நீதான் என் காதல் மழை 4
அஜய் மாடியேற படிகளில் கால் வைத்திட…
“சாப்டிங்களா?” எனக் கேட்டிருந்தாள்.
‘மாமா காணாம போயாச்சு’ என உள்ளுக்குள் நினைத்த அஜய்,
“சாப்பாடு இருக்கா?” என்று பதில் கேள்வி கேட்டிருந்தான்.
அவன் கேட்ட விதமே சாப்பிடவில்லை என்பதை உணர்த்திட…
“ஆங்… இருக்கு…” என்று வேகமாக மொழிந்து, “ரெஃப்ரேஷ் பண்ணிட்டு வாங்க” என்று அடுக்கலைக்குள் நுழைந்தாள்.
குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்க்க, இரவு சமைத்த உணவும் எதும் மீதாமாகி எடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. இருவர் மட்டும் தானே என்று காந்தள் மதியத்திற்கு வைத்த குழம்போடு தோசை ஊற்றி இரவு உணவை முடித்திருந்தார்.
அவருக்கு அஜய் இப்படி அர்த்த ராத்திரி கடந்து வருவானென்று தெரியாதே!
‘அச்சோ இப்போ என்ன பண்றது? அத்தை நல்லா தூங்கியிருப்பாங்க’ என நினைத்தவள், ‘உப்புமா செய்வோமா?’ என யோசிக்க, ‘வேண்டாம் தண்ணி அளவு சரி வரலன்னா அவ்ளோ தான்’ என என்னென்னவோ யோசிக்க ஒன்றும் சரி வரவில்லை. சமைக்கத் தெரிந்திருந்தால் தானே ஏதேனும் ஒன்று தட்டுப்படும். அவளுக்கு குளம்பி நீர் மட்டுமே வைக்கத் தெரியும். அதுவும் அஜய், காந்தள் இல்லா நேரத்தில் அவ்வப்போது கேட்பானென்று கற்றுக் கொண்டிருந்தாள்.
‘நீ யோசிச்சு செஞ்சு கொடுக்கிறதுக்குள்ள விடிஞ்சிடும்’ என்ற மனதை தட்டி, நேரத்தைப் பொருட்படுத்தாது வெண்ணிலாவுக்கு அழைத்துவிட்டாள்.
குமரன் தான் அழைப்பை ஏற்றிருந்தான்.
“அண்ணி…”
“யாழி குட்டி என்னடா? இந்நேரத்துல…” குமரன் தூக்க கலக்கத்தில் பேசுவது தெரிந்தது.
“தொந்தரவு பண்ணிட்டனா அண்ணா?” என்றவள், குமரன் “அப்படி எதுவுமில்லை” என்றதும், “அண்ணி தூங்கிட்டாங்காளா?” எனக் கேட்டாள்.
“கால் வீங்கி தூங்க முடியாம உட்கார்ந்திருந்தாள். இப்போ தான் அசந்து தூங்குறாள்” என்ற குமரனுக்கு மனைவியின் உறக்கத்தை கலைக்க விருப்பமில்லை.
“ஹோ…”
“என்னடா?”
“அது… ஒரு பத்து நிமிஷத்தில் செய்யுற மாதிரி டிஷ் சொல்றீங்களா?” எனக் கேட்டாள்.
“நைட் சரியா சாப்பிடலையா? இப்போ பசிக்குதா?” என்ற குமரனிடம், “அச்சோ அண்ணா, டைம் இல்லை. எதும் சொல்லுங்களேன். அருள் மாமா இப்போ தான் வந்தாங்க… டின்னர் சப்பிடல போல” என்றாள்.
குளித்து கீழே வந்த அஜய், ஆளின்றி யாழினியின் குரல் மட்டும் வர எங்கென்று விளக்கு ஒளிர்வதை வைத்து சமையலறையை எட்டி பார்க்க, அவளின் பேச்சினை முழுதாய் கேட்டபடி அமைதியாக, சமையலறையை ஒட்டி இருக்கும் உணவு மேசை இருக்கையில் அமர்ந்துவிட்டான்.
“ஓ…” என்று ஆராய்வாய் இழுத்த குமரன், “தோசை ஊத்திக் கொடுடா… பொடி இருக்குமே” என்றான்.
“அச்சோ அண்ணா!” யாழினி சற்று சத்தமாக கத்திட, அலைபேசியை பார்வையிட்டுக் கொண்டிருந்த அஜய் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
‘இவ்வளவு சத்தம் போடுறான்னா கண்டிப்பா அந்தப்பக்கம் குமரன் தான்.’ அஜய் சரியாக யூகித்தான். யாழினி ரொம்பவே அமைதி. அவ்வீட்டின் இளம் தலைமுறையினர் ஒன்று கூடிடும் போது கூட, அனைவரின் சேட்டையையும் பார்வையாளராக ரசிக்கும் யாழினி அதிர்ந்து கூட வாய் திறந்திடமாட்டாள். அவளது சீண்டல் பேச்சுக்கள் கூட அமைதியாகத்தான் ஒலிக்கும். ஆனால் குமரனிடம் மட்டும் அவளின் அந்த அமைதி, அடக்கம் எல்லாம் காணாமல் போய்விடும். குமரனிடத்தில் அதீத செல்லம். அதீத ஒட்டுதல்.
“மாமாக்கு பொடி பிடிக்காது” என்றாள்.
யாழினி சொல்லிய விதத்திலே கடுப்பில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட குமரன்,
“இட்லி ஊத்தி வை” என்றான்.
“டைம் ஆகாதா?”
அவள் கேட்டதில் வந்த சிரிப்பை குமரன் வாய்க்குள் ஒளித்தான்.
குமரனின் பேச்சு சத்தம் கேட்டு வெண்ணிலாவே விழித்துவிட்டாள்.
“யாரு மாமா?” என்று கேட்ட வெண்ணிலாவை தன் மடி சாய்த்து தட்டிக் கொடுத்தபடி யாழிக்கு செய்முறை கூறினான்.
“நீயென்ன நாலு பேருக்கா ஊத்தி வைக்கப்போற, அஜய்க்கு மட்டும் தானே? ஒரு தட்டு ஊத்தி வச்சா போதும். ஐந்து நிமிடம்… ரெடியாகிடும்” என்றான்.
“ஹோ… அவ்ளோ நேரம் தானா?” என்ற யாழி, “எப்படி பண்ணனும் சொல்லுங்க?” என்று சொல்லி அலைபேசியை லவுட் ஸ்ப்பீக்கரில் போட்டு ஓரமாக வைத்தாள்.
“யாழிக்குட்டி பேசாம தோசை ஊத்தி, சர்க்கரை வச்சு கொடுடா… அவன் அட்ஜஸ்ட் பண்ணிப்பான்” என்று குமரன் சொல்ல… “மாமா இன்னும் கீழ வரல… நீங்க சொல்லுங்க நாம செஞ்சிடலாம்” என்றாள்.
அஜய் தனக்காக அவள் எடுக்கும் மெனக்கெடல்களை காதலாய் ரசித்திருந்தான்.
“யாழி சொல்றதை…” என்று குமரன் முடிக்கும் முன்பு…
“அச்சோ எனக்கு தோசை ரவுண்டா வராது… திருப்பி போடத் தெரியாது. தோசை பிச்சிக்கிட்டு போயிடும்” என்றாள்.
“ஓகே… ஓகே… ரிலாக்ஸ்” என்ற குமரன், பெருமூச்சு விடுவது நன்கு கேட்டது.
‘குமரனை படுத்தி வைக்கிறாள்.’ அஜய் சத்தமின்றி சிரித்தான்.
“இட்லி குக்கரில் ஒன்றை கிளாஸ் தண்ணீ ஊத்தி அடுப்பில் வை” என்ற குமரன், “ஆங் வச்சிட்டேன். ஸ்டவ் ஆன் பண்ணியாச்சு” என்றாள்.
“இப்போ இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவு ஊத்தி குக்கரில் வச்சு மூடு” என்றான்.
“நெய் தடவலாமா? மாமாக்கு பிடிக்குமே” என்றாள்.
“உன் மாமாக்கு என்ன பிடிக்கும் உனக்குத்தானே தெரியும். நெய் தடவியே ஊத்து” என்றான்.
குமரனுக்கு வெண்ணிலா சொல்லியது ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்று சந்தேகத்தை எழுப்பியது.
யாழினி, அஜய் மீது கொண்டிருப்பது அக்கறை மட்டுமாக இருக்காதென இப்போது அவள் தன்னை படுத்தி வைப்பதில் குமரன் கண்டுகொண்டான்.
“முடிஞ்சுதுண்ணா!”
“சரி நான் வைக்கட்டுமா?”
“ஏதே!”
“வேறென்ன?”
“இட்லி வெந்திருச்சு எப்பிடி கண்டுபிடிக்க?”
“லைட் அடிச்சு கண்டுபிடி…” குமரன் கடுப்பாக மொழிய அஜய் பொங்கி வந்த சிரிப்பை வயிற்றை பிடித்து சத்தமின்றி வெளியேற்றினான்.
“அண்ணா…” யாழி சிணுங்கிட, “உனக்கு சமைக்கத் தெரியாது சொல்லியிருந்தா அருளே எதும் பழம் கட் பண்ணி சாப்பிட்டிருப்பான்” என்றான் குமரன்.
“பழம் எல்லாம் தீர்ந்துப்போச்சு. இருந்திருந்தா நான் அதோடே நின்னிருப்பேன்” என்ற யாழி, “சைட் டிஷ் சொல்லுங்க. ஈசியா?” எனக் கேட்டாள்.
“யாழிகுட்டி அண்ணா பாவம் டா!” குமரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… “நான் பாத்துக்கிறேன். நீ வைடா” என்றிருந்தான் அஜய்.
திடீரென ஒலித்த குரலில் யாழி பதறி திரும்பிட…
“அதான் குக் பண்ண தெரியாது தெரியும்ல… எதுக்கு இந்த நேரத்தில் அவனையும் தொல்லை பண்ணிட்டு, கிச்சனையும் ஒரு வழி பண்ணிட்டு இருக்க?” என்றான் அஜய்.
அஜய் சாதாரணமாகத்தான் கேட்டான். அவளுக்குத்தான் அவன் இன்னும் கோபமாக இருப்பதுபோல தோன்றியது.
“அது…” என்ன சொல்வதென்று தடுமாறியவள், “நீங்க சாப்பிடலன்னு” வார்த்தையை முடிக்காது தந்தியடித்தாள்.
மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு கிச்சன் மேடையில் சாய்ந்து நின்றவன், எதும் சொல்லாது அவளையே பார்த்திருந்தான்.
அவனது பார்வை புரியாத போதும் உள்ளுக்குள் அவஸ்தையை கூட்டிட…
“நான்… நான் சட்னி செய்யுறேன்” என்று ஃபிரிட்ஜை திறந்து குடைந்தாள்.
அவசரத்திற்கு ஒன்றும் கைக்கு அகப்படவில்லை.
“வேண்டாம் விடு. இன்னைக்கு ஒருநாள் பொடி அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்றான்.
‘அப்போ அண்ணாக்கு கால் பண்ணதுமே வந்துட்டாங்களா?’ அதிர்ந்தாள்.
‘பேசின எல்லாம் கேட்டிருப்பாங்களோ?’ அவள் அவனை திரும்பி பார்த்தவாறு தனக்குள் உழன்றாள்.
“என்ன?” என்று வினவினான்.
“இட்லி வேகணும் தானே. அதுக்குள்ள செய்திடலாம்” என்றவள், “உங்களுக்கு ரெசிபி தெரியுமா?” எனக் கேட்டிட… அஜய் வாய்விட்டு அட்டகாசமாக சிரித்தான்.
“நீ இப்படி உட்காரு” என்று உணவு மேசை இருக்கையை இழுத்து போட்டவன், அவள் கையில் ஒரு கட்டி பூண்டை தூக்கிப் போட்டு…
“இதையாவது உரிக்கத் தெரியுமா?” எனக் கேட்டான்.
“அதெல்லாம் தெரியும்” என முறைத்துக்கொண்டு கூறியவள், அதனை உரிப்பதற்குள், அஜய் இரண்டு பெரிய… நன்கு கனிந்த தக்காளியை நறுக்கி இருந்தான்.
யாழி பூண்டோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்க…
சன்னமாக சிரித்த அஜய்,
‘பின்னாடி உன் பாடு படு திண்டாட்டம்… இப்போவே நல்லா பிரகாசமா தெரியுது அஜய்’ என மனதில் நினைத்தவனாக, அவள் கையிலிருந்த பூண்டினை வாங்கி நிமிடத்தில் உரித்து தக்காளியுடன் சேர்த்து, தேவையான அளவு வர மிளகாய் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடு்த்து, சிறு கிண்ணத்திற்கு மாற்றியவன்,
“கறிவேப்பிலை?” என்க, அஜய் லாவகமாக செய்வதை ரசனையாக பார்த்திருந்த யாழி, சிறு திடுக்கிடலுடன்,
“ஹாங்…” என்று எடுத்துக் கொடுத்தாள்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, போட்டு அடுப்பை நிறுத்திவிட்டு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பொரிய, அரைத்து வைத்திருந்த தக்காளி கலவையில் சேர்த்து கிளறிட நிமிடத்தில் சட்னி தயார்.
அவனே இட்லியையும் அவி பறக்க தட்டில் எடுத்து வைத்தான்.
“வாவ்… உங்களுக்கு இவ்வளவு நல்லா சமைக்கத் தெரியுமா?” யாழினி விழிவிரித்து வினவினாள்.
“ஐந்து வருஷத்துக்கு முன்ன வரை நானே சமைச்சு தான் சாப்பிட்டுட்டு இருந்தேன்.” அஜய் அவ்வாறு சொல்லியதில் யாழியின் முகம் நொடியில் வாடிப்போனது.
“ஃபியூச்சரில் உனக்கு நல்ல வசதி தானே!” அஜய் மெல்ல முனகிட,
“என்ன சொன்னீங்க கேட்கல?” என்றாள் யாழி.
“நத்திங்… ரொம்ப பசிக்குது சொன்னேன்” எனக்கூறி சமாளித்தான்.
அஜய் பசிக்கிறது என்றதும் அவன் செய்து எடுத்து வைத்ததை, வேகமாக உணவு மேசையில் எடுத்து வைத்தாள்.
“ம்ம்… ரெடி. சாப்பிடுங்க!” என்றாள்.
“பாருடா… என்னவோ நீயே செய்த மாதிரி பில்டப்…”
“நீங்க வரலன்னா நானே செய்திருப்பேன். இப்பவும் இட்லி நான் தான் ஊத்தி வச்சேன்” என்றாள். ரோஷமாக.
“ரொம்ப பெரிய வேலை தான். குமரன் நொந்திருப்பான். காலையில் போன் போட்டு அவனை விசாரிக்கனும்” என்றான். சிரியாது.
“நீங்க என்னை கிண்டல் பண்றீங்க!”
“புரிஞ்சிடுச்சா” என்றவன் அவள் எதோ பேச முயல, வாயில் இட்லியை வைத்து அடைத்தான்.
“பரவாயில்லை… நல்லாயிருக்கு” என்றவள், அஜய் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தாள். மேசையில் கைக்குற்றி, அதிலே முகம் தாங்கி அவனையே பார்த்திருந்தாள்.
‘பயங்கரமா சைட் அடிக்கிறாளே!’ அவளின் பார்வையால் இதயத்தில் மெல்லிய இதம் ஊடுருவதை உணர்ந்தான்.
அஜய் உண்டு முடித்து கை கழுவி வர,
“ஃபோட்டோ கொடுங்க” என்று மறித்து நின்றாள்.
“என்ன ஃபோட்டோ?” தெரிந்துகொண்டு வினவினான்.
“உங்களுக்கேத் தெரியும். கொடுங்க” என்று அடமாக நின்றாள்.
“நான் அதை தூக்கிப் போட்டுட்டேன்.” தோள் குலுக்களோடு சாதாரணமாகக் கூறினான்.
யாழினியின் விழிகளில் சட்டென்று நீர் துளிர்த்து விட்டது.
“நிஜமாவா?” கண்ணீர் கன்னம் வழிந்தது.
“யாழ்…”
அவள் வேகமாக தன்னுடைய அறைக்குள் புகுந்து கதவினை மூடிக் கொண்டாள்.
‘அஜய் என்னடா பண்ற?’ தன்னைத்தானே கேட்டவன், ‘அவளை நீ ஹர்ட் பன்ற’ என தன் கன்னத்திலே அறைந்து கொண்டான்.
‘அதான் நீயும் அவளை விரும்புறியே! அதை சொல்லாம அவளை இப்பவும் கஷ்டப்படுத்துற நீ’ என்றவன், யாழியின் அறை பக்கம் அடி எடுத்து வைத்து, வேகமாக திரும்பி படிகள் ஏறிச் சென்றுவிட்டான்.
மும்பைக்கு செல்வதற்கு முன்பு கட்டிலில் தூக்கிப்போட்டுச் சென்ற புகைப்படத்தை கையில் எடுத்தவனின் விழிகள் ஆச்சரியத்தில் அகண்டு விரிந்தது.
_________________________________
இரவெல்லாம் உறங்காது அழுதழுது கரைந்திருந்தாள் யாழினி.
ஐந்து வருடங்களாக பொத்தி வைத்திருந்த காதல்…
வெண்ணிலாவின் காதலை குமரன் படிப்பினை காட்டி தள்ளி வைத்ததால், தன்னுடைய காதலுக்கு படிப்பினை அஜய் தடையாகக் காட்டிடக் கூடாதென படிப்பு முழுதாய் முடிந்த பின்னர் தான் அஜய்யிடம் காதலை சொல்லிட வேண்டுமென உறுதியாக இருந்தாள்.
கொண்ட உறுதியால், பார்வையால் கூட காதலை காட்டிடாது கட்டுப்பாடாக இருந்தவளுக்கு, ஹரிநாத் காதலை சொல்லியதும், அவனை விலக்கி வைக்க தன்னுடைய விருப்பத்தை வெளிக்காட்டிவிட்டாள்.
அதில் தான் அஜய்யின் உண்மை கோப முகத்தை நேரில் கண்டாள். உள்ளுக்குள் பயம். இருப்பினும் காதல் அதையும் அவளை எளிதாகவே பார்க்க வைத்தது.
எப்போதும் யாழினியிடம் அஜய் இயல்பாக அமைதியாக பேசியதில்லை. சற்று அதட்டல் பேச்சு தான். அவனும் அமைதியாக பேசுவது குமரன், வெண்ணிலா இடம் மட்டும் தான். அக்கரையை கூட கோபமாகத்தான் அவனுக்கு காட்ட வரும். ஆனாலும் அந்த கோபத்தில் இருக்கும் அன்பு, அவனது இந்த கோபத்தில் இல்லை என்பதை அவன் வண்டி ஓட்டிய வேகத்தில் புரிந்து கொண்டிருந்தவளுக்கு, அஜய் தன் பக்க விளக்கம் கொடுக்க, ‘தன்னுடைய மாமா தானே சரி செய்திடலாம்’ என்று எண்ணியே அமைதியாக சென்றிருந்தாள்.
அத்தனை கோபத்திலும் அவன் தன்னை எழுப்பி சென்று வருவதாக சொல்லிச் சென்றதில் அவளுக்கு சிறு நிம்மதி.
தன்னுடைய காதலை கொண்டு அவன் தன்னை விலக்கி வைத்திடவில்லை என்று.
மும்பை சென்று வந்தவன் முகம் பார்த்து, அவன் காட்டிய பொய் பாரா முகத்தில், அவன் இன்னும் கோபமாகத்தான் இருக்கிறான் என்று மனதால் சுருண்டாலும், ஒருநாளும் தன்னை வெறுத்திட மாட்டான் என்றே அப்போதும் எண்ணினாள்.
அந்த நிம்மதி, அவன் புகைப்படத்தை தூக்கி போட்டுவிட்டேன் என்று சொல்லியதில் காணாமல் போனது.
மனதில் உண்டாக்கி வைத்திருந்த மொத்த திடமும் காணாமல் போனது.
‘நிஜமாவே பிடிக்கலையா?’ வெம்பி வெம்பி அழுதாள்.
அஜய்க்கு யாழின் சுருங்கிய முகம் உள்ளுக்குள் என்னவோ செய்தது.
உடனடியாக சென்று ஆறுதல் படுத்த வேண்டுமென்று தோன்றினாலும், எப்படியென்று தெரியவில்லை. குடும்பத்தோடு ஒன்றாக இருந்திருந்தால் அரவணைக்கும் வித்தை தெரிந்திருக்குமோ?
அன்று செல்லும் அவசரத்தில் படத்தை கட்டிலில் தூக்கிப்போட்டு சென்றிருந்தான். இன்றும் வந்ததும், அதனை சரியாக கவனிக்காது உணவு உண்ண கீழே வந்திருந்தான்.
தற்போது தான் அதனை நன்றாக பார்க்கும் சிந்தையே அவனுள் உதித்தது.
கையில் எடுத்தவன் உற்று பார்க்க, அவனது உருவத்திற்குள் குட்டி குட்டியாய் அவனது பல உருவங்கள். அவனது கண்ணின் கருவிழிகளில் மட்டும் யாழின் பிம்பங்கள்.
பல நுணுக்கமான நுண்ணிய ஓவியங்கள். முழுவதும் அஜய்யின் பல உருவங்கள் நிரம்பி ஒற்றை உருவமாய் காட்சியளித்தது.
அஜய் கண்களில் வியப்பு கூடியது. நிச்சயம் இதனை முழுதாய் முடிப்பதற்கு பல மாதங்கள் ஆகியிருக்கும். அத்தோடு அவளின் அதீத மெனக்கெடலும், உடல் உழைப்பும் அவனது நெஞ்சத்தை ஆட்டம் காண வைத்தது.
‘அவ்வளவு லவ்வாடி?’
இதயம் சீரற்று துடித்திட… மெல்ல நீவி விட்டுக் கொண்டான்.
“யாழ்…” தனது கருவிழியில் சிரித்துக் கொண்டிருந்த யாழின் குட்டி முகத்தில் மென்மையாய் தன் விரல் தீண்டினான்.
தேகமெல்லாம் சிலிர்த்து அடங்கும் உணர்வு.
“அம்மு…” அவனது இதழ்கள் மெல்ல உதிர்த்தது. சிலிர்ப்பில் அவனின் அதரம் நீண்டு விரிந்தது.
“பர்ஸ்ட் மாமாகிட்ட சொல்லணும்” என்று சொல்லிக் கொண்டவன், படத்தினை மாட்டுவதற்காக சுவற்றில் இடம் தேடினான்.
புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு அறையை சுற்றி பார்க்கும் போது தான், கையிலிருக்கும் படத்தின் பின் பக்கம், அவனின் முன்னிருந்த ஆளுயரக் கண்ணாடியில் பளிச்சென தெரிந்தது.
சட்டென்று திருப்பி பார்த்தவன் பார்க்கும் நிழலுருவில் முழுதாய் தொலைந்து மீண்டான்.
யாழின் காதல் நொடிக்கு நொடி அவனை அதிர வைத்தது.
‘எப்படி என் மேல் இவ்வளவு லவ்?’ இதயத்தை அவளது காதலால் உருவி எடுக்கும் உணர்வு.
மொத்தமாய் அவளின் காதலில் நெகிழ்ந்து நின்றிருந்தவனால் யாழின் காதலின் கனம் தாங்காது, அவனது ஒற்றைத் துளி நீர் படத்தில் சொட்டியது.
புகைப்படத்தின் பின், அஜய், யாழினி மணக்கோலத்தில். அஜய் யாழிக்கு தாலி கட்டும் தருணம். இருவரின் நான்கு விழிகளும் ஒன்றையொன்று கவ்வி கவி பாடும் அழியகிய காட்சி கவிதையாய் ஓவியத்தின் வழி அவனை உறைய வைத்திருந்தது.
ஒரு பெண்… அதுவும் மனதிற்கு பிடித்த பெண் உருகி உருகி காதல் செய்யும் போது வேண்டாமென விலக்கிட முடியுமா? வேண்டிய காதலை காதல் ஒன்றை மட்டுமே கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னவனுள் வேர் பிடிக்கச் செய்திருந்தாள்.
அஜய்யும் தன்னவளின் காதலை தேனின் துளியாய் உள்வாங்கிட்டான்.
மெல்ல யாழ் மீட்டும் காதலின் சுகத்தில், உறக்கத்தில் ஆழந்தான்.
காலை எட்டு மணியளவில் அஜய் கீழிறங்கி வர,
“அம்மா வெண்ணிலா சீமந்தத்துக்கு நாள் குறிக்கணும் வர சொல்றாங்க அருளு. கிளம்பனும். நீயும் வரியா?” எனக் கேட்டார் காந்தள்.
“குமரன் மும்பையில் இருக்கும்போதே சொன்னான். நீங்க ஃபர்ஸ்ட் போங்கம்மா. நான் ஸ்டுடியோ போயிட்டு மதியம் வந்திடுறேன்” என்ற அஜய்யின் பார்வை யாழின் அறையை தொட்டு தொட்டு மீண்டது.
“இன்னும் மேடம் தூங்குறாங்களா?” எப்போதும் போல் கேட்பது போலவே கேட்டிருந்தான்.
“எப்பவும் நேரமா எழுந்து மாடி செடிகளுக்கு தண்ணி ஊத்திட்டு இருப்பாள். இன்னைக்கு இந்நேரம் வரை தூங்குறாள். நைட் முழிச்சிருந்தாளோ?” என்ற காந்தள் மகனின் கையில் குளம்பி கோப்பையை கொடுத்தார்.
“இப்போ சாப்பிட மட்டும் செய்து வச்சிருக்கேன் அருளு. மதியம் நீ வரும் போது அவளையும் கூட்டிட்டு வந்திடு. அசந்து தூங்குறா இல்லைன்னா நானே கூட்டிட்டு போயிடுவேன்” என்றார்.
“காலேஜ் இல்லையா?”, அஜய்.
“ஸ்டடி ஹாலிடே டா!”
“அதுக்கு படிக்காம தூங்கிட்டு இருக்காள்” என்று எழுந்த அஜய் யாழின் அறை நோக்கி வேகமாக சென்றான்.
அவனுக்கு இரவு அவள் காட்டிச் சென்ற கண்ணீர் முகமே கண்முன் வந்து வதை கொடுக்க, அவளை நேரில் பார்த்தால் தான் மனம் சமன்படும் அவஸ்தை.
“ம்ப்ச் அருளு… தூங்கட்டும் விடுடா. லீவ் தானே! யாழிகுட்டி படிச்சிடுவாடா. நைட் முழிச்சிருந்து படிச்சிருப்பாள்” என்று காந்தள் குறுக்கே வந்து அவனை தடுத்திருந்தார்.
“ம்மா…”
“நீ ஸ்டுடியோ போகனும் சொன்னியே. கிளம்பு” என்றவர், அவனை மாடி நோக்கி தள்ளிவிட்டார்.
“ரொம்பத்தான் அவளை தாங்குறம்மா நீ?”
“சின்னப்பொண்ணுடா எப்போ பாரு அவளை முறைச்சிக்கிட்டு” என்றார் காந்தள்.
“அதான் முறைச்சிக்கிட்டு திரிஞ்சவன மொத்தமா கவுர வச்சிட்டாளே!”
“என்னடா சத்தமா சொல்லு?”
“யாரோட போறீங்க?”
“நான் தான் போறேன், பஸ்ல. குமரன் பஸ் ஸ்டாப் வந்து கூப்பிட்டுப்பான்” என்றார் காந்தள்.
“மாமா வீட்டில் இருப்பாரா?”
“எந்த மாமாவை கேட்கிற நீ? உனக்கு மொத்தம் மூணு மாமா இருக்காங்க தெரியும்ல” என்றார்.
“இந்த சேட்டையோட அப்பா…” அஜய் இழுத்து ராகத்தோடக் கூறினான்.
“என்னடா புள்ளையை போட்டு கொடுக்கவா?” எனக் கேட்டார்.
“ம்க்கும்… கொடுத்திட்டாலும். அவளை தானே செல்லம் கொஞ்சுவீங்க” என்ற அஜய், “வேற ஒரு விஷயம் பேசணும்” என்றான்.
“என்ன விஷயம் அருளு?”
“லைஃப் மேட்டர் ம்மா!” அஜய் முகம் கனிந்திருந்தது.
“புரியிற மாதிரி சொல்லுடா?”
“நான் சொன்னதும் புரிஞ்சிடும்” என்ற அஜய் தன் சிரிப்பை மறைத்தவனாக ஓடிவிட்டான்.
சிறிது நேரத்தில் கிளம்பி வந்த அஜய் யாழின் அறையை பார்த்துவிட்டு, ஸ்டுடியோ கிளம்பிவிட்டான்.
மலைக்கு கிளம்பிய காந்தள், பேருந்துக்கு நேரமாகிவிட்டதால் யாழின் அறை வாயிலில் நின்றே…
“தூங்கிட்டே இருக்காத யாழி, எழுந்து சாப்பிடு. மதியம் அருள் கூட வந்திடு. தம்பி உன்னையும் கூட்டியார சொன்னான்” என்று சொல்லியவர், யாழி “ம்” என்றதும் சென்றுவிட்டார்.
அன்று ஸ்டுடியோவில் காலண்டர் நிறுவனம் ஒன்றிற்கு புகைப்படம் எடுக்கப்பட வேண்டும்.
மாடல் தயாராகி வந்து நிற்க, அஜய் கவனம் காமிராவில் பதியவில்லை.
யாழி வரைந்து வைத்திருந்த அவர்களின் கல்யாண கோலம் கண்முன் வந்து அவனை இன்ப இம்சை செய்தது.
‘இது ஆவரதுக்கு இல்லை.’ என்று எழுந்து கொண்டவன், “நிகில் பார்த்துக்கோடா!” என்று வீட்டிற்கு கிளம்பி விட்டான்.
இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் காந்தள், மலைக்கு வந்துவிட்டதாக அழைத்து சொல்லியிருந்தார். அதனால் தன்னவளை காண விரைந்து வந்திருந்தான்.
வீடு தாழிடப்படாது வெறுமனே சாற்றி மட்டும் இருந்தது.
“லாக் பண்ணாம என்ன பண்ணிட்டு இருக்கா” என்று உள்ளே வந்த அஜய், அவள் எங்கே என்று ஆராய, யாழின் அறையில் தொப்பென்று கீழே விழும் சத்தம்.
அஜய் வேகமாக ஓடி வந்து பார்க்க, யாழினி தரையில் மயங்கி கிடந்தாள்.
“அம்மு” என்று யாழின் அருகில் அமர்ந்தவன், அவளின் கன்னம் தட்டிட… உடல் தீயாய் சுட்டது.
காய்ச்சலில் மெல்ல அனத்திக் கொண்டிருந்தாள்.
“அம்மு… அம்மு…” என்று அழைத்தவன், தண்ணீரை எட்டி எடுத்து முகத்தில் தெளித்து அழுந்த துடைத்தான்.
மெல்ல இமை பிரித்தவள், அவனின் மார்பில் ஒண்டினாள்.
“என்னடா இப்படி காய்ச்சல் அடிக்குது. திடீர்னு எப்படி?” எனக் கேட்டான்.
அஜய்யின் சட்டையை மார்பில் ஒரு கையால் இறுக்கி பிடித்தவள், அவனது இதயத்தில் தன் முகம் புதைத்து…
“லவ் யூ மாமா” என்றிருந்தாள்.
அத்தனை சூடாய் ஒலித்தது அவளது குரல்.
“நீ இல்லாம முடியாதே!” என்றவள், “கெஞ்சி கேட்கணுமா மாமா?” எனக் கேட்டாள்.
“பைத்தியம்” என்று மார்போடு அழுத்திக் கொண்ட அஜய், “லவ் யூ டி… லவ் யூ டூ டி அம்மு” என்றிருந்தான்.
ஆனால் அவன் சொல்லியது கேட்கும் முன்னர் அவள் தொய்ந்து சுயம் இழந்திருந்தாள்.
“அம்மு… யாழ்… டேய்” என்று பதட்டம் கொண்ட அஜய், யாழியை தூக்கி மெத்தையில் படுக்க வைத்துவிட்டு, பக்கத்து கிளினிக்கில் இருக்கும் மருத்துவரை சென்று அழைத்து வந்தான்.
பரிசோதித்த மருத்துவர், “நைட் முழுக்க தூங்கல நினைக்கிறேன். அதோட அதீத அழுத்தம். அதனால் வந்த காய்ச்சல் தான். இஞ்செக்ஷன் போட்டிருக்கேன். கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிஞ்சிடும். சாப்பிட எதும் கொடுத்திட்டு மாத்திரை கொடுங்க. மாலைக்குள்ள குறைஞ்சிடும்” என்று சொல்லிச் சென்றார்.
அஜய் யாழியையே பார்த்தபடி சில நிமிடங்கள் நின்றிருந்தான்.
ஒரு இரவிற்குள் மொத்தமாய் ஓய்ந்து தெரிந்தாள்.
“நைட் முழுக்க அழுதிருக்கா” என்று அவளின் தடித்த இமைகள் வைத்து கண்டு கொண்ட
வன், “நீ ஏன்டி கெஞ்சனும்? அதான் மொத்தமா சுருட்டிக்கிட்டியே” என்று மென்மையாய் சுட்டு விரலால் அவள் கன்னம் தொட்டு எடுத்தான்.
யாழிடம் மெல்லிய அசைவு தெரிய, தள்ளி நின்று கொண்டான்.
Epi 5
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
48
+1
+1
1
1 Comment