Loading

நீதான் என் காதல் மழை 6

இரவு வீட்டிற்கு வந்த அஜய் நேராக நுழைந்தது யாழின் அறைக்குள் தான்.

கொண்ட நேசம் ஒரு கணமாயினும் உயிர் வதை தான்.

மூன்று நாட்களுக்கே தாக்கு பிடிக்க முடியாது தவியாய் தவித்தான்.

“எதுக்குடி லவ் பண்ற சொன்ன?” புகைப்படத்தில் இருப்பவளிடம் கேட்டவன், மெத்தையில் சுருண்டு படுத்துக் கொண்டான்.

கண்ணீர் காது மடலை தொட்ட ஈர சில்லிப்பில் தான், தான் அழுகிறோம் என்பதையே உணர்ந்தான்.

காதலை கண்டுகொண்ட சில தினங்களில் முடிவுக்கு வருமென்று அவன் எதிர்பார்க்கவில்லை.

ஒரே குடும்பம். இரத்த உறவு. விருப்பத்தைக் கூறினாலும் தடையேதும் இருக்காது என்று அதீத நம்பிக்கையில் இருந்தவனுக்கு, சுலோச்சனாவின் மற்றைய பக்க ஆசை, ஏமாற்றத்தை அளித்தது.

“அம்மு…” அரற்றியவன் தன்னவளின் வாசம் மூச்சினை முட்ட வைத்திட வேகமாக எழுந்து தன்னுடைய அறைக்கு சென்று கவிழ்ந்தடித்து படுத்துக் கொண்டான்.

இருவரும் திருமண கோலத்தில், யாழி வரைந்த படம், அவனின் மனதை மேலும் கனக்கச் செய்தது.

தூக்கத்தை முயன்று வரவழைத்துக் கொண்டான்.

காலையில் குமரன் வந்து வீட்டு அழைப்பு மணியை அழுத்தவே எழுந்து வந்தான் அஜய்.

“வாடா… என்ன இவ்வளவு காலையில வந்திருக்க?” அஜய் கண்களை தேய்த்துக்கொண்டே வினவ,

“மணி பத்தாகப் போகுது” என்று குமரன் தள்ளி நின்றான். அவன் பின்னால் யாழினி நின்றிருந்தாள்.

அஜய் ஒரு நொடி பார்த்துவிட்டு உள்ளே வர வழிவிட்டு நின்றான்.

“நைட் சரியா தூங்கலையா நீ” எனக் கேட்டுக்கொண்டே குமரன் கூடத்தில் அமர, யாழினி அமைதியாக தனதறை சென்று படுத்துக் கொண்டாள்.

“பசிக்குது குமரா. எதும் செய்து தா. குளிச்சிட்டு வரேன்” என்ற அஜய், குமரன் எதும் கேட்பதற்கு முன் வேகமாக மாடியேறி சென்றிருந்தான்.

அஜய் வரும் போது குமரன் உணவினை எடுத்து வைத்து தயாராக இருந்தான்.

“வெளியப்போறியா?”

அஜய் கிளம்பி வந்த விதம் கண்டு குமரன் வினவினான்.

“ம்ம்…” அஜய் அமைதியாக உணவினை உண்ண ஆரம்பித்தான்.

“யார்கிட்ட இருந்து ஓடப் பாக்குற அருளு?”

“குமரா பிளீஸ்…”

அஜய் எழுந்து சென்று கை கழுவி வந்தான்.

“அவள் சாப்பிட்டாளா?” தயங்கித்தான் கேட்டான் அஜய்.

“யாரு?”

“ம்ப்ச்… நான் கிளம்புறேன்” என்று அஜய் சொல்ல…

“ஒன்னு நமக்கு வேணும்னா நாம தான் கேட்கணும் அருளு. நீ கேட்காம நான் எடுத்து சொல்லி புரிய வைக்க முடியாது” என்றான் குமரன்.

“என்னால் குடும்பத்துக்குள் பிரச்சினை உண்டாக்க முடியாது. சுலோ அத்தை எவ்ளோ ஆசையா எதிர்பார்க்கிறாங்க அவங்க பேச்சில் தெரிஞ்சுது. இப்போ நான் எனக்கு அவளை கொடுங்கன்னு நின்னா, எல்லாரும் என் பக்கம் நிப்பீங்க, ஆனால் அத்தை?” அஜய் சொல்லாது நிறுத்திய பேச்சு குமரனுக்கு விளங்கியது.

அவனும் அதற்காகத்தானே மௌனமாக இருக்கின்றான்.

சுலோச்சனா குடும்பம் என்று அரவணைக்கும் அதே சமயம் தனக்கு என்று அனைத்தையும் முதலில் செய்து கொள்வார். தனக்கு அடுத்து தான் அனைத்தும் என்று இருப்பவர். அவருக்கு முதலில் தன் விருப்பம், தன் பிள்ளை, தன் கணவர். அதன் பின்னர் மற்ற உறுப்பினர்கள்.

நிச்சயம் தன் விருப்பத்திற்கு எதிராக ஒன்று நடக்கிறது என்றால், சுலோ தன் விருப்பமின்மையை பட்டென்று முகத்திற்கு நேரே காட்டிவிடுவார். அதில் நிச்சயம் குடும்பத்திற்குள் சச்சரவு ஏற்படும். தன்னால் தன்னுடைய காதலால் அது வேண்டாமென்று நினைக்கிறான் அஜய்.

“என்ன பண்ணனும் அருளு?” கேட்ட குமரனை தாவி அணைத்த அஜய்யின் கண்கள் கண்ணீரை வெளிவிட்டது.

“அருள்… டேய் என்னடா?” குமரனுக்கும் கண்கள் கலங்கியது.

எத்தனை மிடுக்கான ஆள் அஜய். எப்போதும், சிறுவயது முதலே ஒருவித திமிருடன் பார்த்து வளர்ந்தவன் அஜய். அப்படிப்பட்டவன் அழுது பார்க்கிறான். குமரனுக்கு என்னவோ போலானது.

“யாழ்’க்கு நானும் விரும்புறேன் தெரியாது. சொல்லிடாத… நான் விரும்புலங்கிற எண்ணத்திலாவது அவள் அத்தை சொல்றதுக்கு சம்மதம் சொல்லட்டும்” என்று பிரிந்து நின்றான் அஜய்.

“அவளால் முடியும் தோணுதா உனக்கு” என்ற குமரன், “அங்க நீயில்லைன்னு தான் படிக்கணும் காரணம் காட்டி அவள் இங்க கிளம்பி வந்ததே… அவள் உன்கிட்ட பேச நினைக்கிறாள். பொறுமையா பேசு. நீங்க ரெண்டு பேரும் தெளிவா முடிவெடுத்தா தான் சரி செய்ய முடியும்” என்று கிளம்பிவிட்டான்.

அஜய் தலையை பிடித்துகொண்டு, கைகளை தொடையில் ஊன்றி அமர்ந்துவிட்டான்.

அவனுக்கு என்ன முடிவெடுக்க வேண்டுமென்றே தெரியவில்லை.

அந்நேரம் சுலோச்சனா அவனுக்கு அழைத்திருந்தார்.

“சொல்லுங்க அத்தை.”

“யாழ் வந்துட்டாளா அஜய்?”

“ம்ம் அரை மணி நேரம் ஆகுது அத்தை” என்று அவன் சொல்ல அவரிடம் மௌனம்.

“விளம்பரம் டிவியில வந்துச்சுப்பா” என்று நிறுத்தினார்.

அஜய் என்ன சொல்லப் போகிறாரோ என்று பதைத்தான்.

“உங்களுக்குள்ள…” கேட்கவே தடுமாறினார்.

“எதுவும் விருப்பம் இல்லையே அஜய்?” எனக் கேட்டவர், “என் அண்ணிக்கு என்கூட ஒத்து போனதே இல்லை. இப்போ அவங்களே வந்து பொண்ணு கேட்கும்போது, இல்லைன்னு சொல்ல முடியல. எனக்கும் என் அண்ணன் வீட்டில், நான் பொறந்த வீட்டில் என் பொண்ணு வாழனும் ஆசை தான். இப்படின்னா என் பொறந்த வீட்டு சொந்தம் அத்துப்போகும். எதும் நினைப்பிருந்தா மறைக்காம சொல்லிடு கண்ணா” எனக் கேட்டார்.

சுலோச்சனா அதிரடியாக ஆர்ப்பாட்டமாக பேசியிருந்தால் வீம்புக்காவது ஆமென்று உண்மையை சொல்லி வாதம் செய்திருப்பானோ? இப்படி தங்கள் ஆசை கேட்டு அவர் சொந்தம் துறக்க கேட்டது அத்தனை அழுத்தம் உண்டாக்கியது அவனுள். முதல் முறையாக சுலோச்சனா தன் சுயநலம் விட்டு இறங்கி வந்து கேட்கிறார். ஏனோ அவரின் சந்தோஷத்தை, அவருக்கான பிறந்த வீட்டு மரியாதையை குலைக்க அவனால் முடியவில்லை.

அடைத்த நெஞ்சத்தையும் குரலையும் நொடியில் சரி செய்து,

“மாடல் இல்லாததால் அவசரத்துக்கு யாழியை வைத்து எடுத்தோம். விளம்பரத்துக்காக மட்டும் தான் அத்தை. மாமாகிட்ட கேட்டு தான் எடுத்தேன். எங்களுக்குள்ள வேறேதும் இல்லை” என்றான். மனதை இறுக்கி பிடித்து.

“சரிப்பா… சரிப்பா…” என்ற சுலோச்சனா… “அத்தை இப்படி கேட்டேன் தப்பா நினைச்சுக்காதப்பா” என்று வைத்துவிட்டார்.

அஜய்யின் மனம் முழுதாய் கலங்கி நின்றது.

தெரிந்தே கிடைத்த கடைசி வாய்ப்பையும் தவறவிட்டிருந்தான்.

ஒருவேளை அஜய் ஆமென்று சொல்லியிருந்தால், சுலோச்சனா சரியென்று சொல்லியிருப்பாரோ?

வதை கொள்ள வேண்டுமென்று இருந்தால் அஜய் மட்டும் தப்பித்துவிடுவானா?

அன்று காலை தான் அஜய், யாழ் நடித்த நிலா காபித்தூள் விளம்பரம் ஒளிபரப்பாகியிருந்தது.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் நேரம், குணா அது குறித்து ஆரம்பிக்க…

எல்லோரும் அஜய், யாழ் இடையே இருக்கும் ஜோடி பொருத்தத்தை வியந்து பேசினர்.

“அந்த விளம்பரம் பாக்கும் போது என் கண்ணு குளுந்துப்போச்சு. ஆனா என்ன செய்ய? பெத்தவ ஆசை வேறையா இருக்கே!” கமலம் வருத்தமாகக் கூறினார்.

“நாம மட்டும் ஆசைப்பட்டால் ஆச்சா?” என காந்தள் கவலை கொள்ள, “என்ன நடக்கணும் இருக்கோ அதான் நடக்கும்” என்றார் வீரபாண்டியன்.

எதையும் பொருட்படுத்தாமல் சுலோச்சனா எழுந்து சென்றிட, அவரின் பின்னால் வந்த எம்பிரான்,

“யாழினி பக்கத்தில் அஜய் நிக்குறது பாக்கும் போது உனக்கு கண்ணுக்கு நிறைவா தோணல?” எனக் கேட்டார்.

சுலோச்சனா ஒன்றும் பேசவில்லை.

அவர் யாழுக்கு திருமணம் என்பதையே அவரின் அண்ணன் வந்து பெண் கேட்டு செல்லும் வரை யோசிக்கவில்லை. மகள் படிக்கிறாள் இப்போதைக்கு கல்யாணம் இல்லை. அவளுக்கு முன்பு வருணுக்கு முடிக்க வேண்டுமென தான் நினைத்துக் கொண்டிருந்தார்.

திருமணம், அதுவும் தன் அண்ணன் மகனுடன் பேச்சு எழுந்ததும், மகள் அருகில் முதன் முதலாக ஹரனை நிற்க வைத்து மனக்கண்ணில் மகிழ்ந்து போனார். தற்போது அஜய், யாழி மனதை நிறைத்தாலும், ஏனோ அவரால் இருவரையும் பொருத்தி பார்க்க முடியவில்லை.

அதுவும் விளம்பரத்துக்காக எடுக்கப்பட்டதாக இருந்தாலும், யாழின் கண்கள் வேறெதுவோ உணர்த்துவதை தாயாகக் கண்டுகொண்ட சுலோச்சனா, பின்னால் யாருக்கும் வலி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அஜய்க்கு அழைத்துக் கேட்டிருந்தார்.

முன்பென்றால் சுலோச்சனாவும் தன் விருப்பம், தன் முடிவு என்று தான் இருந்திருப்பார். உண்மை தெரிந்தாலும் முடிவை மாற்றிக்கொள்ள யோசித்திட மாட்டார். ஆனால் சில காலம் என்றாலும், ஒரே குடும்பமாக ஒன்றாக இருந்திட அவருள்ளும் சிறு மாற்றம். அந்த மாற்றத்தால் தான் தன்னிலிருந்து இறங்கி வந்து கேட்டிருந்தார். அதுவும் உண்மை தெரிய வேண்டியே. அஜய் ஆமாமென்றிருந்தால் அவனிடம் இது வேண்டாமென சொல்ல வேண்டியே கேட்டிருந்தார். என்ன இருந்தாலும் அவரால் அவரின் அண்ணன் மகனை விட்டுக் கொடுத்திட முடியாதே.

அவரின் ஆசையை புதைத்து, அவர் கொண்ட வருத்தத்தில் தன் காதல் ஈடேற வேண்டாமென நினைத்து அஜய் இல்லையென்று சொல்லிவிட்டான்.

இருவருமே யோசிக்க மறந்தது யாழியின் விருப்பத்தை.

“மாமா!” வெகு நேரமாக அஜய் தன்னிலை மாற்றாது அங்கேயே அமர்ந்திருக்க யாழ் எழுந்து வந்து அவன் முன் தரையில் அமர்ந்தாள்.

“என்ன?” அத்தனை காட்டமாகக் கேட்டவன் மூடிய கண்களை திறந்து அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை.

இன்று இவளால் தானே தனக்கு இந்த வலி என்று கோபத்தை அவள் மீது காட்டினான்.

நான்கு நாட்களுக்கு முன்னால் சொல்லியதை அவள் சொல்லாமலே இருந்திருக்கலாம் எனும் கோபம்.

தான் இப்படி வதை கொள்ளத்தான் கூறினாளா எனும் கோபம்.

ஆக மொத்தத்தில் உரிமை உள்ள கோபம். அவன் தான் உணர மறுக்கிறான்.

“எதுக்கு மாமா வருத்தமா உட்கார்ந்திருக்க?”

“உன்னை நான் மாமான்னு சொல்லாதேன்னு சொன்னனா இல்லையா?” தற்போது அவளை முறைத்துக் கொண்டு கேட்டான்.

‘ஒத்த வார்த்தையில் உயிரை சுருட்டி இழுக்கிறாள்.’ மனதில் சடைத்துக் கொண்டான்.

“நான் சொல்லாம வேற யார் சொல்லனும்?” எனக் கேட்டவளிடம் அதீத உரிமை இன்று வெளிப்பட்டது.

“நீ சொல்ல வேண்டாம்.”

“என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா மாமா?” அவனின் கையை பிடித்துகொண்டு, கலங்கிய விழிகளோடு உயிர் உருக காதலை குரலில் தேக்கி கேட்டவளிடம் மொத்தமாக அஜய்யின் மனம் சுருண்டது.

“ராட்சசி…” சத்தமின்றி உதடசைத்தான்.

“நீ என்னை விரும்பனும் அவசியமில்லை. எனக்கு உன் பொண்டாட்டியா உன்னோட இருக்கணும். அது போதும்” என்றவள், “உனக்கு பிடிக்கல. உன்னை திரும்ப காதல் சொல்லி கஷ்டப்படுத்திடக் கூடாதுன்னு தான் அமைதியா இருந்தேன். ஆனால் அம்மா இப்படி ஒரு முடிவு எடுப்பாங்கன்னு நினைக்கல” என்று நிறுத்தியவள்,”அஞ்சு வருஷமா உன்னை புருஷனா நினைச்சு இருந்துட்டேன். இப்போ இன்னொருத்தர் கூட சேர்த்து பேசுறதே வலியாகுது. முடியல மாமா. நீ எதும் சொல்லாம நான் என்னன்னு என் விருப்பத்தை சொல்றது. நான் சொல்லி, நீ இல்லைன்னு சொல்லிட்டா அதை என்னால் தாங்கிக்க முடியாதே! நீயில்லாமலும் முடியாதே” என்றவளை இழுத்து அணைக்கத் துடித்த கைகளை அவளின் பிடியிலிருந்து மெல்ல உருவிக் கொண்டான்.

“உனக்கு பிடிக்கலன்னு என்னால விலக முடியாது மாமா! உன்னை இன்னொருத்திக்கூட வாழுண்ணு விட்டுக்கொடுக்கிற மனசும் இல்லை. மனசு அம்புட்டுக்கும் நீதான் இருக்க. உனக்கு பிடிக்கலன்னாலும் என்னைக் கட்டிக்கோ மாமா. இங்கெல்லாம் வலிக்குது மாமா” என்று தன் இதயத்தில் அவனது கை பிடித்து வைத்து கண்ணீர் சிந்தினாள். அழுகையில் கரைந்தாள்.

அஜய்யால் கண் கொண்டு பார்க்க முடியல.

அவனால் தன் மனதை அவளிடம் வெளிப்படுத்தவும் முடியவில்லை.

அவளின் இதயத்தின் துடிப்பு தனது கை வழி தன் அகம் உணர்ந்தவன், கண்களை அழுந்த மூடித் திறந்து…

“பெரியவங்க உன் நல்லதுக்கு தான் செய்வாங்க” என்று எழுந்து சென்றுவிட்டான்.

அவ்விடத்திலேயே யாழி சமைந்து தவித்தாள்._

______________________

அன்று மாலை போல் மலையிலிருந்து காந்தள் வங்துவிட்டிருந்தார்.

அவர் வந்ததும் நேராக காந்தளிடம் முன் சென்று நின்றாள் யாழினி.

“படிக்கணும் வந்தியே படிச்சிட்டியா யாழி?” என்றவர், “அருள் எங்கே?” எனக் கேட்க, அவனே அங்கு வந்தான்.

அவளுக்கு பின் அஜய் வந்து நிற்க அவளுக்குத் தெரியவில்லை.

காந்தள் மகனிடம் பேச வாய் திறக்க,

“எனக்கு மாமாவை கட்டிக்கணும். நீ அப்பாகிட்ட பொண்ணு கேளு அத்தை” என்றாள்.

அவள் உத்தரவு போல் சொல்லியதை விட, சொல்லிய விஷயம் அவரை அதிர்வுக்குள்ளாக்கியது.

“யாழிக்குட்டி!”

“நான் குட்டி பொண்ணு இல்லை. சும்மா குட்டி குட்டி சொல்லாத அத்தை. அதான் உன் மகனுக்கு நான் பெரிய பொண்ணா தெரியல” என்றவள், “எனக்கு மிஸ்டர்.மிளகாயை கல்யாணம் பண்ணிக்கனும். என்ன செய்வியோ தெரியாது. அந்த ஹரன் முன்னாடி எல்லாம் என்னால் போய் நிக்க முடியாது” என்றதோடு, “பர்ஸ்ட் அந்த மிளகாய் கிட்ட சொல்லு, அவங்க இருக்க காரத்துக்கு வேற யாரும் அவங்கிட்ட தாக்கு பிடிக்க முடியாது” என்றவள் காந்தளின் பதிலை எல்லாம் எதிர்பார்க்கவில்லை, தான் சொல்ல வேண்டியதை சொல்லியாயிற்று, இனி அவர் பார்த்துக் கொள்வார் என்று திரும்பிய யாழி, தனக்கு பின்னால் நின்றிருந்த அஜய்யின் மார்பு முட்டி தள்ளி நின்றாள்.

அஜய் அவளை முறைத்துக்கொண்டு நிற்க,

“என்ன? இனி உங்ககிட்ட கெஞ்சுறதா இல்லை… ஒழுங்கா என்னை பிடிக்கணும், உங்க மனசுகிட்ட சொல்லி வையுங்க” என்றவள் தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.

“என்னப்பா அருளு இது?” காந்தள் மகிழ்வு கொள்ள முடியாது கலக்கமாகக் கேட்டிருந்தார்.

“அதான் மேடம் சொல்லிட்டு போறாங்களே” என்ற அஜய்,

“அவ என் பொண்டாட்டிம்மா… ஆனால் ஒன்னும் செய்ய முடியாம நிக்கிறேன். குமரன் கஷ்டப்பட்டு ஒண்ணு சேர்த்த குடும்பம். என்னால உடைஞ்சிடுமோ பயந்து வருது” என்று அவரின் அருகில் அமர்ந்து இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

“அதுக்கு அவள் மனசை உடைச்சிட்டு இருக்கியா அருளு?”

“வேறென்ன பண்ணட்டும்மா?” என்ற அஜய், சுலோச்சனா அழைத்து பேசியதைக் கூறினான். தான் சொல்லிய பதிலையும்.

“இது ரொம்பவே தப்பு அருளு. இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கல” என்றவர், “யாழுக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாத்துறது தப்பில்லையா?” எனக் கேட்டார்.

“அச்சோ அம்மா அவளுக்கு இன்னும் என் மனசே தெரியாது. என் விருப்பத்தை நான் சொல்லவேயில்லை” என்று அவன் முடிக்க…

“இப்போ சொல்லியாச்சு. இப்போ எனக்குத் தெரியுமே” என்று யாழின் குரல் ஒலித்தது.

“போச்சுடா” என்று அஜய் மற்றைய பக்கம் திரும்பி முனகிட, காந்தள் சத்தமின்றி சிரித்தார்.

இருவருக்கும் முன் வந்து நின்ற யாழி, “அப்போ வேணும்னே அழ வைக்குறீங்களா?” எனக் கேட்டாள். கண்ணீர் கண்கள் நிரம்பியது.

“யாழ்!”

“என்ன இப்போ… என்னைக் கட்டிக்க முடியாதா? குடும்பம் முக்கியமா உங்களுக்கு?” என்று கண்களை துடைத்தபடி கேட்ட யாழி, “எனக்கு உங்களை தவிர வேற யாரும் முக்கியமில்லை” என்றாள்.

“நானும் வேணாமா?” காந்தள் கேட்க,

“வேணாம்” என பட்டென்று சொல்லியவள், “எனக்கும் மாமாக்கும் கல்யாணம் ஆனதும் நீங்க உங்க அப்பா வீட்டுக்கு போயிடுங்க” என்றாள்.

காலை அழுது கரைந்தவள் தற்போது தனக்காக அடம்பிடித்து பேசும் பேச்சுக்களை அஜய் உள்ளுக்குள் அத்தனை ரசித்தான்.

அவளின் அழுகையில், பேச்சில் மொத்தமாக அவள் பக்கம் சாய்ந்துவிட்டான். இருப்பினும் மனதில் ஒரு சஞ்சலம், அவள் உருகி கெஞ்சியபோதும் மறுத்து சென்றுவிட்டான். ஆனால் அவனுக்கு அவளால் தான் இந்தளவிற்கு காதலிக்கப்படுவோம் என்று அவளின் வார்த்தைகளில் அழுகையில் தான் தெரிந்தது.

“ஐந்து வருட லவ்வாம்மே!” என்று தனதறையில் அவள் வரைந்த படத்தின் முன்பு நின்று சொல்லியவன், “நான் உன் புருஷனாடி?” என படத்திலிருப்பவளிடம் கேட்டான்.

அவள் பேசியது, கதறியது, அவளின் வார்த்தைகள் யாவும் அச்சு பிரியாது அவனது செவிகளில் நிறைந்து கொண்டே இருந்திட, என்ன வேணாலும் நடப்பது நடக்கட்டும், காந்தள் வந்ததும் தன் மனதை சொல்லிட வேண்டுமென உறுதியாக முடிவெடுத்து கீழ் வர தனுக்கு முன்பு தன்னை வேண்டி தன்னுடைய அன்னையிடம் அவள் பேசிய பேச்சில் உள்ளுக்குள் மென் சாரல் வீசிட ரசித்திருந்தவன் அவள் சட்டென்று தன்னில் மோதி நிற்பாள் என்று நினைக்கவில்லை.

தன் நெஞ்சம் முட்டி இதயத்தின் கதவினை திறந்தவள், தங்களின் காதலுக்காக தன்னிடமே பேசியது அவனை அவளை அள்ளிக்கொள்ள சொல்லியது.

முதலில் மனதை அன்னையிடம் சொல்லுவோம் என அமைதியாக நின்றான்.

அவள் சென்றதை உறுதி செய்துகொண்டு அன்னையிடம் தன் மனதையும் சொல்லிட, இப்படி அவள் தன் பேச்சைக் கேட்டிருப்பாள் என்று அஜய் நினைக்கவில்லை.

பந்தம் பாசமில்லாமல் தனித்து வாழ்வை கடத்திய அஜய்க்கு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் முக்கியம். தனிமையில் வாழ்ந்தவனுக்கு சொந்தத்தின் அருமை நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் தான் குடும்பத்தை தன் திருமணப் பேச்சு பிளவு படுத்திடக் கூடாதென தன்னுடைய ஆசையை வெளிக்காட்டிடாது அமைதியாக இருந்தான்.

அதனை காலையில் மொத்தமாக தன் மனதின் பேச்சினால் தட்டி தகர்த்திருந்தாள் யாழினி.

அப்போதே “நானும் உன்னை விரும்புறேன்” என சொல்லத் துடித்த மனதை அஜய் அடக்கிட ஒரே காரணம் சுலோச்சனா.

இப்போது அஜய் தன் விருப்பம் கூறினால் அனைவரும் முழு மனதாக ஏற்பர். ஆனால் சுலோச்சனா? அவரின் சம்மதமும் முக்கியமாயிற்றே!

தன் காதலுக்காக அனைவரிடமும் தானே பேசி சம்மதிக்க வைத்த பின்னர் யாழியிடம் சொல்லிக்கொள்ளலாம் என இருந்தான். அவளுக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாற்றிவிட்டதாக இருக்கக் கூடாது என்று எண்ணினான்.

தற்போது அனைத்தும் அவளுக்கு தெரிந்தே செய்ய வேண்டிய நிலை உண்டாகியிருந்தது.

“பார்த்தியா அருளு இப்போவே என்னை வீட்டை விட்டு துறத்த பிளான் பண்ணி வச்சிருக்காள்” என்று காந்தள் சொல்ல,

“அப்போ உங்களுக்கு சீக்கிரம் பேரன் பேத்தி வேணாமா? நீங்க நந்தி மாதிரி எங்க கூடவே இருந்தா மத்ததெல்லாம் எப்படி நடக்கும்?” எனக் கேட்டிருந்தாள் யாழி.

அஜய் தன்னிரு புருவத்தையும் மேலேற்றி இறக்கினான்.

‘இப்போவே எத்தனை தூரம் தங்களின் வாழ்வை யோசித்து வைத்திருக்கிறாள்’ என்பதே அவனை மூச்சு முட்டிட வைத்தது.

“அருள் இவகிட்ட என்ன பாடுபடப் போறியோ” என்று எழுந்துகொண்ட காந்தள், “கண்ணன் கிட்ட பேசிட்டு வரேன். அவனை வச்சு ராஜேந்திரன் அண்ணன் கிட்ட பேசுவோம்” என்று நகர்ந்தார்.

அவர் சென்றதும், யாழியும் தனது அறை நோக்கி செல்ல…

“ஹேய் நில்லுடி” என்று அதட்டியிருந்தான் அஜய்.

அவனது குரல் மட்டுமே அதட்டலாக ஒலித்தது. முகம் புன்னகையால் விரிந்திருந்தது.

தைரியமாக பேசிவிட்டாள். ஆனால் இப்போது அவனது முகம் பார்க்கவே அச்சமாக வந்தது.

“நாளைக்கு எக்சாம் இருக்கு. படிக்கணும்” என்று திரும்பியும் பாராது ஓடியே விட்டாள்.

அஜய் பற்கள் தெரிய சிரித்திருந்தான்.

“ஒரு கலவரம் நடக்க இருக்கு. எப்படியாவது சமாளிச்சிடுடா அஜய். இந்த சில்வண்டு இல்லாம உன்னால் இருக்க முடியாதுன்னு ரெண்டு நாளில் நல்லா தெரிஞ்சிடுச்சு” என்றவனாக வெண்ணிலாவுக்கு அழைத்து விஷயத்தை பகிர்ந்துகொண்டான்.

“ஆம்பளைங்களுக்கு எல்லாம் பொண்ணுங்க நாங்க அழுது கெஞ்சி கதறினாள் தான் இறங்கி வரத் தோணும்ல?” என்று தன் அண்ணனை வார்த்தையால் கொட்டியிருந்தாள்.

“நீ அண்ணாவை டேமேஜ் பண்ணலையே நிலாம்மா?” அஜய் சிரித்துகொண்டு கேட்க,

“போடா… இனியாவது அவளை அழ வைக்காம பார்த்துக்கோ. முதலில் அம்மாவை இங்க வந்து பேச சொல்லு” என்று வெண்ணிலா வைத்திருந்தாள்.

காந்தள் மூலம் விஷயம் அறிந்த கண்ணன், ராஜேந்திரனை கூட்டிக்கொண்டு அப்போதே அங்கு வந்துவிட்டார். குமரன் கீழே ஆலையில் இருந்திட அவனையும் வரவைத்திருந்தனர்.

“எல்லாரும் அமைதியா இருந்தா எப்படி?” என்று பேச்சைத் துவங்கிய ராஜேந்திரன், “நேத்து காந்தள் சொல்லியதும் சுலோச்சனா அவ்வளவு அவசரமா மறுத்து பேசுச்சு. இப்போ நாம எல்லாரும் ஒரு பக்கம் நின்னு முடிவு பண்ணா என்ன பண்ணுமோ?” என்றார்.

“அதுக்காக பிள்ளைங்க விருப்பத்தை விட்டுக் கொடுக்கிறதா அண்ணா?” என்றார் கண்ணன்.

“எம்பிரான் கிட்ட சொல்லி பேச சொல்லுவோம். அவன் சொன்னா சுலோச்சனா கேட்டு தானே ஆகணும்” என்றார் ராஜேந்திரன்.

ஆனால் சுலோச்சனா அத்தனை எளிதாக சரியென்று சொல்வாரென்று தோன்றவில்லை.

“குமரா நீ பேசு. உன் பேச்சுக்கு மதிப்பு இருக்குமே!” என்று கண்ணன் சொல்ல…

“இது என்னோட காதல். நான் தான் பேசணும். நானே பேசறேன்” என்றான் அஜய்.

“அப்போ நாளைக்கு யாழி பரீட்சை எழுத போனதும் நீங்க ரெண்டு பேரும் வீடு வந்து பேசுங்க” என்று மூவரும் கிளம்பிவிட்டனர்.

புறப்படுவதற்கு முன்பு யாழியுடன் தனித்து பேசிய குமரன்,

“சித்தி அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்க மாட்டாங்க, அவங்க அண்ணன் வந்து பொண்ணு கேட்காமல் இருந்திருந்தால் சரின்னு சொல்லியிருப்பாங்க. ஆனால் இப்போ, அவங்களுக்கு அண்ணன் பையன் தான் முதலில் தெரிவான். என்ன நடந்தாலும் அவசரப்படக் கூடாது. பொறுமையா இருக்கணும்” என்று சொல்லிச் சென்றான்.

கண்ணனும், ராஜேந்திரனும் வீட்டிற்கு வந்து சுலோச்சனா தவிர்த்து மற்றவர்களிடம் அஜய் மற்றும் யாழின் நேசத்தை சொல்லிட எல்லோருக்கும் மகிழ்வு. அதே சமயம் சுலோச்சனா என்ன செய்வாரென்று கலக்கமாக இருந்தது.

“அப்படியே உன் கதை திரும்பி நடக்குற மாதிரி இருக்கு குமரா. ஆனால் எதிரே இருக்க ஆள் தான் வேற. அப்போ என் அப்பா. இப்போ சித்தி” என்று குணா சிரிக்க… குமரன் அவனை முறைத்தான்.

“இது அருள் யாழினி கதை டா. அவங்க லவ். அவங்களே போராடுவாங்க. நாம ஜஸ்ட் கெஸ்ட் ரோல் பண்றோம். அமைதியா நடப்பதை மட்டும் வேடிக்கை பார்ப்போம்” என்ற குமரனின் பேச்சினை மதி ஆமோதித்தாள்.

“நீ என்ன நிலாக்குட்டி கவுண்டர் எதும் கொடுக்காம அமைதியா இருக்க?” குணா கேட்க,

“இருக்கு நாளைக்கு ஒரு சம்பவம் இருக்கு” என்று வெண்ணிலா சொல்லிய பாவனையில் நால்வரும் சத்தமிட்டு சிரித்திருந்தனர்.

இரவு உணவின் போது, யாழினி குனிந்த தலை நிமிராது தட்டில் மட்டும் கண்ணாக இருக்க… தன் முன் அவள் படும் அவஸ்தையை ரசித்தபடி மெல்ல உணவை மென்று கொண்டிருந்தான் அஜய்.

“நாளைக்கு சுலோ எதும் அதிகமா பேசினாலும் நீ அமைதியா போகனும் அருளு” என்றார் காந்தள்.

“சரிம்மா” என்று அஜய் சொல்ல, காந்தள் உண்டு முடித்து எழுந்து சென்றார்.

“சாப்பாடு வேணுமே!” அஜய் சொல்ல தனக்கு முன்னிருந்த பாத்திரத்தை மெல்ல அவன் பக்கம் தள்ளி வைத்தாள் யாழி.

“மேடம் என் முகம் பார்க்கமாட்டீங்களா?” அஜய் குறும்பாகக் கேட்டிருந்தான்.

“ஈவ்வினிங் யாரோ அந்தப் பேச்சு பேசினாங்க. அவங்களை பார்த்தியா அம்மு?” அஜய் ஹஸ்கி குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி வினவ,

அவன் சொல்லிய அம்முவில் விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள்.

கண்கள் நான்கும் ஒன்றையொன்று முதல் முறை காதலாக தன் இணை தழுவி நின்றது.

“மாமா…” காற்றாய் அவன் முகம் மோதியது அவளின் தவிப்பான ஓசை.

இந்த வார்த்தையில் தானே அவளிடம் மொத்தமும் தொலைந்து நிற்கிறான். தற்போதும்.

 

Epi 7

நீதான் என் காதல் மழை 7

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
43
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்