Loading

நீதான் என் காதல் மழை 8

“அப்புறம் அஜய் உன் ரூட்டு கிளியர்” என்று குணா சொல்ல, அனைவரும் ஒன்றாக அவனை பார்த்தனர்.

“என்னா… எல்லாரும் என்னை லுக் விடுறீங்க… என்னாச்சு?”, குணா.

“சும்மா இருடா” என்ற குமரன், “சித்திக்கிட்ட இப்போ பேசுறது சரி வராது நினைக்கிறேன்” என்றான்.

“ஆமாண்ணா, நாங்க எப்போன்னு காத்திருந்தோம்ன்னு அண்ணி நினைச்சிடக் கூடாது” என்றார் காந்தள்.

“கொஞ்ச நாள் போவட்டும் பேசுவோம்.” காந்தள், குமரனின் பேச்சை ஆமோதிப்பதைப் போல ராஜேந்திரன் பேசினார்.

“எம்பிரான்… நீயென்னப்பா சொல்ற? உனக்கு அஜய்க்கு யாழியை கொடுக்க சம்மதம் தானே?” என வீரபாண்டியன் கேட்டார்.

“எனக்கு முழு சம்மதம் ப்பா… அந்த விளம்பரத்தில் ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்தே மனசு நிறைஞ்சிப் போச்சுங்க” என்றார் எம்பிரான்.

“அப்புறம் என்ன கொஞ்ச நாள் போனதும் சித்தியை சம்மதிக்க வச்சு, அஜய்க்கும் யாழிகுட்டிக்கும் கல்யாணம் பண்ண வேண்டியது தான்” என்றான் குணா.

“அதான் பெரிய மனுஷன் சொல்லிட்டானே! அதுபடி செய்யுங்க” என்று ராஜேந்திரன் எழுந்துகொள்ள,

“அவ்வளவு தான் சபையை கலையுங்க” என்றான் குணா.

“நீ அடங்கவே மாட்டியாடா?” வெண்ணிலா அவன் தலையில் கொட்டிட, “நிலா குட்டி மீ பாவம்” என்ற குணாவின் பாவனையில் சற்று நேரத்திற்கு முன்னிருந்த இறுக்கம் தளர்ந்து அங்கு சிரிப்பலை பரவியது.

“அடேய், அத்தை உள்ள வருத்தப்பட்டுட்டு இருப்பாங்க… இங்க எல்லாரும் சிரிச்சிட்டு இருக்கீங்க?” என்ற அஜய், “மாமா நீங்களாவது போய் ஆறுதலா பேசலாம் தானே?” என்றான் அஜய்.

“பாருடா… இன்னும் கல்யாணமே ஆகலையாம். அதுக்குள்ள என் அண்ணனுக்கு மாமியார் மேல கரிசனம்” என்று வெண்ணிலா சொல்ல சிரிப்பு சத்தம் அதிகமாகியது.

“அச்சோ அத்தை…” மதி சொல்லியதும், அனைவரின் சிரிப்பும் பொத்தானை அழுத்தியது போன்று பட்டென்று நின்றது.

சுலோ வருத்தம் சுமந்து வந்து நின்றார்.

“எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. ஒரு விஷயம் செய்றோம் அப்படின்னா, அதுல எல்லாருடைய விருப்பமும் இருக்கணும். அப்போ தான் அது நல்லபடியா அமையும்ன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன்” என்ற சுலோச்சனா… “காந்தள் கேட்ட மாதிரி யாழை அருளுக்கு கட்டி வைக்க தானே உங்களுக்கெல்லாம் விருப்பம். நானும் அதுக்கு சம்மதிக்கிறேன். யாழுக்கு கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சாச்சு அது தடங்கலா நிக்க வேணாம்” என்றார்.

“அவசரப்படாத சுலோ” என்று கமலம் சொல்ல…

“இல்லை அத்தை காந்தள் அருளுக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறாள். அதனால் தானே யாழை பொண்ணு கேட்டாள். அருளுக்கும் வயசாகுதே” என்ற சுலோச்சனா, “நீ கேட்டு நான் முடியாதுன்னு சொன்னது அருளை பிடிக்காம இல்லை காந்தள், நான் பொறந்த வீட்டுக்கு என் பொண்ணு வாழப் போகணும் ஆசை தான். வேற ஒன்னுமில்லை. யாழி அருளுக்குன்னு இருக்கும் போது நான் நினைச்சா மாத்த முடியுமா” என்றார்.

காந்தள் சம்மதம் சொல்ல வாயெடுக்க…

“ம்மா ஒரு நிமிஷம்” என்ற அஜய், சுலோச்சனாவின் முன் சென்று நின்றான்.

“இவன் எதையோ சொல்லி காலி பண்ணப்போறான்.” குணா முணுமுணுக்க, மதி அவனின் காலை ஓங்கி மிதித்திருந்தாள்.

“இன்னும் நாலு மிதி” என்றாள் வெண்ணிலா.

“யூ டூ நிலா…?”, குணா.

“டேய்… அடங்குடா!”, குமரன்.

“என்ன அருளு? உனக்கும் யாழை கட்டிக்க விருப்பமில்லையா?” முதலில் வாங்கிய அடி அவரை அச்சம் கொண்டு அவ்வாறு கேட்க வைத்தது.

“எனக்கு யாழை ரொம்ப பிடிக்கும் அத்தை. அவளுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். ரெண்டு பேரும் விரும்புறோம்” என்றான். சுலோச்சனாவிடம் அதிர்வு.

“அப்புறம் ஏன் நீங்க கேட்டு இல்லைன்னு சொன்னன்னு கேட்கிறீங்களா?” என்ற அஜய் அவரின் தலை ஆமென ஆடியதும்,

“எனக்கு உங்க விருப்பம் புரிஞ்சுது. உங்க வருத்தத்தில் நாங்க ஒண்ணு சேரனும் நான் நினைக்கல” என்ற அஜய், “இப்பவும் ஹரன் வேண்டாம் சொன்னதுக்கு முதல் ரீசன் எங்க லவ் தான்” என்ற போதும் இராஜேந்திரனின் யோசனையில் குமரன் சொல்லி ஹரனுக்குத் தெரிந்தது என்பதை சொல்லவில்லை.

“முக்கியமா எங்க காதலால் குடும்பத்துக்குள் பிரச்சினை வரக்கூடாது நினைச்சேன்” என்றான்.

“இப்போ சொல்லுங்க அத்தை உங்களுக்கு யாழை எனக்கு கட்டிக்கொடுக்க சம்மதமா?” எனக் கேட்டான்.

“மொத்தமா போட்டு உடைச்சிட்டான். சித்தி நோ சொல்லப் போகுது. இவன் தாடி வளர்த்து சுத்தப் போறான்” என்ற குணா, ராஜேந்திரன் பார்த்த பார்வையில் கப்சிப் ஆகினான்.

சுலோச்சனாவுக்கு யாழ் அஜய்யை விரும்புகிறாள் என்பது ஆச்சரியமாக இருந்தாலும், அஜய்யிடம் இருக்கும் குடும்பத்தின் மீதான பற்று இந்த வயதிலும் தனக்கு இல்லாமல் போனதே என்று வருத்தமாக இருந்தது.

தனக்காக விருப்பத்தை விட்டுக்கொடுக்க அவன் நினைக்கும் போது, தான் இறங்கி வருவது தவறில்லையே. குடும்பத்துக்குள் இன்பம் பெருகுவது விட்டுக்கொடுத்தலால் தானே!

“எனக்கும் அஜய் தான் விருப்பம் சுலோ. இப்போ காந்தள் கேட்காம இருந்திருந்தா, அஜய்க்கு கல்யாணம் அப்படின்னு காந்தள் பேச்செடுத்திருந்தால், யாழி படிப்பு முடிந்திருந்தால் நானே கேட்டிருப்பேன்” என்ற எம்பிரான், “இன்னும் என்ன மௌனம் சுலோ. நம்ம பசங்க நம்ம கண்ணு முன்னாடி நிறைக்க வாழ்ந்து காட்டுவாங்க” என்றார்.

அஜய்யின் கன்னத்தில் ஆதுரமாக கை வைத்த சுலோச்சனா…

“எனக்கு பூரண சம்மதம் அருளு” என்றார்.

எல்லோரின் மனமும் சந்தோஷத்தில் திளைத்தது.

அப்போதே திருமணம் குறித்து பேசத் துவங்கியிருந்தனர்.

“தேங்க்ஸ் குமரா!” அஜய் சொல்லிட குமரன் புன்னகையாய் ஏற்றுக் கொண்டான்.

“எதுக்குண்ணா அத்தைக்கிட்ட பொசுக்குண்ணு உண்மையை சொல்லிட்ட. அத்தை முடியாது சொல்லிடுவாங்க பயந்து வந்திருச்சு” என்றாள் வெண்ணிலா.

“நாளைக்கு எல்லாம் சரியா நடக்கும் போது இது அத்தைக்கு தெரிய வந்தால், அவங்களை ஏமாத்தி கல்யாணம் நடந்ததா நினைக்கமாட்டாங்களா? அதான் சொன்னேன்” என்றான் அஜய்.

“இவ்வளவு நேர்மையா இருக்காதிங்கடா” என்று நடுவில் கருத்து பேசிய குணாவை நால்வரும் சேர்ந்து மொத்தி எடுத்தனர்.

“நீ குமரன் மாமா மாதிரி யாழி படிச்ச அப்புறம் தான் கல்யாணம் சொல்லலையா அண்ணா” என்று அஜய்யிடம் மதி கேட்டாள்.

“வயசாகிப்போச்சு… இப்போ சீக்கிரம் பண்ணி வையுங்கன்னு சொல்ற ஸ்டேஜில் தான் நான் இருக்கேன்” என்று அஜய் சிரித்துக்கொண்டே சொல்ல…

“பொய் சொல்லாதடா அண்ணா. காலையிலே யாழிக்குட்டி எங்க எல்லாருக்கும் போனை போட்டு, மாமா பேச வறாங்க. அம்மா ஓகே சொன்னதும் தேதி குறிக்கிறிங்க. இல்லை மாமாவை கடத்திட்டு போய் தாலிக் கட்டிப்பேன்னு என்னா பேச்சு… அதோட மாமாவை உடனே கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கிறது உங்க பொறுப்புன்னு ஆர்டர் போடுறா” என்று வெண்ணிலா ஏற்ற இறக்கங்களோடு சொல்ல அஜய் அப்பட்டமாக வெட்கம் சிந்தி நின்றான்.

“உன் விஷயத்தில் ரொம்பவே பொசசிவ்வா இருக்கா தோணுது அருளு” என்று குமரன் சொல்ல…

“எஸ்… ஷீ இஸ் அடிக்டட் டூ யூ” என்றான் குணா.

“அவகிட்ட பேசணும்” என்ற அஜய், தன்னுடைய அலைபேசி ஒலியில் யாரென்று எடுத்து பார்க்க…

“யாழி தானே?” என குணா, மதி, வெண்ணிலா மூவரும் ஒன்றாக கேட்டு அவனை அசடு வழிய வைத்தனர்.

குமரன் அவர்கள் அஜய்யை கிண்டல் செய்வதை கண்டு சிரித்தவனாக பெரியவர்கள் பக்கம் சென்று அவர்களின் பேச்சில் கலந்து கொண்டான்.

அஜய் அழைப்பை ஏற்க,

குணா அலைபேசியை பிடுங்கி ஸ்ப்பீக்கர் ஆன் செய்தான்.

“மாமா என்னாச்சு?”

அஜய் பதில் சொல்ல முயல அவனின் வாயை கை வைத்து பொத்தினாள் வெண்ணிலா.

“அத்தை முடியாது சொல்லிட்டாங்க சொல்லுண்ணா… காலையில் என்னா மிரட்டு மிரட்டுறாள்… இப்போ நாம கொஞ்சம் மிரட்டிப் பார்ப்போம்” என்றாள் மதி.

“வேண்டாம்… அப்புறம் அழுவாள்” என்று அஜய் மறுக்க,

“அதெல்லாம் அழமாட்டாள். சும்மா விளையாட்டுக்கு தான். இப்போ உடனே கிளம்பப் போறீங்க. அதிகபட்சம் ஒரு மணி நேரம், உண்மை தெரிஞ்சதும் துள்ளி குதிப்பாள்” என்று மூவரும் ஏதேதோ சொல்லி அஜய்யை பொய் சொல்ல வைத்தனர்.

“மாமா… லைனில் இருக்கியா?” யாழி பலமுறை அழைத்துவிட்டாள்.

“ஹான்… சொல்லு யாழ்.”

“அம்மா என்ன சொன்னாங்க?”

அஜய் மூவரையும் பார்த்தான்… சொல்லு எனும் விதமாக கண் காட்டினர்.

“ஒத்துக்கல யாழ்” என்று அஜய் சொல்ல,

“அத்தை எப்பவும் ஒத்துக்கமாட்டாங்க போல” என்று மதியும், “ரொம்பவே கஷ்டம் தான். அண்ணா யாழிகுட்டியை மறக்க வேண்டியது தான்” என்று வெண்ணிலாவும் தங்களுக்குள் பேசிக் கொள்வதைப்போல் பேசிட, யாழுக்கு அந்தப்பக்கம் உயிர் வலித்தது.

“மாமா!” உதடு துடிக்க அழைத்திருந்தாள்.

“அஜய் இவ்வளவு பேசியும் சித்தி மனசு இறங்கி வரலையே! பிடிவாதமா ஹரன் கூட கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டாங்காளே வெண்ணிலா” என்று குணா சிரிப்பை அடக்கிக் கொண்டு சொல்ல,

அஜய், ‘நிச்சயம் இந்நேரம் கண்ணில் நீரை வழிய விட்டிருப்பாள்’ என நினைத்து, “போதும் உங்க விளையாட்டு” என மெதுவாக சொல்லி, “யாழ் இவங்க” என்று ஆரம்பிக்க இணைப்புத் துண்டிக்கபட்டிருந்தது.

“கோபம் வந்திருச்சுப் போல.” மூவரும் ஒன்றாகக் கூறினார்.

“உங்களால் என்ன பண்ண முடியுமோ சிறப்பா பண்ணிட்டிங்க” என்ற அஜய் யாழுக்கு மீண்டும் முயற்சிக்க அவள் அழைப்பை எடுக்கவே இல்லை.

அஜய்க்கு திடிரென மனதில் அலைப்புறுதல்.

“அம்மா கிளம்பலாம்” என்றான்.

“இப்போ தான் தேதி பார்த்திட்டு இருக்கோம் அருளு” என்று காந்தள் சொல்ல… “அதெல்லாம் எல்லாரும் பார்த்துப்பாங்க… நீ வாம்மா, யாழ் வந்திருப்பாள். தனியா இருப்பாள்” என்றான் அஜய்.

அஜய் யாழுக்கு முயற்சித்தபடி தான் இருந்தான். அவனுக்கோ படபடப்பு கூடியது. எதோ தவறாகப் பட்டது.

உடனே நிகிலுக்கு அழைத்த அஜய்,

“யாழ் வீட்டில் டிராப் பண்ணிட்டியாடா?” எனக் கேட்டான்.

“அரைமணியாச்சு அஜய்” என்றான் நிகில்.

“இப்போ நீ எங்கிருக்க?” என்ற அஜய்க்கு, “மும்பை மாடல் நிதிஷா வராங்களே பிக்கப் பண்ண திருச்சி ஏர்போர்ட் போயிட்டு இருக்கேன்” என்றான் நிகில்.

சரியென வைத்திட்ட அஜய்,

“கிளம்பும்மா… அவளை பார்த்தா தான் மனசு அடங்கும் போல” என்று, இருந்த பதட்டத்தில் எல்லோருக்கும் கேட்கும்படி வெளிப்படையாக சொல்லியிருந்தான்.

அனைவரும் அவனது அவஸ்தையை காதலின் துடிப்பு என்று நினைத்து சிரித்தனர்.

“நீ கிளம்பு காந்தள். எப்படியும் வெண்ணிலா வளைகாப்பு முடியணுமே! பொறுமையா நாள் பார்ப்போம்” என்று கமலம் சொல்ல இருவரும் புறப்பட்டனர்.

அஜய்யின் தவிப்பை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த மூவரிடமும் வந்து…

“என்ன பண்ணீங்க?” எனக் கேட்டான் குமரன்.

மூவரும் சிரித்தபடி நடந்ததைக் கூற…

“யூ இடியட்ஸ்… இதெல்லாம் விளையாட்டா உங்களுக்கு?” என கடிந்து கொண்ட குமரனுக்கு, நேற்று காலை யாழினியை இங்கிருந்து அஜய் வீட்டுக்கு கூட்டிச் செல்லும் போது அவள் பேசியது நினைவு வந்தது.

உடனடியாக குமரனும் வேகமாக அஜய் வீடு நோக்கி மலையைலிருந்து கீழே சென்றான்.

குமரனின் வேகம் யாருக்கும் என்னவென்று தெரியவில்லை. கலக்கமாக நின்றிருந்தனர்.

______________________

“நான் அஜூ மாமாவை லவ் பண்றேன்.”

அன்று மலையிலிருந்து படிக்க வேண்டுமென காரணம் சொல்லி குமரனுடன் மலைக்கு கீழே வந்து கொண்டிருந்த நேரம் யாழினி சொல்லியிருந்தாள்.

சுலோச்சனா தன்னுடைய அண்ணன் மகனுக்கு கேட்டிருப்பதாக சொல்லிட, தன்னையே பார்த்திருந்த அஜய்யின் பார்வை தன்னிலிருந்து விலகிட, 

‘தன்னுடைய காதலுக்கு தான் தான் போராட வேண்டும்’ என நினைத்தவளுக்கு, அஜய்யை குமரனின் மூலம் சம்மதிக்க வைத்திட வேண்டுமென அவனிடம் கூறினாள்.

குமரன், தான் சொல்லியதும் எவ்வித பாவனையும் காட்டாது அமைதியாக தன்னைத் திரும்பி பார்த்ததிலே அவனுக்கு தன் காதல் தெரியும் என்பதை அறிந்து கொண்டாள்.

அடுத்து தடுமாறவெல்லாம் இல்லை அவள். மனதில் உள்ளதை படபடவென மொழிந்தாள்.

“மாமா இல்லாம முடியாது. மாமாவுக்கு எடுத்து சொல்லுங்க. அவங்க இல்லைன்னா நான் இருக்கமாட்டேன். எனக்கு மாமாவோட தான் இந்த வாழ்க்கை. அம்மா சொல்ற மாதிரி எதும் நடந்து மாமா எனக்கில்லைன்னு நிலை வந்தால் கண்டிப்பா என்னை உயிரோடு பார்க்க முடியாது” என்றாள்.

செலுத்திக் கொண்டிருந்த வண்டி குமரனின் கைகளில் தடுமாறி சீரானது.

“என்ன மிரட்டுறியா?”

“இல்லை… நிஜமா சொல்றேன்” என்ற யாழினி, “நிலா அண்ணி இல்லாம உங்களால் இருக்க முடியாது தானே?” என அவள் கேட்டதில் அடுத்து குமரனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“ஒன்னு கிடைக்காதுன்னா கிடைக்கிற வரை போராடனும் யாழி. இப்படியெல்லாம் பேசக் கூடாது” என்று குமரன் சொல்லிய யாவும் யாழின் மூளைக்குள் சென்று சேரவே இல்லை.

“எல்லாரும் சேர்ந்து எனக்கு மாமாவை கட்டி வைக்கப் பாருங்க. இல்லை நான் உயிரோடு இருக்க மாட்டேன்” என்று அழுத்தமாக சொல்லியவளை அஜய்யின் காதல் மட்டுமே மாற்றுமென புரிந்த குமரனுக்கு, அஜய்யும் அவளை விரும்பும் போது யாழின் இந்த முடிவுக்கு அவசியமில்லை என அமைதியாக இருந்தான்.

ஆனால் இவர்கள் செய்த விளையாட்டில், அன்றையப் பேச்சு மனதில் எழ, குமரனுக்குள் யாழி எதும் செய்துகொள்வாளோ என தன்னைப்போல் ஒருவித பயம் சூழ்ந்தது.

அதனாலே விஷயம் அறிந்ததும் அஜய்க்கு பின்னாடியே கிளம்பிவிட்டான்.

__________________________

அஜய்யிடம் அப்படியொரு வேகம்.

“அருள் என்னாச்சு. எதுக்கு இவ்வளவு வேகம்” என காந்தள் வழி முழுக்கக் கேட்டும் அவனிடம் பதிலில்லை.

மனம் அடித்துக் கொண்டது. 

யாழி மீண்டும் அஜய் அழைப்பு விடுத்தபோது ஏற்றிருந்தாள் இத்தனை பதைப்பு கொண்டிருக்கமாட்டானோ?

வீட்டு முன் வண்டியை நிறுத்தியது தான் தெரியும். காந்தள் வண்டி நின்றுவிட்டது என்று உணரும் முன்பு, அஜய் கதவினை தட்டிக் கொண்டும், அழைப்பு மணியை அழுத்திக் கொண்டும் நின்றிருந்தான்.

பின்னாலே குமரனும் வந்து சேர்ந்திருந்தான்.

“கதவு திறக்கமாட்டேங்கிறா குமரா பயமா இருக்கு” என்று அஜய் தவிப்பாய் சொல்லிட, குமரன் நேற்று யாழி தன்னிடம் பேசியதை தெரிவித்தான்.

அஜய்க்கு மூச்சே நின்றுவிட்டது.

“இந்த பசங்க விளையாட்டுக்கு பண்ணது… நானும் அப்படி சொல்லியிருக்கக் கூடாது” என்ற அஜய், “மாடி கதவு திறந்திருக்கா பாருடா” என்றான்.

குமரன் சென்று பார்த்து வந்தான்.

“உள்பக்கம் பூட்டியிருக்கு அருளு” என்ற குமரனுக்கும் அதீத பதட்டம்.

“என்னடா என்னதான் ஆச்சு. யாழிக்குட்டி உள்ள தானே இருக்காள்?” காந்தளுக்கு பதில் சொல்லும் நிலையில் இருவரும் இல்லை.

“கதவை உடைச்சிடலாம்.” அஜய் சொல்ல, கதவு திறக்கப்பட்டது. யாழினி தடுமாறி நிற்க முடியாது நின்றிருந்தாள். அவளின் நிலையை அவதானிக்கும் முன்பு உடல் தொய்ந்து மயங்கி சரிந்தவளை தன் மடி தாங்கியிருந்தான் அஜய்.

“யாழி…” காந்தள் பதறி பக்கம் வர,

“அம்மு என்னடி… என்னைப் பாரு” என்று அஜய் யாழின் கன்னம் தட்டிட, அங்கு டீபாயில் வைக்கப்பட்டிருந்த காந்தளின் தூக்கமாத்திரை குப்பியை கண்ட குமரனுக்கு சர்வமும் நடுங்கியது.

“யாழ்… டேய் அம்மு… எழுந்திருடா. என்னாச்சு” என்ற அஜய்யின் கண்ணீர் யாழின் கன்னத்தில் விழுந்தது.

“தூக்கமாத்திரை சாப்பிட்டிருக்காள் அருளு…” குமரன் சொல்லிட “அய்யோ ஏன் இப்படி பண்ணா” என காந்தள் அழ, 

மடி தாங்கியிருந்தவளை தன் மார்போடு சேர்த்து அணைத்து கதறினான் அஜய்.

“அம்மு” என்று அஜய் கதறி துடிக்க…

“ஹாஸ்பிடல் போகலாம் அருளு, தூக்கு” என்றான் குமரன்.

அஜய் யாழை தூக்க முனைய மெல்ல கண் திறந்து,

“அவ்ளோ லவ்வா மாமா? எனக்காக அழலாம் செய்யுற?” எனக் கேட்டு ஒற்றை கண்ணடித்தாள் யாழினி.

அவளின் செயலிலே அவளுக்கு ஒன்றுமில்லையென அறிந்து ஆசுவாசம் அடைந்தனர்.

மெல்ல அவளை இறக்கிவிட்ட அஜய்…

“நடிச்சியா?” எனக் கேட்டான். அஜய்யின் குரல் அத்தனை கடுமையாய் வெளிவந்தது.

“ஆமா… நீங்க மட்டும் தான் விளையாடுவீங்களா?” என்ற யாழினி, “என் விளையாட்டு எப்படி?” என்றாள் மிதப்பாக.

அவ்வளவு தான் அஜய் ஓங்கி அறைந்திருந்தான்.

“அருளு.” குமரனும், காந்தளும் ஒரு சேர அதிர்ந்து விளித்தனர்.

“தொலைச்சிடுவேன்… ராஸ்கல்” என்ற அஜய், அடித்த கன்னத்தில் கை வைத்து கண்ணீர் வழிய நின்றிருந்தவளை முறைத்து விட்டு மாடியேறி விட்டான்.

“ஏன் யாழி இப்படி பண்ண?” காந்தள் ஆற்றாமையாகக் கேட்டார்.

“அவன் எப்படி பயந்து போயிட்டான் தெரியுமா? அவன் அழுது முதல்முறை பார்க்கிறேன். எதுல விளையாடனும் தெரியாதா?” என்ற குமரன், “மாத்திரை எதுக்கு எடுத்து வச்ச?” எனக் கோபமாக வினவினான்.

“மாமா எனக்கு இல்லைன்னா நான் உயிரோட இருக்கமாட்டேன் சொன்னேன் தானே” என்ற யாழினி, “செத்துப்போலான்னு தான் மாத்திரை எடுத்தேன். ஆனால் ஒருமுறை அம்மாகிட்ட நானே போராடி பார்க்கலாம் நினைச்சு யோசிச்சிட்டு இருக்கும் போது தான், குணா அண்ணா, மதி, நிலா அண்ணி மாற்றி மாற்றி கால் பண்ணவும், என்ன சொல்றாங்ன்னு அட்டென் பண்ணேன். அவங்க பண்ண விளையாட்டு தெரிஞ்சுது. மாமாவும் அவங்க கூட சேர்ந்து என்கிட்ட பொய் சொன்னாருன்னு நானும்…” என்று முடிக்காது இழுத்தாள்.

“படிக்கிறதான… ஒரு விஷயம் நமக்கு இல்லைன்னாக் கூட, அதை அடைய அடுத்து என்னன்னு தான் யோசிக்கணும்” என்று திட்டிய குமரன், “பார்த்துக்கோங்க” என்றான் காந்தளிடம்.

“இவள் அருள் மேல இவ்வளவு உயிரா இருக்கான்னு சந்தோஷப்படுறதா, கவலைப்படுறதான்னு தெரியலையே குமரா” என்றார்.

“அன்பு வைக்கலாம். அவங்களுக்கு அடிக்ட் ஆகக் கூடாது. அது ரெண்டு பேருக்கும் நல்லது இல்லை. உன்னைவிட உன்னோட கட்டுப்பாடு இல்லாத இந்த அன்பு அவனை அதிகம் காயப்படுத்திடும்” என்ற குமரன், “புரிஞ்சிக்க யாழிக்குட்டி” என்றதோடு, “மலையில் எல்லாரும் என்னவோன்னு இருப்பாங்க. நான் கிளம்புறேன்” என்று சென்றுவிட்டான்.

அடுத்து காந்தளுக்கு அவளிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

யாழி அமைதியாக சென்று நீள்விருக்கையில் அமர்ந்திட, கண்ணில் நீர் மட்டும் நிற்காது வந்து கொண்டிருந்தது.

அது தன்னவனை தானே துடிக்க வைத்திட்ட வலி.

அவளையே பார்த்திருந்த காந்தள் நேரத்தை கவனித்துவிட்டு இரவு உணவு செய்ய சமயலறைச் சென்றார்.

அவர் உணவு செய்து முடிக்கும் வரையிலும் யாழி அசையவில்லை. மெல்ல விசும்பிக் கொண்டே இருந்தாள்.

அவள் அஜய்யிடம் பேசினால் தான் இயல்புக்கு திரும்புவாள் என நினைத்த காந்தள்,

“அருளை கூட்டிட்டு வா யாழி, சாப்பிடுவோம்” என்றார்.

வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக மாடியேறியிருந்தாள்.

அறையின் கதவு திறந்தே இருந்தது.

மெல்ல எட்டிப்பார்த்து உள்ளே சென்றாள். குளியலறை கதவும் திறந்திருக்க, அஜய் அறைக்குள் இல்லை.

பேச்சுக் குரல் பால்கனியில் கேட்க, திரையை ஒதுக்கி அங்கு சென்றாள்.

யாழி அறைக்குள் வந்ததுமே அவளின் கொலுசின் ஒலி வைத்து தன்னவளின் வருகையை அறிந்திருந்தான்.

இருப்பினும், கோபம். அசையாது நின்றான்.

“மாமா.” தயங்கி அழைத்தாள்.

மெல்லத் திரும்பியவன் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

“அத்தை சாப்பிடக் கூப்பிட்டாங்க!”

“போ, வரேன்” என்றவனின் பார்வை, அவள் உணரும் முன்பு, தான் அடித்த அவளின் கன்னத்தில் பட்டு முகம் திருப்பியிருந்தான்.

நிகிலுடன் பேசிக் கொண்டிருந்த அஜய், யாழி இன்னும் நின்று கொண்டிருப்பதைக் கண்டு,

“போகலையா நீ?” என முன்பு போல் கடுகடுவெனக் கேட்டான்.

‘மிளகாய் பேக் டூ ஃபார்ம்’ என நினைத்தவள் அவனின் முறைப்பில் அரண்டவளாக அவனைத் திரும்பித்திரும்பி பார்த்தபடி கீழே சென்றாள்.

“அருள் எங்க யாழி?”

“வருவாங்க” என்ற யாழி, “மாமாவை கஷ்டபடுத்தனும் நினைச்சு பண்ணல அத்தை. மாமா இல்லாம ஒன்னுமே இல்லை அத்தை. எனக்கு மாமா இல்லைன்னா எப்படி இருக்கும்?” எனக் கேட்டு அவள் தேம்பிட, அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டே வந்தமர்ந்த அஜய்,

“சாப்பாடு வையுங்கம்மா” என்று உணவில் கண்ணானான். அவளை கண்டுகொள்ளவே இல்லை.

“மாமா…”

விழி உயர்த்தியும் பார்க்கவில்லை.

“மாமா பேசு மாமா. என்னைப் பாரேன்!” யாழி காந்தள் இருப்பதை எல்லாம் கருத்தில் கொள்ளவில்லை. அஜய்யின் முகம் பிடித்து தன் பக்கம் திருப்பினாள்.

அவனோ அவளை கொஞ்சமும் கண்டுகொள்ளாது,

“மும்பையிலிருந்து மாடல் வராங்க. வன் மன்த் மேல இங்க தங்குற மாதிரி இருக்கும்மா. நம்ம வீட்டில் தான் தங்க வைக்கணும். நிலா ரூம் தான் ஃப்ரீயா இருக்கு” என்று நிறுத்திய அஜய், “அங்க மேல நான் இருக்கேன். அதனால் நிலா ரூம் செட் ஆகாது. நீங்க மேல அந்த ரூம் வந்துடுங்க. அவங்களை உங்க ரூமில் தங்க வைக்கலாம்” என்றான்.

“இல்லை அருளு எனக்கு தினம் மாடிப்படி ஏறி இறங்கிறது ஒத்து வராது. உடம்பு நோகும். ஹாஸ்பிடல் அலையணும். உனக்கு தான் அவஸ்தை” என்றவர், “யாழி நிலா ரூமில் தங்கட்டும். வர பொண்ணை யாழி ரூமில் இருக்க வச்சிக்கலாம்” என்றார்.

“அது செட் ஆகாதும்மா” என்று உடனடியாக மறுத்த அஜய், நிகிலுக்கு அழைத்து, “ஹோட்டலிலே ஸ்ட்டே பண்ண வை டா” என்றான்.

“பேச மாட்டியா மாமா!”

உண்டு முடித்தவன் எழுந்து சென்றுவிட்டான்.

“அத்தை…”

“உனக்கு என்னவோன்னு ரொம்பவே பயந்துட்டான் யாழி. எவ்ளோ வேகம் வந்தான்னு தெரியுமா உனக்கு? அவனை கோபமா பார்த்திருக்கேன், அழுத்தமா வெறப்பா சுத்தி பார்த்திருக்கேன். ஒருமுறை கூட கலங்கி நின்னு பார்க்கல. இன்னைக்கு பார்த்தேன். உனக்காக துடிச்சு நின்னான். கோபம் இருக்கத்தான் செய்யும். அவனே சமாதானமாகி வருவான். பொறுமையா இரு” என்றார்.

மேல் சென்ற அஜய் திரும்பி வந்தான்.

“அவங்க வீட்டு சூழல் பெஸ்ட் கேட்கிறாங்கம்மா. அவங்களே கேட்கும் போது ஹோட்டலில் தங்குங்க சொல்ல முடியாது. அவளை உடனே அவளோட தின்க்ஸ் எடுத்துகிட்டு நிலா ரூமுக்கு ஷிஃப்ட் ஆக சொல்லுங்க. வன் ஹவரில் வந்திடுவாங்க” என்று யாழை பாராது அன்னையிடம் சொல்லிவிட்டு கூடத்து இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டான்.

 

Epi 9

நீதான் என் காதல் மழை 9

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
43
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்