Loading

நீதான் என் காதல் மழை 2

“ஓகேவா?”

எடுத்த காட்சிகளை அஜய் மானிட்டரில் ஓட்டி பார்த்துக் கொண்டிருக்க, அவனுக்கு பின்னால் படபடப்புடன் கேட்டிருந்தாள் யாழினி.

“ம்ம்… பக்கா” என்ற அஜய், “குட்டி குட்டி எக்ஸ்பிரஷன்ஸ் க்யூட்டா கொடுத்திருக்க யாழ். அதுவும் லாஸ்ட் ஐ காண்டாக்ட் செம போ” என்றான்.

“சும்மா சொல்லாதீங்க.” யாழினியால் அஜய் பாராட்டுவதை நம்ப முடியவில்லை.

“நிஜமாவா?”

“அவன் அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்ட மாட்டான். நம்பும்மா” என்றான் நிகில்.

அஜய் நிகிலை முறைக்க…

“அம் எஸ்கேப்” என்று இரு கைகளையும் மேலே உயர்த்தியவனாக நிகில் நகர்ந்தான்.

“டூ டேஸ் இங்க இருக்கமாட்டேன் நிகில். பார்த்துக்கோ!” என்றான் அஜய்.

“ஓகே அஜய்” என்று நிக்கிலின் சத்தம் மட்டும் வந்தது.

“சரி நீ வீட்டுக்கு கிளம்பு. நான் வரேன்” என்ற அஜய் நேரத்தை பார்க்க ஆறு ஆக சில நிமிடங்கள் இருந்தது.

“டூ மினிட்ஸ் நானும் வரேன்” என்ற அஜய்… எடுத்த காட்சிகளை தனியாக பத்திரப்படுத்தி, முக்கியமானவற்றை எடுத்து வைத்துவிட்டு அவளுடன் கிளம்பியிருந்தான்.

“உன்னோட ஸ்கூட்டி?” அஜய் தனது வண்டியில் அமர்ந்தவனாக அவளிடம் வினவினான்.

அவளுக்கு அவனுடன் போக விருப்பம் தான். ஆனால் அவன் இப்படி கேட்கும்போது அவள் என்ன சொல்வாள்.

“நான் என்னோடதிலே வரேன்” என்று முன் சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும் அஜய்க்கு தேநீர் போட்டு கொடுத்தாள்.

“அத்தை வரல போல… நைட்டுக்கு உங்களுக்கு என்ன செய்யட்டும்?” என்றாள்.

“நீ கிளம்பி வா… வெளியில் போய் சாப்பிடுவோம்” என்றான் அஜய்.

அவன் சொல்லியதை அவளால் நம்பவே முடியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அங்கிருக்கிறாள். ஒரு நாள் அவளை வெளியில் உடன் அழைத்துச் சென்றதில்லை. மலைக்கு செல்வதாக இருந்தாலும், குமரனோ குணாவோ வந்து தான் அழைத்துச் செல்வர். 

அப்படியிருக்கையில் அவன் வெளியில் சென்று வருவோம் என்றால் எப்படி அவளால் நம்ப முடியும்.

“என்ன ஷாக் ஆகி நிக்குற?”

“நம்ப முடியல… அதான்.” மனதில் இருந்த உண்மையைக் கூறினாள்.

“ஹோ…” என்ற அஜய், “நீ என் தாய் மாமா பொண்ணு. நம்பி விட்டாங்க. எப்பவும் சேர்ந்து சுத்திட்டு இருக்குங்கன்னு யாரும் தப்பா பேசிடக் கூடாதுல்ல… அதுக்குத்தான்” என்று விளக்கம் அளித்தான்.

இப்படி அவன் விளக்கம் கொடுப்பதும் புதிது.

“இப்போ ஒண்ணா போனா தப்பா நினைக்க மாட்டாங்களா?”

“சேட்டை… சரி போக வேணாம்” என்று அவன் மாடியேறிட…

“அச்சோ போகலாம். நான் சமைச்சு, நீங்க சாப்பிட்டு… உங்களுக்கு எதும் ஆகிடுச்சுன்னா?” என்றாள். அவசரமாக.

“குக் பண்ண தெரியாதா?”

யாழி திருட்டு விழி விழித்தாள்.

“அப்போ தெரியாம தான் என்ன சமைக்கட்டும் கேட்டியா நீ?” என்ற அஜய், “நல்லவேளை கிரேட் எஸ்கேப்” என்றதோடு, “டென் மினிட்ஸ்… சீக்கிரம் கிளம்பி வா பார்ப்போம்” என்று படிகளில் தாவி ஏறியிருந்தான்.

அடுத்த கால் மணி நேரத்தில் வீட்டை விட்டு கிளம்பியிருந்தனர்.

“ரொம்ப டயர்டா தெரியுற!”, அஜய்.

“ஷூட்ல நின்னுட்டே இருந்ததால் இருக்கும்” என்றாள்.

“ம்ம்…” அதற்கு மேல் இருவருக்கும் என்ன பேச வேண்டுமென தெரியவில்லை. காருக்குள் ஆழ்ந்த அமைதி.

அஜய் லாவகமாக காரினை ஓட்டுவதை சிறிது நேரம் பார்த்தபடி இருந்தவள், அவன் தன்புறம் திரும்பவும், சன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

அவனும் சாலையில் கவனமானான்.

“சாங் போட்டுக்கவா?”, யாழினி.

“ம்ம்…”

மெல்லிய இசை ஒலித்திட, பழக்கப்படாத வேலையின் சோர்வு வெகு விரைவிலேயே அவளை உறக்கத்தில் ஆழ்த்தியது.

அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதும், வண்டியை நிறுத்தி இருக்கையை சாய்வாக தளர்த்தியவன், குளிரை மிதமாக வைத்து செலுத்த ஆரம்பித்தான்.

வரவேண்டிய இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்தான்.

வண்டி நின்ற பின்னும் அவள் எழவில்லை.

“யாழ்…” இரண்டு முறை மெல்ல அழைத்தவன் அவளிடம் அசைவு இல்லையென்றதும், “யாழ்” என தோள் தொட்டு உலுக்கினான்.

பதறி கண் திறந்த யாழினி,

“வந்தாச்சா?” என்று பார்வையை வெளியில் பதிக்க…

“இது என்ன புது இடம் மாதிரி இருக்கு” எனக் கேட்டு அவனை ஏறிட்டாள்.

“சரியா பாரு” என்று அஜய் வெளியில் சுட்டிக் காண்பிக்க…

அங்கு வைக்கப்பட்டிருந்த ஃபிலக்ஸினை கண்டு யாழினி விழி விரித்தாள்.

“மேட்டூர் வந்திருக்கோமா?”

“ம்ம்…”

“டைம் என்ன?” என்று அஜய்யின் கையை பிடித்து திருப்பி கைகடிகாரத்தில் நேரத்தை பார்த்தவள், “தேங்க்ஸ்… தேங்க்ஸ் மாமா” என்று துள்ளலாக வண்டியிலிருந்து இறங்கியிருந்தாள்.

அவளது தோழியின் வரவேற்பு நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்திருந்தான்.

முதல் முறை யாழினி மாமா என்று சொல்லிக் கேட்கிறான். அவனின் இதழில் முறுவல். மெல்ல நீண்டு விரிந்தது.

தன்னை மற்றவர்களிடம் அடையாளப்படுத்தும் போது… நிக்கிலிடம் கூறும்போது கூட மாமா என்று சொல்லி கேட்டிருக்கிறான். ஆனால் தன் முகம் பார்த்து இன்று தான் சொல்லியிருக்கிறாள். அதுவும் அவளை அறியாது.

சிறு வயதிலிருந்து உறவுகளிடமிருந்து தள்ளி இருந்தவன். இப்போது ஐந்து வருடங்களாகத்தான் சொந்த வீட்டிலேயே இருக்கிறான். அப்படியிருக்கையில் யாழினி தன்னை உறவுமுறை சொல்லி அழைக்க வேண்டுமென்றெல்லாம் அஜய் நினைத்தது இல்லை. ஆனால் இன்று அந்த அழைப்பு அவனுக்கு மகிழ்வை கொடுத்தது உண்மை.

(சிறு வயதில் குமரனுக்கு வீட்டினர் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்ற கோபத்தால் உறவுகளிடமிருந்து தள்ளி நின்றிருந்தான்.)

தனக்கான உறவை முறையாக அவள் கொடுத்திட்ட மகிழ்வு. அவ்வளவே! வெண்ணிலா அண்ணா என அழைக்கும் போது தோன்றும் இதமே… யாழினி மாமா என அழைத்ததிலும் உணர்ந்தான். அதைத்தாண்டி வேறெந்த எண்ணமும் அவனிடத்தில் இல்லை.

சிறு பெண்… மாமனின் மகள் என்பதே அவன் கொண்ட அன்பு, பாசத்திற்கு காரணம்.

ஆனால் அவளும் அந்த எல்லைக்குள் இருந்திடுவாளா என்ன?

வண்டியிலிருந்து இறங்கி இரண்டடி முன் சென்ற பின்பே தலையில் தட்டிக் கொண்டவளாக திரும்பி வந்து, “நீங்களும் வாங்க” என அழைத்திருந்தாள்.

“எனக்கு யாரையும் தெரியாது. நான் வந்து என்ன பண்ண?” என்ற அஜய், “நான் வந்தா, நீ உன் ஃப்ரெண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ண மாட்ட… என்னையே கவனிச்சிட்டு இருப்ப. நீ போயிட்டு வா. நான் வெயிட் பண்றேன்” என்றதோடு அவளது கையில் பரிசுப் பொருளையும் கொடுத்தான்.

“நான் மறந்தே போயிட்டேன்” என வாங்கிக்கொண்ட யாழினி, “போக வேணாம் சொன்னீங்க?” எனக் கேட்டாள்.

“எனக்காக நடிச்செல்லாம் கொடுத்திருக்க… சோ, சின்னதா காம்பிளிமெண்ட்” என்றான்.

“இப்படி டிரைவர் வேலை பாக்குறதா?”

“ஏய்…”

“சாரி… சாரி…”

“தனியா அனுப்ப விருப்பமில்லை. அன் டைம் ரிட்டர்ன் ஆகணும். நானே கூட்டிட்டு வரலான்னு முன்னவே நினைச்சிருந்தேன்” என்று தோள்களை உயர்த்தி இறக்கினான்.

“தேங்க்ஸ்” என்று அவள் சொல்லிட, அவளை கவனித்து அவளது தோழி அருகில் வந்தாள்.

“ஓகே… நீ கிளம்பு. நான் அப்படியே இங்கவே கொஞ்ச நேரம் தூங்குறேன்” என்ற அஜய், யாழினி தோழியுடன் சென்றதும், வண்டியின் கண்ணாடி எல்லாம் ஏற்றிவிட்டு குளிரூட்டியை இயக்கி இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

அவனுக்கும் அன்றைய நாளுக்கான வேலைப்பளு மற்றும் ஒரு மணி நேரம் கார் ஓட்டி வந்தது சோர்வைக் கொடுத்திருந்தது.

‘என்னடா புதுசா என்னென்னவோ பன்ற?’ அஜய்யின் மனதின் கேள்வி.

எப்போதும் தள்ளியே இருப்பவன். இன்று அவளிடம் ஒரே நாளில் அதிகம் நெருங்கிவிட்டது போல் தோன்றியது.

விளம்பரத்திற்கு காட்சிப்படுத்தும் போது கூட அவனுள் வியப்பு தான். அவள் கண்கள் காதலை காட்டிட, முதல் முறையே நன்றாக செய்கிறாள் என்று. 

ஆனால் அவளின் உண்மை மனம் இன்று இதனை காரணம் வைத்து வெளிப்படுத்தியிருக்கிறாள் என்று அவனுக்குத் தெரியவில்லை.

ஒருநாள் ஒரு நொடி யாழினி தன்னை அதிகப்படியாக பார்த்து அஜய் கண்டதில்லை. அதனால் அவனால் அது நடிப்பிற்காக கொண்டு வந்த பாவனை என்றே எண்ண வைத்தது.

“நைட் டைம் தனியா அனுப்ப பயம். அதான் நானே கூட்டி வந்தேன்” என்று மனதிற்கு பதில் வழங்கினான். அது உண்மையும் கூட.

ஆனால் அவன் மீது காதல் வைத்துள்ள யாழினிக்குத்தான் அவனது புதிதான செயல்கள் காலுக்கு இறக்கை முளைத்து பறக்கச் சொல்லியது.

உள்ளே சென்ற யாழினி நண்பர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, மேடையேறி பரிசினை கொடுத்துவிட்டு விரைவாகவே கிளம்பிவிட்டாள்.

அஜய் சற்று நேரத்தில் உறங்கியும் இருக்க… அலைபேசி ஒலித்தது.

சத்தத்தில் கண் விழித்த அஜய் தன்னுடையது இல்லையென ஆராய, காரின் டேஷ்போர்டில் யாழினியின் அலைபேசி இசைத்துக் கொண்டிருந்தது.

“ஃபையர்🔥” என்று தீயின் எமோஜியுடன் திரையில் மின்ன…

‘யாருடா அது?’ என்று ஏற்றிருந்தான்.

காந்தள் தான் அழைத்திருந்தார்.

“எங்க யாழி இருக்க? வீட்டில் ஆள காணோம்.”

‘அடிப்பாவி அம்மா பேரைத்தான் இப்படி வச்சிருக்கியா?’ என உள்ளுக்குள் சிரித்த அஜய், “அவளை கூட்டிட்டு மேட்டூர் வந்திருக்கேன் ம்மா. நீங்க மார்னிங் தான் வருவீங்கன்னு நினைச்சேன்” என்றான்.

“எதோ லோட் ஏத்தனும் குமரன் கீழ வந்தான். நானும் வந்துட்டேன்” என்ற காந்தள் “பார்த்து வாங்க” என வைத்துவிட்டார்.

பேசி முடித்து அலைபேசியை வைக்க முயன்ற அஜய்க்குள் தன்னுடைய பெயரை எப்படி சேவ் பண்ணி வச்சிருக்காள் பார்ப்போம் என்று தன்னுடைய அலைபேசியிலிருந்து அழைத்து பார்க்க…

“மிர்ச்சி🌶️” என சிவப்பு நிற மிளகாய் எமோஜியுடன் ஒளிர்ந்தது.

காலையில் தன்னை அவள் மிளகாய் என்று குறிப்பிட்டதும் நினைவு வர, சிரித்துக்கொண்டான்.

‘அவ்வளவுக்கா ஹார்ஷா அவகிட்ட நடந்துகிறோம்’ என நினைத்தவன், அவளது அலைபேசியில் அடுத்தடுத்த பெயர்களை நகர்த்த, தங்களது வீட்டு ஆட்களின் பெயர் மட்டும் இதுபோன்று விருப்பப்பட்ட பெயரில் பதிந்து வைத்திருக்கிறாள் என்று தெரிந்தது. 

திரையை மூடி வெளியில் வரும் போது தான் கவனித்தான், மொத்த குடும்பமும் ஒரே காட்சியில் இருக்கும் புகைப்படத்தை வைத்திருந்தாள்.

அதில் அவன் அருகில் அவள் நின்றிருப்பாள். அதற்காக வைத்திருக்கிறாள் என்று அவனுக்கு தெரியாது போனது.

அஜய் வெளியில் ஏறிட, யாழினி உள்ளிருந்து வெளியில் வருவதும், அவள் பின்னே ஒரு பையன் ஓடி வந்து என்னவோ சொல்வதும், அதற்கு அவள் பதிலேதும் சொல்லாது, தன்னை நோக்கி அழைத்து வருவதும் அஜய்க்கு தெரிந்தது.

யாழி அருகில் வருவதற்கு முன் கீழிறங்கி நின்றான்.

“முடிஞ்சுதா… சீக்கிரம் வந்துட்ட?” அஜய் கேட்டிட, அதற்கு பதில் சொல்லாத யாழினி,

“என் கிளாஸ்மெட் ஹரிநாத்” என தன்னுடன் வந்தவனை அறிமுகம் செய்து வைத்தாள்.

அஜய், “ஹாய்” என புன்னகைக்க…

“என்னோட மாமா. தெரியும்ல உனக்கு?” என்று ஹரிநாத்திடம் கேட்ட யாழினி, “இவங்களைதான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்” என்று சொல்ல, ஹரிநாத் விட அஜய்க்கு உச்சக்கட்ட அதிர்வு.

_____________________________

“அச்சோ மாமா… எதுக்கு இவ்வளவு வேகமா போறீங்க… மெதுவா போங்க மாமா!”

இருக்கை பட்டை அணிந்திருந்த போதும், அஜய் வண்டியை செலுத்தும் வேகத்திற்கு யாழினி இருபக்கமும் ஆடினாள்.

மொத்த சீற்றத்தையும் வண்டியை செலுத்தும் வேகத்தில் காட்டினான் அஜய்.

ஹரிநாத்திடம் அவள் சொல்லிய வார்த்தைகளை அவனால் ஏற்கவே முடியவில்லை.

யாழினியிடம் ஹரிநாத் காதலை சொல்லியிருக்க, ஆமா இல்லையென சொல்வதைவிட்டு இதென்ன பதில் என்று அப்போதே எழுந்த கோபத்தை அவன் முன்னிலையில் காட்டிடக் கூடாதென பொறுமையை இழுத்து பிடித்து நின்றிருந்தான் அஜய்.

“உன்னை கஷ்டப்படுத்தனும் நினைச்சு சொல்லல… உண்மை தெரிஞ்சா என்னைக்காவது நான் எஸ் சொல்லுவேங்கிற நம்பிக்கை உனக்கு இருக்காதுல… அதுக்குத்தான்” என்றாள்.

“சாரி… சாரி…” என்று அஜய்யிடமும் மன்னிப்பு வேண்டி ஹரிநாத் சென்றுவிட்டான்.

“எதுக்கு இப்படியொரு பொய் சொன்ன?”

வண்டியில் ஏறி அமர முற்பட்ட யாழினி, ஒரு நொடி நின்று ஏறி அமர்ந்தாள்.

“ஷிட்…” என்று தரையில் காலினை உதைத்த அஜய், வேகமாக மறுபுறம் வந்து ஏறி அமர்ந்தான்.

“அவன் புரோபோஸ் பன்றான்னா… திரும்பத் தொல்லை பண்ணுவான்னு தோனுச்சுன்னா, இப்போ நான் உன்னோட தானே இருக்கேன். இப்படின்னு என்கிட்ட சொல்லியிருந்தா, திரும்ப அவன் உன் பக்கம் வர முடியாத அளவுக்கு எதுவும் செய்திருப்பேன். அதுக்காக இப்படியொரு பொய் சொல்லுவியா நீ?” என்று பற்களைக் கடித்துக்கொண்டு அவளிடம் சீரிய அஜய், ஸ்டீயரிங்கில் கையை வேகமாக குத்தினான்.

அவளிடம் எப்போதும் அவன் காட்டும் முகம் உர்ரென்று தான் இருக்கும். இன்று அதில் அத்தனை ஆக்ரோஷம். செந்தணலாக கோபம் கொப்பளித்தது.

“மிர்ச்சி காரம்… மிளகாய்” என்று மெல்ல முணுமுணுத்து மூச்சினை இழுத்து வெளியிட்ட யாழினி அஜய்யை பக்கவாட்டாக திரும்பி பார்த்தாள்.

“என்ன பார்வை?” என்று சிடுசிடுத்த அஜய், “நீ எனக்கு… என் கண்ணுக்கு ஐந்து வருஷத்துக்கு முன்ன, தாத்தா பாட்டி சதாபிஷேகத்தில் சட்டை பாவாடையில் பார்த்த குட்டி பொண்ணா தான் தெரியிற… கூடவே இருக்கிறதால நீ வளர்ந்துட்டங்கிற ஃபீல் எனக்கு வரவே இல்லை” எனக்கூறி, “எதுக்கு அப்படி பொய் சொன்ன?” என மீண்டும் கேட்டான்.

“யார் பொய் சொன்னாங்க?”

அஜய் நேரெதிர் பார்த்திருக்க, அவனது முகத்தை பக்கவாட்டாக பார்த்து, அழுத்தமாக சட்டென்று கேட்டிருந்தாள்.

வேகமாக அவளை திரும்பி பார்த்தவனின் கண்களில் அத்தனை அதிர்ச்சி. அவனது கை விரல்கள் ஸ்டியரிங்கை, நரம்புகள் மேலெழும்ப இறுகப்பற்றியது.

“நான் உண்மையை தான் சொன்னேன். உங்களை ரொம்ப பிடிக்கும். எந்தளவுக்குன்னு கேட்டிங்கன்னா… இங்க உங்க உயிர் வர அளவுக்கு” என்று தன் வயிற்றில் கை வைத்து காண்பித்தாள்.

அஜய் மீது காதல் மட்டும் என்றால் ஐ லவ் யூ என்று சொல்லியிருப்பாள்… அவளுக்கு அவன் மீது காதலை கடந்த நேசம்… எல்லையின்றி பரந்து விரிந்து இதயத்தை ஆக்கிரமித்துள்ளது. இதைவிட வெறெப்படி தன் நேசத்தின் ஆழத்தை வெளிக்காட்டிட முடியும்.

நச்சென்று சொல்லிவிட்டாள்.

அந்நொடி முகத்தை திருப்பி வண்டியை இயக்கியவனின் கோபம் அடங்க மறுத்து காட்டாறாய் பொங்கி வழிகிறது.

“மாமா பயமா இருக்கு… எதுக்கு இப்படி டிரைவ் பண்றீங்க?”

வீட்டிற்கு வரும் வரை அஜய் ஒரு வார்த்தை பேசவில்லை. சென்ற தூரத்தை பாதி மணியில் நிரப்பியிருந்தான்.

வண்டியை விட்டு இறங்கிய யாழினி நெஞ்சில் கை வைத்தபடி இரும்பினாள்.

இறங்கி கதவினை அறைந்து மூடிய அஜய் அவளை தாண்டிகொண்டு வேக எட்டுக்கள் வைத்து செல்ல…

“நில்லுங்க மாமா!” என்றாள்.

அவ்வளவு தான் அவனது மொத்த பொறுமையும் காணாமல் போயிருந்தது.

“ஏய்” என்று தீ பார்வையுடன் திரும்பி அவளை நடுங்க வைத்தவன், “இத்தனை வருஷம் கூப்பிடாம தானே இருந்த… இன்னைக்கு என்ன?” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

“என் விருப்பத்தை சொல்லும்வரை சொல்லக்கூடாது நினைச்சிருந்தேன்… உங்களை மாமா சொல்லும்போது மொத்தமா நான் தொலைஞ்சு போயிடுற ஃபீல்… அதான் கல்யாணத்துக்கு அப்புறம் கூப்பிட்டுக்கலான்னு இருந்தேன். இப்போதான் சொல்லியாச்சே… இனி எதுக்கு அடக்கி வைக்கணும்” என்றாள்.

“சப்புன்னு அறையனும் தோணுது” என்று தன் கன்னத்தில் அறைந்து கொண்ட அஜய்… “இனி என் கண்ணு முன்ன வந்துடாதே” என்று வீட்டு கதவின் முன் நின்று “அம்மா” என உரக்க அழைத்து வேகமாகத் தட்டினான்.

“மாமா ஏன் இவ்ளோ வேகமாத் தட்டுறீங்க? அத்தை தூங்கியிருப்பாங்க… தூக்கத்தில் என்னவோ ஏதோன்னு பயப்படுவாங்க” என்று அவனின் அருகில் சென்று கையினை தடுத்து பிடித்தாள்.

“ம்ப்ச்…” அவளின் கையை வேகமாக உதறித் தள்ளினான்.

“கொன்னுடுவேன் உன்னை” என்று ஒற்றை விரல் காட்டி மிரட்டியவன்,

கதவினை திறந்து, “எதுக்குடா இந்த தட்டு தட்டுற… கால் பண்ண வேண்டியது தானே” என கேட்ட காந்தளை கண்டுகொள்ளாது விடுவிடுவென உள் சென்று மாடியேறி மறைந்தான்.

“என்னாச்சு இவனுக்கு?”

காந்தள், யாழியிடம் வினவினார்.

“வர வழியில உங்க பையனை மோகினி அடிச்சிடுச்சு” என்று பதில் சொல்லியபடி யாழி உள்ளே நுழைய,

“நீ இருக்கும்போதேவா?” எனக் கேட்டு அவளை வாரியிருந்தார் காந்தள்.

“அத்தை… கிண்டலா?” இடுப்பில் கை வைத்து முறைத்து அவள் கேட்க,

“நீ என் அண்ணன் பெத்த முத்துமணி ராசாத்தி” என்று அவளின் கன்னம் வழித்து, உதட்டில் ஒற்றிக் கொண்டார்.

அவளும் அவர் கன்னத்தில் முத்தம் வைத்து கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.

இருந்த கோபத்தில் அலைபேசியை காரிலேயே வைத்துவிட்டு வந்திருந்த அஜய் எடுக்க கீழே வர… இந்த காட்சியை கண்டு மேலும் கோபம் கொண்டான்.

“நல்லா ஐஸ் வைக்கிறா” என்று முனகியவன், “தூங்கலையா நீங்க?” என அதட்டலாகக் கேட்டான்.

“அதுக்கு ஏன்டா இந்த கத்து கத்துற?” என்ற காந்தள், “எனக்கும் மலைக்கு ஏறி இறங்கினதுல உடல் அசதியா இருக்கு. தூங்குறேன். படுத்தா சீக்கிரம் எழுவனா தெரியல” என்று யாழியிடம் சொல்லியவராக தனது அறைக்குள் சென்று கதவடைத்தார்.

வெளியில் சென்று காரிலிருந்து தன்னுடைய அலைபேசியை எடுத்து வந்த அஜய், நின்றிருந்த யாழினியை கண்டுகொள்ளாது… கதவினை மூடி தாழிட்டு, விளக்குகளை அணைத்து மாடி ஏறிவிட்டான்.

‘ரொம்ப கோபமா இருக்காங்க போல’ என நினைத்தவள் மீண்டும் விளக்கினை உயிர்ப்பித்து சமையலறை நுழைந்தாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் அவனுக்கு பிடித்த பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிதளவு தேன் கலந்து, கண்ணாடி குவளையில் பால் நிரப்பி எடுத்துக்கொண்டு மாடி ஏறினாள்.

அஜய்யின் கோபம் தெரியும். மொத்த குடும்பமும் அறிந்தது. அந்த கோபத்தில் தான் அவன் குடும்பத்தை விட்டு தனித்திருந்தான் என்பதும் தெரியும். 

*(குமரன் மீதான கோபத்தால், அவனுடன் வெண்ணிலா நெருக்கமாக இருக்கிறாள் என்று, அறியாத வயதில் கோபம் கண்ணை மறைக்க, விளையாடிக் கொண்டிருந்த போது வெண்ணிலாவை கிணற்றில் தள்ளியிருந்தான். தள்ளிய பின்பு நிலைமை புரிந்து, குமரனுடன் சேர்ந்து தங்கையை காப்பாற்றியிருந்தான். இருவரும் யாரிடமும் இதுவரை இதனை சொன்னதில்லை. செய்த செயலின் குற்றவுணர்வாலே குடும்பத்தை விட்டு தள்ளியிருந்தான் அஜய். ஐந்து வருடங்களுக்கு முன்பு வீட்டில் நடைபெற்ற தாத்தா பாட்டி சதாபிஷேகத்தில் தான் குமரன் அஜய்யை குடும்பத்துடன் சேர்த்திருந்தான்.)

ஆனால் இன்று தான் அவனின் கோபத்தின் அளவை நேரில் காண்கிறாள். உள்ளுக்குள் அதிர்வாக இருந்தாலும் காட்டிக்கொள்ளாது தன்னுடைய காதலுக்காக திடமாக அவனை எதிர்கொள்ளும் முடிவில் இருக்கின்றாள்.

“சிங்கம் கடிக்கும்ன்னு தெரிஞ்சே போறேன்… காப்பாத்து ஆண்டவா” என்று உலகின் அனைத்து தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்தவளாக மேல் தளம் வந்து சேர்ந்தாள்.

முதலில் வெண்ணிலாவின் அறை. அது தற்போது பூட்டியிருந்தது. அவள் வரும் நேரங்களில் உபயோகிக்க, காந்தள் வாரம் ஒருமுறை சுத்தம் செய்து வைப்பார். வேலை விடயமாக குமரன் இரவு நேரங்களில் ஆலையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், இங்கு வந்து நிலாவின் அறையில் தங்கிச் செல்வான்.

அவ்வறைக்கு நேரெதிர் அஜய்யின் அறை. நடுவில் சிறு கூடம். இவ்விரு அறைக்கும் பக்கவாட்டு வெளியில் மீதமிருக்கும் களம் மொட்டைமாடி.

அஜய்யின் அறை திறந்திருந்தது.

மெல்ல எட்டிப்பார்க்க அஜய் அங்கில்லை.

கூடத்தில் நின்று வெளியில் பார்க்க, மொட்டைமாடி பக்கச் சுவற்றில் கைகளை பதித்து நின்றிருந்தான்.

நிலவின் ஒளியில் நன்கு வெளிச்சமாகவே இருந்தது.

மெல்ல அவனருகில் சென்ற யாழினி, இரண்டடி தொலைவில் நின்றுகொண்டாள்.

“மாமா…”

“உன்னை அப்படி கூப்பிடாதன்னு சொன்னேன்.” திரும்பி பார்த்திடாது கர்ஜித்தான்.

“எனக்கு உரிமை இல்லையா மாமா?”

“இல்லடி.” என்று கத்தியவனின் குரலில் தானாக இரண்டடி பின் நகர்ந்திருந்தாள்.

“எதுக்கு மாமா இவ்வளவு கோபம்?”

“உனக்கு தெரியாதா?” எனக் கேட்டவன், “அஜய் அப்படின்னாலே அன்பு, பாசம் கிடையாது. வீம்பு பிடிச்சவன். அந்த வீம்புக்காக குடும்பத்தை கூட விட்டு இருந்தவன் அப்படிங்கிற ஹேஷ் டாக் இப்போ தான் ரிமூவ் ஆகியிருக்கு. இப்போ தான் நம்ம வீட்டுல இருக்கவங்களே அஜய் சொன்னா சரியா இருக்கும். எது செய்தாலும் அஜய் கேட்டு செய்யுங்கன்னு சொல்ற அளவுக்கு மாறியிருக்கு. இப்போ நீ சொன்னது தெரிஞ்சா… சின்னபொண்ணு மனசை களைச்சிட்டான்… இதுக்குதான் அப்போவே ஒரே வீட்டில் தங்க வைக்காதீங்க சொன்னோம்… அப்படி இப்படின்னு பேசுவாங்களே, மொத்தமா என்னை டேமேஜ் பண்ணுவாங்க… மாமா என்ன நினைப்பார்? என்னை நம்பி உன்னை இங்கு தங்க வச்சார். அவருக்கு நான் என்ன பதில் சொல்வேன். அவளை படிக்கத்தான் இங்கவிட்டேன் அப்படின்னு ஒரு வார்த்தை மாமா சொல்லிட்டா, நான் மொத்தமா செத்திடுவேன்…” என்றவனை வேகமாக நெருங்கி அவனது வாயில் கை வைத்து, இதுபோல் சொல்ல வேண்டாமென இருபக்கமும் தலையசைத்தவளின் கையை தட்டிவிட்ட அஜய்…

“எல்லாரும் இருந்தும் யாருமே இல்லாத மாதிரி தனியா இருந்திருக்கியா நீ? பாசத்துக்கு ஏங்கி நின்னிருக்கியா? சொல்லி அழக் கூட ஆளில்லாம தவிச்சிருக்கியா நீ?” என வலி நிறைந்த குரலில் கேட்டவன், “வீம்புக்காகன்னாலும், இதையெல்லாம் அனுபவிச்சிருக்கேன். நரகம் அது. இப்போ தான் குடும்பம் அப்படின்னா என்னன்னு தெரிஞ்சு சந்தோஷமா இருக்கேன். திரும்ப எல்லாரும் ஒதுக்கி வைக்கிற வலி எனக்கு வேண்டாம்” என்று மொத்தமாக உடைந்திருந்தான்.

எப்போதும் கடுமையான தோற்றத்தில் அவனை கண்டு பழகியிருக்க… தற்போதைய அவனின் உடைந்த நிலை, அவளை வதைத்தது.

“யாரும் ஒதுக்கி வைக்கமாட்டாங்க மாமா… ஓவர் திங்க் பண்றீங்க நீங்க” என்ற யாழினி, “அப்பா உங்களை எதும் சொல்லமாட்டாங்க. அவருக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அதனால் தான உங்களை நம்பி என்னை இங்க தங்க வச்சிருக்கிறார்” என்றாள்.

“எஸ்… அந்த நம்பிக்கைக்கு நான் உண்மையா இருக்கணும் நினைக்கிறேன்.” அழுத்தமாக அவள் முகம் பார்த்து மொழிந்தான்.

“ஓகே மாமா” என்ற யாழினி,

சுற்றுச் சுவற்றின் மீது பழக்கலவை அடங்கிய கிண்ணத்தையும், பால் குவளையையும் வைத்து…

“சாப்பிடுங்க… மதியமும் ஷூட் டென்ஷனில் சரியா நீங்க சாப்பிடல” என்று கீழே சென்றுவிட்டாள்.

செல்லும் அவளின் முதுகை துளைத்தது அஜய்யின் பார்வை.

புரிந்துகொண்டாள். சட்டென்ற அவளின் அமைதி அவனை அப்படித்தான் நம்ப வைத்தது.

 

அத்தியாயம் 3

https://thoorigaitamilnovels.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-3/

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
26
+1
80
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்