நீதான் என் காதல் மழை 7
“மாமா.”
“என்னவாம்?” என்ற அஜய், “முழுசா சாப்பிட்டு போ” என்று தன் கையிலிருந்த உணவை அவளின் வாயருகே நீட்டினான்.
சட்டென்று கண்கள் பனித்திட, வாய் திறந்து வாங்கிக் கொண்டவளின் நெஞ்சமெல்லாம் நிறைந்தது.
“உண்மையாவே ஆமாவா மாமா?”
“நம்பிக்கை இல்லையா?”
“நீ சொல்லி கேட்கணுமே!”
“தோணும் போது சொல்றேன்.”
“அப்போ இப்போ தோணலையா?”
“லவ் டார்ச்சர் பன்ற நீ?” என்று சிரித்த அஜய்… “அம்மா வராங்க. ஓடு… ஓடு… நாளைக்கு எக்ஸாம் இருக்குல. போ படி” என்று எழுந்து கொண்டான்.
சட்டென்று அஜய்யின் கையை பிடித்துக் கொண்ட யாழின், “சொல்லிட்டு போ அஜூ மாமா!” என்றாள்.
அவளின் அஜூ மாமாவில் மொத்தமாக இதயம் தடம் புரண்ட உணர்வு. லாவகமாக முகம் பூசும் வெட்கத்தை மறைத்துக் கொண்டான்.
“என்ன சொல்லணும்?” சமையலறையிலிருந்து வெளிவந்த காந்தள் அவளின் வார்த்தை கேட்டது போன்று கேட்க, அவள் அஜய் கையை அழுத்தமாகப் பற்றியிருப்பதையும் பார்த்தும் பாராதது போல் வந்து நின்றார்.
“அச்சோ யாழ் கையை விடு.” அஜய்க்கு சங்கடமான உணர்வு.
“இப்போ என்ன அத்தை தானே மாமா? எப்போ இருந்தாலும் நான் உன் கையை இப்படி பிடிச்சு அக்னியை சுத்தி வந்தால், பார்க்கத்தானே போறாங்க” என்றவள் காந்தள் பக்கம் திரும்பி, “நீ கையை எடுக்க சொல்லிடுவியா அத்தை” எனக் கேட்டாள்.
“நான் ஏன் சொல்லப்போறேன்” என்ற காந்தள், “உன் விஷயத்தில் இவள் ரொம்பவே அதிரடி தான் அருளு. எனக்கு இப்போவே பயந்து வருது. உன்னை ஆட்டி வைக்கப் போறாள். இவளுக்கு ஓகே சொல்லும் முன்ன நல்லா யோசிச்சிக்க” என்று சிரியாது சொல்ல, அஜய் பக்கென்று சிரித்து விட்டான்.
“அத்தை?” யாழி காந்தளை முறைத்திட,
“அமைதியான யாழிக்குட்டியை விட, இப்படி பட்டாசா பேசுற யாழியை ரொம்பவே பிடிக்குது” என்ற காந்தள், அவளின் கன்னம் கிள்ளி, “அருளு உனக்கு தான். இப்போ அவன் கையை விடு. சாப்பிட்ட கை காயுது” என்றார்.
“விடுற எண்ணமே இல்லை. நாளைக்கு சுலோவை எப்படியாவது ஒத்துக்க வச்சிடு அத்தை. மாமா இல்லாம முடியாது” என்றாள். கடைசி வரியில் தொண்டையின் கரகரப்பை சட்டென்று உள் விழுங்கிக் கொண்டாள்.
காந்தள் யாழின் தலையில் கை வைத்து அழுத்தம் கொடுக்க, “நீ என் ஆசை மருமக யாழிக்குட்டி. நீயே வாய் திறந்து கேட்டதை நான் செய்யாம இருப்பேனா?” என்றவர், “நீ போ படு” என்று அவளின் கன்னம் தட்டி அனுப்பி வைத்தார்.
யாழி அஜய்யை பார்க்க, அவனோ அவளை புன்னகை முகமாக பார்த்து நின்றிருந்தான்.
அவனுக்கு அவளின் காதல் ஆழம் தெரிய தெரிய, இதயத்தில் காதலின் கனம் கூடிக்கொண்டே போனது.
காதலிக்கிறோம் என்பதை விட, காதலிக்கப் படுகிறோம் எனும் இன்பத்தை அவள் அவனுக்கு வாரி வழங்கிட்டாள்.
தன்னவனின் புன்னகையில் லயித்துப் போனாள். அஜய் இப்படி வெளிப்படையாக, அதுவும் அவன் அணிந்திருக்கும் கண்ணாடியை ஊடுருவி கண்களில் காதல் சிந்தி, உதட்டில் சிரிப்போடு நிற்கும் தோற்றம் அவளின் அகத்தில் அத்தனை இன்பத்தை அளித்தது.
“டைம் ஆச்சு. போ யாழி. நாளைக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்ற காந்தள், “எனக்கு தூக்கம் வருது” என்றார்.
அஜய் கண்களை மெல்ல மூடி திறக்க, யாழி எழுந்து அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அறைக்குள் சென்றாள்.
“விட்ராத அருளு. நம்மள உலகமா நேசிக்கிற உறவு கிடைக்கிறது அரிது. அவள் உன்னை அவளோட உலகத்துக்கும் மேல நேசிக்கிறாள்” என்றார்.
“மூச்சு முட்ட வைக்கிறாம்மா. அவ அளவுக்கு நான் நேசிப்பேனா?” என்ற மகனின் கன்னத்தில் கை வைத்த காந்தள், “நேசிக்காம தான் இந்த கேள்வி வருதா அருளு?” என்றார்.
“நீங்க ரெண்டு பேரும் தான் பொருத்தம்” என்றவர், “எனக்கு அண்ணி என்ன சொல்லுவாங்க இருக்கு” என்றார்.
அஜய்க்கும் அந்த கலக்கம் இருந்தது.
இருப்பினும், “எப்படியாவது சம்மதிக்க வைக்கணும்மா. யாழை விட்டெல்லாம் கொடுக்க முடியாது” என்றான். இதே அஜய் தான் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லவும் இருக்கிறான். அவனே அறியாத ஒன்று.
காந்தள் மென் முறுவலோடு சென்றிருந்தார்.
அஜய் கை கழுவிக் கொண்டு யாழின் அறையை எட்டிப் பார்க்க, அவளோ புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். சத்தம் காட்டாது மேலேறி விட்டான்.
ஒரு மணி நேரம் சென்றிருக்கும்.
அன்று முழுவதும் எடுத்து பார்த்திடாத அலைபேசியை எடுத்து பார்த்த யாழின் விழிகள் விரிந்தது.
விளம்பரத்தின் வீடியோக்களை அனுப்பி வைத்து, “நல்லாயிருக்கு” என அவளின் தோழிகள் கூறியிருந்தனர். ஒரு சிலர் வாழ்த்தியும் இருந்தனர்.
அன்று எடுக்கும் போது கூட, இத்தனை நெருக்கத்தை இருவரிடமும் அவள் உணரவில்லை. பெரிய மாடலையே தூக்கிவிட்டு தன்னை நடிக்க வைக்கிறான். சரியாக நடிக்க வேண்டுமென கவனமாக இருந்திட, இருவரின் பார்வையிலும் அப்பட்டமாக தெரிந்த காதலை தற்போது காணொளியில் தான் கண்டு ஆச்சரியம் அடைந்தாள்.
“மாமா!” திரையில் இருவரிடமும் தெரிந்த அழகியலில் மொத்தம் கரைந்தாள். ஏற்கனவே அவன் மீது பித்தாக இருப்பவளுக்கு, உடனே அவனை பார்க்க வேண்டுமெனத் தோன்ற வெளியில் வந்து, காந்தள் அறையின் மூடிய கதவினை பார்த்து ஒரு நொடி தயங்கியவள், வேகமாக உள்ளே சென்று காந்தளை உலுக்கி எழுப்பியவள்,
“எனக்கு இப்போவே மாமா பார்க்கணும் அத்தை. நீ ஒண்ணும் சொல்லமாட்டியே?” எனக் கேட்டு அவரின் பதிலைக் கூட எதிர்பாராது கதவினை சாற்றி சென்றிருந்தாள்.
உறக்க கலகத்தில் அவள் வந்து என்ன கேட்டாள் என்பது விளங்காது காந்தள் மீண்டும் படுத்துக் கொண்டார்.
படிகளில் வேகமாக ஏறி வந்த யாழிக்கு, அஐய்யின் அறைக்குள் செல்ல தயக்கம் எல்லாம் இல்லை. காதலை மறைத்து வைத்த நிலையெல்லாம் போதும் எனும் முடிவுக்கு வந்து விட்டிருந்தாள் போலும். வெளிப்படையாக ஒவ்வொன்றையும் காட்டத் தொடங்கிவிட்டாள்.
மெல்ல கதவினை தட்டினாள்.
அஜய் நல்ல உறக்கத்தில் இருந்திருப்பான் போலும், கண்களை தேய்த்தபடி எழுந்து வந்து கதவினை திறந்தவன் நிச்சயம் யாழை எதிர்பார்க்கவில்லை.
“மாமா” என்று சட்டென்று அவனே உணரும் முன்பு, அவனது இடையில் கையிட்டு மார்பில் தலை சாய்த்து கட்டிக்கொண்டாள்.
அவளின் ஸ்பரிசத்தில் முழு உறக்கமும் பறந்தோட, “ஹேய் யாழ்?” என்று அதிர்ந்து விளித்தான்.
“லவ் யூ மாமா!” தன் முகம் உயர்த்தி தன்னை நோக்கி தாழ்ந்திருந்த அவனது முகம் பார்த்து சொல்லியவள், அவனது இதயத்தில் தன்னுடைய கன்னத்தால் இடித்தாள்.
“திக்குமுக்காட வைக்கிற அம்மு” என்ற அஜய், அவளின் கன்னம் ஏந்தி நெற்றி முட்டினான்.
“இதுக்கேவா?” என்ற யாழ், “இன்னும் இன்னும்… நிறைய நிறைய உன்னை லவ் பண்ணணும் மாமா” என தன் இரு கைகளையும் சிறகாய் நீண்டு விரித்துக் கூறிட, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நிலைப்படியில் ஒரு பக்கமாக சாய்ந்து நின்று முறுவலோடு ரசித்திட்டான் தன்னவளை.
“இதுக்கே முடியலடி. இன்னுமா? ரொம்பவே திகட்டுது” என்றான்.
கடிகார ஒலியில் தான் அஜய் நேரத்தை உணர்ந்தான்.
“நீ தூங்கலையா?”
“மாமா மேல லவ் அதிகமாச்சா. அதான் பார்த்துட்டு” என்று அவனை நெருங்க, அவளின் பார்வை மாற்றத்தில் தன்னைப்போல் அஜய் பின்னோக்கி அடி வைத்து நகர்ந்தான்.
அஜய்யின் ஒவ்வொரு அடிக்கும், யாழி மெல்ல முன்னேறினாள்.
அறைக்குள் வந்திருந்த அஜய் கட்டில் இடித்து நின்றிட, முதல் முறை அஜய் தடுமாறி நிற்பதை ரசனையாக பார்த்தாள்.
“யாழ் கீழ போ.” மெலிந்து வந்தது அவனது குரல்.
“போறேன்… போறேன்…” என்றவள், “என்ன மிஸ்டர். மிளகாய்க்கு இப்போ அதட்ட வரலையா?” என குறும்பாய் கேட்டாள். மென் முறுவலோடு.
“இப்போ என்னடி வேணும்?”
“நீதான்.” பட்டென்று சொல்லிய யாழி, அஜய்யின் கண்கள் விரிந்ததில் வந்த சிரிப்பை மறைத்தவளாக, அவனின் கழுத்தைச் சுற்றி தன்னிரு கைகளையும் மாலையாய் கோர்த்து… “ரொம்ப தான். நீ நினைக்கிறதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் மாமா. இப்போ ஒரே ஒரு முத்தா கொடு. கிளம்புறேன்” என்றாள். சட்டமாக.
“நான் என்ன நினைச்சேன் உனக்கு எப்படித் தெரியும்?” அவள் முன் தடுமாறும் மனதை காட்டிக்கொள்ள முடியாது கேள்வி கேட்டான்.
“உன் கண்ணு சொல்லுச்சு மாமா அதை” என்றவள் அவனது கழுத்தில் கோர்த்திருந்த தன் கையை தன் பக்கம் இழுக்க அஜய்யின் நெற்றி அவளின் நெற்றி வந்து முட்டி நின்றது.
“அம்மு…” அத்தனை சூடாய் அவளின் முகம் தீண்டியது அவனது மூச்சுக் காற்று.
மெல்ல இமை மூடியவளின் பாத விரல்கள் தரையில் அழுந்த நெறிந்தன. மேல் பற்களால் அவளின் கீழ் செவ்விதழ் கடி பட்டது.
அஜய் மொத்தமாக சொக்கி நின்றான்.
“ஃப்ரீஸ் பன்ற அம்மு!” கரகரப்பாய் அவளின் நாசி மோதியது அவனது குரல்.
சட்டென்று இமை திறந்த யாழி, “அப்போ இன்னும் பண்ணலையா மாமா?” என ஒற்றை கண்ணடிக்க… முழுதாய் தடுமாறியவன், அப்போது தான் தாங்கள் அறைக்குள் வந்திருப்பதையே உணர்ந்தான்.
வேகமாக பிரிந்து நின்றான்.
“ரொம்ப தான்” என்ற யாழி அஜய்யின் நெஞ்சில் கை வைத்து தள்ள, அவள் தள்ளுவாள் என்று எதிர்பாராதவன் மெத்தையில் அமர்ந்த நிலையில் விழ, தடுமாறி நிலை கொண்டவன் உணரும் முன்பு அவனது மடியில் அமர்ந்திருந்தாள்.
“அம்மு…”
“என்ன மாமா?”
“கீழ போடா!”
“ஏன் மாமா?”
” ம்ப்ச்… உள்ள என்னவோ பன்றடி!”
“ஒரு முத்தா கொடுத்தக்கவா மாமா?” அந்த குரலில் அஜய்யின் தலை தன்னைப்போல் சரியென அசைந்தது.
அஜய்யின் ஒரு கன்னத்தில் தன் உள்ளங்கை வைத்து, மற்றைய கன்னத்தில் தன் பூவிதழை உரசியும் உரசாது மென்மையாய் வைத்தவள் அவனின் விழிகள் மூடிட, தன்னிதழில் அழுத்தம் கொடுத்தாள்.
யாழ் தன் மடியில் அமர்ந்திருந்த போதும், அதுவரை அவள் மீது கை வைத்திடாது இருந்த அஜய்யின் கைகள் தானாக மேலெழும்பி அவளின் இடை அணைத்தது.
இரண்டு இதயமும் அத்தனை நெருக்கமாய் காதலின் துடிப்பை தழுவியது.
“அம்மு…” காற்றாய் ஒலித்தது அஜய்யின் குரல்.
“அம்மா கண்டிப்பா ஒத்துப்பாங்கதான மாமா?” அத்தனை தவிப்பாய் வெளிவந்த யாழின் வார்த்தைகளில் சுதாரித்த அஜய்…
“இந்த குட்டி தேவதையை இப்படியே வாழ்நாள் முழுக்க மடியில வச்சிக்கணும் தோணும் போது… எப்படி விடுவனாம்?” என்று அவளின் மூக்கோடு தன் மூக்கு உரசினான்.
“அம்மா முடியாது சொல்லிட்டா?”
“முடிஞ்சளவு… இந்த காதல் ராட்சசியை எனக்கே கொடுத்திடுங்க கேட்பேன். அப்பவும் முடியாது சொன்னா?” அஜய் சொல்லாது இழுத்திட…
யாழின் கண்ணில் கரு விழிகள் இங்கும் அங்கும் அலைந்தன. என்ன சொல்வானோ எனும் அவளின் தவிப்பு கருமணியின் ஓட்டத்தில் தெரிந்தது அவனுக்கு.
“அத்தை சம்மதம் இல்லாம நம்ம கல்யாணம் நடக்கும்” என்று அவளின் அறை வாயிலில் அவளை இறக்கி விட்டான்.
அவனால் இனி எதுக்காகவும், யாருக்காகவும் தன்னவளை விட்டுக்கொடுத்திட முடியாது. அவளின் அளவில்லா காதலில் மொத்தமாய் தொலைந்து கரை சேர முடிவு செய்துவிட்டான்.
கால் தரையில் ஊன்றி நிற்கவும் தான், அஜய் தன்னை தூக்கிக் கொண்டு வந்ததையே உணர்ந்தாள்.
“கல்யாணம் வரை பொறுமையா இருடி. உன் வேகம் எல்லாம் இந்த மாமாவால் தாங்க முடியாது” என்றான்.
“லவ் யூ மாமா” என்றவள் தன் கன்னத்தை அவன் பக்கம் காண்பித்தாள்.
“நல்லவனாவே இருக்க விடமாட்டியா அம்மு” என்று பின்னந்தலையை அழுந்த வருடியவன், “எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்” என்றான். அத்தனை அழுத்தமாக.
“போயா” என்றவள், “நீ எப்பவோ கொடு. நான் தோணும் போதெல்லாம் கொடுப்பேன். என் மாமா” என்று சடுதியில் அவனது கன்னம் தீண்டி விலகி அறைக்குள் ஓடி மறைந்தாள்.
அவள் இதழ் தீண்டிய இடத்தின் குளுமையை விரல் வைத்து ரசித்தவன்,
“ஜாக்கிரதையா இருக்கணும் அஜய். மொத்தமா சுருட்டிப்பா” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவனாக அங்கிருந்து நகர்ந்தான்._
______________________
அஜய் காலை கீழிறங்கி வரும்போது யாழினி வேகவேகமாக இங்கும் அங்குமாக நடந்து கொண்டு கல்லூரி செல்ல கிளம்பிக் கொண்டிருந்தாள்.
கூடத்தின் இருக்கைகள், நீள்விருக்கை, தரை, டீபாய் என அனைத்திலும் புத்தகங்கள் திறந்தபடி காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன.
‘விடியலில் எழுந்து படித்திருப்பாள் போல்.’
“அத்தை புக்ஸ்லாம் அப்படியே இருக்கட்டும் நான் வந்து எடுத்து வச்சிக்கிறேன்” என்று கையில் கை கடிகாரத்தைக் கட்டிக்கொண்டே திரும்பியவள், அஜய் நிற்பதை கண்டுவிட்டு, “மாமா அந்த ஐடி எடுத்து மாட்டிவிடு” என்று தன் பையில் கையை விட்டு நோண்டிக் கொண்டிருந்தாள்.
டீபாய் மீதிருந்த யாழின் கல்லூரி அடையாள அட்டையை எடுத்த அஜய், குனிந்திருந்த அவளின் கழுத்தில் போட…
“அத்தை மாமாக்கும் எனக்கும் மேரேஜ் ஆகிடுச்சு” என்று சத்தமாகக் கூறினாள்.
“எதே… கல்யாணமா?!” என்று அதிர்ந்த அஜய்…
நல்லவேளை காந்தளுக்கு கேட்கவில்லை என சமையலறையை எட்டிப் பார்த்துவிட்டு ஆசுவாசம் அடைந்தான்.
“சேட்டை” என்று அவளின் தலையில் கொட்டிய அஜய், “கழுத்தில் எது போட்டாலும் தாலியாகிடுமா?” எனக் கேட்டான்.
“கழுத்துல போடுறது தாலியாவே இருந்தாலும், அது தாலின்னு நம்ம மனசு ஏத்துக்கணும் இல்லைன்னா அது மஞ்சள் பூசின வெறும் கயிறு, அவ்ளோ தான் மாமா” என்றாள்.
“அப்போ இப்போ நமக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” அஜய் புருவம் உயர்த்தி வினவினான்.
“ஆமா” என்ற யாழினி, “பொண்டாட்டிக்கு ஒரு முத்தா கொடு மாமா” என்று தன் கன்னத்தைக் காட்டினாள்… கன்னத்தில் கிள்ளிய அஜய், “போ… ஒழுங்கா எக்ஸாம் எழுது… படிப்பு நினைப்பே இல்லையா?” என்றான்.
“படிப்புக்கும் லவ்வுக்கும் சம்மந்தம் இல்லை மாமா” என்ற யாழி, “நீ பேசி அம்மா சரின்னு சொல்லிட்டா… குமரன் அண்ணா சொன்ன மாதிரி நான் படிச்சு முடிச்சதும் தான் கல்யாணம் அப்படி இப்படின்னு எதும் சொல்லிடாதா மாமா. எனக்கு மேரேஜ் வயசு வந்தாச்சு” என்றாள்.
“என்னடி அவசரம் உனக்கு? ஒழுங்கா படி… கல்யாணம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்று அஜய் நகர,
“யோவ் மிளகாய் நில்லு” என்று அவனின் கை பிடித்து நிறுத்திய யாழி… “இப்போ நீ நாம விரும்புறோம் சொன்னன்னு வை… உடனே என்னை கல்யாணம் முடியிற வரை, எப்படி ஒரே வீட்டில் ஒண்ணா இருக்கிறதுன்னு இங்கிருந்து பேக் பண்ணிடுவாங்க. உன்னை பார்க்காம என்னால இருக்க முடியாது. நான் இங்க உன் கூடவே இருக்க என்னலாம் பிளான் பண்ணி, ஜூரம் வர வச்சு, ஹாஸ்டல் சாப்பாடு ஒத்துக்கலன்னு பொய் சொல்லி நம்ப வச்சு வந்தேன் தெரியுமா? நீ பாட்டுக்கு பொசுக்குன்னு கல்யாணம் இப்போ வேணாம் சொல்லுவேங்கிற… ஒழுங்கா சீக்கிரம் தாலி கட்டுற வழியை பாரு. ஒத்த முத்தத்துக்கு கூட நீ ரொம்ப யோசிக்கிற…” என்றவளை “கேடி” என மூக்கு பிடித்து ஆட்டினான்.
“எப்போ போறீங்க மாமா?”
“பதினொரு மணி மாதிரி போகனும்” என்ற அஜய், “உனக்கு டைம் ஆகலையா? சாப்பிட்டியா?” எனக் கேட்டான்.
“ஊட்டி விடு மாமா?”
“அடியேய்… அம்மா இருக்காங்க.”
“இருக்கட்டும் மாமா. நீ எனக்கு ஊட்டிவிட்டதே இல்லையா” என்றவள், “சாப்பாடு ரெடியா அத்தை?” எனக் கேட்டாள்.
தட்டில் உணவினை வைத்து எடுத்து வந்தவர், நேராக அஜய்யின் கையில் கொடுக்க…
“ம்மா…” என்றான் அஜய்.
“எல்லாம் எனக்கும் கேட்டுச்சு. கல்யாணத்தை ரொம்பவே சீக்கிரம் வைக்கணும் போல. எனக்கு உன்னை நினைச்சா தான் கவலையா இருக்கு” என்று தன்னை முறைக்கும் யாழியை கண்டு கொள்ளாதவராக சென்றுவிட்டார்.
“நீ ஊட்டு மாமா. அத்தை என்னை கிண்டல் பண்றேன்னு மொக்கை பண்ணிட்டு போகுது. கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன்னை கண் கலங்காம வச்சு பார்த்துப்பேன்” என்றவளின் பேச்சில் நீண்டு சிரித்த அஜய்… “லவ் யூ அம்மு” என்று சொல்லிட…
“அன்னைக்கு ஜூரம் வந்தப்போ நான் மயக்கத்தில் இருக்கும் போதும் நீ சொன்னல மாமா?” எனக் கேட்டாள்.
“இல்லையே” என்ற அஜய், “சாப்பிடுடி” என்று வேகமாக ஊட்டி முடித்தான்.
“டிராப் பன்றியா மாமா?”
“வரும்போது எப்படி வருவ?”
“நீயே வந்து பிக்கப் பண்ணிக்கோ மாமா!”
“மலைக்கு வேற போகணும் யாழ். நீ உன் ஸ்கூட்டியிலே போ” என்றான் அஜய்.
“போடா மிர்ச்சி” என்ற யாழி, “இனி நீயே கூப்பிட்டாலும் உன் பைக்கில் வர மாட்டேன்” என்று முறுக்கியவளாக அறைக்குள் சென்று ஹால் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு வர, அஜய் கூடத்தில் இல்லை.
யாழ் முகம் சுருக்கியவளாக, “அத்தை போயிட்டு வரேன்” என கத்தி சொல்லிவிட்டு, வெளியில் வர அஜய் வண்டியில் அமர்ந்து காத்திருந்தான்.
யாழி வேண்டுமென்றே தன் வண்டியை நெருங்கி செல்ல…
அஜய் வண்டியை உருமவிட்டான்.
யாழ் வேகமாக வந்து அவனின் தோளில் கை வைத்து ஏறி, இரு பக்கமும் காலிட்டு அமர்ந்தாள்.
“என்னையே போக சொன்ன?”
“என்னவோ நீ கேட்டு இல்லைன்னு சொல்ல முடியுறது இல்லை” என்ற அஜய் வண்டியை செலுத்தினான்.
“எப்போ இருந்து மாமா இவ்ளோ லவ்?”
“உன் லவ் தெரிஞ்சதுல இருந்து.”
“பாருடா” என்ற யாழி, அவனின் வயிற்றோடு கையிட்டு ஒட்டி அமர்ந்தாள்.
“அம்மு…”
“ரொம்ப நாள் ஆசை மாமா. தள்ளி உட்கார சொல்லிடாத பிளீஸ்” என்று அவனது முதுகில் கன்னம் வைத்து அழுத்தினாள். கையின் இறுக்கமும் கூடியது.
அஜய்க்கு தான் அவஸ்தையாகிப் போனது.
“அம்மு பிளீஸ் டா!”
“நிகில் அண்ணா உன் பின்னாடி உட்கார்ந்து வரும் போதெல்லாம் செம காடுப்பாகும் மாமா. நீ எனக்கே எனக்கு மட்டும் தான்” என்றாள்.
“பட்டா போட்டு டாக்குமெண்ட் சைன் பண்ணிடலாமா?”
யாழின் காதல் அவனை திக்கு முக்காட வைக்கிறது. அவள் தன் மீது பைத்தியமாக ஒருவித அடிக்ட் எனும் நிலியைல் இருப்பது காதலாக இன்பம் கொண்டாலும், உள்ளுக்குள் சிறு பயமும் தோன்றியது.
‘தன்மீது இத்தனை நேசம் கொண்டிருப்பவள், தன் அன்னையிடமே தன்னை விட்டுக் கொடுக்க நினைக்காதவள் எப்படி தனக்கு ஒன்றென்றால் தாங்கிக் கொள்வாள்… அதீத அன்பும் ஆபத்து தானே’ என நினைத்தான்.
யாழியிடம் பொறுமையாக இதைப்பற்றி பேச வேண்டுமென எண்ணினான்.
இந்த அதீத அன்பு ஆபத்து இல்லை. அவனை பெரும் சுழல் ஒன்றில் அவனே அவனை நம்பாதிருக்கும் தருணம், அவனை அதிலிருந்து மீட்கும் பெரும் பலமென அக்கணம் அத்தனை அன்பு வைத்துள்ள யாழினியும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த அன்பினால் தான் பெரும் சுழலில் சிக்காது மீண்டு வரப்போகிறான் என்பது அவனும் அறியாதது.
“அதான் மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணுவோமே மாமா” என்ற யாழி, “அம்மாவை எப்படியாவது சம்மதிக்க வச்சிடு மாமா” என்றாள்.
“சரிடா” என்ற அஜய், கல்லூரி வாயிலில் அவளை இறக்கிவிட்டு, “மதியம் நிகில் வர சொல்றேன் அம்மு. அவனோட வீட்டுக்கு போயிடு. மலைக்கு போனால் என்ன கண்டிஷன் தெரியாது” என்றான்.
“சரி மாமா” என்றவள் இமைக்கும் நொடியில் அவன் கன்னத்தில் முத்தம் வைத்து ஓடியிருந்தாள்.
அஜய்யின் தவிப்புகள் கூடின.
______________________________
அஜய் சுலோச்சனாவிடம் பேசுவதற்காக காந்தளை அழைத்துக்கொண்டு வீரபாண்டியன் எஸ்டேட்டிற்கு வர, அங்கு அவர்களுக்கு முன்னாக, சுலோச்சனாவின் அண்ணன் தன் குடும்பமாக வந்திருந்தார்.
காந்தள்… ராஜேந்திரன் மற்றும் கண்ணனை ஏறிட இருவரும் ஒன்றும் தெரியாதென சைகைக் காட்டினர்.
“என்னடா நீ உன் லவ் சொல்லலாம் நினைக்கும் போது, ஆப்பு உனக்கு முன்ன வந்து நிக்குது” என்று குணா அஜய்யை கேலி செய்ய, “சும்மா இரு குணா… அண்ணா பாவம்” என்றாள் மதி.
“ரொம்பத்தான்… லவ் சொன்னதும் அக்செப்ட் பண்ணாம கஷ்டப்படுத்தினா இப்படித்தான் நடக்கும் போல. குமரன், எனக்கு… இப்போ இவனுக்கு” என்றான் குணா. குணா எதார்த்தமாக நடந்ததைக் கூறினான். ஆனால் மதிக்கு சிறு வலி. அவளும் குணா காதலை சொல்லியதும் ஏற்காது வருத்தியிருந்தாளே!
“சாரி குணா…”
எதுக்கு எனும் விதமாக புரியாது பார்த்தான் குணா.
“கேட்கணும் தோணுச்சு.”
“ஹான்” என்ற குணா, “எதுவா இருந்தாலும் இந்த சாரியே கடைசியா இருக்கட்டும்” என்றான்.
சுலோ தன் அண்ணன் குடும்பத்தை விழுந்து விழுந்து கவனித்தார்.
“ரொம்பவே கஷ்டம் போல.” குணா முணுமுணுக்க… “நீ கொஞ்சம் சும்மா இரு குணா. அஜய் பேசட்டும்” என்ற குமரன், “பேச்சு ஆரம்பிக்கும் முன்ன நீ பேசிடுடா” என்றான். அஜய்யிடம்.
“எஸ் ண்ணா… அப்புறம் பேசி முடிச்சு எதுவும் முடிவு எடுத்திடப் போறாங்க” என்றாள் வெண்ணிலா.
அஜய் தன் அன்னையை பார்க்க, அவரும் பேசு என்பதைப்போல கண் காட்டினார்.
“யாழி வரலையா?” ஹரனின் தந்தை காந்தளிடம் கேட்டார்.
“இன்னைக்கு பரீட்சை அவளுக்கு” என காந்தளை முந்திக்கொண்டு சுலோ பதில் கொடுத்தார்.
சுலோச்சனாவின் ஆர்வம் அஜய்க்கு சரியாகப் படவில்லை. தான் இப்போதே பேசுவது முக்கியம் என நினைத்து, “அத்தை” என்று அழைக்க வாய் திறக்க, ஒலித்தது என்னவோ ஹரனின் குரல்.
“இவன் என்ன பேசப்போறான்?” வெண்ணிலா கிசுகிசுக்க…
“பொறுமையா இரு நிலா” என்று ஹரன் பேசுவதை கவனித்தான் குமரன்.
“எனக்கு யாழியைக் கட்டிக்க விருப்பம் இல்லை அத்தை. தப்பா எடுத்துக்காதீங்க. இதுக்குதான் இங்க வரோம் தெரிஞ்சிருந்தா கண்டிப்பா வந்திருக்க மாட்டேன். சும்மா உங்களை எல்லாம் பார்த்திட்டு போலாம் சொன்னாங்க. அதான் வந்தேன். யாழி மேல எனக்கு அப்படியொரு எண்ணமே இல்லை. அதோட எனக்கு சொந்தத்தில் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை. தப்பா பேசியிருந்தா மன்னிச்சிக்கோங்க” என்றான்.
“என்னடா டுவிஸ்ட் இது. ஒத்த சீன் வந்து ஸ்கோர் பண்ணிட்டான்” என்று குணா சொல்ல எல்லோருக்கும் அவனின் எண்ணம் தான்.
“என்னண்ணா ஹரன் இப்படி சொல்லுறான்.” சுலோவிடம் ஏமாற்றம்.
“என்ன ஹரன் இது. உனக்கு எது நல்லதுன்னு எங்களுக்கு தெரியாதா?” எனக் கேட்டார் அவனின் தந்தை ரகுராம்.
“கல்யாணம் ஒருமுறை தான் ப்பா. அது எனக்கு பிடித்த மாதிரி நடக்கணும்” என்ற ஹரன், “யாழை நான் அப்படி பார்த்ததே இல்லைப்பா. வேற பொண்ணு பாருங்க நான் சம்மதிக்கிறேன்” என்றான். அழுத்தமாக.
“சாரி சுலோ எங்களுக்கு ஹரன் விருப்பம் தான் முக்கியம். அவன்கிட்ட கேட்காம உன்கிட்ட பேசியது தப்பு தான். மனசுல வச்சிக்காதம்மா” என்று அதற்கு மேலும் அங்கு இருக்காது ரகுராம் கிளம்பிவிட்டார்.
ஹரன் கொஞ்சம் பின் தங்கி செல்ல…
யாரின் கவனமும் ஈர்க்காது வேகமாக சென்று ஹரனின் கரம் பற்றி நன்றி தெரிவித்தான் குமரன்.
“நீங்க கேட்டுகிட்டிங்க அப்படின்னு இல்லை. உண்மையிலேயே எனக்கு யாழ் மீது விருப்பமில்லை. கல்யாணம் பண்ணிக்கிட்டு வர விருப்பத்தை விட, காதலா வர விருப்பத்துக்கு மதிப்பு அதிகம் தானே! யாழி அவளுக்கு பிடித்த மாதிரி கல்யாணம் பண்ணிக்கட்டும்” எனக்கூறிச் சென்றான் ஹரன்.
சுலோ இடிந்து போய் அமர்ந்திருந்தார்.
இந்நேரத்தில் தான் தன் விருப்பத்தை சொல்வது சரி வருமா எனும் பெரும் சஞ்சலத்தில் நின்றிருந்த அஜய், குமரன் அருகில் வந்ததும்…
“தேங்க்ஸ் மச்சான்” என்றான்.
குமரன் எதுக்கு எனும் விதமாக பார்க்க…
உன்னை நானறிவேன் என்று கண்ணடித்தான் அஜய்.
“எங்களுக்கும்” என்று குணா சொல்ல, அவனோடு மதி மற்றும் வெண்ணிலாவும் குமரனை பார்த்திருந்தனர்.
சுலோ மற்றவர்களை பார்க்க முடியாது எழுந்து சென்றுவிட்டார்.
“என் மச்சானுக்காக இதைக்கூட செய்ய மாட்டேனா” என்ற குமரன், “பெரியப்பா தான் ஹரன் கிட்ட பேச சொல்லி ஐடியா கொடுத்தார்” என்று ராஜேந்திரனை கைக்காட்டினான்.
Epi 8 link
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
53
+1
2
+1
1
1 Comment