நீதான் என் காதல் மழை 5
மதியம் அஜய் வருகிறேன் என்று சொல்லிய நேரம் வரவில்லையே என குமரன் அஜய்க்கு அழைத்திட,
“யாழிக்கு பீவர்டா குமரா. டாக்டர் வந்து பார்த்திட்டு போயிருக்கார். கொஞ்ச நேரத்தில் கண் விழிச்சிடுவா சொல்லியிருக்கார். எழுந்ததும் கூட்டிட்டு வரேன். எப்படி தனியா விட்டு வரது?” எனக் கேட்டான் அஜய்.
“ம்ம்…” என்ற குமரன், எதையோ கேட்க வந்து பாதியில் நிறுத்தி… “நேரில் வா பேசிக்கலாம்” என்று சொல்லி யாழின் நலன் விசாரித்து வைத்திட்டான்.
மெத்தையில் சுருண்டு கிடப்பவளையே பார்த்திருந்த அஜய், அவள் எழுந்தால் உணவு கொடுக்க வேண்டுமென சமயலறை சென்றான்.
இருபது நிமிடங்களில் வெளியில் வந்தவன் யாழின் அறை கதவை நன்கு திறந்து வைத்திட்டு, கூடத்து இருக்கையில் அவள் தெரியுமாறு அமர்ந்து மடிக்கணினியில் நிகில் அனுப்பிய புகைப்படங்களை பார்க்கத் தொடங்கிவிட்டான்.
அப்போது தான் கவனித்தான் ஆட் அப்ரூவல் போர்டிலிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது.
உடனடியாக நிகிலுக்கு அழைத்து,
“ஆட் அப்ரூவல் வந்திருச்சு நிகில். சேனல்ஸ்க்கு டீலிங் மெயில் அனுப்பிட்டு, வீடியோ அனுப்பி வச்சிடு. ரெண்டு நாளுக்குள்ள டெலிகாஸ்ட் ஆகனும் சொல்லு” என்றான்.
“ஓகே அஜய்.”
“தென்… காலண்டர் மாடல் இந்த பொண்ணு செட் ஆகல. வேற யாரும் பாரு. நீ எடுத்து அனுப்பிய போட்டோஸ் ஒண்ணுல கூட ஐ எக்ஸ்பிரஸ் இல்லை” என்றான்.
நிகில் வைத்திட்டதும் சில நொடிகள் தன்னவளை பார்த்திருந்தவன் வேலையில் கண் பதித்தான்.
மாலை ஆகிவிட, கடிகார சத்தத்தில் தான் சுயம் மீண்டான்.
“இன்னும் டெம்பிரேச்சர் குறையலையா?” என தனக்குத்தானே கேட்டுக் கொண்டவனாக அறைக்குள் நுழைய, யாழிடம் “மாமா” என்கிற மென் முனகல்.
“என்னடா?” என்று அவளருகில் வேகமாக சென்று அமர்ந்தான்.
மெல்ல இமை சுருக்கி அவன் பக்கம் திரும்பியவள்…
“தண்ணி” என விழி திறந்திடாது கேட்க, மேசையில் எட்டி தண்ணீர் போத்தலை எடுத்து அவளின் தலையை தன் மடியில் உயர்த்தி வைத்து மெல்ல புகட்டினான்.
யாழின் உதடு வறண்டிருந்தது.
உடல் சூட்டினை ஆராய முற்றாய் குறைந்திருந்தது. ஆனால் உடலின் சோர்வு அப்பட்டமாகத் தெரிந்தது.
நீர் உள் இறங்கியதும் மெல்ல கண் திறந்தவள், தனக்கு அத்தனை நெருக்கமாக அஜய் முகம் கண்டு பதறி விலகி எழுந்தமர்ந்தாள்.
“எதுக்கு இவ்ளோ வேகம்?” எனக் கேட்ட அஜய், அவளின் முகத்தில் விழுந்திருந்த முடி கற்றையை காதோரம் ஒதுக்கிவிட்டான்.
அவன் செய்கையை நம்ப முடியாது பார்த்திருந்தாள்.
“இப்போ ஓகே வா?”
“ஹான்…” அவனின் கனிவான குரல் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
‘நான் சொன்ன லவ் நினைவில் இல்லை போலிருக்கே!’ என நினைத்த அஜய் அவளிடம் விளையாடி பார்க்க நினைத்து ‘இப்போதைக்கு காட்டிக்கொள்ள வேண்டாம்’ என முடிவு செய்தான்.
“ஹீட்டர் போட்டிருக்கேன். குளிச்சிட்டு வா. சாப்பிடலாம்” என்று அஜய் சொல்ல…
புரியாது மலங்க மலங்க பார்த்தவளின் உச்சியில் கை வைத்து அழுத்தம் கொடுத்து ஆட்டினான்.
சோர்வு கொண்டிருந்த உடலில் அவனது கரத்திலிருந்து மென் சில்லிப்பு உடல் முழுக்க பரவி, சிலிர்க்க வைக்க, இமைகளை அழுந்த மூடிக் கொண்டாள்.
அஜய் அவளின் அத்தோற்றத்தை ரசனையாய் மனதில் பதிந்து கொண்டான்.
“சீக்கிரம். மலைக்கு போகணும்” என்ற அஜய்யின் சத்தத்தில் கண்களை திறந்தவள்,
“நீங்க போங்க நான் வரேன்” என்றாள்.
“டென் மினிட்ஸ்” என்று எழுந்து செல்லும் அஜய்யை அதிசயம் போல் அவள் பார்த்திருக்க, சட்டென்று திரும்பி ஒற்றைக் கண் அடித்திருந்தான்.
“ஆ…” அதிர்ந்தவளாக வேகமாக கட்டிலிலிருந்து இறங்கி, குளியலறைக்குள் புகுந்திருந்தாள்.
வெகு நேரமாகியும் யாழி வராமல் இருக்க அறைக்குள் எட்டி பார்த்தான்.
மெத்தையில் தலையை தாங்கி பிடித்து அமர்ந்திருந்தாள்.
“என்ன பண்ணுது?”
தனக்கு முன்னால் வெகு அருகில் அஜய்யின் கால்கள் தெரிய விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன?”
“ரொம்ப டயர்டா இருக்கு. தலை வலிக்குது” என்றாள்.
“சாப்பிட்டு டேப் போட்டால் சரியாகிடும்” என்ற அஜய்… நீ தூங்கிட்டு இருக்கும் போது, “பவுடர் பண்ணி, வாட்டர் மிக்ஸ் பண்ணி கொடுத்தேன். இப்போ ரொம்ப நேரம் ஆச்சுதே” என்று அவளை கைத்தாங்கலாக அழைத்து வந்து கூடத்தில் அமர்த்தினான்.
அவன் சொல்லியதை அவளால் நம்பவே முடியவில்லை. அஜய் அவளை தொட்டு பேசியதெல்லாம் இல்லை. ஆனால், இன்று தன்னை தோள் சாய்க்கிறான். கை வளைவில் அரவணைக்கிறான். நெற்றி தொடுகிறான். அவளுக்கு எல்லாம் தன் கற்பனையோ என்றிருந்தது.
சிறு கிண்ணத்தில் குழைந்த சாதம் வைத்து ரசம் ஊற்றி நன்றாக கலந்து, தானே ஸ்பூனால் எடுத்து அவளின் வாய் அருகே நீட்டினான்.
“நான்… நானே சாப்…”
அஜய் பார்த்த பார்வையில் சொல்ல வந்ததை சொல்லாது கப்பென்று வாயினை மூடிக் கொண்டாள்.
“ம்ம்… வாய் திற!”
அதட்டலாகத்தான் வந்தது அவனது குரல்.
எங்கு திட்டிவிடுவானோ என ஆ காண்பித்தாள்.
அஜய் உணவினை ஊட்டிக் கொண்டிருக்க…
“நீங்க சாப்ட்டிங்களா?” எனக் கேட்டாள்.
“சாப்பிடணும்” என்றவன் தன்னுடைய அலைபேசி ஒலியில் எங்கின்று திரும்பி பார்த்தான்.
உணவு மேசையின் மீது இருக்க, எழுந்து சென்று எடுத்து வந்தான்.
அதற்குள் யாழி தானே உண்ண முயல, அவளின் கையிலிருந்த ஸ்பூனை வாங்கி தானே ஊட்டினான்.
சுலோச்சனா தான் அழைத்திருந்தார். எம்பிரானின் எண்ணிலிருந்து.
“சொல்லுங்க மாமா!”
“நான் அத்தை அருளு. பாப்பா இப்போ எப்படியிருக்கா கண்ணு. கூட்டிட்டு வரியாய்யா?” என்று விசாரித்தார்.
“இப்போ ஓகே அத்தை. நல்லாயிருக்காள். நான் கூட்டிட்டு வரேன்” என்றான்.
“சரிப்பா… முடியலன்னா நாங்க கிளம்பிவரோம்” என்றவரிடம், “நான் அங்க வரனுமே அத்தை. இதோ கிளம்பிட்டோம்” என்றான்.
பேச்சினூடே உணவை முழுதும் கொடுத்து முடித்து, அவளின் வாயினையும் அஜய் இயல்பாய் துடைத்துவிட, யாழிக்கு கருவிழிகள் தெறித்து எம்பி குதித்தது.
“சரிப்பா” என்று சுலோ வைத்திட,
“என்னவாம்?” என யாழிடம் கேட்டிருந்தான் அஜய். அவளின் பார்வையை கவனித்து.
“எது நிஜம்?”
“புரியல…”
“அது…” அவள் தடுமாறிட…
“எனக்கும் உன் மேல அக்கறை இருக்கு” என்றான்.
“வெறும் அக்கறை மட்டும் தானா மாமா?” வறண்ட குரலில் ஏக்கமாய் ஒலித்த குரலில் மொத்தமாய் கட்டுண்டான்.
இருவரின் பார்வையும் ஒன்றையொன்று முட்டி நின்றது.
அஜய் தான் அதிலிருந்து முதலில் தன்னை மீட்டான்.
அவள் கையில் மாத்திரையை கொடுத்து விழுங்கச் செய்தவன்,
“கிளம்பு… இருட்டினா மலை ஏற சிரமம்” என நகர்ந்தான்.
பயணம் முழுவதும் இருவரிடமும் அமைதி தான்.
காரில் ஏறியதும் மூடிய விழிகளை வீடு வந்து தான் திறந்தாள் யாழினி.
“வீடு வந்தாச்சு!”
அஜய் கீழிறங்கிட வண்டி சத்தம் கேட்டு அனைவரும் வெளியில் வந்திருந்தனர்.
“வாடா… பார்க்கவே முடியல” என்று குணா, அஜய் வயிற்றில் குத்திட.. “நீங்கலாம் குடும்பஸ்தன் ஆகிட்டு ரொம்பவே பிஸி… உங்களைதான் பார்க்க முடியிறதில்லை” என்று அஜய் மதியை ஏறிட்டான்.
“ஏன்டா நீ வேற கடுப்பை கிலப்புற? கல்யாணத்துக்கு அப்புறம் வச்சு செய்யிறாடா” என்று குணா மெல்ல கிசிகிசுக்க, அஜய் வாய் விட்டு சிரித்தான்.
“மதி உன் புருஷன் என்னவோ சொல்றான் பாரு” என்று அஜய் போட்டு கொடுக்க…
“என்ன குணா” என்று மதி முன் வந்தாள்.
“ஒன்னுமில்லை மதிம்மா… சும்மா பேசிட்டு இருந்தோம்” என்ற குணாவின் பாவனையில், அஜய்யின் சிரிப்பு அதிகரித்தது.
வண்டியிலிருந்து இறங்கி நின்ற யாழின் பார்வை தன்னவனின் சிரித்த முகத்திலே நிலைத்திருந்தது.
தன்னிடம் வந்து நலம் விசாரித்த பெரியவர்கள் யாரின் பேச்சும் அவளின் கருத்தில் பதியவில்லை.
வெண்ணிலா தான் அவளை கண்டு கொண்டவளாக, “யாழி” என்று தொட்டு உலுக்கி நிகழ் மீட்டாள்.
“ஆங்… அண்ணி” என்று சிறு திடுக்கிடலோட ஏறிட்ட யாழி அப்போதுதான் தன்னைச் சுற்றி நின்றிருந்த அம்மா, அப்பா, பெரிப்பா, பெரிம்மா என அனைவரையும் கவனித்து சங்கடமாக சிரித்து வைத்தாள்.
“திடீரென காய்ச்சல் எப்படி யாழி? என்ன சேட்டை பண்ண?” என்று சுலோச்சனா கேட்க, தன்னைப்போல் அவளின் பார்வை அஜய்யிடம் சென்று வந்தது.
“தெரியலம்மா” என்ற யாழி “அப்பா” என்று எம்பிரானை அணைத்துக் கொண்டாள்.
“ஒன்னுமில்லடா… இந்த வாரம் இங்க வரல இல்லையா, அந்த ஏக்கமா இருக்கும்” என்று மகளின் தலை வருடி கொடுத்தார் அருகில் நின்றிருந்த கண்ணன்.
சிறு கணைப்பொலியோடு ராஜேந்திரன் வர,
“பெரிப்பா” என்று அவரிடம் தஞ்சம் புகுந்தாள்.
ராஜேந்திரன் அதே கெத்தோடு இருந்தாலும், அவரின் உலகம் தன் குடும்பம் என்றானது தற்போது.
யாரிடமும்… ஏன் தன் மகள் தீக்ஷி உடன் கூட நெருக்கம் காட்டாத ராஜேந்திரனுக்கு யாழி அத்தனை செல்லம்.
“என்னடா ரொம்ப சோர்ந்து தெரியுற? வா உள்ள போய் உட்காருவோம்” என்று யாரையும் கண்டுகொள்ளாது மகளை அழைத்துக் கொண்டு உள் சென்ற ராஜேந்திரனை எப்போதும் போல் மற்றவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.
“இன்னும் இவர் மாறுனதை தான் என்னால நம்ப முடியலடா!” குணா சொல்லிட, குமரன் உட்பட அனைவரும் மென் புன்னகை சிந்தினர்.
அனைவரும் உள் சென்றிட, குமரன் அஜய்யை பிடித்து நிறுத்தியிருந்தான்.
“என்னடா?”
அனைவரும் உள் செல்லும் வரை அமைதியாக இருந்த குமரன், அஜய்யை அங்கிருக்கும் பாறைக்கு அருகில் அழைத்து வந்தான்.
“நீதான் சொல்லணும் அருளு?”
குமரன் கேள்வியாக நோக்கினான்.
“நானா? நான் என்ன சொல்லணும்?”
“என்ன நடக்குது உங்க ரெண்டு பேருக்கும் நடுவில்?”
குமரன் கண்டு கொண்டானென்று அஜய்க்கு புரிந்தது.
“உன்கிட்ட இருந்து எதும் மறைக்க முடியாதா டா?” என்ற அஜய்…
“உன் தங்கச்சிகிட்டவே கேளு மச்சான்” என சொல்ல துள்ளலோடு உள்ளே ஓடிவிட்டான்.
அஜய்யிடம் தென்பட்ட உற்சாகமே குமரனுக்கு செய்தியை தெளிவாக தெரிய வைத்திட்டது. அவனுக்கும் மகிழ்வு தான்.
தனக்கு வெண்ணிலாவுடன் திருமணம் முடிந்த பின்னர் கூட அஜய், மச்சான் என்று சொல்லியதில்லை… இன்று சொல்லியதன் பொருள் விளங்க குமரனுக்கு ஆதீத சந்தோஷம்.
குடும்பம் அத்தனை ஒற்றுமையாக இருக்கும் போது தடை எதும் இருக்காது என நினைத்த குமரனின் கணிப்பு தான் தவறாக இருந்தது.
அஜய் வீட்டிற்குள் வரும் போது ராஜேந்திரன் அருகில் அமர்ந்திருந்த யாழியை கமலம் கன்னம் தொட்டு விசாரித்துக் கொண்டிருந்தார்.
“இப்போ நல்லாயிருக்கேன் பாட்டி” என்றவள், வீரபாண்டியன் தாத்தாவிடம் பேசிட… அடுத்தடுத்த நேரம் குடும்பத்தின் அன்பில் கரைந்தது அவளுக்கு.
அடுத்து வெண்ணிலாவின் சீமந்ததிற்கு நல்ல நாள் பார்த்து அது குறித்து பேசியவர்களின் பேச்சு அஜய்யின் திருமணப் பேச்சில் வந்து நின்றது.
“இன்னும் நீ மட்டும் தான்டா சிங்கிலா இருக்க” என்று குணா சொல்ல,
“கோர்த்து விடுறதுலே இருடா நீ” என்று அவனின் முதுகில் தட்டினான் அஜய்.
” வருண் இருக்கான்.” மதி இவர்களின் பேச்சினை கவனித்து சொல்ல…
“அவன் சின்னப் பையன்” என்றான் குணா.
இவர்களின் பேச்சு காந்தள் பேசியதில் முடிவு பெற்று, அவரிடம் கவனம் சென்றது.
“அஜய்க்கு நம்ம யாழியையே கட்டி வைக்க ஆசை எனக்கு” என்றார் காந்தள்.
மின்னலாய் அஜய் மற்றும் யாழி பார்வை உரசிக் கொண்டது.
தனக்கும் இதே எண்ணம் தான் என்று ராஜேந்திரன் சொல்லிட முயல, அந்நொடி சுலோச்சனா கூறியதில் அஜய்யின் பார்வை தன்னைப்போல் யாழிடமிருந்து விலகியது._
_____________________________
அஜய்க்கு திருமணம் செய்வது குறித்து வீர்பாண்டியன் பேச்சினை ஆரம்பிக்க… காந்தள் தன்னுடைய ஆசையை கூறினார்.
“கூடவே பொண்ணை வச்சிக்கிட்டு எதுக்குப்பா வெளியில் பார்க்கணும். நானும் அண்ணனும் சம்மந்தி ஆனா நல்லயிருக்குமே!” என்றார் காந்தள்.
அவர் மறைமுகமாகச் சொல்லிட கண்டுகொள்ளவே சில நொடி பிடித்தது.
காந்தள் யாழினியை மருமகளாக்கிக் கொண்டு, எம்பிரானை சம்மந்தி ஆக்க நினைக்கிறாள் என புரிந்ததும் அனைவரிடத்திலும் மகிழ்ச்சி.
“சரி நான் நேரடியாவே கேட்கிறேன்” என்ற காந்தள், “அருளுக்கு யாழியை கட்டிக் கொடுண்ணா” என எம்பிரானிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார்.
அந்நொடி அஜய், யாழினி கண்கள் சடுதியில் ஒன்றையொன்று பார்வையால் ஒட்டிக் கொண்டது.
‘சொல்லாமலே காதல் கை கூடிடும் போலவே’ என நினைத்த அஜய் இதழ் விரிப்போடு யாழி பார்த்து ஒற்றை கண்ணடிக்க, அவளுக்கு அவனது செய்கையில் விளங்கா நிலை.
“உனக்கு உன் அண்ண மவனுக்கு கட்டிகொடுக்க ஆசை இருக்க மாதிரி எனக்கும் இருக்குமே காந்தள்!” சுலோச்சனா அங்கிருப்பவர்கள் அனைவரின் முகமும் சந்தோஷத்தில் மூழ்கியிருப்பதை பொருட்படுத்தாது பட்டென்று சொல்லியிருந்தார்.
அவரின் ஆசையும் தவறென்று சொல்லிட முடியாது.
அஜய் தன் பார்வையை சடுதியில் மாற்றிக் கொண்டான்.
குமரன் அஜய்யின் கையை அழுத்தி பிடிக்க விரக்தி புன்னகை சிந்திய அஜய்,
“இத்தனை சீக்கிரம் முடிவுக்கு வந்திருக்க வேண்டாம்” என்றான்.
“உன் விருப்பத்துக்கு தான் வெண்ணிலாவை அண்ணன் மவனுக்கு கட்டிக் கொடுத்திருக்கியே?” என்றார்.
“எனக்கு இப்படி ஒரு விருப்பம் இருக்கு… ஒத்து வந்தா செய்யலான்னு தான் சொன்னேன் அண்ணி” என்று காந்தள் அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்திட, அஜய்யும் மனதில் தன் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தான்.
“நேத்து என் அண்ணன் வந்தது இதுக்குதான். உங்ககிட்ட எல்லாம் கலந்து பேசி சொல்றேன் சொல்லியிருக்கேன்” என்றார் சுலோச்சனா.
“என்கிட்ட சொல்லணும் தோணலையா சுலோ?” எம்பிரான் தனக்கும் இவ்விடயம் தற்போது தான் தெரியும் என்பதைப்போல் கேட்க,
“எல்லாரும் இருக்கும் போது சொல்லலாம் இருந்தேங்க” என்றார் சுலோச்சனா.
“இப்போ உங்க விருப்பம் சொல்லுங்க?” எனக் கேட்டார்.
“பெத்தவளா நீ முடிவெடுத்திருக்கும் போது நாங்க சொல்ல என்ன இருக்கு சுலோச்சனா” என்ற ராஜேந்திரன், “குட்டிம்மாவுக்கு சம்மதமா கேட்டுக்க” என்றார்.
அவர் தான் மகளின் பார்வையையும், அஜய்யின் பார்வையையும் கவனித்து இருந்தாரே!
என்று குமரனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து தன் விருப்பத்தை விட்டுக்கொடுத்து, குமரன் வெண்ணிலா திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருந்தாரோ, அது முதல் ராஜேந்திரனுக்கு பிள்ளைகளின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கும் எண்ணம் பிரதானம்.
“உன் அண்ணன் மவனும் நல்ல பையன் தானே! நம்ம பொண்ணு நல்லாயிருந்தா போதும்” என்றார் வீரபாண்டி.
“இன்னும் படிப்பு முடியலையே?” செல்வி தான் யாழின் முக வாட்டம் வைத்துக் கூறினார்.
“மேல் படிப்பு தானே அக்கா படிக்கிறாள். இன்னும் மேல படிக்கணும் சொல்லிட்டு இருக்காள். அவ இஷ்டத்துக்கு விட்டால் வயசு போயிடுமே. கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கட்டும்” என்றார் சுலோச்சனா.
“முடிவெடுத்து பேசுற… நாங்க என்ன சொல்ல. நல்லது நடந்தா சரி” என்றார் கமலம்.
பத்து நாட்களில் வெண்ணிலாவின் சீமந்தம் என குறிக்கப்பட்டு, அஜய் திருமணப்பேச்சில் தொடர்ந்து யாழின் கல்யாணத்தில் வந்து நின்றது பெரியவர்களின் பேச்சு.
“குட்டிபொண்ணுன்னு நினைச்சிட்டு இருந்தா… அவளுக்கே இப்போ கல்யாணம்” என்று குணா சொல்ல,
“இதுக்காவது வருணை இங்கு வரவச்சிடனும்” என்றாள் மதி.
“வந்துட்டாலும்” என்ற வெண்ணிலா, “அவன் அந்த நாட்டுலே எதோ கரெக்ட் பண்ணி செட்டில் ஆகிட்டான் நினைக்கிறேன்” என்க, குமரன் பார்வையில் வாயினை மூடிக் கொண்டாள்.
அந்த சூழல் ஒருவித தவிப்பைக் கொடுக்க, அஜய் அலைபேசியை காதில் வைத்தவனாக நகர்ந்து வந்துவிட்டான்.
குமரன் கண் காட்ட, வெண்ணிலா பிறர் கவனம் ஈர்க்காது நழுவிச் சென்றாள்.
அஜய் தோட்டத்தில் இருட்டில் கல் மேடையில் அமர்ந்திருந்தான்.
“என்னண்ணா இங்க வந்துட்ட?” என்று அவனின் அருகில் வெண்ணிலா அமர,
“உன்னை யாரு இந்த நேரம் வெளியில் வர சொன்னா?” என்று கடிந்து கொண்டான்.
“அது இருக்கட்டும் நீ சொல்லு?”
“என்ன சொல்லணும்?”
“யாழி குட்டியை விரும்புற தானே?”
“நாலு நாளைக்கு முன்ன கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேன்” என்ற அஜய், “அவ்ளோ லவ் பண்றா(ள்) என்னை. அவள் லவ் தான் என்னை தடுமாற வச்சிடுச்சு. எழ முடியாது போலிருக்கே” என்றதோடு, “என்னவோ பண்ணுதுடா” என தன் இதயத்தை நீவிக்கொண்டான்.
“நீ வெளிப்படையா சொல்லுண்ணா. கண்டிப்பா அத்தை சரி சொல்லிடும்” என்ற வெண்ணிலாவுக்கு சுலோச்சனாவின் முடிவை எளிதில் மாற்ற முடியாது என்பது தெரிந்து தான் இருந்தது.
அவருக்கு அவரது அண்ணன் குடும்பத்தோடு உறவு வைத்துக்கொள்ள அத்தனை ஆசை. பல முறை அவள் சொல்லி கேட்டிருக்கிறாள். இருப்பினும் ஒருமுறை கேட்டு பார்ப்பதில் தவறில்லையே என்பது வெண்ணிலாவின் எண்ணம்.
“ரொம்ப கஷ்டப்பட்டு இந்த குடும்பத்தை ஒன்னு சேர்த்திருக்கான் குமரன். அது என்னால உடைய வேண்டாம்” என்ற அஜய், “நான் கிளம்புறேன். சொல்லிடு” என்று எழுந்து வண்டியை நோக்கிச் சென்றான்.
“காலையில போலாமே அண்ணா?”
“இங்க ஒரு மாதிரி மூச்சு முட்டுதுடா” என்ற அஜய், வண்டியிலிருந்து சிறு கவர் ஒன்றை எடுத்து வெண்ணிலாவின் கையில் கொடுத்தான்.
“சாப்பிட்டதும் போட சொல்லு” என்று சென்றுவிட்டான்.
வண்டி சத்தத்தில் குமரன் மற்றும் குணா வெளியில் வர,
“அண்ணா போயிடுச்சு” என்ற வெண்ணிலா, “நீ பேசு மாமா. நீ பேசினா கண்டிப்பா ஓத்துப்பாங்க” என்றாள்.
குணா என்னவென்று புரியாது பார்த்தான்.
“இதுல நான் என்ன பேசணும் நிலா? சம்மந்தப்பட்டவங்க பேசணும். அவங்களவுக்கு அழுத்தமா இடையில் இருக்க மத்தவங்க சொல்லிட முடியாது” என்ற குமரன், “அஜய் இன்னும் யாழிகிட்டவே சொல்லல… அவளும் அமைதியா உட்கார்ந்திருக்காள். நான் பேசுறது சரி வராது” என்றான்.
“உனக்கு உன் குடும்பம் உடையக் கூடாது… அதுக்காக அவங்க ரெண்டு பேரு மனசும் உடைஞ்சா பரவாயில்லன்னு பாக்குற” என்று வெண்ணிலா பட்டென்று சொல்லிட…
“அம்மாடி…” குமரன் உடைந்து போனான்.
“இதே நிலையில் நீயும் ஒரு நாள் நின்னுட்டு இருந்த நினைவிருக்கா? இந்த வலி எப்படியிருக்கும் உன்னை விட வேற யாருக்கு நல்லா தெரியும்? தெரிஞ்சும் அமைதியா இருக்க மாமா நீ?” என்றாள்.
அஜய் எப்போதும் ஒருவித திமிரோடு பார்த்து தான் அவளுக்கு பழக்கம். அவன் இன்று உடைந்து நின்றதில் தங்கையாய் அவளுள் அத்தனை வருத்தம். தன் அண்ணனுக்காக உயிரான கணவனிடமே சண்டைக்கு நின்றாள்.
“அன்னைக்கு என் விருப்பத்துக்கு நான் தான் பேசினேன் நிலா” என்ற குமரனின் அழுத்தமான வார்த்தைகளில் வெண்ணிலா நிதானம் அடைந்தாள்.
“என்ன நிலா இது?” குணாவால் இருவரும் முட்டி நிற்பதை பார்க்க முடியவில்லை.
“போடா” என்று வெண்ணிலா உள்ளே சென்றிட…
“இது நான் சொன்னா எப்படிடா சரி வரும்?” என்று ஆயாசமாகக் கேட்டான் குமரன். குணாவிடம்.
“எனக்கு மேட்டர் என்னன்னே சரியா விளங்கல” என்றான் குணா.
“யாழி அருளை விரும்புறாள்.”
“அப்போ அவன்?”
“உன் நிலாகுட்டி ஆடிட்டு போறதுலே உனக்கு தெரியலையா?” என்றான் குமரன்.
“ஹோ…” என்ற குணா, “நீதான் ஒருமுறை பேசி பாரேன்டா” என்றான்.
“நீயுமாடா?” குமரன் நெற்றியை தேய்த்துக் கொண்டான்.
“வேறென்ன பண்ண? பேச வேண்டிய ரெண்டு பேரும் அமைதியா இருக்காங்க” என்றான் குணா.
“அதேதான் நானும் சொல்றேன். அவங்கக்குள்ள முதலில் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். அப்புறம் நாம தலையிடலாம்” என்றான் குமரன்.
குமரன் சொல்வது குணாவுக்கு சரியெனப்பட்டது.
“அத்தை ஸ்பீடா இருக்காங்க போலயே! கைமீறி போயிட்டால்?”, குணா.
“அருளு தான் முடிவெடுக்கனும்” என்றான் குமரன்.
_________________________
“அருளை உனக்கு பிடிக்கலையா சுலோ?”
உறங்க வந்ததும் எம்பிரான் மனைவியிடம் கேட்டிருந்தார்.
“பிடிக்காம இல்லைங்க” என்று கணவரின் அருகில் அமர்ந்த சுலோச்சனா, “உங்களால் உங்க தங்கச்சி மகனை விட்டுக் கொடுக்க முடியாத மாதிரிதாங்க இதுவும்” என்றார்.
எம்பிரானுக்கு புரியத்தான் செய்தது.
“உங்களுக்கு சம்மதம் இல்லையா?”
“யாழி சந்தோஷமா இருக்கணும் எனக்கு. அவ்வளவு தான்” என்ற எம்பிரான், “ஹரன் எனக்கு ஓகே தான்” என்றார்.
ஹரன் சுலோச்சனாவின் அண்ணன் மகேந்திரனின் மகன்.
“அப்போ யாழிக்கு இந்த பரீட்சை முடிந்ததும் பொண்ணு பார்க்க வர சொல்லலாங்க” என்றார் சுலோச்சனா.
“ரொம்ப அவசரப்படுற நீ” என்ற எம்பிரான், “பொறுமையா இரு. அவங்க பக்கமிருந்தே வரட்டும்” என்றார்.
“அதான் அண்ணா இதுக்குதான் நேத்து வந்தார் சொன்னனே” என்ற மனைவியின் ஆர்வம் அவருக்கு புரியத்தான் செய்தது.
“ஹம்… அப்பா, அம்மாகிட்ட பேசிட்டு சொல்றேன்” என்ற எம்பிரான் கண்களை மூடிக் கொண்டார்.
__________________________
“சாரி மாமா.”
“விடு அம்மாடி. அருளு வருந்தவும் நீ ஆதங்கப்பட்டுட்ட. உன்னை எனக்கு புரியும்” என்ற குமரனை பக்கவாட்டில் அணைத்துக் கொண்ட வெண்ணிலா, அவனின் கன்னத்தில் முத்தம் வைத்திட, அறையின் கதவு தட்டப்பட்டது.
குமரன் சென்று கதவினை திறக்க, ராஜேந்திரன் நின்றிருந்தார்.
“தொந்தரவு இல்லையே குமரா?”
அவர் இப்படி தன்மையாகக் கேட்பது, பேசுவதெல்லாம் அதிசயம் தான்.
உறவுகள் ஒன்றுகூடி இருக்கையில், அன்பு, அரவணைப்பு, கனிவு என எல்லாம் தானாக வந்துவிட்டிருந்தது.
“இல்லை பெரிப்பா” என்ற குமரன், அவரை உள்ளே அழைக்க…
“இருக்கட்டும் ப்பா… நிலா தூங்குமே” என்றார்.
“வாங்க மாமா. இன்னும் தூங்கல” என்று வெண்ணிலாவும் எழுந்து வந்து அழைக்க, உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தார்.
இருவரும் அவரையே பார்த்திருக்க, அவர் எதோ யோசனையாக இருப்பது தெரிந்தது.
“என்னாச்சு ப்பா?” குமரன் அவர் அருகில் சென்று அமர,
“யாழிக்குட்டி அருளை விரும்புதோ?” என்றார். அலைப்புறுதலோடு.
“சேர்த்து வைக்க முடியுமா மாமா?” வெண்ணிலா வேகமாக கேட்டதிலே தன் கணிப்பு சரியென தெரிந்து கொண்டார் ராஜேந்திரன்.
“நான் பெத்த மகளா இருந்தா சரின்னு சொல்லிடுவேன்” என்று அவரும் பட்டென்று சொல்லியிருந்தார்.
“நீங்க பேசலாமே!” வெண்ணிலா குமரனை பார்த்துக்கொண்டே இராஜேந்திரனிடம் கேட்டாள்.
“எம்பிரான் கிட்ட நான் பேசலாம். ஆனால் சுலோச்சனா?” என்று நிறுத்தியவர், “அவள் அத்தனை ஆசையா இருக்கும் போது நான் பேசினால் சரி வராதும்மா. குடும்ப உடைஞ்சிப்போவும்” என்றார்.
“எல்லாரும் இப்படியே சொன்னா எப்படி மாமா?” வெண்ணிலாவிடம் ஆதங்கம்.
“காந்தள் கேட்டு பார்த்தாச்சே நிலா.”
“ரெண்டு பேரும் விரும்புறாங்க சொல்லலையே மாமா!”
வெண்ணிலாவே எல்லாம் பேசிட குமரன் பார்வையாளனாக அமர்ந்திருந்தான்.
“யாழி பேசணும் நிலா” என்ற ராஜேந்திரன், “உன்கிட்ட தான் வருவாள்” என்று குமரனிடம் சொல்லி வெளியேறினார்.
“யாழி உன்கிட்ட சொல்லும் போதும் இப்படி அமைதியாவே இருக்காத மாமா” என்ற வெண்ணிலா படுத்துக்கொண்டாள்.
குமரனுக்கு குடும்பம் பிரியாது அஜய் மற்றும் யாழினியை எப்படி ஒன்று சேர்ப்பது எனும் எண்ணம் அப்போதே அலைக்கழிக்கத் தொடங்கியிருந்தது.
குடும்பம் பிரியப் போவதில்லை, அஜய்யின் மனம் தான் உடையப்போகிறது.
Epi 6
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
44
+1
+1
1 Comment