Loading

நீதான் என் காதல் மழை 18

யாழியின் திமிறலை எல்லாம் அஜய் பொருட்டாக எடுக்கவில்லை.

முதல் இதழ் முத்தம். தேனின் சுவையாய், அவனை கிறங்க வைத்தது.

விலகி நின்ற நாட்களுக்கும் சேர்த்து, காதலிக்க நினைத்து விட்டான் போலும்.

தள்ளி நின்ற கணங்களுக்கும் ஈடு செய்திட, தனக்குள் புதைத்துக் கொண்டான் தன்னவளை.

அஜய்யின் விலகளுக்கான காரணம் புரிகிறது. ஆனால் இந்நொடி ஏனோ அவளால் ஏற்க முடியவில்லை. அழுத்திக் கொண்டிருந்த பாரமெல்லாம் இருவருக்கும் பனியாய் மறைந்திருந்தது.

ஆனாலும் அவளுக்கு எதோ ஒன்று அஜய்யிடம் தேவைப்பட்டது.

அஜய் இதழ் முத்தத்தில் திளைத்திருக்க, அவனுள் தானாக அடங்கி நின்ற போதும், அவனது மார்பில் கைகள் வைத்து தள்ளியிருந்தாள்.

யாழினியின் மனம் புரிய, பட்டென்று விலகி, கை விரல்கள் குவித்து தன்னை நிலைப்படுத்தி நின்றான்.

“சாரி மாமா…” என்ற யாழி, “இப்போ எல்லாம் சரியாகிடுச்சுன்னு உடனே நடக்கணுமா மாமா?” எனக் கேட்டாள்.

“ஹேய் யாழ்” என்ற அஜய், “எனக்கு இப்போ உன்னை கட்டிக்கணும் கிஸ் பண்ணனும் தோணுச்சு பண்ணேன். அடுத்த லெவல் நான் திங்க் பண்ணல. எனக்காக நமக்காக நீ இப்போ செய்தது, லவ் ஃபீல் கொடுத்துச்சு… சோ” என்று நிறுத்தினான்.

“புரியுதுடா அருளு” என்று அஜய்யின் அருகில் வர,

“என்னடி… இதுதான் சாக்குன்னு டா சொல்ற?” என்றான் அஜய்.

“நான் சொல்லுவேன்” என அவனின் கழுத்தில் மாலையாய் கைகளைக் கோர்த்தவள்…

“சும்மா… எனக்கு என் மாமாவை புரியும்” என்று அவன் முகத்தில் தன் இதழ் குவித்து ஊதினாள்.

அவள் செயலில் கிறங்கி தானாக விழிகள் மூடினான்.

“எல்லாமே ஃபாஸ்டா… லவ் டூ மேரேஜ். இடையில தேவையில்லாம ஏதேதோ” என்ற யாழி, அஜய்யின் பாதத்தில் தன் பாதம் வைத்து நின்றாள்.

அவனது கன்னத்தில் உதடு உரசி செவி அருகே பயணித்தவள், “லவ் பண்ணலாமா மாமா?” எனக் கேட்டிருந்தாள்.

காற்றாய் தீண்டிய அவளின் சுவாசம், உடலில் அதிர்வை உண்டாக்க, பட்டென்று கண்கள் திறந்தான்.

இருக்கும் நெருக்கம் அவஸ்தையை கூட்டிட…

“இப்படி இருந்துகிட்டு கேட்டா வேறென்னவோ தோணுதுடி” என்று அவளின் நெற்றி முட்டினான்.

“தோணும் தோணும்” என்று இறங்கி விலகி நின்ற யாழினி, “ஒழுங்கா கோபமா சுத்திக்கிட்டு திரிஞ்சதுக்கும் சேர்த்து லவ் பண்ணுங்க. மத்தது அப்புறம் பார்ப்போம்” என்றாள்.

“இதெல்லாம் அநியாயம் யாழ்.”

“எது அநியாயம். பர்ஸ்ட் நைட்டில் வெளிய நிக்க வச்சீங்க. சிங்கிள் கிஸ் கூட இல்லை. குரங்கு வேலை பார்த்து ரூமுக்குள் வந்தா, என்னலாம் பேசினீங்க. அதுக்கெல்லாம் நான் பழிவாங்க வேண்டாமா” என அவள் கேட்ட தோரணையில் அவனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

“ரொம்ப பெரிய பழிவாங்கல் தான் போ…” என்ற அஜய், “நல்லா வாங்குடி” என்று அவளை இடையோடு கையிட்டு இழுத்து நெருக்கி, நெற்றி முட்டி மூக்கில் முத்தம் வைத்து விடுத்தான்.

“தவறான புரிதல். என்மேல உனக்கிருந்த நம்பிக்கை கூட எனக்கே என்மேல இல்லாம போனதால், ரொம்ப சந்தோஷமா அனுபவிக்க வேண்டிய தருணத்தை மொத்தமா ஸ்பாயில் பண்ணிட்டேன். சாரி சொன்னா சரியாகாது தெரியும். பட் சாரி கேட்கிறதை தவிர வேறென்ன பண்ணனும் கூட தெரியல” என்றான்.

அவ்வளவு தான் யாழி அவனுடன் விளையாட்டை கைவிட்டாள்.

அவன் வருந்துவது தான் அவளுக்கு என்றுமே பிடிக்காத ஒன்றாயிற்றே!

“இப்போ என்ன வருந்துற நேரமா? சோகமா ஃபீல் பண்ணவரை போதும் மாமா. ஃப்ரியா இரு. அதான் எல்லாம் சரியாகிப்போச்சே” என்று அவனின் மீசையை பிடித்து இழுத்தாள்.

“நிஜமாவே உனக்கு எந்த வருத்தமும் இல்லையா அம்மு?”

“நீதான் என் பக்கத்துலே இருந்தியே மாமா. கோபமா, உன்னையே உனக்கு பிடிக்காம சுத்திக்கிட்டு இருந்தாலும், நைட்ல நான் தூங்கின பிறகு, என்னை உன் மார்புல போட்டுகிட்டு தூங்குவியே… அதுல எல்லா வலியும் காணாம போயிடும்” என்றாள்.

“யாழ்…”

“இந்த அருளோட யாழ்” என்று அவனை கட்டிக்கொண்டாள்.

“லவ் யூ டி…”

“தெரியும்.”

“உன்னை ரொம்ப குட்டிப் பொண்ணாவே நினைச்சிட்டேன். நீ ரொம்பவே மெச்சூர்ட்” என்றான்.

“பாராட்டுனது போதும். எனக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்கு. நான் படிக்கணும். போய் சாப்பாடு செய்யுங்க… போங்க போங்க” என்று அவனை விரட்டினாள்.

“லாஸ்ட் செமஸ்டர்ல” என்ற அஜய், அவள் ஆமென்றதும், “வாட் நெக்ஸ்ட்” என்றான்.

“அடுத்து என்ன? எம்.ஃபில் ஜாயின் பண்ணனும்” என்று அவள் தீவிரமாக சொல்ல அஜய் ஜெர்க்காகினான்.

“அப்புறம்?” அவன் கேட்ட பாவனையில் வந்த சிரிப்பை மறைத்து, “பிஎச்டி பண்ணனும் மாமா. டாக்ட்ரேட் வாங்கிட்டு தான் மத்ததுலாம்” என்று அவள் சொல்லியதில் கடுப்பின் உச்சிக்கே சென்றவன், “படிம்மா… படி. ரொம்ப நல்லா படி. படிப்பு ரொம்பவே முக்கியம்” என்று முணுமுணுத்து விட்டு சமயலறை செல்ல, அவளும் அடக்கி வைத்த சிரிப்பை வெளியேற்றி மாடி ஏறினாள்.
________________________

இரண்டு நாட்களில் திலீப் தனக்கும் நிதிஷாவுக்கும் திருமணமென்று அழைத்திருக்க, இருவரும் நிறைந்த மனதுடன் சென்று வாழ்த்திவிட்டு மலைக்குச் சென்றனர்.

தங்கையின் திருமணத்திற்கு கூட வராத வருண், இன்று காலை தான் வந்திருந்தான். அவனை பார்ப்பதற்காகவே இந்த வருகை.

“மாமா லீவ் டேஸ்ன்னு தங்கிடாத. எனக்கு மண்டே எக்ஸாம் இருக்கு. சாயங்காலம் கிளம்பிடனும் சொல்லிட்டேன்” என்று வண்டியிலிருந்து இறங்கும் முன்பே அவனை மிரட்டிச் சென்றாள்.

எட்டி அவளின் முடியை பிடித்து இழுத்து நிறுத்தியவன்,

“முன்னலாம் இங்க தங்க குதிகுதின்னு குதிப்ப. இப்போ என்னவாம்?” என காரணம் கேட்டான்.

“இங்க தங்குனா… எல்லாரும் ஒண்ணா இருக்க நேரம், பாய்ஸ் ஒரு ரூம், கேர்ள்ஸ் ஒரு ரூம்” என்று அடுத்து சொல்லாது அவள் நிறுத்திட,

“நான் இல்லாம தூங்க முடியாதுன்னு சொல்லுடி” என்று அஜய் முடித்து வைத்தான்.

“தெரியுதுல… அப்புறம் என்ன” என்று அவள் முன் செல்ல, அஜய் சிறு சிரிப்போடு பின் சென்றான்.

இருவரின் முகம் கண்டே இத்தனை நாள் அவர்களுக்குள் இருந்த பிரச்சினை சரியாகிவிட்டது என்று கண்டுகொண்ட குமரன் மனம் நிம்மதி அடைந்தான்.

“என்ன அத்தை இங்கவே செட்டில் ஆகீட்டிங்க போல” என்று காந்தளின் அருகில் இடித்துக்கொண்டு அமர்ந்த யாழினி, “அங்க வர ஐடியா இருக்கா இல்லையா?” என்றதோடு, “உங்க மகனுக்கு ஆக்கிப் போடத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டனா? ஒழுங்கா வந்து எனக்கும் சேர்த்து சமைச்சுப் போடுங்க” என்றாள்.

“வாய், வாய்” என்று அவளின் காது திருகிய கமலம், “நீ நல்ல சேதி மட்டும் சொல்லுடி என் கடைக்குட்டி. அடுத்த நிமிஷம் அங்க நான் வந்து உன்னை உட்கார வச்சு ஆக்கி போடுறேன்” என்றார்.

இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு குமரன் மற்றும் குணாவிடம் பேசிக்கொண்டிருந்த அஜய், மனைவி இதற்கு என்ன பதில் கூறுவாள் என்று ஆர்வமாகினான்.

“சீக்கிரம் பெத்திடலாம் பாட்டி” என்று அவர் பக்கம் மெல்ல குனிந்தவள், “அதுக்குத்தான் புராசஸ் போயிட்டு இருக்கு” என்று மிக மிக மெல்லிய குரலில் சொல்லிட, “போடி விவஸ்தை கெட்டவளே” என்று கமலம் எழுந்து அங்கிருந்து சென்றேவிட்டார்.

“அப்படி என்ன சொன்ன நீ?” காந்தள் கேட்க,

யாழி முகத்தில் காட்டிய பில்டப்புக்கு, காந்தளும், “எதும் வில்லங்கமா சொல்லி வச்சிடாத” என்று ஓடியேவிட்டார்.

யாழினியின் சிரிப்பு அவ்வீட்டை மட்டுமல்ல, அஜய்யின் மனதையும் நிறைத்தது.

“பத்திரம் அருளு.” குமரன் எதை சொல்கிறான் என்று அஜய்க்கு புரிய, “என்னையே மீட்டுக் கொடுத்த என் தேவதை குமரா அவ” என்றான்.

அவனின் பதிலுக்கான அழுத்தம், குமரன், குணா இருவருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர்களுக்குள் எல்லாம் சரியாவிட்டது என்று மட்டும் புரிந்தது.

“நிலா, மதி எங்க?”, அஜய்.

“நல்லா வருண் கூட அரட்டை” என்று குணா சொல்லிட, யாழியும் அஜய்யும் வருணுடன் சிறிது நேரமிருந்து அவனின் நலன் விசாரித்து, திருமணத்திற்கு வராததற்கு சண்டை நடத்தி, சமாதானமாகி பாசவிழா கொண்டாடி, மதிய உணவை முடித்துக்கொண்டு கிளம்பினர்.

“வரும்போதே இங்க தங்கக்கூடாது சொல்லி கூப்பிட்டு வந்த மாதிரி அவ்ளோ சீக்கிரம் போறீங்க?” வெண்ணிலா கேட்க, யாழினி முழித்த முழியிலே அதுதான் உண்மையென அறிந்த பட்டாளம் அவர்களை கேலி செய்து ஒருவழியாக்கியே அனுப்பி வைத்தனர்.

குமரன் மட்டும், திருமணத்திற்கு முந்தைய நாள் இருவரும் இருந்த நிலையை எண்ணி, தற்போது ஆசுவாசம் அடைந்தான்.

காரணம் தெரியவில்லை என்றாலும், அன்று இருவருக்குமான வலி அவன் அறிந்திருந்தானே! இக்கணம் யாழியின் முகத்திலிருக்கும் மகிழ்வு, தங்கையின் வாழ்வு குறித்த கவலைகள் அனைத்தையும் போக்கியிருந்தது.

இணைந்து செல்லும் இருவரையும் பார்த்தவாறு குமரன் நின்றிருக்க,

“என்னாச்சு மாமா?” என்றாள் வெண்ணிலா.

அவளிடம் கூட குமரன் அதனை சொல்லியிருக்கவில்லை.

“யாழியோட சந்தோஷம்… சொல்லத் தெரியல அம்மாடி. மனசுக்கு நிறைவா இருக்கு” என்றான்.

“இன்னும் ஹேப்பியா இருப்பா மாமா” என்று வெண்ணிலா சொல்ல, வான் தேவதைகள் ததாஸ்து வழங்கினரோ… வாழ்வின் அடுத்தடுத்து யாவும் அஜய், யாழினிக்கு தித்திக்கும் தேனாய் அமைந்தது.
__________________________

அடுத்தநாள் யாழுக்கு இறுதி தேர்வு.

அவள் மும்முரமாக படித்துக் கொண்டிருக்க, அஜய் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தான்.

நேரத்திலும் கண்ணாக இருந்தான். இதனை முடித்துவிட்டு சமைக்க வேண்டும். யாழிக்கு தேர்வு தொடங்கியது முதல், அஜய் தான் சமைக்கின்றான். விரும்பியே அவளுக்காக செய்கின்றான்.

சிறு சிறு விஷயமாக இருந்தாலும் அவளுக்காக ஒவ்வொன்றும் செய்திடும்போதும் அவனுள் அலாதி மகிழ்வு.

வாழ்க்கையை அடுத்த நகர்விற்கு கொண்டு செல்லவில்லை என்றாலும், சின்ன சின்ன தீண்டல்கள் முத்த பரிமாற்றங்கள் யாவும் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது.

ஆனால் அடுத்த நிலைக்கு செல்வதில் மட்டும் சிறு தடுமாற்றம். அதுவும் இயல்பாய் நடந்திடும் என்ற எண்ணம், இருவரையும் பொறுமையாக இருக்க வைத்தது.

படித்துக் கொண்டிருந்த யாழி, தன்னை மறந்து அஜய்யை ரசித்திருந்தாள். புத்தகத்தை வைத்துகொண்டு அவனில் லயித்திருந்தாள்.

“எதுக்கு மாமா இவ்ளோ அழகா இருக்க?” என தன்னைப்போல் கேட்டிட, விழி உயர்த்தி அவளை பார்த்த அஜய், “சைட் அடிக்காம ஒழுங்கா படிடி” என்று தலையணையை எடுத்து அவள் மீதே அடித்திருந்தான்.

“படிக்கணும் காரணம் சொல்லி தள்ளி நிக்க வச்சிட்டு… சைட் அடிக்கிறதைப் பாரு” என்று அவளை செல்லமாக வஞ்சினான்.

“ரொம்பதான்… நான் வேணாம் சொன்ன மாதிரி தான்” என்று உதடு சுளித்தவளை முறைத்து பார்த்த அஜய்,

“இந்த ஆட்டத்துக்கு நான் வரல… உசுப்பேத்தி விட்டு உயிரை உருவுறதே உன் வேலையாகிப் போச்சு. அப்புறம் என் பாடுதான் திண்டாட்டம். நான் போய் குக் பண்றேன். சீக்கிரம் எடுத்து வச்சிட்டு வந்து சேரு” என்று வேகமாக அறையை விட்டு அஜய் வெளியேற, யாழின் புன்னகை நீண்டு விரிந்தது.

“உன்னை இன்னைக்கு மொத்தமா திண்டாட வைக்கிறேன் மாமா” என்று சுவற்றில் மாட்டியிருந்த, அவள் வரைந்த ஓவியத்தில் அவனின் கன்னம் கிள்ளி தன் உதட்டில் ஒற்றிக்கொண்டாள்.

சமயலறையில் சப்பாத்திக்கு மாவினை தேய்த்துக்கொண்டே புலம்பிக் கொண்டிருந்தான் அஜய்.

“எல்லாம் தானாம் நடக்கும்… இயல்பா நடக்கும் சொல்லி ஒதுங்கியே இருந்தா எப்படி நடக்கும்? யாராவது ஒரு ஸ்டெப் முன்ன வைக்கணும் தானே? ராட்சசி முன்ன நான் பண்ணதுக்கு, இப்போ வட்டி போட்டு பழிவாங்குறா!”

சட்டென்று ஒலித்த சிரிப்பு சத்தத்தில், அஜய் சமயலறை வாயிலை பார்க்க, யாழினி அவனது பேச்சினைக் கேட்டு சிரித்தவளாக நின்றிருந்தாள்.

“நல்லா சிரிடி… அப்படியே சிரிக்கிற வாயை கடிச்சி வைக்கணும் போல இருக்கு” என்று சொல்லிய அஜய், தேய்த்த மாவை கல்லில் இட்டு நெய்யை ஊற்றினான்.

“ஒருநாள் படிக்கணும் சமைச்சு கொடு மாமா கேட்டதுக்கு… முழு குக்காவே மாறிட்டடா அருளு நீ” என்று உள்ளே வந்து அவனின் தோளில் அடித்த யாழினி, மேடையில் குதித்து அமர்ந்தாள்.

“பார்த்துடி” என்ற அஜய், “வால் ஒன்னு தான் இல்லை” என்றான்.

“நீ ஏன் மாமா இப்படி இருக்க?”

“எப்படி இருக்கேன்?” என்ற அஜய், சுட்ட சப்பாத்தியை தட்டிலிட்டு அவள் கையில் கொடுத்தான்.

“வேணாம் சொன்னா தள்ளி இருப்பியா என்ன?” எனக் கேட்டு, அவனுக்கு ஊட்டிவிட்டவள், “இருந்தாலும் நீ ரொம்பதான் கன்ட்ரோலு அருளு” என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

“எதாவது சொல்லிடப்போறேன். ஒழுங்கா பேசாம சாப்பிடுடி. மனுஷன் அவஸ்தை புரியாம” என்ற அஜய், “அதென்ன நிதிஷா பஞ்சாயத்து முடிஞ்சதுல இருந்து அருளு சொல்ற?” எனக் கேட்டான்.

“நான் சொல்லக்கூடாதா? அதுதான உன் பேரு?”

“ஆமா… ஆமா” என்ற அஜய், “நீ அப்படி சொல்லமாட்டியே?” என்றான். அவனுக்கு அவளது அஜூ மாமாவில் ஒருவித தாக்கம். அதனை எதிர்பார்த்து கேட்டான். அவளுக்கு சொல்லிட மனமில்லை போலும்.

“சொல்ற நேரம் சொல்லுவோம். இப்போ சப்பாத்தியை ஒழுங்கா சுடுங்க” என்றாள்.

“ம்க்கும்… ரொம்ப தான் அம்மு ஏங்கவிடுற நீ! அஜூ மாமா சொல்லக்கூட என்ன ரூல்ஸ் இருக்கு? ரெண்டு தடவை நீ சொல்லிக் கேட்டிருப்பேன்” என்று அங்கலாய்ப்பாகக் கூறினான்.

“ஹான்” என்ற யாழி அவனின் வாயில் உணவை அடைத்து,

“உருட்டுங்க” என்றாள்.

“ஏதே…!”

“நான் மாவை சொன்னேன்.”

“போடி!”

பேச்சும் சீண்டலுமாக அங்கேயே உணவு நேரம் முடிந்தது.

“நீ போ. நான் சுத்தம் பண்ணிட்டு வரேன்” என்ற அஜய் அடுப்பு மேடையை துணி வைத்து துடைத்திட, யாழி அவனை பின்னிருந்து அணைத்திருந்தாள்.

“அம்மு வேண்டாம்.”

“ஏனாம்?”

“அப்புறம் எனக்குத்தாண்டி அவஸ்தை” என்ற அஜய், தன் வயிற்றை சுற்றியிருந்த யாழின் கரங்களை விடுவித்து, “கிட்ட வந்த அவ்ளோதான். மனுஷன் நிலைமை தெரியாம அவஸ்தையை கூட்டிட்டு… போடி” என்று விரட்டினான்.

சமயலறை வாயில் சென்று நின்றவள்,

“அஜூ மாமா” என்று மையலாக அழைக்க…

சட்டென்று உள்ளுக்குள் கிளர்ந்த உணர்வுகளின் ஆர்ப்பரிப்புகளில் பல்லைக் கடித்தவனாக, ஆயாசமாக இடையில் கைகுற்றி, அவள் புறம் திரும்பி…

“இப்போ என்னடி உனக்கு?” எனக் கேட்டான்.

“வேணாமா?” யாழினி முகம் தாழ்த்தி, கருவிழிகளை மேல் உயர்த்தி ரகசியக் குரலில் வினவினாள்.

“என்னது?” அவனுக்கோ அவளின் அக்குரலுக்கும் தோற்றத்துக்கும் உள்ளுக்குள் குளிரடித்தது.

“நிஜமா வேணாமா?” எனக் கேட்டு யாழினி பின்னால் அடிகள் வைத்திட,

“என்னன்னு சொல்லுடி” என்றான் அஜய்.

“இதுலாம் சொல்லி புரியறது இல்லை அருளு” என்றவள், அவனின் தீவிர முகம் கண்டு கலுக்கி சிரித்திட, அவனுக்கோ சில நிமிட முந்தையப் பேச்சு நினைவில் தோன்றி…

“அம்மு” என விழி விரித்தான்.

அவளோ துள்ளி குதித்து ஓடியிருந்தாள்.

அஜய் வேகமாக கையிலிருந்த துணியை கீழே போட்டுவிட்டு அவளை துரத்திச்செல்ல, அவள் அறைக்குள் நுழைந்த மறுநொடி அவனின் அணைப்பில் இருந்தாள்.

அஜய் மனைவியை பின்னிருந்து கட்டிக்கொண்டிருக்க, அவளோ பாந்தமாக அடங்கி நின்றாள்.

“அப்போ ஓகேவா?” யாழியின் வெற்றுத் தோளில் நாடி பதித்து அஜய் கிசுகிசுப்பாக அவளின் காது மடலில் இதழ் உரசக் கேட்டான்.

அவனின் அணைப்பினாலும், மூச்சு காற்றினாலும் உடலில் வெம்மை பரவ, உணர்வுகளின் பேரிரைச்சல் தாள முடியாது அவனது மார்பில் தலையை பின் சாய்த்து கண்கள் மூடினாள்.

“யாழ்…” அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

“மாமா” என்றவள், சடுதியில் திரும்பி அவனுள் தன்னை புகுத்தியிருந்தாள்.

“அம்மு…” அவளின் பதில் வேண்டி அவன் காத்திருக்க,

“எனக்கு எப்பவோ ஓகேடா அருளு” என நாணம் கொண்டு விலகி மெத்தையில் சென்று அவனுக்கு முதுகுக்காட்டி அமர்ந்தாள்.

கீழ் உதட்டை பற்கள் அழுந்த கடித்த அஜய், பின்னந்தலை கோதியவனாக, அறையின் கதவினை தாழிட்டு திரும்ப, யாழினி அஜய்யின் மடிகணினியை பார்த்திருந்தாள்.

சமையல் செய்ய கீழே செல்வதற்கு முன், மடிக்கணினியை முழுதாக அணைக்க மறந்திருந்தான்.

யாழி வெட்கத்தோடு மெத்தையில் கை ஊன்றிட, விரல் பட்டு மடிக்கணி ஒளிர்ந்தது.

அதில் அஜய் இறுதியாக பார்த்துக் கொண்டிருந்த காணொளி. திரையில் அவனும் அவளும் நிறைந்திருக்க, நிலா குளம்பித்தூள் விளம்பரம் என்று பார்த்ததும் புரிந்தது.

ப்ளே செய்திருந்தாள்.

அஜய் அவனுக்காக மட்டும் வைத்திருந்த பார்வை மொழி பேசும் நெருக்கமான காட்சி. இருவரின் காதலை காட்டிடும், நிழற் பிம்பத்துக்கே அவனிடம் தொலைந்திட சித்தம் ஏங்கினாள்.

அஜய் உல்லாச மனதோடு அவளின் அருகில் அமர, அவளோ மடிக்கணினியை விழிவிரித்துப் பார்த்திருந்தாள்.

“என்னை டெம்ப்ட் பண்ணிட்டு என்னடி பன்ற?” என்ற அஜய், “புக் எதும் திறந்த கொன்னுடுவேன் உன்னை” என்று அவன் அவள் தோள் வழி எட்டிப்பார்க்க,

“இப்போ நான் உங்களை கொல்லப்போறேன்” என்று சட்டென்று அவன் புறம் திரும்பி மார்பில் கை வைத்து தள்ளியவள் அவனில் சரிந்திருந்தாள். இருவரின் காலும் மெத்தை தாண்டி பிணைந்து தொங்கிக் கொண்டிருந்தது.

“கேடி மாமா… என்ன அது?” என்று பார்வையை மட்டும் காட்டி வினவினாள்.

அஜய், அவள் தன் மேல் முழுதாக ஒட்டியிருக்க, தன் கால் உரசும் அவளின் பாதவிரல்கள் தழுவலுக்கே மனதால் மட்டுமின்றி தேகத்தாலும் தத்தளித்தான்.

“அது பெர்சனல்…” அஜய் எட்டிப்பார்த்து பதில் கூறினான்.

“அந்த பெர்சனல் நானும் தெரிஞ்சிக்கிறேன்” என்ற யாழினி, அவனின் கன்னம் கடித்து ஆரம்பித்து வைக்க, பயணம் செய்தது முழுக்க அஜய் தான்.

இதழ் ஊர்ந்து, விரல்கள் தீண்டி, மெய் உரசி சிலிர்க்க வைத்தான். தவித்து அடக்கினான். திண்டாடி விழித்தவளின் பார்வை மொழியில் வழி நடத்தி கொண்டாடினான்.

உச்சம் தொட்டு மனைவியின் முகம் பார்த்தவன், “ஷல் ஐ…” என்று அனுமதி கேட்க, “அச்சோ” என்று அவனின் முகத்தை இழுத்து கவி எழுதியவளின் பூந்தேகம் கலைந்து, களைத்து, அவனில் மொத்தமும் குழைந்து உருகியது.

அறை நிறைத்த “அஜூ மாமா” என்ற மனைவியின் மென் முனகலுக்கு காலம் முழுக்க அவளின் பாதத்தில் வீழ்ந்து கிடக்க பட்டயம் எழுதிக் கொண்டிருந்தான். யாழினியின் அஜய் (அருள்மணி).

“அம்மு” என்ற அஜய்யின் ஓய்ந்த விளிப்பும், அவனவளிடமே முற்று பெற்றது.

விலகிய பின்னரும் அஜய்யின் பார்வை தன்மீது ரசனையாய் படர, இதழ் கடித்து அவன் முகம் பார்த்த யாழினி, அவனின் நெற்றியில் முத்தம் வைத்து அவனுள் புதைந்தாள்.

“ஆர் யூ ஓகே…”

“ச்சூ… மாமா” என்றவள் அவனை அடிக்க, “கொலையா கொன்னுட்டடி” என்றான்.

யாழியின் அணைப்பு இறுகியது.

அவனில் காதல் கொண்டு… அவனுள் காதலை கடத்தி, காதலால் அவனை தனக்குள் அரவணைத்து, காதலினால் அவனை காத்து, இன்று அந்த காதலினாலே அவனுள் அடங்கியிருந்தாள் அஜய்யின் தேவதை.

“தேங்க்ஸ் அம்மு… தேங்க்ஸ் ஃபார் எவ்வரித்திங்” என்றான். இன்று அவன் மனம் காதலாக அவளுடன் கலந்திருக்க முழுமுதற்காரணம் அவளின் காதல் மட்டுமே!

அவனின் நிம்மதி, சந்தோஷம் அனைத்திற்கும் அவள் ஒருத்தி மட்டுமே!

அஜய் வாய் வார்த்தையாக சொல்லவில்லை. நேசத்தால் உணர்த்திட்டான். அவளின் இதயத்தில் விதைத்திட்டான்.

பார் முழுக்க மேகம் நனைக்கும் மழையாய்… அஜய்யின் வாழ்வு முழுக்க யாழினியின் காதல் என்றும் காதல் மழையாய்.

அவளின் காதல் மழையாய் அவனிடம் பொழிந்திட அவளுக்கு அனுமதியோ தடையோ எதுவும் தேவையில்லை.

மேகத்தை ஊடுருவும் குளிர் காற்றாய், அஜய்யின் இதயத்தை என்று மழையாய் நனைத்திடும் யாழினியின் காதல்.
________________________

“மாமா… மாமா…”

வழக்கம் போல் யாழியின் குரல் வீட்டை நிறைத்திருந்தது.

“எதுக்குடி ஏலம் போட்டுட்டு இருக்க?” என்று கையில் தட்டுடன் வந்த அஜய், புத்தகத்தில் மூழ்கி இருந்தவளை நிமிர்த்தி உணவினை ஊட்டினான்.

“டைம் ஆச்சு யாழ்…”

அஜய் கூறிட அவனை பாவை முறைத்து வைத்தாள்.

“நான் ரெண்டு மணி நேரத்தில் விட்டுட்டேன்” என்றான் பாவமாக.

“அப்போ நைட் நான் படிக்காததுக்கு நீங்க காரணமில்லை… அப்படித்தானே?”

யாழி கேட்டதில் அஜய்யிடம் மென் முறுவல்.

“நான் என்ன பண்றது அம்மு. நீ பக்கமிருந்தாலே டோட்டல் ஃபிரீஸ்” என்ற அவனின் பதிலில் அவள் தான் அவனிடம் காதலாய் அடங்கிப் போனாள்.

“இன்னையோட இந்த படிப்புக்கு பெரிய கும்பிடு” என்ற யாழி, “உங்க சேட்டைக்கும் தான்” என்றாள்.

“அப்போ பிஎச்டி?” அஜய் அவசரமாக வினவியபோதும், அவனின் பார்வையில் விஷமம் தெறித்தது.

“அப்படியே நீங்க படிக்க விட்டுட்டு தான் அடுத்த வேலை பார்ப்பீங்க…” என்ற யாழினி, “எம்.ஃபில் முடிக்கவே உங்ககிட்ட திண்டாடியாச்சு” என்று முனகினாள்.

“என்னவோ நான் மட்டும் ரீஸன் மாதிரி பேசாத அம்மு… உன்னை யாரு என்னை இவ்ளோ லவ் பண்ண சொன்னா?” என்று மொத்த பழியையும் அவள் தலையில் போட்டான்.

“அவ்வா…” என்று வாயில் கை வைத்த யாழினி, “இனி கிட்ட வாங்க” என்று மிரட்டினாள்.

“அதை எக்ஸாம் எழுதிட்டு வந்து பார்த்துக்கலாம்… கிளம்பு” என்று அவளை விரட்டி அழைத்து வந்து கல்லூரியில் விட்டு ஸ்டுடியோவிற்கு சென்ற அஜய்யின் முகம் மலர்ந்தே இருந்தது.

அஜய் வந்தது முதல் நிகில் நண்பனையே பார்த்திருந்தான்.

“என்னடா ரொம்ப நேரமா என்னை சைட் அடிச்சிட்டு இருக்க?” மானிட்டரில் கண் இருந்த போதும் நிகிலின் பார்வை உணர்ந்து கேட்டான் அஜய்.

“வர வர ரொம்ப அழகாகுறியே மச்சான்.”

“மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு நிகில். அதனால முகம் அழகா தெரியுது” என்ற அஜய், “வாழ்க்கையையே கலர்ஃபுல்லா மாத்திட்டாடா… அவள் அளவுக்கு லவ் பன்றனா தெரியல. ஆனால் அவ அளவுக்கு முடியாதுன்னு மட்டும் தெரியுது” என்றான்.

“நிதிஷா விஷியத்திலே அது தெரிஞ்சுது அஜய். யாழினி இடத்தில் வேற யாரும் இருந்திருந்தால், கல்யாணமே நடந்திருக்காது” என்றான் நிகில். அதனை அஜய்யும் ஆமோதித்தான்.

எந்த ஒரு உறவுக்கும் நம்பிக்கை என்பது வேர் போல. அந்த நம்பிக்கை என்ற ஒரு பலம் போதும் உறவை இறுகப் பிணைத்திட… வாழ்வை சந்தோஷித்திட… அழகாக்கிட!

இங்கு அஜய்யின் வாழ்வு நாளுக்கு நாள் சந்தோஷ மழையில் நனைந்திட, முன்பு நடந்த சம்பவத்தில் யாழி அஜய் மீது வைத்த நம்பிக்கையே காரணமாகும். அந்த நம்பிக்கையின் மீது அஜய்க்கும் இன்றும் ஆச்சரியம் தான். அவனுக்காக அவனைவிட அதிகம் போராடியது அவள் தானே.

மனைவியை நினைத்துக் கொண்டிருந்தால் நேரம் செல்வதே தெரியாது அவனுக்கு.

நிகில் நேரத்தை சொல்லிய பின்னரே, கல்லூரி கிளம்பிச் சென்று யாழை அழைத்து வந்தான்.

“என்ன அருளு முகத்துல அதிகமா ஒளி வீசுது?” வீட்டிற்குள் நுழைந்ததும், யாழினி கேட்டிட…

“என் பொண்டாட்டி என்னை ரொம்ப ரொம்ப சந்தோஷமா வச்சிருக்கா… அதனால இருக்கும்” என்றான். யாழினியின் கன்னத்தில் முத்தம் வைத்து.

“அப்படியா?” என்ற யாழி, “அப்போ அந்த சந்தோஷத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கவா?” என்று யாழி அவனது தோளில் கைப்போட்டாள்.

“அம்மு…” அஜய்யின் விழிகள் விரிந்தன.

“இப்போவா?”

அஜய் எதை கேட்கிறான் என்பதை புரிந்துகொண்ட யாழினி, “உன் லவ்வு அளவில்லாம போயிட்டு இருக்கு மாமா. அதெல்லாம் நைட்டு தான்” என்றவள், “கண்ணை மூடு” என்றாள்.

அவள் சொன்னதும் செய்திருந்தான்.

கண் மூடியவனை அழைத்துக் கொண்டு முன்பு அவளிருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“அத்தையை கூட்டிட்டு வந்திடலாமா மாமா?” எனக் கேட்டாள்.

“அம்மா தான் வரமாட்டேன்னு அடமா இருக்காங்களே” என்ற அஜய், “எங்க கூட்டிட்டுப் போற?” எனக் கேட்டான்.

“இந்த டைம் கண்டிப்பா வருவாங்க,

“இப்போ கண்ணைத் திற மாமா” என்ற யாழி, அஜய் கண்களை திறக்கவும், அவள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கான்வாஸ் அட்டையின் மூடியிருந்த துணியை விலக்கவும் சரியாக இருந்தது.

ஓவியத்தை பார்த்தது பார்ததபடி அஜய் உறைந்துவிட்டான்.

“அம்மு…” மகிழ்வில் கண்கள் நனைந்தது.

அவளும், அவனும். அவள் அவனின் தோள் சாய்ந்திருக்க, அவனது மற்றொரு கையில் குழந்தை. முகம் மட்டும் முழுமையாய் வரையாது விட்டிருந்தாள்.

“லவ் யூ டி அம்மு” என்று மனைவியை அணைத்துக் கொண்டான்.
__________________________

அஜய் அதீத பதட்டத்துடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான்.

அஜய்யின் நடையை, அனைவரும் கன்னத்தில் கை வைத்து வேடிக்கைப் பார்த்திருந்தனர்.

“எப்படி வெறப்ப சுத்திட்டு இருந்தவன். இப்போ எப்படி தவிக்கிறான் பாரு.” குணா கிசுகிசுக்க குமரன் சத்தமின்றி முறுவலித்தான்.

“மதிக்கு குழந்தை பிறந்தப்போ என்னை எப்படியெல்லாம் ஓட்டினான். இப்போ வா அவனை ஒரு வழி செய்யணும்” என்று குணா தீவிரமாக வருணை அழைக்க, “அத்தான் பாவம்” என்றான் வருண்.

“ரொம்பத்தான்” என்ற குணா, ராஜேந்திரன் கணைப்பில் கப்சிப்.

வெண்ணிலா தான் யாழிக்கு பிரசவம் பார்க்கிறாள்.

“புள்ளை ரொம்ப கத்துறா” என்ற காந்தள் தவித்துப் போனார். அவளுக்கு யாழி வெண்ணிலாவுக்கும் மேல் தான். அவரை சுலோ தான் தேற்றினார்.

“அருள் ரிலாக்ஸ்…” குமரன் அஜய் தோளில் கை வைக்க, “எப்போடா குழந்தை பிறக்கும்” என்று பரிதவிப்பாய் கேட்டான் அஜய்.

அந்நேரம் வெளியில் வந்த செவிலி…

“சார் உங்களை வெண்ணிலா டாக்டர் கூப்பிட்டாங்க” என்க, “நானா? உள்ளவா?” என்று அஜய்க்கு மயக்கமே வந்தது.

“உங்க வைஃப் உங்களை பார்க்கணும் சொல்றாங்க சார். சீக்கிரம் வாங்க” என்று அவர் சொல்ல, மனைவி என்றதும் தன்னுடைய பயத்தை முழுதாக ஒதுக்கி வைத்து உள்ளே வேகமாக சென்ற அஜய்… “அம்மு” என்று யாழின் கரத்தை தன்னுடைய கரங்களுக்குள் பொத்திக் கொண்டான்.

“அவள் பயப்படுறா அண்ணா. பிபி ஹைப் ஆனா சிக்கல். அவளோட பேசிட்டே இரு” என்ற வெண்ணிலா, “புஷ் பண்ணு யாழி” என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

யாழின் கண்ணில் வழியும் நீரை கண்டதும் துடித்த அஜய்,

“வலிக்காம பேபியை கொண்டுவர முடியாதா நிலா?” எனக் கண்ணீரோடு கேட்டான். அவன் அழுவதை செவிலியர் ஆச்சரியமாகப் பார்க்க, அதையெல்லாம் அவன் கருத்தில் கொள்ளவில்லை.

“அண்ணா அவள் பயப்படுறான்னு உன்னை உள்ள விட்டா, நீ அவளுக்கு மேல பன்ற” என்ற வெண்ணிலா, “சிசேரியன் பண்ணா அவளுக்கு பின்னாடி ரொம்ப கஷ்டம். நார்மல் தான் நல்லது” என்று எடுத்துக் கூறினாள்.

அப்போதைக்கு அமைதியாகக் கேட்டுக்கொண்ட அஜய், மீண்டும் சில நிமிடங்களில்,

“நீ டாக்டர் தானே! சீக்கிரம் பேபியை வர வை. அவள் அழறா, நீ பார்த்திட்டு இருக்க” என்று தங்கையை கடிந்தான்.

“அடேய்… அண்ணா” என்று வெண்ணிலா பற்களை கடிக்க, “அஜூ மாமா” என்ற யாழின் அழைப்பில் அவன் தன்னை கட்டிபடுத்தினான்.

மேலும் அஜய்க்கு பயத்தை காண்பித்தே அவர்களின் புதல்வன் புவி காண வந்தான்.

வெண்ணிலா குழந்தையை அஜய்யிடம் கொடுக்க,

“தூக்க வராது டா” என்றான்.

“பழகிக்கோ” என்று அவன் கையில் கொடுத்த வெண்ணிலா, “அவள் செஸ்டில் படுக்க வை” என்றாள்.

தங்கை சொல்லியதை அப்படியே செய்த அஜய்க்கு உடல் முழுவதும் மெல்லிய பரவசம்.
________________________

அன்றும் யாழி மிகுந்த பரபரப்புடன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.

அறைக்குள் ஓடிவந்த தன்னுடைய மூன்று வயது மகனிடம்,

“அப்பா எங்கடா?” எனக் கேட்டு, புடவை மடிப்பை சரி செய்து கொண்டிருந்தாள்.

“என்னவாம்… டாக்டரேட் மேடம் என்னைத் தெடுறாங்க” என்று சரியாக உள்ளே வந்த அஜய், அவள் தேடியதற்கான காரணம் அவள் சொல்லாமலே அறிந்து, தரையில் மண்டியிட்டு புடவையை நீவி சரிசெய்தான்.

“லவ் யூ அஜூ மாமா” என்ற யாழி, “படபடப்பா இருக்கு மாமா” என்றாள்.

“ரிசர்ச் பேப்பர் சப்மிட் அண்ட் பிரசன்ட் பண்ணப்போற… அவங்க கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லப்போற. சர்டிபிகேட் கையில் வாங்கிட்டு வரப்போற. அவ்ளோதான். ஓகே வா” என்ற அஜய், “நான் செமினார் முடியுற வரை வெளியில் தான் இருப்பேன்” என்றான்.

குழந்தையை தூக்கி கொஞ்சி, காந்தளிடம் ஒப்படைத்துவிட்டு கணவனுடன், தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரை சபை ஏற இருக்கும் கல்லூரி நோக்கி கணவனுடன் சென்றாள்.

ஆராய்ச்சி தொடர்பில்லாத மற்ற ஆட்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என்பதால், மனைவிக்கு வாழ்த்துக்கூறி அனுப்பி வைத்த அஜய், வெளியில் மனைவி மலர்ந்த முகத்தோடு வெளிவரும் நொடியை எதிர்பார்த்துக் காத்திருக்கத் துவங்கினான்.

எத்தனைக்கு எத்தனை பதட்டமாக உள்ளே சென்றாலோ அதற்கு நேர்மாறாக முகம் முழுக்க அதீத மகிழ்வோடு, கையில் சுருட்டபட்ட மருத்துவ பட்டத்திற்கான தாளோடு ஓடிவந்த யாழினி, இருக்கும் சுற்றம் மறந்து…

“அஜூ மாமா” எனக் கட்டிக்கொண்டாள்.

அவளின் கனவு சாத்தியமானதிற்கு முழு உழைப்பும் அவளுடையதாக இருப்பினும், அஜய் இன்றி சாத்தியமில்லை. அவளின் உறுதுணை அவனாக இருக்கவே, இன்று அவளின் கனவு நினைவாகியது.

“ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கு மாமா” என்ற யாழி, “இனி மேடம் கல்லூரியில் முதன்மை பேராசிரியராக்கும்” என்று குதுகளிக்க, மனைவியின் மகிழ்வை நீண்ட இதழ் விரிப்போடு பார்த்திருந்தான் அஜய்.
___________________________

இரவு நேரம். மொட்டை மாடி. மெத்தை விரிப்பில், குழந்தை அருளாழன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க… தாயும், தந்தையும் பல கதைகள் பேசியபடி அமர்ந்திருந்தனர்.

சில்லென்ற காற்று, பவனி வரும் சந்திரன். ஒருவரின் அருகில் மற்றவர். மகிழ்விக்கு குறைவில்லா காதல் வாழ்க்கை. அவர்களின் காதலுக்கு கண்முன்னே சான்றாய் அவர்களின் மகவு.

வேறென்ன வேண்டுமாம்.

அஜய்யின் தோள் சாய்ந்த யாழினி,

“நீ ஹேப்பியா இருக்கியா மாமா?” எனக் கேட்டாள்.

அவள் புறம் முகம் திருப்பி நெற்றி முட்டிய அஜய், “ரொம்ப ரொம்ப” என்றான்.

“அதை இன்னும் டபுள் ஆக்கவா மாமா?” எனக் கேட்டவள், அவன் உணரும் முன்பே அவனது கையை எடுத்து தன் வயிற்றில் வைத்திருந்தாள்.

“அம்மு” என்ற அஜய், அவளை தோளோடு சேர்த்து அழுத்தமாக அணைத்து அவள் காதில் அவர்களுக்கு மட்டுமே உரித்தான சங்கேதம் பகிர்ந்து தன்னுடைய மகிழ்வை வெளிப்படுத்த…

“அஜூ மாமா” என்று நாணம் கொண்டு அவனின் மார்போடு ஒன்றினாள்.

அஜய்யின் சந்தோஷத்திற்கு அவளின் அழைப்பு ஒன்று போதும். யாழினிக்கு அவனின் அருகாமை மட்டுமே போதுமானது. அவர்களின் வாழ்வு என்றும் மழை பொழியும் மலர்தோட்டமாய்.

அவனுள் அவளென்றும் தீர்ந்துப்போகாத காதல் மழையாய்.

சுபம்.

கதையோடு பயணித்து ஊக்கமளித்த வாசகத் தோழமைகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். அனைவருக்கும்

(முழுக் கதையும் எப்படியிருந்தது என்று என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். நிறை குறையினை சுட்டிக் காட்டுங்கள்.)

‘ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.’

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
17
+1
75
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments