நீதான் என் காதல் மழை 14
மாடியேறி அறையின் முன்பு வந்து நின்ற யாழினிக்கு அன்றைய நாள் குறித்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை.
அவளுக்கு அவளை விட அவளவனின் மன அமைதி முக்கியம்.
எப்படியும் கடிந்து கொள்வான், பாராமுகம் காட்டுவான். எல்லாம் எதிர்பார்த்துதான் வந்திருந்தாள். கிட்டத்தட்ட அவனை தன் காதலுக்கு அடிபணிய வைத்து தாலி கட்ட வைத்திருக்கிறாள். அவனிடம் அதற்கான சின்ன பிரதிபலிப்பு கூட இல்லை என்றால் எப்படி!
மூச்சினை ஆழ்ந்து இழுத்து வெளியேற்றியவள்,
‘தாலி கட்ட வச்சது பெருசில்லை யாழி, இனி அவரு ஆடும் ஆட்டத்தை சமாளிக்கிறது தான் பெருசு.’ மனதோடு புலம்பியவளாக கதவில் வைத்திட, உள்பக்கமாக தாழிட்டிருந்தான்.
“ஆரம்பிச்சிட்டாங்க” என்று வாய்விட்டு முனகியவள், “அடேய் அருளு… உன் அம்மு பாவம்டா” என்றவளாக கதவினைத் தட்டினாள்.
அங்கிருந்து எவ்வித அரவமும் இல்லை.
“மாமா கதவை திற.” பலமுறை கதவினைத் தட்டி அழைத்து பார்த்தும் அவன் அசைந்து கொடுத்தான் இல்லை.
அவளின் ஓசையை கேட்டுக் கொண்டு மெத்தையில் கண்களை கை வைத்து மூடியவனாக அசைவின்றி கிடந்தான்.
அவனால் நடந்த திருமணத்தை மனதார ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தான் உயிராய் நேசிக்கும் பெண்ணிற்கு தானே துரோகம் இழைத்த வலி என்பதை விட பெரும் குற்ற உணர்வு அவனை நிதானமாக நடக்க விடாது தடுத்துக் கொண்டிருக்கிறது.
உள்ளுக்குள்ளே பெரும் போராட்டமாக உணர்ந்தான்.
என்ன இருந்தாலும் தான் காதலிக்கும் பெண்ணிற்கே துரோகம் இழைத்ததை, அவளே அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்று சொல்லிய போதும் அவனால் ஒப்ப முடியவில்லை.
அவன் மீது அவனுக்கே நம்பிக்கை இல்லாதபோது அவள் கொண்ட பெரும் நம்பிக்கை அவனை மேலும் வலிக்க வலி கொடுத்தது.
‘என்னை ஏண்டி நீ இவ்ளோ லவ் பண்ற?’ மனதோடு அரற்றியவனின் நெஞ்சமெங்கும் தீக்கங்குகள் எரியும் எரிச்சல்.
“இப்ப நீ கதவை திறப்பியா மாட்டியா மாமா?”
அவளின் குரலை அவனால் அலட்சியம் செய்ய முடியவில்லை. கவிழ்ந்து படுத்து தலையணையை தலைக்கு மேல் வைத்து அழுத்தி காதுகளை மூடிக் கொண்டான்.
“மாமா கால் வலிக்குது. கதவு திற.”
“இப்ப நீ கதவை திறக்கல, நான் கதவை உடைத்துக்கிட்டு வந்துடுவேன். செய்ய மாட்டேன்னு நினைக்காத, நான் கண்டிப்பா செய்வேன்” என்ற யாழியால் கதவினை அசைக்க கூட முடியவில்லை.
கதவினை உதைத்தவள் அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் முகம் சுருக்கி அமர்ந்துவிட்டாள்.
அந்த நிசப்தமான இருளில் அவளின் வார்த்தைகள் அவனுக்கு கேட்க தான் செய்தது இருந்தாலும் அவளை தன் அருகில் அனுமதித்திட அவன் மனம் அவனுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அவனும் என்ன செய்வான் மனதால் மிகவும் நல்லவனாக இருப்பவனுக்கு தன்னைக் குறித்து, தன் செயலின் மீது அத்தனை இறக்கமாக இருந்தது.
சத்தமின்றி இருந்தால் கொஞ்ச நேரத்தில அமைதியாக அவனே வந்து கதவினை திறப்பான் என்று நினைத்த யாழினி ஒரு மணி நேரம் கடந்த நிலையில் ஏமாந்துப் போனாள்.
மீண்டும் சென்று கதவை தட்டினாள். கத்தி பார்த்தாள், கிணற்றிலிட்ட கல்லாக அவ்வளவு அமைதி அவனிடம்.
“அய்யோ பசிக்குதே! கத்துன கத்துல வயிறு டயர்ட் ஆகிடுச்சு” என்றவள் சொம்பில் கொண்டு வந்திருந்த பாலினை ஒரே மடக்கில் வாயில் சரித்துக் கொண்டாள்.
“இப்போ தான் தெம்பு வந்த மாதிரி இருக்கு” என்றவள், “மாமா தூக்கம் வருது. இங்க சில்லுன்னு குளிரா இருக்கு. பிளீஸ் கதவை திற” என்றாள்.
அவள் குளிருது என்றதும் பட்டென்று எழுந்தவன், கதவினை திறந்த வேகத்திற்கு, அவளின் முகம் காணாது, போர்வையை அவள் மீது தூக்கிப்போட்டுவிட்டு, யாழ் சுதாரிக்கும் முன்பு மீண்டும் கதவினை அடைத்திருந்தான்.
“இந்த அக்கறைக்கு ஒன்னும் குறைச்சலில்லை” என்று முணுமுணுத்த யாழி, “ரொம்ப பன்ற மாமா நீ” என்றாள்.
நீண்ட நேரம் நின்றவள், கால் வலிக்கவும் மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்து எப்படி கதவை திறக்க வைக்கலாம் என சிந்தித்தாள்.
அவசரத்திற்கு யோசனை எதுவும் வரவில்லை.
“பேசமா இங்கவே தூங்கிடுவோமா?” நினைத்த யாழி, “இன்னைக்கு தனியா தூங்கினா வரலாறு தப்பா பேசும். அதுக்கு ஒரு போதும் இந்த யாழி சம்மதிக்கமாட்டாள்” என சொல்லிக் கொண்டவளாக,
“மாமா பிளீஸ்… உன்னை தொந்தரவு பண்ணமாட்டேன். அமைதியா படுத்து தூங்கிடுவேன்” என்றவள் கதவில் முட்டி திரும்பி அதன் மீதே சாய்ந்து சரிந்து கீழே தரை அமர்ந்தாள்.
அத்தனை நேரம் இலகுவாக இருந்தவள் மனம் நொடியில் கனத்து போயிருந்தது.
அவனுக்காக தன்னை சாதரணமாகக் காட்டிக் கொண்டவளாள் அதற்கு மேல் முடியவில்லை. உடைந்து சத்தமின்றி கண்ணீர் வடித்தாள்.
என்ன தான் அஜய் தவறு செய்திருக்க மாட்டான் என்றாலும், அவனே திரும்பத் திரும்ப சொல்லும் போது, அவளுக்கு இதயத்தில் கத்தியை இறக்கிய வேதனை.
உண்மையை கண்டறியும் மார்க்கமும் அவளிடமில்லை.
“ஸ்விம்மிங் ட்ரெஸ்ஸில் வந்து நின்னாலும் எனக்கு கல்லையும் மண்ணையும் பாக்குற மாதிரிதான் இருக்கும்.” அஜய்யின் வார்த்தைகள் செவி நிறைக்க, கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.
“உன்னால் என்னைத் தவிர வேற யாரையும் சாதாரணமா பார்க்கக்கூட முடியாது மாமா” என்றவள், மொட்டை மாடி கதவை திறந்துகொண்டு சென்றாள்.
கதவு திறந்து மூடும் சத்தத்தில் யாழி தான், எதிரே இருக்கும் அறைக்கு சென்றுவிட்டாள் என்று நினைத்துக்கொண்ட அஜய் நெஞ்சத்தை மெல்ல நீவிக் கொண்டான்.
“இது உனக்கு நான் கொடுக்கிற தண்டனை இல்லைடி. எனக்கு நானே கொடுத்துக்கிற தண்டனை. நினைவு தப்பியிருந்தாலும் நான் செய்தது தப்பு தான். என் மேலிருக்கும் காதலால் என்னை நீ வேண்டுமானால் மன்னிக்கலாம், நம்பலாம். ஆனால் என்னால் முடியாது. உனக்கு எவ்ளோ பெரிய பாவம் பண்ணிட்டேன். உன்னை தள்ளி வைக்கிறது எனக்கு தாண்டி வலி” என்று புலம்பியபடி இருந்தவனுக்கு இனி வாழ்நாள் முழுவதும் நிம்மதியான தூக்கம் என்பது தூரம் தான்.
அணிந்திருந்த பட்டு வேட்டி சட்டை மேலும் ரணம் கொடுக்க, ஆடை மாற்ற எழுந்து சென்றான்.
அஜய் ஆடைமாற்றி வர, கட்டிலில் படுத்திருந்தாள் யாழினி.
அதிர்ந்து கதவினை நோக்கி சீரானான்.
பால்கனி கதவு திறந்திருக்க, அவள் வந்த மார்க்கம் புரிந்தது.
அஜய் கதவினை திறக்கப் போவதில்லை என்றதும், மொட்டை மாடி பக்கம் வந்த யாழி, அஜய்யின் அறையின் வெளிப்புறம் எட்டிப் பார்த்தாள். பால்கனி கதவு திறந்திருந்தது.
புடவையை இழுத்து சொறுகியவள், மொட்டை மாடி பக்கச் சுவற்றில் ஏறி நின்றாள்.
“கீழ மட்டும் பார்த்திடாத யாழி” என்றவள், பால்கனிக்கு மேலாக நீண்டு இருந்த சன்சடை கைகளை உயர்த்தி பற்றிக் கொண்டு தொங்கியவள், காலை ஆட்டி பால்கனி கம்பியின் மீது அழுத்தமாக ஊன்றி நின்று, மேலே பிடியை விட்ட அதே கணம் கம்பியைத் தாண்டி உள்ளே குதித்திருந்தாள்.
“இந்த மாமா ஸ்டண்ட் வேலையெல்லாம் பார்க்க வைக்குதே!”
குதித்த வேகத்துக்கு பால்கனி தரை உருண்டவள் இடுப்பை பிடித்துக் கொண்டு எழுந்து நின்றாள்.
அவள் பூந்தொட்டி மீது விழுந்திருக்க, உடைந்து அவ்விடம் மண்ணாகியிருந்தது.
அத்தொட்டியிலிருந்த மண்ணை குவித்து செடியின் வேரோடு அழுத்தி வைத்தவள், “உன்னை காலையில் சரி பண்ணிடுறேன்” என கைகளைத் தட்டிக்கொண்டு நிமிர்ந்தாள்.
அங்கிருந்த சிறு குழாயில் கையினை கழுவி, பால்கனி வாயில் திரையை மெல்ல விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தாள். அஜய் உள்ளறையில் இருப்பது தெரிய,
“இப்படியே சத்தமில்லாம போய் படுத்துடு யாழி” என்று வேகமாக ஓடிச் சென்று மெத்தையில் சுவற்றை ஒட்டி படுத்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அஜய் வரும் அரவம் உணர்ந்து மூச்சினை இழுத்து அசைவின்றி இருந்தாள்.
சில நொடிகள் அவளையே பார்த்து நின்றிருந்த அஜய், பெருமூச்சோடு அதிக இடைவெளியில் மற்றைய பக்கம் படுத்து கண்களை மூடிக் கொண்டான்.
ஆழ்ந்த அமைதி. இருப்பினும் இருவரிடையேயும் உறக்கம் இல்லை.
அதற்கு மேல் யாழியால் முடியவில்லை. திரும்பி படுத்தவள் அவன் முகம் பார்த்திருக்க…
நிமிர்ந்து படுத்திருந்த அஜய்,
“நான் எழுந்து வெளிய போகணுமா?” எனக் கேட்டிருந்தான். கண்களைத் திறக்காது.
“போ… நானும் வரேன்.” பட்டென்று சொல்லியிருந்தாள்.
“படுத்தாதடி” என்ற அஜய், அவளை வேகமாக இழுத்து தான் மேல் போட்டுக் கொண்டவனாக இறுக்கமாக கட்டிகொண்டான்.
அவனுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரே இடம் அவனவள் மட்டுமே!
அதுவரை அலைப்புற்று நிலையில்லா தவித்துக் கொண்டிருந்த அஜய்யின் மனம் மெல்ல அமைதிக்கொண்டது.
யாழுக்கு அவனின் அணைப்பில் மொத்தமாய் கட்டுண்டு போகும் ஆவல். அவன் அணைத்த போது அமைதி கொண்டவன், அவள் அணைத்த போது உண்மை கண்முன் எழுந்து மனதை சுட, வேகமாக அவளை உதறித் தள்ளி எழுந்து நின்றான்.
“மாமா…” அவளின் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது.
“இதுக்குத்தான்… இதுக்குத்தான் சொன்னேன். உன்னை காயப்படுத்திடுவேன் நினைத்து தான் இந்த கல்யாணம் வேண்டாம் சொன்னேன். என் மேலிருக்கும் கோபம் உன்கிட்ட திரும்பும் தெரிந்து தான் நீ வேணாம் சொன்னேன். இப்போ பாரு. இந்த கோபத்தை எப்படி யார்கிட்ட காட்டணும் கூட தெரியல” என்று தரையில் அமர்ந்த அஜய், படுக்கையில் கை வைத்து தன் தலை சாய்த்து முகம் மறைத்து கண்ணீர் சிந்தினான்.
மெத்தையில் கால்களை குத்திட்டு அமர்ந்து அவனையே பார்த்த யாழி, தன் கரம் நீட்டி அஜய்யின் உச்சியில் கை வைக்க, வேகமாகத் தட்டி விட்டான்.
அதே கணம் முகம் உயர்த்தாது தன் முன்னிருந்த அவளின் பாதத்தில் கை வைத்தான். மன்னிப்பு கேட்கும் விதமாக. தான் செய்த பாவத்தை அவள் பாதத்தில் போக்கிட நினைத்தானோ!
அவளின் பாத விரல்களை அழுத்தமாக பற்றிட, அவளிடம் வலியின் முனகல், அவன் கையில் ஈரத்தின் பிசுபிசுப்பு.
என்னவென்று மறைத்த முகம் நிமிர்த்தி விடிவிளக்கின் வெளிச்சத்தில் பார்க்க ரத்தத்தின் தடம்.
“அம்மு” என்று பதறி எழுந்த அஜய், மின் விளக்கை உயிர்ப்பித்து அவளின் பாதம் பார்த்தான்.
தொட்டி உடைந்ததில் அதன் முனை கிழித்து காயமாகியிருந்தது. அவளே அதனை தற்போதுதான் உணர்ந்தாள்.
“அறிவிருக்காடி… உயிர் மேல அவ்ளோ அலட்சியம். உண்மையிலே என் மேல காதல் இருந்தால், உன் மேல அக்கறையில்லாம இருப்பியா?” எனக் கேட்டு காயத்தினை சுத்தம் செய்து, மருந்திட்டான்.
யாழினி எதுவும் பேசாது, சிறு காயமென்றாலும் தனக்காக அவன் கொள்ளும் பதட்டத்தில் மறைந்திருக்கும் அவனின் காதலை உள்வாங்கியவளாக, அவனையே ரசித்திருந்தாள்.
அஜய் அவள் முகம் பார்ப்பதையே தவிர்த்திருந்தான். இந்நொடி வரை அவளின் முகம் பார்க்கவில்லை. அவனால் முயற்சித்தாலும் முடியவில்லை.
அவளுக்கு துரோகம் இழைத்த குற்றவுனர்வு அவளின் முகம் காண அனுமதிக்கவில்லை.
அப்படியே அவளின் மடியில் தலை வைத்து அழுகையில் குலுங்கிட்டான். யாழி அஜய்யின் கரங்களை பற்றிக்கொண்டு அவனது தலை மீது தன் தலை தாழ்த்திட,
அவளின் வலி நிறைந்த காதலை உணர்ந்திருந்த போதும் காட்டிக்கொள்ளாது எழுந்து சென்று விளக்கினை அணைத்து வந்தவன் படுத்துவிட்டான்.
கால்களைக் கட்டிக்கொண்டு அதில் தலை சாய்த்து கணவன் மீது நிலைத்துவிட்ட பார்வையை விலக்காத யாழி…
“ஒரு முத்தா கொடுத்துக்கவா மாமா?” எனக் கேட்டிருந்தாள்.
______________________________
மூன்று மாதங்களுக்குப் பிறகு,
குளித்து முடித்து ஸ்டுடியோவிற்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் அஜய். அவனுக்கு வேண்டிய அனைத்தையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் யாழினி.
இருவர் மட்டுமே தற்போது அவ்வீட்டில் இருக்கின்றனர்.
இருவரிடையே பேச்சு வார்த்தை என்பது முற்றிலும் இல்லை. அதிலும் பேச மறந்தவன் போல் அடமாக இருப்பது அஜய் மட்டுமே! யாழினி வழக்கம் போல் அவனிடம் தன் வாய் வார்த்தைகளைக் கொட்டிக் கவிழ்த்துக்கொண்டு தான் இருக்கிறாள்.
“நீ கேளு கேட்காமல் போ நான் உன்னோடு பேச வேண்டியதை பேசி தான் ஆவேன்” என்று இவளும் அவளிடத்தில் அடமாகவே இருக்கிறாள்.
அஜய்க்கு தான் செய்த பிழையிலிருந்து வெளிவரவே முடியவில்லை. அதிலும் தெரிந்தே தன் உயிரானவளுக்கு துரோகம் இழைத்து விட்டதாக, இன்னும் தன்னுடைய எண்ணத்தை சற்றும் மாற்றிக் கொள்ளாது தவிக்கிறான்.
ஒரே அறையில் வாசம். அவளின் முகம் பாரப்பதை முற்றிலும் தவிர்த்து வருகிறான்.
அவனால் முடியவில்லை.
மனதளவில் மிகவும் வாடிப்போனான். அது அவனது தோற்றத்திலும் தெரிந்தது.
யாழினி தன் காதலால் பலவற்றை செய்து பார்த்து விட்டாள். அவனின் மனமிறக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டிருக்கும் அவளின் முயற்சி தோல்விகளை மட்டுமே தழுவிக் கொண்டிருக்கிறது.
திருமணமான புதிது என்று இரண்டு மூன்று நாட்கள் காந்தள் மலை மீது இருந்தார். அதன் பின்னர் அஜய்யே சென்று அவரை அழைத்து வந்து விட்டான். வந்த இரண்டு நாட்களில் இருவருக்குள்ளும் இடைவெளி இருப்பதை உணர்ந்து கொண்ட காந்தள் அஜய் ஒவ்வொன்றிற்கும் தன்னை மட்டுமே நாடுவது அவரை யோசிக்க வைத்தது.
‘பெரிதாக ஏதும் உள்ளதோ?’ என்று அச்சம் கொண்டவர் யாழினியிடம் நேரடியாகக் கேட்க, அவளோ “எதுவுமில்லை அத்தை” என்று சாதித்தாளே தவிர உண்மையை சொல்லவில்லை.
“நீ உண்மையை சொல்ல வேண்டாம் யாழி… ஆனால் என் மகனோட முகம் பார்த்து தாயா என்னால் அவன் நல்லாயில்லைன்னு அறிய முடியாதா?” எனக் கேட்டவர் “கணவன் மனைவி பிரச்சினை என நீ ஒதுக்குவது புரிகிறது. இதில் நானும் நடுவில் வந்து கேள்வி கேட்டிருக்கக் கூடாது. உங்களுக்குள் சரி செய்ய முடியும் என்றால் நீங்களே முடித்துக் கொள்ளுங்கள். முடியாது எனும் நிலையில் கண்டிப்பா என்கிட்ட சொல்லிடனும்” என்று வாஞ்சையாக அவளின் கன்னம் தட்டியவர், “மலையிலே அப்பா அம்மா கூடவே இருந்திரலாம்னு பாக்குறேன்” என்றார்.
“வேண்டாம் அத்தை. இங்கே, எங்களோடவே இருங்க” என்று கேட்க, அவர் ஒப்புக்கவில்லை.
ஏன்? எதற்கு? என கேட்க அவர் சிரித்தாரே தவிர காரணம் சொல்லவில்லை. அன்று மாலையே குணாவை வரவழைத்து தன்னுடைய உடமைகளை எடுத்து அடுக்கியவர், அஜய் வரும்வரை காத்திருக்கத் துவங்கினார். சொல்லிவிட்டுச் செல்ல.
அஜய் பேசவில்லை என்றாலும், காந்தள் இப்படி ஒரு திடீர் முடிவெடுத்திருப்பதை அவனிடம் சொல்ல வேண்டுமே என மதியத்தில் இருந்து அவனுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறாள். இவள் அழைப்பைத் தெரிந்தே வழக்கம்போல் துண்டித்துக் கொண்டிருக்கின்றான்.
எவ்வளவு தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியும். காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், அவனின் ஒதுக்கமும், உதாசீனமும் அவளை வெகுவாக துவளவே செய்தது.
கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வர, லாவகமாக மறைத்துக் கொண்டாள்.
“அஜய்க்கு போன் பண்ணிட்டியா யாழி?” காந்தள் கேட்டிட முகத்தை மாற்றிக்கொண்டு அருகில் வந்தவள்,
“என் மொபைல் லைன் போகல” என குணாவின் அலைபேசி வாங்கி அழைக்க முதல் ஒலியிலே ஏற்றிருந்தான்.
குரலைக் கேட்டதும் அஜய் அழைப்பைத் துண்டிக்க முயல,
“மாமா பிளீஸ்… வீட்டுக்கு சீக்கிரம் வாங்க” என்றவள் வைத்துவிட்டாள். அதற்குமேல் விளக்கமாக தான் பேசினாலும் அவன் கேட்க மாட்டனென்று வைத்திருந்தாள்.
யாழின் குரல் ஒரு மாதிரி இருந்திட… ஸ்டுடியோவில் வேலையாக இருந்தவன், அனைத்தையும் நிகிலிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
என்ன தான் யாழுக்கு உண்மையாக இல்லையென்று தள்ளியிருந்தாலும், அவள் மீதான காதலும் அக்கறையும் வானளவு உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும், அவளுடைய தன் மீதான நம்பிக்கையில் எல்லை கடந்து அவள்மீது அவனின் நேசம் கூடிப்போனது.
செய்த தவறு அவளை நெருங்கவிடாது தடை செய்கிறது.
அன்று முதல் நாள் இரவு அவளின் காயம் கண்டு துடித்தவன், அவள் முத்தம் கொடுத்தக்கவா என்று கேட்க, மனதால் மரித்தே விட்டான்.
கேட்டு கொடுக்கும் இடைவெளி வந்து விட்டதா? அதீத வதை. கண்கள் கலங்கும் போலாக, எழுந்து அமர்ந்தான்.
யாழி அவனையே பார்த்திருக்க…
“பிளீஸ் அம்மு. சத்தியமா என்னால முடியல. எனக்கு கொஞ்சம் டைம் கொடு” என்றான்.
“சரி மாமா” என்று பற்கள் தெரியாது புன்னகைத்த யாழி, அவன் முகம் பார்த்தவாறே படுத்து உறங்கிவிட்டாள்.
அவள் அமைதியாக அவன் சொல்லியதை ஏற்றது தான் அஜய்க்கு இன்னும் வலியாகியது.
“உனக்கு என் மேல காதல் வராமல் இருந்திருக்கலாம் டி” என்ற அஜய், அதன் பின்னர் யாழியிடம் இந்த நொடி வரை ஒரு வார்த்தை பேசிடவில்லை.
அவளாக பேசினாலும் கேட்கும் பாவனை இருக்காது.
அவன் அருகில் இருக்கும் நேரம், உணவு உட்கொள்ளும் நேரம் என யாழினி தன்னைப்போல் அன்றைய கதைகள் அனைத்தையும் சொல்லிக் கொண்டிருப்பாள் அவனிடம்.
அவன் தன் வேலை முடிந்தது போல எழுந்து சென்று விடுவான். மனம் வலிக்கச் செய்யும் இருந்தாலும் அவனுக்காக அவன் மனம் மாறுவதற்காக காத்திருக்கிறாள்.
“அப்படி என்னடி உனக்கு என் மேல லவ்?” கத்தி கேட்க வேண்டும் போல் இருக்கும் அஜய்க்கு. ஆனால் அதையும் கேட்க முடியாது தவியாக தவிக்கிறான்.
செய்தது பிழை தான் இல்லை என்று சொல்லிட முடியாது. அது உண்மையா, பொய்யா என்று ஆராயாமல் தன் போக்கில் அவன் நம்புவதை தான் யாழினியால் ஏற்க முடியவில்லை. வலி கொடுத்து வலி சுமக்கின்றான்.
இரவில் அவன் உறங்கும் வரை உறங்காது இருப்பவள், அவனின் உறக்கம் ஆழம் சென்றதும், அவனை நெருங்கி மார்பில் தலை வைத்து உறங்கிபோவாள். அதில் மட்டுமே அவளின் உயிர்ப்பு ஒட்டிக் கொண்டிருக்கிறது.
இச்செயலை அஜய் இன்னும் கண்டுகொள்ளவில்லை என யாழி நினைத்திருக்க, அவன் முதல் நாளே கண்டு கொண்டான் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
பெரும் வலி மனதை அழுத்திக் கொண்டிருக்கும் போது, இரவில் நிம்மதியான உறக்கம் கொள்வதற்கு, அவனது யாழின் இந்த செயல் தான் காரணம். இதனை மட்டும் ஏனோ அஜயால் தவிர்க்க முடியவில்லை.
அவனுக்கு இளைப்பாறும் இடம் அவனவள் என்பது எப்போது புரியப்போகிறதோ?
யாழின் குரல் மாற்றம். அதுவும் குணாவின் எண். அவளுக்கு என்னவோ என பதட்டமாக வீடு வந்து சேர்ந்த அஜய்யின் பார்வை யாழியைத் தேடியது.
அஜய்யின் பார்வை பொருள் உணர்ந்த குணா…
“கிச்சனில் இருக்காடா!” என்று சொல்லி முடிக்கும் முன்பு, சமயலறைக்குள் நுழைந்திருந்தான் அஜய்.
“அம்மு…”
அஜய்யின் வெகு நாட்களுக்குப் பின்னான அழைப்பில் தேகம் சில்லிட, பிரிட்ஜில் பால் எடுத்துக் கொண்டிருந்த யாழி வேகமாக நிமிர்ந்து நின்று திரும்பிட, சடுதியில் அவளை அணைத்திருந்தாள்.
யாழி அவனின் எதிர்பாராத திடீர் செயலில் திகைத்து நிற்க, அவளை இறுக்கமாக அணைத்து விடுத்த அஜய்…
“உனக்கு ஒன்னுமில்லையே? வாய்ஸ்… அழுதியா?” எனக் கேட்டான். படபடப்போடு.
“அது…”
“சொல்லு யாழ்… உடம்புக்கு எதும் முடியலையா?” எனக் கேட்டு அவளை ஆராய்ந்து பார்த்தான்.
“மாமா எனக்கு ஒன்னுமில்லை” என்றவள், “அத்தை மலையிலே தங்கிக்கப் போறாங்களாம்” என்றாள். வேகமாக.
“ஏன்?”
“தெரியல.”
அவளுக்கு ஒன்றுமில்லை என்றதும், அஜய் நொடியில் நிலை பெற்றான். மீண்டும் அவள் முகம் காண மறுத்து திரும்பிக் கொண்டான்.
“என்னம்மா… ஏன்?” என்று அஜய் கூடம் வர, “எனக்கு எல்லாரோடவும் இருக்கணும் போல இருக்கு அருளு. வெண்ணிலாவையும் குழந்தையையும் பாத்துக்கணும். பாட்டி, அண்ணிங்க இருந்தாலும், நான் அவ கூட இருந்தா அவளுக்கு கொஞ்சம் துணையாக இருக்கும். அதான் அங்க கொஞ்ச நாள் இருக்கலாம் கிளம்புறேன்” என்றார்.
அவர் சொல்வது ஏற்புடையதாக இருக்க அஜயால் மறுக்க முடியவில்லை. அவர் வேறு ஏதும் காரணம் சொல்லி இருந்தால் வேண்டாம், எங்களுடனே இருங்கள் என்று அழுத்தமாகச் சொல்லி இருப்பானோ என்னவோ? தங்கையையும் தங்கை குழந்தையையும் அவர் காரணமாக காட்ட அவனால் அதற்கு மேல் வற்புறுத்த முடியவில்லை.
“வாரம் ஒரு முறையாவது வாங்க” என சொல்லி குணாவுடன் அனுப்பி வைத்தான்.
இருவரும் சென்றதும் வீடே அமைதியாகியது.
முன்பென்றால் இருவரின் பேச்சு, சிரிப்பு என அத்தனை இதமான சத்தங்கள் வீட்டை நிறைத்திருக்கும்.
இருவருக்குமான தனிமை இப்படியா அமைதியில் சென்று கொண்டிருக்கும்.
ஒரு பெருமூச்சோடு மாடியேறி அறைக்குள் வந்தவள்,
“மதியம் சாப்பிட வரலையே! சாப்பாடு எடுத்து வைக்கவா மாமா?” எனக் கேட்டாள்.
பதில் எதுவும் சொல்லாது அவளை கடந்து கீழ் இறங்கினான்.
“கொஞ்சம் முன்ன பேசினதான மாமா… இப்போ என்ன? பேசவாவது செய்யேன் மாமா” என்று கரகரப்பாக கேட்டுவிட்டாள்.
அஜய்யின் நடை நின்று தொடர்ந்தது.
“முடியல மாமா” என்ற யாழி, அஜய் நிற்காது சென்றிடவும், கண்களை துடைத்துக் கொண்டு, அவன் பின்னால் சென்றாள்.
வேண்டியவற்றை எடுத்து வைத்தவள், தான் பக்கத்தில் நின்றிருந்தாள், சரியாக சாப்பிடாது… சாப்பிட்டேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு எழுந்து சென்றிடுவானென கூடத்து இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள்.
நீள்விருக்கையில் அமர்ந்திருந்தவள் மெல்ல உறங்கியும் இருந்தாள்.
மனதின் சோர்வு அவளை முழுதாக கலைப்படைய வைத்திருந்தது.
இருவருக்குமான நெருக்கம் கூட வேண்டாம். அஜய் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தாலே, அவளுக்கு போதுமானதாக இருந்திருக்கும்.
அவன் தான் அவள் முகம் காணக்கூட முடியாது பாரம் சுமக்கின்றானே!
உணவு உண்டு எழுந்த அஜய், அவள் தூங்கிவிட்டதை கண்டு நேரம் பார்த்தான்.
மாலை நேரம். இன்னும் இருள் கவிழத் தொடங்கவில்லை.
அமர்ந்தவாக்கில் கண் மூடி துயில் கொண்டிருப்பவளை… நீண்ட இருக்கையிலே நேராக படுக்க வைத்து,
அவள் முன் நின்ற அஜய், வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். தன்னவளின் பூ முகத்தை.
என்னதான் அவள் இயல்பாக இருப்பதைப்போல இருந்தாலும், அவளின் மனதின் வலியை முகம் காட்டிக் கொடுத்தது அவனுக்கு.
அப்போதுதான் ஒன்று நினைவுக்கு வந்தது, “காலேஜ் போறாளா இல்லையா?”
இத்தனை நாட்களில் இதனை கவனிக்கும் மன நிலையில் கூட அஜய் இருக்கவில்லை.
“உனக்கு நான் வேணாம் டி.”
தீர்க்கமான ஒரு முடிவை எடுத்தான். அதனை செயல்படுத்தும் வழிமுறைகளை கண்டறிந்து, அதற்கான நபரிடமும் பேசி வைத்திட்டான்.
அப்போதுதான் அவனுள் யாழுக்கு நியாயம் செய்யும் நிம்மதியை உணர்ந்தான்.
ஆனால் தன் முடிவு தன்னவளை உயிரோடு கொன்றுவிடும் என்பதை ஏனோ அஜய் அக்கணம் உணரவில்லை.
Epi 15
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
35
+1
+1
1 Comment