Loading

 

விடியல்!

எல்லா விடியலும் வெளிச்சத்தை கொண்டு வருவதில்லை‌.

சில வெளிச்சம் நம்மை இருளின் பாதையில் கொண்டு சென்று நிறுத்திவிடும்‌.

அப்படி தான் ஜன்னல் வழி தெரிந்த இந்த நாளின் விடியலும் தன் வாழ்க்கையை இருட்டின் சுரங்கப் பாதையில் கொண்டு செல்லப் போகிறது என்று அறிந்தே
விழி திறந்தான் திகழ் முகிலன்.

அவனுக்கு இமைகளை திறக்க பிடிக்கவே இல்லை‌. ஆனாலும் கண் திறந்து பார்க்காது இருந்தால் விடியல் விடியாமல் போய்விடுமா என்ன?

விடிந்தது…

அவன் வாழ்க்கையை மொத்தமாக இருளாக்கப் போகும் அந்த விடியலும் புலர்ந்தது.

மெல்ல விழி திறந்தான்.

மேற்கூரையில் மின்விசிறி மின்னல் வேகத்தில் சுழன்று கொண்டு இருந்தாலும் அவன் உள்ளம் முழுக்க ஏனோ புழுக்கம்.
 
புரண்டு படுத்தவன் மெத்தையின் அருகே இருந்த ஸ்விட்சை கை நீட்டி அணைத்தான்‌.

இப்போது அறையிலும் புழுக்கம்‌. அவன் மனதிலும் புழுக்கம்.

தனியாக புழுங்குவதற்கு பதில் தன்னோடு சேர்ந்து அறையும் புழுங்குவது அவன் வறண்ட மனதிற்கு ஏனோ இதமாக இருந்தது.

மனம்‌ என்பது அப்படி தான். எத்தனை கவலையாக இருந்தாலும் தனக்கு துணையாய் இருந்து இன்னொரு உருவும் அதே துன்பத்தை அடைகின்றது என்றால் குருட்டு ஆனந்தம் கொள்ளும்.

அப்படி தான் திகழ் தன்னை சுற்றி இருக்கும் தனிமை தாங்காமல்,‌ இந்த வீட்டை தனக்கு  துணையாக பாவித்தான்.

தியா கொடுத்து இருந்த அந்த வீடு அத்தனை சிறியதாகவும் இல்லை பெரியதாகவும் இல்லை.

விஸ்தாரமான ஹால், அழகான படுக்கையறை, நேர்த்தியான சமையலறை என ஒரு ஆள் வசிப்பதற்கு தாரளமாகவே அமைந்து இருந்தது அந்த இல்லம்.

உடலை சடவு முறித்தபடி எழுந்தவன்‌, தனது படுக்கையறையை ஒட்டி இருந்த ஜன்னல் கதவுகளைத் திறந்தான்.

சாளரம் திறக்கப்பட்டதும் அதன் வழியே வெளிச்ச கீற்றுகள் உள்ளே‌ அறைக்குள் படர, திகழின் முகத்திலும் லேசான தெளிவு பிறந்தது.

நிமிர்ந்து சூரிய பகவானின் கதிர்களை நேரடியாக சந்திக்க முயல, அவன் விழிகளை சட்டென்று பறித்தது அந்த பெண் மின்னல்.

மாடியில் நின்று கொண்டு யோகா செய்து கொண்டு இருந்த தியாவையே ஆழ்ந்துப் பார்த்தான்.

அலங்காரம் கலைந்த நித்திய தேவதையைப் பார்ப்பது போல இருந்தது அவளது தோற்றம்.

அஞ்சனம் தீட்டாத கருவிழிகள்…

ரத்த சிவப்பு சாயம் பூசப்படாத உலர் உதடுகள்‌.

காதோரம் குட்டியாய் இருந்த அந்த நட்சத்திர காதணி‌.

லட்சங்களில் புரளும் ஆடைக்கு பதிலாக மேலே ஒரு டீசர்ட் கீழே ஒரு ட்ராக் பேண்ட்.

எந்த அரிதாரமும் பூசாத அவள் உருவம் அவன்‌ மனதினில் ஆழப் பதிந்து போனது என்னவோ உண்மை.‌

நேற்று‌ அவள் எத்தனை‌ ஒப்பனை போட்டு இருந்தாலும் வெளிப்படாத அழகில் இன்று பூர்ணமான ஒரு ரம்யத்தை உணர்ந்தான்.‌

ஆனால் அந்த ரசனையை எல்லாம் பின்னுக்கு தள்ளி அந்த கேள்வி மட்டும் நெருடிக் கொண்டே இருந்தது

‘அழகா இருக்கா… ஆனால் ஏன் இப்படி ஒரு தொழிலுக்கு தன்னோட அழகை மூலதனமாக்கணும்? எதுக்கா நடிக்க வந்து இருப்பா?” என எண்ணியபடி ஜன்னல் கதவை அறைந்து சாற்றினான்.

ஏனோ தெரியவில்லை‌. இந்த தவறான முடிவால் நிறைய வேதனைகளை அவள் அனுபவிக்க போகும் முன்பே எதையாவது சொல்லி அவளை தடுக்க வேண்டும் போல இருந்தது.

ஒரு முடிவை தனக்குள் எடுத்தபடியே தனது ஆடையை எடுத்துக் கொண்டு நிதானமாக குளித்துவிட்டு லுங்கியை மட்டும் அணிந்து கொண்டு வெளியே வந்தான்.

கண்ணாடியின் முன்பு நின்று படியாமல் புரண்ட அடர் கேசத்தை வாறிக் கொண்டு இருந்த போது அவனது அலைப் பேசி அடித்தது.

“மோட்டரோலா மோட்டரோலா” என்று திரும்ப திரும்ப சொல்லி மினுங்கி கொண்டு இருந்த அந்த அலைப்பேசியையே ஏலியன் போல பார்த்து வைத்தான்‌.

அவள் இந்தா செல்போன் என கொடுத்த பொழுது ‘எனக்கு எதை உபயோகிக்க தெரியாது’;என்ற உண்மையை சொல்ல ஈகோ தடுக்கவும் ஜம்பமாக கை நீட்டி வாங்கிவிட்டான்.

ஆனால் இப்போதோ விடாமல் அலறும் அந்த அலைப்பேசியை எப்படி அணைப்பது என்றே தெரியவில்லை.

“ஏய் வாயை மூடித் தொலை கத்தாதே” என எரிச்சலாக கத்தியபடியே கதற கதற
அந்த செல்போனின் வாயை இறுக்கி பிடித்து நிறுத்த முற்பட்டான்.

அது என்ன மனிதனா வாயா? அடைத்ததும் சட்டென்று மூடிக் கொள்ள, அதுவோ இவன் கையை வைத்து மறைத்தும் விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

“உள்ளங்கை சைஸ்க்கு இல்லை இது போடற ஆட்டத்தைப் பாரு… அடச்சே இந்த கருமத்தோட வாயை எப்படி அடைக்கிறதுனு தெரியலையே” என வானவங்குடியில் இருந்து வந்தவன் பொறுமை இழந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்து கொண்டு இருந்தான்.

எவ்வளவு நேரம் அலைப்பேசியில் அழைத்தும் எடுக்காமல் போனவன் மீது கோபம் துளிர்க்க தியாவே அவனை தேடி வந்துவிட்டாள்.‌

தோட்டத்து வீட்டின் கதவை தட்ட முயன்ற போது தான் திகழின் இறுதி வார்த்தைகள் வந்து அவள்‌ செவிகளில் விழுந்தது‌.

இறுகிப் போன அவள் இதழ்களில் மெல்லிய புன்னகை கசிவு.

“ஏய் சீ வாயை மூடுனு சொல்றேன்லே… அப்புறம் அடிப் பிண்ணிடுவேன் டால்டா டப்பா” என அலைப்பேசியைப் பார்த்து கதறி கொண்டு இருந்தவனைக்‌ கண்டு அவளது புன்னகை மேலும் விரிந்தது.

வேகமாக தன் அலைப்பேசியை எடுத்து அழைப்பை துண்டித்தாள்.

உள்ளே துடித்துக் கொண்டு இருந்த அலைப்பேசி தன் உயிர்ப்பை நிறுத்திவிடவும் திகழ் பெருமூச்சுவிட்டான்.

‘அப்பா!!! தம்மாதூண்டு சைஸ்லே இருந்து என்னா துள்ளு துள்ளுடுச்சு’ என்று புலம்பியவனின் குரல் கேட்டு புன்னகை முகத்தோடு கதவைத் தட்டினாள்.

மேற்சட்டை அணியாமல் வெறும் லுங்கியை மட்டும் அணிந்து இருந்த, திகழ் ஏதோ ஒரு நியாபகத்தில் கதவை திறந்துவிட்டான்.

வெளியே நின்று கொண்டு இருந்த தியாவைப் பார்த்ததும் தான், மேற்சட்டை அணியாமல் ஒரு பெண்ணின் முன்பு நிற்கிறோம் என்பதை உணர்ந்தவன் சட்டென்று பதற்றம் கொண்டு கதவை ஓங்கி அறைந்து சாற்றினான்.

அவனின் அந்த செய்கையும் பதற்றமும் தியாவின் இதழ்கடையை உடைத்து புன்னகை நதியை பாயவிட்டது. 

அவசர அவசரமாக மேற்சட்டையையும் பேன்ட்டையும் மாட்டிக் கொண்டு கதவு இடுக்கு வழியே தயங்கியபடியே வெளியே எட்டிப் பார்த்த திகழைக் கண்டு புன்னகையை அடக்க முயன்றாள்.

“மேடம், நீங்க எதுவும்‌ என்னை தப்பா பார்க்கலைல?” என்றான் சங்கோஜத்துடன்.

எப்போதும் தழைய தழைய வேட்டி, முழுக்கை சட்டை என முழு உடையில் வலம் வருபவன், இன்று அரை ஆடையுடன் பெண்ணின் முன்பு நின்றுவிடவும் தயங்கி தவித்தான்.

அவனது கூச்சத்தைக் கண்டு புன்னகையை அடக்கி கொண்டு நிமிர்ந்தவள், “ஒரு சின்ன ஷால் விலகிப் போனதும் சபலப்படுற ஆம்பளையா நானு. நடுரோட்டுலே வெறும் ஷாட்ஸ் மட்டும் போட்டு சுத்துற பசங்களைப் பார்த்து பழகிப் போன பொண்ணு நான்”‌ என்று‌ சொன்னவள் சின்னதாய் ஒரு இடைவெளி‌விட்டாள்.

அது அவள் சொல்லிய வரிகளை அவன்‌ மனம் கிரகிப்பதற்காக தியா‌ கொடுத்த சந்தர்ப்பம்.

உண்மை தானே!‌

முழு உடையை அணிந்தே பெண்ணைப் பார்த்த சமூகம் அவள் ஆடை சிறிது விலகிப் போனாலும் குறுகுறுவென்று பார்க்கின்றது.

இதே சமூகம் தான், இலகுவான‌ உடையில் இருக்கும் ஆண்களை பார்க்கும்படி பெண்களின் கண்களை பழக்கிவிட்டது.

உடை தான் கற்பை அளக்கும் அளவுகோல் என்றால்… ஆதிகால குடி என்ன கற்பற்றவர்களா?

நூல் இல்லை என்றால் ஆடை வந்து இருக்காது.
ஆடை என்ற‌ ஒன்று இங்கே இல்லாமல் போய் இருந்தால் உடை கலாச்சாரம் என்ற சொல்லே உதிக்காமல் போய் இருக்கும்‌.

கற்பை ஆடைக்குள் புகுத்தி பதுக்கும் கலாச்சாரமும் இல்லாது போய் இருக்கும்‌‌.

அவன் செய்த தவறுகளிலிருந்து தப்பிக்க அவள் உடை தான் காரணம் என்ற ஒரு சாக்குபோக்கும் தோன்றாது  போய் இருக்கும் அல்லவா!

ஆணின் தவறுகளுக்கு பெண்ணை குற்றம் சுமத்தாமல் அவனே அவன் தவறுகளுக்கு காரணியாக நிற்க வைத்து தண்டிக்கப்பட்டு இருப்பான்…

நூலைக் கண்டுபிடித்து பெண்ணை ஆடைக்குள் புதைத்து,
அவளுக்குள் கற்பு உடையில் இருக்கிறது என்று சொல்லி
பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்த இந்த சமூகத்தின் நூதன அரசியலை புரிந்துக் கொள்வதற்காக அவனுக்கு நேரம் கொடுத்தாள்.

அவளுடைய வித்தியாசமான யோசனை இந்த சமூகத்தில் இருக்கும் யாருக்கும் புரிந்ததில்லை‌. இவனுக்காவது புரிகின்றதா என்ற தேடலோடு அவன் முகத்தைப் பார்த்தாள்.

ஆனால் அவனோ தன் மேற்சட்டையின் பட்டனை போடுவதிலேயே குறியாக இருக்க, சமூகத்தின்‌ இந்த சிக்கலான முடிச்சை புரிந்து கொள்ள முடியாத அதே சமானியன் தான் இவனும் என சட்டென்று புரிந்து கொண்டாள்.

‘நோ யூஸ்’ என்று‌ உதடுகளுக்குள் முணுமுணுத்துக் கொண்டவள்,
“நான் எதையும் தப்பா எடுத்துக்க மாட்டேன்… சீக்கிரமா கிளம்பி வா. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போகணும்” என்று அவள் சொல்லிவிட்டு செல்லவும் அவனிடம் தீனமான பெருமூச்சு வெளிப்பட்டது‌.

‘நல்ல வேளை எதுவும் தப்பா பார்க்கலை’ என‌ எண்ணியபடியே வேகமாக தன் வீட்டை பூட்டியவன் போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரை எடுத்தான்.

அவள் உள்ளே ஏறி அமர்ந்ததும் கார் ரகுராம் தாத்தா வீட்டை நோக்கி பயணிக்க துவங்கியது.

இருவருக்கும் இடையே மௌனத்தின் கனமான பனித்துளி விழுந்து கொண்டு இருக்க உதடுகள் இரண்டும் வார்த்தைகளின்றி உலர்ந்துப் போய் இருந்தது.

ஜன்னல் வழியே வெளியே பார்த்து வந்த தியா சட்டென்று, “ஸ்டாப்” என்று கத்தினாள்.

அவள்‌ வார்த்தையைக் கேட்டு காரும் கீறிச்சிட்டு நின்றுவிட, அவசரமாய் காரில் இருந்து இறங்கியவள் சாலையில் அடிப்பட்டு இருந்த ஒரு  நாய்க்குட்டியை நோக்கி ஓடினாள்.

அதுவரை காலை நேர பரபரப்பில் துடித்துக் கொண்டு இருந்த அந்த நாய்க்குட்டியை  கவனிக்காது இருந்த சமூகம், மேலே டைட் டீஷர்ட்டும் கீழே ஷார்ட்ஸூம் அணிந்து ஓடி வந்த தியாவை மட்டும் நிறுத்தி நிதானமாக பார்த்தது.

அவளின் அந்த உடை இந்த சமூகத்திற்கு மாறுப்பட்டதாய் இருக்க சில கண்களில் வக்கிரமும், சில விழிகளில் வெறுப்பும் என மாறி மாறி தியாவின் மீது விழுந்தது.

ஆனால் யாருடைய கவனமும் தீனமான முணங்கலோடு அழுது கொண்டு இருந்த நாய்க்குட்டி மீது செல்லவில்லை என்பது தான் அடிக்கோடிட்டு காட்டப்பட வேண்டிய உண்மை.

சுற்றி இருந்தவர்களின் பார்வையை அலட்சியமாய் கடந்தவள், ஓடிச் சென்று அந்த நாயை கையில் தூக்கி கொண்டு காரை நோக்கி ஓடினாள்.

“வெட்டினரி ஹாஸ்பிட்டல் பக்கத்துலே எங்கே இருக்கும்னு விசாரிச்சு போ” என்று அவனுக்கு கட்டளையிட்டபடி தன் உடை ரத்தக்கறை ஆவதை கூட பொருட்படுத்தாமல் அந்த குட்டி நாய்க்குட்டியை ஆதூரமாக தடவி கொடுத்தாள்.

“ஜூ ஜூ ஒன்னும் ஆகாது சரியா” என்று நாய்க்குட்டிக்கு சமாதானம் சொல்லி கொண்டு இருந்தவள் அவன் கண்களுக்கு முழுவதாய் வித்தியாசப்பட்டு போனாள்.

மனிதர்களைப் பார்த்தால்  காட்டும் அலட்சியத்தை அந்த ஐந்தறிவு விலங்கிடம் காட்டவில்லை.

அவள் என்ன தான் தமிழில் தெளிவாக பேசினாலும் அவள் சொற்களில் இருக்கும் செறிவு மனிதர்களுக்கு அத்தனை எளிதில் புரியவே புரியாது‌.

ஆனால் அந்த நாய்க்குட்டிற்கு புரியாத பாஷையான தமிழில் இவள் பேச அதுவோ புரிந்து கொண்டதைப் போல அவளைப் பார்த்து கண் அசைத்தது.

அந்த நாய்க்குட்டியோடு பரிவாக பேசியபடி வந்த தியாவை  கண்ணாடியில் திரும்பி திரும்பிப் பார்த்தான்.

இதுவரை அவளை குற்றப்பொருளாகவே பார்த்தவன் முதன்முறையாக அவளை சக மனிதியாக பார்த்தான்.

‘இவளும் நல்லவள் தானோ…‌ஏதோ ஒரு அழுத்தமான காரணத்தாலே தான் இந்த வேலைக்கு வர முடிவு பண்ணி இருப்பாளோ!’ முதன்முறையாக அவள் பக்கம் இருந்து யோசித்தான்.

வண்ணமற்றவள் என்று நினைத்து இருந்தவன் அவளிடம் முதன்முறையாக கருணையின் நிறமான வெந்நிறத்தை கண்டு கொண்டான்.

இனி தினம் தினம்‌ அவனுக்கு பல நிறங்களை காட்டுவாள், பல வர்ணத்தை குழைத்து உருவாக்கப்பட்ட அந்த வானவில் மகள்‌.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்