Loading

நீதான் என் காதல் மழை 16

அஜய் நீட்டிய திருமண முறிவு பத்திரத்தை சில கணங்கள் மட்டுமே ஆழ்ந்து பார்த்த யாழினி வேகமாக அந்த காகிதத்தை வாங்கி அதில் சடுதியில் தன் கையெழுத்தை நிரப்பி அவன் முன் நீட்டியிருந்தாள்.

‘கையெழுத்திடமாட்டாள், அழுது ஆர்ப்பாட்டம் செய்வாள், கத்துவாள்’ என்று அஜய் நினைத்ததற்கு மாறாக அவள் அமைதியாக கையெழுத்திட்டு கொடுத்தது அவனுள் அத்தனை வலியை கொடுத்தது.

“அப்போ என்ன பிரிய முடிவு பண்ணிட்டியா?” தான் தான் அவளிடம் விவாகரத்துக் கேட்டு கையெழுத்திட சொன்னோம் என்பதை நொடியில் மறந்து வலி நிறைந்து கேட்டான்.

அஜய்யை கூர்மையாக நோக்கிய யாழினி, “இதை நான் கேட்கல மாமா. நீ கேட்டதற்காக நான் கையெழுத்து போட்டிருக்கேன். ஆனா நான் உன்னை நம்புறேன். எவ்ளோ நம்புறேன் எல்லாம் சொல்லத் தெரியல. ஆனா நான் உன்னை நம்புறேன். இந்த நம்பிக்கைங்கிறதை தாண்டி வேற என்ன இப்போ நான் பண்ணனும் எனக்கு தெரியல. உன்னை நம்புறது மட்டும் தான் எனக்கு இருக்க ஒரே வழி. அதை நான் பண்றேன். அவ்வளவுதான். எப்படியும் இந்த கையெழுத்துக்கு மதிப்பு இல்லை. நீயே இதை கிழிச்சிப்போடுவ, இன்னும் கொஞ்ச நாள்ல உண்மை தெரிஞ்சிடும் அப்போ உன்னை பார்த்துக்கிறேன்” என்றவள், “கீழே போ. நிதிஷா வெயிட் பண்றாங்க” என்றாள்.

“கொஞ்சம் கூட உனக்கு என்னை பார்க்கும் போது அவருவருப்பா இல்லையாடி?”

தன்னை இத்தனை நம்புகிறாள் என்பதே அவனுக்கு பெரும் கவலையாக இருந்தது.

“எதுக்கு?” அவளின் குரலில் அப்படியொரு கோபம்.

“ஏன் கேட்கிறேன் தெரியுதுல உனக்கு?” அவனிடம் ஆயாசம்.

சட்டென்று அவன் எதிர்பாராது, அவனின் கன்னம் தாங்கிய யாழி, அவனது அதரத்தோடு தன்னுடைய பூவிதழை ஆழப் பொருத்தியிருந்தாள்.

விலக முயன்றவன் அவளின் வன்மையில் அடங்கி கட்டுண்டுப்போனான். அவளின் மென்னிதழ் மென்மையில் தொலைந்து கரைந்துப் போனான்.

முதல் இதழ் முத்தம். அவள் தடுமாறிட, அவன் தாங்கினான். கொடுத்தவள் தான் விலகவும் செய்தாள். அவனது முகம் முழுக்க தன் முத்திரையை மூச்சு முட்டிட கொடுத்தப் பின்னரே விலகி நின்றாள்.

“உனக்கான பதில் கிடைச்சிருச்சா மாமா?” எனக்கேட்ட யாழி, “ஒத்த முத்தத்துக்கு சொக்கி நிக்கிற பாரு. இது என்கிட்ட மட்டும் தான் உன்னால் முடியும்” என்று கீழே சென்றாள்.

அஜய் பிரம்மை பிடித்து அமர்ந்துவிட்டான்.

“தேவையில்லாதது சுமந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அவளுடன் ஒன்றிவிடலாமா?” என ஒரு நொடி, ஒரே நொடி நினைத்தவன், தன்னைத்தானே கன்னத்தில் அறைந்து கொண்டான்.

“அது யாழுக்கு எவ்வளவு பெரிய துரோகம்!”

ஆவென்று தலையை பிடித்து கத்திய அஜய், கேட்ட கொலுசு சத்தத்தில் திரும்பி பார்த்தான்.

“என்கூட வாழணும் இந்த செக் தோணுச்சுல மாமா உனக்கு?” என்ற யாழி, “அதுக்கு என்ன பண்ணனும் யோசி. எல்லாம் சரியாகிடும்” என்று அவன் முன் தேநீர் கோப்பையை வைத்துவிட்டுச் சென்றாள்.

“நிதிஷா என்ன பண்றாள்?”

“தூங்கிட்டு இருக்காங்க” என்றாள்.

“வாட்?” அதிர்ந்தான் அஜய்.

“பெட்டியோட வந்திருக்காங்க. இங்க ஸ்டே பன்ற ஐடியா போல” என்ற யாழினி, “அமைதியா இருந்து தான் ஆகணும் மாமா” என்றாள்.

“முடியலடி” என்ற அஜய் தன்னருகில் நின்றிருந்தவளை இடையோடு கட்டிக்கொண்டான்.

“அழுதுடாத மாமா. அதை சத்தியமா பார்க்க முடியாது” என்ற யாழி, “என்கூட வாழணும் ஆசையை மட்டும் பாரு மாமா” என்றாள்.

“அவ இப்ப எதுக்கு வந்திருக்கா? அவ முன்னாடி போய் என்னால சாதாரணமா நிக்க முடியுமான்னு கூட தெரியல.” உண்மைக்கும் அஜயால், நிதிஷாவின் முன்பு சென்று நிற்க முடியும் என்கிற தைரியம் இல்லை. அவனது குற்ற உணர்வு அவனை கொஞ்சம் கொஞ்சமாக தின்றுக் கொண்டிருந்தது.

முடிவு தெரியாது தத்தளிக்கின்றான்.

‘யாழ் சொல்வது போல் ஒன்றுமே நடக்காது, நானாக எதும் நினைத்துக் கொண்டிருந்தால்?’ நினைத்த அஜய், நிதிஷாவிடமே கேட்டுவிடலாமென முடிவு செய்தான்.

அடுத்தடுத்து நேரங்கள் விரைந்து ஓடின. அஜய் கிளம்பி ஸ்டுடியோ சென்றிட, யாழி வீட்டு வேலை முடித்து புத்தகங்களோடு அமர்ந்துவிட்டாள்.

நிதிஷா இன்னும் உறங்கிக் கொண்டிருக்க, பயண அலுப்பாக இருக்குமென நினைத்த யாழி, அவளின் வருகைக்காக, அறையை பார்த்தவாறே கூடத்தில் தான் படித்துக்கொண்டிருந்தாள்.

அந்நேரம் நிக்கிலிடமிருந்து அழைப்பு வர, ஏற்றிருந்தாள்.

“சொல்லுங்க நிகில் அண்ணா.”

“நிதிஷா வந்திருக்கான்னு அஜய் சொல்றான். எதுக்காம்?”

“எழுந்து வந்தா தான் தெரியும்” என்ற யாழி, “எதோ பெருசா நடக்குது. மாமாவை மட்டும் சமாளிக்கணும். கோவபட்டா, காரியமே கெட்டுச்சு” என்றாள் யாழினி.

“என்ன பிரச்சினை தெரியல. ஆனால் உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் தேவையில்லாத சிக்கலா நிதிஷா வந்து நிக்கிறான்னு மட்டும் தெரியுது” என்ற நிகில், “திலீப் மீட் பண்ண டைம் ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன்” என்றான்.

“மாமாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க.” சுரத்தின்றிக் கூறினாள்.

“நீ ரொம்பதான் அவனுக்கு பயந்திட்டாலும்” என்ற நிகில், “ஈவ்னிங் அவனுக்கு புது க்ளைன்ட் மீட்டிங் இருக்கு. நாம போயிட்டு வந்திடுவோம்” என்றான்.

“ஓகே அண்ணா” என்று யாழி அலைபேசியை வைத்திட, நிதிஷா எழுந்து வந்தாள்.

“ஜூஸ் வேணும் யாழ்.” நிதிஷா அதீத சோர்வாக தெரிந்தாள்.

“ம் கொண்டுவரேன்” என்று எழுந்து சென்ற யாழி சில நிமிடங்களில் கொண்டு வந்து கொடுத்தாள்.

நிதிஷா குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த யாழி,

“என்ன சடனா? எதும் புது ஆட் ஷூட்டா?” எனக் கேட்டாள்.

“இல்லை” என்ற நிதிஷா, “கொஞ்சநாள் இங்க இருக்கலாம் வந்தேன்” என்றாள்.

“ஹோ” என்ற யாழி, “உங்க ஹஸ் கூட எதும் பிரச்சினையா?” எனக் கேட்டாள்.

“மேரேஜ் ட்ராப் ஆகிடுச்சு” என்றாள்.

“ஏன்?”

“உன்கிட்ட காரணம் சொல்ல முடியாது யாலா” என்ற நிதிஷா, “இப்போ நானிருக்க வேண்டிய இடத்தில் நீயிருக்க” என்றாள்.

“புரியல?”

“புரியாம இருக்கிறது நல்லது” என்ற நிதிஷா, “அஜய் எங்கே?” என்று கேட்டாள்.

“மாமா ஸ்டுடியோ போயிருக்காங்க” என்ற யாழி, “எவ்ளோ நாள் இருப்பீங்க?” என்றாள்.

“ஹேய் யாலா… என்ன நீ, என்னை வீட்டை விட்டு விரட்டுறதுலே குறியா இருக்க?”

நிதிஷாவின் இக்கேள்வியே அவள் எதோ பெரும் திட்டம் வைத்து வந்திருக்கிறாள் என்பதை யாழுக்கு உணர்த்தியது.

“இது என்னோட வீடு. என் வீட்டுல யாரு இருக்கணும் நான் தானே டிசைட் பண்ணனும். சரி வீட்டுக்கு வந்தவங்க எத்தனை நாள் இருக்காங்க, இருக்க போறாங்கன்னு தெரிஞ்சிக்க உரிமை எனக்கு இருக்கு தானே” என்று புன்னகை முகமாகக் கேட்ட யாழியை கூர்மையாக நோக்கினாள் நிதிஷா.

“இங்க நீங்க கெஸ்ட்டா எவ்ளோ நாள் வேணும்னாலும் தங்குங்க. நோ அப்ஜெக்ஷன். பட், முன்ன அத்தைகிட்ட மாமா பற்றி பேசின மாதிரியெல்லாம் பேசக்கூடாது. அப்படி பேச அவர் பொண்டாட்டி நானிருக்கேன்” என்று சொல்லி மேலேறிச் சென்றுவிட்டாள் யாழினி.

அமைதியான சிறுபெண் என்று யாழியை நிதிஷா நினைத்திருக்க, நான் அஜய் விடயத்தில் வேறு மாதிரி என்றல்லவா காட்டிச் சென்றிருந்தாள்.

நிதிஷாவிற்கு அடுத்து என்ன என்றே தெரியவில்லை. மெல்ல தன் வயிற்றில் கை வைத்து தடவி பார்த்தாள்.

சீரீஷ் பேசிய வார்த்தைகள் அவளை கொல்லாமல் கொன்றது.

நிதிஷா தன்னுடைய துறைக்கு ஏற்றவாறு அதீத நாகரிகம் கொண்ட பெண் தான். ஆரம்பத்தில் வாய்ப்புகளுக்காக இத்துறையின் திரை மறைவில் நடக்கும் செயல்களில் ஈடுபட்டிருக்கிறாள். ஆனால் சீரீஷின் காதலை ஏற்ற நொடி முதல் அவனுக்கு உண்மையாகத்தான் இருந்தாள்.

முன்பு வந்திருந்தபோது, காந்தளிடம் அஜய் குறித்து பேசியதும், அஜய்யிடம் சீண்டலாக நடந்து கொண்டதும், அவளளவில் சாதாரணம். அவையெல்லாம் இங்கிருக்கும் சூழலில் வளர்ந்த மக்களுக்கு தவறென்று அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.

நிதிஷா அடுத்து என்பதில் தீவிரமாக ஆழ்ந்துவிட்டாள்.

இப்படி நடக்குமென்று அவளும் அறியவில்லை. சீரீஷ்க்கு துரோகம் இழைத்துவிட்ட குற்றவுணர்வில் தான் மறுநாள் எழுந்ததும், அஜய்யிடம் கூட சொல்லிக்கொள்ளாது அவசரமாகக் கிளம்பிச் சென்றுவிட்டாள். சீரீஷ்க்கு உண்மை தெரிந்தால் தனது பிற்கால வாழ்வு கவலைக்கிடமாக வாய்ப்புள்ளது என்ற பயம் அவளிடம்.

அதனால், அஜய் தன்னிடம் எதும் கேட்டுக்கொண்டாள் பதில் சொல்லிக்கொள்வோம் என்று எதையும் சொல்லாது வந்தது தான் இக்கணம் நிதிஷாவிற்கு சாதகமாக உள்ளது. அதனை வைத்து தான் தன் பெயரை காப்பாற்றிக்கொள்ள இருக்கிறாள் நிதிஷா.

அன்றைய சம்பவம் தன் வாழ்க்கை பாதையை மாற்றி அமைக்குமென்று நிதிஷா சற்றும் நினைக்கவில்லை.

இன்றைய அவளின் நிலையில் நிச்சயம் யாரும் அவளை நல்ல கண்ணோட்டத்தில் பார்க்கப் போவதில்லை. இதனால் அவளது தொழிலிலும் அவளுடைய உயரம் சரிந்துவிடும். ஆதலால் அஜய்யை பற்றாக பற்றிக்கொள்ள திட்டம் வகுத்து இங்கு வந்துவிட்டாள்.

இப்போது இருக்கும் நிலைக்கு அவளுக்கு இருக்கும் ஒரேவழி அஜய் மட்டுமே. அவனுடன் இருந்தால் மட்டுமே அவளின் நிலை மாறும்.

அஜய்க்கு அன்று நடந்தது நினைவு இல்லையென்றால்?

“நம்ப வைக்கத்தான் வேண்டும்.”

பெரு மூச்சோடு அஜய்க்காகக் காத்திருக்கத் துவங்கினாள்.

மதியம் கீழிறங்கி வந்த யாழி, நிதிஷாவை சாப்பிட அழைக்க, அவள் அமைதியாக உண்டு எழுந்துகொண்டாள்.

யாழி அஜய்க்கு உணவு கொடுத்துவிட்டு வருவதாக நிதிஷாவிடம் சொல்லி உள்ளே கதவினை தாழிட்டுக் கொள்ளுமாறு கூறிச்சென்றாள்.

சரியென்ற நிது தன்னுடைய யோசைனையில் தாழிடாது விட்டு, கூடத்து நீள்விருக்கையிலே பின் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

மூடியிருந்த அவளின் விழிகளில் கண்ணீர் வழிந்தது.

பணத்துக்காக, துறையின் புகழுக்காக எது வேண்டுமானாலும் செய்யத் துணியும் பெண் தான் நிதிஷா. ஆனால் தற்போது அவளிருக்கும் நிலை அவளை முற்றிலும் மாற்றியிருந்தது. அப்போதும் சுயநலமாக மட்டுமே யோசிக்கச் செய்தாள்.

யாழி ஸ்டுடியோவிற்கு வர, முன்பு போல் அஜய் திட்டவில்லை. அதற்காக பழைய அஜய்யாக அவளிடம் காதல் கொண்டும் நடந்துகொள்ளவில்லை.

யாழி உணவினை எடுத்து வைக்க மௌனமாக உண்டு எழுந்து கொண்டான்.

“நிதிஷா உன்கிட்ட தான் பேசணும் வந்திருக்காங்க மாமா.”

யாழி சொல்ல அவனுள் சிறு நடுக்கம்.

என்ன பேசப்போகிறாள் என யோசித்தாலும், தான் மருகும் விடயமாக மட்டும் இருக்கக்கூடாது என்று வேண்டினான்.

அவளிடம் கேட்டுக்கொள்ள முடிவு செய்தாலும், இக்கணம் அவனுள்ளும் சிறு பயம். அவள் ஆமென்று சொல்லிவிடுவாளோ என்று. அதற்கு பிறகு யாழியின் நம்பிக்கையும் பொய்த்துப் போகுமே எனும் பயம்.

தலையை வேகமாக உலுக்கி தன்னுடைய சிந்தைகளுக்கு கடிவாளமிட்டான்.

“எதையும் யோசிக்காத மாமா” என்ற யாழி, நிதிஷாவா இதைப்பற்றி உன்கிட்ட பேசாம நீ எதுவும் பேசக்கூடாது. அப்படியே பேசினாலும் உனக்குத் தெரிந்த மாதிரியே காட்டிகொள்ளக் கூடாது” என்று அதீத அழுத்தம் கொடுத்து எச்சரிக்கை செய்தாள்.

“என்ன இருந்தாலும் உண்மை மாறாதே!”, அஜய்.

“மாறாது தான். அந்த உண்மை உன் பக்கமிருந்தால்?” என்ற யாழுக்கு, தான் உணவை முடித்துக்கொண்டு சமயலறை உள் சென்றதை கவனிக்காத நிதிஷா, தான் மேலே சென்றுவிட்டதாக நினைத்து அலைபேசியில் பேசியது நினைவு வந்தது. முகம் தானாக இறுகியது._

___________________

மாலை அஜய் புது விளம்பர படத்திற்கான கூட்டத்தில் அமர்ந்துவிட, அவனறியாது நிகில் ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி, யாழுக்கு அழைப்பு விடுத்தான்.

“இதோ கிளம்பிட்டேன் அண்ணா” என்ற யாழ், நிகிலுடன் பாதி வழியில் இணைந்து கொள்வதாக சொல்ல, நிகிலும் புறப்பட்டுச் சென்றான்.

கிளம்பும் முன் நிதிஷாவிடம் வெளியில் சென்று வருவதாக சொல்லிய யாழி, அவளை முறைத்துகொண்டேச் சென்றாள்.

நிதிஷா உண்மையைக் கூறியிருந்தால் நிச்சயம் யாழி அவள் பக்கம் என்னவென்று ஆராய்ந்து உதவி செய்திட முயன்றிருப்பாள்.

ஆனால் நிதிஷா, அவள் கொண்டிருக்கும் வேதனைகளுக்கு, மொத்தமாக அஜய்யை பொறுப்பாளியாக்க நினைத்திட, அவளின் நிலை தெரிந்தும் அவள் மீது அதீத கோபம் கொண்டாள் யாழி.

இருவரும் ஒன்றாக சந்திக்கும் சாலையில் யாழுக்கு முன்பாகவே நிகில் வந்து நின்றிருந்தான்.

“ரொம்ப நேரமாச்சா அண்ணா?”

“இல்லை யாழி. இப்போ தான் வந்தேன்” என்ற நிகில், “எதுக்கு அவள் வந்திருக்கா?” எனக் கேட்டான்.

அஜய் மீது துளியும் தவறில்லை என்பதை அறிந்து கொண்டாதலோ என்னவோ, அனைத்தையும் நிகிலிடம் கூறிவிட்டாள் யாழினி.

“அவனுக்கு கிறுக்குத்தான் பிடிச்சிருக்கு” என்று அஜய்யை திட்டிய நிகில், “அவளை ரெண்டு அறை கொடுத்து அஜய்யிடம் உண்மையை சொல்ல சொன்னா சொல்லிட்டுப் போறாள். இதுக்காக அவனை நீ போய் பார்க்கணுமா?” என்றான்.

“எனக்கென்னவோ திலீப்கிட்ட நமக்கு தேவையான பதில் இருக்கும் தோணுது” என்றாள் யாழி.

“எனக்கு வர கோபத்துக்கு…” என்று பல்லைக் கடித்த நிகில், “நான் என்னோட கல்யாண பிரச்சினையில் மாட்டாமல் இருந்திருந்தால் அஜய் இப்படியொரு சிக்கலில் சிக்கியிருகமாட்டான்” என வருந்தினான்.

“விடுங்கண்ணா. நடக்கணும் இருந்திருக்கு. நடந்திருச்சு. இப்போ தான் உண்மை தெரிஞ்சிடுச்சே” என்ற யாழி, “உண்மையை சொல்லுன்னு சொன்னா நிதிஷா ஒத்துக்கமாட்டாங்க. ரொம்பவே இன்செக்யூர்டா இருக்காங்க. வேற வழியில காரணம் காட்டி மாமாவை தக்க வைக்க முயற்சி செய்வாங்க. சோ, ஆதாரத்தோட நமக்கு உண்மை தெரியணும். நிதிஷா என்ன சொன்னாலும், அது பொய் அப்படின்னு நிரூபிக்க ஆதாரம் வேணும்” என்றாள்.

“எல்லாம் இவனை சொல்லணும். பச்சப்பிள்ளையா இவன். எது எப்படி நடக்கும் கூடவா தெரியாது” என்று வெடித்த நிகிலுக்கு உண்மை தெரிந்ததும் நண்பன் மீது கட்டுகடங்கா கோபம் எழுந்தது.

“நீ குமரன் அண்ணாகிட்ட சொல்லியிருக்கலாம் யாழி.” குறைப்பட்டுக் கொண்டான்.

“நடந்திருக்குமோ அப்படிங்கிற சந்தேகப் பார்வையில் கூட மாமாவை யாரும் தப்பா நினைச்சிடக் கூடாது அண்ணா. சொந்த குடும்பமாவே இருந்தாலும் மாமா நிலை இறங்கிப்போவதை என்னால் ஏத்துக்க முடியாது” என்றாள்.

அஜய் மீது இந்த சிறு பெண்ணுக்கு எத்தனை காதல். நிகில் யாழை வியந்து பார்த்தான்.

“சரி போலாமா அண்ணா?”

“ம்ம் போலாம்மா.”

இருவரும் தத்தம் வண்டிகளிலேயே பயணித்தனர்.

நிகில் முன்பே என்ன விடயமென சொல்லாது திலீப்பிடம் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்க, இவர்கள் சென்றதும் விருந்தினர் சந்திப்பு அறையில் உட்கார வைக்கப் பட்டனர்.

அடுத்த இரு நிமிடங்களில் திலீப் அவர்கள் முன் வந்து அமர்ந்தான்.

“ஹாய் நிகில்” என்ற திலீப், “நீங்க மிஸஸ்.அஜய் ரைட்?” என யாழியை பார்த்து வினவினான்.

“ம்ம்…”

“உங்க மேரேஜ்க்கு வந்திருந்தேன்” என்ற திலீப், “நீங்க எதுக்கு என்னை பார்க்கனும் வந்திருக்கீங்க?” எனக் கேட்டான்.

யாழ் தயங்கவோ தடுமாறவோ இல்லை.

என்ன கேட்க வேண்டுமென நினைத்து வந்தாளோ… அதை எல்லாம் கேட்டாள்.

முதலில் நிதிஷா வந்திருப்பதை தெரிவித்தாள்.

திலீப்பிடம் கண்ணில் சிறு மின்னல்.

நிகிலுக்கு அவனின் முகம் சாதாரணமாக இருப்பது போலத்தான் தெரிந்தது.

ஆனால் அவனின் ஒவ்வொரு அசைவையும் கவனித்த யாழுக்கு கிடைக்க வேண்டிய பதில் அவனது கண்ணிலேயே கிடைத்துவிட்டது.

அடுத்து அவள் சொல்லியதில் திலீப் இருக்கையை விட்டு அதிர்ந்து வேகமாக எழுந்திருந்தான்.

உச்சக்கட்ட அதிர்வு அவனிடம்.

இந்த அதிர்வு இல்லாமல் போயிருந்தால், யாழி தோற்றுப் போயிருப்பாள்.

அவனின் இந்த அதிர்வு ஒன்று போதும், அவளுக்கான அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது.

**********************

கலந்தாய்வு கூட்டம் முடியவே, அஜய் நிகிலைத் தேட, அவன் அப்போதே சென்றுவிட்டதாக பணியாள் சொல்லவும், எடுத்து வைக்க வேண்டியவற்றை எடுத்து வைத்து பதிரப்படுத்திய அஜய், வீட்டிற்கு சென்றால் நிதிஷாவை நேருக்கு நேர் சந்திக்க நேரிடும் என்ற எண்ணத்தில் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

தன்னை நினைத்தே அவனுள் அப்படியொரு கழிவிரக்கம்.

ஒரு மணிநேரம் கடந்திருந்தது.

‘யாழி தனியாக இருக்கிறாள், நிதிஷா எதும் பேசி வைத்திடப் போகிறாள்’ என அஜய் விருப்பமின்றி வீட்டிற்கு கிளம்பிச் சென்றான்.

அஜய் வீட்டிற்கு வரும் பொழுது வாயில் கதவு திறந்தே இருந்தது.

யாழி இப்படி திறந்து வைக்கமாட்டாள் என்று அஜய்க்கு தெரியும்.

ஏற்கனவே வீசிய புயலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறான். எதன் மீதும் ஒன்ற முடியாது மருகிக் கொண்டிருக்கிறான். கடக்க முடியா ஒன்றை கடந்துவிட தவிக்கிறான். ஆனாலும் முடியவில்லை. அவனளவில் சாத்தியமற்றுப் போனது.

இப்போது என்ன வருமோ என்ற சிறு அச்சத்தோடு தான் உள் நுழைந்தான் அஜய்.

நிதிஷா கூடத்து இருக்கையில் அவனின் வரவை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள்.

தன்னை கண்டதும் அவள் ஆர்வமாக எழுந்து நின்றதிலேயே அஜய்க்கு தனக்காகக் காத்திருக்கிறாள் என்பது புரிந்தது.

ஒருவித குற்றவுணர்வுடன் தான் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

நிதிஷாவை கண்டு சினேகமாக சிறு புன்னகை கூட அஜய்யால் முடியவில்லை.

அவள் கண்ணும், அவள் அவனை பார்க்கும் பார்வையும் சாதாரணமாகத்தான் இருந்தது.

ஆனால் அஜய்க்கு,

இருண்டவன் கண்ணுக்கு அரண்டதெல்லாம் பேய்யாம். அதுப்போலதான் அஜய் அவள் பார்வையில் கூனிக்குறுகினான்.

அன்று நிதிக்ஷா அறையை விட்டுச் செல்லும் பொழுது அஜய் உறங்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்பு அவள் எழுந்து சென்றதால், சென்றவளுக்கு அன்றைய நாளின் நிகழ்வு நினைவிருக்கும் என்பது அஜய்யின் எண்ணம். அது உண்மையும் கூட.

அன்று உறங்கி எழுந்த நிதிஷா தன்னுடைய அறை படுக்கையில் அஜய் படுத்திருப்பதைக் கண்டு அதிரவே செய்தாள்.

ஆனாலும் இருக்கும் நிலையில் எதையும் சரியாக கொண்டுச்செல்லும் திடம் அப்போது அவளிடமில்லை. அங்கிருந்து சென்றால் போதுமென்கிற நிலை. சீரீஷ்க்கு தெரிந்துவிடக் கூடாது எனும் பயம். எதுவும் சொல்லாது சென்றிருந்தாள்.

ஆனால் அதுவே இன்று அவளுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

அஜய் அன்று தன்னுடன் எப்படியென்று யோசிக்க வேண்டிய தேவையில்லை நிதிஷாவிற்கு. அவள் தானே அந்த அறைக்குள் சென்றாள்.

அதன் காரணமாகவே இன்று யாரோ செய்த ஒன்றிற்காக அவனை தன்னுடன் நினைத்துக் கொள்ள இங்கு முயல்கிறாள்.

அந்த யாரோ என்பதை அறிந்துகொள்ளும் நேரம் அவளிடம் இல்லை. அதனால் அஜய்யை பலியாக்க முடிவு செய்துவிட்டாள்.

இங்கு, தான் எனும் சுயநலம் அனைத்தையும் வென்றுவிடுகிறது.

“ஹாய் அஜய்!”

“ம்ம்… யா…யாழ் இல்லையா?” இதை கேட்பதற்கே அஜய் தடுமாறினான்.

“ஈவ்வினிங் வெளியில் போனாள்.”

“ஓகே…” என்று அஜய் நகர,

“என் மேரேஜ் நின்னுடுச்சு அஜய்” என்றாள்.

இந்த விஷயம் அவனுக்குத் தெரியாது. மும்பை சென்றிருந்தால் தெரிந்திருக்கும். அவன் தான் நிதிஷாவை தவிர்ப்பதற்காக, இடையில் தொழில் விடயமாக மும்பை செல்வதைக் கூட தவிர்த்து வந்தானே!

எப்படி என்ற அதிர்ச்சியில் அடுத்த அடி வைக்காது சிலையென நின்றான் அஜய்.

“ஏன்?”

“சீரீஷ் ட்ராப் பண்ணிட்டான்.”

சீரீஷ் எந்தளவிற்கு நிதிஷாவை காதலித்தான் என்பது அஜய்க்கு தெரியும். சீரீஷ் தான் நிதிஷாவை திருமணம் செய்துகொள்ள கேட்டதும். அதனால் அவன் ஏன் நிறுத்தினான் எனும் குழப்பம்.

அன்று தங்களுக்குள் நடந்ததாக அவன் எண்ணிக் கொண்டிருக்கும் விடயத்திற்காக நிச்சயம் இருக்காதென்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

நிதிஷாவும் சொல்லியிருக்கமாட்டாள் என நினைத்தான்.

அவனுக்குத் தெரியும். நிதிஷா சீரீஷ்ஸின் காதலுக்கு பின்னர் தான் சரியாக இருக்கின்றாள். அதற்கு முன்னர் வரை வாய்ப்புக்காக எல்லை மீறிய செயல்கள் செய்தவள் தான். அவளுக்கும் அப்படியிருக்காது, மதிக்க வாழ வேண்டுமென்ற எண்ணம் தோன்றிய பின்னர் தான் சீரீஷின் புரபோசலுக்கு சம்மதம் வழங்கியிருந்தாள். ஆதலால், அவளாக அன்றைய சம்பவத்தை சீரீஷிடம் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என எண்ணினான்.

“எப்படி?” எனக் கேட்டும் இருந்தான்.

“என்ன அஜய், உனக்கு தெரியாத மாதிரி கேட்கிற?”

அவன் நினைவு தப்பிய நிலையில் இருந்தான் என்பது அவளுக்குத் தெரியும். அதனாலேயே பின்னால் இதுபோல் சிக்கல் வந்தாள் தன்னை பாதுகாத்துக்கொள்ள எண்ணி, அவன் எழுந்ததும் தவறான ஒன்று நடந்தது போன்று தோற்றம் கொள்ளும் வகையில் அவ்வறையில் ஆங்காங்கே கிடந்த தன் உடமைகளை விட்டுச் சென்றிருந்தாள்.

அவளின் அவசர யோசனை, இன்று அவளுக்கு உதவி, அஜய்க்கு எதிராக நிற்கிறது.

“நீ என்ன சொல்ற?”

நிதிஷா என்ன சொன்னாலும், அன்று நடந்ததைப் பற்றி தெரியும் என்பதைப்போன்று காட்டிக்கொள்ளக் கூடாதென யாழி சொல்லியிருந்ததால் அவனும் அதற்கேற்றவாறு கேள்வி கேட்டான்.

“நல்லா நடிக்கிற அஜய்” என்ற நிதிஷா, “நிஜமா உனக்கு எதுவும் தெரியாதா?” எனக் கேட்டாள்.

“நீ எதை மீன் பன்ற?”

“பரவாயில்லை நல்லாவே நடிக்கிற அஜய்” என்ற நிதிஷா, “நான் நினைவு படுத்துறேன்” என்றாள்.

“எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம். எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்று அஜய் வேகமாக அங்கிருந்து செல்ல,

“நான் பேசியே ஆகணும் அஜய்” என்று கத்தியிருந்தாள் நிதிஷா.

“இப்போ எதுக்கு இப்படி கத்துற?”அஜய்க்கும் கோபம் வந்தது. அவனது இயலாமை கோபமாக வெளிவந்தது.

“தப்பை நீ செஞ்சிட்டு என்மேல கோபப்படுறியா நீ?”

‘தப்பு.’ இந்த ஒரு வார்த்தையில் அஜய்யின் உலகம் நின்றது.

இதற்கு பயந்துதானே அஞ்சி ஓடிக் கொண்டிருந்தான். அஜய்யின் முகம் வெளிறிவிட்டது.

“உன் முகத்தை பார்த்தாலே தெரியுது அஜய். அன்னைக்கு நமக்குள்ள நடந்தது உனக்கு நினைவிருக்கு” என்று நிறுத்திய நிதிஷா, “அப்போ உனக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கஷ்டம் எனக்கில்லை. நீயும் மறுக்கமாட்டேன்னு நினைக்கிறேன்” என்றாள்.

அஜய் லைம் லைட் துறையில் இருந்தாலும், அஜய் போல் ஒழுக்கமாக இருந்திட மாட்டார்கள். அது அங்கு அத்தனை கடினமும் கூட. அப்படிப்பட்ட அஜய், இன்று ஒழுக்கத்தில் வரையறையின்றி எல்லை தாண்டி சுற்றிக் கொண்டிருந்த நிதிஷாவின் முன் இப்படியொரு நிலையில் நிற்கவே ரணம் கொண்டான்.

இதற்கு இறந்தும் விடலாம் என்று அக்கணம் அவனுள் தோன்றியது. ஆனால் முடியாதே! அவனது மனமே அதற்கு ஒப்புக்கொள்ளாது.

அஜய் முகம் இறுகி நின்றான்.

“எனக்கு புதுசு இல்லை தான். அதனால் தான் அன்னைக்கு தெரியாம நடந்த ஒன்றை பெரிது பண்ண வேண்டாம்னு உன்னை அக்யூஸ் பண்ணாம போயிட்டேன்” என்று போலியாக நடித்தாள்.

“ஆனால், மொத்தமா முடிச்சு வைக்கும் நினைக்கல. அன்னைக்கு நமக்குள் அது நடந்ததால் தான் என்னோட மேரேஜ் ஸ்டாப் ஆச்சு” என்று அவள் சொல்ல, அஜய்க்கு தலை வெடிக்கும் போலானது.

“நீயாக விருப்பபட்டுக் கூட இதுபோன்று நடந்து கொண்டிருக்கிறாய் தானே? என்னிடம் மட்டும் ஏன் வாதம் செய்கிறாய்?” எனக் கேட்க வாய்வரை வந்துவிட்ட அஜய் தன் வார்த்தையை கடினப்பட்டு விழுங்கினான்.

அப்படிக் கேட்க அஜய் மற்ற ஆண்கள் போலில்லையே.

“நான்… நான் சீரீஷ் கிட்ட பேசுறேன்” என்ற அஜய், அடுத்து அவள் சொல்லியதில் தலையை பிடித்துக்கொண்டு தரையில் மண்டியிட்டிருந்தான்.

“அம் பிரெக்னன்ட்”, நிதிஷா.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
22
+1
56
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments


    1. Mam I am eagerly awaiting the next move of ajai.. please release next one 😯