Loading

முகங்கள்!

அவை ஒரே வடிவத்தையும் நிறத்தையும் கொண்ட திடமான பொருள் அல்ல.

சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தண்ணீரால் ஆனது இந்த முகங்கள்.

அப்படி தான் தியாவின் முகத்தில் அது வரை தெரிந்த திடமான அலட்சியம் மறைந்து இருக்க முகத்தில் ஏதோ ஒரு பரிவு பரிசம் விரித்திருந்தது.

அந்த முகத்தையே விழியகலாது பார்த்துக் கொண்டு இருந்தான் திகழ் முகிலன். தியாவோ நாய்க்குட்டிக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.

“டாக்டர், பப்பிக்கு ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் நான் ஈவினிங் வந்து கூட்டிட்டு போறேன்… ” என்று அவரிடம் சொன்னவள் தன்னையே பார்வையால் படித்துக் கொண்டு இருந்த திகழிடம் திரும்பினாள்.

“மறுபடியும் வீட்டுக்கு போ… டிரெஸ் மாத்திட்டு போகணும்” என்று அவனிடம் சொல்லிவிட்டு காரினில் ஏறியவள் டைரக்டரின் நம்பருக்கு அலைப்பேசியில் அழைத்தாள்‌.

“வர தாமதமாகும்” என‌ அவரிடம் தகவலை சொல்லியவள், எதிர் பக்கத்திலிருந்து பேசியவரின் பதிலுக்கு சரியென்று சொல்லிவிட்டு அலைப்பேசியை அணைத்தவள், மீண்டும் ஜன்னலின் வழியே சாலையைப் பார்க்க துவங்கினாள்.

அவளின் விழிகள் அந்த காலை நேர பரபரப்பில் ஓடும் மனிதர்களையே இமை பிரிக்காமல் பார்த்துக் கொண்டு இருக்க, அவளை கலைத்துப் போட்டது திகழ் முகிலனின் தொண்டை கனைப்பு.

தியா தன் மோன நிலையில் இருந்து வெளிவந்து, கார் முன் கண்ணாடியில் தெரிந்த அவனது விழிகளை ஆழமாக பார்த்தாள்‌.  அவனும் வண்டியை ஓட்டியபடியே முன் கண்ணாடியில் தெரியும் அவளது முகத்தைப் பார்த்தான்.

இருவரது விழிகளும் ஒரே நேர்க்கோட்டில் ஒன்றையொன்று வெட்டிக் கொண்டன.

அவள் புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க, கேட்கலாமா வேண்டாமா என தாயம் ஆடிக் கொண்டு இருந்த திகழின் உதடுகள் அவனையும் அறியாமல் அவளுக்காக பேச முற்பட்டது.

அவள் எடுக்கப் போகும் இந்த முடிவால் அவள் வாழ்க்கைப் படகின் திசை மொத்தமாய் மாறிவிடும் என்பதை புரிய வைக்க நினைத்தான்.

அவன் கண் எதிரிலேயே ஒரு பெண் தன்னுடையை வாழ்க்கையை மொத்தமாக தீயிலிட்டு கொளுத்துவதை அவனால் காண முடியவில்லை‌‌.

உன் வாழ்க்கை, உன் தலையெழுத்து என அவனால் எல்லோரையும் போல கடந்து போக முடியவில்லை.

தன்னால் முடிந்தளவிற்கு அவளுக்கு எடுத்து சொல்லி முடிவை மாற்ற வேண்டும் என்ற வேகம் அவன் முகத்தில் இருந்தது.

“சொல்லு எதையோ சொல்ல நினைக்கிற போல” என்றாள் அவன் யோசனை ததும்பு முகத்தை கூர்மையாக பார்த்து‌.

“ஒரு சக மனுஷனா உன் கிட்டே பேச இந்த டிரைவருக்கு உரிமை இருக்கா?” அவனுடைய தொடக்கமே பீடிகையாக இருந்தது.

“நான் செய்யுற வேலையை வெச்சு யாரையும் எடைப் போட மாட்டேன்‌… மனுஷங்களை மனுஷங்களா மட்டும் மதிக்க தெரிஞ்சவ…”

அவன் கேள்வி நேராக இருந்தாலும் இவள் பதில் எடக்கு மடக்காகவே இருந்தது.  வார்த்தைக்கு வார்த்தை அவனுக்கு ஊசி குத்தினாள்.

அது திகழுக்கு புரிந்தே இருந்தாலும் நேராக விஷயத்திற்கு வந்து நின்றான்.

“நாய்க்குட்டி தவிக்கிறதை கூட தாங்க முடியாத நல்ல மனசு உனக்கு இருக்குலே.‌‌.. இப்படி‌ இரக்கமா இருக்கிற நீ இந்த மாதிரி வேலையை பார்க்கலாமா?”

“ஓ இந்த மாதிரி வேலைப் பார்க்கிறவங்களுக்கு அப்போ கருணையே இருக்காதுனு சொல்ல வர்றீயா?” சவுக்கை சொடுக்கின மாதிரி அவளிடம் வார்த்தைகள் சிதறின.

குழந்தை பதில் சொல்லத் தெரியாமல் வெறித்துப் பார்ப்பது போல அவளை மௌனமாய்ப் பார்த்தான்.

“இங்கே பாரு என் குணத்துக்கும் நான் செய்யுற தொழிலுக்கும் சம்மந்தம் இல்லை” என்றாள் வார்த்தைகளில் அழுத்தம் கூட்டி.

“ஆனால் உன் தொழிலை வெச்சு தான் எல்லாரும் இனி‌ உன் குணத்தை முடிவு பண்ணுவாங்க” என்றான் இவனும் பதிலுக்கு அழுத்தம் திருத்தமாக.

“யாரு முடிவு பண்ணுவாங்க?” என்று கேட்டவள் கார் இருக்கையில் இன்னும் இலகுவாக சாய்ந்து கொண்டாள்.

“சுத்தி இருக்கிற நாலு பேர் தான்” என்றவனின் பதிலில் “ஓ” என்று சுவாரஸ்யமாக கேட்பது போல் உதடு குவித்தாள்‌.

“ஓ அந்த நாலு பேர் என்னைப் பத்தி என்ன முடிவு பண்ணுவாங்க” என்றாள் கன்னங்களில் கையைத் தாங்கி ஹாரிபாட்டர் துடைப்பக்குச்சியில் பறந்த கதையை கேட்கும் குழந்தைப் போல.

“உன்னை நல்ல பொண்ணு இல்லைனு முடிவு பண்ணுவாங்க” என்று சொன்னபடியே காரை தியாவின் வீடு முன்பு நிறுத்தினான்.

“ஓ அப்போ ஒரு பொண்ணை நல்ல பொண்ணுனு எந்த criteria ல முடிவு பண்ணுவாங்க, அந்த நாலு பேரு” அவள் சுவாரஸ்யமாய் விழி உருட்டி கேட்டாள்.

தான் பேசுவதை ஆர்வமாய் கேட்கும் தியாவை கண்டு திகழின் மனதில் லேசாக நம்பிக்கை கொடி படரவும் வேகமாய் சொல்ல ஆரம்பித்தான்.

“நல்ல பொண்ணுனா பார்க்க குத்துவிளக்கு மாதிரி இருக்கணும்” என்று அவன் சொல்லவும் தியாவின் இதழ்களில் ஒரு கேலி சிரிப்பு துளிர்த்தது.

அதை கவனிக்காமல் இவன் மேலும் பேச்சை தொடர முற்பட்ட பொழுது தியா கையை நீட்டி அவனை இடை மறித்தாள்.

“குத்துவிளக்கு மாதிரினா நல்லா ஹைட்டா, முனையிலே கூர் கூரா அப்படி இருக்கணுமா?” அவள் அச்சு அசல் குத்துவிளக்கு அம்சத்தை வைத்து கேட்க அவன் முகத்தில் திணறல் திண்டாடியது‌ .

“இல்லை இல்லை அப்படி இல்லை… குத்துவிளக்கு மாதிரினா நல்லா தெய்வம்சத்தோட இருக்கணும்னு சொல்ல வந்தேன்” என்றான் வேகமாக.

“ஓ தெய்வம்சமானா எப்படி இருக்கணும்?” அவள் பதிலுக்கு பதில் கேள்வி கேட்கவும் திகழுக்கு மூச்சு வாங்கியது.

பட்பட்டென்று பதில் கேட்கும் குழந்தையிடம் மாட்டிக் கொண்ட அன்னையைப் போல திருதிருவென்று முழித்தான்.

ஆனால் தன் முயற்சியில் கொஞ்சமும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக மீண்டும் களத்தில் இறங்கி குதித்தான்.

“ஹான் அது வந்து வந்து…” என யோசித்தவன் பின்பு ஏதோ விடை கிடைத்தவனாக, “தெய்வாம்சம்னா, அமைதியா அடக்க ஒடுக்கமா இருக்கிறது” என்றான் வேகமாக.

“ஓ! அப்போ பத்ரகாளிலாம் தெய்வம் லிஸ்ட்லே வர மாட்டாங்களா?” அவள் கேலியாக சிரித்தபடி கேட்க, பாவம் திகழ் தான் மொத்தமாக திணறிப் போனான்.

எந்த பக்கம் போனாலும் கேட் போட்டு வில்லத்தனமாக சிரிக்கிறாளே!

என்ன செய்வது?

அவன் முகம் இயலாமையை தத்தெடுத்து இருக்க அவளோ கையை மடித்துக் கொண்டு அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாராய் ஆனாள்.

“சரி சொல்லு நல்ல பொண்ணுக்கு வேற என்ன  என்ன க்வாலிஃபிகேஷன்லாம் இருக்கணும்?” என்று புருவம் உயர்த்தி கேட்கவும் ஏற்கெனவே மொக்கை வாங்கியவன் திரும்பவும் வாயைத் திறப்பானா!!!

ஹ்ம்ம் ஹ்ம்ம்…

தன் திருவாய்யை லாக்கர் போட்டு மூடிக் கொண்டான்.

“நீ சொல்ற விளக்கம் எப்படி இருக்கணும் தெரியுமா… அதைக் கேட்டு அப்படியே நான் எடுத்த முடிவை மாத்திக்கிறா மாதிரி இருக்கணும். அப்படி மட்டும் நீ ஒரு வேலிடான காரணத்தை சொன்னேனு வெச்சுக்கோயேன், டிரெஸ் மாத்திட்டு அகெய்ன் ஷுட்டிங்க்கு கிளம்ப மாட்டேன்‌. இது உன் மேலே சத்தியம்” என்று சொன்னபடி கால் மேலே கால் போட்டு அமர்ந்து அவன் சொல்ல போகும் காரணத்தை கேட்க ஆவலாக இருந்தாள்‌.

அவ்வளவு தான் அதுவரை ஃப்யூஸ் போன பல்ப் போல இருந்த திகழின் முகம் சட்டென்று பளிச்சிட்டது. 

எதையாவது செய்து அவளை செல்ல விடாமல் தடுத்துவிடும் வேகம் அவனிடம் தெரிந்தது.

“பொண்ணுனா அச்சம், மடம்,‌‌ நாணம் பயிர்ப்போட இருக்கணும்” என்றவனின் பதிலைக் கேட்டு அப்போதும் அவள் முகம் திருப்தியை காட்டவில்லை.

“ஆமாம் வாட் இஸ் தட் மடம் அப்புறம் ஏதோ பயறு…” என்று யோசித்தவள் பின்பு நியாபகம் வந்தவளாக, “ஹான் பயிர்ப்பு…” என்றுள் நெற்றியில் தட்டி கொண்டவள் “ஆமாம் இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்” என்று அவனைப் பார்த்து கேட்டாள்.

அவ்வளவு தான் திகழின் கண்கள் பேய் முழி முழித்தது.

‘ஐயையோ சின்ன வயசுலே நாலு வார்த்தையை சொல்லி கொடுக்கும் போது ஹான் ஹானு மண்டையை ஆட்டுனேனே… அதுக்கு அர்த்தத்தை கேட்டு தொலைஞ்சேனா! இப்படி வசமா சிக்கிட்டேனே’ என தன்னையே நொந்தபடி தியாவை பரிதாபமாக பார்த்தான்.

“ஏன் இப்படி முழிக்கிற? மீனிங் தெரியாதா உனக்கு?” என்று அவள் கையை ஆட்டி கேட்கவும் அவன் பாவமாக இல்லை என்று தலையசைத்தான்.

“சோ சேட்! அப்போ என் முடிவை மாத்த முடியாது” என்று தியா உதட்டை சுழித்து அவனுக்கு ஒழுங்கு காட்டவும் திகழ் தலையை கவிழ்ந்தான்‌.

“ஆனால் சும்மா சொல்ல கூடாது… அரை மணி நேரம் எப்படி ஓட்ட போறேனு நினைச்சேன் வசமா நீ சிக்கிட்ட… போரடிக்காம‌ ஜாலியா போச்சு” என பின்கதவை திறந்து இறங்கிய தியாவை, முன்சீட்டில் அமர்ந்து இருந்த திகழ் குழப்பமாக பார்த்தான்.

“டைரக்டர் கிட்டே பேசும் போது இன்னும் ஷுட்டிங் ஸ்பாட் ரெடியாகலே லேட்டாவே வாங்கனு சொன்னாங்க… நல்ல வேளை நீயா‌ உன் வாயை கொடுத்து எனக்கு போரடிக்காம டைம் போக வைச்ச…  வரட்டா” என தியா சொல்ல அவன் முகம் ஒரு தினுசாக சென்றது.

‘அப்போ இவ்வளவு நேரம் என்னை வெச்சு என்டெர்டெயின்மென்ட் பண்ணிட்டு இருந்தாளா… இது கூட தெரியாம தான் நான் லூசு மாதிரி சீரியஸா பேசிட்டு இருந்தேனா?’ கேள்வியை தன் மனதுக்குள்ளே தான் கேட்டான்.

ஆனால் “ஆமாம்” என்ற பதிலோ அவளிடமிருந்து வேகமாக வந்தது.

அவ்வளவு தான் திகழுக்கு அடக்கி வைத்து இருந்த பொறுமை எல்லாம் பொறியல் சாப்பிட போய்விட்டது.

“சே உன் கிட்டே பேசுனேன் பாரு… என்னை அடிச்சுக்கணும்” என்றவன் சொன்னதோடு மட்டுமல்லாமல் ஸ்டியரிங் வீலின் மீது தன் தலையை நங்கு நங்கென்று மோத ஆரம்பித்தான்.

தியாவோ அதைப் பார்த்து பதறாமல் ‌ அவனிடம், “ஓய் என்னை ஷுட்டிங் ஸ்பாட்டுலே விட்டப்புறம் மண்டையை எப்படி வேணாலும் முட்டிக்கோ. அதுவரைக்கும் மண்டை பத்திரம்” என்று பொறுமையாக சொல்லிவிட்டு போனவளை கண்டு அவன் பிபி எக்கச்சக்கமாக எகிறியது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்