக் கேட்டு பெருங் குரலில் சிரித்தான் அவன்.

 

இவனும் பொறுமையை கடைப்பிடித்துக் கொண்டு நின்றான்.

 

மேலும் அவன் சும்மா நிற்காமல்”நல்லமணி வந்து உன் நல்லக்கண்ணுவ உரசிலியாக்கும்? அதான் ஜோக கீதம் வாசிக்கிதா?” என்று கேட்டு சிரிக்க, அவனை அடித்து விடலாமா என்று கூட யோசித்தான் இசைசேத்தன்.

 

“அதெல்லாம் உரசி உரசி இவன்(நல்லக்கண்ணு) பெயிண்ட் எடுத்தது தான் மிச்சம்… இவன் சோகத்துக்கும் நல்லக்கண்ணு சோகத்துக்கும் காரணம்,  இந்தா இவன் ஆளு  ரெண்டு நாளா வண்டியில வரலண்டு தான்”என்று அங்கு வந்தான் நெடுமாறன்.

 

“அதுக்கு தான் இம்புட்டு ஜோகமா டா ! நல்லா பாடிட்டு சந்தோசமா திரிஞ்சவனையும் கூட்டு சேர்த்து ஜோக பாடல பாட விட்டீயே டா ! அது சரி என்னாச்சி இவ ஆளுக்கு  ஏன் வரலியாம்?”

 

“இவன் ஆள் ஸ்கூல்ல ! டூர் போயிருக்காய்ங்கண்ணே அதான் ரெண்டு நாளா வரல, இவனும் இதோ இதுவும் ரெண்டு நாளா இப்படி தான் இருக்குங்க…”என்று சலித்து கொண்டான் மாறன்.

 

“ஆமா…! இவன் ஆளு கூட தான உன் ஆளும் வேலை செய்து ! அதுவும் டூர் போயிருக்கா ! நீ இம்புட்டு சந்தோசமா இருக்கறத பார்த்தா, உன் ஆளு டூர் போகல போல !”

 

“நீ வேறண்ணே !  அவளும் சேர்ந்து டூர் போனதால தான் இம்புட்டு நான் சந்தோசமா இருக்கேன்…”என்றான் சிரித்துக் கொண்டே,

“அடப்பாவி ! நீ என்ன டா பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்ற மாதிரி என் காதலி ஊருக்கு போயிட்டான்ற சந்தோசத்துல இருக்க, ஆனா இவன பாரு ஜோக  கீதம் வாசிக்கறான்”

 

“அண்ணே ! லவ்ல முதல் ஸ்டேஜ்ல. அவன் நிக்கறான்… அதான்  அவன் ஆளு  முகத்த பார்க்கலண்டு பீல் பண்றான். ஆனா நான் அதையும் தான்டி  ரொம்ப தூரம் வந்ததுனால அப்பாடா அவள பார்க்கலண்டு சந்தோசமா இருக்கேன்… அவ்வளவு  தான் செட்டாகற வரைக்கும் இந்த பிலிங் !செட்டாகிட்டா வேற பீலிங் அம்புட்டுத்தேன் லவ்வு !”

“என்ன எழவு லவ்வோ ! நான் வர்றேன் டாப்பா !”என்று  அவன் சென்று விடவும், இடையில் கைவைத்து முறைத்துக் கொண்டே அவன் முன்ன வந்து நின்றான் சேத்தன்.

 

“மை விழி இல்லாம ரொம்ப சந்தோசமா இருக்கீக போல!…” என்றவனின்  தோள்பட்டையில் கைவைத்து அழுத்தி”அப் கோர்ஸ் டா அப் கோர்ஸ் !” என்று தோளை குலுக்கி விட்டு சொன்னான்.

 

“இனி நீ சந்தோசமா இருக்க மாட்ட ! இப்போ ஒரு போன் வரும் எடுத்து பேசு !”என்று முடிக்கையில் மாறனின் வாசப்பில் வீடியோ கால் வந்தது அவனது மை(my) ‘ விழி தான்.

 

‘ ஐயோ !!! இவளா ?’

 

“என்ன டா பண்ணி தொலச்ச !” அவளது வீடியோ காலை ஏற்கும் முன்  இவனிடம்  திரும்பி கேட்க,

 

” அதுவா !”என்று அவனது அலைபேசியின் திரையை காட்டி”நீ பேசினதெல்லாம் குற்றாலம் போயிருக்க உன் மை விழியும் கேட்டுட்டா, ரொம்ப தூரம் போயிட்டேண்டு சொன்னீயே சொர்க்கத்துக்கா ? நரகத்துக்கா ? இல்ல குற்றாலதுக்காண்டு இப்ப தெரியும் மவனே !

 

“என நக்கல் செய்தவன், அச்சத்தில் மாறனின் விழிகள் பெரிதாய் விரிவதை கண்டு நமட்டுச் சிரிப்புடன்,

 

“சாவுடா சல்லி !”என்று சிவப்பு பொத்தானை சேத்தனே அழுத்தி விட, திரையில் தோன்றினாள் அவனது விழி..

 

திரை முழுக்க உஷ்ண மூச்சை வெளியிட்டு கொண்டிருக்கும் மை விழியின் அழகு முகமே இருக்க, இவனோ பயத்தில் உள்ளாற நடுங்கிக் கொண்டிருந்தான்.

 

“சாருக்கு நான் டூர் போனதுல அம்மூட்டு சந்தோசம் போல இருக்கே !”

“ச்சே ச்சே !அப்படி எல்லாம் இல்லையே  ! நீ இல்லண்டு எம்புட்டு ஜோகமா இருக்கேன் பாரு” என்று முகத்தை அப்பாவி போல வைக்க,

 

“நடிக்காத ராசா ! உன் பேச்சை எல்லாம் கேட்டுடு தானே போன் போட்றேன். சாரு காதல்ல ரொம்ப தூரம் போயிட்டீங்களாக்கும்… நான் ஊருக்கு  போனா உனக்கு சந்தோசமாக்கும்… அம்புட்டு சந்தோசப் பட்றவன் எதுக்கு என்னை காதலிக்கணும்? இத்தோட முடிச்சிக்கலாம்ல”

 

“அடியே !!! சும்மா வெளையாட்டுக்கு பேசிட்டேன்டி. அதை இந்த நாரப்பையன் போட்டுக் கொடுத்துட்டான் “என்று அவனுக்கு ஒரு முறைப்பை கொடுத்துட்டு விட்டு,

 

“அப்படியே உன் கால்ல காட்டுடி ஐசு இங்கனே விழுந்திட்றேன். ஆனா இப்படி எல்லாம் பேசாதடி  உன் மாமா நான் பாவம் இல்லியா  !”என்று மீண்டும் பால் வடியும் பச்சை குழந்தை போல முகத்தை வைக்க, அதில் மணமிறங்கிய இவளும்

“சரி பொலச்சி போ ! இப்படி மூஞ்சிய காட்டியே  தப்பிச்சிடற நீயி ! இனி இப்படியே பேசிட்டு  திரிஞ்ச , நான் இப்படி பேசிட்டு இருக்க மாட்டேன் பார்த்துக்க”என்று அழைப்பை துண்டிக்க,

 

முகத்தை தொங்க போட்டுக் கொண்டே சேத்தனை பார்த்தான்.

அவனோ”குத்தால அருவியில குழிச்சது போல் இருக்குதா ?!”எனப் நக்கலாகப் பாடி இளித்து வைத்தான்.

“ஏன் டா நான் சந்தோசமா இருக்கவே கூடாதுண்டு என் சந்தோசத்துல வந்து ஒரு லாரி  மண்ணள்ளி போட்றீயே நீயி! ஜோக ஆத்துல நீயும் மூழ்கி என்னையும் கழுத்த பிடிச்சி மூழ்க வைக்கணும் அதானே  உன் பிளானு!”

“அதே தான்”

“அடேய்!!!!!”என பல்லை கடிக்க,

“பச், காதுக்குள்ள வந்து கத்தாத டா  ! மறுபடியும் உன் மைவிழிக்கு வீடியோ கால் போடு !”

 

“ஏன் இன்னும் போட்டு கொடுக்க  பாக்கிண்டு எதுவும் இருக்கா ! அதையும் இப்போவே சொல்லனுமா?” என்று கேட்டாலும் அவளை அழைக்க விரல்கள் என்னவோ வேகமாக வேலை செய்தன.

 

“என்ன?”எனக் கேட்டு மீண்டும் திரையில் தோன்றினாள் மைவிழி.

 

“உன் நொண்ணன் தான் போட சொன்னான், என்னாண்டு அவன்ட நீயே கேளு !”அவன் புறம் திரையை காட்டினான்.

 

“என்னடா வேணும்?”

சேத்தன் வழிந்து கொண்டே, “அவளை காட்டு டி “என்றான்.

“எவளை?”

“பச் அவளை தாண்டி “என்று பல்லைக் கடிக்க, அவனை மேலும் கோபப்படுத்தாமல்  கொட்டும் அருவியையும் அதற்கு கீழேவும் காட்டி “தூரத்துல வயிட் சுடி தெரியுதா? அதான் உன் ஆளு !”என்று சிறு எறும்பாக தெரிந்தவளை சுட்டிக் காட்டிச் சொல்ல,  இவனுக்கும் காதில் புகை வராத குறை தான்.

பக்கத்தில் நிற்கும் நெடுமாறனோ வாயில் பிபியை ஊதுவதைப் போல சிரித்து வைத்தான். இவனுக்கோ கோபம் தலைக் கேறியது.

 

“என்ன டா உன் ஆள பார்த்தீயா ?”திரையைத் திருப்பி கேட்டவளை, தீயாக முறைத்தவன்

 

“வண்டி வண்டியா நான் கேக்கறதுக்குள்ள ஒழுங்கா அந்தப் புள்ளைய என்ட காட்டிரு ! இல்ல பொம்பள புள்ளைண்டு பார்க்க மாட்டேன் கெட்ட வார்த்தையில் பேசிப்புடுவேன். அப்புறம் சங்கட படாத… என்னடா இப்படி பேசிட்டாண்டு” என கோபமாக பேச, இவளோ வையில் கைவைத்து சிரிப்பை அடக்க முயன்றாள்.

“என்ன ரெண்டு பேருக்கும் லந்தா? வகுந்துபுடுவேன் வகுந்து !”என்று மீண்டும் மிரட்ட, வாய் விட்டு சிரித்தவள்”அட இரு டா காட்றேன்” என அப்படியே நகர்ந்து முன்னேறினாள்.

மாறனும் திரையை எட்டிப் பார்க்க, சேத்தன் “என்ன?”என்றான்.

“இல்ல  ஒரே பொண்ணுங்களா இருக்கே…!” என இழுக்க, திரையிலிருந்த வந்த அதட்டலை  கேட்டதும்
“இல்ல தங்கச்சி வருதா பார்த்தேன்”என்று அப்படியே மாற்றினான்.

“நீ ஒன்னும் கிழிக்க வேணாம் அங்குட்டு போய் நில்லு”என்றான் சேத்தன்.

“தினமும் அந்த வேலைய பார்க்கறது நீதாண்டு தெரியாதாக்கும் “என்று முனங்கி விட்டு நகன்றான்.

 

திரையில் அவளது முகம் பார்க்க, ஆவலாக காத்துக் கொண்டிருந்தவனுக்கு அவனது காதல் தென்றல் திரையில் பிரசன்னமானாள்.

 

முத்து முத்தான  தளி முத்துக்களை முகத்தில் பனிப் போல நிற்க, அதை பருகிடும் பகலவன் இங்கே ஏக்கமாக பார்க்க, நீரில் நீராடும் இளந்தென்றலை கண்டு காதல் மயக்கத்தில் சாய்ந்தான் இசைசேத்தன்.

கானம் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்