நீதான் என் காதல் மழை 17
“அம் பிரக்னென்ட் அஜய்.”
நிதிஷா சொல்லிட, அஜய்யின் உலகமே நின்றது. உறைந்து கல்லென சமைந்தவன் தலையைப் பிடித்துக் கொண்டு தரையில் மண்டியிட்டு விவரிக்க முடியாத பாவனையில் நிதிஷாவை ஏறிட்டுப் பார்த்தான்.
அவனது கண்களில் அத்தனை ஆற்றாமை. அத்தனை வலி.
அந்நிலையிலும் அவன் மனம் தன்னவளை நினைத்து துடித்தது.
“நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன் அம்மு.” தரையில் கைகளை அடித்து கதறித் துடித்தான்
‘தன்னால் தானா?’ அவனுள் எழுந்த ஒரு கேள்வி உயிரை வதைத்தது. அவனுக்கு உயிரையே வாரிச்சுருட்டி உலையில் வைத்த உணர்வு.
அதற்கு மேல் அஜய்யால் நிலைகொள்ள முடியவில்லை. அவனது உயிர் அவனுக்கே சுமையாய் தெரிந்தது.
“அம்மு” என்று வீடே அதிர கத்தியவனின் தொண்டை நரம்புகள் வெடித்துக் கிளம்பின.
“இந்த குழந்தை மட்டும் உருவாகமா இருந்திருந்தால் உன் வாழ்கைக்கு நடுவில் நான் குறுக்கே வந்திருக்கமாட்டேன் அஜய்.” நிதிஷா அத்தனை நல்லவிதமாக பாசாங்கு செய்தாள்.
“அப்பவும் உன்னோட மேரேஜ் லைஃப்’க்கு குறுக்க வரக்கூடாது. நானும் அடுத்து என்னன்னு பார்க்கணுமே!” என்ற நிதிஷா, “அபார்ட் பண்ணலான்னு ஹாஸ்பிடல் போனேன். த்ரீ மந்த் ஆகிடுச்சு, களைக்க முடியாது சொல்லிட்டாங்க” என்றாள். பாவமாக முகம் வைத்து, கண்ணில் வராத கண்ணீரை துடைத்து.
அவள் குழந்தையை கலைக்க நினைத்தாள் என்பதே அஜய்க்கு ரணத்தை மேலும் அதிகமாக்கியது.
அது அவனுடைய குழந்தை என்பது அடுத்தது. ஒரு உயிரை அழிக்கச் சென்றிருக்கிறாள் என்பது தான் அவனுக்கு முதன்மையாகப்பட்டது.
“இப்போ நான் என்ன பண்ணனும்?”
உயிரற்ற கூடாக, மரத்தக் குரலில் வினவினான்.
“என் குழந்தைக்கு உரிமை” என்றாள்.
“தெரியாமல் நடந்தி…”
“மாமா!” அஜய் வார்த்தையை முடிக்கும் முன் யாழி சத்தமாக அழைத்திருந்தாள்.
“யாழ்…” அவ்வளவு தான், இப்படியொரு நிலையில் தன்னுடைய உயிரானவள் முன் நிற்பதற்கு பூமியில் புதைந்துவிட மாட்டோமா என்று வருந்தினான்.
அவனுக்கு இப்போ தேவை சாய்ந்துக்கொள்ள ஒரு தோள்.
ஓடிச்சென்று வாயிலில் நின்றிருந்த யாழை இறுக அணைத்திருந்தான்.
“அம்மு…” நீண்ட நாட்களுக்குப் பின்னர் விளிக்கின்றான். மகிழும் நிலையில் அவளில்லை.
இப்போது அவளின் எண்ணமெல்லாம் நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்விலிருந்து தன்னுடைய மாமாவை மீட்பதே!
“என்னாச்சு மாமா இப்போ? ஒன்னுமில்லை. நீ அமைதியா இரு” என்று அஜய்யின் முதுகில் தட்டிக் கொடுத்தாள்.
“இனிமே என்ன நடக்கணும்? எல்லாம் அவ்வளவுதான். எல்லாமே போச்சு. நீ எனக்கு இல்லையா அம்மு? உன் கூட இனிமே எனக்கு ஒரு வாழ்க்கை இல்லையா?” அஜய் அழுகிறான். அவளுக்காக அழுகிறான். பார்த்துக் கொண்டிருந்த யாழிக்கும் வலித்தது.
அவனது வார்த்தையில் உள்ளம் ஊடுருவிய வேதனையை மறைத்துக்கொண்டு அஜய்யை தேற்றினாள்.
“எதுவும் ஆகல மாமா. உன் வாழ்க்கை என்னோடதான். நீ எனக்குத்தான்” என்று நிதிஷாவை அழுத்தமாக பார்த்துக் கொண்டே கூறினாள் யாழினி.
“உங்க சில்லி டிராமாவை கொஞ்சம் ஓரமா வையுங்க. எனக்கும் என் குழந்தைக்கும் முதலில் ஒரு வழி சொல்லுங்க.” ஆத்திரத்தில் கத்துவது போல, ஹிந்தியில் முகச் சுளிப்போடு பேசினாள் நிது.
“வழிதானே சொல்லிடுவோம். அதுக்கு முன்னாடி தீர்க்க வேண்டிய சில கணக்கு இருக்கு” என்று யாழி ஹிந்தியில் பதில் சொல்லியதை, அஜய் ஆச்சரியமாகப் பார்த்தான். அவனுக்குத்தான் யாழுக்கு ஹிந்தி தெரியுமென்பதே தெரியாதே! இதுநாள் வரை தெரியாதென்றல்லவா நினைத்திருந்தான். இவ்வளவு அழகாக பதிலடி கொடுக்கின்றாள். அந்நிலையில் கூட அவனிடம் வியப்பு.
நிதிஷாவுக்கு அஜய் போன்று ஆச்சரியமில்லை. அதிர்ச்சி. பேரதிர்ச்சி. உடன் அச்சமும்.
காலையில் நிதிஷா நடந்ததில் தனக்குத் தெரிந்தவற்றை, தன்னுடைய தோழியிடம், யாழி இல்லையென அனைத்தும் பகிர்ந்து கொண்டு, இறுதியில், “அஜய் தான் எனக்கிருக்கும் வழி” என்று சொல்லிக்கொண்டே திரும்பிட, யாழி முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டாது நின்றிருந்தாள்.
‘கேட்டிருப்பாளோ?’ நினைத்தாலும் நிதிஷா எதையும் காட்டிக்கொள்ளாது, யாழுக்கு… தான் பேசிய ஹிந்தி புரிந்திருக்காதென அசைட்டையாக நகர்ந்திருந்தாள்.
ஆனால் அவளோ தன் எண்ணத்திற்கு மாறாக, ஹிந்தியில் சரளமாக பதில் கொடுக்கிறாள். நிதிஷா விக்கித்து நின்றாள்.
“எனக்கு நீ உன் ஃபிரன்ட்கிட்ட பேசின எல்லாம் தெரியும். சோ, உன் ஆக்டிங் நிறுத்திட்டு நீயா உண்மையை சொல்ற” என்று அஜய்யை தாண்டி நிதிஷாவின் முன் சென்று மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு கூர்ப்பார்வையோடு நின்றாள்.
“யாழ்… என்ன உண்மை?” அஜய் பரபரப்பானான்.
“இதோ இப்போ இவங்களே சொல்லுவாங்க மாமா” என்ற யாழி, “என் மாமாவால் எனக்கு எப்பவும் துரோகம் பண்ண முடியாது. ஏன் அப்படி நினைக்கக் கூட முடியாது” என்றாள்.
“யாழ்… அம்மு.” அஜய்யின் கண்கள் கண்ணீரைக் கொட்டியது.
“நான் தப்பு பண்ணலையா?” தவிப்புடன் வினவினான். இதுநாள் வரை உள்ளம் மருகிய குடைச்சலை, இனியும் தாங்க முடியாது எனும் தீவிர தவிப்போடு கேட்டான்.
கண்கள் ஆமென சொல்லிவிடேன் என யாசித்தது.
“நீ எதுவும் பண்ணல மாமா” என்ற யாழி, “பிளீஸ் உண்மையை சொல்லுங்க. இதனால் என் மாமாவுக்கு எவ்வளவு வலி, வேதனைன்னு உங்களுக்குத் தெரியுமா? உயிர் இருந்தும் வெறும் கூடா நடமாடிட்டு இருக்காங்க. பிளீஸ் சொல்லுங்க நிதிஷா! அன்னைக்கு நடந்ததை சொல்லுங்க” என்றாள். முதலில் கேட்டதுபோல, யாழியால் இம்முறை கோபமாகக் கேட்க முடியவில்லை. அவள் சொல்லிவிட வேண்டுமென்கிற மன்றாடல்.
“உங்க குழந்தைக்கு உண்மையான அப்பா யாருன்னு நான் சொல்றேன். இப்போ நீங்க உண்மையை சொல்லி, இந்த பழியிலிருந்து என் மாமாவை வெளிவர வைங்க. பிளீஸ்…” யாழி அழுகிறாள். அஜய்க்காக யாசித்து நிற்கின்றாள்.
இழுத்து உயிரோடு பொத்தி வைக்க வேண்டுமென்று கைகள் பரபரப்பைக் காட்டிட, உண்மை தெரிவதற்காக நிதிஷாவை ஏறிட்டுப் பார்த்தான்.
யாழி தன் கேள்விக்கான பதிலை தருவதாக சொல்லவும், எதுவும் செய்திடாத அஜய்யை இதில் இழுத்துக்கொள்ள நிதிஷாவிற்கே மனம் வரவில்லை போலும், உண்மையை சொல்ல நினைத்துவிட்டாள்.
“சாரி அஜய்…” என்று ஆரம்பித்த நிதிஷா, தனக்குத் தெரிந்ததைக் கூறினாள். அதில் நடந்த தவறில் அஜய்க்கு சிறிதும் சம்மந்தமில்லை என்பது தெளிவாகியது.
பார்ட்டி நடந்த அன்று…
நிதிஷா தீவிர போதையில் இருந்த சமயம். அவள் இதைவிட அதீத போதையில் எல்லாம் இருந்திருக்கிறாள். அவளுக்கு பழக்கமான ஒன்று. நிதானம் முற்றிலும் இழந்த நிலையில், அங்கு அவளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறை நோக்கிச் சென்றாள்.
ஒரு அடி வைப்பதற்குள் பலமுறை தடுமாறினாள். மெல்ல சுவற்றை பிடித்துக்கொண்டு சென்றவள் யார் மீதோ மோதி கீழே விழ இருக்க, அவளை அந்நபர் தாங்கிப் பிடித்து அழைத்துச் செல்வது அவளுக்குத் தெரிந்தது. ஆனால் கருத்தில் பதியவில்லை.
அறைக்குள் நுழைந்து அவளை படுக்க வைத்ததும்,
அதீத போதையில் அவளாகத்தான் அந்நபரை இழுத்து இறுக அணைப்பது அறிய முடிந்தது.
அதன் பின்னரான நிகழ்வுக்கு இருவருமே சம பொறுப்பு.
ஆனால் அந்த நபர் யாரென்று, உட்கொண்டிருந்த போதையின் விளைவால் தெரியாமல் போனது.
பாதி இரவிற்கு மேல் மெல்ல எழுந்த நிதிஷா, தானிருந்த நிலை கண்டு அதிரவெல்லாம் இல்லை. அவளுக்குத் தானாக இழுத்து அணைத்தது நினைவு இருந்தது. அதனால் அதனை எளிதாகவே எடுத்துக் கொண்டாள். இது அவளுக்கு புதிதும் இல்லை. முற்றும் விலகாத போதையில் தலையில் வலி விண்ணென்று தெரிக்க, சுற்றிப் பார்த்தாள். அவளுடைய அறை இல்லை.
மெல்ல எழுந்து தன்னுடைய அறைக்குச் சென்றாள். உள்ளே நுழைந்ததும் தடுமாற்றத்தில் கால் இடறி, கோச்சில் விழுந்தவள் அப்படியே உறங்கியும் போனாள். அந்நேரம் அவளுக்கு அங்கே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அஜய் தெரியவில்லை.
காலையில் முதலில் கண் விழித்ததும், தன்னுடைய அறையில் அஜய் எப்படி என்று யோசித்தாள். கருத்தில் ஒன்றும் புலப்படவில்லை.
தான் யாரோ ஒருவனை இழுத்து கட்டிக்கொள்வது வரை தெளிவின்றி தெரிந்து கொண்டவளால், அதன் பின்னரான எதையும் மூளையில் திரும்பி சேமிக்க (recollect) முடியவில்லை.
‘அப்போது அது அஜய்யா?’ எண்ணினாலும், இல்லையென்று அவளுக்கேத் தெரிந்து தான் இருந்தது.
அங்கிருந்து இங்க வந்த போது அஜய் இருப்பதை சரியாக பார்க்கவில்லை என்பது புரிந்தது.
போதை முற்றிலும் வடிந்த பின்னர் தான் அவளுக்கு சீரிஷ் நினைவே வந்தது. நடந்ததுக்கு அவள் வருந்தவில்லை. அவளுக்கு இதெல்லாம் சாதாரணம். பழக்கமானது தானே! ஆனால் இது தெரிந்தால் சீரிஷ் திருமணத்தை நிறுத்தி விடுவானென்று விரைந்து அங்கிருந்து சென்றிருந்தாள். அதில் தன்னுடைய உடைமைகளை விட்டுச் செல்வது தெரிந்தும் அவள் அலட்டிக்கொள்ளவில்லை.
அந்நேரம் அஜய் கண்விழித்தால் அவன் எப்படி உணர்வான் என்றெல்லாம் நினைக்கவில்லை. சூழல் தனக்கு ஏற்றாற் போன்று இருந்தால் போதுமென்று சென்றுவிட்டாள்.
மூச்சினை நன்கு இழுத்து வெளியேற்றியவனாக தரையில் மண்டியிட்டு அமர்ந்த அஜய், முகத்தை உள்ளங்கையால் மூடிக்கொண்டு வெடித்து கதறி அழுதான். வாழ்வில் இதுநாள் வரை சிந்திடாத ஒட்டு மொத்தக் கண்ணீரையும் ஒரே அழுகையில் வெளிப்படுத்தினான்.
அஜய்யின் உள்ளத்துக் குமுறல் யாவும், அவன் கொண்ட அழுத்தம் யாவும், எதிர்பார்த்த கனவு வாழ்வை வாழந்திட முடியாத ஏக்கம் யாவும், கைக்கெட்டும் தூரத்தில் தன்னுடைய சொர்க்கத்தை தள்ளி நிறுத்திய வேதனை யாவும் கண்ணீரில் கரைத்தான்.
“மாமா…” யாழி ஓடிவந்து தன் மடி தாங்கிட,
“அம் சாரி அம்மு… சாரிடி… உனக்கிருந்த நம்பிக்கை என்மேல எனக்கே இல்லாம போச்சே… சாரி அம்மு. ஒண்ணுமில்லாத விஷயத்தை தூக்கி சுமந்து, நானும் கஷ்டப்பட்டு, உன்னையும் வருத்தி… மன்னிச்சிடு யாழ்” என்று அரற்றினான்.
“மாமா பிளீஸ்…” அஜய்யின் ஓலம் காண இயலாது, யாழும் கண்ணீர் சிந்தினாள்.
யாழ் அழுகிறாள் என்றதும், தன்னுடைய கதறலை சட்டென்று நிறுத்திய அஜய், “இதுநாள் வரை நீ எனக்காக அழுதது போதும்” என்று யாழியின் பின்னங்கழுத்தில் கையிட்டு சுற்றி வளைத்து, தன் மார்போடு அடைகாத்துக் கொண்டான். அவளின் நெற்றி அவனது நெஞ்சத்தில் அழுத்தமாக முட்டி நின்றது.
இருவரின் உணர்வு குவியல், போராட்டத்தின் இளைப்பாறல், தான் செய்ய விழைந்த தவறின் தீவிரத்தை நிதிஷாவிற்கு காட்டியது. தான் கூறிய பொய்யை அஜய் போல் யாழியும் நம்பியிருந்தால், இங்கு இவர்களின் காதல் மரித்துப் போயிருக்குமே! அவர்களின் காதல் நிதிஷாவையே அசைத்துப் பார்த்தது.
“அம் சாரி… அம் டெரிபலி சாரி அஜய். என்னோட நிலை, என் வயிற்றில் வளரும் குழந்தையின் நிலை என்று சுயநலமா யோசிச்சு, உன்னை சிக்கலில் மாட்டிவிட பார்த்தேன். சாரி… சாரி… எல்லாத்துக்கும் சாரி” என்ற நிதிஷாவிடம்…
“உண்மையை சொன்னதுக்கு ரொம்பவே தேங்க்ஸ்” என்றான் அஜய்.
தவறு தான் செய்யாதபோதும், அதற்கு தன்னை காரணகர்த்தாவாக்க முயன்ற நிதிஷாவின் நிலை புரிந்தாலும், அவளை அஜய்யால் மன்னிக்க முடியவில்லை. கடக்க முயன்றுவிட்டான். யாழினியின் உடனிருப்பால், அவளுடன் எளிதாக கடந்தும் விடுவான்.
அஜய் ஓரளவு மனம் தெளிய, இத்தனை நாள் தொலைத்திருந்த தன் இயல்பை நொடியில் மீட்டிருந்தான்.
“லவ் யூ டி அம்மு.” மனைவியை இறுகப் பற்றியிருந்தான். வலி ஊடுருவும் அழுத்தமான அணைப்பு.
நீண்ட நாட்களுக்குப் பின்னர், யாழியின் புன்னகை அஜய்யின் உயிர்ப்பில் மலர்ந்து ஒளிர்ந்தது.
அஜய் தன்னுடைய இத்தனை நாள் வேதனைகள் முழுக்க களையும் வரை யாழியை அழுத்தமாக அணைத்து நின்றான்.
அவனின் அனைத்துமானவள் அவளல்லவா! தனது பாரங்கள் போக்கியவளை அன்பின் வழி அரவணைத்துக் கொண்டான்.
அஜய் தேறும் வரை அணைத்து நின்றிருந்த யாழி, அவன் ஓரளவு தன் மனதை அழுத்தத்திலிருந்து வெளிக்கொணர்ந்திட்டான் என்றதும்,
“அவங்க பிரச்சினையை முடிச்சிடுவோம் மாமா” என்றாள்.
அஜய், இனி தனக்கு இதில் சம்மந்தமில்லை என்று இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டான்.
நிதிஷா உண்மையை சொல்லியிருந்தாலும், அவளுக்கு உதவுவதற்கு துணை நின்றிருப்பானோ என்னவோ?
எத்தனை பெரும் பழியை அவன்மீது சுமத்தி, அவன் தலையில் பாவத்தை ஏற்றிட நினைத்தாள். சுயநலத்தின் உச்சம் அல்லவா அவளது செயல்.
யாழி, “அண்ணா” என்று அழைக்க, அதுவரை வெளியில் நின்றிருந்த நிகில் மற்றும் திலீப் உள்ளே வந்தனர்.
“திலீப்?” அஜய் கேள்வியாய் பார்க்க,
யாழி சுற்றி வளைக்கவில்லை. அவளுக்கு நிதிஷா பிரச்சினை முடிந்து, இங்கிருந்து கிளம்பினால் போதுமென்ற மனநிலை தான்.
நேரடியாகவே சொல்லிவிட்டாள்.
“உங்க குழந்தைக்கு அப்பா திலீப் தான்.”
யாழி சொன்னதும் அஜய் மற்றும் நிதிஷாவிடம் அதிர்ச்சி. இதிலெப்படி திலீப் வந்தானென்று.
யாழி தன் வேலை முடிந்தது என்று தள்ளி நிற்க, திலீப் நிதிஷாவின் அருகில் சென்றான்.
“யாழி சொல்றது நிஜமா?”, நிதிஷா.
ஆமென அவளின் கரங்களைப் பற்றிய திலீப், “அம் சாரி” என்றான்.
“சாரி அஜய். நீ இதுக்குள்ள சிக்குவன்னு தெரியாது” என்றான். அஜய்யிடம் வறண்ட புன்னகை.
அன்று அஜய் கிளம்புவதற்கு முன்பே நிதிஷா தன்னுடைய சுயம் இழக்கும் அளவிற்கு சென்றுவிட்டாள். திலீப் தான் அவளை அழைத்துச் சென்றான். அவளின் அறை தெரியாததால், தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தான்.
அவளை படுக்கையில் கிடத்தி நிமிர்ந்த தன்னை சட்டென்று அவள் பிடித்து இழுப்பாள் என்று அறியாத திலீப் அவள் மீது மொத்தமாக சரிந்தான்.
அடுத்து அவளே அவனது சட்டையை இறுகப் பிடித்து, அவனது இதழில் முத்தம் வைக்க… தள்ளிவிட்டு எழ அவனது காதல் மனம் ஒப்பவில்லை.
ஆம் திலீப்பிற்கு நிதிஷாவின் மீது ஒருதலை காதல். சொல்லாத காதலும் கூட. அதீத தீரா காதல். திலீப்பின் முதல் விளம்பர படத்தில் அஜய் தான் நிதிஷாவை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
அப்போது தொடங்கிய அவனது காதல், அவளின் முறையற்ற செயல்களால் எட்ட நிற்க வைத்தது. காதலை சொல்லவும் தடையாக இருந்தது அவளது எல்லை மீறிய தாராளம். அப்போது தான் அவள் துறைக்கு புதிது என்பதால், பணத்தின் மீதான மோகம் அவளை அந்தளவிற்கு ஆட்டுவித்திருந்தது.
பல வருடங்களாக காதலித்து வருபவன், அவள் மீது அளவிட முடியா ஆசை கொண்டுள்ளான். அவளாக அழைக்கும் போது விலக்கி எழ அவன் ஒன்றும் முற்றும் துறந்த முனிவன் இல்லையே!
அக்கணம் அவன் மனதில் நின்றதெல்லாம் அவள் மீதான காதல் மட்டுமே! நடுவில் சீரிஷ் வருவானென்று திலீப் நினைக்கவில்லை. அதிலும் நிதிஷா சீரீஷை ஏற்றுக் கொண்டதை திலீப்பால் நம்பவே முடியவில்லை. அதிலும் உச்சம் சீரீஷ்க்கு உண்மையாக இருக்க வேண்டுமென நிதிஷா அவ்விடயங்களிலிருந்து ஒதுங்கிக் கொண்டது.
அவளின் முன் வாழ்க்கை திலீப்பிற்கும் வேண்டாம். அவனுடனான அவளின் வாழ்வு சரியாக இருந்தால் போதுமென்ற எண்ணம். அக்கணம் இதற்கு நானே அவளிடம் தன் காதலை சொல்லியிருக்கலாம் என திலீப் வருந்தாத நாளில்லை. உண்மையாக காதலித்து விட்டான் அல்லவா. அவனால் அவளை விட முடியவில்லை. இருப்பினும் அவளாக ஒரு வாழ்விற்குள் நுழையும் போது அதற்கு தன்னால் எவ்வித அபத்தமும் நேரக் கூடாதென எட்டவே நின்றான்.
இருப்பினும் அவனது மன திடத்தை தன்னுடைய ஒற்றை இதழ் முத்தத்தில் தவிடுப்பொடி ஆக்கியிருந்தாள் நிதிஷா.
அந்த நேரம் திலீப்பின் மனதில் இருந்ததெல்லாம் அவள் மீதான அவனது காதல் மட்டுமே! அவளுக்கு அடுத்த மாதத்தில் வேறொருவனுடன் திருமணம் என்பதையே மறந்து, அவளுள் மூழ்கிப்போனான்.
அவளுக்கு எப்படியோ, அவனுக்கு காதலாக நடந்த கூடல் தான் அது. அத்தனை மென்மையாய் அவளை கையாண்டு தனக்குள் நிரப்பிக்கொண்டான்.
எல்லாம் முடிய அவளை கட்டிக்கொண்டு படுத்திருந்த திலீப்புக்கு அத்தனை சந்தோஷம்.
தன்னவள் தன்னிடம் சேர்ந்த நிம்மதி அவனுக்கு. இருவரும் ஒன்றாக இருந்ததை அவள் எழுந்து பார்த்தால், நிச்சயம் தான் சொல்லப்போகும் தன்னுடைய காதலை அவள் ஏற்றுக்கொள்வாள் என நினைத்து அகம் மகிழ்ந்தான். அவளின் நெற்றியில் இதழ் ஒற்றியவன், “லவ் யூ” என்றிட, அதனை கேட்கும் நிலையில் அவளில்லை.
“காலையில் சீரீஷிடம் பேசி நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்தி, நிதிஷாவை தானே மணம் முடிக்க வேண்டும்” என்று திலீப் தனக்குள் எண்ணிக்கொண்டிருந்த நேரம், அவனது அலைபேசி ஒலித்தது.
அவனது தந்தைக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதாக தகவல் வர, நாளை நிதிஷாவை பார்த்துக்கொள்ளலாம் என்று அவசரமாக அங்கிருந்த கிளம்பிய திலீப், எதிரில் தள்ளாட்டத்துடன் வந்த அஜய்யை, இருந்த பதட்டத்தில் நிதிஷாவின் அறையென்று தெரியாது அதில் படுக்க வைக்க, முதல் முறை என்பதால் உடல் ஏற்றுக்கொள்ளாது மொத்தமாக வாந்தி எடுத்திருந்தான் அஜய். திலீப் தான் அவனது ஆடைகளை கழற்றி விட்டு, இருக்கும் அவசரத்தில் அவனை அப்படியே விட்டுச் சென்றிருந்தான்.
அடுத்த நாள் விடியலில் திலீப், தன் தந்தையின் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு விமானத்தில் பயணமாகிக் கொண்டிருக்க, அவனுக்கு நினைவெல்லாம் நிதிஷாவின் மீது தான்.
‘அவளுக்கு இரவு என்னுடன் நடந்து நினைவிருக்குமா?’ மனதால் நொந்துபோனான். காதல் மனம் வலி கொடுத்தது.
அடுத்தடுத்து இரண்டு மாதங்கள் ஓடியிருக்க அவனால் தந்தையை விட்டுவிட்டு இங்கு வர முடியவில்லை. அலைபேசி வாயிலாக எப்படி புரிய வைப்பதென்றும் தெரியவில்லை. அங்கிருந்து வந்த பின்னர், நிதிஷாவின் திருமணம் முடிந்திருக்கும் என்று வேதனையோடு நினைத்துக்கொண்டான். அவளைப்பற்றி அறிய அவன் முயலவில்லை. திருமணம் ஆன நிலையில் அன்றைய நிகழ்வை சொல்லி, வாழ வேண்டிய அவளின் மண வாழ்வு தன்னால் பட்டுப்போக வேண்டாமென்று ஒதுங்கியே இருந்தான். ஆனால் அதில் அஜய் சிக்கி சின்னா பிண்ணமாகியிருப்பான் என்று திலீப் அறியவில்லை.
திலீப்பின் பக்கம் உண்மை இருக்க, அவனை எதுவும் சொல்ல முடியவில்லை. அவனின் சூழலும் அன்று சிக்கலாகத்தானே இருந்திருக்கிறது.
இப்படியெல்லாம் நடக்க வேண்டுமென இருந்திருக்கிறது. இதில் யாரை நொந்துகொள்வது?
“நிதிஷா கல்யாணம் நின்னுடுச்சு தெரியாது அஜய். தெரிந்திருந்தால் உண்மையை எப்பவோ சொல்லியிருப்பேன். கல்யாணம் ஆகியிருந்தால், நான் சொல்லும் உண்மை அவ வாழ்க்கைக்கு சங்கடமாகிடுமேன்னு தான் எதுவும் வெளிக்காட்டிக்காம இருந்தேன்” என்றான்.
“இட்ஸ் ஓகே.” அவ்வளவு தான் அஜய்யின் பதில். வேறென்ன சொல்லிட முடியும். நடந்ததை தான் மாற்றிட முடியுமா?
நிதிஷாவிற்கு திலீப்பின் காதல் இப்போது தான் தெரியும். அவனின் அதீத நேசம், தன்னுடைய வாழ்வு வீணாகக் கூடாது என அவன் நினைத்ததில் புரிந்திட…
திலீப்பின் கையை எடுத்து கண்ணீரோடு தன் வயிற்றில் வைத்தாள்.
“நிஜமாவா?”
அவள் கேட்க அவன் ஆமென்றதோடு, “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று கேட்க, அவளுக்கு சரியென சொல்ல அவனது உண்மை காதல் போதுமானதாக இருந்தது.
“அப்புறம் என்ன பிரச்சினை முடிஞ்சுது” என்ற நிகில், “யாழை ரொம்பவே கஷ்டபடுத்திட்டடா. இனியாவது சந்தோஷமா இரு” என்றான்.
அடுத்து சில நிமிடங்கள் மௌனமாக கழிய, சூழலை மாற்றும் பொருட்டு அனைவருக்கும் தேநீர் கலந்து கொண்டு வந்து கொடுத்தாள் யாழினி.
அதன் பின்னர் திலீப், அஜய்யை இறுக்கமாக அணைத்து விடுத்து தன்னுடைய மன்னிப்பை மீண்டும் கேட்டுவிட்டு நிதிஷாவை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
அஜய்க்கு தன் தோளில் கீறல் எப்படி என்ற யோசனை வர, போதையில் எங்கும் கிழித்துக் கொண்டிருப்பேன் என்று சரியாக யூகித்தான்.
“திலீப் மேல் எப்படி டவுட் வந்துச்சு?” அஜய் கேட்க, “அவரிடத்தில் தானே தப்பு நடந்திருக்கு. அப்போ அங்க தானே சரி செய்ய முடியும். அதான் அவரை மீட் பண்ண நினைச்சேன். அங்க அவர்கிட்ட பேசவுமே, அவரோட முகமே எனக்கான பதிலை கொடுத்திருச்சு” என்று சாதாரணமாக விடை கொடுத்தாள் யாழினி.
“இப்போ தான்டா ரிலாக்ஸ் ஆகுது” என்ற நிகில், “ஆனாலும் நீ பண்ணது அதிகம் மச்சி. ஒரு தப்புன்னா அதை நாம பண்ணியிருப்போமா மாட்டோமான்னு கொஞ்சம் கூடவா யோசிக்கமாட்ட” என்று நண்பனை திட்டினான்.
அஜய்யிடம் மௌனப் புன்னகை. கொஞ்சம், தான் செய்திருக்கமாட்டோமென்ற பாதையில் யோசித்திருந்தாலும், அவனுக்கான தீர்வு என்றோ கிடைத்திருக்கும். தேவையில்லா வலி சுமந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. தானா இப்படி எனும் அதிர்விலே அவனது திடம், யோசிக்கும் திறன் யாவும் நின்றுவிட்டதன் பலனை நன்கு அனுபவித்துவிட்டான்.
நம்மீது நாம் கொள்ளும் நம்பிக்கையிலே பாதி பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடும்.
அஜய் நண்பனின் திட்டை தன் தவறுக்கு தண்டனை என நினைத்து அமைதியாக ஏற்றுக் கொண்டான்.
ஆனால் யாழி, “அண்ணா போதும். மாமாவை எதுவும் சொல்லாதீங்க. அவங்க சூழ்நிலை அப்படியாகிப்போச்சு” என்று சொன்னதோடு, நிகிலுக்கு நன்றியும் தெரிவித்தாள்.
“இருக்கட்டும்மா” என்ற நிகில் மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு சென்றுவிட்டான்.
அஜய் யாழியையே பார்த்திருக்க, யாழி எதுவும் பேசாது இரவு உணவு தயார் செய்ய அமைதியாக சமயலறைச் சென்றுவிட்டாள்.
“கோபமா இருக்காளோ?” தனக்குத்தானே கேட்டுக்கொண்ட அஜய், காலம் கடந்து ‘அவள் சொல்லியதை முன்பே நம்பியிருக்கலாம்’ என வருந்தினான்.
அஜய் அமைதியாக சென்று சமையலறை வாயிலில் நிற்க,
“என்ன மாமா?” என்று சாதாரணமாக வினவினாள்.
“அது… உனக்கு என் மேல கோபமா?”
“ஏன் இருக்கணுமா?”
இதற்கு அவன் என்ன சொல்லுவான்.
“சாரி அம்மு” என்றான்.
“ம்ப்ச்… போ மாமா” என்றவள் கண்ணீர் நிரம்பிய விழிகளை அவனுக்கு காட்டாது முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“அம்மு… யாழ்…” அவனது குரல் கலங்கி ஒலித்தது.
“நீங்க நிதானமா சிந்திக்க மறந்த ஒன்னு… நம்ம வாழ்க்கையை, அதை கூட விடுங்க இன்னும் நமக்கு காலமிருக்கு. ஆனால் வாழ்க்கையில ஒருமுறை தான் கல்யாணம். அன்னைக்கு எதோ நடக்கக் கூடாதது நடக்கிற மாதிரி… உங்க முகம் எப்படி இருந்துச்சு? ஃபோட்டோஸ் எடுத்து பாருங்க” என்றவள், “என் கழுத்துல தாலியே விருப்பமில்லாம தான கட்டுனீங்க… எப்படியெல்லாம் எதிர்பார்த்த நொடி அது… போ மாமா” என்று ஓடிவந்து அவனது மார்பிலே தஞ்சம் புகுந்து அழுது கரைந்தாள்.
“அம்மு…”
“உன் மேல கோபமா வருது மாமா. என்ன பண்ணட்டும் நான். எவ்ளோ சொன்னேன். உன்னால இப்படிலாம் பண்ண முடியாதுன்னு. காது கொடுத்து கேட்டியா நீ” என்று அவனின் மார்பிலே கடித்திருந்தாள்.
“அவுச்… ஹேய் வலிக்குதுடி.” துள்ளி விலகினான் அஜய்.
“நல்ல வலிக்கட்டும்” என்ற யாழி, “இன்னும் உனக்கு வலிக்க வைக்கிறேன்” என்றாள்.
“என்ன?”
“உனக்கு தெரியும்ல எனக்கு லெக்ச்சரர் ஆகணும் ஆசை.”
“ஆமா… அதுக்கென்ன இப்போ? அஜய்யின் மூளை எதோ பழிவாங்கப் போகிறாள் என்று மணியடித்தது.
“நான் லெக்ச்சரர் ஆகற வரை… நீ என் பக்கத்திலே வரக் கூடாது” என்றவள்,
“எதே!” அஜய் அதிர்வை பொருட்படுத்தாது,
“டிவோர்ஸ் கேட்டல” என்று இழுத்தாள்.
“ஹேய் இருடி” என்று பதறிய அஜய், “வில்லங்கமா எதும் சொல்லிடாதா” என ஓடிச்சென்று அவளிடம் கையெழுத்து வாங்கி வைத்த விவாகரத்து பத்திரத்தை அவள் முன் காட்டி கிழித்து குப்பையில் போட்டான்.
“இதை கிழிச்சிப் போட்டாலும், நான் சொன்னது சொன்னதுதான். என்கிட்ட இருந்து தள்ளியே இருக்கணும். புரியுதா?” என்று ஒற்றை விரல் நீட்டி மிரட்டல் போல் கேட்டாள்.
தன்னை நோக்கி நீண்டிருந்த அவளின் சுட்டு விரலை தன் விரல் சுற்றி கொக்கி போல் மாட்டி யாழை தன்னிடம் இழுத்த அஜய், அவளின் இடை சுற்றி மற்றொரு கரத்தால் அழுத்தம் கொடுத்தான்.
“தள்ளி தான நிக்கணும்? நீயிருந்துக்கோ… உன் ரூல் எனக்கில்லை” என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய இறுதி வார்த்தையை அவளின் இதழுக்குள் முடித்திருந்தான்.
Epi 18
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
65
+1
+1
2
Mam, is this continue or end of tale?? However I am so excited if yaazhi will continue her life infront of us.. please mam, don’t end card it..
இன்னும் ஒரு அத்தியாயம் இருக்கு சிஸ்