Loading

நீதான் என் காதல் மழை 9

வீட்டிற்கு வந்த குமரன் நடந்ததை சொல்ல…

தன் விருப்பப்படி ஹரனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தாலும் யாழி இப்படி எதும் தான் செய்திருப்பாள் என நினைத்த சுலோச்சனா பிள்ளையின் விருப்பம் தெரியாது தான் செய்யவிருந்த முட்டாள் தனத்தை நினைத்து வருந்தினார்.

“எவ்ளோ சீக்கிரம் முடியுமோ கல்யாணத்தை நடத்தி வச்சிடலாம் மாமா” என்று வீரபாண்டியிடம் சொல்லிய சுலோச்சனா கண்களை புடவை முனையில் துடைத்தவராக உள்ளே சென்றுவிட்டார்.

ராஜேந்திரன்… வெண்ணிலா, குணா, மதி மூவரையும் பல வருடங்களுக்குப் பின்னர் பிடி பிடியென வார்த்தையால் பிடித்துவிட்டார்.

“ஷப்பா… ரொம்ப நாளுக்கு அப்புறம் மிஸ்டர்.ராஜேந்திரன் இஸ் பேக் ஆன் ஃபயர் மாதிரி இருந்துச்சு” என்று தலையை உலுக்கிக் கொண்டான் குணா.

“சாரி மாமா” என்று நிலா குமரனிடம் சொல்ல, “விடு அம்மாடி” என்றிருந்தான் குமரன். அவனுக்கு தான் தன்னுடைய நிலா கொஞ்சம் முகம் வாடினாலும் பொறுக்காதே!

__________________________

அஜய் நிகிலுக்காகக் காத்திருப்பவனாக வரவேற்பறை இருக்கையில் அமர்ந்து அலைபேசியை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

“சீக்கிரம் சாப்பிட்டு எழுந்திரு யாழினி. தின்க்ஸ் எடுத்து வைக்க ஹெல்ப் பண்றேன்” என்றார் காந்தள்.

“இருக்கட்டும் அத்தை. நான் எடுத்துக்கிறேன்” என்ற யாழி, பாதி உணவோடு எழுந்து சென்று கை கழுவி வந்தாள்.

“உனக்கு சிரமமா இருக்கும் யாழி. நான் உதவி செய்றேன்.”

“பரவாயில்ல அத்தை. வார்ட்ரோப் காலி பண்றது தான் அதிக வேலை. மத்தது எல்லாம் ஓகே தான். அதிகம் எதுவுமில்லை” என்ற யாழி அறைக்குள் சென்றிட, “அவள் முகம் வாடி இருக்கு. சரியா சாப்பிடக் கூட இல்லை. நீங்க பண்ணதுக்கும் அவ பண்ணதுக்கும் சரியாப்போச்சு ஒழுங்கா அவளோட பேசு” என்று மகனிடம் கூறினார் காந்தள்.

“எது நாங்க பண்ணதும் அவ பண்ணதும் ஒண்ணா” என்ற அஜய், “கொஞ்சமும் யோசிக்க மாட்டாளா?” என்று வெடித்து, “நான் இல்லைன்னா வாழ்க்கையே இல்லையா அவளுக்கு?” எனக் காட்டமாகக் கேட்டான்.

“ஆமாம் இல்லை. நீதான் என் வாழ்க்கை மாமா” என்று அறை வாயிலிலிருந்து சொல்லியிருந்தாள் யாழினி.

“ஒழுங்கா அவளை உள்ள போய் செய்ய வேண்டியதை செய்ய சொல்லும்மா. திரும்ப அடிச்சிடப்போறேன். கோபம் கோபமா வருது” என்றான்.

“உங்க சண்டைக்கு நடுவில் என்ன இழுக்காதிங்க. என்னமும் பண்ணிக்கோங்க” என்ற காந்தள், “அந்த மாடல் பொண்ணு வந்தா நல்ல மாதிரி தங்க வை. நான் தூங்குறேன். அசதியா இருக்கு. வரவரைக்கும் உட்கார்ந்திருக்க முடியும் தோணல” என்றார்.

“இப்படி இருந்துட்டு தான் அவளுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா கேட்டுட்டு இருந்தீங்களா?” என்று முறைத்தான்.

“அவளுக்கு நான் செய்யணுமே அருளு. வேற யார் செய்வா” என்றவர், “முடியலனா எழுப்பு யாழி” என்று உள்ளே சென்றுவிட்டார்.

மீண்டும் அஜய் அலைபேசிக்குள் கவிழ்ந்து கொண்டான்.

யாழியும் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு மேலே சென்று வெண்ணிலாவின் அறையில் வைத்துவிட்டு வந்தாள்.

அஜய் எப்படியும் உதவிட வருவானென்று தான் யாழி காந்தள் கேட்டதற்கு வெண்டாமெனக் கூறினாள்.

அஜய் வராமல் இருக்க, செய்து கொண்டிருந்ததை பாதியில் நிறுத்திய யாழி,

“என்னால எடுத்து வைக்க முடியாது” என்று அவன் முன் வந்து நின்றாள்.

அஜய் ஏன் எனும் விதமாக கூர்மையான பார்வையோடு அவளை ஏறிட்டான்.

இவ்வளவு நேரமும் தன் முகம் பார்க்காது போக்கு காட்டியவன் தற்போது பார்த்ததே போதுமென நினைத்த யாழி சட்டென்று அவன் மடி மீது அமர்ந்து மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்.

“சாரி மாமா. ஏன் மிர்ச்சி மாதிரி காரமா முகத்தை வச்சிட்டு இருக்க. பேசு மாமா” என்றாள். அவனின் தாடையை கையால் பிடித்துக்கொண்டு.

“எழுந்திரு” என்று சொல்லியவன் குரலில் அத்தனை காட்டம்.

“மாமா…” யாழி சிணுங்கிட,

“இம்சை பண்ணாதடி” என்றான்.

“போடா” என்று எழுந்தவள் எதையும் எடுத்து வைக்கவில்லை. அவனிடம் கோபம் கொண்டு மாடி ஏறி, அங்கிருக்கும் கூடத்து கோச்சில் சுருண்டு படுத்துவிட்டாள்.

“இவளை” என்று பின்னால் வந்து பார்த்தவன், அவள் கண்மூடி படுத்திருக்க, தானே எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

உடையெல்லாம் யாழியே எடுத்து வைத்திருக்க, அவளின் புத்தகங்கள், ஓவியம் வரைவதற்கான பொருட்கள், இன்னும் சில பொருட்கள் என எல்லாம் அஜய் தான் எடுத்து வந்து அவளுக்கு ஏற்றார் போன்று அறையில் சரிசெய்து பொருத்தியும் வைத்தான்.

மீண்டும் கீழே வந்து எதுவும் விட்டு விட்டோமா என அஜய் அறையை ஆராய்ந்திட, மேலிருக்கும் கப்போர்டில் நிறைய கான்வாஸ் அட்டைகள் இருப்பது தெரிந்தது.

அஜய் எட்டி எடுக்க எடுக்க கிட்டத்தட்ட முப்பது ஓவிய அட்டைகள். எல்லாம் அஜய்யின் முகம்.

அஜய் மலைத்துப் போய் நின்றான்.

“இவ்வளவு வரைந்து வைத்திருக்கிறாளா?” அஜய்க்கு அவளின் அதீத காதலில் பயம் தான் வந்தது.

‘ஒருவேளை அவள் மீது தனக்கு காதல் வராமல் இருந்திருந்தால்?’ அவள் இன்று செய்யவிருந்த செயல் மனதில் தோன்றி நடுக்கத்தைக் கொடுத்தது.

வேகமாக தலையை உலுக்கிக் கொண்டான்.

‘எந்த நம்பிக்கையில் என்னை இவ்வளவு லவ் பண்ணா?’

வேகமாக எல்லா ஓவியங்களையும் மூன்று முறையாக எடுத்துக்கொண்டு அவள் முன் சென்று வைத்தவன்,

“இதெல்லாம் என்ன?” எனக் கேட்டான்.

யாழ் அசையாது கண்கள் திறவாது படுத்திருக்க…

“நீ தூங்கலன்னு தெரியும் யாழ்?” என்றான் அஜய்.

மெதுவாக விழிகள் திறந்து எழுந்து அமர்ந்தாள்.

“பார்த்தா தெரியலையா மாமா?”

“தெரியுது. ஆனா ஏன்?” என்றான்.

“உன்னை அவ்ளோ பிடிக்கும் மாமா. வேறென்ன?” என்றாள்.

“எனக்கு பயமா இருக்கு யாழ்?”

“ஏன் மாமா?”

“உனக்கு புரியுதா இல்லையா?” என்ற அஜய் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

“அன்பு வைக்கலாம்… ஆனால் ஒரு மாதிரி அடிக்ட்… ம்ப்ச், அப்சஸ் மாதிரி… இது ரொம்பவே டேஞ்சர் யாழ். நாம ஒன்னு சேர்ந்தா நிச்சயம் சந்தோஷமா இருக்கமாட்டோம்” என்றான்.

“நீயில்லைன்னா செத்திடுவேன் மாமா!” சட்டென்று கன்னம் இறங்கிய கண்ணீரை துடைத்தவளாகக் கூறினாள்.

இந்த அன்பு தான், வரும் நாளில் அப்படியொரு சூழலில் அஜய் மாட்டிக்கொள்ள இருக்க, யாழ் அவன் மீது வைக்கப்போகும் நம்பிக்கைக்கு காரணமாக இருக்கப் போகிறது.

“இதுக்குதான் சொல்றேன். நான் வார்த்தையா சொல்றதுக்கே எப்படி ரியாக்ட் பன்ற நீ?” என்ற அஜய், “நான் இல்லைன்னாலும் உன் மனசு அதை ஏத்துக்கணும். ஒருத்தர் இல்லைன்னா இன்னொருத்தர் வாழவே முடியாதுங்கிறது எல்லாம் உண்மை இல்லை. யார் இருந்தாலும் இல்லைன்னாலும் யாரும் வாழலாம். புரிஞ்சிக்க யாழும்மா” என்றான்.

“மாமா…” தழுதழுத்தாள்.

“எதுக்கு அழற இப்போ” என்ற அஜய், “இதே நம்ம வீட்டில் யாரும் உன்கிட்ட கோபபட்டாலோ, இனி பேசாத சொன்னாலோ இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவியா நீ. இல்லை தானே! அதுக்காக அவங்க மேல உனக்கு அன்பு இல்லைன்னு அர்த்தமா என்ன? அந்த மாதிரி இயல்பான அன்பு தான் ஒரு உறவுக்கு நல்லதுடா” என்றான்.

“எல்லாரும் நீயும் ஒண்ணு கிடையாது மாமா.”

“ஒண்ணு இல்லை தான்… ஆனால், இவ்வளவு வேணாம் டா. உனக்கும் கஷ்டம். எனக்கும் கஷ்டம். நாளைக்கு உன்னோட அன்பால நீ என்கிட்ட எதிர்பார்க்கிற சின்ன சின்ன விஷயம் என்னால் பூர்த்தி செய்ய முடியலன்னா கூட அங்கு உடைஞ்சுப் போறது நம்ம காதலா தான் இருக்கும்” என்றான்.

“நான் உன்னை லவ் பண்றது தப்பா மாமா?”

வேகமாக எழுந்து நின்ற அஜய், இடையில் கை குற்றியவனாக மூச்சினை இழுத்து வெளியேற்றி அவளுக்கு எப்படி புரிய வைத்திட எனத் தெரியாது தவித்தான்.

“சாரி மாமா… நீ எதோ சொல்ற. எனக்கு புரியல. ஆனால் நீ சொல்ற மாதிரி இனி இருக்கேன்” என்றாள்.

“நீ நீயாவே இரு யாழ். ஆனால் இயல்பா இரு. நமக்குள்ள எல்லாமே இயல்பா இருக்கட்டும். நீ செத்துப்போறேன் சொன்னால் தான் உன் லவ் புரியும் இல்லை. நீ கண்ணு பார்த்து பேசறதுலே என்னால் உன்னோட லவ்வை உணர முடியும். உன்னை வருத்திக்கிட்டு நீ எதாவது செய்தால் தான் உனக்கு அதிக லவ் இருக்குன்னு இல்லை. நீ பண்றது சின்னதா இருந்தாக்கூட… எனக்குன்னு நீ செய்றது தான் லவ். அது தான் முக்கியம்” என்றான்.

“ம்ம்” என்று தலையசைத்த யாழுக்கு உண்மையில் அஜய் சொல்லும் கோணம் புரியவில்லை.

ஆனால் தன்னுடைய அதீத அன்பே தங்களின் வாழ்வில் பிரச்சினையாக அமைந்துவிடுமோ என்று அவனுக்கு பயம் கொடுக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

“இப்போ இந்த நிமிஷம் நான் இல்லைன்னாலும் நீ ஸ்ட்ராங்கா இருக்கனும். நான் இல்லை அதனால நீயிருக்கமாட்டன்னு சினிமா டயலாக் எல்லாம் பேசி உன்னையும் வருத்தி உனக்காக இருக்கவங்களையும் கஷ்டப்படுத்தக் கூடாது” என்றான்.

“சரி மாமா. இனி உன் விஷயத்தில் எது பண்ணாலும் யோசிச்சு நிதானமா பண்ணனும். அவ்ளோ தான மாமா” என்றாள். புரிந்தது எனும் விதமாக.

“அவ்ளோ தான். மத்தவங்க விஷயத்தில் எதும் நடந்தால் அவசரப்படாமல் யோசிப்பதை, என் விஷயத்திலும் பொறுமையா நிதானமா யோசிக்கணும். அதீத காதலோடு சேர்த்து, அதீத நம்பிக்கையும் இருக்கணும். எதுவேனாலும் நடக்கட்டும் நான் உனக்கு மட்டும் தான்னு உன் மனசுல எம்மேல இருக்க அந்த நம்பிக்கை போதும். வாழ்கையை அழகா வாழ்ந்திடலாம்” என்ற அஜய்,

“லவ் பண்றன்னு நீ பன்ற கிறுக்குத் தனம் இதுவே கடைசியா இருக்கட்டும்” என்றான்.

“ஓகே டன்” என்றவள், “ரொம்ப அட்வைஸ் போட்டுட்ட மாமா. தூக்கமா வருது. உன் மாடல் வந்துட்டா பாரு. நான் போய் தூங்குறேன்” என்றதோடு, “கோபம் போயிடுச்சா மாமா?” எனக் கேட்டாள்.

“அது நீ இனி நடந்துக்கிறதைப் பொறுத்து” என்றான் அஜய்.

“ம்க்கும்.” உதடு சுளித்தாள்.

ஓவியங்களை குனிந்து எடுத்தவளை தடுத்தான்.

“இதெல்லாம் என்கிட்டே இருக்கட்டும்” என்றான்.

“ஒன்னு மட்டுமாவது மாமா” என்றாள்.

நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டேன்.

“நான் வேற வரைஞ்சுப்பேன்” என்று அவள் சொல்ல, “நிஜமே உனக்குன்னு ஆகிப்போச்சு. அப்புறம் எதுக்காம் நிழல்?” எனக் கேட்டு அஜய் ஒற்றை கண்ணடிக்க…

“மாமா” என ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

“இன்னும் என் கோபம் போகல.” கடுமையாக சொல்ல நினைத்தான். முடியவில்லை.

“இருக்கட்டும் மாமா. நீ கோபமா இருந்துக்கோ. நான் லவ் பண்ணிக்கிறேன்” என்றவள் முத்தம் கொடுக்க விழைய,

கீழே கார் நிற்கும் சத்தமும், அதை தொடர்ந்து நிகில் அஜய் என்று அழைக்கும் சத்தமும் அவ்விருட்டு வேளையில் தெளிவாகக் கேட்டது.

“போ தூங்கு” என்று யாழை தள்ளி நிறுத்திய அஜய், கீழே சென்றான்.

யாழியும் அவன் பின் வர, நின்று என்னவென்று கேட்டான்.

“நானும் வெல்கம் பண்றேன் மாமா. நம்ம வீட்டில் தானே தங்கப் போறாங்க” என்றாள்.

அஜய் அடுத்து எதும் செல்லாது சென்று கதவை திறக்க, திறந்ததும் அப்பெண்…

“ஹாய் அஜய்… ஐ மிஸ் யூ சோ மச்” என்று தாவி அணைத்திருந்தாள்.

யாழிக்கு சர்வமும் சர்ரென்று கோபத்தால் பொங்கியது.

__________________________

“ஹாய் அஜய்… ஐ மிஸ் யூ சோ மச்” என்ற நிதிஷா வீட்டிற்குள் நுழைந்ததும், எதிர்ப்பட்ட அஜய்யை தாவி அணைத்திருந்தாள்.

“ஹவ் இஸ் யோர் ஜர்னி” என்று கேட்டு அஜய்யும் அவளின் கன்னத்தில் கன்னம் வைத்து நாகரிக வரவேற்பு அளித்திட, பார்த்திருந்த யாழுக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“யா இட்ஸ் நைஸ்” என்ற நிதிஷா, “யூ லுக்கிங் மேன்லி” என்றாள். கண்களில் ஒருவித மயக்கம்.

‘ஆரம்பிச்சிட்டாள்…’ என சலிப்பாக நினைத்த நிகில் பார்வையை திருப்பிட, யாழின் அதிர்ந்த முகம் கண்டு ‘மச்சி நீ காலி’ என உள்ளுக்குள் அலறினான்.

“ஹான்… ஜஸ்ட் ஹவ் டூ அக்ரி” என்று நீண்டு சிரித்த அஜய்யின் முகத்தை யாழி ஆச்சரியமாக பார்த்தாள்.

அஜய் ஒருநாளும் அவளுடன் இப்படி சிரித்தது இல்லை. ஏன் அவன் அமைதியாக அவளிடம் பேசுவதே கடந்த இரண்டு மூன்று தினங்களாகத்தான்.

கண்ணில் சட்டென்று நீர் நிரம்பி விட்டது.

யாழிக்கு இதெல்லாம் புதிது. திரையுலகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்து விடுப்பது, கன்னம் தீண்டுவது எல்லாம் சாதாரணம். நேரில் காண்பது புதிது என்றாலும், அஜய்யின் துறையில் இதெல்லாம் சகஜமென செவி வழி, திரை வழி அறிந்திருக்கிறாள்.

இதே இவ்விடம் அஜய் இல்லாது நிகில் இருந்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பாள்.

அதுவும் அஜய்யின் கண்கள் மலர்ந்த புன்னகை அவளை என்னவோ செய்தது.

சட்டென்று யாழி தன்னுடைய அறைக்கு செல்லத் திரும்பிட…

“அரே ஹிஸ்க்கி சோட்டி லடுக்கி? கானா பெஹன்?” (ஹேய் யாரிந்த குட்டிபொண்ணு? உன் தங்கையா?) என்று யாழியை காட்டி அஜய்யிடம் கேட்டாள் நிதிஷா.

நிதிஷா பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். அவளுக்கு தமிழில் வணக்கம், நன்றி தவிர்த்து வேறு வார்த்தை தெரியாது. அவ்விரு வார்த்தைகளும் கூட மேடை உபயோகத்திற்காக தெரிந்து வைத்திருக்கிறாள்.

யாழிக்கு ஹிந்தி தெரியும். அவளுக்கு பள்ளியில் இரண்டாம் மொழிப்பாடம் ஹிந்தி. அது அஜய்க்கு தெரியாது. அவன் கடந்து ஐந்து வருடங்களாகத்தானே குடும்பத்துடனே இருக்கிறான்.

நிதி அப்படி கேட்டதும் சுறுசுறுவென்று கோபம் உச்சிக்கு ஏற திரும்பிய யாழ், அஜய் சொல்லிய பதிலில் இதயத்தில் ஏதோ சில்லென்று தாக்க நொடியில் அந்தி மலராய் மலர்ந்தாள்.

“வ மீரே பியார் ஹை… ஷாதி த்தே ஹூ கைய்” (இவள் என்னுடைய லவ். மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணியிருக்கு) என்ற அஜய் முகத்தில் அத்தனை வெளிச்சம். அவனின் வெளிச்சத்தில் பெண்ணவள் தன் அகம் ஒளிர அங்கிருந்து ஓடியிருந்தாள்.

(இனி ஹிந்தி பேச்சு எல்லாம் தமிழில்.)

ஓடி வந்த வேகத்திற்கு மெத்தையில் கவிழ்ந்து விழுந்து தலையணையை மார்போடு இறுக்கி பிடித்த யாழிக்குள் காதல் பிரவாகம்.

“லவ் யூ மாமா” என்று சத்தமின்றி சொல்லிய யாழி, சற்று முன்னர் அஜய் கூறிய அறிவுரையின் தாக்கம் நீங்கி, இதழ் விரிந்த புன்னகையோடு, அஜய்யின் வார்த்தைக் கொடுத்த மகிழ்வில் உறக்கம் வராது உருண்டு வெட்கம் கொண்டு தன்னைப்போல் சிரித்துக் கொண்டிருந்தாள்.

நிகில் வரும் போதே நிதிஷாவை சாப்பிட வைத்து அழைத்து வந்திருந்தான்.

நிதிஷாவிற்கு அறையை காண்பித்து, அவள் தங்குவதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வெளியில் வந்த அஜய்,

“இப்போவே கிளம்பனுமா?” எனக் கேட்டான்.

“என்னடா?”, நிகில்.

“கொஞ்சம் ஃபிரியா பேசணும் நிகில். அவளை அடிச்சிட்டேன். ஒரு மாதிரி பண்ணுது” என்று மார்பை நீவினான்.

“அதான் யாழி கன்னம் சிவந்து வீங்கின மாதிரி இருந்துச்சா?” எனக் கேட்ட நிகில், “நான் கூட வேற எதோ எல்லாம் கற்பனை பண்ணிட்டேன். தப்பு தப்பு” என தோட்டத்தில் இலகுவாக புல் தரையில் அமர, அவனை தோளில் கைப்போட்டு கீழே அழுத்தியவனாக அஜய் அமர்ந்தான்.

“மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணியிருக்கு சொல்லவே இல்லை?” நிகில் புருவம் உயர்த்தினான்.

“அது பெரிய கதை. ஆனால் ரெண்டு நாளில் க்ளைமாக்ஸ் வந்திருச்சு” என்ற அஜய் எல்லாமே நண்பனிடம் பகிர்ந்து கொண்டான்.

“யாழிக்குள்ள இவ்வளவு லவ்வா?” என வியந்த நிகில், “ஷீ இஸ் மேட்லி லவ்ஸ் யூ” என்றான்.

“ம்ம்” என்ற அஜய், “ரொம்ப வருஷ லவ்… வெளிய சொல்லாம உள்ளுக்குள்ளே வச்சிருந்ததோட தாக்கம் தான் அவளோட லிமிட் இல்லா எக்ஸ்போஸ்க்கு காரணம். எனக்கு அது புரியுது. மேரேஜ் லைஃப் லீட் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டா சரியாகிடுவாள்” என்றாள்.

“அப்புறம் ஏன் தேவையில்லாம நிறைய பேசி அவளை குழப்பி விட்டிருக்க?” எனக் கேட்ட நண்பனை பார்த்தபடி, தலைக்கு கைகளைக் கோர்த்து வைத்து புல் திரையில் மல்லாக்க படுத்த அஜய்,

“அவளோட லவ்வை எனக்குக் காட்டுறேன்னு வேறெந்த கிறுக்குத் தனமும் பண்ணிடக் கூடாது இல்லையா? இன்னைக்கு ஒரு செக் அப்படின்னாலும், இனி அந்த மாதிரி ஒரு முடிவை அவ எடுக்கக் கூடாது இல்லையா அதுக்குத்தான். அவள் எவ்ளோ லவ் காட்டணுமோ காட்டட்டும். அதெல்லாம் எனக்கு மட்டும் காட்டினா போதும்” என்றான்.

வெகு நேரமாகியும் அஜய் இன்னும் வரவில்லை என கீழே வந்த யாழி, நிதிஷாவின் அறை மூடியிருக்க, வெளி வாயில் கதவு திறந்திருப்பதைக் கண்டு வர, அஜய் சொல்லியது எல்லாம் தெளிவாகக் கேட்டிருந்தாள்.

அஜய் பக்கம் பக்கமாக எடுத்து சொல்லியபோது புரியாத யாவும் இக்கணம் அவளுக்கு புரிந்தது.

“எங்களுக்குள்ள எல்லாம் இயல்பா இருக்கணும் நினைக்கிறேன் நிகில். நாலு நாளில் அவளை எவ்ளோ பிடிக்குது தெரியுமா மச்சி? என்னோட இந்த பிடித்தத்துக்கு காரணம் அவ என்மேல வச்சிருக்க லவ். அதை கம்மியா காட்டுன்னு நான் எப்படி சொல்வேன்?” என்ற அஜய், “எனக்கும் சேர்த்து அவள் லவ் பன்றாடா” என்றான்.

இது போதுமே யாழுக்கு. அவன் அவளிடம் வெளிப்படையாக சொல்லவில்லை என்றால் என்ன? அவனுடைய காதல் அவள் மட்டும் என்பது போதுமே?

நெஞ்சம் நிறைந்த மகிழ்வோடு வந்த தடமின்றி சென்றிருந்தாள்.

நிகில் அஜய்யின் பேச்சில் மெல்ல சிரித்தான்.

“என்னடா?”

“உன்னை ராஜஸ்தான் நடிகை துரத்தி துரத்தி லவ் பண்ணுச்சே… அதை நினைச்சேன் சிரிச்சேன்” என்றான் நிகில்.

வேகமாக எழுந்து பெரிய கும்பிடாக போட்ட அஜய்,

“அவகிட்ட இருந்து எஸ்கேப் ஆகறதுக்குள்ள நான் பட்ட அவஸ்தை இருக்கே” என்ற அஜய், “அவளுக்கு இப்போ கல்யாணம் ஆகிடுச்சுல?” எனக் கேட்டான்.

“ஆமா… யாரோ பிஸ்னஸ்மேனுக்கு மூன்றாம் தாரமாக வாக்கப்பட்டிருக்காள்” என்ற நிகில், “நம்ம ஃபீல்டில் இதெல்லாம் சாதாரணம்ல?” என்றான்.

நண்பர்கள் இருவரும் வெகு நாட்களுக்குப் பின்னர் இப்படி அமைதியாக உட்கார்ந்து தொழில் பற்றி அல்லாது மனம்விட்டுப் பேசிக் கொள்கின்றனர்.

“நிதிஷாவை நம்ம ஸ்டுடியோவில் தங்க வைக்க முடியாதா?” எனக் கேட்டான் நிகில்.

“ஏன்?”

“யாழி உன்னை முறைச்சது எனக்கே அல்லுவிட்டிருச்சு. உன் நிலை கவலைக்கிடம் தான்” எனக்கூறி சிரித்தான் நிகில்.

“அதும் நீங்க ரெண்டு பேரும் ஹிந்தியில் பேசுனது என்ன புரிஞ்சிதோ… திரும்பிப் போனவ ஒரு செக் அப்படியே நின்னுட்டாள்” என்றான்.

“பொசசிவ்… இது வேண்டான்னு தான் அப்படி பேசினேன்” என்ற அஜய், “அவளுக்கு என்னை புரியும்” என்றான்.

“இந்த ஷூட் எப்போடா முடியும்?”

“டைம் எடுக்கும் நிகில். அந்த திலீப் நிதிஷா தான் வேணுன்னு புக் பண்ணியிருக்கான். அவனோட ரெசிடன்ஷியல் ஆர்கானிக் பார்மிங் மார்கெட்டிங்க்கு எதுக்கு சாங் டைப் விளம்பரம்? ஒன்னும் பிடிபடல. ரெகுலர் கஸ்டமர். முடியாது சொல்ல முடியல. எவ்ளோ சீக்கிரம் முடிக்கணுமோ முடிச்சு, இவளை மும்பைக்கு பேக் பண்ணிடனும். இல்லை அந்த சீரீஷ் இங்கவே அவளைத் தேடிட்டு வந்திடுவான். அப்புறம் நம்ம வேலை கெடும்” என்றான்.

“ம்ம்” என்ற நிகில், “ரொம்ப நாளாச்சு மச்சான். இப்படி பேசி” என்ற நிகில், “வந்தனா வீட்டில் பிரச்சினை பண்றாங்க. என்ன பண்ண ஒண்ணும் புரியலடா” என்றான்.

“என்ன பண்றாங்க?”

“உனக்கே தெரியும் வந்தனா வீட்டிலிருந்து வந்து தான் என்னைக் கேட்டாங்க. அதுக்கு அப்புறம் தான் பழக ஆரம்பிச்சோம். இப்போ வந்து எங்க சொந்தத்திலே நல்ல மாப்பிளை கிடைச்சிருக்கு. அவருக்கு கொடுக்கப் போறோம் சொல்லி ஒரே விவாதம் தான். வந்தனா வேற இவங்க சம்மதலாம் வேணாம். நேரா வீட்டுக்கு வந்து கூட்டிட்டுப் போங்கன்னு ரெண்டு நாளா ஒரே அழுகை” என்றான்.

நண்பனின் தோளில் தட்டிக் கொடுத்த அஜய், “முடிஞ்சவரை பேசிப்பாரு. இல்லைன்னா வந்தனா முடிவு தான் எனக்கும் சரின்னு தோணுது” என்றான்.

நேரம் செல்வது தெரியாது மனதிலிருப்பதை எல்லாம் மாற்றி மாற்றி பகிர்ந்துக் கொண்டிருந்தனர்.

நிகிலின் அலைபேசி சத்தம் எழுப்பியது.

“அம்மாடா” என்ற நிகில் நேரத்தைப் பார்த்தவனாக, “ரெண்டு மணி அஜய்” என்று எழுந்து கொண்டான்.

“மார்னிங் பார்ப்போம்” என்று நிகில் செல்ல, “வீட்டுக்கு போயிட்டு மெசேஜ் பண்ணுடா” என அஜய் அவனை அனுப்பி வைத்துவிட்டு கேட், வாயில் கதவு என எல்லாம் சாற்றிவிட்டு மாடியேறினான்.

“சேட்டை தூங்கியிருப்பாள்” என்றவனாக யாழின் அறையை எட்டிப்பார்க்க, கதவை சாற்றாது, மின்விளக்கை அணைக்காது மெத்தையில் உடலைக் குறுக்கி உறங்குவது தெரிந்தது.

“நிதிஷாகிட்ட பேசியது புரியாம எதும் நினைச்சு கோவத்தில் வந்து தூங்கிட்டாளோ? டோர் கூட க்ளோஸ் பண்ணல” என்றவனாக உள்ளே சென்றான்.

அவளுக்கு அருகில் சென்று நின்ற அஜய் சில நொடிகள் அவளையே பார்த்திருந்தான்.

“லவ் பண்ணியே கொன்னுடுவா(ள்) போல” என்ற அஜய்யின் கன்னம் குவிந்தது. இதழில் நெளிந்த முறுவலில்.

“என்னைப் படுத்தி வச்சிட்டு… பச்சப் புள்ளையாட்டாம் தூங்கிறதை பாரு” என்று அவளின் கன்னம் நிமிண்டினான்.

தூக்கத்திலே அவள் வலியில் “ஷ்” என்று சத்தமிட, தான் அடித்து வீங்கிய கன்னம் என்பதை அப்போது தான் உணர்ந்தான்.

“கொஞ்சம் வேகமாதான் அடிச்சிட்டோம் போல” என்றவன் தன்னுடைய அறைக்குச் சென்று மருந்தினை எடுத்து வந்து தன் விரல் தடம் சிவந்த கன்னத்தில் மென்மையாய் தடவிவிட்டான்.

மருந்தின் குளுமையிலும் தன்னவனின் ஸ்பரிசத்திலும் உறக்கம் கலைந்தவள்… கண்களை மட்டும் திறக்கவில்லை.

விழித்துவிட்டால் அஜய் தன் மிளகாய் முகத்தைக் காட்டிடுவானே! அதனால் அவனின் அண்மை கொடுத்த இதத்தை ரசித்தவளாக அசையாது படுத்திருந்தாள்.

“உனக்கென்னடி அவ்ளோ லவ்வு எம்மேல…” என்று அவளின் மூக்கு நுனி திருகியவன், “அப்படியே அள்ளிக்கணும் போல இருக்குடி அம்மு” அவளின் முகத்தை ரசித்து அகம் நிரப்பினான்.

“பார்த்துட்டே இருக்கலாம் போல” என்ற அஜய், “என்னை என்னவோ பன்ற நீ” என எழுந்து கொண்டான்.

குனிந்து அவளின் கன்னத்தில் தன் இதழ் வைக்கச் சென்றவன், சிரித்துக்கொண்டே விலகி, “லவ் யூ டி அம்மு” எனக்கூறி, விளக்கை அணைத்துவிட்டு, கதவினை சாற்றிச் சென்றிருந்தான்.

அஜய் சென்றதும் வேகமாக எழுந்து அமர்ந்த யாழி, அதுவரை இழுத்து பிடித்த மூச்சினை ஆசுவாசமாக வெளியேற்றினாள்.

அவளாக அவனை ஒட்டி உரசி நெருங்கும் போது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவனின் அருகில், அவன் கொடுத்த அழுத்தமில்லா மென்மையான தொடுகைக்கே மொத்தமாய் விதர்விதர்த்துப் போனாள்.

“திணற வைக்கிற மாமா நீ” என்று புலனம் வழி அனுப்பியவள், அந்நொடியே அஜய் பார்த்துவிட்டான் என்றதும், நெட்டை அணைத்து விட்டு, போர்வையை தலை வரை இழுத்து மூடி படுத்துக் கொண்டாள்.

 

Epi 10

நீதான் என் காதல் மழை 10

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
46
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்