Loading

காத்திருப்பு!

சில காத்திருப்பு சுகமானது‌.

சில காத்திருப்பு ரணமானது.

சில காத்திருப்பு மனதை தவிக்க செய்யும்‌.

சில காத்திருப்பு மனதை வலிக்க செய்யும்‌.

அப்படி தான் திகழுக்கு அந்த காத்திருப்பு பல மடங்கு வேதனையை கூட்டியது‌.

‘சீக்கிரமா வந்து தொலையேன்’ என மனதுக்குள் அவளை திட்டியபடி நேரத்தை நெட்டி தள்ளி கொண்டு இருந்தான்.

அங்கே நின்று கொண்டு இருப்பதே அவனுக்கு அத்தனை அழுத்தத்தை கொடுத்தது.

இந்த கடினமான மனநிலையை மாற்ற  ஜன்னல் வழி திரும்பி அது காட்டும் காட்சிகளை காண முற்பட்டான்.

ஆனால் அந்த முக்கிய நெடுஞ்சாலையில் பல பைக்குகளில் ஆணும் பெண்ணும் கட்டிப் பிடித்தவாறு செல்வதும் கையை கோர்த்துக் கொண்டு சிரித்தபடி சாலையை கடப்பதும் என‌ நகரத்தின் கலாச்சார வேர்கள் அவன்  உதட்டை சுழிக்க வைத்தது.

‘சே என்ன ஊரு டா இது… கொஞ்சம் கூட ஒழுக்கம்னா என்னனு கூட தெரியாது போல’ என நினைத்தபடி வேகமாக தலையை உள்ளே திருப்பி கொண்டான்.

கார் ஸ்டியரிங் வீலில் தாளம் போட்டபடியே தான் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை திருப்பி திருப்பி பார்த்தான்‌.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகியும் தியா வெளியே வரவே இல்லை…

அந்த காருக்குள் தனியாளாய் வெட்டுவெட்டென்று அமர்ந்திருப்பதே அவனுக்கு அத்தனை அயற்ச்சியாக இருந்தது.

சுற்றி முற்றி பொழுது போக்கிற்காக ஏதாவது கிடைக்குமா என்று பார்க்க,
பின் சீட்டில் அவள் படித்து கொண்டு இருந்த புத்தகம் கண்ணை சிமிட்டி அவனை அழைத்தது.

‘புத்தகத்தை படித்தாவது நேரத்தை கழிக்கலாமே’ என்ற நல்லெண்ணத்தில் அந்த புக்கை கையில் எடுத்தான்.

ஆனால் அதில் எழுதப்பட்டு இருந்த முதல் வாக்கியமே அவன் வயிற்றை பிரட்ட செய்வதாய்… வேக வேகமாக திருப்பி அந்த புத்தகத்தின் அட்டைப்பக்கத்தை பார்த்தான்.

அதில் இரண்டு நல்ல பாம்புகள் பிணைந்து இருப்பது போல ஒரு ஆணும் பெண்ணும் பிணைந்தபடி இருந்தனர்.

அட்டைப்படத்தைப் பார்த்து புத்தகத்தை படிக்கும் சமூகத்தால் வார்த்து எடுக்கப்பட்டவன் அவன்…  உள்ளிருக்கும் வாக்கியங்களை முழுதாக படிக்காமல் சட்டென்று புத்தகத்தை மூடி வைத்து விட்டான்‌.

‘பாவி பாவி எந்த மாதிரியான புக்கை படிச்சுட்டு வந்து இருக்கா’ என எண்ணியபடியே அந்த புத்தகத்தை தூக்கி அவள் அமர்ந்து இருந்த இருக்கையில் விசிறி எறிந்தான்.

அந்த எழுத்தை தொட்ட அவன் கைகள் புழுவாய் துடிக்க,  ஒவ்வாமையில் கைகளை திருப்பி திருப்பி உதறி கொண்டான்.

காலையில் இருந்தே அவன் உணர்வுகளோடும் இதயத்தோடும் விளையாடும் தியா அவனை சோர்வடைய செய்துவிட்டாள் என்பது மறுக்க முடியாத உண்மை.  எப்படியாவது இங்கிருந்து தப்பித்து ஓடிவிட வேண்டும் போல இருந்தது அவனுக்கு.

‘கடவுளே இப்படிப்பட்ட பொம்பளை கிட்டே இருந்து தப்பிக்க எனக்கு ஏதாவது ஒரு வழி காட்டேன்.‌.. ஒரு அரை நாள் கூட  இவளோட இருக்க முடியலையே. இதுலே ஒரு வருஷம் எப்படி இருக்க போறேனு நினைச்சா இப்பவே மூச்சு மூட்டுது’

மனது நிகழும் கணங்களின் நரக நொடிகளை கண்டு எதிர்காலத்தை நினைத்து இப்போதே மிரண்டது.

அவன் எதிர்காலப் பட்டத்தின் கயிறைப் பிடித்து வைத்து இருப்பவளோ எந்த ஒரு அலட்டலுமின்றி அந்த திரையரங்கில் இருந்து நடந்து வெளியே வந்தாள்.

அவளைப் பார்த்ததும் இவன் எரிச்சலாக முகத்தை சுருக்கினான்.

‘வந்துட்டா ராட்சஷி’ என எண்ணியபடி காரின் கியரை ஓங்கி மிதித்தான்.

அது இவன் கொண்ட கோபத்தைப் போல சிறுத்தையாய் சீறிக் கொண்டு அவள் முன் வந்து இருந்தது‌.

பின் கதவை திறந்து உள்ளே அமர்ந்தவளின் பார்வை அந்த புத்தகத்தின்‌ மீது படிந்தது‌.

அவள் வைத்துவிட்டு வந்தது போல இல்லாமல் இடம் மாறி கிடந்த புத்தகம் அவளின் நெற்றியை சுருக்க வைக்க, அவனை ‌நிமிர்ந்துப் பார்த்தாள்‌.

“என் புக்கை எடுத்து படிச்சியா?” அவளின் கேள்வி நேராய் இருந்ததைப் போல அவனது பதிலும் நேர்மையாகவே வந்தது.

“ஆமாம் பொழுது போகலைனு படிக்க புக்கை எடுத்தேன்‌‌… ஆனால் உள்ளே பார்த்த அப்புறம் தான் புரிஞ்சது அது படிக்கவே கூடாத கேவலமான புக்னு…” என்றவன் முகம் போன போக்கைப் பார்த்து அவள் கடினமான இதழிலும் ஒரு கீற்று புன்னகை துளிரவே செய்தது‌.

தனக்கு கார் ஓட்டப் போகிறவன் எப்படி இருப்பானோ என்ற கவலை மேகம் திகழைப் பார்த்ததும் விலகிவிட்டது. 

உண்மையை நேருக்கு நேர் சொல்லி தன் பிடித்தமின்மையை எந்த மேற்பூச்சும் இல்லாமல் அப்படியே காட்டும் இந்த திகழ் முகிலன் அவளை புருவம் உயர்த்த செய்தான் என்பது மறுக்க முடியாத நிஜம்.

உதடுகளில் துளிர்த்த புன்னகையை அடக்கி கொண்டு, “அப்போ எந்த புக்கை படிச்சு உங்க ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ரெடியாவீங்க மிஸ்டர்?” என்றவளின் கேள்வி அவன் காதுகளை பொத்த வைத்தது.

பிடிக்காத உணவைத் தொட்டது போல அவள் வார்த்தைகள் செவியை தொடுவது பிடிக்காமல் முகத்தை அஷ்டகோணலில் வைத்தான்.

“எந்த விஷயமும் படிச்சு பார்த்த அப்புறம் தான் நல்லதா கெட்டதான்ற முடிவுக்கு நம்மாலே வர முடியும்… படிச்சு பார்க்காம வெறும் அட்டைப்படத்தைப் பார்த்து இது தப்புனு எப்படி முடிவு பண்ணலாம்?” கேள்வியில் அம்பின் கூர்மை.

அதன் தாக்கம் சரேலென்று திகழை நிமிர்த்தியது‌. இவளிடம் எந்தப் பேச்சு எடுத்தாலும் அது இப்படி தான் முடிகிறது‌.

இனி இவளிடம் எதுவுமே பேசவே போவதில்லை என்ற முடிவோடு அவன் திரும்பிக் கொண்டான். உன் கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்ற ஒரு அலட்சியமான தோரணை அவனிடம் வந்துவிட்டது‌.

“மேடம் உங்க பிரசங்கத்தை கேட்கிறதுக்காக நான் இங்கே வரலை…” என்று நிறுத்தி நிதானமாக சொன்னவன் “காரை வீட்டுக்கு விடலாம் தானே? இல்லை வேற எங்கேயாவது போகணுமா?” என தன் வேலையில் மட்டும் கவனமாக இருந்தான்.

அவனைப் பார்த்து ஏதோ சொல்ல வந்தவள் அவனின் இறுகிய முகத்தைக் கண்டு, “காரை வீட்டுக்கே விடு” என்று விலாசம் சொல்லிவிட்டு தன் புத்தகத்தில் மீண்டும் ஆழ்ந்தாள்.

அந்த புத்தகத்தில் இருந்து கண்ணை எடுக்காமல்  உற்றுப் பார்த்து மனப்பாடம் செய்து கொண்டு இருந்தவளை கண்ணாடி வழியே எரிச்சலாக பார்த்தபடியே அரை மணி நேரத்தில் அடைய வேண்டிய அந்த இடத்தை பதினைந்தே நிமிடத்தில் கடந்து இருந்தான் அவன்.‌

காரை நிறுத்திவிட்டு அவள் இறங்குவதற்காக கதவை  திறந்துவிட்ட திகழ், நிமிர்ந்து எதிரில் இருந்த அந்த வீட்டைப் பார்த்தான்.

பிரம்மாண்டமே மறுப்பிறப்பு எடுத்தது போல அமைந்து இருந்தது அந்த கட்டிடம்.

ஷுட்டிங்கிற்கு பயன்படுத்தப்பட்ட அந்த வீடு இந்த அரண்மனை போன்ற வீட்டிற்கு கால் வாசி கூட பெறாது.

அத்தனை விஸ்தீரணமாக இருந்தது.

எழிலோவியமாக இருந்த அந்த வீட்டை
இமை தட்டாமல் பார்த்தவனை, கண்டபடியே காரில் இருந்து இறங்கினாள்.

“பார்த்து வாய்க்குள்ளே ஈ போயிடப் போகுது…” என்று கிண்டலாக சொல்லவும் சட்டென்று நிகழ்விற்கு வந்தவன், தியாவை முறைத்தபடியே கார் கதவை மூடினான்.

ஆனால் அவளோ அவன் முகபாவனையை லட்சியமே செய்யாமல்
“காரை போர்டிகோவிலே விட்டுடு” என்று சொல்லியவாறே தோட்டத்து வீட்டு சாவியையும் ஒரு போனையும் அவனிடம் நீட்டினாள்.

“நீ தங்குறதுக்கான வீடு பின்னாடி இருக்கு‌… இந்த ஃபோன்லே என் நம்பர் சேவ் பண்ணி இருக்கேன். எப்போ கால் பண்ணாலும் என்னை வெளியே அழைச்சுட்டு போறதுக்கு ரெடியா இருக்கணும். காட் இட்” என்றவளின் கட்டளை கேட்டு அவன் தலை தன்னால் இசைந்து கொடுத்தது.

“ம் ஓகே‌‌… இப்போ நீ போகலாம்” என்று‌ அவனிடம் சொன்னவளின் நீளமான கால்கள் அந்த பளிங்கு போன்ற மாளிகைக்குள் நுழைய முற்பட்ட சமயம்
வாயிலில் கீறிச்சுட்டு நின்றது மற்றொரு கார்.

அதில் இருந்து வெளிப்பட்ட உருவத்தைக் கண்டு அது வரை அமைதியாய் இருந்த தியாவின் முகத்தில் உணர்வுகள் ஆர்ப்பரித்தது.

முன் நெற்றியில் விழுந்த வழுக்கை அவர் ஏராளமான வருடங்களை விழுங்கி வாழ்க்கை அத்தியாயத்தின் கடைசி பக்கத்தில் இருப்பதை சொல்லாமல் சொன்னது.

வயது முதிர்ந்து இருந்தாலும் பார்வை இளமையை தத்தெடுத்து இருந்தது.

தியாவின் உடல்மொழியில் இருந்த அதே அலட்சியத்தை அந்த மனிதரின் உடலும் தத்தெடுத்து இருந்தது.

தன் வீட்டிற்குள்ளே நுழைய முயன்ற அவரை பார்வையால் எரித்தவள், வேகமாக உட்புறம் திரும்பி “குமார் அண்ணா” என்று சப்தமாக குரல் கொடுத்தாள்.

அவள் கூப்பிட்ட வேகத்திற்கு கையில் நோட்டை தாங்கியபடி அவளின் முன்பு பம்மி கொண்டு வந்து நின்றார் அவர்.

அவரை கோபமாக பார்த்தவள் வாசலில் நின்று இருந்த பெரியவரை சுட்டிக் காட்டி, “இந்த ஆளுக்கு நான் இங்கே தான் இருக்கேன்ற உண்மையை நீங்க தானே சொன்னீங்க?” அடக்கப்பட்ட குரலோடு முடிந்தளவுக்கு பொறுமையாகவே கேட்டாள்.

அவர் ஆமாமென்று தலையசைக்கவும் இல்லை‌.
இல்லையென்று மறுக்கவும் இல்லை…
மௌனத்தை கையில் பிடித்துக் கொண்டு நின்றார்.

அவரின் மௌனமே ஆமாம் என்ற பதிலை சொல்லாமல் சொல்லிவிட, தியாவின் முகத்தில் சட்டென்று இருள் கவ்வியது.

“சே!!! நான் கடைசியா நம்புன நீங்களும் துரோகம் பண்ணிட்டிங்கள்ல… அந்த ஆளுக்கு விசுவாசமா இருக்கிற நீங்க எனக்கு வேண்டாம்… வெளியே போங்கண்ணா” என்றாள் ஆத்திரமாக.

“வேண்டாம் பாப்பா, இளமை இருக்கிற வரைக்கும் தான் இந்த ஆட்டம் லாம்… அப்புறம் காலத்தோட கேள்விக்கு பதில் சொல்லி ஆகணும்” என குமார் அவளைப் பார்த்து சொல்ல அவளின் உதடுகளில் இகழ்ச்சியாய் ஒரு வளைவு‌.

“யாரோட உபதேசமும் எனக்கு தேவை இல்லை… உங்களை வெளியே போக சொன்னேன்” என்றவளின் இறுகிப் போன குரல் மௌனமாய் குமாரை வெளியேற வைத்தது.

வெளியே வந்த குமாரின் தோளை தட்டி கொடுத்தபடியே, கேட்டின் வெளியே நின்று கொண்டு இருந்த அந்த பெரிய மனிதர் தியாவைப் பார்த்தார்.

“தியா… நீ ஏதோ தப்பான படத்துலே நடிக்கிறதா எனக்கு கிடைச்ச தகவல் உண்மை தானா?” என்று கேட்டவரின் முகத்தில் பதற்றம் நிறைந்து இருந்தது. இல்லையென்று மறுத்துவிட மாட்டியா என்ற ஏக்கத்தை சுமந்து இருந்தது அந்த விழிகள்.

ஆனால் அவரது ஏக்கத்தை தவிடுபொடியாக்கி ஒலித்தது தியாவின் குரல்,  “ஆமாம் உண்மை தான்.  எனக்கு நடிக்க பிடிச்சு இருக்கு நான் நடிக்கிறேன்… சோ வாட்! இதனாலே உன் மானம் மான்மார்க் குடைப் பிடிச்சு போயிடுச்சா என்ன? ஒழுங்கா வீட்டை விட்டு போயா” என்றாள் ஆத்திரம் தாங்காத குரலில்.

“தியா நீ தப்பு பண்ற… இப்போ உனக்கு சரினு தோணுறதுலாம் பின்னாடி ஒரு நாள் தப்பா தோணும். உன் ஃபெமினிஸ்ட் பேச்சை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு ஒழுங்கா என்‌ பின்னாடி வா…” அவளிடம் கெஞ்சலும் கட்டளையுமாக பேசிக் கொண்டு இருக்கும் போதே அவர் அலைப்பேசி மினுங்கி அடங்கியது.

அதில் வந்து விழுந்த காணொலியைப் பார்த்ததும் பல்லைக் கடித்தபடி தியாவைப் பார்த்தார்.

“____ தியேட்டருக்கு போனியா?” என்று கேட்கவும் “யா போனேன்” என்றாள் அசட்டையாக தோளைக் குலுக்கி.

“நீ அந்த தியேட்டருக்குள்ளே போனது இப்போ சோஷியல் மீடியா ஃபுல்லா வைரல் ஆகி இருக்கு… பாவி என் மானத்தையும் உன் மானத்தையும் சேர்த்தே வாங்கிக்குறீயே” என்று அவர் மகளுக்காக கவலைப்படவும் அவளோ கவலையா தனக்கா என்பது போல உணர்வற்ற குளமாய் கலங்காமல் நின்று இருந்தாள்.

“செக்யூரிட்டி அந்த ஆளை  வெளியே தள்ளு… என் லைஃப்பை ப்ரீயா வாழ விட மாட்டேங்குறானு தான் இங்கே வந்தேன்… ஆனால் இங்கேயும் வந்து உயிரை எடுக்கிறான் குடும்ப பெருமை சொல்லி” என்று செக்யூரிட்டியிடம் சலிப்பாக சொன்னவள் ‌திரும்பி அந்த பெரியவரைப் பார்த்தாள்.

“நல்லா கேட்டுக்கோ யா… இனி நான் என் இஷ்டப்படி தான் வாழுவேன் அதை தடுக்க என்னைப் பெத்த உனக்கே உரிமை இல்லை புரியுதா” வார்த்தைக்கு வார்த்தை சொற்களில் அனல் பறந்தது.

இனி உன்னிடம் பேச ஒன்றுமில்லை என்பது போல அவரை திரும்பி கூட பாராமல் வீட்டிற்குள் சென்றவளை திகழ் திகைத்துப் பார்த்தான்.

“ஐயா நீங்க பணம் தர மாட்டேனு சொன்னதாலே பாப்பா இந்த தப்பான முடிவு எடுத்துடுச்சு போல‌… பாப்பா கேட்ட பணத்தையும் அவங்க கேட்ட இன்னொரு கோரிக்கையும் நிறைவேத்திட்டா இந்த முடிவை தியா மா மாத்திப்பாங்கனு தோணுது” என்று குமார் சொல்லவும் திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்தார் அந்த முதியவர்.

“கோடி ரூபாய் கொடுத்தாலும் என் பொண்ணு அதுலே நடிக்க மாட்டா…அவள் என்னை சும்மா பயமுறுத்தி பார்க்க நினைக்கிறா குமார். எவ்வளவு தூரம் போறானு நானும் தான் பார்க்கிறேனே”‌ என்று‌ சொன்னவர்‌ முகத்தில் மகளுக்கு குறையாத திமிரும்‌ அலட்சியமான பாவனையும் குடிக் கொண்டு இருந்தது.

அங்கே நிகழ்ந்த நிகழ்வுகளைப் பார்த்து திகழ் தான் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் குழம்பிப் போய் நின்றான்.

‘இவ்வளவு நேரமாக பெற்ற மனிதனையா வார்த்தை கொண்டு சவுக்கால் அடித்தாள்!’ அவரின் மீது தன்னையறியாமல் அவனுக்கு இரக்கம் சுரந்தது.

‘மகளை‌ ‌சரியாக வளர்க்காமல் தவறிவிட்டோமோ!’ என்ற தவிப்பை சுமந்து இருந்த அவரின் முகத்தை கண்டு இவனின் வேர்கள் நெகிழ்ந்தது.

இப்படிப்பட்ட பெண்ணை பெற்றதற்காக கலங்கப்பட்டு நிற்கும் அவரைப் பார்த்தான். தன் தகப்பனையே கொஞ்சமும் மதிக்காது உள்ளே சென்று கதவைப் பூட்டி கொண்ட தியாவை திரும்பிப்  பார்த்தான்.

இந்த இளமை… இந்த இளமை தானே இவளை இப்படி ஆட வைக்கின்றது.

நல்லது எது கெட்டது எது என தெரியாமல் கலாச்சரம் அற்ற இந்த குணம் கொண்டு, இவளே தன்  வாழ்க்கையை சிதையில் தள்ளி கொள்கின்றாளே!

தீ தொடாதே என்று எச்சரித்தாலும் தொட்டே தான் தீருவேன் என்று அடம் பிடிக்கும் அவளை‌‌ என்ன தான் செய்ய முடியும்.

தொடட்டும்… !!!

ஒரு தரம் தொட்டால் தான் அந்த அனுபவம் அவள் வாழ்க்கை முழுக்க சுட்டுக் கொண்டே இருக்கும்.

அப்போது புரிந்து கொள்வாள்… அறிவுரைகள் ஏன் முன்பே சொல்லப்படுகின்றது என்று.

இப்படி ஆட்டம் போடும் இவளின் கால்களை காலம் சங்கிலி போட்டு கட்டும் நாள்‌ வெகு தூரம் இல்லை என
எண்ணியபடியே தனக்கு அளிக்கப்பட்ட தோட்டத்து வீட்டிற்குள் நுழைந்தான் திகழ்முகிலன்.

அவன் முணுமுணுத்துக் கொண்டு செல்வதையே தூரத்தில் இருந்து இமை தட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் தியா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்