Loading

நீதான் என் காதல் மழை 3

அஜய் வேலை காரணமாக மும்பை செல்ல அதிகாலையே புறப்படத் தயாராகிவிட்டான்.

காந்தளுக்கு முதுமையின் காரணமாக சில உடல் உபாதைகள் இருந்திட, அதற்கான மாத்திரைகளின் உபயத்தால் நன்கு உறக்கம் கொள்பவர், விடிந்த பின் ஏழு மணியளவில் தான் எழுவார்.

தற்போது சொல்லிவிட்டுச் செல்ல அவரை எழுப்பிட முடியாது என்பதால்,

வேண்டா வெறுப்பாக யாழினியின் அறை கதவை மெல்லத் தட்டினான்.

தாழிடப்படாமல் இருந்த கதவு கை வைத்ததும் திறந்து கொண்டது. விடி விளக்கின் வெளிச்சத்தில் அறை இருள் நிரம்பாது மங்கிய ஒளி பரவி அனைத்தும் கண்களுக்குப் புலப்படும் வகையில் இருந்தது.

மெத்தையில் ரஜாயுக்குள் சுருண்டிருந்தாள். குளிர் நிரம்பிய பகுதி அவர்கள் வசிக்கும் இடம். குளிரூட்டி வேறு அதிகமாக வைத்திருந்தாள்.

இதுவரை அவளின் அறை பக்கம் கூட அஜய் வந்ததில்லை.

அறை வாயிலில் நின்றபடியே யாழியை அழைத்தான். அவளிடம் அசைவென்பதே இல்லை.

“நல்லா தூங்குறா போல” என நினைத்த அஜய், ‘சொல்லாமலும் போக முடியாது’ என்று நெற்றியை தேய்த்தவனாக உள்ளே நுழைந்தான்.

முதலில் குளிரூட்டியை குறைத்து வைத்தான்.

எட்ட நின்று…

“யாழ்” என அழைத்தான்.

மெல்ல இமை பிரித்தவள்,

“கனவுல மட்டும் பக்கத்துல வறீங்க. நிஜத்துல மிளகாயை கடிச்ச மாதிரி கடுகடுன்னே பேச வேண்டியது” என்று முனகி மற்ற பக்கம் திரும்பி படுத்தாள்.

அஜய்க்கு அவளின் பேச்சு ஆயாசமாக வந்தது. மட்டுப்பட்டிருந்த கோபம் அதிகரிப்பது போலிருந்தது.

“இவளை” என பல்லைக் கடித்த அஜய், இடையில் கை குற்றியவனாக பக்கவாட்டில் திரும்பி காற்றினை இழுத்து வெளியேற்ற… அவனது கண்கள் அகல விரிந்தது.

யாழி நன்றாக ஓவியம் வரைவாள் என்று தெரியும். சிறு வயதிலேயே அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு சென்று முறையாகக் கற்றுகொண்டிருந்தாள். ஆனால் இந்த அளவிற்கு தத்ரூபமாக வரைவாள் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை.

அஜய் அவர்களின் தாத்தா, பாட்டி சதாபிஷேகத்தில் வேட்டி சட்டையில், குணாவுடன் சிரித்து பேசியபடி இருக்கும் காட்சி அது. அதில் அவனை மட்டும் கண்கள் விகசிக்க, புன்னகை முகமாக இருந்தவனை வரைந்து சுவற்றில் மாட்டியிருந்தாள். அளவான அளவில் சுவற்றில் இடம் பிடித்திருந்தது.

அஜய்யின் வலது புருவம் முடியும் இடத்தில் கண்ணுக்கே தெரியாது சிறு புள்ளி அளவில் மச்சம் ஒன்றிருக்கும். உற்று பார்த்தால் கூட புருவ இழைகள் தொட்டு நிற்க, அத்தனை எளிதாக அதனை பார்த்திட முடியாது. ஆனால் அதையும் விட்டு வைக்காது ஓவியத்தில் வைத்திருந்தாள்.

அஜய்க்கு தானே சுவற்றில் ஏறி அமர்ந்து கொண்டதாகத்தான் தோன்றியது.

இத்தனை தத்ரூபமாக வரைந்திருக்கிறாள் என்றால் அவள் மனதில் தன்னை எத்தனை ஆழமாக பதிந்து வைத்திருக்க வேண்டுமென நினைத்தவனின் பார்வை மெல்ல உறங்கிக் கொண்டிருந்தவளின் மீது படிந்தது.

“எதுக்கு இந்த தேவையில்லாத காதல்” என்றவன், “இவ ரூமுக்கு அம்மா வரதே இல்லையா?” என மீண்டும் தன் ஓவியத்தை பார்த்தான்.

‘இது சரி வராது. என்னைக்காவது அம்மா பார்த்தால் அவ்ளோ தான், தப்பா நினைக்க சான்ஸ் இருக்கு’ என நினைத்து ஓவியத்தை சத்தமின்றி கழட்டியவன், வேகமாக தன்னுடைய அறைக்குச் சென்று கட்டிலிலே போட்டுவிட்டு அறையையும் பூட்டிவிட்டு வந்தான்.

“யாழ்…” இம்முறை சற்று சத்தமாகவே அழைத்தான்.

“எவ்ளோ அழகான பேரு. எப்போ பாரு அழுத்தமா கூப்பிட்டுட்டு… சாஃப்ட்டா கூப்பிட்டா தான் என்னவாம்?” என்று பேசியவள் கண்களை மட்டும் திறக்கவில்லை.

‘இவ கனவுல இருந்து வெளிவரமாட்டா போலவே’ என்ற அஜய், “ஹேய் யாழ்” உரக்க அழைத்தான்.

வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

மங்கிய ஒளியில் உருவமாக மட்டும் தெரிந்தவனை நம்ப முடியாது பார்த்தவள்,

“என் ரூமுக்கு வந்திருக்கீங்களா?” என்று ஆச்சரியமாக வினவியவள், “எப்படியும் நான் கண்ணை தேய்ச்சிட்டு பார்த்தால் காணம போயிடுவீங்க. தினமும் நடக்கிறது தானே! கனவுல கூட நடக்காதுன்னு நினைக்கிறது இப்போ நடக்குது?” என தன்போக்கில் புலம்பியவளாக யாழினி மீண்டும் படுக்க முயல…

“ஏய்… இடியட்! இது கனவில்லை. எழுந்திரு” என்று அவளின் மேலே தலையணையை எடுத்து தூக்கிப் போட்டிருந்தான்.

“அச்சோ மாமா” என்று தலையை தேய்த்துக்கொண்டே எழுந்தமர்ந்து கண்களை நன்கு விரித்து பார்த்தவள் எட்டி மின்விளக்கினை உயிர்பித்தாள்.

தன் முன் நின்றிருப்பது அஜய் தான்… இது கனவல்ல நிஜமென புரிந்து கொண்டவள் வேகமாக அவனது ஓவியம் மாட்டப்பட்டிருக்கும் சுவற்றை பார்க்க அங்கு அந்த ஓவியம் இல்லை.

அஜய்க்கு புரிந்தாலும் அவன் கண்டுகொள்ளவில்லை.

“நான் மும்பை கிளம்புறேன். திருச்சி போயிட்டு ஃபிளைட். நிகில் வந்து கார் ரிட்டர்ன் பண்ணுவான். கராஜில் நிறுத்திடு. அம்மா தூங்குறாங்க. எழுந்ததும் சொல்லிடு. கண்டதை நினைச்சிட்டு இருக்காமல் ஒழுங்கா படிக்கிற வேலையை பாரு. இப்போ வந்து கேட் அண்ட் டோர் க்ளோஸ் பண்ணிக்கோ” என்று தன்னையே இமைக்காது பார்த்திருந்த அவளின் விழிகளை உள்வாங்கியனாக வேகமாக அனைத்தும் சொல்லி முடித்து நகர்ந்தான்.

அஜய் முன் செல்ல அவனது பின்னால் எழுந்து வந்தவள், அஜய் தன் பையினை எடுக்க நின்ற நொடி அவன் முதுகில் நெற்றி முட்டி நின்றாள்.

“ச்சூ…” என்று அவள் நெற்றியை தேய்க்க…

“கண்ணை மூடிட்டு கனவுலகத்துலே இருந்தா இப்படித்தான்” என்று அவளுக்கு வார்த்தையால் கொட்டு வைத்து நகர்ந்தான்.

“ஃபிளைட் எப்போ?”

“கிளம்பினா சரியா இருக்கும்” என்றவன், கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல, யாழி வேகமாக கிச்சனிற்குள் சென்றாள்.

அவன் வீட்டுக்கு பின்னிருக்கும் கராஜிலிருந்து வண்டியை எடுத்து வெளியில் நிறுத்துவதற்குள், அவனுக்கு மட்டுமான பால் அளவு ஊற்றி வைத்து, இன்ஸ்டன்ட் குளம்பி தூள் கலந்து எடுத்து வந்தாள்.

அஜய்க்கு குளம்பி நீர் என்றால் அத்தனை இஷ்டம். ஒரு நாளுக்கு கணக்கில்லாது பருகுவான். அவன் வேண்டாமென்று மறுக்காது ஏற்றுக் கொள்வது குளம்பி நீராகத்தான் இருக்கும்.

“எவ்ளோ ஃபாஸ்ட்டா போட்ட” எனக் கேட்டவன் மறுக்காது காரில் அமர்ந்திருந்தபடியே வாங்கிக் கொண்டான்.

“தேங்க்ஸ்” என்று குடித்து முடித்து அவளின் கையில் குவளையை வைத்தவன்,

“வெளியில் போனா வீட்டுக்கு நேரத்தில் வந்திடு” என்று சொல்லி காரினை இயக்கினான்.

அஜய் சென்றதும், கதவினை தாழிட்டுவிட்டு வந்து மெத்தையில் அமர்ந்தவளுக்கு கண்களில் நீர் இறங்கியது.

“என்னை பிடிக்கலையா மாமா?” பக்கம் இல்லாதவனிடம் கேட்டு மருகினாள்.

தற்போதைக்கு தன்மீது கோபம் இருந்தாலும், அவன் தன்னை விலக்கி நிறுத்தவில்லை என்பதே அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

சென்று கொண்டிருந்த அஜய்க்கு மனம் முழுக்க யாழினியின் நினைவு தான்.

அஜயால் யாழின் நேசத்தை புரிந்துகொள்ள முடிந்தது. முன்பெல்லாம் காதலை காட்டாது இருந்தவள், காதலை சொல்லிய ஒரு இரவிற்குள் விழிவழி அத்தனை காதலை கொட்டிக் காட்டுகிறாள்.

அவளின் பார்வை ஊடுருவும் மனதை இழுத்து பிடித்து நிறுத்துவதே அவனுக்கு பெரும்பாடாகிறது.

‘ஸ்டெடி அஜய்… இப்படியே போனால் கவுத்திடுவா’ என்று மனம் கூறிய வார்த்தையில் தடுமாறினான்.

“நான் எப்படி அவளை?” அவனுக்கே தனக்குள் சிறு மாற்றத்தை விதைத்துவிட்டாள் என்பது தெரிந்தது.

தான் மறுத்து… தன்னிலை எடுத்துக் கூறிட… அழுது அரற்றி என்னை எத்துக்கோங்க என்று அவள் கெஞ்சியிருந்தால் நிச்சயம் இந்த தடுமாற்றம் அஜய்க்குள் வந்திருக்காது.

தூக்கத்தில் அவளின் பிதற்றலும், ஒற்றை ஓவியமும் தன்மீது அவள் கொண்டுள்ள நேசத்தை அவனுக்கு உணர்த்திட்டது.

தன் கோபம் தெரிந்தும் தனக்காக அமைதியாக அவள் செய்த சின்ன சின்ன விடயங்களும் அவனுக்குள் எதையோ மலர வைத்தது.

அவளின் அகண்ட விழியில் தொலைந்த மாயம். தலையை உலுக்கி, தான் பேசும்போது தன்னையே பார்த்திருந்த அவளின் கூர் விழிகளின் காட்சியை விரட்டி அடித்தான்.

“அஜய்… ஒரு நாள் முழுசா ஆகல. அதுக்குள்ள உள்ள வந்து ஒட்டிகிட்டாள். உஷாரா இரு” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவனின் இதழ்கள் புன்னகையில் நீண்டு விரிந்திருந்தது.

அவள் மீது மாமன் மகள் என்கிற அன்பு, பாசம், அக்கறை நிறையவே இருக்கிறது. அவனுக்காக இப்போதென்றில்லை… அவள் இங்கு வந்தது முதலே, காந்தளுக்கு முன் அவனது தேவைகளை செய்திடுவாள். அஜய் வீட்டிற்கு வர தாமதமானால் யாழி காத்திருப்பாள் அவனுக்காக.

இவையெல்லாம் மாமன் மகள் என்று, தான் அவள் மீது வைத்திருக்கும் அக்கறை போன்று அவளுக்கும் தன் மீது அத்தை மகன் என்கிற அக்கறை என நினைத்திருந்தவனுக்கு இதெல்லாம் காதலால் அவள் செய்தது என்பது எத்தனை கோபத்தை கொடுத்ததோ அதே அளவு மகிழ்வை தற்போது கொடுத்தது.

இரவு தான் சொல்லிய தன்னிலை விளக்கத்தில் அவள் அமைதியாக சென்றது தான் அஜய்யினுள் தாக்கத்தை ஏற்படுத்தியது.

யாழினியை சிறுபெண் என கவனித்திருக்கிறான். ஆனால் ஒருபோதும் மாமன் மகளென்று ரசித்து பார்த்தது இல்லை.

வீட்டில் அனைவருக்கும் குட்டிப்பெண் அவள். அனைவரும் செல்லம் கொடுத்திடும் போது இவனுக்கும் அவளிடம் சிறுமியை அரவணைக்கும் எண்ணம் தான். பெரிய பெண்ணாக தனக்கு உரிமை உள்ளவளாக என்றுமே பார்த்தது இல்லை. அப்படி இருந்தவனை சிறு அமைதியில் சாய்த்திருந்தாள் பெண்ணவள்.

‘அஜய் லவ் வந்திருச்சு போல?’ மனம் கேள்வி கேட்டது.

“தெரியல… பட் என்னை அவள் இவ்ளோ லவ் பண்ணும் போது, எனக்கு மறுக்க எந்த காரணமும் இல்லை. நேற்று கோபத்தில் பெரியதாக தெரிந்த காரணமெல்லாம் இப்போ ஒண்ணுமே இல்லைன்னு தோணுது. மாமாக்கு, அம்மாக்கு தெரிந்தால் கூட, குமரன், நிலா விருப்பம் தெரிந்த போது கொண்ட மகிழ்வைத்தான் இப்பவும் படுவாங்க தோணுது” என்றான்.

கோபமிருந்த இடமெல்லாம் தற்போது யாழ் மீது மெல்லிய ஈர்ப்பு பரவுவதை உணர்ந்தான்.

அதுவும் தான் வண்டியை இயக்கியதும், வாகனம் கண்ணை விட்டு மறையும் வரை அவள் நின்று பார்த்திருப்பதை கண்ணாடி வழி கண்டவனுக்கு, அவள் முகம் காட்டிய ஏக்கம் என்னவோ செய்தது.

வண்டியை நிறுத்தி இறங்கிச்சென்று, ஏக்கம் சுமந்து நிற்கும் முகத்தை தன்னிரு கைகளிலும் ஏந்திகொள்ள வேண்டுமென இதயம் கொண்ட பரபரப்பில் தன் மனதை கண்டு கொண்டிருந்தான். அதன் பின்னரான சுய அலசிலில் அவளிடம் தலைகுப்புற விழுந்துவிட்டோம் என்பது புரிய… மென் முறுவல் அவனிடம் நிலைத்து நின்றது.

“ராட்சசி படுத்துறா.” வாய்விட்டு முனகினான்.

“மும்பை போயிட்டு வந்து உன்னை பார்த்துக்கிறேன்” என்று தன் இதயத்தை நீவிக் கொண்டவனிடம் என்றுமில்லாத வகையில் புதுவகை உல்லாசம்.

‘தூக்கத்தில் முனகியே கவுற வச்சிட்டாள்.’

என்ன தான் யாழியின் மீது காதல் வந்திருந்தாலும், அவளுக்கு முன் எம்பிரானிடம் தன் மனதை முறையாகத் தெரிவித்திட வேண்டுமென முடிவு செய்தான்.

அவன் மீது வைத்துள்ள நம்பிக்கையை அவனால் என்றும் குலைத்திட முடியாது.

நினைப்பது எல்லாம் எளிதில் நடந்திடுமா என்ன?

காதல் என்றாலே வலியை கடந்து தான் சேர வேண்டும் என்பது காலத்தின் நியதி. அஜய், யாழினி மட்டும் விதிவிலக்காக அமைந்திடுவார்களா என்ன?

___________________

பின்னணியில் மெல்லிய இதமான இசை…

வாடை காற்றுக்கு நிகராக மேனி தீண்டும் சில்லிப்பை பூமியில் பரப்பிக் கொண்டு பவனி வந்தது நிலா. புள்ளினங்கள் பால் நிலவை தத்தம் இணையுடன் கூட்டிலும், மரக் கிளைகளிலும் அமர்ந்து ரசித்திட…

சமயலறை பிரெஞ் வகை திறந்தவெளி சன்னல் வழி, அடுப்பில் பாலினை சூடேற்றியாவாறு ரசித்திருந்தாள் பெண்.

“நிலா” என்ற அழைப்போடு உள் நுழையும் கணவனின் குரலில் புன்னகை கொண்டவள், பால் பொங்கும் சத்தத்தில் அடுப்பினை அணைத்து. இரண்டு கோப்பைகளை எடுத்து மேடையில் வைத்தாள்.

“நிலா” என்று கணவன் வீடு முழுவதும் தன்னை அலசும் அரவம் உணர்ந்து மேலும் மென்முறுவல் பூத்தது அவளிடம்.

கணவனுக்கு தன்னிருப்பைக் காட்டிட குரல் எழுப்ப முயன்ற கணம், கையில் வைத்திருந்த குளம்பித்தூள் குப்பியை பார்த்து யோசனையாக கன்னம் வைத்து நாணச் சிரிப்பை உதிர்த்த பேதையவள்,

“இந்த நிலா வாசம் உங்களை உங்க நிலாவிடம் இழுத்து வரும்” என்று சொல்லியவளாக, குப்பியை திறந்து நாசி அருகே வைத்து கண்கள் சுகமாக மூடிட வாசம் செய்தவள், சிறு மேசை கரண்டியால் அள்ளி எடுத்து கோப்பையில் இட்டு, சூடான பாலினை ஊற்றிட கமகமக்கும் வாசனை காற்றின் வழி அவளின் கணவனை சென்றடைந்ததோ!

கூடத்தில் இடையில் கைகள் குற்ற நின்றிருந்தவனின் நாசி வழி நுரையீரல் நிரப்பிய சுவையின் நறுமணம்… தானாக அவனது இமை குடைகள் மூட வைத்து தன்னவளிடம் அவனை அழைத்துச் சென்றது.

“நிலா” என்றவன் மையலோடு மனைவியை பின்னிருந்து அணைத்திட கரம் கோர்க்க இருந்த நொடி, சட்டென்று அவன் புறம் திரும்பி மார்பில் குளம்பி நீர் கோப்பை இடித்து தடுத்திருந்தாள்.

“பர்ஸ்ட், காஃபி” என்றவளிடமிருந்து கோப்பையை வாங்கியவன், ஒரு மிடரு சுவைத்து… மனைவியின் நெற்றி முட்டியவன்,

“வாசனை கட்டிபோடுது” என்றான் மந்தகாசமாய்.

“ஆஹான்…” என்றவள், விழிகளில் காதலை தேக்கி… “எந்த நிலாவை சொல்றீங்க?” என கோப்பையை உயர்த்தி பிடித்து வினவினாள்.

“என் நிலாவை சொல்றேன்” என்றவன், அவளின் இடையில் கையிட்டு நெருக்கமாக இழுத்தவனாக தன் கையிலிருக்கும் கோப்பையை காட்டிட… இருவரிடமும் வெட்கச் சிரிப்பு.

இருவரின் கரமும் உயர்த்தி பிடித்திருந்த கோப்பைக்கு ஜூம் காட்சியாக நிலா குளம்பித்தூள் குப்பி மேடையில் வீற்றிருந்தது.

சன்னல் வழி தெரிந்த நிலவு இருவரின் பின்னணிக்கு அழகு சேர்த்தது.

இருவரும் காட்சியிலிருந்து மெல்ல விலக, நிலவுக்கு இணையாக குளம்பித்தூள் குப்பியும், ஆவி பறக்கும் கோப்பையும் முதன்மையாக காட்சிப்படுத்தப்பட்டது.

“காதலுக்கும் நிலா
காஃபிக்கும் நிலா…” இறுதியாக பிண்ணனிக் குரல் ஒலித்து அந்த விளம்பரம் நிறைவு பெற்றது.

முப்பது நொடி விளம்பரம்… முப்பது முறைக்கு மேல் பார்த்துவிட்டான் அஜய்.

நடிக்கும் போது உணராத நெருக்கம், யாழியிடம் இக்கணம் உணர்ந்தான்.

அதிலும் அவள் இடை வழி முதுகில் கை வைத்து தன் பக்கம் அவளை இழுத்த தருணம், அவளது கண்கள் காட்டும் ஜாலம் அவனால் வெறும் நடிப்பென்று இந்நொடி ஏற்க முடியவில்லை.

“அவ்ளோ காதலா?” நிழல் காட்சிக்கு சுவாசம் தடை கொண்டு தடுமாறினான்.

மும்பை வந்து இரண்டு நாட்கள் ஆகிறது. காந்தளுக்கு மட்டும் ஒருமுறை அழைத்து பேசியிருந்தான்.

யாழினி பற்றி கேட்க துடித்த நாவினை அடக்கி இணைப்பை வைத்திருந்தான்.

சற்று முன்பு தான் வேலை முடித்து ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தான்.

சில நிமிடங்களில் காட்சிகள் தொகுக்கப்பட்ட காணொளியை நிகில் அனுப்பி வைத்தான்.

அஜய் எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பாக வந்தது.

பலமுறை பார்த்துக்கொண்டே இருந்தவனுக்கு யாழிடம் பேச வேண்டுமென மனம் பரபரத்தது. ஏனோ முன்னெப்போதும் தோன்றாத தயக்கம் தற்போது அவனை ஆட்டுவித்தது.

நேரத்தை பார்த்தான்…

“தூங்கியிருப்பாள்.” தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்டான்.

நிகிலுக்கு அழைத்தவன், “யாழி முதுகுக்கு பின்னால் கையிட்டு என் பக்கம் இழுக்கும் சீன் கட் பண்ணிட்டு ரெடி பண்ணுங்க. இன்னும் டென் மினிட்ஸ்… எனக்கு அனுப்பியிருக்கனும்” என்றான்.

“அஜய்… ஹைலைட்டே அந்த சீன் தான்.” நிகில் நீக்க வேண்டாம் என்று கூறினான்.

“நெற்றி முட்டி நிக்கிற சீன்… இதே ஃபீல் தானே… அது மட்டும் போதும்” என்றான் அஜய். அழுத்தமாக.

“அது வந்து அஜய்… அந்த சீன் இன்னும் கொஞ்சம் ஹைப் பண்ணும்” என்ற நிகிலிடம்,

“இது காஃபி பொடி விளம்பரம் தானே?” என்ற அஜய்… “இட்ஸ் டூ பெர்சனல் டா மச்சான்” என்றிருந்தான்.

நிகில் சடுதியில் புரிந்துகொண்டான்.

“மச்சி… சொல்லவே இல்லை.”

அஜய்யிடம் சிரிப்பு மட்டுமே!

“கட் அண்ட் கரெக்ட் பண்ணி அனுப்பு” என்ற அஜய் அதே சிரிப்போடு அலைபேசியை வைத்தான்.

“யாழி… அஜய்யோட பெர்ஸ்னலா?” மடிக்கணினி திரையில் தன்னோடு நெருக்கமாக நின்றிருக்கும் தன்னவளிடம் கேட்டான்.

விளம்பரத்தில் நடிப்பதை மட்டுமே தொழில் துறையாக வைத்திருப்பவர்கள் நடித்திருந்தால், நிச்சயம் அக்காட்சியை அஜய் நீக்க சொல்லியிருக்க மாட்டான். ஏன் எடுக்கும்போது தெரியாத ஒன்று தற்போது பார்க்கும் போது வேறாகக் காட்டுகிறதே. திடீரென அவனது மனதில் நுழைந்துவிட்ட காதல். தனது காதல் தங்களுக்குள் மட்டும் எனும் எண்ணம். அவனை நீக்க வைத்தது.

அரை மணியில் புதிதாக தொகுக்கப்பட்ட காட்சியை நிகில் அனுப்பி வைத்திட,

“பெர்ஃபெக்ட்” என்று பார்த்துவிட்டு நிகிலுக்கு தகவல் அனுப்பினான்.

அடுத்த நொடி, “ரெண்டு நாளுக்கு டிஸ்டர்ப் பண்ணாத மச்சான். தூங்கணும்” என்று பதில் அனுப்பியிருந்தான் நிகில்.

அஜய் வாய்விட்டு சிரித்தான்.

முதலில் தொகுக்கப்பட்ட காட்சியை தனது அலைபேசியில் சேமித்துக் கொண்டு, மடிக்கணினியில் தனியாக பத்திரப்படுத்தியவன்… மறு தொகுப்பு செய்யப்பட்ட காட்சியை போர்டுக்கு அனுப்பி வைத்தான். அங்கிருந்து அனுமதி சான்றிதழ் வந்ததும் தொலைக்காட்சி, ஊடகங்கள் என அனைத்து இடங்களிலும் விளம்பர காட்சியை உபயோகிக்கலாம்.

போர்டிற்கு அனுப்பிய விளம்பர காணொளியை குமரனுக்கும், எம்பிரானுக்கும் அனுப்பி வைத்தான்.

மறுநாள் காலை காணொளியை பார்த்துவிட்டு எம்பிரான் அழைத்திருந்தார்.

“சொல்லுங்க மாமா?” வீடியோவை பார்த்துவிட்டு எதும் சொல்லப் போகிறாரோ என சிறு அச்சம் அஜய்யிடம்.

“உங்களுக்காகன்னு, நீங்க கேட்டு மறுக்க முடியாம சரின்னு சொல்லும் போது கூட கொஞ்சம் நெருடல் இருந்தது அருளு (அஜய்க்கு வீட்டில் வைத்த பெயர்). இப்போ பார்க்கும் போது நல்லயிருக்குப்பா. யாழி குட்டியை நல்லா நடிக்க வச்சிருக்க” என்றார்.

அப்போதுதான் அஜய்க்கு நெஞ்சம் அமைதி கொண்டது.

‘நல்லவேளை அந்த சீன் கட் பண்ணோம்’ என ஆசுவாசமாக எண்ணிக் கொண்டான்.

“இப்போதைக்கு யார்கிட்டவும் காட்ட வேண்டாம் மாமா. போர்ட் அப்ரூவல் வரட்டும். டிவியில் பார்த்துக்கட்டும்” என்றான்.

எம்பிரான் வைத்திட, குமரனின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

பேசியது அஜய்யின் தங்கை வெண்ணிலா.

“அண்ணா ஆட் சூப்பர். மாமா காட்டினாங்க. செமயா இருந்துச்சு விஷுவல்” என்று உற்சாகமாகக் கூறிய வெண்ணிலா, “நிஜமாவே ஆட்’க்காக மட்டும் தானா… இல்லை…” என்று மெல்லிய ஒலியில் இழுத்து சந்தேகமாக வினவினாள்.

“ஹேய்… லாஸ்ட் மினிட் ஆக்டர்ஸ் சொதப்பி, யாழியை நடிக்க வைக்க வேண்டியதாகிப் போச்சு” என்றான்.

“நம்ப முடியலையே தம்பி… காஃபி கப்புக்கு ஈக்வெல்லா உங்க கண்ணு வேற எதோ சொல்லுதே” என்றாள் வெண்ணிலா.

“ஹேய் நிலா… நீ எதும் உளறாதே! தாத்தா, பாட்டி காதில் விழுந்தா என்ன நினைப்பாங்க” என்று அஜய் அதட்டிட …

“உன் அண்ணன் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டான்” என்று குமரன் நிலாவிடமிருந்து அலைபேசியை பறித்து அருளிடம் பேசினான்.

“நல்லாயிருக்கு அருள்” என்றான் குமரன்.

“ம்ம்… மாமாக்கும் அனுப்பினேன். ஓகே சொல்லிட்டார். போர்டுக்கு அனுப்பிட்டேன். இன்னைக்கு ஈவ்வினிங் ஆர் நாளைக்கு ரிசல்ட் வந்திடும். டெலிகாஸ்ட் பண்ணிடலாம்” என்றான்.

“சரிடா… மும்பை போயிருக்கன்னு அத்தை சொன்னாங்க. எப்போ திரும்பி வர?”

“இன்னும் டூ டேஸ் ஆகும் போல குமரா..”

“ஹோ…”

“எதும் முக்கிய விஷயமா?”

“நிலாக்கு சீமந்தம் செய்யனும் பாட்டி சொல்றாங்க. நீ வந்துட்டா நாள் பார்க்கலாம்” என்றான் குமரன்.

“ம்ம்… நாளைக்கே கூட வந்திடுவேன். பேசிக்கலாம்” என்று அஜய் வைத்திட்டான்.

“கண்டிப்பா எதும் இருக்கணும் மாமா” என்றாள் நிலா. தனது ஏழு மாத மேடிட்ட வயிற்றில் கை வைத்து கட்டிலில் அமர்ந்தவளாக.

“இருந்தா தெரியும் தானே! அவங்களே சொல்லுவாங்க. வெயிட் பண்ணுவோம்” என்ற கதிர் குமரன், “உன்னை ஹாஸ்பிடலில் விட்டுட்டு நான் ஆலைக்கு சீக்கிரம் போகணும்” என்றான்.

“அண்ணாக்கும் வயசாகுதே… அத்தைகிட்ட பேசலாம் மாமா. எனக்கு வீடியோ பார்த்ததும், அண்ணாவும் யாழி குட்டியும் செம பேர் அப்படின்னு தோணுது. நல்ல ஜோடி பொருத்தம்” என்றாள் வெண்ணிலா.

“அவங்க ரெண்டு பேருக்குள்ளும் என்ன இருக்குன்னு தெரியாம நீயா எதும் கற்பனை பண்ணிக்காத அம்மாடி… சித்தி, சித்தப்பா விருப்பம் இதில் முக்கியம்” என்றான்.

“புரியுது மாமா” என்றவள் கதிர் குமரனின் கன்னம் கிள்ளி முத்தம் வைக்க…

“நீ எதுக்கு அடி போடுற தெரியுது. கிளம்பு, கிளம்பு” என அவளை விரட்டினான்.

“நீங்களா கேட்பீங்கல… அப்போ வசிக்கிறேன்” என்று முறைத்த நிலாவின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து நொடியில் அவளை கணவனாக சமாதானம் செய்திருந்தான் கதிர்.

கதிர் வெண்ணிலாவை, அங்கேயே மலையில் வேலை செய்யும் மருத்துவமனையில் விட்டுவிட்டு கீழே ஆலைக்கு வந்து சேர்ந்தான்.

கதிர் குமரன் வெண்ணிலா வாழ்வு தெளிந்த நதியாக சந்தோஷமாக இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது.

குமரனுக்கு என்றும் குடும்பத்தின் மகிழ்வு தான் முக்கியம். இந்த அமைதி, மகிழ்வு எல்லாம் அஜய், யாழினியின் காதலால் காணாமல் போக இருக்கிறது.

சொல்லியது போல் அஜய் மும்பை சென்ற வேலையை முடித்துக்கொண்டு நள்ளிரவில் சேலம் வந்து சேர்ந்தான்.

திருச்சியிலிருந்து குணா தான் அழைத்து வந்திருந்தான்.

அஜய்யை வீட்டு வாயிலில் இறக்கி விட்ட குணா… காரிலிருந்து இறங்காது அப்படியே செல்ல முயல,

“வீட்டுக்கு வாடா! காலையில் போகலாம்” என அழைத்தான் அஜய்.

“இல்லடா… உன்னை பிக்கப் பண்ணதான் வந்தேன். மதிகிட்ட எவ்ளோ நேரமானாலும் வந்துடுறேன் சொல்லியிருக்கேன். வெயிட் பண்ணுவாள்” என்று சென்றுவிட்டான்.

வாயிலில் நின்று யாழிக்கு அழைத்தான்.

அவனுக்காகவே காத்திருந்தது போன்று ஒரு ஒலியிலேயே அழைப்பை துண்டித்து வேகமாக வந்து கதவினை திறந்திருந்தாள்.

காதலை உணர்ந்து நான்கு நாட்களுக்குப் பின்னர் தன்னவளை காண்கிறான்.

யாழின் கண்களில் அவனுக்கான தேடல் அப்பட்டமாகத் தெரிந்தது.

‘ரொம்ப தேடியிருக்கா!’ அவனுள் சில்லென்று எதோ பாய்ந்தது.

முயன்று முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டான்.

“இப்படியே நின்னா எப்படி உள்ள வரது?”

“சாரி… சாரி” என்று நகர்ந்து நின்றாள்.

இடமிருந்தும் வேண்டுமென்றே தன் தோள் அவள் மேல் உரச உள் நுழைந்தான்.

அவள் எதையும் உணரும் நிலையில் இல்லை. நான்கு நாட்கள் தவிப்பை மொத்தமாக போக்கும் எண்ணத்தில் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.

 

Epi 4 link

நீதான் என் காதல் மழை 4

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
42
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்