Loading

நீதான் என் காதல் மழை 15

யாழினிக்கு அடுத்தநாள் தேர்வு.

அஜய் இரவு மிக தாமதமாக வர, புத்தகத்தில் ஆழ்ந்திருந்த யாழி கணவனின் வரவை உணரவில்லை.

யாழி கல்லூரிக்கு செல்கிறாள் என்பதையே பல நாட்களுக்குப் பின்னர் தான் தெரிந்து கொண்டிருந்தான். அந்தளவிற்கு அவன் நிகழ் மறந்து தன்னையே கொஞ்சம் கொஞ்சமாக வெறுத்துக் கொண்டிருக்கும் நாட்கள் அவை.

கூடத்தின் இருக்கையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மனைவியையும், தன் கையிலிருப்பதையும் மாற்றி மாற்றி பார்த்த அஜய், ‘அவளுக்கு எக்சாம்ஸ் முடியட்டும்’ என்று மேலேறிச் சென்றான்.

சில நிமிடங்களில் கீழே வந்த அஜய், அவளுக்கு தன் அரவம் காட்டாது, மேசை மீதிருந்த உணவை முடித்துக்கொண்டு மேலே சென்றுவிட்டான்.

கடிகார ஓசையில் கலைந்த யாழி, நேரத்தை பார்த்துவிட்டு ‘இன்னுமா வரல!’ என எண்ணியவளாக அஜய்யின் எண்ணுக்கு அழைத்தாள்.

“நான் வந்துட்டேன். ரூமில் தான் இருக்கேன்” என்று இரும்பை முழங்கிய இறுக்கத்தோடு, அவள் கேட்கும் முன்பு அவளுக்கான பதிலை சொல்லி வைத்துவிட்டான்.

அப்போது தான் கதவு உள்பக்கம் பூட்டியிருப்பதை கவனித்தாள்.

“சாப்…” அவள் முடிக்கும் முன் பட்டென்று வைத்திருந்தான்.

அவனுக்கே அவளிடம் இப்படியெல்லாம் நடந்துகொள்ள நெஞ்சம் முரண்டியது. எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அவளுடன் சகஜமாக வாழ ஆரம்பித்து விடலாமா என பலமுறை சிந்தித்து பார்த்துவிட்டான், அவனால் அது நிச்சயம் முடியாது என்பதே அவனது பதிலாக வருகிறது.

துரோகம் எனும் வரையறைக்குள் சிக்கித் தவித்தான்.

யாழின் பொறுமை கரை கடக்கும் வேலை, அதிக வதை அவனுக்குத்தான். உணர்ந்தே இருந்தான். அவள் பொறுமை இழக்க  வேண்டுமென்று தான் அவனும் எதிர்பார்க்கின்றானோ?

உணவு மேசை அருகில் சென்ற யாழினி, அஜய் உண்டு இருக்கிறானா என்பதை ஆராய்ந்து அனைத்தும் எடுத்து வைத்து ஒழுங்குப்படுத்திவிட்டு புத்தகங்களோடு மேலேறி வந்தாள்.

அறை வெளிச்சமாக இருந்தது.

அஜய் இன்னும் உறங்கவில்லை என பெருமூச்சோடு அறைக்குள் நுழைந்தாள்.

புத்தகங்களை டீபாய்  மீது வைத்த யாழினி, அஜய் பால்கனியில் நின்றிருக்க, அங்கு சென்று அவன் பின்னால் நின்றாள்.

பால்கனியின் கம்பியை பிடித்திருந்த  பிடியின் இறுக்கத்தில் தெரிந்தது, அஜய்யின் மனப்புழுக்கம்.

“மாமா…”

அவளின் அழைப்புக்கு அவனது மனம் குளிர்ந்தது. இருப்பினும் அவனிடம் அழுத்தம். அந்த அழுத்தத்தை உடைத்துக்கொண்டு அவனால் வெளிவர முடியவில்லை.

“என்கிட்ட பேச மட்டுமாவது செய் மாமா. நான் எதையும் எதிர்பார்க்கல” என்றவள் முட்டி வர துடித்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு, “முன்னலாம் திட்டன்னே மிளகாய் மாதிரி கோபமா பேசுவியே, அப்படியாவது பேசு மாமா. நீ பேசாம எதுவுமே இல்லாத மாதிரி இருக்கு” என்று இறுதியில் உடைந்து அழுதுவிட்டாள்.

வேகமாக திரும்பி அவளை இழுத்து தன் மார்பிற்குள் அடைத்துக் கொண்டான். அப்படியொரு இறுக்கம் அவனது கைகளில்.

அவளை விட்டு விலக வேண்டும். நாளுக்கு நாள் அவளுக்கு துரோகம் இழைத்ததன் வலி அவனுக்கு கூடிக்கொண்டே செல்கிறது. அதுவும் அவள் பக்கத்தில் காதலாக அனைத்தும் செய்துகொண்டிருக்க, அவளின் காதலில் கரைந்து கரை சேர முடியாத வதை கொஞ்சம் கொஞ்சமாக அவனை சிதைத்துக் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் யாரிடம் காட்டுவது என்று தெரியாது மருகி நின்றவன், தன் அணைப்பின் அழுத்தத்தில் தன்னை அறியாது காட்டத் துவங்கியிருந்தான்.

ஓரளவிற்கு அஜய்யின் இறுக்கமான அழுத்தம் கொடுக்கும் அணைப்பை ஏற்றுக் கொண்டவளுக்கு வலிக்கவே செய்தது. அவளுக்கும் அவனின் நெருக்கம், ஓய்ந்து கதறும் மனதுக்கு வேண்டுமாக இருக்க விரும்பியே ஏற்று அவனுள் அடங்கியிருக்க, நேரம் செல்ல செல்ல உடலில் வலி கூடியது. அஜய்யின் இறுக்கம் தளர்வதாக இல்லை.

“மாமா வலிக்குது.” ஒருகட்டத்தில் வாய் திறந்து சொல்லிவிட்டாள்.

இழுத்து அணைத்த அதே வேகத்தோடு விலக்கியும் நிறுத்தியிருந்தான்.

யாழின் சிவந்த மேனியில் அவனது பிடியினால் உண்டான தடம், புஜத்தின் அருகே தெரிந்திட, தன்னையே நிந்தித்தான். அதீத கோபம் தன் மீதே.

“இதுக்குத்தான்… இதுக்குத்தான் சொன்னேன். என்கிட்ட வராதேன்னு. உன்னை நானே கஷ்டபடுத்திட்டு இருக்கேன். இது எனக்கு இன்னும் வலி கொடுக்குது உனக்கு புரியுதா? என் முன்னாடி நிக்காதே போடி” என்று கத்திய அஜய், பால்கனி கதவை அறைந்து சாற்றி அறைக்குள் நுழைந்து படுத்துவிட்டான்.

எத்தனை நேரம் கண்ணீர் உகுத்தபடி பால்கனியில் நின்று கொண்டிருந்தாளோ… குளிர் மேனியில் நடுக்கம் கொடுக்க, பாதத்தின் மரப்பு நிலை உணர்ந்து அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்து கால்களைக் கட்டிக்கொண்டு இருள் வானை வெறித்தாள்.

எத்தனை அழகாக தொடங்கிய காதல் அவளுடையது. தற்போது அந்த கரிய இருட்டுக்கு இணையாக இருண்டுக் கிடக்கிறது.

யாழுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இதற்கெல்லாம் பதில் நிதிஷாவிடம் தான் உள்ளது. அவளாக சொல்ல வேண்டும். அவளை எப்படி தொடர்புகொள்வது? யோசித்தவளாக அமர்ந்த நிலையிலேயே உறங்கிப்போனாள்.

அறைக்குள் வந்து படுத்த அஜய்க்கு உறக்கம் சற்றும் வரவில்லை. எழுந்து அங்குமிங்கும் நடந்தான். அவன் அமைதிகொள்ளும் இடம் அவனவள் அல்லவா.

அறைக்குள்ளிருந்தே எட்டிப்பார்த்தான். யாழி உறங்கிவிட்டது தெரிந்தது. மெல்ல அவள் உணராது மனையாளை மலர் கொடியென ஏந்தியவன், தன் மார்போடு உரசி நின்ற அவளின் முகம் பார்த்து…

“நான் உனக்கு வேணாம் சொல்றேன். என்னைவிட்டு போகமாட்டியா அம்மு. நான் தப்பு செய்திட்டேங்கிறதைவிட, உனக்கு உண்மையா இல்லைங்கிறது தான் அதிக வலி கொடுக்குது” என்றான். அவனின் கலங்கிய விழிகளிலிருந்து ஒரு சொட்டு நீர் அவளின் நெற்றி சொட்டியது.

“அம்மு” என்று ஓசையின்றி அழைத்தவன், உள்ளே சென்று படுக்கையில் கிடத்தி தானும் படுத்தவன், அவளை தன் மார்பில் இழுத்து போட்டுக் கொண்டவனாக கண்களை மூடிக் கொண்டான்.

யாழின் இதழ் மென்மையாய் விரிந்தது.

இந்த ஒரு செயல் போதுமே, அவனுடனான தன்னுடைய வாழ்வு விரைவில் மலர்ந்துவிடும் என்று அவள் நம்பிக்கை வலுப்பெற.

‘சீக்கிரம் எல்லாம் சரியாகிடும் மாமா.’ மனதோடு சொல்லிக் கொண்டாள்.
___________________________

தேர்வுகள் முடிந்திருக்க, கல்லூரி விட்டு கிளம்பிய யாழி நேராக சென்றது அஜய்யின் ஸ்டுடியோவிற்கு தான்.

அன்று ஒரு விளம்பரம் காட்சியாக்கப் பட்டுகொண்டிருக்க அவ்விடம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

யாழினியை கண்டு விட்டு அருகில் வந்த நிகில்…

“வாம்மா” என்றான்.

“மாமா எங்கண்ணா?”

“அதோ இருக்கானே” என்று நிகில் கை காட்டிட, கிரேன் மீது அமர்ந்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் அஜய்.

மேலிருந்து கீழே அனைத்தும் தெரியும்படி காட்சி எடுத்திட, உயரத்தில் கிரேன் மீது காமிராவோடு அமர்ந்திருந்தான் அஜய்.

விழி உயர்த்தி பார்த்த யாழி, அவனது பார்வை விலகியதும் சுருண்ட மனதை எல்லாம் சரியாகிவிடுமென இழுத்துப் பிடித்தாள்.

“இவன் ஏன் யாழி இப்படியிருக்கான்?”

சட்டென்று நிகில் அப்படி கேட்பானென நினைக்காத யாழி, “எப்படி?” எனக் கேட்டாள்.

“அவனோட மாற்றம் உனக்குத் தெரியலையா?” என்ற நிகில், “ஆனால் இவன் பழைய அஜய் மாதிரியே இல்லை” என்றான்.

“எனக்கு நிதிஷா காண்டாக்ட் நெம்பர் வேணுமே” என்றாள்.

“அவளோடது உனக்கு எதுக்கு யாழி. நானும், அஜய்யும் கூட வொர்க் அப்படின்னா மட்டும் தான் டச்சில் வச்சிப்போம்” என்ற நிகில், “அவளுக்கு லாஸ்ட் மந்த் மேரேஜ் அப்படின்னு இன்வைட் பண்ணியிருந்தாள். அஜய் போக வேண்டாம் சொல்லிட்டான்” என்றான்.

“ஹோ” என்ற யாழி, அங்கிருந்த இருக்கையில் ஓய்ந்து அமர்ந்தாள்.

“யாழ் என்னடா?”

கண்ணில் திரண்டுவிட்ட நீரை நிகிலிடம் மறைக்க முடியாது கன்னம் வழியவிட்டிருந்தாள்.

நிகில் பதறிப்போனான்.

அஜய்யை பார்க்க… அவனோ வெலையில் கண்ணாக இருந்தான்.

“டேய் என்னாச்சுடா?”

“நான் திலீப்பை நேரில் பார்க்க முடியுமாண்ணா?” முகத்தை துடைத்திருந்த போதும், குரலில் தழுதழுப்பை அவளால் அடக்கிட முடியவில்லை.

“அவனா… ஏன்?”

“தப்பா எடுத்துக்காதீங்க… காரணம் சொல்ல முடியாது” என்றாள்.

“எதுவும் பிரச்சினையா யாழி? என்னவா இருந்தாலும் அஜய்கிட்ட சொல்லு, சரி பண்ணிடுவான். உனக்கு ஒன்னுன்னா அவன் உயிர் அவன்கிட்ட இருக்காது” என்றான். நண்பனின் காதலின் ஆழம் அறிந்தவனாக.

“அந்த காதலை அனுபவிக்க முடியாம போயிடுமோன்னு தான் பயமா இருக்கு” என்ற யாழி, “பிளீஸ் நிதிஷா நெம்பர் கொடுங்க” என்றாள்.

“அஜய்கிட்டவே இருக்குமே” என்ற நிகில், “அவங்களால் உனக்கு எதுவும் பிரச்சினையா யாழி. அஜயிடம் சொல்லு” என்ற நிகிலுக்கு விரக்தியாக ஒரு புன்னகையைக் கொடுத்த யாழி, “தர முடியாது சொல்றீங்க. இட்ஸ் ஓகே” என்றாள்.

“அப்படியில்லை யாழி… நீ நினைக்கிற மாதிரி நிதிஷா பழக சரியான ஆளு கிடையாது. திலீப் கூட ஃபிரண்ட்லி டைப் கிடையாது. அவங்களோட உனக்கெதுக்குப் பேச்சு” என்றான்.

“ம்ம்… நான் கேட்டேன்னு உங்க ப்ரெண்ட் கிட்ட சொல்லாதீங்க” என்றவள், “ஷூட் எப்போ முடியும்?” எனக் கேட்டாள்.

“நைட் ஆகும்.”

“ம்ம்… நான் மாமா ரூமில் இருக்கேன்” என்று எழுந்து சென்றுவிட்டாள்.

செல்லும் யாழியையே பார்த்திருந்த நிகிலுக்கு, ‘அஜய்க்கும் இவளுக்கும் நிதிஷாவால் எதுவும் பிரச்சினையா இருக்குமோ?’ என்று சந்தேகம் எழுந்தது.

இதனை அஜய்யிடம் கேட்டிட முடியாது. கேட்டாலும் சொல்லிடமாட்டான்.

அஜய்யின் அழைப்பில் தன் வேலையை பார்க்க நகர்ந்தான்.

அனைத்தும் முடிந்து எடுத்து வைத்து நிமிர, நேரம் ஒன்பதை கடந்திருந்தது.

“யாழ் அப்போவே போயிட்டாளா?”

கேட்ட அஜய்யை ஒரு மாதிரி பார்த்த நிகில்…

“அவள் உன் ரூமில் தான் இருக்காள்” என்றான்.

“ஹோ…”

நிகில் எதுவும் கேட்டுவிடுவானோயென அஞ்சிய அஜய், “செட் பிராபர்ட்டிஸ் அரெஞ் பண்ணதும் நீ கிளம்பு” என்று சொல்லிவிட்டு தனது அறை நோக்கி நகர்ந்தான்.

“எதுவும் மறைக்கிறியா மச்சான்?”

அஜய்யின் நடை நின்றது.

“இருந்தால் உன்கிட்ட சொல்லமாட்டனா?”

“சொல்லலன்னு தான் தோணுது” என்றான் நிகில்.

நண்பனை திரும்பி பார்த்த அஜய்,

“பெர்சனல்” என்று பார்வையில் அழுத்தம் காட்டி சென்றிருந்தான்.

அவன் சொல்லிச் சென்றதில் அதிர்வு என்றாலும் நிகிலுக்கு இனி தான் இதைப்பற்றிக் கேட்டிடவே கூடாதென்று வேண்டுமென இப்படி சொல்லிச் செல்கிறான் என்ற புரிதலில் புன்னகை எட்டிப்பார்த்தது.

அறைக்குள் வந்த அஜய்,

கோச்சில் தூங்கிக் கொண்டிருந்த யாழின் பக்கம் சென்று நின்றான்.

“யாழ்…” இருமுறை அழைத்தவன், அவளின் தோள் தொட்டு “யாழ்” என அசைக்க…

“மாமா” என்று வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

“ரிலாக்ஸ்… நான் தான்” என்றவன், “கிளம்பலாம்” என்று முன் சென்றான்.

அவன் பின்னோடு வந்த யாழி தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுக்க,

‘என்னோட வண்டியிலே போகலாம்’ என அழைத்திடமாட்டானா? தயங்கித் தயங்கி தன் வண்டியில் அமர்ந்து உயிர்பித்தாள்.

அவளின் எண்ணம் புரிந்த போது காட்டிக்கொள்ளாது,

“முன்னால் போ” என்றான்.

வீட்டிற்குள் நுழைந்ததும்,

“சிஐடி வேலை பாக்கிறது எல்லாம் வேணாம்” என்று சீரலாக உறுமியிருந்தான்.

______________________________

ஸ்டுடியோவில் இருந்து யாழினியை அழைத்துக்கொண்டு வரும்போதே அஜய்யிடம் அத்தனை கோபம்.

அஜய் நினைத்தால் ஒரு நொடியில் நிதிஷாவிடம் கேட்டு விடலாம். இவன் கேட்டு அவள் ஆம் என்று சொல்லிவிட்டால் அதன் பிறகு செய்யாமல் ஒருவேளை இருந்திருப்போமோ, அது நடந்திருக்காதோ ,எனும் குறைந்தபட்ச அவனளவில் உள்ள புள்ளி அளவு நம்பிக்கையும் காணாமல் போய்விடுமே! அவன் மீதான அவனுக்கிருக்கும் சிறிய உறுதியும் தொலைந்து விடுமே. அதற்கு பயந்தே அஜய் நிதிஷாவிடம் எதுவும் கேட்காமல் இருக்கின்றான்.

அவனைப் பொறுத்தளவில் நடந்துவிட்ட ஒன்று நடந்து முடிந்துவிட்டது. அது அவனே எதிர்பாராது, அவனறியாது நடந்தது. அதை தாண்டி அவனால் வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை.

இதில் யாழினிக்கு துரோகம் இழைத்து விட்டதாக அவனே அவனை வருத்திக் கொள்வது மட்டுமல்லாமல் யாழியையும் சேர்த்து வதைத்து கொண்டிருக்கிறான்.

அஜய்யின் பெரும் வலியே அவன்மீது அவனுக்கே இல்லாத நம்பிக்கை யாழி வைத்திருப்பது தான்.

இதில் யாழினி உண்மையை கண்டுபிடிக்கிறேன் என நிகிலிடம் விசாரிப்பது அவனுள் அத்தனை கோபத்தை உண்டாக்கியது.

வீட்டிற்குள் நுழைந்ததும் “இந்த சிஐடி வேலை பார்ப்பதெல்லாம் வேண்டாம்” என்று கர்ஜித்தான்.

அவனது கோபத்தில் உடலில் தோன்றிய நடுக்கத்தை மறைத்து, திடமாக தன்னைக் காட்டிக்கொண்ட யாழி, “உண்மை என்னன்னு தெரியாம நீ இப்படி இருக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு மாமா. நீயும் இப்படியே இருந்தா நம்ம வாழ்க்கை?” என யாழினி கேள்வியாய் அவனை ஏறிட, அஜய் தன் கை முஷ்டியை இறுக்கி மடக்கி சுவற்றில் ஓங்கி குத்தினான்.

“மாமா என்ன பன்ற நீ.” வேகமாக அவனருகில் வந்து கையை பிடித்து தடுத்தாள்.

“விடு யாழினி” என்று கத்தியவன், “பேசாம என்னை கொன்னு போட்டுடு” என்று தரையில் மடங்கி அமர்ந்து வெடித்துக் கதறினான்.

“சரி செத்துப்போகனும் அப்படின்னா ரெண்டு பேரும் ஒண்ணாவே, இப்போவே சாகலாம். நான் ரெடி. உன்கூட வாழ கொடுத்து வைக்கல. சேர்ந்து சாகவாவது வாய்ப்புக் கொடு” என்றவள் கன்னம் வழிந்த கண்ணீரை வேகமாகத் துடைத்துக்கொண்டு அவன் முன் அமர்ந்தாள்.

“ஐயோ படுத்தி வைக்காத யாழினி.” அஜய் கோவத்தின் உச்சத்தில் இருந்தான். தன் மீது தனக்கே இருக்கும் ஒட்டுமொத்த கோபத்தின் பிரதிபலிப்பை யாழினியிடம் இறக்கிக் கொண்டிருந்தான். அதை அவனே உணரவில்லை.

“என்ன உனக்கு, உன்னோட வாழ்க்கை வீணா போயிடுச்சு அது தானே?” எனக் கேட்டவன், “டிவோர்ஸ் பண்ணிக்கலாம்” என்று அலுங்காது அவளின் தலையில் இடியை இறக்கி, இதயத்தை இரண்டாக பிளந்திருந்தான்.

“மாமா…”

“எஸ்… ஐ நீட் அ பீஸ். நான் தப்பு பண்ணிட்டேங்கிறதை விட, உனக்கு துரோகம் பண்ணிட்டேன். உன்னோட வாழ்க்கையை தெரிஞ்சே வீணாக்கிட்டு இருக்கேங்கிற குற்றவுணர்வு தான் என்னை படுத்தி வைக்குது. பிளீஸ் என்னைவிட்டு போ” என்று வீடே அதிர உரக்கக் கத்தினான்.

“இதுக்கு நீயென்ன அன்னைக்கே சாக விட்டிருக்கலாம் மாமா” என்ற யாழினி, கண்ணீரோடு படியேறி சென்றுவிட்டாள்.

சொன்ன வார்த்தையின் பொருளில் அஜய்யின் வலி மேலும் அதிகமாகியது.

காந்தள் இங்கிருந்து போனதிலிருந்து, இருவர் இருந்த போதும் வீடு எப்போதும் நிசப்தம் தான். இன்று அதற்கு மேல் ஆழ்ந்த அமைதி.

அஜய் மௌனமாக இருந்தாலும், அவ்வீட்டில் யாழின் நடமாட்டம் இருக்கும். அவளின் கொலுசு சத்தம் அவனது செவியை நிறைத்தபடி இருக்கும். இன்று அவ்வொலி இல்லாது அஜய்க்கு மொத்த உலகும் இருண்ட உணர்வு.

இரண்டு மணி நேரங்கள் கழிந்த பின்னரே சுயம் மீண்டு தங்கள் அறைக்குள் வந்தான்.

மெத்தையில் சுவற்றை ஒட்டி சுருண்டு படுத்திருந்த யாழி உறங்கியிருந்தாள். அறை இருளில் மூழ்கியிருக்க விடிவிளக்கை உயிர்ப்பித்து அவளின் காலருகில் அமர்ந்த அஜய்க்கு அவளின் அழுது சிவந்து, வீங்கியிருந்த முகம் வதை கொடுத்தது.

அழுது களைத்து தானாக தூங்கியிருக்கிறாள் என்பது தெரிந்தது.

“இதுக்கு தான் அப்போவே கல்யாணம் வேணாம் சொன்னேன். உன்னை நானே அழ வைக்கிறேன்” என்று தன் கன்னத்திலேயே அறைந்துகொண்ட அஜய், அவளின் குறுகியிருந்த கால்களை நீட்டிவிட்டு, போர்வை போர்த்தி, அவளின் கன்னத்தில் தனது உள்ளங்கை வைத்து அழுத்தினான்.

‘எத்தனை அழகாய் இருந்திருக்க வேண்டிய வாழ்க்கை.’ மனதில் கவலையாக நினைத்தவன் எழுந்து  பால்கனி சென்று இருக்கையில் அமர்ந்தான். இருள்வானை வெறித்தவாறு உறங்கிப் போனவனுக்கு தன்னுடைய சோதனை காலம் இன்னும் முடியவில்லை என தெரிந்திருக்கவில்லை.

ஏற்கனவே சுமக்க முடியா ரணம் சுமந்து கொண்டிருப்பவனை மேலும் வதை செய்திடவே, விடியலில் வந்து சேர்ந்தாள் நிதிஷா.

கீழே அழைப்புமணி ஒலிக்கவே, மெல்ல கண் திறந்து எழுந்தாள் யாழி. எப்போதும் விரைந்து எழுந்துவிடுவாள். இரவின் வலியின் மிச்சம் மனதையும் சோர்வடையச் செய்திருக்க, விடியலை உணரவில்லை.

கண் திறந்து எழுந்து அமர்ந்த யாழி, பக்கத்தில் அஜய் இல்லையென்றதும், ‘ரூமுக்கே வரலையா?’ என அதிர்ந்து பால்கனி சென்று பார்க்க, கால்களுக்கு ஒரு இருக்கை வைத்து நீட்டி அப்படியே உறங்கிக் கொண்டிருந்தான்.

எழுப்ப முயன்ற யாழ் மீண்டும் கேட்ட அழைப்பு மணி ஒலியில் வேகமாக கீழே சென்று கதவினை திறக்க, நிதிஷா நின்றிருந்தாள். கையில் பெட்டியுடன்.

பார்த்ததும் பெரும் அதிர்வு. ஆனால் யாழி காட்டிக்கொள்ளவில்லை.

“வாங்க” என்று இன்முகமாகவே வரவேற்று அமர வைத்தாள்.

‘இப்போ என்ன பிரச்சினையை உண்டாக்க வந்திருக்காள் தெரியலையே!’ மனதில் பயம் பற்றிக் கொண்டாலும், வெளியில் ஒட்ட வைத்த புன்னகையுடன் நின்றிருந்தாள் யாழி.

“ஹாய் யாழ்” என்ற நிதிஷா, “அஜூ எங்கே?” என ஹிந்தியில் கேட்டு, யாழி பதில் சொல்லும் முன்பு, அவளுக்கு ஹிந்தி தெரியாதென திருப்பி ஆங்கிலத்தில் கேட்டாள்.

“தூங்கிட்டு இருக்காங்க.” ஹிந்தியில் சொல்ல முயன்ற யாழ், ஏனோ ஆங்கிலத்திலேயே பதில் உரைத்திருந்தாள்.

இந்த ஹிந்தி யாழுக்கு தெரியாது என்ற எண்ணம் தான் உண்மையை கண்டறிய பெரும் பங்கு வகிக்க இருக்கிறது.

“கொஞ்சம் இருங்க இதோ வந்துடுறேன்” என்று மாடியேறிய யாழி, அஜய்யை எழுப்பினாள்.

உறக்கத்தில் தெளிவில்லாது கண்கள் திறந்து மூடிய அஜய், “அம்மு” என்று யாழியை இழுத்து தன் மடியில் அமர்த்தியவனாக கைகளால் அரண் அமைத்து கட்டிக்கொண்டான்.

“மாமா!” யாழின் குரல் காற்றாய் ஒலித்தது.

“பிளீஸ் அம்மு. கொஞ்ச நேரம் இப்படியே இரு. நிம்மதியா இருக்கு” என்ற அஜய், அவளின் நெருக்கம் தந்த இதத்தில் மேலும் சுகமாய் உறங்கினான்.

அஜய் நிம்மதியா இருக்கு என்று சொன்னதில் கலங்கிய கண்களை சரிசெய்து, அவனின் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்.

தற்போது அவன் தேவையற்ற நிகழ்வுகள் எதையும் நினையாது, உறக்கத்தில் நிர்மலமான மனதுடன் இருக்கிறான் என்பது புரிந்தது.

“முழிச்சிருந்தால் இப்படி என்னை உன் பக்கத்தில் இருக்க வச்சிருப்பியா மாமா?” என்று அவனின் மூக்கை பிடித்து நிமிண்டியவள், “நீ எந்த தப்பும் பண்ணியிருகிமாட்ட மாமா. கொஞ்சம் இந்த கோணத்திலும் யோசித்துப் பாரு மாமா” என்று அவனின் இதயத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.

தேக சிலிர்ப்பை உணர்ந்த அஜய்யின் இதழ்கள் வெகு நாட்களுக்குப் பின்னர் அழகாய் மலர்ந்தது.

“லவ் யூ அம்மு.” சொல்லியவன் துயில் கலையவில்லை.

சூரியன் சுள்ளென்று முகம் மோத மெல்ல கண்களை திறந்தான். மடியில் பாரம் உணர்ந்த அஜய், தன்னில் நெருக்கமாய் பதிந்திருந்த மனைவியின் மதி முகத்தை இமைக்காது பார்த்திருந்தான்.

‘எப்போ வந்தாள்?’

கணவனின் நெருக்கம் கிட்டிய மகிழ்வில் நிதிஷாவை மறந்தவளாக உறங்கியிருந்தாள்.

“என் மேல கோபம் இல்லையாடி” என்று அவளின் கன்னம் கிள்ளிய அஜய், “ரொம்பவே கஷ்டப்படுத்துறேன்” என்றான். கண்கள் பனித்திட, அவளின் கழுத்தில் முகம் புதைத்து மறைத்தான்.

அஜய்யின் அசைவில் யாழி விழித்துக்கொள்ள, சட்டென்று முகத்தில் கடுமையை படரவிட்டான்.

“எழுந்துட்டியா மாமா” என்று நிமிர்ந்து அவன் மீதே சரியாக அமர்ந்த யாழி, “லவ் யூ மாமா” என்று அவனின் கன்னத்தில் தன் உள்ளங்கை வைத்துக் கூற, கரையும் மனதை முயன்று இறுக வைத்தான்.

“உன்னை எழுப்ப வந்து அப்படியே தூங்கிட்டேன்” என்ற யாழி, “நிதிஷா வந்திருக்காங்க” என்றாள். சாத்ரணமாக.

இரும்பாய் கடுமை சுமந்து விறைத்தவன், யாழியை வேகமாக மடியிலிருந்து எழுப்பி, கீழே செல்ல அடி வைக்க…

“எங்க மாமா போற?” எனக் கேட்டு, அவனின் கையை பிடித்து தடுத்திருந்தாள் யாழினி.

“அவகிட்ட கேட்கணும்.”

“என்னன்னு?”

திரும்பி முறைத்தான்.

“கொஞ்சம் நிதானமா இரு மாமா.”

“நிதானமா இருந்திருந்தா தான் பிரச்சினையே இல்லையே” என்ற அஜய், “என்ன பண்ண சொல்ற? அவளை கூப்பிட்டு விருந்து வைக்க சொல்றியா?” என கத்தினான்.

“சும்மா ஆத்திரப்படாத மாமா” என்ற யாழி, “என்னை பிடிக்குமா?” எனக் கேட்டாள்.

“சம்பந்தமில்லாமல் இப்போ இந்தக் கேள்வி எதுக்கு?”

“நீ சொல்லு மாமா.”

“பிடிக்கும்.”

“எவ்ளோக்கு?”

சூடாய் பார்த்தான்.

“பிளீஸ் மாமா.”

“உனக்குத் தெரியாதா? டென்ஷன் பண்ணாம நேரா சொல்லு” என்று பற்களைக் கடித்தான்.

“மிர்ச்சி மாமா” என்ற யாழி, “ஒருநாள் நீ எந்த தப்பும் பண்ணலன்னு உண்மை தெரியும். அப்போ உன்னை பார்த்துக்கிறேன் இரு” என்றதோடு, “எதையும் காட்டிக்காம சகஜமா போய் பேசு” என்றாள்.

“எப்படிடி?”

“உன்னை நான் நம்புறேன்” என்ற யாழி, “தூக்கத்துல உளருனியே… அந்த மாதிரி என்கூட சந்தோஷமா வாழணும் ஆசையே இல்லையா மாமா உனக்கு?” எனக் கேட்டிருந்தாள்.

“தூக்கத்தில்…” அஜய் இழுக்க, “இப்போ அது முக்கியமில்லை. உனக்காக வேண்டாம். எனக்காக, நமக்காக ஒருமுறை உண்மை என்னன்னு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணு மாமா” என்று மன்றாடினாள்.

“அன்னைக்கு அந்த வீவ் எல்லாம் அப்படித்தான் சொல்லுது யாழ்.” எங்கோ வெறித்துக் கொண்டு கூறினான்.

“நான் உன்னை அப்படியொரு சூழலில் நேரிலே பார்த்திருந்தாலும், நம்பியிருக்க மாட்டேன் மாமா. சும்மா அதையே சொல்லிகிட்டு, கடியாக்காது மாமா. எனக்காக கொஞ்சம் நிதானமா யோசி மாமா” என்றாள்.

“அய்யோ யாழ்” என்று வெடித்த அஜய், “என்னை இவ்ளோ நம்பாதடி. இதுதான் உண்மையா இருந்தால் உனக்குத்தான் கஷ்டம்” என்றான்.

“உண்மையா இருந்தாதானே” என்ற யாழி, “சும்மா மிளகா மாதிரி நெடி காட்டாத மாமா. எனக்கு நீ வேணும். நீ எதுவும் பண்ண வேண்டாம். நான் கண்டுபிடிக்கிறேன். நீ கொஞ்சநாள் அமைதியா இருந்தா போதும்” என்றாள்.

“ஓகே நான் அமைதியா இருக்கேன். சப்போஸ் இதுதான் நிஜம் அப்படின்னா, எனக்கு நீ டிவோர்ஸ் கொடுக்கணும்” என்றான்.

கண்ணில் நீர் இறங்க அவனை அதிர்ந்து பார்த்த யாழி, தற்சமயத்திற்கு அவனை அமைதியாக வைத்திருக்க சரியென ஒப்புக்கொண்டாள்.

“அப்போ கையெழுத்துப் போடு” என்று பத்திரத்தை அவள் முன் நீட்டியிருந்தான்.

 

Epi 16

நீதான் என் காதல் மழை 16

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
47
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்