Loading

நீதான் என் காதல் மழை 13

எவ்வளவு நேரம் கொட்டும் நீருக்கடியில் நின்றிருந்தானோ… குளிர் நீரால் உடலில் நடுக்கம் ஏற்படவே, குழாயினை நிறுத்திவிட்டு வெளியில் வந்தான் அஜய்.

வீட்டிற்கு வந்தது முதல் அன்னையின் முகம் காண முடியாது தவிக்கிறான்.

எத்தனை முறை சொல்லியிருப்பார். நிதிஷாவை அனுப்பிவிடு என. அவன் மீதான அவனின் நம்பிக்கை மொத்தமும் சிதைந்து விட்டதே!

மனம் முழுக்க குற்றவுணர்வாகிப் போனான்.

அந்நேரம் நிகிலிடமிருந்து அழைப்பு வந்தது.

“வந்தனாவை கூட்டிட்டு வந்துட்டேன் மச்சான்” என்ற நிகில், “நாளைக்கே கோவிலில் கல்யாணம் டா. வந்திடு” என சொல்லி வைத்திட்டான்.

நிகில் உடன் இருந்திருந்தால் நிச்சயம் இதுபோன்ற தவறு நடந்திருக்காது. கோபம் கோபம், நண்பனின் பக்கமும் அந்த கோபம் திரும்பியது. நிகில் இருந்திருந்தால், இதுபோன்ற பார்ட்டிக்கெல்லாம் அஜய் சென்றிருக்கவே மாட்டான். நிகிலை அனுப்பி வைத்து அஜய் ஒதுங்கி இருப்பான். நடந்ததாக நினைக்கும் விடயம் நடக்க வாய்ப்பிருந்திருக்காது.

‘உனக்கு துரோகம் பண்ணிட்டனா அம்மு.’ தன் கன்னத்தில் தானே பலமுறை அறைந்து கொண்டான்.

குமரனுக்கு அழைத்த அஜய்,

“கல்யாணம் வேணாம் குமரா. நிறுத்திடுங்க. பெரியவங்ககிட்ட எப்படியாவது எடுத்து சொல்லு” என்று வைத்துவிட்டான்.

அடுத்த ஒருமணி நேரத்தில் குமரன் அஜய்யின் முன் நின்றிருந்தான்.

அஜய்யின் முகமே ஒளி இழந்து, விரக்தி தோய்ந்து காணப்பட்டது.

அஜய்யின் முன்பு நின்றிருந்த குமரன் என்னவானது என்று கேட்க அஜய்யிடம் பதில் இல்லை

மௌனமாக நின்றிருந்த அஜய்க்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

மனம் முழுக்க ரணம். ரணத்தின் சுவடுகள் வலிகளாய் அவனின் இதயத்தை தாக்கிக் கொண்டிருக்க, காதல் உள்ளம் சுக்குநூறாய் சிதறிக் கொண்டிருந்தது. அவனின் எண்ணம் யாவும் யாழினியின் வசம் முடங்கியது. யாழினிக்கு துரோகம் செய்துவிட்ட குற்றவுணர்வு அவனை வெகுவாகவேத் தாக்கியது.

குமரன் எத்தனையோ கேட்டும் அஜயால் பதில் சொல்ல முடியவில்லை. எப்படி அவனால் நடந்ததை சொல்லிட முடியும்?

அவன் கோபக்காரன் என்று தெரியும். ஆனால் இப்படி ஒரு செயலை செய்ததை அவனாலே நம்ப முடியாத போது அதை எப்படி வெளிப்படையாக அவனால் சொல்லிட முடியும்?

“எத்தனை முறை கேட்கிறேன்? வாய் திருந்த ஏதாவது சொன்னால் தானே தெரியும்?” குமரன் கேட்டிட, அப்போதும் அஜய்யின் பதில் மௌனம், மௌனம் மட்டுமே!

“எனக்கு இந்த கல்யாணம் வேணாம் அவ்வளவுதான்.”

அஜய் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க குமரனின் பொறுமை கரை கடந்தது.

“அறைஞ்சேன் வை… அவ்ளோதான். என்னடா நினைச்சுக்கிட்டு இருக்க? இப்ப இந்த கல்யாணத்தை நிறுத்தினால் எவ்வளவு பெரிய பிரச்சனை வீட்டுக்குள்ள நடக்கும் தெரியுமா? கல்யாணம்னா உனக்கு என்ன விளையாட்டா போச்சா? நீ வேணும்னா நடத்துவதற்கும், வேணாம் அப்படின்னா நிறுத்துவதற்கும்… ஹான்! உன்னை நினைத்து உருகிட்டிருக்காளே ஒருத்தி அவளுக்கு என்ன பதில் சொல்லப் போற? இது அவளுக்கு தெரிஞ்சா எப்படி ஏத்துப்பா? தாங்கிப்பாளா முதல்ல? உன்னையே உலகம் நினைச்சுட்டு இருக்கா. அவகிட்ட எப்படி சொல்ல முடியும்? இதை அவகிட்ட உன்னால சொல்ல முடியுமா? அவள் முகம் பார்த்து, கல்யாணத்தை நிறுத்து. எனக்கு நீ வேணாம் அப்படின்னு உன்னால இப்ப சொல்ல முடியுமா?”

அஜய்கிட்ட குமரன் கேட்ட கேள்வி ஒன்றிற்கும் பதில் இல்லை.

“ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ குமரா. என்னால எதையும் சொல்ல முடியல. எனக்கு இந்த கல்யாணம் வேணாம் அவ்வளவுதான்.” அஜய் மன்றாடும் குரலில் தழுதழுத்தான்.

அஜய்யை கோபமாக, திமிராக, அடாவடியாக பார்த்திருக்கிறான். இப்படி கலங்கி தவித்து பார்த்தது இல்லை. குமரனுக்கு நடக்கக்கூடாத ஒன்று நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

என்னவென்று அஜய் சொன்னால் தானே குமரனால் தீர்வு காண முடியும்.

“கல்யாணம் வேணாமா? ஏன்? அழுத்தமான காரணம் சொல்லு, இப்போ இந்த செக் பெரியப்பா, தாத்தாகிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுறேன்” என்று குமரன் அஜய்யின் மனதை ஆழம் பார்த்தான்.

“எனக்கு கல்யாணமே வேண்டாம். அவ்ளோ தான். இதோட இப்பேச்சை விடு குமரா” என்று அஜய் கத்தினான் .

“இப்ப எதுக்கு கத்துற நீ? கத்துற அளவுக்கு என்ன ஆயிடுச்சு?” குமரன் கேட்டிட மீண்டும் அஜய்யிடம் மௌனம் மட்டுமே!

“இப்படி சைலன்ட் ஆனா என்ன அர்த்தம் அஜய்? போன் பண்ணி நீபாட்டுக்கு கல்யாணம் வேணாம்னு சொல்ற. நான் என்னன்னு நினைக்கிறது? இன்னும் நான் வீட்ல யார்கிட்டயும் சொல்லல. நீ இப்படி சொல்லவே எனக்கு பதறிப்போச்சு. என்னால ஒண்ணுமே பண்ண முடியாது. ரீசன் எதுவும் சொல்லாம மொட்டையா கல்யாணம் வேணாம்னா நான் என்ன நினைக்கிறது? இப்போ இதை கேட்டா யாழி தாங்குவாளா?”

அஜய் முகத்தை தேய்த்தவனாக இருக்கையில் தொய்ந்து தளர்வாக அமர்ந்தான்.

“எனக்கு மட்டும் கல்யாணம் வேணாம்னு சொல்றதுக்கு ஆசையா குமரா. ஆனா நான் பண்ணது என்னால நம்ப முடியலையே! இப்படி ஒரு நிலையில என்னால எப்படி நான் உயிரா நினைக்கிறவ கழுத்துல தாலி கட்ட முடியும். அப்படி தாலி கட்டுனா அது அவளுக்கு நான் தெரிஞ்சே பண்ற துரோகம் ஆகிடாதா?” தனக்கு முன் நின்றிருந்த குமரனின் வற்றில் தலை முட்டி கதறினான் அஜய்.

அஜய்யின் தோள் குலுங்கிடவே, அவன் அழுகிறான் என்பதை உணர்ந்து,

“என்னன்னு முதல்ல சொல்லுடா? ரெண்டு பேரும் பேசுவோம். உனக்கே ஒரு தெளிவு கிடைக்கும். அதுக்கு அப்புறம் அடுத்து என்னன்னு பார்ப்போம். எடுத்ததும் கல்யாணத்தை நிறுத்தலாம் அப்படின்னா அது முடியாதே! முடியாது தானே! இவ்வளவு தூரம் கேட்கிறேன் உனக்கு என்னடா அவ்வளவு பிடிவாதம்? உண்மையை சொல்றதுக்கு எதுக்கு தயங்குற?” என அஜய்யின் முதுகை மெல்ல நீவிவிட்டான் குமரன்.

“நான் தயங்கும் போதே அது எவ்வளவு பெரிய தப்புன்னு புரிஞ்சுக்கோ குமரா. உன்னையே கன்வின்ஸ் பண்ண இவ்வளவு கெஞ்ச வேண்டியதா இருக்கு. நான் இதுல வீட்ல இருக்குறவங்க எல்லாருக்கும் எப்படி சொல்லி புரிய வைப்பேன். எனக்கு தெரியல. நான் அதை சொன்னா உங்க பார்வையில் எல்லாம் மொத்தமா இறங்கிப் போயிருவேன். அப்படியிருக்கும் போது எப்படி நான் சொல்றது?” அஜய்யின் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை. குமரன் துடைக்க துடைக்க வழிந்துகொண்டே இருந்தது.

“அப்படி என்னதான்டா ஆச்சு?”

“நான் இப்ப சொல்ற நிலைமையில் இல்ல குமரா. சொல்ல முடியாத அளவுக்கு தப்பு பண்ணியிருக்கேன். புரிஞ்சுக்கோ பிளீஸ்.” அஜய் குமரனின் கையை பிடித்துக்கொண்டு பாவமாய் ஏறிட்டான்.

“என்ன தப்பு பண்ண நீ? உன்னால் எந்த தப்பும் பண்ண முடியாது.” பட்டென்று சொல்லியிருந்தான் குமரன்.

“புரிஞ்சுக்கோ குமரா… புரிஞ்சுக்கோ” என்று தொண்டை அடைக்க கதறிய அஜய், “ஏண்டா இப்படி உயிரை எடுக்குற? வேணாம்னு சொன்னா விட வேண்டியது தானே?” என்று தான் பிடித்திருந்த குமரன் கையை வேகமாக உதறித் தள்ளினான்.

“அது எப்படி விட முடியும் அஜய். கல்யாணத்துக்கு இன்னும் அஞ்சு நாள் தான் இருக்கு. அதுக்குள்ள வந்து நீ இப்படி சொன்னா என்ன நினைக்கிறது. எல்லாமே பண்ணியாச்சு. பத்திரிக்கை எல்லாம் கொடுத்தாச்சு. இப்போ எப்படி நிறுத்த முடியும்?”

“நிறுத்திதான் ஆகணும் குமரா. என்னால யாழ் கழுத்துல தாலி கட்ட முடியாது.” அஜய்யிடம் தற்போது தீவிரம்.

“சரி இப்போ நீ என்கிட்ட சொன்னது அவகிட்டயே சொல்லு” என்ற குமரன் அறைக்கு வெளியில் பார்க்க, அதுவரை நடப்பதை பார்த்து கண்களில் நீரோடு நின்றிருந்த யாழி உள்ளே வந்தாள்.

அஜய் வேகமாக முகத்தை திருப்பிக் கொண்டான்.

“என்னாச்சு மாமா?

” ஏன் உனக்கு கல்யாணம் வேணாம்.

“என்னை பிடிக்கலையா?” தொண்டை அடைக்க குரல் கமற யாழினி கேட்டதில் அஜய்யின் காதல் நெஞ்சம் விம்மி துடித்தது.

கண்கள் சிவக்க அவளை ஏறிட்டு பார்த்தவன் அவளின் அழுத முகம் காண முடியாது மீண்டும் மறுபக்கம் திரும்பிக் கொண்டான்.

இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என்று நினைத்த குமரனும் அறையை விட்டு வெளியில் வந்து மாடிக்கூடத்தின் இருக்கையில் அமர்ந்து விட்டான்.

காந்தள் கீழே இருந்ததால் இங்கு நடப்பவை எதுவும் அவருக்கு தெரியவில்லை. தெரிந்தால் அவரையும் சமாளிக்க வேண்டுமே எனும் பதட்டம் குமரனிடம்.

அஜய் எதற்காக திருமணம் வேண்டாம் என்று சொல்கிறான் என்பதற்கான காரணம் அறியாது குமரனாலும் அடுத்த அடியை எடுத்து வைத்திட முடியாதே! அஜய் சொல்லி விட்டான் என்பதற்காக சரியென்று செய்த ஏற்பாடுகள் அனைத்தையும் நிறுத்திட முடியாதே! அவனுக்கும் மதில் மேல் பூனை நிலைதான். இருப்பினும் அவனால் மட்டும் என்ன செய்திட முடியும்.

அஜய் திடீரென திருமணத்தை நிறுத்தக் கூறுவான் என்று அவன் மட்டும் எப்படி அறிவான்?

அனைத்து கேள்விக்கும் பதிலாக இருக்கும் அஜய் வாய் திறந்தால் மட்டுமே ஏதேனும் ஒரு முடிவு எடுக்க முடியும்.

அதுவும் இவ்விடயத்தில் தான் எடுக்கும் முடிவைவிட சம்மந்தப்பட்டவர்கள் எடுப்பதே சரியாக இருக்குமென்று இருவரும் பேசிக்கொள்ளட்டுமென நகர்ந்து வந்திருந்த குமரனுக்கு, பிரச்சினை சமாளிக்கக் கூடியதாக இருக்க வேண்டுமென்ற அதீத கவலை.

அறியாத வயதில் தெரியாது செய்த ஒன்றிற்காக உறவுகள் துறந்து அஜய் இதுவரை அனுபவித்த வேதனைகள் போதும். மீண்டும் அவனை வதைகொள்ள விட்டுவிடாதே என காலத்தோடு மன்றாடிக் கொண்டிருந்தான் குமரன்.

அவனுக்கு இணையாக யாழியும் தன்னவனுடன் அவனுக்காவே கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“என்ன பார்த்து, என் முகத்தை பார்த்து சொல்லு மாமா நானே இந்த கல்யாணத்தை நிறுத்திடுறேன்.”

அஜயால் யாழின் முகத்தை, காதல் சுமந்து தவிக்கும் அவளின் இரு விழிகளை நேராக சந்தித்து வாய் திறக்க முடியவில்லை.

“அம்மு பிளீஸ் டி. நான் உனக்கு வேண்டாம்.” அவளுக்கு போட்டியாக அவனும் பிடியாக நின்றான்.

“பண்ணக் கூடாத தப்பை பண்ணிட்டேன். உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னால் உன்னோட சந்தோஷமா வாழ முடியாதுடி. என் மனசாட்சியே என்னைக் கொன்னுடும்.”

அவள் முன் மண்டியிட்டு முகம் மூடினான்.

“எந்த தப்பா இருந்தாலும் பரவாயில்லை மாமா. எனக்கு நீ வேணும். அந்த தப்பை ரெண்டு பேரும் சேர்ந்து சரி செய்வோம்” என்றவளின் காதல் மேலும் மேலும் அவனுக்குள் வலி கூட்டியது.

“நானில்லாம நீ இருந்திடுவியா மாமா?” அவன் தோளில் அவள் கை வைக்க முயல, வேகமாக விலகி எழுந்து நின்றான்.

“ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதாடி. உனக்கு நான் தகுதியானவன் இல்லை. இந்தக் கல்யாணம் நடக்கிறதுக்கு நான் செத்துப்போறது மேல்” என்றவனிடம் வேண்டாம் என்பதைப் போல் இரு பக்கமும் தலையை அசைத்தாள். கண்களில் நீர் வழிந்திட.

“இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம். நீ சாக வேண்டாம். நானே நிறுத்திடுறேன் மாமா. இந்த கல்யாணம் வேண்டாம்” என்று பின்னால் மெல்ல நகர்ந்தவள், மேசை மீதிருந்த கத்தியை எடுத்து மணிக்கட்டில் வைத்தவளாக,

“எனக்கு காரணம் மட்டும் சொல்லு. நீயே சாகப்போறேன் சொல்லும் போது நான் மட்டும் இருந்து என்ன பண்ணப்போறேன். நீ என்னை எவ்ளோ காதலிக்கிறேன் தெரியும். ஆனால் திடீர்னு கல்யாணம் வேணாம் சொன்னா எப்படி? காரணம் சொல்லு” என்றாள்.

“அம்மு வேணாம் டி. கத்தியை கீழப் போடு.” அஜய் ஒரு அடி முன் வைக்க,

“கிட்ட வந்த வெட்டிப்பேன். நீ காரணம் சொல்லு, நான் கத்தியை கீழப்போடுறேன்” என்றாள்.

அக்கணம் அஜய்க்கு யாழி மட்டுமே பிரதானமாகத் தெரிய, மூச்சினை ஆழ்ந்து வெளியேற்றியவன்,

“நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன்” என்றான். உணர்வின்றி. சத்தமின்றி.

“புரியல…”

“நேத்து நைட்… நிதிஷாவோட…”

அவன் சொல்லும் முன்பே மூளை கிரகித்த ஒன்றில் அதிர்வை சுமந்தவள் கையிலிருந்த கத்தி கீழே விழுந்தது உணராது, இரு கைகளாலும் காதுகளை மூடிக் கொண்டு,

“சொல்லாத மாமா சொல்லாத” என்று கத்தினாள்.

வீட்டில் உள்ளவர்களின் அத்தனை பேரின் முகமும் சந்தோஷத்தில் திளைத்தது.

அன்று தான் யாழினி மற்றும் அஜய்யின் திருமணம் சுற்றம் சூழ பெரும் ஆரவாரத்திற்கு இடையே அதீத சந்தோஷத்துடன் நடந்து முடிந்திருந்தது.

அத்தனை சந்தோஷத்தோடும் மகிழ்வோடும் நடந்த திருமணத்தில் அஜய்யின் மனதில் நிறைவு இருந்ததா என்றால், இல்லை என்பதே நிதர்சனம்.

உண்மையில் சிரித்து மகிழ்ந்து ஆத்மார்த்தமாக ஏற்றுக் கொள்ளும் சூழலில் அஜய் இல்லை.

அவனின் மனம் தன்னைக் குறித்தே கீழாக இருந்தது. தனக்குத்தானே என்ன தண்டனை கொடுத்துக்கொள்வது எனத் தெரியாது உள்ளத்தோடு குமுறிக் கொண்டிருக்கிறான்.

ஒவ்வொரு சடங்கின் போதும்…

‘இவற்றிற்கு நான் உண்மையா இல்லையே! என் அம்முக்கு துரோகம் இழைத்துவிட்டேன்’ என ஒருவித வதையோடு தான் ஐயர் சொல்லியதையெல்லாம் செய்து கொண்டிருந்தான்.

அஜய் குற்றவுணர்வில் மருகி உறையும் போது, யாழி தான் அவனை சுயமீட்டு தன் கண் பார்த்து ஒவ்வொன்றையும் செய்திட வைத்தாள்.

அவளின் கண்ணசைவிற்கு செயல்படும் அஜய் தன்னையே வெறுத்த நிலையில் நிகழினை வெறித்திருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

மண்டபத்தில் அனைத்தும் முடிந்து, பெண் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்பதால் மலைக்கு சென்று ஒரு மணி நேரத்தில் கிளம்பிவிட்டான் அஜய்.

அவனால் அங்கு தன் உறவுகளின் மகிழ்வில் ஒன்றி பங்குகொள்ள முடியவில்லை. மற்றவர்கள் நினைப்பது போல் தான் நல்லவன் இல்லை, திருமணத்திற்கு முன்பே, திருமண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில், உயிராய் நேசிக்கும் பெண்ணுக்கு உண்மையாக இல்லாது, தன் சுயமிழந்து வேறொரு பெண்ணுடன் உறவு கொண்ட தான் தான் உலகத்திலேயே பெரும் பாவி எனும் உயிர் வேதனை அவனை ரணமாய் பொசுக்கிக் கொண்டிருந்தது. அந்நிலையில் அவனால் உண்மைக்கும் தன்மீது அன்பு வைத்திருக்கும் உறவுகள் முன் முகம் காட்டி அமர்ந்திருக்க முடியவில்லை.

அத்தோடு யாழுடன் இணைத்து வீட்டு பட்டாளங்கள் அதை செய் இதை செய்யென்று புதுவித விளையாட்டுகளை செய்ய வைத்திட, அவனால் முழு மனதோடு ஒன்ற முடியாது கிளம்பிவிட்டான்.

அவன் வேகமாக எழுந்து கிளம்புகிறேன் என்றதில், பெரியவர்கள் என்னவென்று பதட்டமாக முன் வர,

“இருட்டுவதற்கு முன்பு கீழ போகணும் தானே! இருட்டில் மலைப்பாதை சிரமம். அதான் கிளம்பிட்டான்” என குமரன் தான் அஜய்க்கு பதிலாக பேசி அனைவரையும் சமாதானம் செய்தான்.

அதைக்கூட அவன் யாழியுடன் தனிமையை விரைந்து எதிர்பார்க்கிறான் என இளையவர்கள் எண்ணி கேலி செய்திட, அஜய்க்கு மேலும் வருத்தம் கூடிப்போனது.

எப்படியெல்லாம் நடக்க வேண்டுமென இத்திருமணத்தை எதிர்பார்த்து காத்திருந்தான். யாழின் மீது கொள்ளை அன்பு வைத்திருந்த போதும், திருமணத்திற்கு பின்னர் உரிமையாய் காட்டிட வேண்டுமென மனதோடு பொத்தி பொத்தி வைத்த நேசம் அவனுடையது.

‘இனி அது தன்னால் முடியுமா?’ உள்ளம் சுக்கு நூறாக உடைய எதுவும் செய்ய முடியாத நிலையில் தவிக்கிறான்.

அவனே அவனை நம்பாத சூழலில், அவனவள் அவனை முழுதாய் நம்புகிறாள். அந்த நம்பிக்கையில் மேலும் மேலும் துவண்டுப் போகிறான் அஜய்.

அன்று அஜய் இதுதான் காரணமென சொல்லி முடிக்கும் முன், புரிந்துகொண்ட யாழி, “சொல்லாத மாமா” என்று கத்தியது ஒரு நொடி தான்.

அடுத்த கணம், “உன்னால் எனக்கு கனவில் கூட துரோகம் பண்ண முடியாது மாமா. நீ எதுவோ தப்பா புரிஞ்சிட்டு இருக்க” என்று அவனுக்கு ஆதரவாக அவனிடமே வாதாடினாள்.

“அய்யோ யாழ் புரிஞ்சிக்கோ” என்று அவள் முன் மண்டியிட்டு கதறித் துடித்தவனை, மார்போடு கட்டிக்கொண்டு அமர்ந்தவள்…

“உன்னை நான் நம்புறேன் மாமா. அங்க நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடந்திருக்காது. என்னை நம்பு மாமா” என்றாள்.

“நான் உனக்கு வேணாம் அம்மு.”

“எனக்கு நீதான் வேணும் மாமா. பிளீஸ். நீயில்லைன்னா, நான் உயிரோடு இருந்தும் பிணம் தான் மாமா” என்று அழுதவள், “கல்யாணத்தை நிறுத்திடாத மாமா” என்று மன்றாடினாள்.

“என்னால முடியாது யாழ்.” சடுதியில் அவளிடமிருந்து பிரிந்து விலகினான்.

யாழிக்கு உள்ளுக்குள் அவன் மீது அப்படியொரு நம்பிக்கை. அவனே சொல்லியபோதும் அவளால் அதனை ஏற்க முடியவில்லை.

அவளுக்கு அவன் காதல் மீது அப்படியொரு அழுத்தமான நம்பிக்கை.

அவனிடம் இப்படிக் கெஞ்சிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாதென நினைத்தவள், கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

“கல்யாணத்தை நிறுத்திடலாம்.”

அவன் பலமுறை சொல்லியபோது ஏற்படாத நடுக்கமும் வலியும் அவன்முன் அவள் சொல்லும் போது ஏற்பட்டது.

உயிரை கைக்கொண்டு உருவும் வலி.

“தேங்க்ஸ்.” உடல் மரத்து, தொண்டை அடைக்க மொழிந்தான்.

“நீயே எனக்கு இன்னொரு பையன் பாரு. நீ வேணாம் சொல்லிட்ட… வாழ்க்கை முழுக்க நான் தனியா இருக்க முடியுமா? அதனால எனக்கு நீயே பொண்ணு பாரு. எனக்கு எப்படி பிடிக்கும்னு உன்ன விட வேற யாருக்கும் தெரியாது இல்லையா? அதனால நீயே பார்த்திடு. இப்ப இந்த முகூர்த்தத்திலே கல்யாணம் அப்படின்னாலும் எனக்கு ஓகே தான். செய்த ஏற்பாடு வீணாகாது” என்று சொல்லிய யாழினியை அடிபட்டப் பார்வை பார்த்தான் அஜய்.

“என்ன அப்படி பார்க்கிற மாமா, வலிக்குதா? நீ சொல்லும்போது எனக்கும் இப்படித்தான் இருக்கு. என்ன நீ கல்யாணத்தை நிறுத்த சொன்ன. நான் அதுக்கடுத்து என்னன்னு சொல்றேன். அவ்ளோ தான்” என்றவள் அஜய்யின் கண்களில் தெரிந்த வலியில் தன் திடம் ஆட்டம் கண்டாலும், முயன்று தன் நடுக்கம் மறைத்து,

“நிறுத்துனா மட்டும் போதுமா? அதுக்கு அப்புறம் திரும்ப நீயே வந்து என்னை நினைச்சிட்டு இருக்காதே! உனக்கு இன்னொரு வாழ்க்கை வேணும் உன் வாழ்க்கையை நீ பாரு அப்படின்னு சொல்லுவ. அதான் அதுக்கு முன்னாடி நானே கேட்கிறேன். நீ, இந்த வார்த்தை எல்லாம் சொல்லி என்னால கேட்க முடியாது” என்றதோடு, “பார்த்திடுவ தானே!” என்றாள்.

நொடியில் அவளின் கழுத்தை பிடித்து சுவற்றில் சாய்த்திருந்தான்.

“என்ன மாமா என் பக்கத்தில் இன்னொருத்தவனை நிக்க வச்சு கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியலையா?” என்றவள் இரும்பிட, அதன் பின்பே தன் பிடியின் அழுத்தம் உணர்ந்து கையை எடுத்தான்.

“வலிக்குது மாமா வலிக்குது உனக்கு நான் வேணாம், இந்த கல்யாணம் வேணாம்னு நீ சொல்ற ஒவ்வொரு முறையும் எனக்கு வலிக்குது. நான் என்ன பண்ணட்டும் உன்னையே உயிரா நெனச்சிட்டு இருக்கேன். நீ இல்லாம என்னால முடியாது. இப்போ உனக்கு என்ன பிரச்சனை ஏதோ ஒன்னு நடந்துருச்சு. நீ சொல்ற மாதிரி… நல்லா கேட்டுக்கோ, நீ சொல்ற மாதிரி நடந்தே இருக்கட்டும். அது உன் சுயத்தோடு நடக்கல. உனக்கே தெரியாம நடந்தது. நீ சுயத்தோடு இருந்திருந்தால் வேறு யாரோட நிழலும் உன்மேல படவிட்டிருக்கமாட்ட. எந்த ஒரு பொண்ணும் இதை விரும்ப மாட்டாதான். பிடிக்காது தான். தனக்கு வரப்போறவன் தனக்கு மட்டும் தான் முதலும் கடைசியுமா இருக்கணும்னு தான் நினைப்பா. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா நீ உன்னையே நம்பாத போது நான் எப்படி உனக்கு இது நடந்திருக்காதுன்னு சொல்லி புரிய வைத்து எப்படி நம்ப வைக்கிறது, எனக்குத் தெரியல. எனக்கு நீ வேணும் எனக்கு இந்த கல்யாணம் நடக்கணும் அவ்வளவுதான். முடியாதுன்னு சொல்றியா, இந்தா கத்தி உன் கையாலே என்னைக் கொன்னுடு. உன் கையால வாழ்க்கை வேணும் ஆசைப்பட்டேன். அது நடக்காது தெரிஞ்சுப்போச்சு. அதான் உன் கையால செத்துப் போயிடலாம் முடிவு பண்ணிட்டேன்” என்று அஜய்யின் கையில் கத்தியை திணித்தாள்.

“ஏண்டி புரிஞ்சிக்காம இம்சை பண்ற?”

அவளின் கெஞ்சலில் கொஞ்சம் கொஞ்சமாக அஜய்யின் மனம் தன் முடிவின் உறுதியில் தளர்ந்து கொண்டிருந்தது.

“என்ன வேணாலும் நடந்திருக்கட்டும். நீ நினைக்கிற மாதிரி நடந்தேக்கூட இருக்கட்டும். எனக்கு எந்த கவலையும் இல்லை.” இதனை சொல்லும்போது, யாழின் ஒற்றை கண்ணிலிருந்து கண்ணீர் கன்னம் வழிய வேகமாக துடைத்துக் கொண்டாள்.

வேறெப்படி அவனை ஒப்புக்கொள்ள வைப்பது அவளுக்கும் தெரியவில்லை. அவள் கொண்டிருக்கும் நம்பிக்கை அவனிடம் இல்லையே. அவளும் என்ன தான் செய்வாள்.

“எனக்கு நடந்து முடிஞ்ச எதுவும் வேணாம். உன்கூட வாழப்போற வாழ்க்கை மட்டும் தான் வேணும். எதிர்காலம் உன்னோட வேணும். நடந்ததை தூக்கிப்போட்டு என் கழுத்துல தாலி கட்ட வந்து சேரு.” அதுவரை ஒருவித தழுதழுப்போடு பேசிக் கொண்டிருந்தவள், இறுதியில் அவன் கண் பார்த்து அழுத்தமாகக் கூறி, “நீ வரல, நான் செத்துப்போகலாம் மாட்டேன். உயிரோட தான் இருப்பேன். ஆனால் என்ன இப்போ எப்படி இருக்கனோ அப்படியே இருப்பேன். கடைசிவர. தாலி காட்டித்தான் நான் உன் பொண்டாட்டி ஆகணுமில்லை. நேத்து நைட்டு சொன்னியே, உன் மனசுல நான் வந்ததும் பொண்டாட்டி ஆகிட்டேன்னு. அதேதான் எனக்கும்” என்றவள் வெளியில் நின்றிருந்த குமரனிடம் சென்று, “கல்யாணம் நடக்கும் வாங்கண்ணா” என்று சென்றுவிட்டாள்.

என்ன பேசிக் கொண்டார்கள் என்றெல்லாம் குமரனுக்கு தெரியவில்லை. யாழிடம் அவன் கேட்கவுமில்லை. அது அவர்களின் தனிப்பட்ட விடயமென அமைதியாக இருந்துகொண்டான்.

யாழி பேசிச் சென்ற அதிர்விலிருந்து அஜய்யால் மீள முடியவில்லை. அவள் சொல்லிய விதமே சொன்னதை செய்வேன் என்பது போலிருக்க அஜய் ஒரு முடிவெடுக்க முடியாது தடுமாறினான்.

அந்த தடுமாற்றத்துடன் தான், இன்று அவள் கழுத்தில் தாலியும் கட்டியிருந்தான்.

வீட்டிற்கு வந்ததும் மாடியேறி தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்ட அஜய், உடன் வந்த உறவுகள் கிளம்பும் போதும் கீழே வரவில்லை.

காந்தள் மலைக்கு வருவதாக சொல்ல, அவரை அழைத்துச் செல்ல குமரன் மட்டும் எஞ்சியிருந்தான்.

யாழியை கீழிருந்த அறையில் தயாராக சொல்லி அனுப்பி வைத்த காந்தள், “அருளுக்கு எதும் பிரச்சினையா குமரா. முகம் கல்யாண கலையே இல்லையே. நாலு நாளாவே அவன் முகம் சோர்ந்து, வாடியே இருக்கே” எனக் கேட்டார்.

என்னவென்று சொல்வான் குமரன்.

“கல்யாண டென்ஷனா இருக்கும் அத்தை. யாழி பார்த்துப்பா” என்ற குமரனிடம், “தாலி கட்டும் போது கூட அவன் முகம் யோசனையா தான் இருந்தது. எதையும் மறைக்கிறியா குமரா?” என்றார்.

குமரன் என்ன சொல்வதென்று தெரியாது விழித்து நிற்க,

“மாமாக்கும் எனக்கும் சின்ன சண்டை அத்தை” என்று பதில் சொல்லியிருந்தாள் யாழி.

“சண்டையா?”

“ஆமாம் சண்டை தான். ஒரு கிஸ் கேட்டேன் கொடுக்க முடியாது சொன்னாங்க. அதான் கல்யாணத்துக்கு அப்புறம்” என்று ஒரு நொடி நிறுத்தி, குமரனை பார்த்துவிட்டு, “எதுவுமில்லைன்னு சொன்னேன். அதான் உம்முன்னு இருக்காங்க” என்றாள்.

அவள் சொல்லியதும், “அறிவு இருக்கா உனக்கு. அண்ணா முன்னாடியும், மாமியார் முன்னாடியும் பேசுறப்பேச்சா இது” என்று காந்தள், அவளின் கன்னத்தில் இடித்துவிட்டு, “மேசையில் பால் வச்சிருக்கேன். கொண்டு போ. குமரா நான் வெளியில் இருக்கேன். நாம கிளம்புவோம்” என்று சென்றுவிட்டார்.

அவர் சென்றதும் யாழ் குமரனை பார்க்க… அவன் தன்னிரு கையை விரித்தான். தாயை நாடும் மழலையாக அவனது மார்பில் புதைந்தவள், சத்தமின்றி அழுகையில் மூழ்க,

“அத்தையை சமாதானம் செய்து, அடுத்து அவங்க எதுவும் பேசிடக் கூடாதுன்னு அப்படி சொன்னன்னு புரியுது” என்று தங்கையின் தலையை பரிவுடன் வருடினான் குமரன்.

“சமாளிச்சிடுவியாடா?”

உண்மை காரணம் தெரியவில்லை என்றாலும், தங்கையின் வாழ்வு கண்ணீரோடு ஆரம்பிக்கிறது என்கிற வருத்தம் குமரனை வெகுவாகத் தாக்கியது.

“முடியலன்னா உங்ககிட்ட தான் வருவேன்” என்ற தங்கையின் முகம் நிமிர்த்தி, கண்களைத் துடைத்து, நெற்றியில் முத்தம் வைத்த குமரன், அஜய்யின் ரூமிற்கு அனுப்பி வைத்தான்.

Epi 14

நீதான் என் காதல் மழை 14

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
37
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்